அத்தியாயம் – 16

அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும்  யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார்  ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார். நான் மட்டுமே அவருக்கு பணிவிடைகளை செய்து கொண்டு இருந்தேன். அப்படி அவர் இருந்தாலும் கூட அங்கிருந்தும், இங்கிருந்தும் யாராவது ஸ்வாமிகளை தரிசிக்க வந்து  விடுவார்கள். இப்படி இருக்கையில் ஒருமுறை ஒரு பிராமணன் வந்து ஸ்வாமிகளிடம் சரண் அடைந்தார். அவர் ஸ்வாமிகளின்  கால்களில் விழுந்து வணங்கிய பின்னர் தான் வாழ்க்கையில் நிம்மதி இன்றி அலைவதாகவும் மன உளைச்சலில் இருப்பதினால் தனக்கு நல் வழி காட்டுமாறும் ஸ்வாமிகளிடம்  வேண்டினார்.  அதைக் கேட்ட ஸ்வாமிகள் அவரிடம் ‘நீ ஏன் ஒரு குருவிடம் சென்று பயிற்சி பெற்றுக் கொள்ளவில்லை?’ என்று கேட்டதும் அந்த பிராமணன் அவரிடம் கூறினார் ‘மகானே,நான் ஒரு குருவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர் எனக்கு சரியான பயிற்சியைத் தராமல் என்னுடைய நேரத்தை வீணடித்து விட்டார். ஆகவேதான் உங்களை நாடி நான் வந்தேன்’ என்று கூறினார்.

அந்த பிராமணர் கூறியதைக் கேட்ட ஸ்வாமிகள் கோபமுற்று அவரிடம் ‘கூறினார்  பிராமணரே, நீங்கள் ஒரு  குருவை அவமானப்படுத்துவது தவறு.   எப்போது ஒருவரை குரு என்று நினைத்து  விட்டு அவரிடம் சென்றீர்களோ  அப்போதே அவர் உங்களைப் பொருத்தவரை தெய்வத்துக்கு சமம் ஆகி விடுவார். அவர் போதிக்கும் கல்வி உங்களுக்கு புரியவில்லை என்றால் தவறு உங்கள் மீதுதான் உள்ளது. குருவின் பெருமை எப்படிப்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதையைக் கூறுகிறேன். அதைக் கேட்டப் பின் தவறு உங்களிடமா இல்லை அவரிடமா என்பது உங்களுக்குப் புரியும். அந்தக் கதையைக் கேளுங்கள்’ என்று கூறிவிட்டு ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அந்த பிராமணனுக்கு ஒரு கதையைக் கூறினார்.

‘முன்னொரு காலத்தில் தௌம்யா என்ற மகரிஷி  வாழ்ந்து வந்தார். அவரிடம் அருணி, பைலா, உபமன்யூ என்ற மூன்று சீடர்கள் கல்வி பயின்று வந்தார்கள். அந்த காலங்களில் தம்மிடம் கல்வி  கற்க வரும் மாணவர்களை அவர்கள் கல்வி கற்கத் தகுதியானவர்களா என  நன்கு சோதனை செய்த பின்னரே மாணவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு முதலில் தம்முடைய சக்தியை செலுத்துவார்கள். அந்த காலத்தில் படிப்பு சொல்லித் தந்த விதமே வேறு மாதிரியானது. பாடம் பயில்விக்கும் குருமார்கள் தன்னிடம் வந்துள்ள சிஷ்யர்கள் படிப்பதற்கு லாயக்கானவர்களா, அவர்களுடைய தகுதி என்ன, அவர்களுடைய மனதிடம் உள்ளவர்களா என்றெல்லாம் நன்கு ஆராய்ந்த பின்னரே மேற்கொண்டு பாடம் சொல்லித் தருவார்கள்.  தகுதியான மாணவர்களை தமது சிஷ்யனாக ஏற்றுக் கொண்டப் பின் முதலில்  அவர்களுக்குள் தமது பார்வையினாலேயே கல்வி பயிலும்  சக்தியை செலுத்தி விடுவார்கள். அத்தனை சித்தி பெற்று இருந்தார்கள் மஹரிஷிகள்.  இந்த  விதிப்படியே தௌம்யா மகரிஷி தம்மிடம் வந்து சேர்ந்த மூன்று சிஷ்யர்களையும் சோதிக்க எண்ணினார்.

முதலில் அருணாவை அழைத்து வயலுக்குச் சென்று, அதன் அருகில் உள்ள வாய்காலில் இருந்து வயலில் தண்ணீர் சரிவர வந்து பயிர்களுக்கு பாய்கிறதா என்று பார்த்து விட்டு வருமாறு கூறி அனுப்பினார். அதன்படி வயலுக்கு சென்றவன் வாய்காலில் இருந்து  அந்த வயலுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்ததைக் கண்டாலும் ஒரு இடத்தில் கால்வாயின் வாய் உடைந்து வயலுக்குக் கிடைக்க வேண்டிய நீர் வேறு இடத்திற்கு பாய்வதைக் கவனித்தான். உடனடியாக அந்த இடத்துக்குச் சென்று அந்த வேறு இடத்துக்கு பாயும் தண்ணீரை தடுத்து நிறுத்தி  அது வயலில்  பாய இருக்குமாறு  செய்ய அதன் மீது மண்ணையும், கல்லையும் எடுத்து வந்து கொட்டினான். எத்தனை முயன்றும் தண்ணீர் வேறு பக்கத்தில் ஓடுவதை தடுக்க முடியாமல்  போனதினால் அந்த உடைப்பை தடுக்க தானே அங்கு சென்று முதுகினால் தடுத்து நிறுத்தி அமர்ந்து கொள்ள தண்ணீர் வயலில் பாயத் துவங்கியது. மாலை ஆகியும் அருணன் வராததைக் கண்ட தௌம்யா  மகரிஷி வயலுக்குப் போய் அவனைக் கூவி அழைத்தும் அவன் வரவில்லை என்பதினால் அவனை தேடியவர் அவன் அமர்ந்து இடத்துக்குச்  சென்று அவனை அழைக்க அவனும் எழுந்து வந்தான். அதற்குள் வயலும் நீரினால் நிறைந்து விட்டது. ஆகவே அவன் மீது அவர் மகிழ்ச்சி அடைந்து அவன் ஞானியாவான் என ஆசிர்வதிக்க அவனும் அவரிடம் தக்க கல்வி பயின்றதும் பிற்காலத்தில் பெரிய பண்டிதனாகி, பெரும் புகழ் பெற்று வாழ்ந்து வரலானான்.

அடுத்து பைலாவை அழைத்தவர் அது போலவே அவனிடம் வயலில் அறுவடை செய்து வைத்திருந்த தானியங்களை எடுத்து வருமாறு கூறினார். அவரிடம் இருந்தது ஒரே ஒரு வண்டியும், ஒரே ஒரு காளையும்தான். ஆனாலும் அவற்றை எடுத்துக் கொண்டு பைலா வயலுக்குச் சென்று தானிய மூட்டைகளை வண்டியில் ஏற்றினான். எருதைப் பூட்டி வண்டியை இழுக்க  அது   பாரத்தை சுமக்க முடியாமல் கஷ்டப்பட்டது. ஆகவே பைலா தன்னையும் எருதுபோல வண்டியில் கட்டிக் கொண்டு வண்டியை இழுக்கத் துவங்கினான். அதற்குள் நேரமாகி விட்டதினால் அவனை தேடிக் கொண்டு வயலுக்கு வந்த தௌம்யா  மகரிஷி நடந்ததை அறிந்து கொண்டு அவன் மீதும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அவனை குடிலுக்கு அழைத்து வந்து, வண்டியை இழுத்ததினால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு குணப்படுத்தினார். அதன் பின் அவனுக்கும் நல்ல பயிற்சி கொடுத்து அனுப்ப அவனும் பிற்காலத்தில் பெரும் புகழ்பெற்ற சாஸ்திர வல்லுனராக மாறி நல்ல வாழ்கையை பெற்றான்.

அது போலவே தௌம்யா  மகரிஷி  மூன்றாவது சிஷ்யனான உபமன்யுவை  அழைத்து அவனை குடிலில் இருந்த பசு மாடுகளை புல்  தின்ன வெளியில் அழைத்துச் சென்று விட்டு வருமாறும், பிட்ஷை எடுத்து அவன் உண்ண வேண்டும் என்றும் ஆணையிட்டார். அவன் பசியைப் பொறுக்காதவன். பசுக்களை ஓட்டிச் சென்று புல்  மேய வைத்தப் பின் பிட்ஷை எடுத்தான். பசியால் கிடைத்ததை தானே சாப்பிட்டு விட்டான். குருவுக்கு கொண்டு வந்து தரவில்லை. குருவுடன் சேர்ந்து இருப்பவர்கள் பிட்ஷை எடுத்தால் நியமப்படி அதை முதலில் குருவுக்கு சமர்ப்பித்தப் பின் அவர் கொடுப்பதை மட்டும் தான் உண்பார்கள். நீயே சாப்பிடு என்று கூறி விட்டால் மட்டுமே பிட்ஷை அனைத்தையும் பிட்ஷை எடுத்தவர்கள் உண்பார்கள். சில நாட்கள் கழிந்தது. பசுக்கள் இளைக்கத் துவங்கின, ஆனால் உபமன்யு மட்டும் உடல் நலமாகவே திடகார்த்தமாக இருந்தான்.  அதற்குக் காரணம் புல்  இருக்கிறதா இல்லையா என்றுகூடப் பார்க்காமல் பசுக்களை எங்காவது ஒரு இடத்தில் விட்டு விட்டு அவன் பிட்ஷை எடுத்து விட்டு உண்பான். நேரமாகியதும் குடிலுக்கு திரும்புவான். அவனை ஒருநாள் தௌம்யா  மகரிஷி அழைத்து பிட்ஷை எடுப்பதை என்ன செய்தாய் என்று கேட்டதும் தானே உண்டு வருவதாகக்  கூற கோபமடைந்தவர்  இனி பிட்ஷை எடுத்ததும் அதை உடனே தன்னிடம் கொண்டு வந்து தர வேண்டும் என்றும், தான் கொடுப்பதை மட்டும் அவன்  உண்ண வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அவர் கொடுத்தது போதவில்லை என்பதினால் பசி எடுத்ததினால் மீண்டும் பிட்ஷை எடுத்து அதை உண்டு வந்தான். ஒரு நாளைக்கு ஒருவேளைக்கு ஒருமுறை பிட்ஷை எடுத்தப் பின் அதே வேளைக்கு மீண்டும் பிட்ஷை எடுக்கக் கூடாது என்பது நியதி.

இன்னும் சில நாட்கள் கழிந்தன. அவன் இன்னும் திடகார்த்தமாகவே இருந்ததினால் அவனை விசாரித்து நடந்ததை அறிந்து கொண்ட மகரிஷி அதற்கும் தடைப் போட்டார். ஆகவே அவனால் பசி பொறுக்க முடியாமல் போய் பசுவின் பாலை குடிக்கும் கன்றுகளின் வாயில் இருந்து விழுந்த நுரைகளை எடுத்து உண்டு பசியை போக்கிக் கொண்டான். அதைக்  கேள்விப்பட்ட மகரிஷி அதற்கும் தடை போட பசி தாங்க முடியாமல் போனவன் பனை மரத்தில் இருந்த காயில் இருந்து சுறந்து வந்த பாலை சாப்பிட்டு தனது பசியை போக்கிக் கொண்டான். அப்படி செய்து வந்தபோது ஒருநாள் ஒருநாள் அந்த பால் அவன் கண்களில் சிந்தி விட அவன் குருடனாயினான். கண் தெரியாமல் நடந்து  போனவன் ஒரு பாழும் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனை தேடிக் கொண்டு வந்த தௌம்யா  மகரிஷி நடந்ததை அறிந்து கொண்டு மனம் வருந்தினார். அவனது பசி இயற்கையானதே  என்பதினால்  தானே அவனுக்கு நேர்ந்த இந்த நிலைக்குக் காரணம் எனப் புரிந்து கொண்டு அவனுக்கும் நல்ல கல்வி அறிவு கொடுத்து அவனையும் பெரும் தபஸ்வியாக்கினார்.  அவனும் பிற்காலத்தில் பெரிய தபஸ்வியாகி  இந்திரனும், தக்ஷனும் செய்த யாகத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டான்’.

இப்படியாக குருவின் மகிமையை எடுத்துரைத்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் முகத்தையே நோக்கி அமர்ந்திருந்த அந்த பிராமணனின் மனம் அமைதி அடைந்தது.  தன்  தவறை உணர்ந்து கொண்டவர் அவரை வணங்கி அவருடைய அருளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய குருவிடம் சென்று அவரிடம் மன்னிப்பைக் கோரி மீண்டும் அவரிடமே சிஷ்யரானார்.

இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள்  ஒரு வருடம் அதிகம் வெளியில் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி கிருஷ்ணா நதிக் கரை வழியாக பிலாவடி என்ற இடத்தை அடைந்தார். அங்கிருந்த ஆலயத்தில் குடிகொண்டிருந்த புவனேஸ்வரி தேவியை வணங்கித் துதித்தப் பின் நதிக் கரையில் இருந்த ஒரு கருநெல்லி மரத்தடியில் சில காலம்  தங்கி இருந்தார் (இப்படியாக அத்தியாயம்-16 முடிவடைந்தது) .

…………தொடரும்