மறக்க முடியாத சில 
விசித்திர அனுபவங்கள் 
(உண்மை சம்பவம்)
 
சாந்திப்பிரியா

அது 2003 அல்லது 2004 ஆம் வருடம் இருக்கும் என்று நினைக்கின்றேன். நாங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்த தேவாஸ் எனும் இடத்தில் இருந்தோம் (இந்தூர் மற்றும் போபாலுக்கு இடையிலான ஊர்) . நான் அரசாங்கப் பணியில் இருந்ததினால் நாங்கள் அலுவலகத்தின் காலனியில்  தனி பங்களாவில் வீடு இருந்தது. வீடு  ஒதுக்குப் புறமாக இருந்ததினால் பக்கத்தில் பள்ளிக்கூடமும்  அதன் பெரிய விளையாட்டு மைதானமும் இருந்தது.  ரம்யமான சூழ்நிலை. அந்த வீட்டை இன்றும் மறக்கவே முடியாத  இயற்கை காட்சி. எங்கள்  பங்களாவை சுற்றி  நான்கு பக்கமும் பெரிய தோட்டம். பெரிய பெரிய கொய்யா, மாமரம், சபோடா என பலப் பழங்கள் மற்றும் பூத்துக் குலுங்கும் பலவிதமான  மலர் செடிகள்  என இருந்தன. அவற்றைத் தவிர நிறைய காய் கறிகள் மற்றும் சோளமும் போட்டு இருந்தோம்.  அவ்வப்போது சிறுவர்கள் வந்து  வேலிகள் மீது ஏறி பழங்களைப் பறிக்க முயலுவார்கள். அவர்கள் தொந்தரவு போதாது என்று  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஊரின் அருகில் இருந்த கிராமத்து காட்டில் இருந்து  பத்து அல்லது பதினைந்து குரங்குகள் வழி தவறி  காலனிக்கு வந்து  எங்கள் இரண்டு மூன்று பங்களாக்களில் இருந்த தோட்டத்தை சூறையாடி வீட்டுச் செல்லும். அது முக்கியமாக சோளம் விளையும் காலத்தில் நடக்கும்.  சிறுவர்களைத் துரத்தலாம், ஆனால் குரங்குகளை துரத்த முடியுமா? அதுவும் ராக்ஷஸ அளவில் இருந்தக் குரங்குகள். பயந்து கொண்டு கதவை திறக்காமல் அவை செய்யும் சேட்டைகளை பார்த்துக் கொண்டு இருப்போம்.  ஐந்து அல்லது ஆறு  குரங்குகள் எங்கள் வீட்டின் முன்புற தோட்டத்து மூலையில் இருந்த சப்போட்டா பழங்களை பறித்து தின்றவாறு அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இருக்கும்.  இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. குரங்குகள் ஹனுமானின் அவதாரம் எனக் கருதுவதினால் மக்கள் அவாற்றை அடிக்க மாட்டார்கள். பயமுறுத்தித் துரத்துவார்கள்.

ஒரு நாள் விடியற்காலை நான் எப்போதும் போல தோட்டத்தில் பூக்களைப் பறிக்கச் சென்றபோது ஒரு பெரிய குரங்கு சப்போட்டா மரத்தடியில் மலர் செடிகளுக்குப் பின்னல் அமர்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது. அன்று அம்மாவாசை. வாராந்திர விடுமுறையும். ஆகவே அந்தப் பக்கம் செல்வதை தவிர்த்தேன். சரி அது தானாக சென்று விடும் என நினைத்தோம்.  அதனுடன் வரும் பட்டாளம் அன்று காணப்படவில்லை.  ஒரு வேலை அது வழிதவறி வந்துவிட்டதோ என்று நினைத்தோம்.  ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம்  ஆயிற்று. குரங்கு அவ்வப்போது சற்று எழுந்து அங்கும் இங்கும் பார்த்தது. மீண்டும் படுத்துக் கொண்டு விட்டது.  இப்படியாக காலை பத்து மணி ஆனதும் மீண்டும் வாயிலில் சென்று பார்த்தபோது அதன் பின் அது அசைவதாகத் தெரியவில்லை. படுத்துக் கிடந்தது. ஓ…அது அங்கேயே தூங்கத் துவங்கி விட்டது போலும் என எண்ணிக் கொண்டு  தூரத்தில் நின்று கொண்டு அதை துரத்த அதன் பக்கத்தில் சப்தம் வரும் வகையில்  கல்லை வீசி எறிந்தேன். அப்போதும் அது அசையவில்லை. காலையில் தோட்டக்காரன் வந்ததும் அவனும் தூர இருந்து கத்திப் பார்த்தான், கல்லைவிட்டு எறிந்தான். ஆனாலும் அது அசையவில்லை. ஆகவே அவன் ஒரு பெரிய  துரட்டைக் கொண்டு வந்து (பூ, பழங்களைப் பறிக்க உதவும் பெரிய மூங்கில் கம்பு ) தூரத்தில் இருந்து அதை சீண்டிப் பார்த்தான். அப்போதும் அது அசையவில்லை. ஆகவே நாங்கள் இருவரும் அதன் அருகில் சென்று படுத்துக் கிடந்த குரங்கைப் பார்த்தோம். அது கண்களை மூடியபடி இறந்து கிடந்தது போல இருந்தது.  காலனியின் துப்புரவு செய்பவர்களை அழைத்து அதைப் பார்க்கக் கூற அவர்கள் அது இறந்து விட்டது என்பதை உறுதி செய்தார்கள். அடுத்து என்ன செய்வது என கவலை அடைந்தோம். நடந்தது நல்லதா கேட்டதா எனத் தெரியாமல் மனம் அமைதி இல்லாமல் தவிக்க உடனே நான்  என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு பண்டிதரிடம் சென்று  அது பற்றிக் கேட்டோம். அவரோ அது நல்ல சகுனமே என்றும், மூதையார் நம் வீட்டில் வந்து மரணம் அடைந்து உள்ளார் என்பதே அதன் அர்த்தம் என்றும்,  அவர்கள் நம்மைக் காப்பற்றி வருகிறார்கள் என்று அர்த்தம் என்று கூறினார். ஆனால் அதை உரிய முறையில்  அடக்கம் செய்யுமாறு கூறினார்.

அடுத்தக் கவலை, அதை எப்படி எடுத்துப் போவது? எங்களிடம் நான்கு சக்கர வாகனம் கிடையாது. ஆகவே அதை எப்படி எடுத்துக் கொண்டு போவது?  எடுத்துக் கொண்டு பொய் எப்படி அடக்கம் செய்வது?  குரங்கு மரணம் அடைந்ததோ எங்கள் வீட்டுத் தோட்டத்தில்.  பொது இடம் அல்ல.  எங்கள் அலுவலகத்து தொழிலாளிகளும், அந்த ஊர் மக்களும்  அதிக கடவுள் ஈடுபாடு கொண்டவர்கள். அதுவும் ஹனுமார் பக்தி அங்கெல்லாம் அதிகம்.  காலனியிலோ அடிக்கடி தொழிலாளிகள் ஏதாவது  விழாக்களையும், பஜனைகளையும் செய்து கொண்டு இருப்பார்கள்.  நாங்கள் எதையாவது செய்யப் போய் அதை பெரிது படுத்தி விடுவார்கள் என பயந்தோம்.  ஏற்கனவே ஒரு முறை  தொழிலாளிகளின் வீடுகளின் பின்புற வழியில் காடாய் மண்டி இருந்த  செடிகளை வெட்டி காலனியை சுத்தப்படுத்தப் போன வேலை ஆட்கள் துளசி செடிகளை வெட்டிவிட்டார்கள் என பெரிய ரகளையே செய்து விட்டார்கள். ஆகவே என்ன செய்வது என முழித்தபோது பணம் கொடுத்தால் அதை துப்புரவு  தொழிலாளிகள் மரியாதையுடன் எடுத்துப் போய் திவசம் செய்து அடக்கம் செய்து விடுவார்கள் என்று காலனி மேற்பார்வையாளர்  கூறினார். ஆகவே நாங்களும் அதற்கான பணத்தை  அவர்களிடம் கொடுக்க அவர்கள் ஒரு இறந்து போன மனிதருக்கு செய்ய வேண்டிய முறையில் அந்தக் குரங்கை பாடை கட்டி, அதன் மீது வேட்டியைக் கட்டி, சிவப்பு நிறத் துணியை போர்த்தி மணி அடித்துக் கொண்டும், சங்கை ஊதிக் கொண்டும் போய்  சுடுகாட்டில் தகனம் செய்து விட்டு வந்தார்கள். பல நாட்கள் நாங்கள் அந்த நிகழ்ச்சியால் மனம் சஞ்சலம் அடைந்து இருந்தோம். சிலர்  மூதையார் உங்கள் வீட்டில் குரங்காய் வந்து மரணம் அடைந்து இருக்கின்றார், ஆகவே  அது நன்மைக்கே என்றார்கள்.  சிலர் ஹனுமாரின் தூதுவரே அங்கு வந்து  தாம் மரணம் அடைய வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து மரணம் அடைந்து  உள்ளார் என்றாகள்.

உண்மையான படம் அல்ல. குரங்கு இறந்து கிடந்த நிலையைக் 
காட்டும்  அதைப் போன்றப்  படம் இது.   

நாங்கள் இருந்த ஊரில் இருந்து சென்னைக்கு  செல்ல வேண்டும் என்றால் போபாலுக்குச் சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும். அங்கு சென்று ரயில் பிடித்தாலும் சென்னை செல்ல மூன்றாவது  நாள் ஆகி விடும். இந்தூரில் இருந்தும் வாரம் ஒரு முறை மட்டுமே சென்னைக்குச் செல்ல ரயில் உண்டு.  ஆகவே வாகன வசதிகள் அதிகம் இல்லாததினால், நான் என்னுடைய தாயார் மற்றும் தந்தை இருவரும் இறந்தபோது இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் இரண்டு நாட்கள் பிறகே செல்ல முடிந்தது.  ஆகவே அவர்களே  ஒரு குரங்கின் உருவில் வந்து என் வீட்டில் இறந்து தமக்கு இறுதிக் காரியம்  செய்ய வைத்துக் கொண்டு உள்ளார்கள் என்றும் அதன் மூலம் எங்கள் மீது அவர்களுக்கு இருந்த அன்பைக் காட்டிய  சம்பவம் அது என்று ஒருவர் கூறினார். அதை நம்புவதை விட வேறு வழி இல்லை என்பதினால் அனைத்தும் நன்மைக்கே என அதை ஏற்றுக் கொண்டு மனம் சாந்தி அடைந்தோம்.  அதன் பின் எங்களுக்கு வாழ்கையில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படவில்லை. மிக நல்ல முறையில் பணியில் இருந்து ஒய்வு பெற்று பெங்களூருக்கு வந்து தங்கத் துவங்கி விட்டோம்.
இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால் அந்தக் காலனியில்   இருபத்தி ஐந்து  வருட காலத்தில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம்- குரங்கு யாருடைய வீட்டிலாவது சென்று இறந்தான  சரித்திரமே அதுவரைக் கிடையாது. அந்த சம்பவம் எங்கள் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான அனுபவமாகவே இருந்தது.  அதற்க்கு முன்னரும் எங்களுடைய வாழ்க்கையில் யாருக்குமே நடந்திராத,  அனைத்திலும் நாங்களே முதல் பலி ஆடுகளான கதையாக பல விசித்திர நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தன  என்பது ஏன் என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அவை பல விசித்திர அனுபவங்கள். மறக்க வேண்டியவை. ஆனால் அதற்குப் பிறகு நடந்தது  அனைத்துமே  நல்லதற்காகவே நடக்கின்றது என்பதை பின்னர் புரிந்து கொண்டோம்.

இந்த சம்பவத்தை இத்தனை ஆண்டுகள் பொறுத்து  இன்று ஏன் எழுதினேன் என்றால், இன்றும்  ஒரு விசித்திர நிகழ்ச்சியைப் பார்த்தோம்.  நாங்கள் தற்போது உள்ள வீட்டின் பக்கத்து இடம் ஒரு ஆலயம். அதன் பக்கத்தில்  பெரிய வெற்று (காலி) மைதானம் உள்ளது .  இன்று காலை சுமார் பத்து மணி இருக்கும்.  அந்த காலி இடத்தில் பண்டிதர் சிறு சிதைப் போல கட்டைகளை அடுக்கிக் கொண்டு இருந்தார். வெள்ளித் துணியும், நெய், மஞ்சள், குங்குமம் போன்றவை இருந்தன.   அதைப் பார்த்த எங்களுக்கு வினோதமாக இருந்தது. எதற்காக சுடுகாட்டில் வைக்கப்படும் சிதைப் போல அங்கு அதை வைக்கின்றார் என்பதை பார்த்துக் கொண்டே இருந்தோம். சற்று நேரத்தில் அங்கு வந்த ஒருவர் ஒரு பெரிய நாகப்பாம்பை கொண்டு வந்து தந்தவுடன், பண்டிதர் அந்த சிதையில் அந்தப் பாம்பை வைத்து எப்படி இறந்தவரை தகனம் செய்வார்களோ அப்படியே அதன் மீது துணிகளை போட்டு, கட்டைகளை அடுக்கி, வெள்ளைத் துணியைப் போர்த்தி, மஞ்சள், குங்குமத்தைக் கொட்டி, கற்பூரத்தை போட்டு கொளுத்தி கட்டைகளாய் எறிய விட்டு அதை தகனம் செய்தார். அந்தப் பாம்பு சுமார் மூன்று அடி நீளம் இருக்கும். ஏறிய விடும் முன் கட்டை மீது சுத்தமான நெய்யை ஊற்றினார்.  அந்தப் பண்டிதரே அனைத்துக் காரியத்தையும் செய்தப் பின் குளிக்கச் சென்றார். எந்தப் பாம்பு ஆனாலும் அடித்து எரிந்து விடுவார்கள். ஆனால் இப்படிப்பட்ட மரியாதையுடன் நாகப் பாம்பை தகனம் செய்வதை முதன் முறையாக எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்த்தோம்?  கடந்த ஆறு ஆண்டில் பெங்களூரில்  நாங்கள் பார்த்த  இந்த முதல் சம்பவமும்  எங்களுக்கு ஒரு விசித்திரமான அனுபவமாகவே இருந்தது. அதை மாடியில் இருந்து புகைப்படம் எடுத்தேன். சரியாக வரவில்லை. இருந்தாலும் அதை பிரசுரித்து  உள்ளேன். இதைப்  போல  தகனத்தை  யாராவது பார்த்து இருக்கின்றீர்களா?