அத்தியாயம் -37

ஸ்வாமிகள் தொடர்ந்து கூறினார்  ‘ வீட்டை நன்கு பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பூஜை அறையை தினமும் பெருக்கி சுத்தமாக துடைக்க வேண்டும். அதன் பின் ஸ்வாமிக்கு எதிரில் அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். எந்த வீட்டில் ஸ்வாமி அறை சுத்தமாக இருக்கிறதோ அங்கு லஷ்மி தேவி வந்து வாசம் செய்வாள். ஸ்வாமி அறையில் மரத்தினால் ஆன அல்லது கல்லில் ஆன ஸ்வாமி சிலையை வைத்து வழிபடலாம். ஸ்வாமிக்கு எதிரில் சிறிய விளக்கில் எண்ணை ஊற்றி திரி போட்டு அதை எரிய விட வேண்டும்.

ஸ்வாமிக்கு தினமும் பூக்களைப் போட்டு பூஜிக்கலாம். சிவனுக்கு வில்வ மாலை, விஷ்ணுவிற்கு துளசி மாலை, மகாலஷ்மி, பார்வதிக்கு தாமரைப் பூ மற்றும் வினாயகருக்கு அருகம் புல் போன்றவற்றை போட்டு பூஜிக்கலாம். சிவனுக்கு துளசி மாலை போடுவதையும், விஷ்ணுவிற்கு வில்வ மாலைப் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

விசேஷ பூஜைகள் அல்லது சடங்குகளை செய்தப் பின் மதியம் அன்னதானம் செய்வது விசேஷம். குறைந்தது  இரண்டு அல்லது மூன்று பேருக்கு போஜனம் செய்விக்கலாம். வசதியானவர்கள் அதற்கும் மேலும் அன்னதானம் செய்யலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் உண்பதற்கு போடப்படும் இலையில் சிறந்தவை வாழை இலை, தாமரை இலை போன்றவை ஆகும்.

தட்டு போட்டால் அந்த தட்டு அலுமினியம் அல்லது தாமிரத் தட்டாக இருக்கக் கூடாது. பித்தளையினால் ஆன தட்டைப் போட்டு அதில் போஜனம் செய்விப்பதும் நல்லதே. போஜனம் செய்பவர்கள் முதலில் தட்டில் போடப்பட்ட இனிப்பு பண்டங்களை உண்ட பின்னரே மற்றவற்றை சாப்பிடத் துவங்க வேண்டும். ஆனால் வெறும் தட்டில் சாதத்தைப் போடக் கூடாது. முதலில் ஏதாவது காய்கறி வகைகளையோ அல்லது இனிப்பு  பண்டங்களைப் போட்டப் பின்னரே சாதத்தை போட வேண்டும். சாப்பிட்டப் பின் தாம்பூலம் தருவது சிறந்தது. வெற்றிலை இல்லை என்றால் வெறும் பாக்கையாவது தர வேண்டும்.

சாதாரணமாக பாழடைந்து கிடக்கும் ஆலயங்கள், நதிக் கரைகள், பாம்புப் புற்று உள்ள இடங்கள் மற்றும் மயானங்களில் சென்று உறங்கவே கூடாது. இவற்றை எல்லாம் எவர் ஒருவர் பழக்கத்தில் வைத்து இருப்பாரோ அவர்கள் வீட்டில் அமைதி நிலவும். அவர்களுக்கு முன்னோ பின்னோ நிச்சயமாக லஷ்மி கடாட்ஷம் கிடைக்கும். இவை அனைத்தையும் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்த பராசர முனிவர்  மற்ற ரிஷி முனிவர்களுக்கும் போதனை செய்து அவற்றை அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பரப்ப வேண்டும் என்று கூறினார். இவை அனைத்தும் தர்ம சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளவை. இப்படியாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை கடைபிடித்துக் கொண்டு வந்தால் ஆயுள் விருத்தி அடையும். மன அமைதி கிடைக்கப் பெற்று செல்வம் கொழிக்கும். வறுமை வராது என்று பராசர முனிவர் மற்ற ரிஷி முனிவர்களுக்குக் கூறியதையே உங்களுக்கும் கூறினேன்’ என்று கூறிய ஸ்வாமிகளை அந்த அறிவுறைகளைப் பெற்ற பிராமணத் தம்பதியினர் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றனர் (இத்துடன் அத்தியாயம் -37 முடிவடைந்தது).

………..தொடரும்