II
- சிவபெருமான்- பார்வதி
- பிரும்மா- சரஸ்வதி
- விஷ்ணு- மகாலஷ்மி
- வினாயகர்
அனைத்து கடவுட்களும் அவரவர்களுடைய இயற்கை உருவத்தினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், வணங்கப்படுகிறார்கள். இயற்கை உருவம் என்றால் அதை இப்படியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும். சிவன் என்றால் ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டுமே அவரைக் காண்பார்கள். ஆனால் அவருக்கு பல ரூபங்களும் அவதாரங்களும் உண்டு. துணை அவதாரங்களும் துணை கடவுட்களுமாக அவருடைய உடலில் இருந்து பலர் தோன்றி உள்ளனர். உதாரணமாக ருத்திரன், பைரவர், சிவலிங்கம், நடராஜர் போன்ற பல உருவங்கள் சிவபெருமானுக்கு உண்டு என்றாலும் சிவன் என்றால் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட மூலத் தோற்றம் அவருக்கு உண்டு.
அது போலவே விஷ்ணுவிற்கும் நரசிம்மர், கிருஷ்ணர், ராமர், தசாவதாரம் எனப் பல்வேறு அவதார ரூபங்கள் மற்றும் அவதாரங்கள் உண்டு என்றாலும் அவருக்கும் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு. இப்படியாக ஒவ்வொரு கடவுளுக்கும் அது ஆண் கடவுள் என்றாலும் சரி, பெண்ணினமாக இருந்தாலும் சரி பல்வேறு ரூபங்கள் மற்றும் உருவங்கள் உண்டு என்றாலும், அந்த உருவங்களின் மூலம் அவர்கள் பல்வேறு விதமாக ஆராதிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்தான் அவர்களை அடையாளம் காண்பார்கள்.
பக்தி மற்றும் பூஜை என்பவை வேறுபட்டவை. கடவுளிடம் பக்தி செலுத்துபவன் பூஜைகளை செய்பவனாகவே இருக்க வேண்டும் என்பதல்ல தத்துவம். பக்தியை வெளிக் காட்டாமல் வேஷம் போடாமல் உள்ளுக்குள்ளே வைத்திருப்பது என்பது தன் நிலை உணர்தல் எனும் உயரிய தன்மை ஆகும். இப்படிப்பட்டவர்களே அவர்களுக்கு உள்ளேயே குடி இருக்கும் கடவுளைக் காண முடியும். நாம் அனைவருமே பூர்வ ஜென்ம வினைகளினால் மானிடப் பிறவி எடுத்து வந்துள்ளோம். அதில் பல கர்மாக்கள் அடங்கி இருக்கும். அவற்றை எல்லாம் பக்தி எனும் சக்தியைக் கொண்டு அழித்து விட்டுச் செல்ல வேண்டும்.
அதற்கு முதல்படியாகத்தான் நாம் தினமும் மற்றக் கடவுட்களை வழிபடுவதற்கு முன்னால் ஒரு ஷணம் வினாயகரை வணங்கி விட்டே மற்ற பக்தியையும் துவக்க வேண்டும். இல்லை என்றால் காலரூபி எனப்படும் விக்னேஸ்வரன் – விக்னத்தை தருபவன் – நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான். வினாயகருக்கு முதல் கடவுள் என்ற நாமதேயம் சூட்டி அவருக்கு முதல் மரியாதையைத் தர வேண்டும் என்பதினால்தான் சிவபெருமானே, வினாயகரை தனது மகன் என்றும் கருதாமல் தான் எங்கு சென்றாலும் முதலில் வினாயகரை வணங்கி விட்டு செல்வார் என்பது புராணக் கதை. அப்படிப்பட்ட சிவபெருமானே வினாயகரை முதலில் வணங்கி விட்டே தனது காரியத்தை துவக்குவார் என்பதில் இருந்தே வினாயகரின் சக்தி புரியும். இந்த நிலை ஒற்றைப் பிள்ளையாருக்கே என்றால் ரெட்டைப் பிள்ளையாரைப் பற்றி எப்படிக் கூறுவது என்று எண்ணத் தோன்றும் ?
உண்மையைக் கூறினால் ஓற்றையோ, இரட்டையோ எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும் அவர் அருள் புரிவார் என்றாலும் ஒரு சில நேரங்களில், ஒரு சில காரியங்களுக்காக ரெட்டை பிள்ளையாரை வணங்கித் துதிப்பது மிக்க நல்ல பலனைத் தரும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் இரட்டை வினாயகர் எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில ஆலயங்களில் மட்டுமே இருக்கிறார்கள். இரட்டைப் பிள்ளையாரை எப்படி வழிபடுவது ? அதற்கு என்ன முறை ??
இரெட்டை பிள்ளையாரை நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும், சந்தனக் காப்புப் போட்டு பூஜை செய்வதின் மூலம் தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மணப்பேறு, மகப்பேறு கிட்ட, பித்ரு சாபங்கள் தீர, நோய்கள் அகல இரெட்டை பிள்ளையாரை பைரவருடன் சேர்த்து வணங்குவார்கள். இரெட்டை பிள்ளையார் தோஷங்களைக் களைபவர் என்பதினால் குறிப்பாக செய்வாய் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை சதுர்த்தியில் அருகம் புல் மாலைப் போட்டு பூஜை செய்தும், சர்ப தோஷம் உள்ளவர்கள் செய்வாய்க் கிழமையில் நெய் விளக்கு ஏற்றியும் சந்திர தோஷம் உள்ளவர்கள் கொழுக்கட்டைப் போட்டு, வெல்ல சாதமும் நெய்வித்தியம் செய்து பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆமாம் இரட்டைப் பிள்ளையார் இல்லாத ஊர்களில் அவரை எப்படி வழிபடுவது? அதற்கு ஏதேனும் உபாயம் உள்ளதா? இவை அடுத்தடுத்தக் கேள்விகள்!!