நவப்புலியூர் தரிசனம்

-சாந்திப்பிரியா-

முன்னுரை

இந்தக் கட்டுரையில் முதலில் நான் இரண்டு அன்பர்களுக்கு முழுமையான நன்றி கூற வேண்டும். இந்தக் கட்டுரைக்கு வாசகர்கள் இடையே வரவேற்பு பெருகினால் அதிலும் அவர்கள் பங்கு பெறுவார்கள்.

சென்னையை சேர்ந்த ஸ்ரீ வித்யா உபாசினியான திருமதி கீதா கணேஷ் எனும் பெண்மணியே இந்த கட்டுரை வெளியானதற்கு மூல காரணம். முன் காலங்களில் நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த புனித பயணங்கள், அவர்கள் மேற்கொண்டிருந்த ஆன்மீக வழிமுறைகள் போன்றவை மறைந்து விட்ட நிலையில் அவற்றின் பெருமையை மீண்டும் வெளிக் கொண்டு வந்து நிலைநாட்ட பல்வேறு ஆன்மீக அமைப்புகளுடன் அமைதியாக முயற்சி எடுத்து வரும் அந்த அம்மையார் அவர்களே எனக்கு இந்த கட்டுரையில் உள்ள பல ஆலயங்களின் முக்கிய தகவல்களைக் கொடுத்தவர்.

இரண்டாவதாக இந்திய நாட்டை சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவின் பிரஜை ஆகி அங்கேயே தங்கி விட்டவரும், அங்கு மருத்துவத் துறையில் வல்லுநராகவும் உள்ளவர் திரு வேங்கடசுப்ரமணியன் சங்கர் குமார் M.D அவர்கள். விரைவாக இந்த கட்டுரை வெளியாக வேண்டும் என்பதற்காக, நேரமின்மை காரணமாக நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி இந்த கட்டுரையின் ஆறு ஆலய விவரங்களை ஆங்கிலத்தில் முதல் கட்ட மொழி பெயர்த்து தந்த திரு வேங்கடசுப்ரமணியன் சங்கர் குமார் M.D தமது ஒய்வு நேரத்தில் சீரடி சாயிபாபா வலைதளத்தில் (https://shirdisaibabatamilstories.blogspot.com/) கட்டுரைகளை மொழி பெயர்த்து தந்து வருகின்றார் . — சாந்திப்பிரியா

 

நவபுலியூர் யாத்திரை : சில உண்மைகள்

தற்காலத்தில் உள்ள பலருக்கும் ஆலய தரிசனம், ஆன்மீக வழிபாட்டு முறைகள் என்பதோ, அவற்றின் முக்கியத்துவம் என்ன, அல்லது அது எப்படி துவங்கியது என்ற விவரங்களோ தெரிந்திருக்க முடியாது. அதில் நவபுலியூர் யாத்திரையும் அடங்கும். பூர்வ ஜென்மங்களில் மற்றும் இந்த ஜென்மத்திலும் அறிந்தோ, அறியாமலோ செய்த பிழைகளினால் ஏற்பட்ட கர்மாக்களை தொலைத்துக் கொள்ள முன் ஒரு காலத்தில் இந்த யாத்திரையை பலரும் மேற்கொண்டு இருந்திருக்கின்றார்கள். முக்கியமாக வாழ்நாளின் இறுதி கட்ட நிலையில் வாழ்ந்திருந்த முதியோர்கள் தமக்கு பிறப்பு இறப்பில் இருந்து விடுதலை தரும் மோட்ஷ கதியை அடைய வேண்டும் என்பதற்காக இந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட புனித யாத்திரையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மஹரிஷி வியாக்ரபாதர் மற்றும் மஹரிஷி பதஞ்சலி என்பவர்கள் மேற்கொண்டு உள்ளார்கள். மோட்ஷத்துக்கு செல்ல தடையாக இருக்கும் தமது பூர்வஜென்ம வினைப் பயன்களினால் ஏற்பட்ட கர்மாக்கள் விலக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் சிவபெருமானை துதித்தபடி பயணம் மேற்கொண்டார்கள். அப்படி பயணம் மேற்கொண்ட அந்த இரு மஹரிஷிகளுக்கு தரிசனமும் தந்து இந்த யாத்திரையின் மகத்துவத்தையும் சிவபெருமானே அவர்களுக்கு போதித்ததாகவும், அதன் மூலமே இந்த யாத்திரையின் மகத்துவம் வெளி உலகிற்கு தெரிய வந்தது என்பதாகவும் கூறுகின்றார்கள்.

வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி எனும் மஹரிஷிகள் சிவபெருமானின் முடிவற்ற பேரானந்தம் தரும் அற்புத நடனத்தைக் கண்டு களித்த பின் தமக்கு மோட்ஷமும் கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என்ற ஆவலில் சிதம்பரத்துக்கு சென்றபோது, நடன முடிவில் அவர்களுக்கு காட்சி தந்த சிவபெருமான் தான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள ஒன்பது தலங்களைக் குறித்து அவர்களுக்கு விளக்கிக் கூறிய பின் அந்த தலங்களுக்கு சென்று தம்மை வழிபட்ட பிறகு அவர்கள் திருப்பட்டூரில் உள்ள பிரும்மதேவரை வழிபட்ட பின் முடிவாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாத பகவானாக எழுந்துள்ள விஷ்ணு பகவானையும் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாத பெருமானை தரிசனம் செய்த உடனேயே மோட்ஷத்துக்கு தடையாக இருக்கும் கர்ம வினைகளை தான் அகற்றுவேன் என்றும், அதன் பின், மும்மூர்த்திகளில் மோட்ஷத்திற்கு செல்ல அருள் தரும் சக்தியை கொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமான் அவர்களுக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்பதாகவும் கூறினாராம்.

நவபுலியூர் யாத்திரையில் முதலில் ஒன்பது சிவாலயங்களில் தரிசனம் செய்த பின்னரே பிரும்மதேவர் மற்றும் விஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படைக் காரணம் என்ன? நவ என்றால் ஒன்பது என அர்த்தம். ஆகவே ஒன்பது என்பது சிவபெருமானின் ஒன்பது ஆலயங்களையும் அந்த ஒன்பது ஆலயங்களில் உள்ள ஒன்பது கிரகங்களின் நாயகர்களையும் (நவகிரகங்கள்) குறிக்கின்றதாம். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் சுக துக்கங்களை நிர்ணயிப்பது மூல தெய்வங்களின் சார்பாக செயல்படும் நவக்கிரகங்களின் தாக்கம்தான். ஆகவே இந்த ஒன்பது சிவாலயங்களில் அவருக்கு பணிவிடை செய்தபடி அமர்ந்துள்ள நவக்கிரகங்களுக்கு தம்மை தேடி வந்து பிரார்த்தனை செய்யும் மக்களின் கர்ம வினைகளை களையும் விசேஷ சக்திகளை சிவபெருமான் தந்துள்ளாராம்.

பூர்வ ஜென்மங்களிலும், வாழும் ஜென்மத்திலும் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது. ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

ஆலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும், வெவ்வேறு திசைகளை நோக்கியபடி ஒரே பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும். அதே போல நவக்கிரகங்கள் அவற்றுக்கென நிர்மாணம் செய்யப்பட்டு உள்ள தனித்தனி ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கர்மவினைகளின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள கிரகங்களுக்கு உரிய குறிப்பிட்ட தினங்களில் ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை பூஜித்து ஆராதிக்கின்றார்கள். ஆனால் அதே நவக்கிரங்களும் தம் பெற்று இருந்திருந்த சில சாபங்களை களைந்து கொள்ள சில பிரதான தெய்வங்களை ஆராதித்து சாப விமோசனம் பெற்றார்கள். அதனால் எந்த ஆலயத்தில் அவை சாப விமோசனம் பெற்றனவோ அங்குள்ள மூலவருக்கு பணிவிடை செய்தபடி அங்கும் அந்த நவகிரகங்கள் தங்கி உள்ளார்கள். அதனால் அந்த ஆலயங்களில் உள்ள மூலவர் தனக்கு பணி புரியும் அந்த நவகிரகங்களுக்கு கர்மவினைப் பலன்களை நீக்கும் மேலும் சில விசேஷ சக்திகளை தம்மிடம் உள்ள சக்தியில் இருந்து கொடுத்து அவற்றை தம்முடைய சார்ப்பில் நிறைவேற்றுமாறு கட்டளை இட்டு உள்ளார்கள். அதனால் அங்குள்ள நவக்கிரகங்களுக்கு கர்மாக்களை அகற்றும் விசேஷ சக்தி மற்ற ஆலயங்களில் அவை கொண்டுள்ள சக்திகளை விட அதிக அளவில் இருக்கும். நவபுலியூர் ஆலயங்களில் உள்ள நவகிரகங்களை குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே சென்று ஆராதித்து பூஜிக்க வேண்டியது இல்லை. தனி ஆராதனை முறைகளும் கிடையாது. அந்த ஆலயங்களில் சென்று மூலவரை வழிபட்ட பின் அங்குள்ள நவகிரகங்களை வழிபடும்போது அதுவரை அவர்களுக்கு சேர்ந்துள்ள அனைத்து கர்மாக்களையும் அங்கேயே அவை விலக்கி விடுகின்றன. இதனால்தான் நவபுலியூர் யாத்திரை மோட்ஷம் பெறுவதற்காக மட்டும் அமைந்து இருக்காமல் கர்ம வினைப் பலன்களை அகற்றும் தலங்களாகவும் உள்ளன என்பது தெளிவாகும்.

பண்டிதர்களின் கூற்றின்படி இந்த தத்துவ உண்மைகளை வெளிப்படுத்தவே ஒரு நாடகமாடி சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் ஸ்வயம்புவாக எழுந்து பல அவதார தோற்றங்களில் உள்ள அந்த ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில் இந்த நவபுலியூர் யாத்திரையை மேற்கொள்ள வைத்து இருக்கின்றார் என்கின்றார்கள்.

இந்த நவபுலியூர் யாத்திரை 12 ஆம் நூற்றாண்டுவரை மிகப் பிரபலமான யாத்திரையாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் சைவ மற்றும் வைஷ்ணவ வழிபாடு என்ற பிரிவினை பேதத்தினால் இந்த யாத்திரை பெரும் அளவில் தடைப்படலாயிற்று என்றாலும், உண்மையை உணர்ந்திருந்த சிறு அளவிலான சைவ மற்றும் வைஷ்ணவ பக்தர்களால் தொடர்ந்து அந்த யாத்திரை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் உண்மையே.

இந்த யாத்திரைக்கு செல்பவர்கள் பதஞ்சலி முனிவர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானுடைய நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகாவிஷ்ணுவிடம் தனது ஆசையை வெளிப்படுத்த மகாவிஷ்ணு அவரிடம் கூறினார் ‘ஆதிசேஷா நானே சிவபெருமானின் நடனக் காட்சியைக் கண்டு சொக்கிப் போய், அந்த ஆனந்தத்தை அடக்க முடியாமல் உம்மிடம் சிவபெருமானின் நடனத்தின் அற்புதத் தன்மையைக் குறித்துக் கூறினேன். அந்த மனநிறைவை, மன மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை எனும்போது அதைக் கேட்கும் அனைவரும் அந்த நடனத்தைக் காண ஆசைப்படுவார்கள் என்பதிலும் ஐயம் இல்லை. ஆகவே என் மகிழ்ச்சியைக் கேட்ட பின் அதைப் பார்க்க உமக்கு ஆவல் ஏற்படுவதில் வியப்பில்லைதான். அதற்கு நான் தடையாக இருப்பது தவறு. ஆகவே நீயும் பூலோகம் சென்று தக்க நேரத்தில் பாதி மனிதன், பாதி நாகம் எனும் உருவத்தில் பதஞ்சலி எனும் உருவம் கொண்டு பிறந்து அந்த உருவில் யோகக் காலையில் வல்லுவனாக இருக்கும் வகையில் யோகக் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் பெற்றுக் கொண்ட பின் சிவபெருமானின் அற்புத நடனத்தையும் கண்டு களிப்பாய்” என ஆசிகளை வழங்கினார்.

விஷ்ணு பகவான் தொடர்ந்து கூறினார் “இப்போது நீ அதே பதஞ்சலி எனும் உருவம் கொண்டு நாகலோகத்துக்குப் போ. அதற்குள் ஒரு மலையும் அந்த மலைக்குள் ஒரு துவாரமும் உள்ளது. அந்த துவாரத்தின் வழியே நீ சென்றால் சிதம்பரத்தை (தில்லைவானம்) அடையலாம். அங்கு வியாக்ரபாத முனிவர் என்பவர் பேரந்தம் தரும் சிவபெருமானின் நடனக் காட்சியை காண வேண்டும் என்று சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கத்துக்கு பூஜை செய்து கொண்டு உள்ளார். நீயும் அங்கு சென்று அவரோடு சேர்ந்து பூஜை செய்தால் சிவ தரிசனத்தை பெற்று அவரது நடனத்தையும் கண்டு களிக்க முடியும்”

அடுத்து விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு ஆசிகளை அளித்து அவரை பூமியிலே பதஞ்சலியாக பிறப்பு எடுக்க அனுப்பி வைக்க அவரும் பதஞ்சலி மாமுனிவராக பிறப்பு எடுத்து வியாக்ரபாத மகரிஷியை சந்தித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து சிவபெருமானை துதித்து தவம் இருந்து சிவபெருமானின் தரிசனத்தை பெற்று, அவரது ஆனந்த நடனத்தையும் கண்டு களித்த பின் முடிவில் சிவபெருமானிடம் இருந்து போதனைகளையும் பெற்றார்கள். அதன் முடிவில் அவர்கள் இருவரும் வாழ்வின் இறுதிக்கு கட்ட நிலையை அடைந்திருந்தார்கள். சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்து இருந்த போதனையின்படி அவர்கள் சிவபெருமான் ஸ்வயம்புவாக தோன்றி இருந்த அனைத்து ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்த பின் முடிவாக மோட்ஷத்தையும் அடைந்தார்கள்.

அடுத்து வியாக்கியபாதர் யார் என்பதை தெரிந்து கொள்வோம். முன் ஒரு காலத்தில் மத்தியனதின முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மனதில் சிவபெருமானைத் தவிர வேறு எந்த சிந்தனையே இல்லாமல் இருந்தவர் என்றாலும் விஷ்ணு பகவான் மீது ஆழ்ந்த பற்றுதலும் கொண்டிருந்தவர். ஒருநாள் அவரிடம் அவரது மகன் வியாக்ரபாத மகரிஷி வினைப்பயன்களில் இருந்து விடுதலை பெற்று மோட்ஷம் அடையும் வழிமுறையைக் கூறுமாறு வேண்டிக் கேட்டதும், மத்தியனதின முனிவர் அவரை தில்லைவனத்துக்கு சென்று தவம் இருந்து அங்கு சிவபெருமானை வணங்கி துதித்து வந்தால் அவர் அவருக்கு மோட்ஷம் கிடைக்க அருள் புரிவார் என்றும், அப்படி அவர் தோற்றம் தந்தால் பேரானந்தம் தரும் சிவபெருமானின் நடனத்தையும் காண அவருடைய அருளைக் கேட்டுப் பெறுமாறு அறிவுரை கொடுத்தார்.

அதுவரை பால முனிவர் என்ற பெயரில் இருந்த மகரிஷி வியாக்ரபாதரும் தந்தை கூறியபடி பல ஊர்கள் வழியே சென்று சிதம்பரத்தை அடைந்தார். தில்லைவனத்தை அடைந்தவர் சிவகங்கை எனும் குளத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு அங்கு தானாகவே எழுந்திருந்த சிவலிங்கத்தை வணங்கி வரலானார். தில்லை எனும் பெயர் கொண்ட மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காடாக அது இருந்ததினால் அந்த ஊரின் பெயரும் தில்லைவனம் என்று ஆயிற்று.

அங்கிருந்த வனப் பகுதிக்குச் சென்று மரங்களிலும் ஏறி தினமும் பல பூக்களை பறித்து வந்து அந்த லிங்கங்களுக்கு பூஜை செய்து வந்தபோது, நாளடைவில் பூக்கள் கிடைப்பதும் அரிதாயிற்று. மரங்களில் ஏறினால் மரத்தின் முட்கள் அவ்ருடைய உடலில் குத்தி வேதனை செய்தன. அவர் மன உறுதி பெற்றிருந்தது போல இயற்கையை எதிர்த்து நிற்க அவருடைய உடல் உறுதி படவில்லை. மனதில் வேதனை அடைந்தார். சிவபக்தனின் மனக் குமுறலைக் கேட்ட சிவபெருமான் மனம் மகிழ்ந்து மரத்தின் மீது சிரமம் இன்றி ஏறி பூக்களைப் பறிக்க புலிக்கு உள்ளதை போன்ற கால் மற்றும் கண்களைக் கொடுத்து அருள் புரிந்தார். அதனால் வியாக்கிய என்றால் புலி என்றும் பாதர் என்றால் பாதத்தைக் கொண்டவர் என்றும் பொருள் தரும் வகையில் புலியைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார்.

இப்படியாக வியாக்ரபாதர் தன்னுடன் பதஞ்சலி மஹரிஷியையும் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே சிதம்பரத்தில் துவங்கி ஒன்பது சிவாலயங்களில் அவரை தரிசனம் செய்த பின் இறுதியாக திருப்பட்டூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆலயங்களில் தரிசனம் செய்த பின் ஆத்ம சமாதி அடைந்து மோட்ஷத்தை அடைந்தார்கள். இதனால்தான் புலிக்கால் கொண்ட வியாக்ரபாதர் துதித்த ஒன்பது தலங்கள் நவபுலியூர் தலங்கள் என்ற பெயரை பெற்றன.

இந்த யாத்திரையை எப்படி மேற்கொள்ள வேண்டும்? முதலில் சிதம்பரத்தை சென்றடைந்து முக்கால பூஜைகளை தரிசனம் செய்த பின் சிதம்பரத்தில் இருந்து அடுத்த நாள் காலை கிளம்பி திருப்பாதிப்புலியூர் சென்று அங்கு ஆலய தரிசனம் செய்தபின் அங்கிருந்து கிளம்பி எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் மற்றும் சிறுப்புலியூர் ஆலயங்களின் தரிசனத்தை அன்று இரவுக்குள் முடித்துக் கொள்ளலாம்.

அங்கிருந்து அடுத்தநாள் காலை கிளம்பி அத்திப்புலியூர், தப்பளாம்புலியூர் மற்றும் பெரும்புலியூர் ஆலயங்களை தரிசனம் செய்த பின் அங்கிருந்து கிளம்பிச் சென்று திருப்பட்டூர் மற்றும் ஸ்ரீரங்கம் ஆலயங்களை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு சென்று விட வேண்டும். இடையே வேறு ஆலயத்துக்கு செல்லக் கூடாது.

இந்த ஆலய விஜயங்களின்போது இடையே வேறு எந்த ஆலயத்துக்கும் செல்வது நவபுலியூர் யாத்திரையின் பலனைத் தராது. இந்த ஆலயங்கள் அனைத்துமே சிறிய கிராமப்புற ஊர்களில் அமைந்து இருப்பதினால் அந்தந்த ஆலய குருக்களிடம் முன்கூட்டியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு செல்லும் நேரத்தை தெரிவித்து ஆலயம் செல்ல வேண்டியது அவசியம். ஏன் எனில் பெரும்பாலான கிராமப்புற ஆலயங்களில் யாருமே அதிகம் செல்வது இல்லை என்பதினால் இவை அனைத்துமே மேன்மைமிக்க ஆலயங்கள் என்றாலும் கூட, அவை அனைத்துமே காலை மற்றும் மாலை வேளைகளில் சிறிது நேரமே திறந்திருக்கின்றன.

நவபுலியூர் ஆலயம் – 1- பெரும்பற்றபுலியூர்

சிதம்பரத்தில் உள்ள சிவாலயம் பெரும்பற்றபுலியூர் எனும் ஆலயம் ஆகும். இது சூரிய பரிகாரத் தலமும் ஆகும். நவபுலியூர் யாத்திரையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய ஆலயம் இதுதான். இங்குள்ள மூலட்டானேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரியை தரிசனம் செய்த பின் முடிந்தால் அந்த ஆலயத்தின் அர்த்த ஜாம பூஜை மற்றும் மறுநாள் காலையில் சூரியோதய காலத்தில் நடைபெறும் திருவானந்தல் பூஜையை என இரண்டையுமே கண்டு களித்தப் பின் இரண்டாவது புலியூர் ஆலய தரிசன யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலயத்தில் தினமும் கர்ம வினைகளை போக்கி வரும் சூரிய பகவானை வழிபட்டால் நமது கர்மா வினைப் பலன்களும் அழிந்து விடும் என்பது ஐதீகம்.

சிதம்பரத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் சிதம்பர ரகசியம் என்பது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். சிவபெருமானின் திரு உருவமே இல்லாத சிற்சபையில் உள்ள ஒரு சிறு வாயில் உள்ளே உள்ள அறை திரை சீலையினால் மூடப்பட்டு இருக்கும். அதன் உள்ளே தங்கத்தில் ஆன வில்வ இலை மாலை தொங்க விடப்பட்டு இருக்கும். பூஜை கால நேரத்தில் அந்த சிலையை விலக்கி விட்டு உள்ளே அந்த மாலைக்கு நேராக கற்பூர ஆரத்தி காட்டுவார்கள். உள்ளே எந்த சிலையும் கிடையாது. ஆனால் சிவபெருமான் அந்த அறைக்குள் அகண்ட வெளியாக உருவமில்லாமல் இருக்கின்றார், அவர் கழுத்திலே தொங்கும் மாலையே அந்த வில்வ மாலை என்பது ஐதீகம். இப்படியாக கண்ணுக்கே தெரியாமல் அகண்ட வெளியிலே உள்ள சிவபெருமானுக்கு பூஜை செய்வதையே சிதம்பர ரகசியம் என்பார்கள். இந்த ஆலயத்தில்தான் முதன் முதலில் சிவபெருமான் நடன ராஜராக நடனம் ஆடி வியாக்யபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷி முனிவர்களுக்கு தரிசனம் தந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றினாராம். அந்த நேரத்தில் அவர் (சிவபெருமான்) தன்னுடன் காசி நகரில் இருந்த மூவாயிரம் அந்தண, வேத விற்பன்னர்களையும் அங்கு வரவழைத்தார். அந்த வேத விற்பன்னர்கள் தான் இன்றைய சிதம்பரம் தீட்சிதர்கள் என்று ஒரு புராண கதையும் உள்ளது.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தில் நடக்கும் விழாவும் சிறப்பானவை ஆகும்.

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் எனப்படும் இந்த ஆலயத்து இறைவனை கனகசபை, திருமூலட்டானேசுவரர், திருமூலநாதர், கூத்தப்பெருமான், மற்றும் பொன்னம்பல கூத்தன் என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். இங்குள்ள இறைவியை கனகசபை சிவகாமி மற்றும் திருமூலட்டான உமையம்மை என்றும் அழைக்கின்றார்கள். ஆலயத்தின் தல விருட்சம் தில்லை மரம் ஆகும். இது தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். சென்னையில் இருந்து சுமார் இருநூற்று நாற்பது கி.மி. தொலைவில் சிதம்பரம் அமைந்து இருக்கிறது.

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலய முகவரி:-
அருள்மிகு நடராஜர் திருக்கோவில்,
சிதம்பரம்.
அஞ்சல் கடலூர் மாவட்டம்.
PIN – 608 001

நவபுலியூர் ஆலயம் – 2-திருப்பாதிரிப்புலியூர்

இந்த பிரபஞ்சத்தில் பல முக்கிய நிகழ்வுகள் சிவபெருமானின் திருவிளையாடல்களை சுற்றியே அமைந்து உள்ளன. அந்த திருவிளையாடல்களில் முக்கிய பங்கு பார்வதி தேவியை சேரும். ஒரு முறை கயிலாயத்தில் பரமனும், பார்வதியும் ஒரு விளையாட்டை ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு ஆட்ட முடிவிலும் சிவபெருமானே வெற்றி பெற்றதைக் கண்ட பார்வதி கடைசி ஆட்டத்தில் அவரை ஏமாற்ற எண்ணி அவர் கண்களை மூட பிரபஞ்சமே இருளில் மூழ்கியது, இயக்கங்கள் அப்படியே நின்று விட்டன. அதைக் கண்டு பயந்து போன பார்வதி தேவி சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் செய்த பிழைக்கு தண்டனை தராமல் இருக்க முடியாது என்று கூறிய ஈசன் பார்வதி தேவியிடம் பூவுலகுக்குச் சென்று தான் எங்கெல்லாம் சுயமாக எழுந்தருளி இருந்தாரோ அங்கெல்லாம் சென்று தன்னை வழிபட்டால், ஒரு தலத்தில் அவளுடைய இடது தோளும், இடது கண்ணும் துடிக்கும் எனவும், அந்த தலத்தில் மீண்டும் அவளுக்கு சாப விமோச்சனம் கிடைத்து அவருடன் மீண்டும் சேர முடியும் என்று கூற பார்வதி தேவியும் பூ உலகுக்கு வந்து பல சிவாலயங்களுக்கு சென்ற பின் இந்த தலத்திற்கு வந்து அவரை வழிபட்ட நேரத்தில் அவளுடைய இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி உருவமில்லா நிலையில் சிவபெருமானை பல காலம் பூஜித்து சாப விமோசனம் பெற்றாள். அவளுக்கு துணையாக சேவகம் புரிய சப்த கன்னிகைகளும் அங்கேயே தங்கி இருந்து அவளுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள்.

அவள் தங்கி இருந்த இடம் தெய்வீகத் தன்மை கொண்ட பாதிரிமரம் ஆகும். அந்த மரம் தினம் தினம் அவளுடைய பூஜைக்குத் தேவையான பூக்களை பூத்துக் கொடுத்தது என்பதினால் பார்வதி தேவியின் சாப விமோசனத்துக்கு உதவிய அந்த மரத்தின் பெயரிலேயே அந்த ஆலயத்தின் பெயர் திருப்பாதிரியூர் என ஆயிற்று. அவள் அங்கு உருவமற்ற நிலையில் தங்கி இருந்தபோது சிவபெருமானை பல ரிஷி முனிவர்கள் பாடல்களை பாடி துதிப்பதைக் கண்டாள். சிவபெருமான் இசைப் பிரியர் என்பதினால் ரிஷி முனிவர்கள் பாடல்களை பாடி அவரை ஆராதித்தார்கள் என்பதினால் அந்த சிவபெருமானின் பெயரும் பாடலில் மயங்கும் ஈஸ்வரர் என கருத்து கூறும் வகையில் பாடலீஸ்வரர் என ஆயிற்று.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்து அருளி உள்ளார். இந்த ஆலயம் நவகிரக நாயகர்களில் ஒருவரான சந்திர பகவான் அருள் தரும் இடம் ஆகும்.

சிதம்பரத்தில் இருந்து சுமார் 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு பகுதியில் உள்ளது. திருப்பாதிரிபுலியூர் ஆலயம் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலும், கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்திலும் ஆலயம் உள்ளது.

இறைவன் : தோன்றாத் துணைநாதர், பாடலீஸ்வரர்
இறைவியார் : பெரியநாயகி அம்மை, கோதைநாயகி
ஆலய தல மரம் : பாதிரிமரம்
தீர்த்தம் : சிவகர தீர்த்தம், பிரமதீர்த்தம்

ஆலயம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல், இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

நவபுலியூர் ஆலயம் – 3- எருக்கத்தம்புலியூர்

திருப்பாதிரிபுலியூர் ஆலயத்தில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எருக்கத்தம்புலியூர். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். எருக்கத்தம்புலியூர்  என்ற பெயர் பலருக்கு தெரிவதில்லை என்பதினால்  எருக்கத்தம்புலியூர் ஆலயத்தை ராஜேந்திரப்பட்டணம் என்று கூறுகின்றார்கள்.

முன் ஒரு காலத்தில் பாணர் மரபில் நீலகண்டபாணர் என்பவர் பிறந்தார். அவரது மனைவியும் நீலகண்டபாணரும் பல இடங்களிலும் இருந்த சிவாலயங்களுக்கு சென்று, சிவபெருமானை தரிசனம் செய்து யாழ் எனும் இசைக் கருவியை மீட்டி, பாடல் பாடி இறைவனை துதித்து அருள் பெற்று வந்தார்கள்.

முன் காலங்களில் பாணர் மரபினோர் ஆலயத்தின் உள்ளே சென்று இறைவனை வழிபட அனுமதிக்கப்படவில்லை. ஜாதி பேதங்கள் அதிகம் நிலவிய சூழ்நிலையில் ஆலயக் கட்டுப்பாட்டினால் வெளியில் நின்று வழிபடுவதையே ஒரு நியதியாக வைத்து இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஒருமுறை பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் ஆலயத்தின் வெளிப்புறத்தில் நின்று சிவபெருமானை துதித்து யாழ் மீட்டி பாடிக் கொண்டிருந்தார். பாணரின் இசையில் உள்ளம் உருகிய இறைவன் சோமசுந்தரனார் அந்த ஊரில் இருந்த மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளி நீலகண்ட பாணரையும், அவரது மனைவியையும் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக் ஆலயத்துக்குள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு வழி வகுக்குமாறு ஆணையிட்டார். அதே செய்தியை திருநீலகண்ட பாணர் கனவிலும் எழுந்தருளி கூறினார்.

மறுநாள் சிவத்தொண்டர்கள் ஈசனின் ஆணைப்படி வெளியில் நின்றவாறு யாழ் மீட்டி இசை இசைத்துக் கொண்டு இருந்த பாணர் தம்பதிகளை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று இசைப் பாட வேண்டிக் கொண்டதும் ஆலய மண்டபத்தில் அமர்ந்து பாடலைப் பாடிக் கொண்டு இருந்த தம்பதியினர் தரை ஈரமாக இருந்ததைக் கூட கவனிக்காமல் ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். அவர்களது இசையில் மயங்கிய மதுரையம்பதி சிவபெருமானும் தரையின் குளிர்ச்சியால் யாழின் சுருதி கெட்டு விடுமே என்று கருதி அவர்களுக்கு பலகை ஒன்று இடுங்கள் என்று ஆசிரி மூலம் சிவத்தொண்டர்களுக்கு ஆணையிட அவர்களும் அதை செய்தார்கள். அதைக் கண்ட அனைவரும் பிரமித்து நின்றார்கள்.

இறுதியில் திருபெருமணநல்லூரில் திருஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர் மனைவியாரும் கலந்து கொண்டு சிவ பதவியை அடைந்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இப்படியாக தனது பக்தர்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்த இடம் இந்த ஆலயம். அதை போலவேதான் மன்னன் ராஜராஜ சோழனுக்கு சிவபெருமான் இந்த ஆலயத்தில்தான் குழந்தை வரம் தந்து அருளினாராம். மேலும் இங்குதான் முருகப் பெருமானுக்கும் சாப விமோசனம் தந்து பேச்சாற்றல் பெற அருள் புரிந்தாராம். இது கேது பகவான் பரிகார ஸ்தலம் ஆகும்.

இறைவன்: நீலகண்டேஸ்வரர்
இறைவியின் பெயர் : நீலமலர்க்கண்ணி
தீர்த்தம் :
தல மரம் : எருக்கு

ஆலயம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண் : கணேஷ குருக்கள் (9487703524)

நவபுலியூர் ஆலயம் – 4 – ஓமாம்புலியூர்

இந்த தலம் எழுந்த வரலாறும் சுவையானது. ஒருமுறை கைலாயத்தில் பார்வதி தேவிக்கு சிவபெருமான் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மூலத்தைப் பற்றியும், அதன் சக்தியையும் குறித்துக் கூறிக் கொண்டு இருக்கையில் பார்வதி தேவியின் கவனம் ஒரு ஷணம் பூவுலகை நினைத்து சிதறியது. அதை கவனித்து விட்டு சிவபெருமான் கோபம் கொண்டு பார்வதி தேவிக்கு சாபம் இடுகிறார். தான் செய்த பிழைக்காக பார்வதி தேவி சிவபெருமானிடம் மன்னிப்பு கோரினாள். ஆனாலும் சிவபெருமான் அவளை மன்னிக்காமல் அவள் பூலோகத்தில் சென்று தவறுக்காக தவம் இருந்தால் மீண்டும் அவளுக்கு தானே நேரில் எழுந்தருளி, அதே ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை பரிபூரணமாக எடுத்துரைப்பேன் என அருள் செய்கிறார். ஆகவே பார்வதி தேவி பூமியிலே பிறப்பு எடுத்து இந்த தலத்துக்கு வந்து பல காலம் தவம் இருக்கையில் ஒருநாள் சிவபெருமான் அவளுக்கு குரு தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சி தந்து அவளுக்கு மீண்டும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தையும், அதில் உள்ளடங்கிய சக்தியையும் குறித்து பரிபூரணமாக எடுத்துரைக்க தேவியானவள் அங்கு ஞானம் பெறுகிறாள். இதனால்தான் இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து பார்வதி தேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் இறைவனின் பெயரும் பிராணவ வாக்கியபுரீஸ்வரர் என ஆயிற்று. ஓம் எனும் பிரணவப் பொருள் குறித்த விளக்கம் தந்த தலமானதினால் இந்த ஊரின் பெயரும் ஓம் மந்திர விளக்கம் கிடைத்த ஓமாம்புலியூர் என்றாயிற்று.

இந்த ஆலயத்தின் தனி சிறப்பு என்ன என்றால் மூலவர் சன்னதிக்கும், இறைவியின் சன்னதிக்கும் இடையே உள்ள மண்டபத்தில் பார்வதி தேவிக்கு பிரணவ மந்திர உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி பகவான் அருள் பாலிப்பதே. சிவபெருமானும் தட்சிணாமூர்த்தியும் ஒருவரே என்றாலும், இந்த ஆலயத்தில் அவர் இரு தோற்றங்களிலும் காட்சி தருகிறார் என்பதினால் இங்கு இருவரையும் தரிசித்து துதிப்பது கட்டாயம் ஆகும்.

சுயம்பு மூர்த்தியான மூலவர் ஒரு உயரமான சதுர பீடத்தில் பாணத்துடன் அமர்ந்து கொண்டு காட்சி தர, மண்டபத்தில் அவரே தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார். இது குருமூர்த்தி தலம் ஆகும் என்பதினால் நவகிரஹ குரு பரிகார ஸ்தலமாகவும் உள்ளது. இங்கு வந்து தமது பிள்ளைகளின் கல்வி அறிவு ஒங்க பிரார்த்தனைகள் செய்கின்றார்கள்.

சிதம்பரத்தில் இருந்து 30 கி.மி. தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. எருக்கத்தம்புலியூர் ஆலயத்தில் இருந்து ஒமாம்புலியூர் மற்றும்  கானாட்டுமுள்ளூர்  ஆலயங்களுக்கு   செல்ல முதலில் காட்டுமன்னார் கோவில் எனும் ஊரை சென்றடைந்து அங்கிருந்து ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.  ஒமாம்புலியூர் மற்றும்  கானாட்டுமுள்ளூர்  ஆலயங்கள் இரண்டுமே சுமார் நான்கு கிலோ தொலைவில்தான்  உள்ளன.

இறைவன் பெயர்: பிரணவபுரீஸ்வரர் மற்றும் துயர்தீர்த்தநாதர்,
இறைவி பெயர் : புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி
தல மரம் : இலந்தை
தீர்த்தம் : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்

ஆலய விலாசம் :
பிராணவவாக்கியபுரீஸ்வரர் திருக்கோவில்
ஓமாம்புலியூர்
கடலூர் மாவட்டம்
பின் :608 306

ஆலயம் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண் : ஜெகதீச குருக்கள் (04144 – 264845)

நவபுலியூர் ஆலயம் -5- கானாட்டமுள்ளூர்

இந்த ஆலயத்தைக் குறித்து இரண்டு கதைகள் இதன் மேன்மையை எடுத்துக் காட்டுகின்றன. ஒரு முறை தண்டகாரண்ய வனத்தில் இருந்த முனிவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை தரிசிக்க இங்கு வந்தார்கள். ஆலயத்தின் இடத்தை அடைந்தபோது அவர்களால் மேலும் நுழைய முடியாமல் அத்தனை மணலும் சிவலிங்கங்களாக காட்சி அளித்தன. அதில் உண்மையான சிவலிங்கம் எது என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் அவர்கள் தூரத்தில் இருந்தே சிவபெருமானை வணங்கித் துதித்து விட்டு சென்று விட்டார்களாம். அதனால் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் இந்த ஆலயத்தின் புனித மண்ணை எடுத்துக் கொண்டு செல்வது அதிருஷ்டத்தைத் தரும் என்பது நம்பிக்கை.

இன்னொரு கதையின்படி மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த ஆதிசேஷன் சிவபெருமானின் நடனத்தைக் காண ஆசைப்பட்டு பதஞ்சலி முனிவராக பிறப்பு எடுத்து வந்து சிதம்பரத்தைத் தவிர இந்த ஆலயத்திலும் சிவபெருமானின் நடனத்தைக் கண்டு களித்தாராம். சிவபெருமான் பதஞ்சலி மகரிஷியிடம் ‘எனது நடனத்தைப் பார்த்து விட்டீர்கள், திருப்திதானே’ எனக் கேட்க பதஞ்சலி மஹரிஷியோ நித்தம் நித்தம் அவருக்கு சிவபெருமானின் நடனத்தைக் காண வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்த சிவபெருமானும் அதை ஏற்றுக் கொண்டு அவரை அங்கேயே பலகாலம் தங்கி இருக்க வைத்ததும் அல்லாமல், தன்னுடைய பெயரையும் பதஞ்சலி முனிவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ‘பதஞ்சலீஸ்வரர் ‘ என வைத்துக் கொண்டாராம்.

ஏப்ரல் – மே மாதங்களில் மூன்று நாட்கள் சூரியனின் ஒளி நேரிடையாக சிவலிங்கத்தின் மீது விழுகிறதாம். அதை சூரிய பகவானே நேரில் வந்து சிவபெருமானை வணங்கித் துதிப்பதான ஐதீகம் என்கின்றார்கள். இரண்டாவதாக இங்குள்ள முருகப்பெருமானின் மனைவியான வள்ளி தேவியின் காதில் வயதானவர்கள் அணியும் மிகப் பெரிய பாம்படம் (காதில் தொங்கும் தோடு) எனும் காதணிகலன் இருக்க தக்ஷிணாமூர்த்தியோ தன் தலை மீது சூழ்ந்து இருக்கும் கல்லால மரம் இன்றி காணப்படுகிறார். இவை இரண்டுமே மிக அரிதான காட்சி ஆகும். இந்த ஆலயம் ராகு பரிகாரத் ஸ்தலம் ஆகும்.

எருக்கத்தம்புலியூர் ஆலயத்தில் இருந்து ஒமாம்புலியூர் மற்றும் கானாட்டுமுள்ளூர்  ஆலயங்களுக்கு   செல்ல முதலில் காட்டுமன்னார் கோவில் எனும் ஊரை சென்றடைந்து அங்கிருந்து ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.  ஒமாம்புலியூர் மற்றும்  கானாட்டுமுள்ளூர்  ஆலயங்கள் இரண்டுமே சுமார் நான்கு கிலோ தொலைவில்தான்  உள்ளன.

இறைவன் பெயர்:பதஞ்சலீஸ்வரர் அல்லது பதஞ்சலி நாதர் எனும் சோமாஸ்கந்தர்
இறைவி பெயர் : கோல்வளைக்கையம்பிகை, கண்ணார்குழலி, அம்புஜாக்ஷி
தல மரம் : வெள்ளெருக்கு
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி

ஆலய முகவரி :
அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் ஆலயம்
கானாட்டம்புலியூர்
முட்டம் போஸ்ட்
கட்டுமன்னார்குடி தாலுகா
கடலூர் மாவட்டம், பின்: 608 306

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். 

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண்: ஜெயச்சந்திரன் குருக்கள் ( 9790333377, 9894684269)

நவபுலியூர் ஆலயம் – 6- சிறுபுலியூர்

இந்த ஆலயம் குறித்து முரண்பட்ட கதைகள் உள்ளன என்றாலும் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மஹரிஷிகள் சம்மந்தப்பட்ட கதையை மட்டுமே இந்த தல வரலாற்றுக்கு கதையாக எடுத்துக் கொள்ளலாம். சிதம்பரத்தில் சிவபெருமான் தரிசனம் பெற்றுக் கொண்டு அடுத்தடுத்த சிவாலயங்களுக்கு சென்று கொண்டு இருந்த வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மஹரிஷிகள் இருவருடைய வயதும் ஏறிக் கொண்டே இருந்தது. தமக்கு மோட்ஷம் கொடுக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் கேட்டு இருந்த அந்த மஹரிஷிகளுக்கு சிவபெருமான் நவபுலியூர் ஆலயங்களில் சென்று தன்னை வழிபட்டு இறுதியாக ஸ்ரீரங்கம் சென்று விஷ்ணுவை வேண்டிக் கொண்டால் மோட்ஷம் கிடைக்கும் என்று கூறி இருந்தார். ஸ்ரீரங்கத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்த அந்த இரு மஹரிஷிகளுக்கும் வயதாகி விட்டதினால் பார்வை கோளாறு ஏற்பட்டு விட்டது. வழி தவறி சென்று கொண்டு இருக்கையில் இரவு நேரமாகி விட மேலும் இரவில் வழி தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்தவர்கள் தமக்கு வழிகாட்டுமாறு விஷ்ணுவை வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களை ஸ்ரீரங்கத்துக்கு செல்ல கட்டளையிட்டு இருந்த சிவபெருமானும் மனம் கனிந்து சிதம்பரத்தில் இருந்து அங்கு மனித உருவில் வந்து அவர்களுக்கு வழிகாட்டுகிறார். அங்கு ஒரு சிறிய ஆலயத்தில் வழித்துணை நாதர் எனும் பெயரில் அமர்ந்து விடுகிறார். இதற்கு இடையே விஷ்ணு பகவானும் அங்கு ஸ்ரீரங்கநாதர் உருவில் வந்து தன்னுடைய மாபெரும் உருவை அந்த கண்பார்வை கோளாறு கொண்ட மஹரிஷிகளால் காண முடியாது என்பதினால் சிறு பாலகனாக அவர்களுக்கு காட்சி தந்து அங்குள்ள ஆலயத்தில் அமர்ந்து விடுகின்றார். ஆக இந்த ஊரில் சிவன் மற்றும் விஷ்ணுவின் ஆலயம் சற்றே தள்ளித் தள்ளி உள்ளது. நவபுலியூர் யாத்திரை மேற்கொள்பவர்கள் சிவப்புலியூரில் உள்ள இரண்டு ஆலயங்களுக்கும் செல்ல வேண்டும். இல்லை எனில் பலன் கிடையாது. விஷ்ணுவை தரிசனம் செய்ய சிவபெருமான் துணை புரிகிறார் என்பதினால் நவபுலியூர் யாத்திரை ஆலயத்தில் இந்த சிறுபுலியூர் ஆலயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் மூலம் சிவனும் ஹரியும் ஒன்றே என்பதை சிவபெருமான் எடுத்துக் காட்டுகின்றார்.

மாயவரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் நாடாக்குடி எனும் கிராமத்தில் இந்த ஆலயம் அமைந்து உள்ளது. கானாட்டமுள்ளூர் ஆலயத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. இது நவக்கிரகங்களில் புதன் பரிகார ஸ்தலம் ஆகும்.

இறைவன் பெயர்: வழித்துணைநாதர், மார்கபந்தீஸ்வரர்

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். 

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண்: சங்கர் குருக்கள் ( 9791514671)

நவபுலியூர் ஆலயம் -7- அத்திப்புலியூர்

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

கடுகையாற்றில் வடகரையில் உள்ள இந்த ஆலயத்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம் என்கின்றார்கள்.

இந்த ஆலயத்தின் தல வரலாறு தெரியவில்லை. கருவறையில் மூலவராக உள்ள சிவலிங்கத்தின் பின்புறம் அத்திப்புலியூர் கல்யாணசுந்தரர் காணப்படுகிறார். இங்குள்ள சன்னதியில் உள்ள சிவபெருமானும் பார்வதியும் (கல்யாண சுந்தரேஸ்வரர்) அகஸ்திய முனிவரால் சிலாஸ்தாபனம் (கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டது) செய்யப்பட்டதாம். அதை ஸ்தாபனம் செய்த பின் அகஸ்திய முனிவர் சில காலம் இங்கு இருந்து அந்த சிலைக்கு பூஜை செய்து இருந்துள்ளார் என்பது விசேஷம் ஆகும். சிவபெருமானின் திருமண கோலத்தைக் காண ஆசைப்பட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்தபோது இந்த தலத்தில் அவருக்கு கல்யாண கோலத்தில் காட்சி தந்தாராம். அதே கோலத்தில்தான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மஹரிஷிகளுக்கு காட்சி தந்ததாக ஐதீகம் உள்ளது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் தொடர்ந்து மூன்று பிரதோஷ தினங்களில் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் மூன்றாவது பிரதோஷம் துவங்கும் முன்னரே நல்ல செய்தி வரும், திருமணம் ஆகும் என்றும் திடமான நம்பிக்கை உள்ளது.

இந்த ஆலயத்தை சுற்றி ஐந்து தீர்த்தங்கள் உள்ளதாம். இங்கு வந்து அவை ஐந்திலும் குளித்தப் பின் தர்ப்பணம் செய்தால் பிருத்துக்களினால் ஏற்பட்ட தோஷங்கள் போகும். அவர்களுடைய ஆசிகளும் கிடைக்குமாம். இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் எம பயம் நீங்கும் நம்பிக்கையும் உள்ளது.

தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சிவபெருமானின் சன்னதியும் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது ஒரு மகத்துவம் ஆகும். அனைத்து ஆலயங்களிலும் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கித்தான் அமைந்து இருக்கும்.

இறைவனின் பெயர்: சிதம்பரேஸ்வரர்
இறைவியின் பெயர்: சிவகாமசுந்தரி

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். 

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண்: விஸ்வநாத குருக்கள் (9751195622, 9943596849)

நவபுலியூர் ஆலயம் – 8- தப்பளாம்புலியூர்

தப்பளாம்புலியூர் ஆலயம் திருவாரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் எனது தெரிகின்றது. இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் ஸ்வயம்புவாக எழுந்தருளியவர் என்றும், இதன் பெருமை பல யுகங்களுக்கு முன்னரே இருந்தது என்றும் பண்டிதர்கள் கூறுகின்றார்கள். கிருத யுகத்தில் தற்பரவனம் என்றும், த்ரேதா யுகத்தில் மதுவனம் என்றும், துவாபர யுகத்தில் தேவ வனமென்றும் கலியுகத்தில் வியாக்ரபுரம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது என்பதான செய்திகளும் உள்ளன. நவபுலியூர் ஆலயங்களில் இந்த தலத்தின் பெருமை மேன்மையானது. மாண்டூக முனிவரும் வியாக்ரபாத மகரிஷியும் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். அவர்கள் முன் காட்சி தந்து சிவபெருமான் அவர்களுக்கு ஆசிகளை வழங்கினாராம். மாண்டு என்றால் தவளை (கிராமங்களில் தவளையை தப்பளை என மருவிக் கூறுவார்கள்) என்பதாகும். புலிக்கால் மஹரிஷியான வியாக்ரபாத மகரிஷி தன்னுடைய புலிக்கால் மற்றும் புலி கையையும் விலக்கிக் கொண்டு மனித உருவை பெற்றுக் கொண்ட இடம் என்பதால் இருவரையும் உள்ளடக்கி தப்பளை + புலி = தப்பளாம்புலியூர் எனக் கூறப்பட்ட இந்த தலத்தை தவளையும் புலியும் வழிபட்ட தலம் என்பதாக தவறாக திரித்துக் கூறப்பட்டு உள்ளதாம்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சுவையான கதை இதில் அமர்ந்துள்ள பார்வதி தேவி குறித்தது ஆகும். இங்குள்ள அன்னை திருமண வரம் அருளும் அன்னை ஸ்ரீ நித்ய கல்யாணி ஆகும். முன் ஒரு யுகத்தில் சிவபெருமானை ஆராதித்து வந்த முனிவர் ஒருவர் ஒரு பெண் தெய்வத்தை குழந்தை வடிவில் வணங்கி வந்து அதற்கு கல்யாணி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். ஒருமுறை அவர் வெளியூரில் நடந்த திருமணம் ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியபோது அவருடன் வந்த குழந்தைக் காணவில்லை. காணாமல் போய் விட்ட குழந்தையைக் குறித்து வருத்தமுற்ற முனிவர் சிவபெருமானை வேண்டித் கொண்டு அவரிடம் முறையிட்டபோது சிவபெருமானும் அந்த குழந்தையை தானே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவள் இனி அந்த ஆலயத்திலேயே நித்யகல்யாணியாக தன்னுடன் இருப்பாள் என்று கூற அன்று முதல் அந்த முனிவரும் அந்த அன்னையையே தனது மானஸ உபாசனை மூர்த்தியாக்கி வழிபடத் துவங்கினார். பல காலம் அங்கு தங்கி அவளையும் பிற தெய்வங்களையும் ஆராதனை செய்து வந்தவர் அந்த அம்பாளை அங்கேயே ஸ்தாபனம் செய்தபின் சமாதி அடைந்தார். ஸ்ரீ நித்யகல்யாணி எனும் அந்த தேவியை இந்த ஆலயத்தில் வந்து வணங்கினால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பரமாச்சார்யா என பக்தர்களால் வணங்கப்படும் காஞ்சி மாமுனிவர் அந்த அம்பாளைக் குறித்துக் கூறுகையில் அவள் போகமோட்சப்ரதாயினியாக உள்ளார் என்பதாக அருளாசி கூறி உள்ளாராம்.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நித்ய கல்யாணிக்கு ஏழு வாரங்கள், ஏழு உடையாத மஞ்சளை சமர்ப்பித்து அதை வீட்டுக்கு எடுத்து வந்து இழைத்து பூசியோ அல்லது அந்த மஞ்சளின் நீரையோ பருகி வந்தால் வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதை போல வெளியூரில் உள்ள பக்தர்கள் 21 மஞ்சளை எடுத்து வந்து இங்குள்ள ஸ்ரீ நித்ய கல்யாணிக்கு சமர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டு இழைத்து பூசியோ அல்லது அந்த மஞ்சளின் நீரையோ பருகி வந்தால் அந்த மஞ்சள் தீரும் முன்பாகவே அவர்களது பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்பதும் திடமான நம்பிக்கை ஆகும்.

இத்தலத்தின் இன்னொரு அதிசயம் என்ன என்றால் சிவபெருமானின் சன்னதிக்கு பக்கத்திலேயே உள்ள சனீஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி பார்த்தபடி உள்ளது. திருநள்ளாறு, திருநெல்லிக்காவல் மற்றும் திருக்கொள்ளிக்காடு போன்ற ஆலயங்களில் மட்டும்தான் இத்தகைய அதிசய கோலத்தைக் காண முடியுமாம். அதனால்தான் இது சனி பரிகார ஸ்தலம் ஆகும்.

அபூர்வ மூர்த்தியான ஏகபாத ருத்திரருக்கு இந்த ஒரு ஆலயத்தில்தான் தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சகல நோய்களையும் நீக்கும் ஜ்வர தேவர் எனும் தெய்வமும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றார். இங்குள்ள கால பைரவரை வேண்டிக் கொண்டால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், முட்டு வலி போன்றவை விலகும் என்பதும் நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் பதஞ்சலி மகரிஷி, மாண்டூக முனிவர் மற்றும் வியாக்ரபாத மகரிஷி போன்றவர்களுக்கு சிவபெருமான் நடனக் கோலத்தில் காட்சி தந்ததினால் ஆலயத்தில் உள்ள கோஷ்ட தெய்வ சிற்பத்தில் சிவபெருமான் ஆனந்த நடராஜர் கோலத்தில் தேவர்கள் மற்றும் ரிஷி முனிவர்களுடன் சேர்ந்து காட்சி தருவது சிறப்பாகும். இந்த ஆலயத்திலும் காரைக்கால் அம்மையாரும் சிவபெருமானை நடனக் கோலத்தில் கண்டு களித்ததாக நம்பிக்கை உள்ளது.

இறைவன் பெயர்: வியாக்ரபுரீஸ்வரர்
இறைவியின் பெயர்: நித்யகல்யாணி
தல விருட்ஷம்: காட்டாத்தி மரம் மற்றும் வன்னி மரம்
தீர்த்தம்: வியாக்ரபாத மற்றும் பதஞ்சலி தீர்த்தங்கள்

ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். 

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண்: டி.பி. வெங்கட்ராமன் (9840036514), S.கல்யாணராமன் (9942984901), சுவாமிநாத குருக்கள் (9786582271)

நவபுலியூர் ஆலயம் – 9- பெரும்புலியூர்

திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்தானம் எனக் கூறப்படும் சிவஸ்தலத்திலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த ஆலயத்திற்கு மனவேற்றுமைக் கொண்ட தம்பதியினர் மற்றும் விவாகரத்து கோரும் தம்பதியினர் வந்து தமது குறைகளை எடுத்துரைத்து மனதார வேண்டிக் கொண்டால் அவர்களுடைய அத்தனை பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன என்பதான நம்பிக்கை உள்ளது. பிரிந்து போன தம்பதிகள் ஒன்றிணைகின்றார்களாம். பிரிந்த பின் மீண்டும் இணைந்துவிடும் கணவனும், மனைவியும் இங்கு தம்பதியர்களாக வந்து சிவபெருமான் மற்றும் உமி தேவியை வணங்கிச் செல்வார்கள். அபிஷேக, ஆராதனை செய்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர். நீதிமன்றம் வரை சென்ற விவாகரத்து வழக்குகள் கூட, உமா சமேத மூர்த்தியை இங்கு வந்து வணங்கித் துதித்து பிரார்த்தனை செய்தால், இடையிலேயே வழக்குகள் திரும்பப் பெறப்படுகின்றன என்பதாக கூறுகின்றனர். ஆக இது கணவன் மனைவியை இணைக்கும் தெய்வ ஸ்தலமாம். இந்த ஆலயம் செய்வாய் கிரக பரிகால ஸ்தலம் ஆகும்.

இந்த ஆலயத்தில் உள்ள இன்னோர் சிறப்பு என்ன என்றால், அனைத்து ஆலயங்களிலும் நவகிரகங்கள் வெவ்வெறு திசையை நோக்கிப் பார்த்தபடி அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் அனைத்து நவக்கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி உள்ளன.

மன ஒற்றுமைக்காக ஏங்கும் தம்பதிகள் இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்தால் அவர்கள் வாழ்வில் இன்பம் பெருகுவது நிச்சயம்.

இறைவன் பெயர் : வியாக்ரபுரீஸ்வரர்.
இறைவியின் பெயர்: சௌந்தர்ய நாயகி.

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
பெரும்புலியூர்
தில்லைஸ்தானம் அஞ்சல்
வழி திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
PIN – 613203

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் பொதுவானவை ஆகும். ஆனால் பெரும்பாலான  ஆலயங்கள் கிராமப்புறங்களில் உள்ளதினால், ஆலயங்கள் திறந்திருக்கும் நேரங்கள் கடைபிடிக்கப்படுவது இல்லை. ஆகவே ஆலயத்துக்கு செல்லும் முன் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு அங்கு செல்லும்  நேரத்தை கூறிவிட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். 

தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய குருக்கள், தொலைபேசி எண்: சுரேஷ் குருக்கள் (9443447826)

முடிவுரை

திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வியாக்ரபாதரின் சமாதி உள்ளது. அதை போல மகரிஷி பதஞ்சலியின் சமாதி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது. திருப்பட்டூரில் பகவான் பிரும்மாவை வணங்கித் துதித்தப் பின் மகரிஷி பதஞ்சலியின் சமாதியில் வணங்கித் துதிக்க வேண்டும். அதன் பின் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சென்று அங்குள்ள மகரிஷி வியாக்ரபாதர் சமாதியிலும் வணங்கித் துதிக்க வேண்டும். கடைசியாக ஸ்ரீரங்கம் ஆலயத்துக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை வணங்கித் துதித்து மோட்ஷம் அளிக்குமாறு வேண்டிக் கொண்டு நேராக தம் வீட்டிற்கு சென்று விட வேண்டும். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானிடம் இருந்து சாப விமோசனம் பெற்றார் பிரும்மதேவர். ஒருகாலத்தில் படைப்புத் தொழிலில் இருந்த பிரும்மா ஆணவத்துடன் நடந்து கொண்டபோது சிவபெருமான் அவருடைய படைப்புத் தொழிலை தடை செய்யும் வகையில் சாபம் தந்து விட்டார். இந்த ஆலயத்தில் சிவபெருமானை வணங்கித் துதித்து அந்த சாபத்தில் இருந்து விடுதலை பெற்ற பிரும்மாவுக்கு மீண்டும் படைக்கும் தொழில் கிடைத்தது என்பதினால் இந்த ஆலயத்தில் தமது ஜாதக புத்தகத்துடன் வந்து, அதை பிரும்மா மற்றும் சிவபெருமான் சன்னதியில் வைத்து பூஜை செய்தபின் எடுத்துச் சென்றால், அனைத்து பாபங்களும் விலகி மீண்டும் மகிழ்ச்சி நிறைந்த மறுவாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் யாத்திரை காலத்தில் முடிந்த அளவு சைவ உணவருந்தி, முழு நம்பிக்கையுடன் பக்தியோடு யாத்திரையை மேற்கொண்டால் அனைத்து கர்மாக்களை விலகி மோட்ஷம் பெற வழி கிடைக்கும் என்பதாக நம்பிக்கை. நவபுலியூர் யாத்திரையை செய்து முடித்ததுமே வாழ்வில் புதிய பொலிவு ஏற்படுவதையும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைப்பதையும், நடைபெறாமல் தடைபட்டுக் கொண்டே உள்ள திருமணங்கள் எதிர்பாராத விதத்தில் நடப்பதையும், பணத் தட்டுப்பாடுகள் விலகுவதையும் பலரும் கண்கூடாக அனுபவித்து இருக்கின்றார்கள் என்பதில் இருந்தே இந்த யாத்திரையின் மகத்துவம் புரியும். நாம் இந்த யாத்திரையை மேற்கொள்ளும்போது நம்மை அறியாமலேயே நம்முடன் மகரிஷி வியாக்ரபாதர் மற்றும் மகரிஷி பதஞ்சலி எனும் இருவரும் நமக்கு வழிகாட்டும் விதத்தில் நம்முடன் பயணிக்கின்றார்களாம்.