சாந்திப்பிரியா

பாகம்- 6

கண்ணபிரானின் அரண்மனைக்கு சென்ற தூதுவனும் சிசுபாலன் கூறியவற்றை கண்ணனிடம் தெரிவிக்க, அவர் அருகில் நின்றிருந்த விருட்ஷினி மரபிலே வந்த சத்தியகன் என்பவனின் மகனான சாத்தகி என்பவனைப் பார்த்து கண்ணன் கண்களைக் காட்ட சாந்தகி சிசுபாலன் அனுப்பிய தூதுவனிடம் கூறினான், ‘நீ கூறிய வார்த்தைகள் சிலேடையாக உள்ளன. பழித்தாலும், புகழ்ந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது பெருந்தன்மை உடையோரின் பண்பு. தருமர் கண்ணனுக்கு செய்த அக்கிர பூஜையைக் கண்டு சிசுபாலன் பொறாமைக் கொள்வதேன்? பொறாமைக் கொள்ளும் மனிதர் பெரியவரா, சிறியவரா? பிறர் பெறும் பெருமைகளைக் கண்டு மனம் மகிழ்வார் பெரியோர்கள் எனப்படுவோர். சிறியோரோ அதைக் கண்டு பொறாமைக் கொள்வார். பொறாமையிலே மனம் புழுங்குவார். பிறர் பிழைகளை புரியும் போது பெரியோர்கள்கள் குருடராய் இருப்பார். அது போல கூறும் பழி மொழியைக் கேட்டு செவிடர்களாக இருப்பார். ஆனால் சிறியோரோ எப்போதுமே பிறர் காரியத்தில் கண் வைத்து இருந்து பிறர் குற்றங்களைக் கண்டு பிடிக்க முயல்வர். பழி மொழியைக் கேட்டு பிற மொழியிலே சாடுவார். பெரியோர்கள் தமது வாயால் தம்முடைய கீர்த்திகளைக் கூறார். பெரியோர்களின் கீர்த்திகளைக் கூறிக் கொண்டாடுவோர் உலகில் பலரும் உளார். ஆனால் சிறியோர் கீர்த்திகளைக் கூற இரண்டாவது புருஷர் உலகில் கிடையாது என்பதினால்தான் சிறியோர் தம்மைத் தானே புகழ்ந்து கொள்கிறார்கள். பெரியோர்கள் கோபத்தை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொண்டு பகைவரை வெல்ல காலத்தையும் நேரத்தையும் பார்த்திருப்பார். சிறியோர்களோ எதையும் ஆழ்ந்து யோசனை செய்யாமல் போர் முரசு கொட்டுவர்.
தூதுவரே, உன் சிசுபாலன் இங்கு உம்மை அனுப்பியது நட்பு கொள்ளவா இல்லை பகையைக் காட்டவா? நட்புக்கு ஆயத்தம் கொண்டவன் போர் முரசு கொட்ட மாட்டான். பகைக்காகா உன்னை அனுப்பினான் என்றால் எரியும் தீபத்தில் போய் தானாக விழும் விட்டல் பூச்சிக்கு சமானமாக இருப்பான் என்றே கருத வேண்டும். தூதுவனாகிய உன் வாயால் அவன் அனுப்பிய நிந்தனைகளையும் சேர்த்து நூறு நிந்தனைக் கணக்கும் முடிவடைந்து விட்டது’ என்று கூறினார்.
அதைக் கேட்ட சிசுபாலனின் தூதுவன் கிருஷ்ணரைப் பார்த்துக் கூறினான் ‘அறிவில்லாத சிறியோர் நன்மை பயக்கும் செயலை தாமாக அறிந்து கொள்ள மாட்டார். நட்பு மற்றும் பகை இரண்டுக்குள் தக்கது எது என்பதை நீரே அறிந்து கொள்ளும். அறிந்து கொண்டு துணிந்ததை விரைந்து செய்யவும். கடமையை செய்யத் தவறியவர் தருமர். எனதரசன் சிசுபாலன் தக்கவனாக இருந்தும் அக்கிர பூஜையை உமக்கு செய்தவர். அறிவற்ற அந்த செயல் தருமருக்கு பெருமை சேர்க்குமா? எனதரசன், தனக்கெனக் கொடுத்த ருக்மணியை நீர் கவர்ந்து சென்றபோதும் கோபம் பொறுத்தான். சிசுபாலம் உமக்கு கொடுத்த நிந்தனை நூறையும் நீர் பொறுத்தீர் என்று கூறிக் கொள்கிறீர்கள். வேகமான நீரின்பெறுக்குப் போல எந்தன் அரசன் சிசுபாலன் விரைவில் சேனைகளோடு வந்து கொண்டு இருக்கிறான். நீர்பெருக்குக்கு முன்னால் நிற்கும் நீண்ட மரம் போல நின்று சண்டைப் போடாமல் பிரம்பின் கொடி போல பேடியாய் வளைந்து நின்று ஒதுங்கி ஓடாதீர்கள். குழந்தையை காப்பவன் என்று பொருள் தரும் சிசுபாலன் எனும் வார்த்தையின் நாமதேயத்தை மட்டுமே காப்பவன் சிசுபாலன் என்று நினைக்க வேண்டாம். எம் அரசன் தன்னை நாடும் பகைவரையும் காக்கிறான், பிறரையும் காக்கிறான். அது மட்டும் அல்ல எம் அரசன் பொறுமையும் இரக்கமும் பூரணமாக உள்ளவன். பகைவரது குரோதங்களையும் பாரான். ஆகவே நீரும் அவனை சரண் அடைந்து நிலை பெற்று வாழக் கடவது.
கஞ்சன், நரகன், மூரன் முதலிய வஞ்சகர்களைக் கொன்ற மாவீரனான என்னை இந்த சிசுபாலன் எப்படிக் கொல்வான் என ஆணவத்துடன் இருக்காதீர். ஜோதி விட்டெரியும் சூரியனை கேது நட்சத்திரம் விழுங்கவில்லையா? எம்மரசர் மீது போர் செய்ய வரும் அரசர் அவர் முகத்தைப் பார்ப்பதில்லை, மாறாக தன வலிமையினால் தனது பாதத்தைப் பார்க்க வைப்பார் எம் அரசர். போர்க்களம் புகுந்து செல்லும்போது புழுதி சேர்ந்து அழுக்கடையும் அவர் பாதங்களை அந்த அரசர்களின் நாயகிகளின் கண்ணீர் கழுவுகின்றன. அவன் வில் வழியும்போது, அவரை வணங்காத அரசர் குலமே வளையும். சந்திரன் போன்ற தன்மைக் கொண்டவன் என்று எம் மன்னனின் நண்பர்கள். எம் அரசரைப் பார்க்கும் பகைவர்களோ சூரியனைப் போன்ற வெம்மைக் கொண்டவன் என்று பயந்து நடுங்குவர். எமதரசன் சிசுபாலன் அடியில் (பாதத்தில்) முடியை வைத்து வணங்காதவன் முடியில் தன் பாதத்தை பதிக்கும் வல்லவர் எம் மன்னன். இந்திரனையும் வென்ற எம் மன்னனை அதீந்திரன் என்றே அழைக்கிறார்கள். ஆனால் இந்திரனுக்குக் கீழான உம்மை உபேந்திரன் என்பார்கள். சிசுபாலனின் ஆணை தடை இன்றி அனைத்து இடத்துக்கும் செல்கிறது. நீங்கள் பன்றி வடிவெடுத்து பூமியை ஒரு கணமே தாங்கி நின்றீர்கள். ஆனால் எம் மன்னனோ நெடுங்காலம் நின்றிருந்தபடி நீதி வழியில் இப்பூமியைக் காத்து வருகிறான். யாரிடம் வேண்டுமானாலும் சென்று ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். உங்களை அடக்கி உம்மையும் உமது பக்தர்களையும் (சேனைகள்) எம் மன்னன் நிச்சயமாக கொன்று அழிப்பான். உங்களை இழந்தப் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் காப்பவர் இல்லை என்று பரிதவிப்பர். அப்போது எம் அரசர் அந்தக் குழந்தைகளைக் பரிபாலித்து சிசுபாலன் என்ற பெயரின் பொருளையும் உணர்த்துவான். ஆகவே சரணடைந்து வாருங்கள் அல்லது போர்க்களத்தில் வந்து எம்மை சந்தியுங்கள்.’ என்று சிசுபலனின் சேதியை கூறி விட்டுச் சென்றான்.
அதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் கோபம் கொண்டார்கள். கொதித்து எழுந்தார்கள். யுத்தத்துக்கு போவோம் என்ற கோஷம் எழுந்தது. கண்ணனின் படைகளும் பொங்கிய கடல்போல வீறு கொண்டு எழுந்து தமது தொடைகளில் அடித்துக் கொண்டு வாயையும் கடித்துக் கொண்டு நரநரவென்ற சப்தத்தை தமது கோபக் கனலாக வெளிப்படுத்தினார்கள். போர் துவங்கியது. இரு படைகளும் பெரும் புயல் போல மோதிக் கொண்டன. யானை, குதிரை என சேனைதாங்கிகளும் ஆரவாரத்தோடும், அச்சம் தரும் வகையிலும் ஒன்றுடன் ஒன்று மோதின. உடைந்தது வெங்கலமோ, இல்லை தாமிரமோ என்று எண்ணும் வகையில் போரின் சப்தம் இருந்தது. ‘கண்ணா, வா…வலிமை இருந்தால், பயமில்லை என்றால், வா…விரைந்து என் முன் வந்து போரிடு. இல்லை சரணம், சரணம் என்று கூறி என் பாதத்தில் சரணடை’ என்று அகங்காரமாக முழங்கி தேரேறி வந்தான் சிசுபாலன். தாமதிக்கவில்லை ஒரு கணமும் கண்ணபிரான். தேரிலே ஏறினார். நேராக சிசுபாலனை நோக்கிச் செல்லலானார். வில்லை வளைத்து பாணங்களை விடாது மழைப் போல செறிந்தான் சிசுபாலன். கண்ணபிரானும் சீறிச் சென்ற பாணங்களாக நூறு நூறு பாணங்களை தொடர் பெரும் மழைப் போல பொழிய சிசுபாலனும் அவற்றை எல்லாம் அழித்து போரிட்டான். பாணங்கள் மழைப் போல இருதரப்பில் இருந்தும் பொழிந்து கொண்டு இருக்க விண்ணிலும் , மண்ணிலும் நின்று இருவரும் அம்புமாரிப் பொழிந்து போர் செய்தார்கள். நேரம் கழிந்தது. இனியும் தாமதிப்பது நல்லதல்ல, இவனைக் கொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அது தமது தலையாயக் கடமை என நினைத்த கண்ணபிரான், தனது சக்ராயுதத்தை எடுத்து சிசுபாலன் மீது வீசினார். சூரியனே கண்ணனின் கையில் இருந்து வெளிக் கிளம்பியதோ என்பதைப் போல பெரும் ஜோதி ஒளியுடன் சுழன்று சுழன்று பறந்து சென்ற சக்ராயுதம் சிசுபாலனின் சிரசை துண்டித்து விட்டு கண்ணனின் கைகளில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டது. பகைவர் ஓடோடிச் சென்று ஒளிந்து கொண்டனர். நடந்த அதிசயத்தைக் கண்டு, விண்ணில் இருந்து தேவர்கள் பூமாரிப் பொழிந்தார்கள். 
 
சிசுபால சரிதம் எனும் சிசுபால வதம் முற்றியது
முந்தைய பாகங்கள்