மஹாவித்யா-
சில விளக்கங்கள்   – (1)
சாந்திப்பிரியா 
தக்ஷ்யனின் மகளாகப் பிறந்த பார்வதி அந்த ஜென்மத்திலும் சிவ பெருமானை மணந்து கொண்டாள். ஆனால் பின்னர் சிவபெருமானுடன் தக்ஷ்யனுக்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் மாமனார் செய்த எந்த பூஜைகளிலும் , யாகங்களிலும் சிவ பெருமான் பங்கேற்கவில்லை. ஆனால் தக்ஷ்யன் ஒரு முறை செய்த யாகத்தில் தானும் சென்று பங்கேற்க பார்வதி விரும்பினாள். கோபமுற்ற சிவபெருமான் அதற்கு  முதலில்  சம்மதிக்கவில்லை. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆகவே அதில் கோபமடைந்த பார்வதி தனக்கும் அவரைப் போலவே சக்தி உள்ளது என்பதை எடுத்துக் காட்ட பத்து பயங்கரமான மற்றும் சாந்த வடிவங்களில் தன்னுடைய சக்தியை வெளிப்படுத்தி சிவனை சாந்தம் அடையச் செய்து அந்த யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றாளாம். அந்த சக்தி ரூபங்களின் குணங்களும் சக்திகளுமே தசா மஹாவித்யா எனும் – பத்து அபார ஞானம் – என ஆகியது .  நூற்றுக்கணக்கான  சக்தி உபாசனைகளில் அபாரமானதும், முக்கியதுமான அந்த பத்து சக்திகள் அடங்கிய மஹாவித்யா மூலமே சக்தி வழிபாடும் அதிகமாகியது.
அந்த பத்து ரூப தேவிகளை சரியான முறையில் வணங்கி மந்திர உச்சாடனம் சரியாகச் செய்து வந்தால் மந்திர தந்திர சித்திகள் ஒருவருக்கு கிடைக்குமாம். அது மட்டும் அல்ல அவர்களை வணங்கி வந்தால் வாழ்கையில் பல நன்மைகள் கிடைக்குமாம். ஒருவர் தன்னையே முழுமையாக அடக்கி ஆளலாம். ஆனால் அந்த யந்திர பூஜைகளை முறைப்படி ஒரு குருவிடம் இருந்து கற்காமல் தன் இச்சையாக செய்ய முயன்றால் விளைவுகள் வேறு விதமாகி வாழ்க்கைக்கே ஆபத்தாகி விடுமாம்.  காரணம்  அதில்  சில  தேவிகள்  மிகவும் உக்ராஹமானவை . மேலும் பூஜை அறையில் மாட்டி வைக்கப்படும் அந்த தேவதைகளை சரியான முறையில் பூசிக்காமல் இருக்கக் கூடாது என்பதினால் அந்த தேவிகளை வைத்து ஆராதிக்க விரும்புபவர்கள் ஒரு குருவிடம் சென்று அந்த பூஜை முறைகளை முறைப்படி கற்ற பின்னரே அதை துவங்க வேண்டும். அதற்குப் பல கடினமான நியமங்கள், மடி, ஆசார அனுஷ்டானங்கள் உண்டு. ஆகவே புத்தகங்களையும், செய்திகளையும் மேலோட்டமாகப் படித்துவிட்டு  முறையான குருவின் துணை இல்லாமல் உடனே அவர்களை ஆராதிக்கத் துவங்கக் கூடாது .  அந்த தேவி யந்திரங்களை வீட்டில் வைத்து  பூஜிப்பதை  விட அந்த தேவிகளை ஆலயங்களில் சென்று வழிபடுவதே சிறந்தது.
அந்த பத்து தேவிகள் யார் என்பதையும் அவர்களின் குணங்களையும் தனியாகத் தர உள்ளேன்  . படித்து மகிழுங்கள்.