சாந்திப்பிரியா
சிவகங்கை மாவட்டம்  தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று.  இம் மாவட்டத்தின் தலைநகரம் சிவகங்கை ஆகும். இந்த மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற ஆலயங்கள் பலவும் உள்ளன. அவற்றில் ஒன்றே வீர சேகர உமையாம்பிகை ஆலயம் ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள சாகோட்டை என்ற சிற்றூரில் இந்த  உள்ளது.
ஆயிரம் வருடத்திற்கு  முற்பட்ட ஆலயம் எனக் கூறப்படும் வீரசேகரர் உமையாம்பிகை சோழ மன்னர் கண்டன் என்பவரால் கட்டப்பட்டதாம். மூலவரை அதாவது லிங்க வடிவில் உள்ளவரும், ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படுபவருமான  வீரசேகரர் பெருமானை  திருமுடித் தழும்பர் என்றும் அழைக்க உமையவளை உமாம்பிகை என்றும் கூறுகிறார்கள்.
ஆலயத்துக்குள் நுழைந்ததுமே  பெரிய  பிராகாரம் உள்ளது. அதை தொட்டபடி பெரிய மண்டபமும் காணப்படும். கோடி  மரத்தை நோக்கியபடி அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்து இருக்க அவளை நோக்கி உள்ள சன்னதியில் வீரசேகரர் அமர்ந்துள்ளார். இந்த ஆலயத்தில் மட்டுமே பைரவருக்கு இரண்டு நாய்கள் உள்ளன என்பதற்குக் காரணம் இதன் புராணத்தில் சிவலிங்கத்தின் இருப்பிடத்தைக் கண்டுப பிடிக்கக் காரணமாக இருந்த வீரன் என்ற வேடனை காப்பாற்றிய நாயும் ஒரு முக்கியமான பாத்திரமாக உள்ளதினால்தான்.
ஒரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த ஒரு வேடன் ஒரு மரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியைக் கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று புதைந்து இருந்தது. அந்த அதிசயத்தை வேடுவன் ஒரு மன்னரிடம் கூற அந்த சோழ மன்னனும் அங்கேயே அதற்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயப் பெருமையைக் கூறுவதே வீரவனப் புராணம் என்பது.  இந்த கோவிலின் முக்கிய அம்சமாக இக்கோவிலின் கோபுரம் உள்ளது. ஏனெனில் இக்கோபுரம் முழுமையான கூம்பு அமைப்பை பெற்றுள்ளது. இப்படி ஒரு அமைப்பை தமிழ் நாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் காண முடியாது.
இந்த புராணம் காலம் சென்று விட்ட மகா வித்வான் திரு மீனாஷி சுந்தரம் பிள்ளை என்பவரால் 1900 ஆண்டிற்கு முன்னால் ( 1862 ஆம் ஆண்டு வாக்கில் இருக்கலாம் ) எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.  அந்த  புராணத்தை அடிப்படையாகக் கொண்டே  வீரவனப் புராணம் எனும்  இந்த ஆலயப் புராணத்தை புதிதாக நான்  எழுதி உள்ளேன்.
வீரவனப் புராணம் 
ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக இருந்தது பாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமி. அவர்கள் ஆண்ட நாட்டில் இருந்த ஆலயங்களில்தான் சிவபெருமானின் அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் நடந்ததாகக் கூறுவார்கள். அப்படிப்பட்ட பாண்டிய நாட்டின் ஆளுகையில் இருந்த பகுதியே சாக்கோட்டை என்பதும்.  ஆனால் அதன் அன்றையப் பெயர் சாக்கோட்டை அல்ல , வீரவண அளகை என்ற பெயரில் அது  இருந்துள்ளது. வனம் என்றாலே காடு என்பது பொருள்.  நகரை விட்டு வெகு தூரத்தில்  யாரும் செல்லாத இடமாக இருந்தது  ஒரு அடர்ந்தக் காடு. அது அரசர்களால் கூட அதிகம் கவனிக்கப்படாத வனம். அந்த வீரவனப் பகுதி பெரும் காடாக இருந்ததினால் பல்வேறு செடிகள் கொடிகள் நிறைந்து இருந்தன. அங்கு வேடுவ மக்களும் அதிகம் உண்டு. வேட்டை ஆடுதலைத் தவிர வனத்திற்குச் சென்று கனி காய்களை பறித்து வந்து உண்பார்கள்.

வீரனின் வேட்டை

அந்த வீர வனத்தின் அக்கினி மூலையில் வீரன் என்ற பெயரில் ஒரு வேடவத்  தலைவன் வாழ்ந்து வந்தான். அவன் பேராற்றல் மிக்கவன். நல்ல உள்ளம் படைத்தவன்.  ஒரு நாள் அவன் தனது நாயுடன் வனத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு மரத்தடியில் பாம்புப் புற்று  இருந்தது.  அதன் மீது  வள்ளிக் கொடி புதரைப் போல மண்டிக் கிடந்தது.  ஆகவே வள்ளிக் கிழங்கை தோண்டி எடுக்க வீரன் அந்த செடியை வெட்டி, புற்றையும் உடைத்தான்.  புற்றை இடித்தவனின் கோடரி அதற்குள் புதைந்துக் கிடந்த சிவலிங்கம் ஒன்றைத் தாக்கியது. கோடரி முனை முழுவதும் ரத்தம் நிறைந்து இருந்தது. சர்வ சாதாரணமாக விலங்குகளை வேட்டை ஆடுபவர்களின் வம்சத்தை சேர்ந்தவன் தனது ஆயுதம் ரத்தத்தினால் நனைந்து இருப்பதைக் கண்டு, உள்ளே யாராவது இருந்திருக்க அவர்களை  நான் அறியாமல் கொலை செய்து விட்டேனோ  என்று பயந்து  முதன் முறையாக தன்னை அறியாமலேயே மூர்ச்சித்து விழுந்தான்.
மூர்ச்சித்து விழுந்த வீரன் வெகு நேரம் அப்படியே கிடக்க அவனுடன் வந்திருந்த நாய் வெகுநேரம் அவனை சுற்றி சுற்றி வந்தது. தனது எஜமானனின் நிலையைப் பார்த்த  அந்த நாய் உடனே அவன் வீட்டிற்கு ஓடிச் சென்று அவன் மனைவியின் எதிரில் குறிக்கலாயிற்று. அவள் புடவையைப் பற்றி இழுத்தது. எஜமானன் இல்லாமல் இது ஏன் தனியாக வந்துள்ளது என்று எண்ணி கலக்கம் பொண்ட வீரனின் மனைவியும் அந்த நாய் ஓடத் துவங்கிய திசையிலேயே தானும் ஓடினாள். அந்த நாயும் வீரன் மூர்ச்சித்துக்  கிடந்த இடத்தை அடைய, அவன் மனைவி திடுக்கிட்டாள். என்ன ஆயிற்று தனது கணவனுக்கு எனப் புரியாமல் விழித்தவள் ரத்தத்துடன் அங்கு கிடந்த கோடாரியையும்  பார்த்தாள்.   குனிந்து அவனுக்கு மூச்சு வருகிறதா எனப் பார்த்ததும், அவன் மூச்சு விடுவதைக் கண்டு சற்றே ஆறுதல் அடைந்தாள். பக்கத்தில் வள்ளிக் கிழங்குச் செடியும் வெட்டப்பட்டு இருந்தது. ஒரு பாம்பு புற்றும் அரைகுறையாக உடைக்கப்பட்டு இருந்தது. அடடடா, புதரில் மறைந்து  இருந்த யாரையாவது தவறாக கொன்று விட்டாரா என சந்தேகமுற்று அவன் தோண்டிய இடத்தின் அருகில் சென்று  பார்த்தபோது, ரத்தம் அங்கு இன்னமும் மெல்லியதாக வந்து கொண்டு இருந்ததைக் கண்டாள். சற்றும் தாமதிக்காமல், அந்த கோடாரியை எடுத்து அந்த இடத்தை இன்னும் தோண்டிப் பார்க்க அங்கு ஒரு சிவலிங்கம் புதைந்து கிடந்ததையும் அதன் தலைப் பகுதியில் இருந்து ரத்தம் வருவதையும் பார்த்தாள். ஆஹா…நடக்க கூடாதது நடந்து விட்டதே.  அறியாமல் தன் கணவன் சிவலிங்கத்தை அவமதித்து விட்டாரே  என மனம் கலங்கி அந்த மண் வெட்டியால் தன் தலையில் வெட்டிக் கொண்டு தானும் உயிர் துறக்க முயற்சி செய்தபோது, அவளது நிலையை சிவபெருமான் பார்த்தார். அவள் மீது பரிதாபம் கொண்டார். அவள் பக்கத்தில் நின்று இருந்த நாய் தரை தாரையாக கண்ணீர் விட்டு அழுதபடி நின்று இருந்தது.

சிவபெருமான்  உமையுடன் காட்சி தந்தக் கதை

‘நில்’ என்ற அசிரிக்  குரல் கேட்டது.  சிவலிங்கத்தின் மீது இருந்து வடிந்து கொண்டு இருந்த ரத்தமும் நின்றது. வீரனின் மனைவி திடுக்கிட்டு நின்றபோது அவள் எதில் சிவபெருமான் தோன்றினார். தற்கொலை செய்து கொள்ள இருந்தவளை தடுத்து நிறுத்தினார்.  அதைக் கண்டவள்  அழுதவாறே தெரியாமல் ஒரு தவறை செய்து விட்ட தனது கணவனுக்கு உயிர் பிச்சை கொடுக்குமாறு அவரிடம்  கேட்டாள்.  அப்படி அவர் வீரனை உயிர் பிழைத்துக் கொடுத்து விட்டால்  வாழ்நாள் முழுவதும் தேவர்களுக்கு (கடவுள்) பணி செய்து வருவோமெனவும் உறுதி கூற, சிவபெருமான் சிரித்தார். அவளது கணவன் மயக்கம் தெளிந்து எழுந்தான்.  மயக்கம் தெளிந்து எழுந்த வீரனிடம்  அவன் அறியாமையில்  செய்த காரியத்தைக் கூறிவிட்டு இன்னமும் அங்கேயே நின்றிருந்த சிவபெருமானக் காட்டினாள். ஆனால் அவள் அவரைக் காட்டியபோது சிவபெருமான் அங்கு இல்லை. ஒரு அந்தணர் மட்டுமே அங்கு  இருந்தார்.  ஆனாலும் இருவரும் அவரை புரிந்து கொண்டு விட்டதினால் அவர் காலில் விழுந்து அவரை வணங்கினார்கள். மகிழ்வுற்ற அந்தணர் உருவில் இருந்த சிவபெருமான் அவர்களிடம் கூறினார் ‘ யாம்  இங்கு உங்களுக்கெல்லாம் எழுந்தருளவே இந்த காட்சியை நிறைவேற்றினோம். நீ என் தலையில் அடித்த அடியினால் ஏற்பட்ட தழும்பினால் நான் திருமுடித் தழும்பர் என்ற பெயரை பெற்றேன். நான் இங்கு தனிமையில் இல்லை. அதோ அந்த மூலையைப்  பார், அங்கு நிற்கின்றாளே அவளே உமை தேவியாவாள்.  இனி காலையும், மாலையும் யார் இங்கு வந்து எங்கள்  பெயரை ஸ்மரித்தபடி துதிக்கின்றார்களோ, அவர்கள் அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள் ‘ என்று கூறியப் பின் சிவபெருமான் மறைந்து விட்டார். அவர் காட்டிய வடக்கு திசையை அவர்கள் நோக்க அங்கு உமை தேவி நின்றிருப்பதைக் கண்டார்கள். அவளுக்கும் இருவரும் தரையில் விழுந்து நமஸ்கரிக்க அவளும் அங்கிருந்து மறைந்து போனாள். அங்கேயே அந்த மரத்தடியில் சேற்றினால் சிறு குடிசைப் போன்ற  இடத்தைக் கட்டி, அதில் சிவலிங்கத்தை வைத்தார்கள். அது முதல் அவர்கள் இருவரும் தினமும் இரு வேளையும் அங்கு வந்து சிவபெருமான் மற்றும் உமையை வணங்கி துதித்து விட்டுச் சென்றார்கள். இப்படியாக காலம் கழிந்து கொண்டே சென்றது.

கண்டன் எனும் சோழ மன்னன்

பாண்டிய நாடு எத்தனை செழிப்பானதோ, அத்தனை சிறப்புக்களையும் கொண்டிருந்தது, அதன் அண்டை நாடான சோழ மன்னர்களின் ராஜ்யமும். அந்த சோழ சாம்ராஜ்யத்தில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பகுதியை ஆண்டு வந்தவன் கண்டன் என்ற சோழ மன்னன். அவன் ராஜ்யத்தில் பஞ்சம் இல்லை, பட்டினியும் இல்லை. அனைவரும் சுகமாகவே வாழ்ந்து வந்தார்கள். சூர்ய வம்சத்தை சேர்ந்த அந்த மன்னன் அறுபத்தி நான்கு கலைகளையும் அறிந்தவன் என்றாலும், பூர்வ ஜென்ம பாவத்தினால் அவனுக்கு நெற்றியில் வெண்குஷ்ட நோய் வந்திருந்தது. என்ன மருந்து கொடுத்தான் அவன் குணமடையவில்லை. நாளுக்கு நாள் உடல் முழுவதும் அந்த நோய் பரவலாயிற்று.

பொதுவாகவே சோழ மன்னர்கள் வைஷ்ணவ பக்தி கொண்டவர்கள். ஆகவே அவனது ஜாதகத்தை ஆராய்ந்த அவனது அரசவை பண்டிதர்கள்  இந்த நோய்க்கான  நிவாரணம் பெற வேண்டுமானால் அவன் நூற்றுக்கணக்கான சிவபதிகளுக்கு (ஆலயங்கள்) செல்ல வேண்டும் என்றும், அதில் எதோ ஒரு சிவபதியில்  அவனுக்கு இருந்த தோஷம் நீங்கி குணம் பெறுவான் என்பதைக் கண்டறிந்தார்கள். ஆனால் அது எந்த சிவபதி என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆகவே அவர்களும்  மன்னன் கண்டனை சிவபதிகளுக்கு (சிவன் ஆலயங்களுக்கு) சென்று பிரார்த்தனை செய்தால் ரோகம் தீரும் என அறிவுறுத்தினார்கள். அதைக் கேட்ட மன்னனும் மறுப்பேதும் கூறாமல் அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டான். விரைவிலேயே அந்த மன்னனும், உற்றார், உறவினர் சூழ சிவ பத்திகளுக்கு பயணத்தை மேற்கொண்டார்.

மன்னன் சென்ற சிவபதிகள்

தென் பகுதியில் இருந்த சோழ நாட்டில் இருந்து முதலில் காசிக்குச் சென்று அங்கு சிவபெருமானை வழி பட்டப் பின், தென் பகுதியை நோக்கி திரும்பி வந்து கொண்டே இருந்த மன்னன் வழியில் இருந்த அனைத்து ஊர்களிலும் இருந்த சிவபதிகளுக்கு விஜயம் செய்து வணங்கினார். தொண்டை நாடு, நடு நாடு, துளுவ நாடு, மலை நாடு, கொங்கு நாடு என அனைத்து பகுதிகளிலும் இருந்த சுமார் நூறு ஆலயங்களுக்கும் மேல்  விஜயம் செய்தப் பின் சோழ நாட்டை வந்தடைந்தான்.  அங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும், குஷ்டரோகத்தின் நிலையில் எந்த மாற்றமும்  ஏற்படவில்லை. மனம் வெதும்பி பண்டிதர்களிடம் தனது நிலையைக் கூறிய மன்னனிடம் அவர்களோ, ‘அரசே மனம் தளர வேண்டாம், முடிவாக பாண்டிய நாட்டிலுள்ள சிவபதிகளுக்கு விஜயம் செய்து விட்டு வரலாம்’ என ஆறுதல் கூறி அவரை தேற்றினார்கள்.

பாண்டிய நாட்டுக்கு விஜயம்

ஆகவே மனம் தளராமல் முடிவாக பாண்டிய நாட்டில் இருந்த சிவபதிகளுக்கு சோழ மன்னன் சென்றான்.  அங்கு சென்றபோது  தான் யார் என்பதை தெரிவிக்காமல் ஒரு யாத்ரீகரைப் போலவே  பயணத்தை மேற்கொண்டார். திருவாலவாய், திருவாப்பனூர், திருப்பரம்குன்றம், பிரான்மலை, திருவாடனை, திருக்கானப்பேர், திருவேடகம், திருப்பூவணம், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருப்புனவாயில், திருப்புத்தூர் போன்ற இடங்களில் இருந்த சிவபதிகளை தரிசித்தப் பின் மாலை வந்து விட வீர வனப் பகுதிக்கு வந்த மன்னன் அங்கிருந்த காட்டில் தனது பரிவாரங்களோடு கூடாரம் அடித்துத் தங்கினார். களைப்பினால் அங்கு இரண்டு நாள் ஆயாசம் கொண்டு இருந்தப் பின் ராமேஸ்வரத்துக்குக் கிளம்பிச்  வேண்டும் என முடிவாயிற்று.

வீரனுக்கு வந்தக் கனவு

அதற்கு இடையில் தினமும் அந்தக் காட்டில் வந்து சிவபெருமான் மற்றும் உமையை வணங்கி வந்த வீரனுக்கு மனதில்  ஒரு ஏக்கம் வந்தது. நான் சிவபெருமானின் தலையில் காயத்தை ஏற்படுத்தினாலும் அவர் எனக்கு அருள்தான் புரிந்துள்ளார். அவரை சிறு குடிசைப் போன்ற இடத்தில் அல்லவா  அல்லவா வைத்து உள்ளேன். மற்ற இடங்களைப் போலவே அவர்களுக்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட எனக்கு வழி கிடைக்க கூடாதா என வேதனைப் பட்டு உறங்கிய நேரத்தில் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் கூறினார் ‘ வீரா, கவலைப் படேல். நமக்கு ஆலயமும், பூஜைகளும் நடக்கும். அதையும் நீ பார்ப்பாய். சோழ மன்னன் கண்டன் என்பவன் இந்த வனத்தில் வந்து தனது பரிவாரங்களோடு தங்கி உள்ளான். அவனுக்கு வந்துள்ள நோயை தீர்க்க நான் எண்ணி உள்ளேன். ஆகவே அவனிடம் சென்று எதையாவது கூறி அவனை இங்கு அழைத்து வந்து என்ன பூஜிக்கச் சொல். உனக்கு திருவருள்  புரிந்தது போல அவனுக்கும் அருள் புரிவேன்’ என்று கூறி விட்டு மறைந்தார்.

கண்டனை கண்டான் வீரன்

கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தான் வீரன். அப்போது அதிகாலை நேரம் ஆகி விட்டது . சாதாரணமாக விடியற்காலை கனவு பொய்ப்பதில்லை என்பதினால் எப்போதும் போல குளித்து விட்டு மனைவியுடன் கானகத்துக்குச் சென்று சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின் சோழ மன்னனை அந்த வனத்தில் தேடினான்.  அதிகம் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் அவர்களைக் கண்டு பிடித்து விட்டப் பின் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு காவலாக நின்று இருந்த  காவலாளியிடம் தன்னை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டப் பின் தான் அரசனைக் காண வந்துள்ளதாக கூறினான்.  ஆனால் அவன் சிவா லிங்க ஆலயத்தைப் பற்றிக் கூறவில்லை. ஆகவே வீரன் வந்ததிற்கான காரணத்தைப் பற்றி காவலாளி கேட்டபோது, அதை அரசரிடம்தான் கூற முடியும் என்று கூறினான். காவலாளியும் ஒரு கணம் யோசனை செய்தான்.  நாம் வந்துள்ளது யாருக்கும் தெரியாதபோது, உள்ளூர் ஆளான இவனுக்கு எப்படி சோழ மன்னன் இங்கு வந்துள்ளது தெரியும் என எண்ணியவாறு  அரசரிடம் அந்த விஷயத்தைக் இன்னொரு காவலாளி  மூலம் கூறி அனுப்பினான்.  அதைக் கேட்ட அரசரும்  மறுப்பேதும் கூறாமல் வீரனை அழைத்து வருமாறு செய்தி அனுப்பினார். காவலாளியும் அரசனின் அனுமதியைப்  பெற்றுக் கொண்டதும் வீரனை அரசனிடம் அழைத்துச் சென்றான். அரசரைக் கண்ட வீரன் அரசனை வணங்கியப் பின் பவ்யமாக தூரத்தில் ஒதுங்கி நின்று கொண்டு, மரியாதையுடன் அரசனிடம் கூறினான் ‘அரசே, எனக்கு வந்த கனவின் முலமே நீங்கள் அரசர் என்பதை புரிந்து கொண்டேன். நான் ஒருநாள் வள்ளி கிழங்கை தோண்டி எடுக்க மண் புற்றை இடித்தபோது, அங்கு ஒரு சிவ லிங்கத்தைக் கண்டேன். அதன் முடியில் என் ஆயுதம் பட்டு ரத்தம் கொட்டியது. அதன் பிறகு அந்த ரத்தம் நின்றது.  அதை இந்த வனத்தில் சிறு குடிசையில் வைத்து பூஜித்து வருகிறேன். ஆகவே அந்த சிவலிங்கத்தை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்று ஆசைபட்டே இங்கு உங்களிடம் வந்தேன்’ என்று கூறினான்.

மன்னனின்  குஷ்ட நோய் அகன்றது

அந்த செய்தியைக் கேட்ட உடனேயே நோயினால் உடம்பில் ஏற்பட்டு இருந்த அசௌரியங்கள் உடனடியாக மறைந்து போகத் துவங்கியதைக் கண்ட  அரசன் மனதில், அங்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.

வீர வன சிவபெருமானின் பெயரைக்  கேட்டதுமே மன்னனின் காதில் இருந்த வெண் குஷ்டம் மறைந்ததைக் கண்டு வியந்து போன மந்திரிமார்கள் , அரசன் முன் சென்று அவனிடம் முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டினார்கள். அதைக் கண்ட அரசன் வியந்து போனான். ஆஹா, இதென்ன மாயம் என எண்ணிய மன்னன் வீரனிடம், வீரா எனக்கு அந்த லிங்கம் உள்ள இடத்தைக் காட்டுவாயா என்று கூறி விட்டு எழுந்ததுதான் தாமதம், அவனது கால்களில் இருந்த வெண்மை அகன்றது. மேலும் அதிசயித்துப் போனவர்கள் பேசும் முன்னரே  மன்னன் தனது கைகளைக் கூப்பி, ‘வீர வன சிவபெருமானே இங்கேயே உன்னைக் கை கூப்பி வணங்குகிறேன்’ என்று கூற உடனேயே அவன் கைகளில் இருந்த வெண்மையும் மறைந்தது.  இது எதற்கோ நல்லதிற்கு நடந்துள்ளது,  இனியும் தாமதிக்கலாகாது  என அமைச்சர்கள் கூறியதினால்  அரசனும் எதையும் யோசிக்கவில்லை. உடனே அரசனின் பரிவாரங்களும், அரசரும்  குளித்து விட்டு உடனே அந்த மரத்தடியில் இருந்த வீரசேகரப் பெருமானின் இடத்துக்கு வீரனுடன் சென்றார்கள். அவர்கள்  அனைவரும் அதிசயிக்கும் விதமாக அங்கு காலடி வைத்த கண்டனின் குஷ்ட நோய் காணாமல் போய் விட்டதைக் கண்டு வாயைப் பிளந்து நின்றார்கள்.  லிங்கத்தைக் கண்ட மன்னன் தன்னை மறந்து   ஓடிச் சென்று லிகத்தைக் கட்டிப் பிடித்து தழுவ, அவன் உடலெங்கும் இருந்த அனைத்து குஷ்டமும் மறைந்தது. உடல் பொலிவு பெற்றது.   மன்னன் உடல் தங்கம் போல மின்னியது. சிவபெருமானை வணங்கிவிட்டு எழுந்தவன் உமையை  தரிசித்து அவளையும் வணங்கினான்.

அங்கிருந்த அனைவரும்  என்ன நடக்கின்றது என்றே புரியாமல்  விழித்துக் கொண்டு, அதிசயித்து நிற்க மன்னன் ஓடிச் சென்று தனது மனைவியைத் தழுவிக் கொண்டான், தனது அமைச்சர்களை தழுவிக்கொண்டான், தனது சுற்றாரை தழுவிக்கொண்டான். அவனது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ‘ஆகா.. இத்தனை போரையும் தழுவி  எனது மகிழ்ச்சியை வெளியிட்ட நான் என்னை இங்கு அழைத்து வந்த வீரனுக்கு அல்லவா முதலில் நன்றி கூறி இருக்க வேண்டும்’ என நினைத்தவன் ஓடோடிச் சென்று வீரனையும் கட்டித் தழுவினான்.  வீரன் தன்னைப் போன்ற இனத்தவனை மன்னன் வந்து  தழுவுகிறானே என்ற பயத்தினாலும் வெட்கத்தினாலும்  தலை குனிந்தான்.

அதன் பின்னர் அனைவரும் தமது இருப்பிடம் திரும்பினார்கள். சோழ மன்னன் வீரனிடம் கேட்டான், ‘இந்த காட்டில் ஒரு கட்டிடம் இல்லாமல் சிவபெருமான் இருக்கின்றாரே, நான் இங்கு ஒரு ஆலயம் அமைக்கட்டுமா ‘. அந்த வார்த்தைகளைவிட வீரனுக்கு வேறு எது வேண்டும்? உடனடியாக தன் ஏழ்மை நிலையைக் கூறி, தனக்கும் ஆசை இருந்தும் அதை செய்ய முடியவில்லை என்பதினால்தான் சிவபெருமானின் கட்டளைப் படி அவரை அங்கு அழைத்து வந்ததாகக் கூறினான்.  அதைக் கேட்ட மன்னன் இன்னும் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக அந்த இடத்து வனப் பகுதியில் இருந்த மரங்களை வெட்டி துப்புரவு செய்ய ஆணையிட்டான். அது பாண்டிய நாட்டின் பகுதி என்று கூட யோசனை செய்யவில்லை. அவனைப் பொறுத்தவரை அது வீர வன சிவபெருமானின் பூமியே. ஆனாலும் பாண்டிய நாட்டை விட்டு எங்கோ தள்ளி இருந்த அந்த வனத்தை சுத்தம் செய்ய தனது நாட்டில் இருந்து மேலும் அதிக  ஆட்களை தருவித்தான். ஆலய நிர்மாநிகளை அழைத்தான். கட்டிட வல்லுனர்களை, ஓவியர்களை, சிற்ப வல்லுனர்களை என ஆலயம் கட்டத் தேவையான அனைவரையும்  அங்கு வரச்வழைத்தான். காரியங்கள் மளமளவென நடைபெற்றது.  காடு அழிக்கப்பட்டதினால் அங்கிருந்த விலங்குகள் வேறு காட்டைத்  தேடி ஓடிவிட்டன.

ஆலய திருப்பணி


அந்த இடத்தில் வீரன் கட்டி இருந்த மண் கட்டிடத்திற்கு நிழலைக் கொடுத்தவாறு இருந்த வீரை மரம் மட்டுமே அப்படியே விட்டு வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த சிற்ப நூல் வல்லுவர்களின்  திட்டப்படி  கர்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிறுத்த மண்டபம், வசந்த மண்டபம், ஊர்த்தி மண்டபம், திருமண மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், ஆலய அரண்கள், வேள்விச் சாலை, திருமடைப் பள்ளி என அனைத்தும் மடமடவென  கட்டி முடிக்கப்பட்டன. இத்தனை நடந்து இருந்தும், பாண்டிய  நாட்டு நகரை தள்ளி  எங்கோ ஒரு மூலையில் இருந்த வனத்தின் நடுவில் நடந்து கொண்டு இருந்தது எதுவுமே பாண்டிய மன்னனுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் தெரியாது. காரணம் நாட்டை விட்டு வெகு தொலைவில் தள்ளி இருந்த அந்த காட்டிற்கு யாருமே செல்வது இல்லை. வேடர்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து  கொண்டு இருந்தார்கள்.

புனித  தீர்த்தம்

ஆலயம் நிறைவு பெற்றது. ஆனால் மன்னனுக்கு ஒரு கவலை வந்தது. ஆலயத்தின் அருகில் ஆலயத்துக்குள் நுழையும் முன் முழுகிச் செல்ல பொய்கை இல்லையே என்பதே வருத்தம்.  ‘ஐயனே இதற்கொரு  வழியை நீ காட்டக் கூடாதா ‘  என மறுநாள் சிவபெருமானின் முன்னால் சென்று மனமார அவரை வேண்டினான். அவன் காதுகளில் ஒரு ஆசிரி ஒலித்தது. ‘ மன்னா, கவலைப் படாதே,  நமக்கு முன்பாகவே சிவகங்கை என்ற நீர் பொய்கையை உருவாக்கி அதை அடையாளம் காண அதன் மீது மலர்களை தூவி உள்ளோம் . அதன் எல்லையை அடைந்து, அதக் கண்டுபிடித்து, துப்புரவு செய்து ஆலயத்துடன் அதற்கும் சேர்த்து குடமுழுக்கு செய்’.  தனக்கு காதில் ஒலித்த குரலை கேட்டவன், அமைச்சர்களிடம் ஆலோசனை செய்து விட்டு, மலர்கள்  தூவி மூடி இருந்ததாக காதில் விழுந்த குரலுக்கு மதித்து அளித்து, தனது பரிவாரங்களுடன் ஆலயத்தை சுற்றி நீர் பொய்கையைத் தேடினான். அதற்கும் அதிக நேரமாகவில்லை. அந்த நீர் பொய்கை மீது தூவப்பட்டு இருந்த மலர்களை அடையாளம் கொண்டு   அது உள்ள இடத்தைக் கண்டு பிடித்து அந்த நீர் பொய்கையையும்  துப்புரவாக்க  ஏற்பாடுகளை செய்தான்.

குடமுழுக்கு

கோவிலை சுற்றி சாலைகளை அமைக்க வைத்தான். தங்கும் இடங்களை அமைத்தான். தங்குபவர்களுக்கு வசதியாக  மாளிகைகளை கட்டினான். உணவு சாலைகளையும் அமைத்தான். கோவிலுக்குள் சிவபிரான், உமையவள் போன்ற அனைவருக்கும் சிலைகளை அமைத்தான். பூமியிலே கிடைத்த சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தான். நல்ல நாள் ஒன்றில் ஆலயக் குடமுழுக்கை செய்து முடித்தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக அனைவருக்கும் பொன்னாடை அளித்தான். திருவிழாவை நடத்தினான். அந்த வனமே சோழ நாட்டுடன் சேர்ந்தது போல தோற்றம் தந்தது. ஆனாலும் மன்னன்  செய்த அனைத்துக் காரியங்களிலும்  வீரனை தள்ளி வைக்காமல் அவனையும் தன்னுடன் வைத்துக் கொண்டுதான் மற்றவர்களிடமும் கலந்தாலோஜனைகளை செய்தான்.  அந்த ஆலயத்தின் பெயர் வீர சேகர உமையாம்பிகை என ஆயிற்று.  (வீர வனம்= வீர;   கரை சேர்த்தவர் = சேர்த்தவர் என்பது மருவி சேகரர்;  உமை எனும் அம்பிகை = உமையாம்பிகை= அனைத்தும் சேர்ந்து வீர சேகர உமாம்பிகை என ஆயிற்று)

சோழ மன்னனுக்கு பிறந்த ஆண் மகன்

ஆலயம் அமைக்கப்பட்டு முடிந்தப் பின், காட்டில் தான் தங்கி இருந்த இடத்திலேயே தன் பெயரில் ஒரு ஊரை அமைத்து, அங்கேயே தங்கிக் கொண்டு தினமும் அந்த ஆலயத்துக்குச் சென்று சிவபெருமானையும், உமையவளையும் வணங்கி வந்து கொண்டு இருந்தான்.

கண்டனின் மனைவியின் பெயர் சுசீலை. அவள் நெடு நாட்களாக தனக்கு ஒரு ஆண் மகட்பேறு கிடைக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தாள்.  அதற்காக சிவகங்கை பொய்கையில் முழுகி, ஆலயத்துக்கு சென்று உமையவளை வணங்கி, மாவிளக்கு போட்டு, பூஜைகளை செய்ய, சிறிது காலத்திலேயே நல்ல ஒரு நாளில் அவளுக்கு ஆண் மகவும் பிறந்தது. அந்த ஆண் மகனுக்கு வீர சேகர சோழன் என்ற  பெயரை சூட்டினார்கள்.

சோழ மன்னன் ஊர் திரும்புதல் 

இப்படியாக பல காலம் கழிந்தது. ஆனால் எத்தனைக் காலம்தான் அந்த வனத்தில் சோழ மன்னன் இருக்க முடியும்?  சோழ மன்னனின் நாடான காவிரிபூம்பட்டினத்தில் அரசன் எப்போது திரும்பி வருவான் என மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார்கள். அதைக் கேள்விப்பட்ட அரசனின் மந்திரிகள், மன்னனிடம் இனியும் நாடு திரும்பாமலிருப்பது நல்லதல்ல  என எடுத்துக் கூற, மன்னன் மனம் வருந்தினான்.  இங்கிருந்து எப்படி செல்வேன் என துக்கத்தில் ஆழ்ந்து விட, மீண்டும் அவன் காதில் ஆசிரி ஒலித்தது, ‘ மன்னா, இனியும் நீ கவலைப்பட ஒன்றும் இல்லை. நான் இங்கு வாசம் செய்ய  நீ  ஆலயம் அமைத்து விட்டாய். நான் இங்கிருந்தபடி அனைவருக்கும் அருள் புரிந்து கொண்டு இருப்பேன்.  ஆகவே உன் நாட்டிற்குச்  சென்று உன் கடமையை செய்.  வருடம் ஒரு முறை சித்திரை திங்களில் இங்கு வந்து என்னை வழிபடு’. ஆகவே அந்த ஆணையை ஏற்றுக் கொண்ட மன்னனும் இங்கு வருவதற்கு  முன்னர் தான் போட்டு இருந்த திட்டத்தின்படியே  ராமேஸ்வரத்துக்குச் சென்று அங்குள்ள சிவபெருமானையும்  வணங்கி விட்டு ஊர் திரும்பலாம் என  முடிவு செய்து அனைவருடனும் கிளம்பி ராமேஸ்வரத்துக்குச் சென்று, அங்கு ஆலய வழிபாட்டை முடித்துக் கொண்டப் பின்,  பாண்டிய நாட்டை வந்தடைந்தான்.   பாண்டிய நாட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்த சோழ மன்னனை பாண்டிய மன்னன் அன்புடன் வரவேற்று உபசரிக்க சோழ மன்னனும் நடந்த கதை அத்தனையும் பாண்டிய மன்னனுக்குக் கூற  அதைக் கேட்ட பாண்டிய மன்னன் அதிர்ந்தே போனான். தனக்கே தேயாமல் தன் நாட்டிலா இத்தனை மகிமையும் நடந்துள்ளது என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன் பிரமித்து நின்றிருந்தான். அதன் பின் பாண்டிய மன்னனிடமும் , வேடன் வீரனிடமும் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு சோழ மன்னன் தன் நாடு திரும்பினான். அதன் பின் ஆண்டுக்கொரு முறை வீரவனத்திற்கு வந்து இறைவழிபாட்டை செய்து கொண்டு இருந்தவன் காலபோக்கில் மரணம் அடைந்து விட்டான்.

பாண்டிய மன்னனின் ஆலய விஜயம் 

சோழ மன்னன் சந்தித்த பாண்டிய மன்னனின் பெயர்  சுகுண பாண்டியன் என்பது. சோழ மன்னன் கூறி இருந்தக் கதையைக் கேட்டவருக்கு தானும் அங்கு சென்று இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது.  ஆகவே அவனும் தனது பரிவாரங்களுடன் வனத்தைக் கடந்து அதற்குள் கட்டப்பட்டு இருந்த  ஆலயம் இருந்த பகுதிக்குச் சென்றான். அங்கு சென்றவுடன் சிவகங்கை பொய்கையில் மூழ்கி குளித்தப் பின் ஆலயத்துக்குள் சென்று ஐந்தெழுத்து மறையை ஓதினான். அதன் பின் ஆலயத்தை வலம்  வரச் சென்றான். வீரை மரத்தடிக்கு அருகில் வந்தவன் அருகில் இருந்தவர்களிடம், அந்த மரம் எதற்கு அங்குள்ளது என்று கேட்டு, அதன் கதையை தெரிந்து கொண்டவுடன், அவனது மனதின் ஓரத்தில் ஒரு விபரீத ஆசை எழுந்தது.  ‘இந்த ஆலயம் குறித்து பலவும் கூறிய சோழ மன்னனின் செய்திகள் மெய்யோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் நான் இந்த ஆலயாதை  சுற்றி வலம் வருவதற்குள் சிவபெருமான் இந்த மரத்தை பலா மரமாக்கிக் காட்டுவாரேயானால் அவருடைய சக்தியை  புரிந்து கொள்ள முடியும்’.

வீரை மரம் பலா மரமான கதை
இப்படியாக எண்ணம் கொண்ட  மன்னன் சுகுண பாண்டியன்  ஆலயத்தை சுற்றி வரச் சென்றான். பாதி பிராகாரத்தை சுற்றிப் பின் மேற்கு திசை பிராகாரத்தில் நுழைந்த உடனேயே எங்கிருந்தோ வந்த பலாப்பழத்தின் வாசனை மூக்கைத் துளைத்தது.  பக்கத்தில் எங்கோ உள்ள  பலா மரத்தில் இருந்து எத்தனை வாசனை வருகிறது என எண்ணியவாரே வலது புற பிராகாரத்தை அடைந்த மன்னன் தூரத்தில்  இருந்த வீரை மரத்தைக் காணாமல் துணுக்குற்றான். அது இருந்த இடத்தில்  வேறு எதோ வானுலாவிய  மரம் உள்ளது மங்கலாகத் தெரிந்தது.  நாம் வேறு எங்காவது சென்று விட்டோமோ எனப் பார்த்தபோது அது ஆலய பிராகாரமே என்பது தெரிந்தது. ஆகவே வேகமாக நடந்து  மரம் தெரிந்த இடத்தை அடைந்ததும்தான் தெரிந்தது, வானுலாவி  இருந்தது பலா மரமே தவிர வீரை மரம் அல்ல என்பது. மரத்தின் அடிவரை கனிகள் நிரம்பி இருந்தன. அது மட்டும் அல்ல வானளாவி இருந்த அதன் நிழலில் தெரிந்த ஆலய கோபுரத்தின் மீது பலாக் கனியின் சாறும்  ஓடிக் கொண்டு இருந்து, அந்த சாறு தரையிலும் வழிந்து கொண்டு இருந்தது. அதை சுற்றிலும் ஈக்கள் மொய்த்துக்  கொண்டு இருந்தன. மன்னனுடன் வந்தவர்கள் அனைவரும் திகைப்பால் உந்தப்பட்டு வாயடைத்து நின்றார்கள்.  இதென்ன சற்று முன்னர்தான நாம் இங்கு வீரை மரத்தைப் பார்த்தோம்.  ஆனால் வீரை மரத்துக்குப் பதில் பலா மரம் அல்லவா இங்கு வந்துள்ளது?. அது எப்படி நடந்துள்ளது?  மாயமா ??. வீரை மரம் என்ன ஆயிற்று என வியந்து அங்கும் இங்கும் வீரை மரத்தை தேடத் துவங்க தேட மன்னன் தனது மனதில் நினைத்தான் ‘இதற்குக் காரணம் என்னுடைய எண்ணம் அல்லவா’.  பலாமரத்தைக் கண்ட சிலர் இந்த திருவிளையாடல் வீரசேகர பெருமானின் திருவிளையாடல் என்று கூற, வேறு சிலரோ, இல்லை இது உமையின் திருவிளையாடல் என்று கூற, வேறு சிலர் இது அம்மையும், அப்பனும் சேர்ந்தே செய்துள்ள திருவிளையாடல் என ஆளாளுக்கு எதையோ கூறிக் கொண்டு இருக்க பாண்டிய மன்னன் தனது மனதில் வெட்கமுற்றான்.

இறைவன் தோன்றுதல்

அப்போது எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் இன்னொரு அற்புதம் நிகழ்ந்தது. வானத்திலே வீர சேகரப்  பெருமான் தோன்றி மன்னனிடம் கூறினார், ‘ மன்னா நாமே உன் மூலம் ஒரு அதிசயத்தை நடத்திக் காட்ட விரும்பினோம். ஆகவே உன் மனதில் தோன்றிய சந்தேகமும்  நல்லதற்கே நடந்தது . அதனால்தான் இந்த தலத்தின் சக்தியை மற்றவர்களும் உணர முடிந்தது. உன் சந்ததியினருடன் இங்குள்ள பலாபழ மரத்தின் பழங்களை எடுத்து உண்ணுங்கள். உங்கள் அனைத்து நோய்களும் குணமாகும். வாழ்வில் அனைத்து  நன்மைகளும் நீங்கள் பெறுவீர்கள்.   இங்கு முதலில் நான் தோன்றிய இடம்  வீரை மரமே என்பதினால் இப்போது உனக்கு என் சக்தியை எடுத்துக்  காட்ட  ஏற்படுத்திய இந்தப் பலா மரமும் மீண்டும் வீரை மரமாகும்’ என்று கூற பாண்டிய மன்னன் அனைவருடன் சேர்ந்து அவரை வணங்கியப் பின், அந்த பலா மரத்தின் பழங்களை உரித்து  உண்டு மகிழ்ந்தான்.  அதன் பின் அந்தப் பலா மரமும் அவர்கள் கண் எதிரிலேயே  மீண்டும் வீரை மரமாக  மாறி நின்றது. அந்த மன்னனும் அது முதல் வீரசேகர பெருமானின் பக்தனாகி அந்த ஆலயத்துக்கு நிறைய காணிக்கைகளை செலுத்தி அதை நல்ல முறையில் பராமரித்து வர தனது அரசு மூலம் பல உதவிகளையும் செய்து வந்து, தானும் அங்கு வந்து வழிபட்டவாறு இருந்தான்.

குபேரன் வழிபாடு


குபேரன் பிரும்மாவின் கொள்ளுப் பேரன் ஆவார். அவருடைய தந்தையின் பெயர் விச்ரிவா என்பது. குபேரன் பிறந்து பெரியவர் ஆனதும் தனது தந்தையிடம் சென்று தனக்கு இறைவனின் தன்மையை விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விச்ரிவாவும் தனது மகன் குபேரனுக்கு விளக்கலானார்  ‘மைந்தனே இறைவனே படைத்தல், காத்தல் மற்றும் அழிக்கும் செயல்களை செய்பவர். இந்த பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளுமே அவர் மூலமே இயங்குகிறது. படைக்கும் தொழிலை செய்யும் பிரும்மனையும் படைத்தது அவரே. அவருடைய பெருமையை கூற இயலாது. அவரை வழிபடுவோர்களுக்கு கல்வி, செல்வம், அந்தஸ்த்து என அனைத்தும் கிடைக்கும். பிராமணர்களைக் கொன்றால் ஏற்படும் பிரும்மஹத்தி தோஷமும் கூட அவருடைய அருளினால் ஒரு நொடியில்  நீங்கும். அவர் பெயரை உச்சரித்த மட்டிலேயே அனைத்து நன்மைகளும் கிடைக்கும். ஆகவே அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட அந்த பரமசிவனை நீயும் துதித்து  வழிபாட்டு  நீ விரும்புவது அனைத்தையும் அவரிடம் இருந்து பெறுவாயாக. உன் படைப்பும் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் ஏற்பட்டு உள்ளது. ஆகவே நீ போய் அவரை துதித்து வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வா’  என அவரிடம் கூறினார்.

குபேரனும் உடனே தந்தையை வணங்கி  விட்டு மகா மேரு மலைக்குச் சென்று அங்கு சிவபெருமானை துதித்து ஆயிரம் ஆண்டுகள் தவத்தில் இருந்தார். அதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க குபேரனும் தனக்கு ஒரு புஷ்பக விமானம் வேண்டும், வட திசையில் அரசாளும் உரிமை வேண்டும், பெரும் செல்வம் என்னிடம் இருக்க வேண்டும், என் பெயர் பெரும் சிறப்புடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டு அவரை வணங்கினார்.

வீரவனத்துக்குச் செல்லக் கட்டளை


அதைக் கேட்ட சிவபெருமானும் புன்முறுவல் செய்து , ‘நீ போய் பாண்டிய நாட்டில் குறுந்த வனத்திற்கு மேற்கே, மருத வனத்துக்கு வடக்கே, சாமி வனத்துக்கு கிழக்கே மற்றும் வெட்டாறு எனும் நதிக்கு தெற்கே உள்ள வீர வனப் பகுதியை அடைந்து அங்கு எம்மை நினைத்து தவம் செய்தால் நீ வேண்டியது கிடைக்கும்’  என்று கூறிவிட்டு மறைந்தார்.

வீர வனத்தில் குபேரன், குபேரரான கதை


சிவபெருமான் கூறியதைக் கேட்ட குபேரன் உடனே அங்கிருந்துக் கிளம்பி வீர வனத்துக்குச் சென்றார். அங்கு இருந்த வீர சேகரப் பெருமானின் ஆலயத்தில் சென்று  தவமிருக்க சிவபெருமானும் உமையவளும் அவருக்குக் காட்சி அழைத்து அவர் வேண்டிய வரத்தை எளிதிலேயே அருளினார்கள். அத்தகையப் பெருமைப் பெற்றத் தலமாக  வீர வனம் விளங்கியது.

அந்தணன் ஒருவன் பெற்ற நியாயம்

பாண்டிய நாட்டில் மங்களம் எனும் ஊரில் வேளாளன் எனும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவன் இறை பக்தி மிக்கவர். நெடு நாள்  அவருக்கு மகட்பேறு இல்லை என்பதினால் காசிக்குச் சென்று வழிபாட்டு வர முடிவு செய்தான். தனது அண்டை வீட்டில் இருந்த அந்தணர் ஒருவருக்கு தன்னிடம் இருந்த பசுக்கள் சிலவற்றை தானமாகத் தந்து விட்டு, மீதி இருந்த பசுக்களை மற்றொரு அண்டை வீட்டில் இருந்த இடையனிடம் விற்றுக் காசாக்கிக் கொண்டு காசிக்கு பயணம் செய்து விட்டான். நாட்கள் நகர்ந்தன. அந்தணன் தானமாகப் பெற்று இருந்த பசுக்கள், மற்ற பசுக்களை வாங்கி இருந்த இடையனின் கொட்டகையில் இருந்த பசுக்களுடன் உறவாடிக் கொண்டு அங்கேயே அடிக்கடி செல்லத் துவங்கி,  ஒரு கட்டத்தில் அந்த பசுக்களுடன் தங்கிக் கொள்ளத் துவங்கின.

அதைக் கண்ட அந்தணன் ஒருநாள் இடையனிடம் சென்று தன் வீட்டில் இருந்து அங்கு வந்து தங்கி விட்ட பசுக்களை திரும்பி அழைத்துச் செல்ல அனுமதி கேட்டான். ஆனால் அந்த இடையனோ, தன் கொட்டகையில் உள்ள அனைத்து பசுக்களுமே தன்னுடையதே என வாதிட்டான். ஊரார் கூட்டிய பஞ்சாயத்திலும் பிராமணனின் பேச்சு வலுவின்றி போயிற்று. ஆகவே அந்த அந்தணன் வேறு வழி இன்று சுகுணப் பாண்டியனிடம் சென்று நீதி கேட்டான். மன்னர் முன்னிலையிலும் அந்த இடையன் தான் முன்னர் கூறிய வாதத்தையே அழுத்தமாக எடுத்து வைக்க நீதியைத் தர வேண்டிய மன்னன் ‘சரி அப்படி என்றால் வீரசேகரப் பெருமான் ஆலயத்தில் வந்து சத்தியம் செய்து இதைக் கூறு’ என்று கட்டளை இட்டான்.

இடையன் கண் பார்வையை இழந்த கதை

அனைவரும் ஆலயத்துக்குச்  சென்றார்கள். சுகுணப் பாண்டியன் வீர சேகரப் பெருமானிடம் வேண்டினார், ‘என் ஐயனே, இதுவரை நான் நீதி பிழன்றது இல்லை. இப்போது வந்துள்ள விசித்திர வழக்கில்  நீதான் நான் சரியான தீர்வைத் தர  எனக்கு அருள் புரிய  வேண்டும்’. அப்போது சிவபெருமான் மன்னனின் காதில் மட்டும் ஒலிக்கும் விதத்தில்  ‘அந்த சோழ தீர்த்தத்தில் இருவரையும் குளித்து விட்டு வந்து கரை ஏறுமாறுக் கூறினால் உண்மை வெளிப்படும்’ என்று கூறினார்.  அதைக் கேட்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் நடந்ததை உரத்தக் குரலில் கூறி விட்டு அந்த பொய்கையில் முழுகி எழுந்து விட்டு சன்னதிக்கு வருமாறு கட்டளை இட்டார். அனைவரும் பொய்கையை அடைந்தார்கள்.

அந்த அந்தணன் ‘என்னுடைய பத்து பசுக்கள் இடையனின் கொட்டகையில்  புகுந்து கொண்டு உள்ளன’ எனக் கூறி விட்டு பொய்கையில் முழுகி எழுந்தான். அவன் உடல் பல பளபளத்தது . முதுமை விலகி இளைஞரைப் போல வெளியில் வந்தார்.

இடையனோ, ‘அத்தனை பசுக்களும் என்னுடையவையே’ எனக் கூறி விட்டு பொய்கையில் மூழ்கி விட்டு வெளியில் வந்தால் அவனது இரண்டு கண்களும் குருடாகி இருந்தது. குளத்தில் இருந்து படிக்கட்டில் ஏறி வர முடியவில்லை. உண்மை வெளித் தெரிய, மற்றவர்களின் உதவியுடன் கரைக்கு ஏறி வந்தவன் அழுது புலம்பினான். தன்னை மன்னித்து விடுமாறும் அரசரிடம் வேண்டினான். அந்தணரிடம் வேண்டினான். பத்து பசுக்கள் அல்ல அதற்கு மேலும் பத்து பசுக்களை அந்த அந்தணனுக்குத் தந்து விடுவதாகவும், வம்சாவழியாக இந்த வீரசேகரப் பெருமானுக்கு சேவகமும் செய்து வருவேன் என்றும் இறைவன் சன்னதிக்குச் சென்று மன்னன் முன்னிலையில் உறுதிமொழி தந்து, தனது பார்வையைத் திரும்ப  கிடைக்க வழி செய்யுமாறு அந்த ஆண்டவன் சன்னதியில் அழுது புலம்பினான். அவன் மீது இறக்கம் கொண்ட மன்னனும் மனமுருகி ஆண்டவனிடம் அந்த இடையனுக்கு கண் பார்வையைத் திரும்பித் தருமாறு வேண்டிக் கொள்ள, மீண்டும் அவன் காதில் ஆசிரியாக சிவபெருமான் கூறினார் ‘ அவனை அந்தப் பொய்கையில் மீண்டும் மூழ்கி எழச் செய்’. அதைக் கேட்ட மன்னனும் அதையே இடையனிடம் கூற, இடையனும் மீண்டும் பொய்கையில் முழுகி எழுந்து கண் பார்வையை திரும்பப் பெற்றான். அதன் பின்னர் பல காலம் சிவபெருமானுக்கு அங்கு இருந்தபடி தொண்டு செய்து கொண்டு இருந்த இடையன் முடிவில் மரணம் அடைந்து சிவலோகத்தை அடைந்தான்.

திருமால் சாபம் நீங்கியக் கதை

ஒருமுறை பிருகு முனிவரால் திருமாலுக்கு சாபம் ஏற்பட்டது. ‘நீ பத்து பிறவிகளை எடுத்து பூமியில் வாழ்வாயாகா’ என திருமாலுக்கு பிருகு முனிவர் சாபம் தந்து விட்டார். ஆகவே திருமால் உடனே கிளம்பி வீர வனம் சென்று அங்கு சிவபெருமானையும் உமையவளையும் வழிபட்டார். தவம் இருந்த விஷ்ணுவின் முன்னால் தோன்றிய சிவபெருமானிடம் திருமால் தனக்கு ஏற்பட்டு உள்ள அந்த சாப விமோசனம் நீங்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். சிவபெருமானும் ‘கவலைப் படேல், அந்த பத்து பிறவிகளிலும் நீங்கள் இந்த உலகிற்கு நன்மை தரும் பிறவியாக வாழ்ந்து  கொண்டு மேன்மையுடன் இருப்பீர்கள்’ என வரம் தந்தது மட்டும் அல்லாமல் தனது ஆலயத்தின் அருகிலேயே நிருத்தி திக்கிலே ஒரு ஆலயம் கொண்டுவீர வசந்த திருமால்’ என்ற பெயரில் இருப்பாயாக என ஆசிர்வதித்தார். திருமாலும் அப்படியே அங்கு எழுந்தருளினார்.

ராமன் வணங்கி பூஜித்தக் கதை

சரயு ஆற்றின் அருகில் இருந்த அயோத்தியாவை தரசர மன்னன் ஆண்டு வந்தபோது அவருக்குப் பிறந்த புதல்வர்களில் பரதனை ஆட்சியில் ஏற்ற அவரது தாயார் ராமனை காட்டுக்கு அனுப்பினாள். வனம் சென்ற ராமரின் மனைவி சீதை  ராவணணினால்  அபகரிக்கப்பட்டு லங்காவிற்கு போக, அவளை மீட்டு வர சென்ற ராமர் வழியிலே பொதிகை மலை அருகிலே அகஸ்திய முனிவரை சந்தித்தார். அகஸ்திய முனிவரிடம் ராமன் தனக்கு யுத்த வலிமை பெற என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்க,  அகஸ்திய முனிவரும் ராமரை வீர வனத்துக்குப் போய் அங்குள்ள வீரசேகரப் பெருமாளின் அருளைப் பெற்றுக் கொண்டால் அவர் விரும்பியது நடக்கும் என்றார்.  ராமரும் உடனே கிளம்பி வீர வனத்துக்கு வந்து இந்த ஆலயப் பெருமானை பலவாறு தோத்திரம் செய்து பூஜித்தார். அவரது பக்தியை மெச்சிய சிவபெருமானும் அவருக்குக் காட்சி அளித்து அவர் கேட்ட வரத்தை தந்து ‘இனி உனக்கு அபார வீரத்தை நாம் தந்து அருளினோம்’ என்று கூறிவிட்டு அவருக்கு ‘வீரராகவன்’ என்ற பெயரை சூட்டி அனுப்ப, இலங்கைக்குச்  சென்று யுத்தத்தில் வெற்றி பெற்றுத் திரும்பினார் ராமன். அதுமுதல் ராமனின் பெயரும் வீரராகவன் என ஆயிற்று.

வீரசேகரப் பெருமான் வேதியர் வேடம் பூண்டக்  கதை

ஒருமுறை வீரசேகரப் பெருமான் வேதியார் வேடம் பூண்டு , குருந்த வனப் பகுதியில் இருந்த ஆவுடையார் ஆலயத்துக்குச் சென்றார். அங்கிருந்த மறையர்கள் என்ற அந்தணர்கள் அவரிடம் ‘ஐயா, நீங்கள் யார், எங்கிருந்து வந்துள்ளீர்கள், நீங்கள் அறிந்துள்ளது என்ன?’ என்ற கேள்விகளை எழுப்பினார்கள்.  வீரசேகரப் பெருமானோ தம்மை வீரவன மறையரான ஆத்மநாதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தாம் அனைத்து மறையையும் கற்றறிந்து உள்ளதினால், அங்கு  யாருக்கேனும் வேண்டுமானால் அதைக் கற்றுக் கொடுக்க தயார வந்துள்ளதாகவும் கூறினார்’. அதைக்  கேட்ட அவர்களும் மகிழ்வுற்று ‘ யாமும் இளம் மாணவர்களுக்கு அதை போதிக்க நல்ல ஆசானை தேடிக் கொண்டு இருந்தோம். நீர் வந்துள்ளபடியினால், அதை சந்தோஷமாக அவர்களுக்கு கற்பிக்கின்றீர்களா’  என அவரிடம் அனுமதிக் கேட்டு அவரை பாடம் போதிக்க அங்கு தங்குமாறு கூறி விட்டார்கள்.

இதற்கு  இடையில் அந்த ஊரில் இருந்த வேளாளர்களுக்கும் மறையர்களுக்கும் ஒரு நிலம் சம்மந்தமான தகராறு இருந்தது. வேளாளர்கள் அடாவடித்தனமாக அந்தணர்களுக்கு சொந்தமான பெரும் நிலத்தை அபகரித்துக் கொண்டு அது தம் இடம் என்று உரிமைக் கொண்டாடினார்கள். கலவரம் வரை போகும் அளவிற்கு சச்சரவு போன போது இரு தரப்பினரும் அரசனிடம் நீதி கேட்டுச் சென்றார்கள். வேளாளர்கள் வழக்கடுவதில் மன்னர்கள். மேலும் அவர்கள் பெரும் செலவந்தர்கள் என்பதினால் மறையர்கள் எனும் அந்தணர்கள் அஞ்சினார்கள்.

நீரில்லா நிலத்தில் நீர் வந்தக் கதை

அந்தணர்களின் நிலையை வீரவன மறையனார் எனும் ஆத்மநாதன் கவனித்தார். அவர்களிடம் சென்று ‘ஐயா, நீங்கள் யாரும் அஞ்ச வேண்டாம், நான் உங்களுக்காக அரசன் எதிரில் சென்று  வழக்காடுகிறேன்.  நீங்கள் உடனே மூட்டையில் கட்டமுதும் (உணவு), ஊறுகாயையும் கட்டிக் கொண்டு உடனே என்னுடன் புறப்பட்டு வாருங்கள் ‘ என அவர்களுக்கு தைரியம் கூறி அவர்களை அழைத்துக் கொண்டு மன்னன் இருப்பிடம் சென்றார். அவர்களை வேண்டும் என்றே வீர வனம் வழியே அழைத்துச் சென்று ஆலய தரிசனம் செய்வித்தார். அற்புத தரிசனத்தை அங்கு பெற்றுக் கொண்டவர்கள் அந்த ஆலயத்திலேயே அமர்ந்து கட்டமுதை அவிழ்த்து, ஊறுகாய் போட்டுக் கொண்டு அந்த அமுதை உண்டப் பின் மீண்டும் கிளம்பினார்கள்.  அவர்களுடன் சேர்ந்து ஆத்மனாதனான சிவபெருமானும் மகிழ்வுடன் அவர்களுடன் அமர்ந்து கொண்டு ‘அமுது பிரமாதம், அமுது பிரமாதம்’ எனக் கூறியபடி அவர்கள் கொடுத்ததை உண்டார்.
மன்னன் முன் அவர்கள் சென்றதும், மன்னனுக்கு ஆத்மனாதனைப் பார்த்த மட்டிலேயே அவர் மீது இனம் தெரியாத  ஒரு மரியாதை தோன்றியது. அவருக்கு ஒரு ஆசனம் தந்து அமரச் செய்தான்.

வழக்கு துவங்கியது. வேளாளர்கள் தம் பக்க வாதங்களை எடுத்துரைத்ததும் மன்னன் ‘அந்த பூமி அனைத்துமே உங்களுடையது என்பதற்கு ஒரு தகுந்த ஆதாரத்தைக் கொடுங்கள்’ எனக் கூற வேளாளர்கள், ‘ மன்னா, எங்களுக்குச் சொந்தமான அந்த இடத்தில் எத்தனை தோண்டினாலும் தண்ணீர் வராது’ எனக் கூறி வாதத்தை முடித்தார்கள். அவர்கள்  முன்னரே அந்த நிலத்தில் கிணறு வெட்ட பல முறை  முயன்றும்  தோல்வியை அடைந்து இருந்ததினால், அங்கு நீர் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்.  அதை உறுதி செய்து கொண்டுதான் வந்திருந்தார்கள்.

அடுத்து அந்தணர் தரப்பில் வாதம் புரிந்த ஆத்மநாதன் தனது வாதங்களை எடுத்து வைத்தப்  பின், ‘மன்னா, எங்கள் நிலத்தில் மண் வெட்டியைக்  கொண்டு எந்த இடத்தை தோண்டினாலும், ஒரு சில அடியிலேயே நீர் பெருகி வரும்’ என்றார்.

மன்னன் இரு தரப்பினரையும் அழைத்துக் கொண்டு அந்த நிலம் இருந்த இடத்துக்கு தானே நேரில் சென்றான். அந்தணர்களுக்கும் அங்கு தண்ணீரே கிடையாது என்பது நன்கு தெரியும். ‘வேண்டாமல் இந்த அந்தணரை நம்பி வந்துவிட்டோமோ. மண்வெட்டியால் தோண்டி தண்ணீர் வரவில்லை என்றால் உண்மையான நிலம் கையை விட்டுப் போய் விடுமே’ என அஞ்சினார்கள். ஆனால் வேறு வழி கிடையாது.  வந்தாகி விட்டது. ஆத்மனாதனை மனதில் திட்டிக் கொண்டே நிலத்துக்கு சென்றார்கள்.
மன்னன் ஒரு மண் வெட்டியை  எடுத்து வரச் சொல்லி வேளாளர்களிடம் கொடுத்து எங்காவது ஒரு இடத்தில் வெட்டுமாறு கூறினார். அவர்களும் மேடாக இருந்த ஒரு பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்று மண்வெட்டியால் தோண்டத் துவங்கினார்கள். இரண்டு அடிதான் தோண்டி இருப்பார்கள், தண்ணீர் குபீரென கொப்பளித்துக் கொண்டு வெளியில் வீசி அடித்தது . இங்கல்ல, வேறு இடத்தில் பார்போம் என வேளாளர்கள் எங்கு சென்று தோண்டினாலும், அத்தனை இடத்திலும் நீர் வெள்ளமாய் வந்தது. தாம் கிணறு வெட்ட பல நூறு அடிகள் தோண்டியும் வராத தண்ணீர் இங்கு இப்போது எங்கு வந்துள்ளது என வேளாளர்கள் அதிர்ந்து போனார்கள்,  அந்தணர்கள் வியந்து நின்றார்கள் .  மன்னன் அந்த நிலம் அந்தணர்களின் நிலமே என ஊர்ஜிதப் படுத்தி அவர்காளுக்கு சாதகமாக வழக்கை முடித்தான். ஆனால் அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது. இத்தனை நாட்களாக நாம் பலவாறு சோதனை செய்து பார்த்தும் வராத தண்ணீர் இன்று எப்படி அனைத்தையும் பொய்யாக்கி விட்டதே என சந்தேகம் கொண்டு ஆத்மனாதரைப் பார்த்து ‘ஐயா நீங்கள் யார், இங்கு எப்படி வந்தீர்கள்? இந்த இடத்தில் நீர் இருக்கும் என்று எப்படி உத்திரவாதம் செய்தீர்கள்?. தயவு செய்து உண்மையைக் கூறுங்கள் ‘ என்று கேட்க வீர்சேகரப் பெருமான் அனைவருக்கும் அங்கேயே தரிசனம் தந்தார். அனைவரும் அப்படியே அவரை விழுந்து வணங்கினார்கள். தேவர்கள் விண்ணில் இருந்து பூமாரிப் பொழிந்தார்கள். அது முதல் அந்த இடம் ஆவுடையார் கோவில், திருபெரும்துறை என்ற  பெயரைக் கொண்டது.

வீரசேகரப் பெருமானின் பெருமை

வீர சேகரப் பெருமானை காலையில் வந்து வணங்கினால் ஒரு பிறப்பில் செய்த ஊழ்வினைகள் அகலும், மதியம் வந்து வணங்கினால் பத்துப் பிறவிகளின் வினை அகலும், மாலையில் வணங்கினால் நூறு பிறவிகளில் பெற்ற தீவினை அகலும், நாடு இரவில் வந்து வணங்கினால் ஆயிரம் பிறவித் தீமைகள் அகலும் என்றே கூறுவார்கள். வீர சேகரப் பெருமானுக்கு மலர் சாத்தினால்  இந்திரப் பதவியை அடைவார்கள். பூஜைக்கான பொருளைத் தந்தால் இந்திர லோகம் செல்வார்கள். அந்த ஆலயத்துக்கு திருப்பணியை செய்பவர்கள்  கயிலைக்கே செல்வார்கள். இந்த ஆலயத்தில் வீர சேகரப் பெருமானையும்,  உமையாம்பிகையையும் சென்று  வணங்கித் துதித்தால் எதுதான் கிடைக்காது, எதைத்தான் பெற முடியாது? அவர் பெருமையைக் கூற மேலும் எந்த வார்த்தைகளும் இல்லை, எழுத்துக்களும் இல்லை. ஊமை, திக்குவாய் போன்ற குறைபாடுகளுடன் உள்ளவர்கள் இங்கு வந்து வீர சேகரருக்கு மணி கட்டி வழிபட்டு மன ஆறுதல் பெறுகின்றனர்.

உமையாம்பிகையின்  பெருமை

நாம் வீரசேகரப் பெருமானைக் குறித்தே கூறிக் கொண்டு இருந்தால் உமையாம்பிகை  பற்றியும் கூறாமல் இருக்க முடியுமா? அவள் என்ன சாதாரணமானவளா? ஐயனின் ஒரு பாகம் அல்லவா அந்த  தேவியானவள். அங்குள்ள உமாம்பிகை கருணைக் கொண்டவள். உமையாளை ஒரு தரம் வலம் செய்து வந்தவர்களை தேவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவளை இந்திரன் வலம் செய்வார். திருமால் வலம் செய்வார். அத்தனை மகிமை பெற்றது அவளுடைய சன்னிதானம்.
குறை நோய், காச நோய், வெண்குஷ்டம்,  மேக நோய், கண் நோய், பக்கவாதம் போன்ற பெரும் வியாதிகளும் கூட அவளை வலம் வந்தால் நொடிப் பொழுதில் நீங்கும். பிரும்ம ராக்ஷஷன். பேய், பிசாசு என அனைவரும் அவளது பக்தர்களிடம் இருந்து விலகி ஓடுவார்கள்.

அங்குள்ள உமையவளை அன்புடன் தொழுதால் அனைத்து நன்மையையும் அழைக்காமலே வந்து சேரும். செல்வம் கிடைக்கும். மகட்பேறு கிடைக்கும்; கணவன், மனைவி, மக்கள் என அனைவருக்கும் அனைத்தும் அமையும்.

பூவுலகிலே உள்ள காசியை விட  மேன்மையானது வீர வன ஆலயம் . இங்கு வந்து வணங்கிச் செல்பவர்களின் வாழ்கை இறுதியில் சிவலோகப் பிராப்தி அடைவது நிச்சயம். பெண்கள் இங்கு வந்து உமையாளுக்கு தாலிப்பொட்டு சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் என்பவர் ஒருமுறை குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கிய மாணிக்கவாசகர் இங்குள்ள சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல் புழுங்கல் அரிசி சாதமே இந்த ஆலயத்தில் மூலவருக்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

 

வீர வன புராணம் முற்றியது