அத்தியாயம் -24
இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும் கற்றறிந்த பெரும் பண்டிதர் ஆவார். அவர் நரசிம்ம உபாசகர். அவர் கனப்பூரில் இருந்த ஸ்வாமிகள் புகழைக் கேள்விப்பட்டு அவர் மீது பொறாமைக் கொண்டார். தான் நரசிம்ம உபாசகராக இருந்தும் தன்னை விட அருகில் உள்ள ஸ்ரீ நருசிம்ம ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அதிக பெருமை பெறுகிறார். அவர் சித்து வேலைகளை செய்து தான் தெய்வம் என ஊர் மக்களை நம்பச் செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார் என்று நம்பினார். அவர் அப்படியாக கூறிக் கொண்டு அலைவதைக் கேள்விப்பட்ட ஸ்ரீ நருசிம்ம ஸ்ரஸ்வதி ஸ்வாமிகள் அவருடைய தவறான எண்ணத்தை அழிக்க முடிவு செய்தார். ஆகவே கிராம அதிகாரியிடம் தான் குமாசிக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி விட்டு மறு நாள் காலை அந்த ஊருக்கு கிளம்பிச் சென்றார். அவரை பல்லக்கில் அமர வைத்து அதை தூக்கிக் கொண்டு செல்ல ஆட்களையும் அந்த அதிகாரி அனுப்பி வைத்தார்.
அதே நேரத்தில் திருவிக்ரமபாரதி எப்போதும் போலவே விடியற்காலை எழுந்து பின் நியமங்களை செய்யத் துவங்கினார். பூஜைகளை செய்யத் துவங்கியவரால் அதில் கவனத்தை செலுத்த முடியவில்லை. சரளமாக ஓதி வந்த மந்திரங்கள் தடைபட்டன. தனக்கு என்ன ஆயிற்று என்று வியந்து போனவர் சற்று தூரத்தில் இருந்து பெரிய சப்தம் வந்து கொண்டு இருந்ததைக் கேட்டு, தன்னுடைய பூஜை அதனால்தான் தடைப்படுகிறதோ என்று நினைத்துக் கொண்டு வாயில் கதவை சாத்தப் போனார். அப்போது சாலையில் பல்லக்கில் யாரையோ அழைத்து வருவதைக் கண்டவர் யார் செல்கிறார் எனப் பார்க்க வெளியில் வந்தார். அந்தப் பல்லக்கை தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அனைவரும் நரசிம்மரைப் போகல காட்சி அளித்தார்கள் என்பது மட்டும் அல்ல பல்லக்கில் அமர்ந்திருந்தவரும் நரசிம்மரைப் போலவே காணப்பட்டார்.
மனதில் ஒருவித பயமும் கலக்கமும் தோன்றிட தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஓடிச் சென்று அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி பல்லக்கில் அமர்ந்து இருந்த ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கால்களில் விழுந்து அவரிடம் மன்னிப்பைக் கேட்டார். ‘ஸ்வாமி நீங்கள் மாபெரும் மகாத்மா என்பது தெரியாமல் உங்களைப் பற்றி பல விதமாக குறைக் கூறி வந்து விட்டேன். நீங்களே கடவுளின் அவதாரம் என்பதை இப்போது உணர்கிறேன். என்னை மன்னித்து என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டார்.
அதைக் கேட்ட ஸ்வாமிகள் கூறினார் ‘திருவிக்ரமபாரதி, இப்போதாவது தெரிகிறதா அறியாமை என்ன என்பது? நீ என்னை தொடர்ந்து கேலி செய்ததினால்தான் நானே உன்னைக் காண நேரில் கிளம்பி வந்தேன். நான் யார் என்பதை இப்போது பார்’ என்று கூறிவிட்டு தனது உண்மையான அவதாரத்தைக் காட்ட மீண்டும் அவர் காலடியில் அப்படியே விழுந்து கதறியபடி தன் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு தன்னை மன்னித்து அருள் புரியுமாறு திருவிக்ரமபாரதி கேட்டார். அவர் மேலும் கூறினார் ‘ ஸ்வாமிகளே, மன அமைதி இழந்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா எப்படி தன்னுடைய விஸ்வரூப உருவைக் காட்டி கீதையை போதித்தாரோ அது போலவேதான் எனக்கும் உங்களது நிஜ ரூபத்தைக் காட்டிய நீங்கள்தான் அஞ்சாமையில் உழன்று கொண்டு இருக்கும் எனக்கும் அருள் புரிந்து மன விடுதலை தர வேண்டும்’ என வேண்டினார். அதைக் கேட்ட கருணைக் கடலான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவருக்கு ‘நீ என்னுடைய பூரண அருளைப் பெற்றுக் கொண்டாய். இனி உனக்கு மறு பிறப்பு இல்லாது நீ மோட்ஷத்தை அடைவாய்’ என்று அருள் புரிந்து விட்டு அங்கிருந்து மீண்டும் கிளம்பி கனக்பூருக்கு திரும்பி வந்து சேர்ந்தார்”.
இப்படியாக கதையைக் கூறிய சித்த முனிவர் சற்று நேரம் அமைதியாக இருந்தப் பின்னர் மீண்டும் அடுத்தக் கதையைக் கூறலானார் (இத்துடன் அத்தியாயம் -24 முடிவடைந்தது) .