அத்தியாயம் – 10

நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின் அவர் வேறு அவதாரம் எதுவும் எடுக்கவில்லையா? அவர் வேறு மகிமைகளை சூஷ்ம உலகில் இருந்து செய்யவில்லையா? இவற்றையும் எனக்கு கூறுவீர்களா” என்று கேட்டார்.

அதற்கு சித்த முனிவர் கூறினார் ”நமத்ஹரகா, ஸ்ரீ பாத வல்லபா மறைந்து விட்டாலும் சூஷ்ம உலகில் இருந்தபடி அவர் பல மகிமைகளை செய்துள்ளார். அதனால்தான் குருபுரம் புனித ஷேத்திரமாக கருதப்படுகிறது. அவருடைய பாதுகைகள் இந்த ஊரில் உள்ளதினால் இங்குதான் அவர் இன்னமும் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் இங்கு வந்தாலே அனைத்து  பாபங்களும்  விலகும் என்றும்  கூறுகிறார்கள். அவருடைய பாதுகை எத்தனை மகிமை  வாய்ந்தது என்பதை எடுத்துக் காட்டும் இந்தக் கதையைக் கேள்” என்று கூறிவிட்டு அந்தக் கதையை  கூறத் துவங்கினார்.

‘முன் ஒரு காலத்தில் வெளியூரில் இருந்த பிராமணர் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவர் சம்பாத்தியம் பெரியதாகிக் கொண்டே வந்ததினால் ஒவ்வொரு வருடமும் அவர் குருபுரத்துக்கு வந்து இங்குள்ள ஸ்ரீ பாத வல்லபா ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் செய்து விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அப்படி இருந்து வருகையில் ஒரு வருடம் அவருடைய வியாபாரத்தில் அதிக அளவு லாபம் கிடைத்து  இருந்ததினால் இரண்டு நாட்களுக்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு பையில் நிறைய பணத்தை எடுத்துக் கொண்டு குருபுரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அதை சில திருடர்கள் தெரிந்து கொண்டார்கள்.  ஆகவே பணத்துடன் குருபுரத்துக்கு   அவர் வந்து கொண்டு இருந்தபோது வழியில்  அவரை வழிமறித்து கழுத்தை அறுத்து அவரைக் கொன்றப் பின் அவரிடம் இருந்தப் பணத்தை திருடிக்  கொண்டு சென்று விட்டார்கள்.

ஆனால் சூஷ்ம வடிவில் அங்கிருந்த ஸ்ரீ பாத வல்லபா அதை பார்த்து விட்டார். தனது கையில் ஒரு சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு அந்த திருடர்களை துரத்திச் சென்று பிடித்து அவர்களை அந்த சூலத்தினாலேயே குத்திக் கொன்றார். அதில் ஒருவன் குத்தப்படும் முன்னர் அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கேட்டு தன்னை விட்டு விடுமாறு கதறினான். கொள்ளை அடித்த  பணத்தையும் அவரிடமே கொடுக்க அவர் அவன் மீது இரக்கம்  கொண்டு கருணைக் காட்டி அவனைக் கொல்லாமல் விட்டார். அவனிடம் சிறிது வீபுதியைக் கொடுத்து அதை அந்த பிராமணரின் அருந்த தலையில் தடவிய பின் அதை அவனது உடலோடு சேர்த்து வைக்குமாறு கூறியதும்  அவனும் ஓடிச் சென்று அவர் கூறியதை செய்தான். என்ன அதிசயம். அடுத்த ஷணம் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த பிராமணன் மயக்கம் தெளிந்து எழுவது  போல உயிர் பெற்று எழுந்தான்.

உயிர் பெற்று எழுந்தவன் அவன் எதிரில் நின்று கொண்டு இருந்த திருடனிடம் தான் எங்கு இருக்கிறேன், தன்னை சுற்றி என்ன நடந்தது, தன்னை யாரோ தாக்கி விட்டுப் போனார்களே, அவர்கள் யார் என்றெல்லாம்  கேட்டார். அந்த திருடனும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவருக்குக் கூறிவிட்டு யாரோ முன்பின் தெரியாதவர் கையில் சூலத்துடன் வந்து தம் நண்பர்களைத் தாக்கிக் கொன்று தன்னை கருணைக் காட்டி கொல்லாமல் விட்டு விட்டார் என்றும், அவரே இறந்த அந்த பிராமணனை பிழைக்க வைக்க வீபுதியை தந்தார் என்றும், அதை தடவிய பின் அறுந்து கிடந்த தலையையும், உடம்பையும் ஒன்றாக வைத்ததும் உயிர் பிழைத்து எழுந்து வந்து விட்ட உண்மையையும் கூற அந்த பிராமணனும் தனக்கு உயிர் பிச்சைக் கொடுத்தது ஸ்ரீ பாத வல்லாபாவே என்பதைப் புரிந்து கொண்டார்.

ஸ்வாமியின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டழுத பின்  அந்த திருடனுக்கு காட்சி தந்து அவனிடம்  வீபுதி கொடுத்து அனுப்பியது கருணைக் கடலான ஸ்ரீ பாத வல்லாபாவே  என்பதை அவனுக்கும் புரிய வைக்க   அவனும் ஆனந்தம் அடைந்து தான் செய்த தவற்றுக்கு வருந்தி அவரிடம் மன்னிப்புக் கேட்டான். அதற்குப் பின்னர் அவனும் அந்த பிராமணனுக்கு துணையாக குருபுரம் சென்றான். அங்கு சென்றதும் இருவரும் ஸ்வாமிகளின் பாதுகைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டப் பின், அந்த பிராமணன் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும்போது அவருக்கு உதவியாக  இருந்தான். இப்படியாக  ஸ்ரீ பாத வல்லபா அங்கு சூஷ்மமாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்” என்று கூறிய பின்னர்  குருபுரம்   கதையை கூறி முடித்தார் (இத்துடன் அத்தியாயம் -10 முடிந்தது).

…………….தொடரும்