துலா புராணம்- 16
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

சந்தேகம் வந்ததும் கண்களை மூடிக் கொண்டு நிஷ்டையில் அமர்ந்து உள்ளது போல இருந்த அர்ஜுன சன்யாசியிடம் சென்று அவள் கேட்டாள் ‘ஸ்வாமி உங்களைப் பார்த்தால் எனக்கு நீங்கள் சன்யாசி போல தோன்றவில்லை. நான் பல காலமாக அர்ஜுனனை மனதில் நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். ஒருவேளை நீங்கள்தான் அர்ஜுனனோ என்றும், இப்படி போலி வேடம் அணிந்து கொண்டு என்னைக் காண வந்துள்ளீர்களோ என்று மனம் நினைக்கின்றது. ஆகவே உண்மையில் நீங்கள் யார் என்பதை எனக்கு தெரியப்படுத்த வேண்டும்’.
அர்ஜுன  சன்யாசியிடம்  அவர் சன்யாசிதானா  என்பதைக் 
குறித்து  தனக்கு  சந்தேகம் உள்ளதாக   சுபத்ரை கூறினாள் 

அவள் குரலைக் கேட்டதும் மூடிய கண்களைத் திறந்த அர்ஜுனன் மெல்ல சிரித்து விட்டு அவளிடம் தான் வந்துள்ள அனைத்து விஷயத்தையும் கூறினார். ஆனால் கிருஷ்ணர் இடையில் இருந்ததையும், அவர் கூறிய தந்திரங்களையும் மட்டும் கூறவில்லை. அதைக் கேட்ட அவள் ஆனந்தம் அடைந்தாள். அவள் கூறினாள் ‘பார்த்தா, நான் உன்னை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு உள்ளேன். ஆகவே நீ எப்படியாவது என்னை விவாஹம் செய்து கொண்டுதான் இங்கிருந்து போக வேண்டும். ஏன் என்றால் பலராமர் என்னை துரியோதனனுக்கு விவாகம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார். ‘ என்று கூறியதும் அர்ஜுனன் ‘நீ கவலைப் படாதே, உடனே இங்கிருந்து சென்று உன் தாயார், தந்தை மற்றும் கிருஷ்ணரிடம் மட்டும் உண்மையைக் கூறு. அதற்கு மேல் என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கலாம்’ என்று கூறி அவளை அனுப்பினான்.

 அவளும் உடனே கிளம்பிச் சென்று தன்னுடைய தாயார் மற்றும் தந்தையிடம் விஷயத்தைக் கூற அவர்களும் பேரானந்தம் கொண்டார்கள். ஆனால் பலராமரை அதற்கு எப்படி சம்மதிக்க வைப்பது என்பதே அனைவருக்கும் பெரும் கவலையாக இருந்தது. அவர்கள் உடனே கிருஷ்ணரை அழைத்து தனிமையில் ஆலோசிக்க கிருஷ்ணரோ தனக்கு ஒன்றுமே தெரியாதது போல பாசாங்கு செய்துவிட்டு ‘ தாயே சுபத்ரையின் மனோரதம் கூடி வருகிறது போலிருக்கிறதே. பரவாய் இல்லை என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம். நான் ஒரு காரியம் செய்கிறேன். பலராமரையும் அவரை சேர்ந்தவர்களையும் விரத யாத்திரை மற்றும் நதி பூஜை என்ற பெயரில் இங்கிருந்து அழைத்துச் செல்கிராஎன். பிறகு அவற்றை செய்து முடித்தப் பின் நாளை திரும்புவேன். நாங்கள் கிளம்பிச் சென்றதும் நீங்கள் உடனே அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் ரிஷிகளின் முன்னிலையில் கந்தர்வ விவாஹத்தை நடத்தி வைத்து அவர்கள் இருவரையும் இங்கிருந்து அனுப்பி விடுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு பலராமர் மற்றும் அவருடன் இருந்தவர்களை அழைத்து தான் ஒரு விரதம் செய்ய வேண்டிக் கொண்டு இருந்ததாகவும், ஆகவே தன்னுடன் அடுத்த ஊரில் இருந்த நதியில் நீராடி, விரதம் இருந்து, விரத பூஜையை முடித்துக் கொண்டு வர அனைவரும் வர வேண்டும் என்றார். ‘இரண்டு நாட்கள்தானே, நம் பெற்றோர்கள் அரண்மனைப் பார்த்துக் கொள்வார்கள். யோகிக்கு சுபத்ரை பணிவிடை செய்வாள், ஆகவே எதற்கும் கவலை இல்லை’ என்று கூறிவிட்டு அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவர் அந்த பூஜை மற்றும் யாகத்தை முனிவர்களைக் கொண்டு செய்ய வைத்தார். அது முடிய பல மணி நேரம் ஆயிற்று. மாலையும் வந்து இரவும் ஆகி விட்டது. ஆகவே அனைவரும் அந்தக் கடல் அருகிலேயே இரவை கழித்து விட்டு ஆயாசமாக இருந்தப் பின் மறுநாள் மதியம் கிளம்பிச் செல்ல முடிவு செய்தார்கள்.
ரிஷி முனிவர்கள் கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதிற்காக 
செய்த விரத  பூஜை மற்றும் ஹோமம் 

அதற்கு இடையே கிருஷ்ணர் பலராமரை அழைத்துச் சென்றதும், சுபத்ரை மற்றும் அர்ஜுனனின் கந்தர்வ விவாகத்துக்கான ஏற்பாடுகள் மள மளவென நடந்தன. சில மணி நேரத்திலேயே ரிஷி முனிவர்கள், தேவேந்திரன் போன்றவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள் அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் கந்தர்வ முறையில் விவாஹம் நடந்தது. தர்மர் சுபத்ரையை தனது மடியில் வெட்கத்துடன் அமர வைத்துக் கொண்டு கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அனைத்து ரிஷி முனிவர்களும் அவர்களை ஆசிர்வதித்தார்கள்’.

இதுவரை அந்தக் கதையைக் கூறிய அகஸ்தியர் அனைவருக்கும் கூறினார் ‘ இந்த சுபத்ரை திருமணக் கதையைக் கேட்பவர்கள் பரம கதியை அடைவார்கள். இதை புண்ணிய காலத்தில் கேட்டால் புத்ர பாக்கியம் பெறுவார்கள். ஏகாதசி அன்று கண் விழித்துக் கேட்டால் சுகரைப் போல பெருமையை பெறுவார்கள் . வைகுண்ட வாசியாவார்கள். தக்ஷயன் யாகத்தில் இதைக் கேட்டதால்தான் பரமசிவனும் பார்வதியை மீண்டும் மண முடியா முடிந்தது. இதற்கு சமமான இஷ்டத்தைத் தரும் புண்ணியக் கதை வேறு எதுவுமே கிடையாது’. என்று கூறியதும், அரிச்சந்திரன் அவரைப் பார்த்துக் கூறினான் ‘மா முனிவரே, அதற்குப் பிறகு என்ன ஆயிற்று என்பதையும் கூறுங்கள்’.

அகஸ்தியர் மீதிக் கதையைத் தொடர்ந்தார்.

‘ விவாஹம் முடிந்ததும் சுபத்ரையை தேரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிய அர்ஜுனான் பத்து திக்குக்களிலும் ஒலிக்கும்படி நாண் ஒலியை எழுப்பினான். அந்த ஒலியைக் கேட்ட நகர காவலாளிகள் விழித்தெழுந்து ஓடி வந்தார்கள். அர்ஜுனனைப் பிடிக்கப் பாய்ந்தார்கள். மூன்று யோசனை தூரம் கேட்கும் வகையில் -நகருக்கு ஆபத்து- என்ற சங்கேத பேரிகை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் நொடிப் பொழுதில் துவம்சம் செய்த காண்டீபன் அந்த சங்கேத பேரிகை ஒலியைக் கேட்டு ஓடி வந்த பல்லாயிரக்கணக்கான சூரர்களையும் தோல்வி அடையச் செய்து கிளம்பிச் சென்றான்.

தன்னை தடுக்க வந்த அனைவரையும் நொடிப் 
பொழுதில் துவம்சம் செய்த காண்டீபன் 

அதற்குள் சங்கேத பேரிகையின் ஒலியைக் கேட்ட கிருஷ்ணருடன் சென்று இருந்த யாதவர்கள் விழித்தெழுந்தார்கள். ‘இதென்ன நடக்கிறது….இதென்ன நடக்கிறது’ என பதபதைத்தவாறு கிருஷ்ணரையும் எழுப்பினார்கள். ‘சமயம் பார்த்து பகைவர்கள் நம் நாட்டை தாக்கி உள்ளார்கள். இவ்வளவு சேனைகளையும் அழைத்துக் கொண்டு எப்படி விரைவாக செல்வது. கிருஷ்ணா நீ இந்த பெரும் சேனையை அழைத்துக் கொண்டு பின்னால் வா’ எனக் கோபமாகக் கூறிய பலராமர் தேர் மீது ஏறிச் செல்ல அவரை தடுத்தக் கிருஷ்ணர் கூறினார் ‘பலராமா, பதட்டப்படாதே . ஒன்றும் ஆகி இருக்காது. நம் அரண்மனையில் யோகி ஒருவரை விட்டு விட்டு வந்துள்ளோம் அல்லவா. அவருக்கு ஏதேனும் நேர்ந்து இருக்கலாம், அல்லது அவரால் யாருக்கேனும் ஏதாவது ஆபத்து நிகழ்ந்து இருக்கலாம். நம் சகோதரி சுபத்ரை அவருக்குப் பணிவிடை செய்கிறாள். இந்த பேரிகையின் சப்தம் முதலில் அப சகுனமாகவும், அதன் பின் நல்ல சகுனமாகவும் என் காதில் விழுகிறது. ஆகவே நமக்கு எதோ நல்லது நடக்க உள்ளது என்பதையே இது காட்டுகிறது. நம் நாட்டின் மீது படையெடுத்து வர யாருக்கும் தைரியம் கிடையாது. நீ கவலைப் படாதே. எப்போதும் போல நானே முன்னால் சென்று பார்க்கிறேன். யாரும் நமக்கு துரோகம் செய்திருந்தார்கள் என்றால் அவர்களைக் கொல்வது என் கடமையாகவே இருக்கட்டும்’ என்று கூற பலராமர் கூறினார் ‘கிருஷ்ணா, எனக்கு ஒன்று புரியவில்லை. ஆதி முதலேயே உனக்கு அந்த யோகி மீது துவேஷம் இருந்துள்ளது. அதனால்தான் அவரையே நீ மீண்டும் மீண்டும் சந்தேகிக்கிறாய். சிறு விஷயத்துக்காக பேரிகை அடித்து இருக்க மாட்டார்கள். ஒன்று அன்னியர் படை எடுப்பு, இல்லை உள்நாட்டுக் கலகம் உண்டாகி இருக்கும்’ என்று கூறி முடிக்கவும், அரண்மனை தூதுவன் ஓடோடி வந்து அவர்களை வணங்கி நின்றுவிட்டுக் கூறினான் ‘தர்மவான்களே, நம் அரண்மனையில் இருந்த யோகி, உங்கள் சகோதரி சுபத்ரையை கந்தர்வ முறையில் திருமணம் செய்து கொண்டு அவளை தூக்கிக் கொண்டு போய் விட்டார். அவரை நாங்கள் தடுக்க முயன்றோம்,. ஆனால் அவர் எங்கள் அத்தனை போரையும் தூள் தூளாக்கி விட்டுச் சென்று விட்டார். அவர் பரமசிவனோ இல்லை தேவேந்திரனோ என்றே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான அர்ஜுனன் என்றே தெரிகிறது. அத்தனை பராக்கிரமாக அவர் காணப்பட்டார்’ என்று கூறியதும், திகைத்துப் போய் நின்றிருந்த அங்கிருந்த அனைவருக்கும் கிருஷ்ணர் கூறினார் ‘பலராமா, அந்த யோகியைப் பற்றி நான் முன்னரே உங்களை எச்சரித்தேன். ஆனால் நீங்கள்தான் என்னை சிறியவன், உனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினீர்கள். இப்போது பார்த்தீர்களா? இதோ நொடிப் பொழுதில் நான் சென்று அந்த பாண்டவர் குலத்தையே அழிக்கிறேன்’ என்று கோபத்துடன் கூறி விட்டு தனது தேரில் ஏறிய கிருஷ்ணரை பலராமர் தடுத்தார். ‘கிருஷ்ணா என்ன காரியம் செய்ய நினைக்கிறாய். அர்ஜுனன் செய்த குற்றத்திற்கு அவனை அழிக்காமல் அவன் குலத்தை அழிப்பது தர்மமா ? ராவணம் பாவம் செய்தால் வீபீஷணனையும் கொல்ல வேண்டும் என்பதா உன் வாதம்? இது சரி அல்ல. நம் குலத்தைக் கெடுத்த அந்த அர்ஜுனனை அல்லவா கொல்ல வேண்டும்’ என்று கோபமாகக் கூறி விட்டு தன் தோளில் உலக்கையை வைத்துக் கொண்டு தேரில் ஏறினார் பலராமர்.

அங்கிருந்த அனைவரும் கோபக்கனல் தெறிக்க கிளம்பியவரைக் கண்டு பயந்து போய் பேசாமல் நின்றார்கள். யாதவ சைனியங்கள் பின் தொடர பலராமர் செல்லுகையில் அவரை வழிமறித்தார் கிருஷ்ணர். பாலராமரிடம் கூறினார் ‘ பலராமா, நாம் அனைவரும் ஆத்திரத்தில் அறிவிழந்து பேசுகிறோம். முதலில் அந்த யோகியை அரண்மனையில் விட்டதே தவறு. அதன் பின் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வேஷதாரியான அந்த யோகியைக் கொன்றால் நம் சகோதரியின் கதி என்ன ஆகும் என்பதை ஒரு கணம் யோசனை செய்து பார். சுப்ரதை அவனை மணந்து கொண்டு அவனுடன் சென்று உள்ளாள். அதற்குக் காரணம் அவரை அவளும் விரும்பியே கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருந்திருக்க வேண்டும். யார் மனதில் உள்ளதை யார்தான் அறிய முடியும்? ‘.
அதைக் கேட்ட பலராமர் இன்னும் கோபமடைந்து கூறினார் ‘கிருஷ்ணா, அர்ஜுனன் உனக்கு அடிமை. உனக்கு தெரிந்தேதான் அனைத்தும் நடந்து இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது ‘ என்று கூற கிருஷ்ணர் நாடகமாடினார் ‘ அண்ணா, என் மீது நீயே சந்தேகப்படும்போது நான் என்ன சொல்வது? எனக்குள் உள்ள ஹரி மட்டுமே உண்மையை அறிவார். இனி நான் பேசப்போவது இல்லை. என்ன செய்ய வேண்டுமோ அதை நீங்கள் அனைவரும் செய்யுங்கள். எப்போது என் மீதே சந்தேகம் வந்துவிட்டதோ இனி எனக்கு ராஜ வம்ச வாழ்க்கையே தேவை இல்லை. நான் எங்காவது நதிக்கரைக்குச் சென்று மௌனியாக வாழ்ந்து விடுகிறேன். என்னால் இனி யாருக்கும் துன்பம் வராது ‘ என கண்களில் நீர் வழிய தேரை விட்டு இறங்கி, தன் கிரீடத்தையும் கயற்றினார்.

அதைக் கண்ட பலராமர் ஓடோடி வந்து அவரை கட்டி அணைத்தவாறு கூறினார் ‘குழந்தாய் நான் உன்னை விடப் பெரியவன்தான். ஆனால் நாடே உன்னுடைய புத்திக் கூர்மையை அல்லவா மெச்சுகிறது. வா, அரண்மனைக்கு செல்வோம். இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என நீயே முடிவைக் கூறு. நீ எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் அனைவரும் கட்டுப்படுகிறோம். இது சத்தியம்’ என்று கூற கிருஷ்ணர் கூறினார் ‘ அண்ணா, நடந்தது நடந்து விட்டது. அர்ஜுனன் நம் சகோதரியை மணந்து கொண்டு விட்டான். அவளும் அவனை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டு விட்டால். ஆகவே பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவன் நமக்கு பந்து ஆகி விட்டான். சந்தனு மகராஜ் கங்கையை கந்தர்வ முறையில் விவாஹம் செய்து கொள்ளவில்லையா? அவர் இன்னும் ஜீவித்துக் கொண்டுதானே இருக்கிறார். என்னையே பார், ருக்மணியை அவளது பெற்றோர்களுக்கு பிடிக்காவிடிலும் அவளை நானல்லவா கந்தர்வ விவாஹம் செய்து கொண்டேன். ஆகவே நாம் அனைவரும் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று முறைப்படி அந்த திருமணத்தை நடத்தி வைப்போம். அதுவே நம் பெற்றோர்களுக்கும், நம் சகோதரிக்கும் செய்யும் கடமையாகும். அதுவே அவளை சந்தோஷப்படுத்தும்’.

சீதனங்களை எடுத்துக் கொண்டு கிருஷ்ணரும் மற்றவர்களும்
 ஹஸ்தினாபுரத்துக்கு  கிளம்பிச் சென்றார்கள் 

இதைக் கேட்டதும் அனைவரும் கிருஷ்ணரின் கூற்றை ஏற்றுக் கொண்டார்கள். உக்ரசேனர், ஊதரன், அக்ரூரர் மற்றும் சாத்வீகர் போன்ற அனைவரும் ‘நாம் உடனே சீதனங்களை எடுத்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று கிருஷ்ணர் கூறியதை செயல்படுத்துவோம்’ என்று கூறிவிட்டு அனைவரும் ஹஸ்தினாபுரத்துக்கு மகிழ்ச்சியோடு சென்றார்கள். வந்தவர்களை நல்ல முறையில் வரவேற்றுய் பாண்டவ சகோதரர்கள் உபசரித்தார்கள். யுதிஷ்டிரர் அனைவரையும் வரவேற்று உபசரித்தார். பிராமணர்கள் ஆசிகளைக் கூறினார்கள். பெண்கள் ஆரத்தி எடுத்தார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மிக உயர்ந்த ஆடை ஆபரணங்களை பரிசாகவும், சீதனமாகவும் வழங்கினார்கள். சுபத்ரையை அழைத்துக் கொண்டு போய் திரௌபதியிடம் விட்ட கிருஷ்ணர் ‘ திரௌபதி, இவளும் உனக்கு சகோதரி போன்றவளே. இவளைக் கண்கலங்காமல் நீதான் அம்மா பார்த்துக் கொள்ள வேண்டும். உன் கணவர் இவளை அழைத்து வந்துள்ளாரே என அச்சப்படாதே, அவள் குழந்தைப் போன்றவள்’ என்று கூற ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுத திரௌபதி சுபத்ரயைக் கட்டி அனைத்துக் கொண்டு கூறினாள் ‘கண்ணா, என்னை தவறாக நினைக்காதீர்கள். நான் பிற ஸ்திரீகளைப் போன்றப் பெண் அல்ல. சுபத்ரை எனக்கும் வேண்டியவளே. அவளை அர்ஜுனன் மணந்து கொண்டது எதோ ஒரு நன்மைக்காகவே இருக்கும். இதன் மூலம் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர் ஆகி விட்டோம் அல்லவா. நீங்கள் கவலையே படத் தேவை இல்லை. இவளை என் கணவர் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாக இருக்க வைப்பது என் பொறுப்பு’ என்று கூறினார்கள்.

தர்மர் கண்ணீர் விட்டுக் கூறினார் ‘ உலகில் எங்களைவிட துர்பாக்கியம் செய்தவர்கள் இல்லை. பிறந்தது முதலேயே துன்பத்தில் உழலுகிறோம். தந்தையை இழந்தோம். வனத்துக்கு துரத்தப்பட்டோம். அரக்கு மாளிகையில் தீயில் கருகி மரணம் அடைய இருந்தவர்கள் உன் உபாயத்தினால் தப்பினோம். இன்னும் எத்தனையோ அவமானங்கள் பட்டோம்.’ என்று தன்னை மறந்து கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் அனைவருக்கும் கூறினார் ‘ ஈஸ்வர கிருபை உள்ளவனுக்கே அனைத்து சம்பத்தும் கிடைக்கும். நமக்கு ஜென்மாந்திரத்தில் விதித்தபடிதான் அனைத்தும் நடக்கின்றது. விரைவில் நிச்சயம் நம் அனைவருக்கும் சகல நன்மையையும் கிடைக்க உள்ளது. ராஜன் வினசப்படாதே. தனுர் மாதம் உஷ: காலத்தில் பூஜை செய்தால் பகவான் சந்தோஷம் அடைந்து அனைத்தையும் தருவார். ஆகவே அந்த காலத்தில் பூஜை செய்து ஜனார்தனை வழிபாட்டு பயத்தம் பொங்கல் நெய் வித்தியம் செய்து விஷ்ணு பக்தர்களுக்குக் கொடு. லக்ஷ்மி ஹிருதய யந்திரத்தை ஆவாஹனம் செய்து, துலா ஸ்நானமும் செய்தே இந்திரனின் மனைவி இந்திராணி அனைத்து சம்பத்தையும் பெற்றாள். அர்ஜுனன் கூட அதனால்தான் சுபத்ரையை மணந்து கொண்டு பெருமையும் பெற்றுள்ளான்’ என்று கூறி விட்டு அனைவருக்கு லஷ்மி ஹிருதய பூஜையை செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தப் பின் அதை அவர்களுக்கு உபதேசித்தார்.

…..தொடரும்
முந்தைய பாகங்கள்