புராணங்களின்  சில கதைகள்
லஷ்மி விரத மகிமை
சாந்திப்பிரியா 

இது பத்மபுராணத்தில் காணப்படும் ஒரு கதை. இந்தக் கதையையும் சூதக முனிவரே நைமிஷாரண்யா வனத்தில் இருந்த முனிவர்களுக்குக் கூறினார்.
துவாபர யுகத்தில் சௌராஷ்டிரத்தை ஆண்டு வந்த ஒரு மன்னனின் பெயர் பத்ராஸ்வரஸ். அவனுக்கு சூரத்சந்தரிகா எனும் மனைவி இருந்தாள். அவள் மூலம் அந்த மன்னனுக்கு ஏழு மகன்களும், ஒரு பெண்ணும் பிறந்து இருந்தார்கள். அந்த மகளின் பெயர் ஸ்யாமபாலா என்பது. இளம் கன்னியான அவள் நல்ல பண்புகளைக் கொண்டவள். அவள் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டு இருப்பாள். அப்படி அவள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒருநாள் அரண்மனை வாயிலில் ஒரு வயதான கிழவி வந்து நிற்பதைப் பார்த்து அவள் அருகில் சென்று அவள் எதற்காக வந்துள்ளாள் என்பதைப் பார்க்கலானாள்.

ஒரு மூதாட்டி உருவில் வந்து இருந்தது லஷ்மி தேவியே. அதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரண்மனைக் காவலன் வந்திருந்த கிழவியை நோக்கி ‘நீ யார், எதற்காக இங்கு வந்துள்ளாய்?’ என்று கேட்டான். வந்த கிழவியோ தான் அரண்மனையில் உள்ள அரசியைக் காண வந்துள்ளதாகக் கூறினாள். ஆனால் காவலாளியோ அவளை உள்ளே விடத் தயாராக இல்லை. எதற்காக அவள் அரசியைப்  பார்க்க விரும்புகிறாள் என்பதை தெரிவித்தால் அரசியிடம் சென்று அதைக் கூறிவிட்டு அவள் சம்மதித்தால்  உள்ளே விடுவதாகக் கூறினான். ஆகவே அந்த வயதான மூதாட்டி கூறத் துவங்கினாள் ” அப்பனே, என் பெயர் கமலாம்பிகா என்பது. என் கணவர் துவாரகாவில் வசிக்கின்றார். உன்னுடைய அரசியானவள் பூர்வ ஜென்மத்தில் வைஷ்ய குலத்தில் பிறந்து திருமணம் ஆனவளாக இருந்தாள். கணவன் மற்றும் மனைவி  இருவருமே அடிக்கடி சண்டைப் போட்ட வண்ணமே காலத்தை ஓட்டி வந்தார்கள். அப்போது ஒருநாள் அவளது கணவன் அவளை நன்கு அடித்து விரட்டி விட்டான். ஆகவே அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறியவளை நான் வழியில் சந்தித்து தடுத்து நிறுத்தி அவள் மனத் துயரைக் கூறுமாறு கூறினேன் . அவள் தன கதையைக் கூறினால். அந்தக் கதையைக் கேட்டதும்  அவளது துயரம் தீர வேண்டும் எனில்  லஷ்மி தேவிக்கு பூஜை செய்து விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினேன். அவளும் அதை மிகவும் பக்தி சிரத்தையுடன் செய்து வர அவள் வாழ்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவள் பெரும் செல்வந்தர் ஆனாள் . ஆனாலும் அந்தப் பெண்மணி தான் செய்து வந்த விரதத்தை அடிக்கடி செய்து வரலானாள். அதனால் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியோடு இருந்தது. சில காலம் பொறுத்து அவர்கள் இருவரும் மரணம் அடைந்து விட யமதர்மராஜாரின் தூதுவர்கள் அவர்கள் இருவரும் திருமணம் ஆனதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த காலத்தைக் கணக்கிட்டு அதற்கு தண்டனையாக நரகத்திற்கு இழுத்துச் செல்லத் துவங்கினார்கள். ஆனால் வழியில் லஷ்மி தேவியானவள் தனது பக்தையை யமனின் தூதுவர்கள் இழுத்துக் கொண்டு போனதைக் கண்டு கோபமுற்று அதனது சேனையை அனுப்பி அவர்களை மீட்டு தன்னுடன் தனது இடத்துக்கு அழைத்துச் சென்றாள். அந்த இருவருமே  தற்போது இந்த நாட்டு ராணியாகப் பிறந்து  ஆட்சியில் இருக்கின்றார்கள் . அவள் பூர்வ ஜென்மத்தில் தான் செய்து வந்த விரதத்தை தற்போது மறந்து விட்டாள்  என்பதினால் அது பற்றி அவளுக்கு நினைவு படுத்தவே வந்தேன்” என்றாள்.

அந்தக் காவலாளியும் அவள் கூறியதை உள்ளே சென்று ராணியிடம் கூற அவள் தான்  ராணியாக இருக்கும் செருக்கில் அதை நம்பாமல் அவளை அடித்துத் துரத்துமாறுக் கூறி விட்டாள். காவலாளியும் அதை மீற முடியாமல் வெளியில் வந்து அந்த மூதாட்டியை அடித்து விரட்டினான். காவலாளி உள்ளே சென்ற சமயத்தில்  அவள் அருகில் இருந்த ஸ்யாமபாலா அவளிடம் இருந்து அவள் கூறிய விரத முறையைக் கற்று அறிந்து கொண்டாள்.

அந்த மூதாட்டி சென்றப் பின் ஸ்யாமபாலா தான் அந்த விரதத்தை அனுஷ்டிக்கத் துவங்கியதும், நான்கே வாரங்களில் தடைப் பட்டு இருந்த அவள் திருமணம் நடந்தேறியது.  ஸ்யாமபாலாவிற்கு அதிருஷ்டத்திற்கு மேல்  அதிருஷ்டம் அடித்து விரைவிலேயே பெரும் செல்வந்தர்கள் ஆனாள். ஆனாள் அதே சமயம் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு ஸ்யாமபாலா சென்ற உடன் அவளுடன் பிறந்த வீட்டில் இருந்த அதிருஷ்டம் விலகத் துவங்க அந்த அரசனின் செல்வமும் அழிந்து, விரைவிலேயே அவர்கள் அரசு திவால் ஆயிற்று. அதனால் அரசனும் அரசியும் பதவியை விட்டு விலக நேரிட்டது. கையில் பணம் இன்றி நடுத் தெருவிற்கு வந்து விட்டார்கள். ஆகவே அவர்கள் ஸ்யாமபாலாவிடம் சென்று தமது நிலையைக் கூற அவள் அவர்களுக்கு ஒரு பெரிய தங்கக் கட்டியைக் கொடுத்தாள் . அதை எடுத்துக் கொண்டு வீடு வந்து அதைப் பிரித்துப் பார்த்தவர்கள் அந்த தங்கக் கட்டி கல்லாக மாறி இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். மீண்டும் தனது பெண்ணிடம் போய் உதவி கேட்கலாம் என எண்ணிய சூரத்சந்தரிகா தனது பெண்ணின் வீட்டிற்கு போய்  சேர்ந்து தனது துயரக் கதையைக் கூறினாள்.  அடுத்த சில மணி நேரத்தில் அவள்

லஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கும் நேரமும் வந்து விட   அங்கு வந்த தன்னுடைய தாயாரையும்  தன்னுடன் வந்து அந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். அவளது தாயாரோ அந்த விரதத்தின் பாதியிலேயே பசி தாளாமல் உணவை அருந்தி விட்டதினால் விரதம் முடிவு பெறவில்லை. வறுமையும் விலகவில்லை. ஆகவே ஸ்யாமபாலா தனது  தாயான சூரத்சந்தரிகாவை மீண்டும் நிர்பந்தம் செய்து மீண்டும் அதற்க்கு அடுத்த மாதம் வரவிருந்த  விரதத்தை  தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்குமாறுக் கூறினாள். தன் சுய நிலைக்கு வந்த சூரத்சந்தரிகா தனது மகள் கூறியபடி அந்த விரதத்தை செய்து முடித்து விட்டு சில நாட்களில் மீண்டும் தனது வீட்டை அடைந்தாள். அடுத்த நாளே முன்னர் கல்லாக மாறி இருந்த தங்கக் கட்டி மீண்டும் தங்கமாயிற்று. மெல்ல மெல்ல அவர்கள் இழந்த அனைத்து செல்வத்தையும் திரும்பப் பெற்று வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். தவறாமல் மாதாமாதம் லஷ்மி விரதத்தை கடை பிடிப்பதை மறக்கவில்லை.