அத்தியாயம் – 6
சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ”என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா தாத்தாத்திரேயரின் அவதாரம் என்று, அப்படி என்றால் தெய்வமான அவர் ஏன் பல புனித இடங்களுக்கும் சென்று அங்குள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தார். அதற்கும் மேலாக அவர் எதற்காக கோகர்ணத்துக்கு முக்கியத்துவம் தந்து அங்கு சென்றார் என்பதை எனக்கு கூறுவீர்களா?” எனப் பணிவுடன் கேட்க சித்த முனிவர் அவரது சந்தேகத்துக்கான விளக்கத்தை தந்து அந்தக் கதையையும் கூறினார்.
”நமத்ஹரகா, நீ கேட்டது நல்ல சந்தேகமே. இந்த சந்தேகம் எவருக்கும் வரக்கூடியதே. ஸ்ரீ பாத வல்லபா தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தெய்வங்கள் மனித உருவை எடுத்து வரும்போது மனித குலத்துக்கு எடுத்துக் காட்டும் வகையில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில செயல்பாடுகளை தாமே செய்து காட்ட வேண்டி உள்ளது. எதையுமே வாயால் சொல்வதை விட செயலால் செய்து காட்டுவதே சிறந்த முறை ஆகும். ஆகவே அந்த செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை மனித குலத்துக்கு எடுத்துக் காட்டவே ஸ்ரீபாத வல்லபா தனது சீடர்களுடன் தானே ஆலயங்களுக்கு சென்று அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் சில காரியங்களை செய்து காட்டினார். அவற்றை அவரது சீடர்கள் அனைத்து இடங்களிலும் பரப்பி வந்தார்கள். அப்படியே பின்னர் வந்த மகாபுருஷர்களும் செய்தார்கள்.
அவர் ஏன் கோகர்ணத்துக்கு சென்றார் என்றால் அந்த புனித தலம் திருமூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் இருப்பிடம். அங்குதான் சிவபெருமான் தானே ஆத்மலிங்க உருவில் அமர்ந்து உள்ளார். இதனால்தான் அந்த ஷேத்திரம் மஹா ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அது மகா புனித பூமியாகும். இதுதான் பகீரதன் தவமிருந்து அழைத்து வந்த கங்கை நதி முதலில் பூமியில் பாய்ந்த இடம். அதில் பல தெய்வங்களும், சித்த புருஷர்களும், மகாத்மாக்களும் தீர்த்தமாடி உள்ளார்கள். அங்குள்ள சிவலிங்கம் சிவபெருமானின் மைந்தனான வினாயகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் கதையை கூறுகிறேன். அதைக் கேட்டால் அங்கு ஸ்ரீ பாத வல்லபா அங்கு ஏன் முதலில் சென்றார் என்பதின் காரணம் புரியும்” என்று கூறிய சித்த புருஷர் அந்தக் கதையைக் கூறலானார்.
”இலங்கையை ஆண்டு வந்த ராவணனின் தாயார் கைகாசி என்பவள். அவள் பெரும் சிவபக்தை. சிவ தீட்ஷையை பெற்று இருந்த அந்தப் பெண்மணி தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் நதிக்கரையில் அதை வைத்துவிட்டு அங்கேயே நதியில் குளித்தப் பின் சிவலிங்கத்தை பூஜித்தப் பின் அதன் எதிரில் அமர்ந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி தினமும் ஒரு இலட்சத்து எட்டு முறை முறை நமச்சிவாயா எனும் மந்திரத்தை ஓதி சிவபெருமானை பூஜித்தப் பின்னரே உணவு அருந்துவாள். தினமும் ஒரு புதிய சிவலிங்கத்தை எடுத்து வந்து பூஜை செய்பவளுக்கு ஒருநாள் அவளுக்கு புதிய சிவலிங்கம் கிடைக்கவில்லை. ஆகவே பூஜைக்கு நேரமாகிவிட்டது என்பதினால் நதிக்கரைக்கு சென்று பூமி மண்ணைக் கொண்டு ஒரு சிவலிங்கத்தை செய்து அதற்கு பூஜை செய்துவிட்டாள். அன்று எதேற்சையாக அவள் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜித்ததை ராவணன் பார்த்துவிட்டான். உடனே தன் தாயிடம் சென்று ‘அம்மா, நீங்கள் ஏன் தினமும் புதிய சிவலிங்கத்தை தேடி அலைய வேண்டும். அந்த சிவபெருமான் குடி உள்ள கைலாய மலையையே இங்கு கொண்டு வந்து வைக்கிறேன். நீ நேரடியாகவே அவரை பூஜிக்கலாம்’ என்று கூறிவிட்டு கைலாய மலையை பெயர்த்து எடுத்து வரச் சென்றான். (அந்த கட்டத்தில்தான் ராவணனது பிடியில் அனைத்து தேவர்களும், காலங்களும், திசைகளும் இருக்க தேவேந்திரன் முதல் வருணன், வாயு, அக்னி மற்றும் யமன் போன்றவர்களும் ஒவ்வொரு விதங்களில் அவனுக்கு சேவகம் செய்யும் நிலை இருந்தது. ராவணனின் சகோதரன் குபேரனே அவருக்கு அடிமையாக இருந்த நேரம் அது. அத்தனை சக்தி வாய்ந்தவனாக ராவணன் இருந்தான். அதைக் குறித்து அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறை இட்டு தம்மை ராவணனின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டி வந்தார்கள். தாம் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவதாக சிவபெருமான் கூறி இருந்தார். அந்த நேரத்தில் நடந்த சம்பவம்தான் இந்தக் கதை)
கைலாய மலை அடிவாரத்துக்கு சென்று அந்த மலையை தனது தலைகளினால் முட்டி, மோதி அதை ஆட்டி, ஆட்டி பூமியில் இருந்து அடியோடு பெயர்த்து எடுக்க முயன்றான். மலை பயங்கரமாக ஆடத் துவங்க தேவர்களும், கைலாயவாசிகளும் பயந்து போய் சிவபெருமானிடம் சென்று அதைக் குறித்துக் கூறினார்கள். அனைத்தையும் கைலாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த சிவபெருமான் அவன் மலையை பெயர்த்து தோளிலே வைக்க இருந்த சமயத்தில் தனது காலினால் மலையை அவன் மீது அழுத்த அவன் மலை அடியில் சிக்கிக் கொண்டு வலி தாங்காமல் கதறினான். என்ன இருந்தாலும் ராவணனும் சிவபெருமானின் பரம பக்தன் என்பதினால் அவன் கதறலைக் கேட்டு ஒரு ஷணம் அவன் தலையையும் இரு கைகளையும் மட்டுமே வெளியில் எடுக்க வைத்து விட்டு மீண்டும் மலையை அவன் மீதே வைத்து அமுக்கிக் கொண்டார்.
ராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது கையினால் ஒரு தலையை வெட்டி எடுத்து, இன்னொரு கையையும் வெட்டி எடுத்துக் கொண்டு அவற்றைக் கொண்டு தனது சக்தியினால் ஒரு வீணையை உருவாக்கினான். அவனுக்குத் தெரியும் சிவபெருமான் இசைப் பிரியர் என்று. உடலின் பல பாகங்களில் இருந்து நரம்புகளை பிடுங்கி எடுத்து அவற்றை வீணையின் தந்திக் கம்பிகளாக்கி அதை மீட்டி சிவபெருமானைப் போற்றி பல்லவி, அனுபல்லவி என ஏழு ஸ்வரங்களில் சாமவேத கானத்தில் சிவஸ்துதியை பாடத் துவங்கினான். அவன் பாடிய இசையில் மனம் லயித்துப் போன சிவபெருமானும் அவனை மலை அடியில் இருந்து வெளியில் எடுத்து அவன் அந்த மலையை பெயர்க்க முயன்றதின் காரணத்தைக் கேட்டார்.
சற்றும் தயங்காமல் அவரிடம் ராவணம் கூறினான் ‘சிவபெருமானே, என்னுடைய தாயார் உமது பக்தை ஆவாள். அவள் தினமும் ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து அதியே நீங்களாக பாவித்து உமது நாமத்தை ஒருலட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்த பின்னரே உணவு அருந்துவாள். அவளுக்கு இன்று எந்த சிவலிங்கமும் கிடைக்கவில்லை என்பதினால் மண்ணினால் ஆன சிவலிங்கத்தை நீங்களாக பாவித்து பூஜை செய்தாள் . அது என் மனதை வேதனைப்படுத்தியது. என் காலடியில் நவ நதிகளும் ஓடுகின்றன. தேவேந்திரன் முதல் வாயு, அக்னி, யமன், வருணன், என அனைவரும் எனக்கு சேவகம் செய்கிறார்கள். காமதேனு என் இல்லத்தில் இருக்க கல்பவிருஷமோ என் வீட்டு தோட்டத்தில் வளர்கிறது. இவை அனைத்துமே உங்களுக்குத் தெரியும். அவை அனைத்துமே கிடைக்க நீங்கள் கொடுத்த வரமே காரணம். எனக்கு நிகரானவன் இனி இல்லை எனும் அளவுக்கு நீங்கள் எனக்கு சக்தியை தந்துளீர்கள். இப்படியாக அனைத்து சக்திகளும் பெற்று உள்ள நான் நீங்கள் குடி கொண்டுள்ள இந்த மண்ணினால் ஆன மலையையே இலங்காபுரியில் கொண்டு வந்து வைத்து விட்டால் அவள் தினமும் உங்களை நேரடியாக பூஜிக்கலாம் அல்லவா என்று எண்ணியே இங்கு வந்து இந்த மலையை எடுத்துப் போக வந்தேன்’ என்றான்.
இசை மழையினால் ஈர்க்கப்பட்ட சிவனார் அவன் முன் தோன்றி, ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்று கூறினார். இராவணன் கேட்டான் ‘சிவபெருமானே நான் கூறியபடி எனக்கு என்னுடைய தாயாரின் மகிழ்ச்சியே முக்கியம். ஆகவே அவள் கஷ்டப்படாமல் தினமும் உம்மை துதித்து விட்டு அதன் பின்னர் உணவருந்தும் வகையில் இருக்க நீர் குடி கொண்டுள்ள இந்த மலையை உம்மோடு சேர்த்து என் நாட்டிற்கு எடுத்துச் செல்ல என்னை அனுமதிக்க வேண்டும். அதோடு எனக்கும் உங்களைப் போலவே அளவற்ற சக்தி வேண்டும். மகேஷ்வரா இந்த வரத்தை மட்டும் தந்தால் போதும்’ என்று கேட்டான்.
அதைக் கேட்ட சிவபெருமான் சற்றும் தாமதிக்காமல் கூறினார் ‘ராவணா, உன்னுடைய தாயாருக்காக நீ என்னிடம் வைக்கும் உன்னுடைய வேண்டுகோள் நியாயமாகவே உள்ளது. ஆகவே நீ அதிக சிரமம்படத் தேவை இல்லை. உன்னுடைய தாயாருக்கு வேண்டியது என்னை பூஜிப்பதே. ஆகவே உனக்கு நான் உனக்கு நானே குடி இருக்கும் என்னுடைய ஆத்ம லிங்கத்தைத் தருகின்றேன். அதை ஆராதிப்பதின் மூலம் உன் தாயாருக்கு என்னை நேரடியாக ஆராதித்ததின் பலன் கிடைத்து விடும். ஆகவே நீ மலையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் குடி இருக்கும் ஆத்ம லிங்கத்தை மட்டும் ஆராதித்தால் அது மட்டுமே போதும். மேலும் இதை நீயும் மூன்று வருடங்கள் தொடர்ந்து மூன்று வேளை பூஜை செய்து நான் இப்போது உனக்கு உபதேசிக்கும் மந்திரத்தை ஒரு லட்ஷத்து எட்டு முறை உச்சாடனம் செய்து வந்தால் நீயும் என்னைப் போலவே சக்தி கொண்டவனாக மாறி விடுவாய் (அந்த மந்திரத்தை அவனுக்கு உபதேசித்தார்). ஆனால் ஒரே ஒரு சின்ன நிபந்தனை.