அத்தியாயம் -41

சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு பிராமணர் ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு குருசேவை செய்ததாகக் கூறுவார்கள்.அவருடைய கதை உங்களுக்குத் தெரிந்தால் அதை எனக்குக் கூறுவீர்களா?’ என்று கேட்டார். அதைக் கேட்ட சித்த முனிவர்  நமத்ஹரகாவுக்கு கூறத் துவங்கினார்.
‘நமத்ஹரகா, சாயம்தேவா  என்பவர் உன்னுடைய பாட்டனாரின்  சகோதரர் ஆவார். அவர் மீது ஸ்வாமிகளுக்கு மெத்த அன்பு உண்டு. ஸ்வாமிகளை  அவர் தனது குருதேவராக ஏற்றுக் கொண்டு இருந்தவர். ஸ்வாமிகள் சென்ற இடங்களுக்கு  எல்லாம் சாயம்தேவாவும் சென்று  முடிந்த அளவு அவருக்கு சேவகம் செய்தவர். இந்த நிலையில் ஸ்வாமிகள் கனக்பூருக்கு செற்று தங்கி  இருந்தபோது அதைக் கேள்விப்பட்ட சாயம்தேவாவும் கனக்பூருக்கு சென்று  அவரை வணங்கினார். சாயம்தேவாவை  கண்டதும் மனம் மகிழ்ந்து போன ஸ்வாமிகள் அவர் தலை மீது தன் கையை வைத்து ‘சாயம்தேவா, நீ பல  ஜென்மங்களிலும் எனக்கு சிஷ்யனாக இருந்து வருவாய்’ என்று கூறி அவரை ஆசிர்வாதித்தார். அதன் பின் அவரை சங்கம் நதிக்கரைக்குச் சென்று குளித்து விட்டு தன்னுடன் உணவு அருந்த வருமாறு  அழைத்தார்.

சாயம்தேவா ஸ்வாமிகள் கூறியபடியே சங்கமம் நதிக்கரைக்குச்  சென்று குளித்து விட்டு கருநெல்லி மரத்தை வணங்கிய பின் ஆசிரமத்திற்கு திரும்பி வந்து குருதேவருடன் அமர்ந்து உணவு அருந்தினார். அதன் பின் ஸ்வாமிகள் அவரிடம் அவர் குடும்ப நலனை குறித்து விசாரித்தப் பின் அவர் அங்கு வந்ததின் காரணத்தைப் கேட்டார். அப்போது சாயம்தேவா குருவை வணங்கித் துதித்தப் பின் கூறினார் ‘ஸ்வாமி, உங்களுடைய அருளினால் என் குடும்பத்தினர் அனைவரும் நலமாகவே உள்ளனர். அவர்கள் தற்போது உத்தர காசியில் வசிக்கிறார்கள். என்னுடைய மனைவியும்  குழந்தைகளும் அவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களைப் பாதுகாத்தபடி  இருப்பார்கள். அதனால்தான் நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில்  இங்கு வந்தேன்’ என்றவுடன் ஸ்வாமிகள் அவரிடம் கூறினார் :

‘சாயம்தேவா, நீ வந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் நானோ அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருப்பவன். பெரும்பாலும் என்னுடைய வாழ்கை காட்டில் வசிப்பதாகவே அமைந்து இருக்கும். ஆகவே அங்கெல்லாம் வந்து உன்னால் எனக்கு சேவகம் செய்வது கடினமாக இருக்கும். ஆகவே இப்படிப்பட்டவற்றை நன்கு எண்ணிப் பார்த்தப் பின்னர் என்னோடு நீ தங்கி இருக்க முடியுமா என்று முடிவு செய்’ என்று கூறியதும் சாயம்தேவா  கூறினார் ‘ஸ்வாமிகளே உங்களுடைய இந்த வார்த்தைகள் என் இதயத்தில் குளிர்ந்த நீரை ஊற்றியது போல உள்ளது. எந்த ஒரு சிஷ்யனுக்கும் குரு உள்ளவரை பயம் என்பதே இருக்காது என்பதை உணர்ந்தவன் நான். நீங்கள் மாபெரும் மஹான். கமண்டலத்தைக் கையில் ஏந்தியபடி இருக்கும் பொழுது பிரும்மா போலவும், தண்டத்தை கையில் வைத்து உள்ளபோது சிவபெருமானைப் போலவும் காட்சி தரும் நீங்கள் திருமூர்த்தியின் அவதாரம் என்பது எனக்குத் தெரியும். ஆகவே உங்களுக்கு சேவகம் செய்வதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்பதே சத்தியமான  உண்மை’ என்றார்.ஆகவே சாயம்தேவாவை  தன்னுடன் இருக்க ஸ்வாமிகள் சம்மதம் கொடுத்தார்.

சில மாதங்கள் கழிந்தன. சாயம்தேவா தனது குருதேவருக்கு  நல்லமுறையில் பணிவிடைகளை செய்து வந்தார். அப்போது ஒருநாள் சாயம்தேவாவை அழைத்துக் கொண்டு  சங்கம் நதிக்கரைக்குச் சென்ற ஸ்வாமிகள் அங்கிருந்த கருநெல்லி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது  திடீர் என இடியும், மின்னலுமாக வந்து பெரும் மழையும் வந்து விட ஸ்வாமிகள் நனைந்து விடக்கூடாதே என்ற கவலையில் ஸ்வாமிகளின் தலை மீது தனது இடுப்பில் இருந்தத் துணியை குடைப் போல பிடித்துக் கொண்டு சாயம்தேவா நின்று கொண்டு இருந்தபோது கடும் குளிர் வந்தது. ஆகவே ஸ்வாமிகள் சாயம்தேவாவிடம்  மடத்துக்குச் சென்று  தீமூட்டி குளிரை அடக்க தண்ணீரிலும் எளிதில் அணையாமல் இருக்கும் தணலுடன் கூடிய அக்னிஹோத்ரா எனும் மரக்குச்சிகளை  கொண்டு வரும்படி கூறினார். அதோடு  சாயம்தேவாவிடம் போகும்போதும், திரும்பி வரும்போதும் எந்தக் காரணம்  கொண்டும் அங்கும் இங்கும் பார்க்காமல் நேராக மட்டுமே பார்த்தபடி நடந்து வருமாறு அறிவுரைக் கூறி அனுப்பினார்.  ஸ்வாமிகள் ‘அங்கும் இங்கும் பார்க்காமல் நேராக மட்டுமே பார்த்தபடி நடந்து வா’ என்பதை  இரண்டு முறை அழுத்தமாகக் கூறினார். 

சாயம்தேவாவும் ஸ்வாமிகள் கூறியது போல ஊருக்குள் இருந்த மடத்துக்கு கிளம்பிச் சென்றார். நல்ல கும்மிருட்டு. சாலை முழுதும் எங்கும் குண்டும் குழியுமாக இருந்தன. நடக்கவே முடியவில்லை என்றாலும் எப்படியோ சிரமப்பட்டு சாயம்தேவா குருவை மனதிலேயே நினைத்தபடியே ஊருக்குள் சென்று ஒரு சட்டியில் எரியும் தணலில் அக்னிஹோத்ரா மரக்குச்சிகளை போட்டுக் கொண்டு திரும்பி வரத் துவங்கினார். வழி எங்கும் இடி, மழை மற்றும் மின்னல் என்று இருந்தது. ஆகவே   எரியும் தணலில் போட்டு இருந்த அக்னிஹோத்ரா மரக்குச்சிகள்  இருந்த சட்டியை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு  வந்து கொண்டு இருந்தவருக்கு இரு பக்கமும் திரும்பிப் பார்க்காமல் நடந்து வா என்று ஏன் ஸ்வாமிகள் கூறினார் என்ற எண்ணம் மனதில் மீண்டும் மீண்டும் எழுந்தது. ஸ்வாமிகள் ஏன் அப்படிக் கூறினார் என்று நினைத்தவர் தன்னை மறந்து   இடப்பக்கம் திரும்பினார். இரண்டு மூன்று அடி தள்ளி அவர் அருகில் பெரிய ஐந்து தலை நாகப்பாம்பு ஒன்று  அவருடன் தொடர்ந்து வந்து கொண்டு  இருந்தது. பயந்து போனவர் சற்று தள்ளிஇப் போனதும்   வலது பக்கத்தை நோக்கிப் போகலாம் என்று அந்தப் பக்கம் திரும்பியபோது  இடது பக்கத்தைப் போலவே வலது பக்கத்திலும் இரண்டு மூன்று அடி தள்ளி இன்னொரு பெரிய ஐந்து தலை நாகப்பாம்பு அவரை தொடர்ந்து வந்து கொண்டு  இருந்ததைப் பார்த்தார். என்ன செய்வது என திகைத்தவர் பயந்து போய் குருவை தியானித்தபடியே அவசரம் அவசரமாக நடந்து வந்து கருநெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த குருவின் முன்  நின்றார்.

மெல்லியதாக இனிமையான குரல்களில் வேத மந்திரங்கள் ஒலிக்கும் சப்தம் அங்கிருந்து வந்து கொண்டிருந்தது. குருநாதர் அருகில் வந்து சேர்ந்தவர் தான்  வந்தபோது கண்ட எந்த காட்சிகளும்- இடி, மழை மற்றும் மின்னல் என எதுவுமே தென்படாததைக் கண்டார். இனிய காற்று வீசிக் கொண்டு இருக்க வானம் தெளிவாகவே இருக்க குருதேவர் கூறியது போலவே தான்  தணலுடன் கொண்டு வந்திருந்த குச்சிகளைப் போட்டு   தீ மூட்டியவர்  அவர் வழியில் பார்த்த அதே ஐந்து தலை நாகங்கள் குருநாதரை வணங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டு திகைத்தார். அடுத்தகணம் மறைந்து விட்டன.

அதைக் கண்டு பயந்து நின்ற சாயம்தேவாவைப்  பார்த்து ஸ்வாமிகள் கூறினார் ‘சாயம்தேவா கவலைப்படாதே, இந்த இரண்டு நாகங்களையும்  நான்தான் உனக்கு வழியில் பாதுகாப்பாக இருக்க துணைக்கு அனுப்பினேன்’. நான் முன்னரே கூறினேன் இல்லையா, என்னிடம் பணி  புரிவது அத்தனை எளிதல்ல என்று’. அதைக் கேட்ட சாயம்தேவா குருதேவரின் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கோரினார். அவரிடம் கேட்டார் ‘குருதேவா, தயவு செய்து நான் சஞ்சலம் இல்லாத  மனதுடன் குரு உமக்கு சேவை செய்ய அருள் புரிய வேண்டும்’. அதைக் கேட்ட ஸ்வாமிகளும் அவரை அப்படியே ஆசிர்வதித்தார் ” என்று சித்த முனிவர் கதையைக் கூறி முடித்தார்.

அதைக் கேட்டபடி  நமத்ஹரகா அதிசயித்து அமர்ந்து கொண்டிருக்க சித்த முனிவர் ‘குரு மகிமையை விளக்கும் இன்னொரு கதையையும்  கேள்’ என்று கூறிவிட்டு அதையும் தொடர்ந்து கூறத் துவங்கினார்.

”ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் சென்று குருமகிமை  என்பது குறித்து தனக்கு விளக்கிக் கூறுமாறு கேட்க சிவபெருமான் அவளுக்கு அதை கூறத் துவங்கினார்.  ஒருமுறை தஸ்ரா பிரும்மா என்ற பெயரில் மனித அவதாரத்தை எடுத்த பிரும்மாவுக்கு பிரஜாபதி எனும் ஒரு அற்புதமான மகன் பிறந்தார். அந்த பிள்ளைக்கு எட்டு வயதானபோது அவருக்கு உபநயனம் செய்வித்தார்கள்.  அந்த காலங்களில் உபநயனம் செய்ததும் குருகுல வாசத்துக்கு அனுப்பி  கல்வி கற்க ஏற்பாடு செய்வார்கள் என்பதினால் அது போலவே அந்தப் பிள்ளையையும் குருகுலத்திற்கு வேத சாஸ்திரங்களைப் பயில அனுப்பி வைத்தனர்.  அந்தப் பிள்ளை  குருபக்தி நிறைந்தவர்.

ஒரு நாள் சூறை காற்றுடன் பெய்த பெரும் மழையில்  குருவின் ஆஸ்ரமம் அடியோடு அழித்து விட்டது. அதனால் அவருடைய குரு என்றுமே அழியாத, புதுபொலிவோடு உள்ள நல்ல ஒரு ஆசிரமத்தைக் கட்ட நீ ஏற்பாடு செய் என ஆணையிட்டார்.  அதே சமயம் அங்கு வந்த குருவின் மனைவியோ தனக்கும் நூலினால் தெய்க்கப்படாத  விசேஷமான மேலாடையை கொண்டு வருமாறு கூறினாள். அருகில் இருந்தவாறு அவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்த குருவின் மகனோ தனக்கும் தூசியே ஒட்டாத அதே சமயத்தில் அதைப் போட்டுக் கொண்டப் பின் நினைத்த இடத்தை அடைய முடியும் விசேஷ காலணியையும் கொண்டு வர வேண்டும் என்று கேட்டான். அவர்கள் கேட்டப் பின் குருவின் மகள் சும்மா இருப்பாளா? அவளோ யானையின் தந்ததில் செய்த காதணியும், அனைத்து  சமையல் சாதனங்களும் அடங்கி உள்ளது போன்ற அழகிய பொம்மையும்  தனக்கு வேண்டும் எனக் கேட்டாள்.

அவற்றைக் கேட்ட சிஷ்யனான பிரஜாபதியும்   ஒன்றும் புரியாமல் ஒரு நொடி திகைத்தாலும் தனக்கு அவற்றை கொண்டு வரத் தேவையான சக்தியை தந்து, அதற்கான வழியையும் காட்டுமாறு  குருவிடம் மனதார  வேண்டிக் கொண்டு அவற்றுக்கான சாதனங்களைக் கொண்டு வர காட்டு வழியாக நடக்கத் துவங்கினார். தெரியாத இலக்கை நோக்கி புரியாமல் சென்று கொண்டிருந்தவன் போகும் வழியில் ஒரு அவதூதரைக் கண்டான். கவலை தோய்ந்த முகத்தோடு சென்று கொண்டு இருந்த பிரஜபதியைக் கண்ட அவதூதர் அவனை தடுத்து நிறுத்திக் கேட்டார் ‘மகனே எங்கு செல்கிறாய்? உன் முகத்தில் ஏன் கவலைக் கோடுகள் நிறைந்து உள்ளன? என வினவ அவர் கால்களில்  விழுந்து வணங்கியவன் அவரிடம் கூறினான்  ‘மஹாத்மா, நீங்கள்தான் என் கவலையை நீக்க வழி செய்ய வேண்டும். நான் என்னுடைய குருவின் ஆணையை  ஏற்று அவருக்கு வீடு கட்டித் தரவும், அவருடைய மனைவிக்கு விசேஷ மேலாடை, மகனுக்கு விசேஷ காலணி மற்றும் மகளுக்கு  விசேஷமான பொம்மையும் கொண்டுவர சென்று கொண்டு இருக்கின்றேன். ஆனால் அவை அனைத்தையும் எங்கிருந்து கொண்டு வருவது என்று புரியாமல் சென்று கொண்டு இருக்கும் எனக்கு அவை கிடைக்க நீங்கள்தான் தக்க உபாயம் தர வேண்டும்’ என்று கேட்க அந்த அவதூதர்  கூறினார் ‘மைந்தா கவலைப்படாதே. இங்கிருந்து கிளம்பி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கு. உனக்கு தேவையான அனைத்துமே உனக்கு  அங்கு கிடைக்கும். உன் விருப்பங்களும் நிறைவேறும்’.

அதற்கு பிரஜாபதி கேட்டான் ‘மகானே எனக்கு காசி எங்கு உள்ளது என்பதே தெரியாது என்பதினால் அங்கு செல்லும் வழியும்  தெரியாது என்பதினால் எனக்கு அங்கு செல்லும் வழியைக் கூறுவீர்களா?’ அவதூதர் கூறினார் ‘மகனே கவலைப்படாதே. நானும் அங்கு செல்ல எண்ணி இருந்தேன். ஆகவே உன்னை நான் அங்கு அழைத்துச் செல்கிறேன். உன் சார்ப்பில் நானும் அந்த நகருக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களை மீண்டும் தரிசிப்பேன்’. இப்படியாகக் கூறியவர் அவனை கண்களை மூடிவிட்டு பத்துமுறை குருவே நமஹா எனக் கூறிவிட்டு கண்களைத் திறக்குமாறுக் கூறினார். பிரஜாபதியும் அவர் கூறியது போலவே தனது கண்களை மூடிவிட்டு குருவே நமஹா எனக் கூறியப் பின் கண்களைத்   திறந்ததும் காசியில் அவருடன் இருப்பதைக் கண்டான்.

அடுத்து அவரிடம் கேட்டான் ‘ஸ்வாமி இங்கு எப்படி வழிபடுவது என்பதையும் நீங்கள் எனக்கு சொல்லித் தந்தால் ஆனந்தம் அடைவேன்’அவரும் மகிழ்ச்சி அடைந்து அவனுக்குக் கூறினார் ‘மகனே,  நீ அந்தர்கிரஹ யாத்ரா, தக்ஷிண மனஸ்யாத்ரா மற்றும் உத்தர மனஸ்யாத்ரா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அதன் பின் பஞ்சகோஷ்டி யாத்ராவையும் செய்து முடிக்க வேண்டும்.

 முதலில்  மணிகார்னிக நதிக் கரையில் குளித்து விட்டு வினாயகர், பஞ்சலேஷ்வார் போன்றவர்களை  வழிபட வேண்டும்.  அதன் பின் கமலேஷ்வரா, வாசுகேஸ்வரா, பார்வதீஸ்வரா, கங்காகேஷவரர், லலிதா தேவி போன்றவர்களை வணங்கிய பின் மற்ற ஆலயங்களுக்கும் சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கித் துதிக்க வேண்டும். நவாசி நதியில் ஸ்னானம் செய்ய வேண்டும். ஸ்னானம்  செய்தப் பின் கியானேஷ்வரர், நந்திகேஷ்வரர், மார்கண்டேஷ்வரர், தாரகேஷ்வரர், மகாகாலீஷ்வரர், தண்டபாணி, மோக்ஷீஷ்வரர், வீரபத்திரேஸ்வரர் மற்றும் அவிமுக்தீஷ்வரர் போன்றவர்களை  வணங்கித் துதிக்க வேண்டும். அன்னபூர்ணீஸ்வரி, கால பைரவர், வீரபத்திரர், ஹனுமான் என அனைவரது சன்னதிகளுக்கும் சென்று அவர்களை எல்லாம் வணங்கித் துதிக்க வேண்டும். 

அது மட்டும் அல்ல சங்கோடரகா குண்டத்தில் குளித்தப் பின் சங்கு விஷ்ணு, காமாட்சி குண்டம் போன்றவற்றில் குளித்து விட்டு அங்கிருந்து சென்று விஷ்ணு மற்றும் காமாட்சி தேவியை வழிபட்டப் பின் அயோத்திய குண்டம் மற்றும் லஷ்மி குண்டில் குளித்து விட்டு லஷ்மி நாராயணர் தரிசனம் என அனைவரையும் சென்று வணங்க வேண்டும்.  சூர்ய  குண்டில் குளித்து விட்டு மூதையோர்களுக்கு சிரார்தம் செய்த பின் நாராயணரை வழிபட வேண்டும். வைத்தியநாத குண்டில் குளித்தப் பின் வைத்தியநாதரையும், கோதாவரி குண்டில் குளித்து விட்டு கௌடமீஸ்வரரையும், அகஸ்திய குண்டில் குளித்து விட்டு அகஸ்தீஸ்வராவையும், சுக்ர குபாவில் குளித்து விட்டு சுக்கிரேஷ்வரரையும்  வணங்கித்  துதிக்க  வேண்டும்.

காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு  சென்று   சிந்தாமணி வினாயகர், சோமநாத வினாயகர், துந்து வினாயகர் போன்ற அங்குள்ள ஐந்து வினாயகர்களை வழிபட்டு வணங்க வேண்டும்.  பஞ்ச வினாயகரை தரிசித்தப் பின்  விஸ்வனாதரின்  மூல சன்னதிக்கு சென்று அங்கு விஸ்வநாதரை வணங்கித் துதித்தப் பின் கோவிலின் பிராகாரத்துக்குள்ளாகவே நடந்தபடி முக்தி மண்டபத்தை அடைய வேண்டும். ஆலயத்தை வலம் வரும்போது மனதாரா ‘நான் எதாவது தவறு செய்து இருந்தால் அதற்கு மன்னித்து எனக்கு கருணைக்  காட்டுங்கள் எனவும் சிவனை வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் செய்து முடித்தால்  சிவபெருமான் உன் முன் தோன்றி நீ கேட்ட வரத்தை அளிப்பார்’ என்று கூறியதும் அங்கிருந்து மறைந்து விட்டார். அவர் யார் என்பது பிரஜாபதிக்கு தெரியவில்லை.

பிரஜாபதியும் அவர் கூறியது போலவே அனைத்தையும் செய்தபின் அவன் பக்தியை மெச்சிய சிவபெருமானும் அவன் முன் தோன்றி அவனுக்கு  என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  அவனும் தயங்காமல் தான் வந்த காரணத்தைக் கூறிவிட்டு தனது குருநாதர், அவர் மனைவி, மகன் மற்றும் அவருடைய மகள் என அனைவரும் கேட்டவற்றைக் கூற  அவரும் அவை அனைத்தும் அவனுக்குக் கிடைக்குமாறு செய்தார்.

சிவபெருமானின் அருளினால் அவற்றை எல்லாம் கொண்டு போய் தனது குருநாதருக்குக் கொடுக்க  அவரும் அவனை ‘அனைத்து வேத சாஸ்திர வித்தைகளையும் வித்யாக்களையும் பெற்று வாழ்வாய்’ என ஆசிர்வதித்தார். இப்படியாக எவர் ஒருவர் குருவிடம் பரிபூர்ண பக்தியுடன் இருப்பார்களோ அவர்களது  குருவின் மகிமையையும் பரிபூரணமாக உணருவார்கள்’ என்று சாயம்தேவாவுக்கு ஸ்வாமிகள் கூறிய பின் அவரை அவருடைய குடும்பத்துடன் தான் உள்ள இடத்துக்கே வந்து தங்கி இருந்தவாறு தமக்கு சேவை செய்யுமாறு கூறினார்.

ஸ்வாமிகள் கூறியபடியே சாயம்தேவாவும் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் கனக்பூருக்கு அழைத்து வந்தார். அவர்கள்  இனி முஸ்லிம் அரசர்களுக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டாம் என தாம் எண்ணியதினால்தான் அவர்கள் அனைவரையும் தம்மிடம் அழைத்து வருமாறு கூறியதாகவும் தெரிவித்தார்”.(இப்படியாக அத்தியாயம்-41 முடிவடைந்தது).

….தொடரும்