அத்தியாயம் -35

சித்த முனிவர் இன்னும் கூறினார் ”அதன்  பிறகு சாவித்திரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் கேட்டாள் ‘ஸ்வாமி தயவு செய்து எங்களுடைய வரும் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுவீர்களா? தயவு செய்து எங்களுடைய நல் வாழ்விற்கு ஏதேனும் மந்திரோபதேசம் செய்வீர்களா?’.

அதைக் கேட்ட குரு கூறினார் ‘உனக்கு எந்த உபதேசமும் மந்திரமும் தேவை இல்லை. ஒரு பெண்ணுக்கு மந்திரோபதேசம் செய்தால் தவறு நிகழ வாய்ப்பு உள்ளது என்பதற்கு உதாரணமாக ஒரு கதையைக் கூறுகிறேன் கேள்’ எனக் கூறி விட்டு அந்தக் கதையைக்  கூறலானார்.

‘பல காலத்துக்கு முன்னால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவ்வப்போது யுத்தம் மூண்டு விடும். அந்த யுத்தம் நடக்கும் போதெல்லாம் இராக்ஷசர்களுக்கு பக்கபலமாக இருந்தவாறு சஞ்சீவி மந்திரம் ஓதி யுத்தத்தில் உயிர் இழக்கும் ராக்ஷசர்களை சுக்ராச்சாரியார் பிழைக்க வைத்துக் கொண்டே இருந்ததினால் தேவர்களால் ராக்ஷசர்களை எளிதில் அழிக்க முடியவில்லை. இப்படியாக சுக்ராச்சாரியார் செய்து வந்த காரியத்தினால் தேவர்களால் இராட்சசர்களின் படை பலம் குறைவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் தேவர்களுக்கோ அப்படிப்பட்ட சக்தி மிக்க மந்திரத்தை பிரயோகித்து சுக்ராச்சாரியாரைப் போல  உதவ  எவரும் கிடைக்கவில்லை  என்பதினால் யுத்தத்தில் மரணம் அடைந்த தேவர்களின் படை எண்ணிக்கை அதிகரித்துக்  கொண்டே போயிற்று. அதனால் கவலையுற்ற தேவேந்திரானான  இந்திரன் பிரும்மாவிடம் சென்று அதற்கு ஒரு வழி கேட்க பிரும்மாவோ சிவபெருமானிடம் சென்று உதவி  கேட்டார்.

அதனால் கோபமுற்ற சிவபெருமான் ராக்ஷசர்களுக்கு உதவிக் கொண்டு இருந்த சுக்ராச்சாரியாரை அழைத்து வர நந்தீஸ்வரரை அனுப்பினார். அப்போது  தியானத்தில் அமர்ந்து இருந்த சுக்ராச்சாரியாரை நந்தீஸ்வரர் அப்படியே தூக்கிக் கொண்டு வந்து விட சிவபெருமான் அவரை முழுங்கி விட்டார்.  அவர் வயிற்றுக்குள் சென்ற முனிவர் தனக்கு இருந்த விஷேச மந்திர சக்தியை உபயோகித்து சிவபெருமானின் விந்து மூலம் வெளியே வந்து மீண்டும் ராக்ஷசர்களுக்கு யுத்தங்களில் உதவலானார்.

அதனால் என்ன செய்வது என புரியாமல் குழம்பிப் போன தேவேந்திரன் பிரஹஸ்பதியிடம் சென்றார். அவரிடம் சென்று கேட்டார்  ‘தேவனே, நீர்தானே அனைவருக்கும் குருவானவர். உங்களிடம் இருந்து கற்ற மந்திரத்தைக் கொண்டு சுக்ராச்சார்யார்  உயிரிழக்கும் ராக்ஷ்சர்களை பிழைக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் உங்களால் தேவர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை?’

அதைக் கேட்ட பிரஹஸ்பதி கூறினார் ‘நீங்கள் கூறுவதும் சரிதான். நான் என்னுடைய மகன் கச்சாவை அவரிடம் அனுப்பி அவரிடம் இருந்து அந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டு வரச் சொல்கிறேன்.  மூன்று முறை தொடர்ந்து அந்த மந்திரத்தை ஒருவரே கேட்டால் அதன் சக்தி அழிந்து விடும். அவன் சுக்ரச்சாரியாரிடம் மாணவனாகச் சென்று மந்திரத்தைக் கற்று வந்து அதை அழிப்பான்’ என்றார்.

ஆகவே பிரஹஸ்பதியின் மகனான கச்சா சுக்ராச்சாரியாரிடம் ஒரு பிராமண இளைஞன் போலச் சென்று தன்னை அவருடைய மாணவராக ஏற்றுக் கொண்டு மந்திர போதனைகளைக் கற்றுத் தர வேண்டும்’ என வேண்டினார். அதைக் கேட்ட சுக்ராச்சாரியாரும் அவனிடம் ‘மகனே நீ யார், உன் தந்தை யார், என்னிடம் போகும்படி யார் உன்னை இங்கு அனுப்பினார்கள்?’ என்று கேட்க கச்சா கூறினார்  ‘மகரிஷியே, உங்களிடம் சென்று கல்வி பயிலுமாறு என்னை  யார்  அனுப்புவார்கள்? உங்களுடைய புகழோ ஜகம் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதைக் கேள்விப்பட்ட நான்தான்  தானாகவே உங்களிடம் வந்துள்ளேன். நான் ஒரு எளிய பிராமணன்’ என்று கூறினார்.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்கள் அருகில் சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி நின்று கொண்டு இருந்தாள் . கச்சாவின் அழகைக் கண்டவள் அவர் யார் என்று எண்ணிக் கூடப் பார்க்காமல் அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவர் மீது காதல் கொண்டு விட்டாள்.  ஆகவே அவள் தனது தந்தையிடம் ‘அப்பா, இவரைக் கண்டாலே ஏழை பிராமணர் என்பது நன்றாகவே தெரிகிறது.  ஆகவே இவரை நீங்கள் ஏன் உங்கள் மாணவராக ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்று கேட்டாள்.

தன் மகள் மீது அளவற்ற அன்பை வைத்து இருந்த சுக்ராச்சாரியாரும் கச்சாவை தயங்காமல் தனது மாணவராக ஏற்றுக் கொண்டு விட்டார். அதைக் கண்ட இராட்ஷசர்கள் சிஷ்யனாக வந்துள்ளது தேவர்களின் ஒற்றனாக  இருக்கலாம் என சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எழுப்பிய சந்தேகத்தை சுக்ராச்சாரியார் ஏற்கவில்லை. தன்னிடம் மாணவனாக வந்துள்ள ஒரு பிராமணர் அப்படி செய்ய மாட்டார் எனக் கூறி விட்டார். பிரஹஸ்பதியின் சக்தியினால் சுக்ராச்சாரியாரினால் ஞானக் கண்ணைக் கொண்டு வந்துள்ளவரின் உண்மையான சொரூபத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்த சக்தியை தம் பிள்ளையின் மீது பயன்படுத்த முடியாமல் பிரஹஸ்பதி தடுப்பு மந்திரம் போட்டு இருந்தார்.   ஆகவே சுக்ராச்சாரியாரை  தம் கருத்துக்கு உடன்படுத்த முடியாமல் போன ராக்ஷசர்கள் சுக்ராச்சாரியாருக்கு தெரியாமல் வனத்துக்கு சென்று இருந்த கச்சாவை கொன்று விட்டார்கள்.  மாலை நெடு நேரமாகியும் வனத்துக்கு சென்ற கச்சா திரும்பி வராததைக் கண்ட தேவயானி கவலைக் கொண்டு   தன் தந்தையிடம் அது பற்றிக் கூற சுக்கிராச்சாரியார் நடந்தவற்றை தன் ஞானக் கண்களால் பார்த்து அறிந்து கொண்டார்.  சஞ்சீவி மந்திரம் ஓதி அவரை பிழைக்க வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இரண்டாம் முறையும் ராக்ஷசர்கள் கச்சாவைக் கொன்று அவரை வெட்டி நான்கு திசைகளிலும் அவரது உடல்களை தனித்தனியே கொண்டு போய் போட்டு விட்டார்கள். இந்த முறையும் நடந்தவற்றை தன் ஞானக் கண்களால் பார்த்து அறிந்து கொண்டுவிட்ட சுக்ராச்சாரியார் மீண்டும் கச்சாவை பிழைக்க வைத்தார். ஆகவே ராக்ஷசர்கள் மூன்றாம் முறையாக தக்க ஏற்பாடு செய்து கச்சாவைக் கொன்று விட்டு அவரை எரித்தும் விட்டார்கள். அது மட்டும் அல்ல அவனது சாம்பலை உணவுடன் கலந்து சுக்ராச்சாரியாருக்கு தெரியாமல் அவருக்கே கொடுத்து விட்டார்கள்.  மாலை நெடு நேரமாகியும் வனத்துக்கு சென்ற கச்சா திரும்பி வராததைக் கண்ட தேவயானி கவலைக் கொண்டு   தன் தந்தையிடம் அது பற்றிக் கூற சுக்கிராச்சாரியார் நடந்தவற்றை தன் ஞானக் கண்களால் அறிந்து கொண்டார். கச்சா தம் வயிற்றில் உள்ளார் என்பதை புரிந்து கொண்டார். ஆகவே அந்த சாம்பல் ஜீரணம் ஆகாமல் அப்படியே வயிற்றில் தங்கி இருக்குமாறு மந்திரம் ஓதிக் கொண்டார். ஆனால் அவரை எப்படி பிழைக்க வைப்பது? சஞ்சீவி மந்திரம் ஓதி அவரை உயிர் பிழைக்க வைத்தால் அவர் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியில் வந்துவிடுவார். அப்போது தான் உயிர் இழக்க  நேரிடும். அதன் பின் தன்னை யார் பிழைக்க வைக்க முடியும் என கவலைக் கொண்டார்.

அவருடைய மகளோ கச்சா உயிர் பிழைத்து எழ வேண்டும் என  அடம் பிடித்தாள். ஆகவே என்ன செய்யலாம் என யோசனை செய்தார். அவளிடம் தன்  வயிற்றுக்குள் உள்ள கச்சாவை உயிர் கொடுத்து எழுப்பி விட்டால் தான் மரணம் அடைந்து விடுவேன் என்பதை எடுத்துக் கூற அவளோ தனக்கு சஞ்சீவி மந்திரத்தைக் கற்றுக் கொடுக்குமாறும், அவர் இறந்து விட்டால் தான் அதை ஓதி அவருக்கு உயிர் கொடுத்து எழுப்புவதாகவும் கூறினாள். ஆகவே அவரும் வேறு வழி  இன்றி அந்த மத்திரத்தை அவளுக்குக் கற்றுக் கொடுத்தார். அதை வயிற்ருக்குள் இருந்த கச்சாவின் ஆத்மா கேட்டுக் கொண்டே இருந்தது. அடுத்து தன் வயிற்றில் இருந்த கச்சாவை உயிர் பிழைக்க தாமே அந்த மந்திரத்தை ஓதிக் கொண்டதும் அதையும் கச்சாவின் ஆத்மா கேட்டுக் கொண்டே இருந்தது. சுக்ராச்சாரியாரின் வயிற்றுக்குள்  இருந்த கச்சா அவர் வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியில் வர சுக்ராச்சாரியார் மரணம் அடைந்தார். ஆக  சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்த கச்சா அவர் வயிற்றில் இருந்து வெளியே வரும் முன் இரண்டு முறை அந்த மந்திரத்தைக் கேட்க நேரிட்டது. அடுத்து தனது தந்தை உயிர் பிழைக்க தேவயானி மந்திரத்தை ஓத சுக்ராச்சாரியாரும் உயிர் பிழைத்து எழுந்தபோது மூன்றாம் முறையும் கச்சாவினால் அந்த மந்திரத்தைக் கேட்க முடிந்தது. ஆகவே மூன்றுமுறை தொடர்ந்து அந்த மந்திரத்தை கச்சா கேட்டதும், அந்த மந்திர சக்தி சுக்ராச்சாரியாரிடம் இருந்து அகன்றது.அதன் பின் அவரால் அதை ஓதி இறந்து போன ராக்ஷசர்களை  பிழைக்க வைக்க முடியவில்லை.

அதன் பின் சஞ்சீவி மந்திரத்தை முறைப்படி போதனையாக பெற்ற கச்சா தனது வீட்டிற்கு  திரும்பினார். அவரை போக விடாமல் தன்னை மணந்து கொண்டு செல்ல வேண்டும் என தேவயானி தடுத்தாள். ஆனால் அதற்கு கச்சா அவளிடம் கூறினார் ‘சகோதரி உன்னுடைய  தந்தை ராக்ஷசர்களுக்கு துணை இருந்து அவர்களைக் காத்தார். என்னுடைய தந்தையோ தேவர்களுக்கு துணையாக இருந்தார். ஆகவே அவர்கள் இருவருமே சகோதரர்கள் ஆவார்கள். இதனால் சகோதரனான என்னால் உன்னை மணக்க முடியாது. இதை புரிந்து கொண்டு என்னை போக விடு. தயவு செய்து என்னை தடுக்காதே’ என்று கூறி விட்டு கிளம்பியபோது, அவர் மீது அடங்காக் காதல் கொண்டு இருந்த தேவயானி அவருக்கு சாபம் கொடுத்தாள். ‘எப்போது என்னை உதாசீனப்படுத்திவிட்டு என்னை மணக்காமல் செல்கிறாயோ,  என்னால் நீ கற்ற சஞ்சீவி மந்திரம் உனக்கு எந்த பலனையும் தராது. அதை பயன்படுத்தி உன்னால் யாரையும் பிழைக்க வைக்க முடியாது’. அந்த சாபத்தைப் பெற்றுக் கொண்ட கச்சாவும் தன் பங்கிற்கு அவளுக்கு ஒரு சாபம் கொடுத்தார் ‘பெண்ணே, ஒரு பிராமணன் என்னை நீ சபித்து  அவமானப்படுத்தினாய். ஆகவே நீ பிராமணன் அல்லாதவனையே  மணக்க நேரிடும்’.

இப்படியாக கூறி விட்டு கச்சா தேவலோகம் திரும்பி விட தேவர்கள் மகிழ்ந்து அவரை அன்புடன் வரவேற்றார்கள். இனி தம்மை ராக்ஷசர்களினால் வெல்ல  முடியாது என்ற தைரியத்தை அடைந்தார்கள். தான் பெற்ற சாபத்தினால் சஞ்சீவி மந்திரம் இனி  தனக்கு உதவாது என்பதினால் கச்சாவும் அதை தேவர்களுக்கு போதனை செய்து தனக்குப் பதிலாக அவர்களை பலமடையச் செய்தார்.”

இந்தக் கதையை குருதேவர் கூறியதைக் கேட்ட சாவித்திரி அவரிடம் தன்னுடைய கணவர் நல் வாழ்வைப் பெற  தாம் செய்ய வேண்டிய ஏதாவது விரதத்தையாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்க குருதேவர்  ஒரு பெண்ணுக்கு கணவருக்கு பணிவிடை செய்வதைத் தவிர வேறு சிறப்பான விரதம் இருக்க முடியாது  என்பதினால், சூதக முனிவர் சப்த ரிஷிகளுக்கு  கூறிய ‘சௌபாக்கிய’ எனும் விரதத்தை அவர்களுக்குக் கூறுவதாக சொல்லி விட்டு அந்த விரதத்துடன் பின்னிய கதையும் கூறலானார். அந்த விரதம் சிவபெருமானை வேண்டிக் கொண்டு திங்கள் கிழமைகளில் செய்வதாகும். அந்த விரதத்தை சிவராத்திரி விரதம்  போல பட்டினி கிடந்தது இரவு முழுவதும் தூங்காமல் இருந்தபடி சிவனை வழிபடுவதாகும். ஸ்வாமிகள் கூறலானார் :

”ஒரு காலத்தில் சித்திரவர்மா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் மிகவும் நேர்மையானவன், கண்டிப்பானவன். அவனுக்கு அனைத்து செல்வங்களும் இருந்தும் மழலை செல்வம் மட்டும் இல்லாமல் இருந்தார். ஆகவே அவர் ராஜகுருக்கலின் ஆலோசனைப்படி சிவபெருமானை துதித்து விரதம் இருக்க அவனுக்கு அழகான, அறிவுள்ள மகாலஷ்மியைப் போன்ற ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. அதற்கு சிமந்தினி எனப் பெயரிட்டார்கள். அவள் ஜாதகத்தைக் கணித்த பண்டிதர்கள் கூறினார்கள் ‘உங்களுடைய மகள் அனைத்து புகழும் பெருமையையும் கொண்டவளாக கல்வி அறிவு மிக்கவளாக இருப்பாள். அனைவரையும் மதித்து நற்குணங்களைக் கொண்டவளாக இருப்பாள். ஆனால் அவளுக்கு ஒரு கண்டம் உள்ளது. அதன்படி அவள் தனது பதிலாவது வயதில் விதவை ஆகி விடுவாள்’.

பதபதைத்து ஆத்திரம் கொண்ட மன்னன் அவருக்கு பரிசுகள் எதுவுமே தராமல் அவரை திருப்பி அனுப்பி விட்டார். மன்னன் தனது மகளுடைய எதிர்காலத்தைக் குறித்துக் கவலை அடைந்தார்.  ஆனால் அவருடைய மகளான சிமந்தினியோ  தனது வரும் காலத்தைக் குறித்து கொஞ்சம் கூடக் கவலைப்படவில்லை. நடப்பது அனைத்துமே ஈசனின் செயலே என அனைத்தையும் அமைதியாகவே ஏற்றுக் கொண்டு எந்த விதமான சலனத்தையும் காட்டாமல் வாழ்ந்து வந்தாள்.

அந்த நிலையில் ஒருமுறை யாக்யவல்யக முனிவருடைய மனைவியான மைத்ரேயி என்பவள்  மன்னனின் அழைப்பை ஏற்று அரண்மனைக்கு வந்திருந்தாள். அவள் நதியில் குளித்து விட்டு வந்தபோது அவளை சந்தித்த சிமந்தினி ‘பதிவிரதைகளாக வாழ்ந்து வந்த சௌபாக்கியவதிகள் எப்படி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். தனக்கு ஆயுள் பதினான்கு வருடங்களே  என்று ஜோதிடர் கூறியதினால் தான் அதை மாற்ற என்ன செய்யலாம்’ என்று அவளிடம் ஆலோசனைக் கேட்டதும், மைத்ரேயி அவளுக்குக்  ‘பதிவிரதைகள் தவறாமல் சிவபெருமானை வேண்டிக் கொண்டு சோமவார விரதத்தை அனுஷ்டித்தால்தான் சுமங்கலிகளாக   வாழ முடிந்தது. அது போலவே எந்த ஒரு பெண்ணுமே தனக்கு உண்மையிலேயே வரவுள்ள கஷ்டத்தைத் தீர்க்க சோமவார விரதத்தை தூய்மையாக இருந்தபடி அனுஷ்டித்தால் அவர்கள் வேண்டியது கிடைக்கும். காலை முதல் இரவு வரை பட்டினி கிடந்து சிவபூஜை செய்து சிவனை ஆராதிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் இருக்காது. சிவன்-பார்வதியை வணங்கினால் எல்லா நற்பயன்களையும் அவர்கள் தருவார்கள்’ என்று கூறினாள். அதைக் கேட்ட சிமந்தினி தானும் சோமவார விரதம் அனுஷ்டிக்கத் துவங்கினாள். அவள் செய்து வந்த பூஜையிலும் விரதத்திலும் எந்த குறையும் வைக்காமல் அதை செய்து வந்தாள்.

சில காலம்  கடந்தது.  வயதுக்கு வந்துவிட்ட சிமந்தினிக்கு ஆசாரப்படி  திருமணம் செய்ய வேண்டிய அவசியம் வந்ததும் தமது ஆலோசகர்களுடன் அனைத்தையும் விவாதித்து ஆலோசனை செய்த மன்னன் நடப்பது நடக்கட்டும் என்று அவளுக்கு திருமணமும் செய்து வைத்தார். இந்திரசேனன் என்ற மன்னனின் மகனான சந்திராங்கவர்மா என்பவனுக்கு அவளை மணமுடித்தார்கள். சீமந்தினியின் கணவர் நற்குணங்களைக் கொண்டவர். அரசகுமாரன் என்றாலும் அகம்பாவம் இல்லாமல் அவருடைய குணத்திலும் எந்தவிதமான குறையையும் காண முடியாது எனும் அளவில் வாழ்ந்து வந்திருந்தார். திருமணம் முடிந்து சில வருடங்கள் அவர்கள் இனிமையான வாழ்கையை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஒருநாள் ஒரு பண்டிகையில் யமுனை நதியில் நண்பர்களுடன் படகில் பயணம் செய்து கொண்டு இருந்த சந்திராங்கவர்மா நதியின் சுழலில் சிக்கி படகு கவிழ்ந்து  நதியில் மூழ்கினார். அவருடைய நண்பர்கள் சிலர் மட்டும் எப்படியோ தப்பி வந்தார்கள். மற்ற சிலர்  சந்திராங்கவர்மாவுடன் நதியில் மூழ்கினார்கள். தப்பிய நண்பர்கள்  எங்கு தேடியும் சந்திராங்கவர்மாவின் உடல் கிடைக்கவில்லை என்பதினால் அரண்மனைக்குச் சென்று மன்னனிடம் அதைக் கூறினார்கள். அந்த செய்தியைக் கேள்விப்பட்ட மன்னன் பெரும் துயரத்தில் வீழ்ந்தார். ஆனாலும்  சிமந்தினியோ தன்னுடைய கணவர் மரணம் அடையவில்லை, அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார், நல்லபடி திரும்பி வருவார் என்று தாம்  நம்புவதாக கூறி நம்பிக்கையோடு சிவபெருமானை துதித்தபடி விரதத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தாள். ஆகவே இன்னும் சில நாட்கள் பொறுத்துப்  பார்த்தப் பின் என்ன செய்யலாம் என முடிவு செய்யலாம் என தீர்மானித்தவர்கள் சிமந்தினியை விதவையாகக் கருதாமல் சந்திராங்கவர்மா எப்போது கிடைப்பார் என்று அவரை அனைத்து இடங்களிலும் தேடியபடி காத்திருந்தார்கள்.

நதியில் சுழலில் அகப்பட்டு மூழ்கிய படகில் இருந்து நதிக்குள் விழுந்து முழுகிய சந்திராங்கவர்மா அதிருஷ்டவசமாக இறக்காமல் தப்பினார். அவர் படகு கவிழ்ந்த நேரத்தில் அந்த நதியில் அதே இடத்தில் விளையாடிக் கொண்டு இருந்த நாக கன்னிகைகள் அவர்களது அழகில் மயங்கி அவர்களைக் காப்பாற்றி பாதாளத்தில் இருந்த தம்  அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆயிரம் தலைகளைக் கொண்ட பாதாள மன்னனான தக்ஷகனிடம் அவர்களைக் கொண்டு காட்ட அவர் யார், எங்கிருந்து வந்தார் என்று அவர்  நாக கன்னிகைகளைக்  கேட்க அவர்கள் தமக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள்.

தம்முன் நின்றிருந்த  சந்திராங்கவர்மா மற்றும் அவரது நண்பர்களை அவர்கள் யார் என்று தக்ஷகன் கேட்க அவர்கள் தம் கதையைக் கூறினார்கள். அதற்கு தஷகன் ‘நீங்கள் எந்தக் கடவுளை வணங்குபவர்கள்’ என்று கேட்டதும் அவர்கள் தாம் சிவபெருமானை வணங்குபவர்கள் என்று கூற அதைக் கேட்ட நாகலோக மன்னன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். காரணம் அவனும் சிவபக்தனே. ஆகவே அவர்களை சிலகாலம் அங்கிருக்குமாரு கூறினார். அதன் பின் ஒரு நாள் தனது  படையினரை அழைத்து மறுநாள் காலை நல்லபடியாக அவர்களை அழைத்துச் சென்று நதிக்கரையில் விட்டு விட்டு வருமாறு ஒரு அற்புதமான குதிரையில் ஏற்றி அனுப்பினார். அதோடு, எப்போது வேண்டுமானாலும் அவர் தம்மை அழைத்தால் (அதற்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்) உடனே தன் படையுடன் வந்து அவருக்கு உதவுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

அதில் ஏறிக் கொண்டு தான் எந்த இடத்தில் மூழ்கினோனோ அதே இடத்தில் சென்ற சந்திராங்கவர்மா அதே வேளையில்  சீமன்தினி அந்த நதிக்கரையில் ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தில் மறைவாக இருந்தவண்ணம் சோம வார விரதத்தை செய்தபடி இருந்ததைக் கண்டார். தூரத்தில் இருந்தே அவளைப் பார்த்து விட்டு தனது முகத்தை மூடிக் கொண்டு அவள் அருகில் சென்றபோது அவளது பரிவாரங்கள் அவளை பார்க்க முடியாதபடி அவரை மறித்துக் கொண்டு நின்றபடி ‘நீங்கள் யார்? கந்தர்வ புருஷரா? இங்கே எப்படி வந்தீர்கள்?’ என்று வினவ சந்திராங்கவர்மாவும் அங்கு எதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டு அந்த இடத்தில் வந்து ஏன் விரதம் செய்கிறீர்கள் என்று கேட்க அவர்களும் அவர் முகத்தை மூடிக்கொண்டு உள்ளதினால் வந்துள்ளவர் யார் என்பதை தெரிந்து கொள்ளாமல் சிமந்தினியின் கதையைக் கூறி விட்டு அவளுடைய கணவர் நீரில் மூழ்கிய கதையையும் கூறினார்கள். ஆனால் அவளோ  இறந்தவரின் உடல் கிடைக்காதவரை அவர் இறந்து இருக்க முடியாது என நம்புவதினால் சிவபெருமானை வேண்டிக் கொண்டு அவர் நலமாக திரும்பி வருவதற்கு சோமவார விரதம் அனுஷ்டிக்கிறாள் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் தொடர்ந்து கூறுகையில் அவர்களின் நாட்டை அந்நிய நாட்டு மன்னன் அபகரித்துக் கொண்டு அந்த நாட்டின் மன்னனான இந்திரசேனனையும் அவர் மனைவியையும் சிறையில் வைத்துள்ளதால் இவள் மறைந்திருந்து வாழ்ந்து வருகிறாள் என்றும் கூறினார்கள்.

அதைக் கேட்ட சந்திராங்கவர்மா உடனே அந்த அந்நிய நாட்டு மன்னன்  சிறை வைத்துள்ள இந்திரசேனனையும் அவர் மனைவியையும் உடனே விடுதலை செய்யாவிடில்  அவர் நாட்டை நாசமாக்கி விடுவேன் என நாகலோக படை மூலம் செய்தி அனுப்ப அந்த நாட்டு மன்னனும் நாகலோகப் படையினரைக் கண்டு பயந்து ஓடினான். சிறையிலிருந்த இந்திரசேனனும் அவர் மனைவியையும் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்து மீண்டும் நாட்டின் அதிபர்கள் ஆனதும் சந்திராங்கவர்மா தான் யார் என்பதை பகிரங்கப்படுத்த அனைவரும் சொல்லொண்ணா மகிழ்ச்சி அடைந்தார்கள். அதன் பின் சந்திராங்கவர்மா நடந்த  அனைத்தையும் விவரமாக அனைவருக்கும் கூறிய பின் தன்னுடன் வந்திருந்த நாகர்களுக்கு நன்றி கூறி அவர்களை நல்ல முறையில் கௌரவித்து நாகலோகத்துக்கே திருப்பி அனுப்பினான். இப்படியாக சோம வார விரதம் இருந்த சிமந்தினி சிவபெருமானின் அருளைப் பெற்று இழந்த கணவனை மீண்டும் அடைந்து அதன் பின் பல காலம் கணவரோடு நலமாக வாழ்ந்து வந்தாள்” (இதனுடன் அத்தியாயம்-35 முடிவடைந்தது) .

……..தொடரும்