அத்தியாயம் -40
சித்த முனிவர் கூறினார் ”அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார். அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும் மனத் துயரம் அடைந்த நரஹரி ஸ்வாமிகளிடம் சென்று அவரை நமஸ்கரித்து விட்டு ‘மகாத்மா, நீங்கள் கடவுளின் அவதாரம். எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. திடீர் என வெண்குஷ்டம் வந்து என்னுடைய வாழ்க்கையையே சீர்குலைத்து விட்டது. நான் வேதங்களை நன்கு கற்று அறிந்தவன் என்றாலும் இந்த வியாதி உள்ளதினால் என்னை யாருமே எந்த சடங்குக்கும் அழைக்க விரும்புவது இல்லை. என்னை பார்த்தாலே முகத்தை சுளிக்கிறார்கள். விலகி ஓடுகிறார்கள். உணவுக்கே பஞ்சம் வந்து விட்டது. சரி பிட்ஷை எடுத்தாவது உண்ணலாம் என்றால் என் குரலைக் கேட்டாலே கதவை திறப்பது இல்லை. நான் செல்லாத புனித இடங்கள் இல்லை என்று கூட சொல்லலாம். பல விரதங்கள் இருந்து ஹோமங்களையும் செய்து இருக்கின்றேன். எனக்கு ஏற்பட்டு உள்ள இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்க்கும்போது நான் எதற்க்காக உயிருடன் வாழ வேண்டும் என்று மனம் வருந்துகிறது. நீங்கள்தான் ஸ்வாமி என் குறை நீங்க வழி கூற வேண்டும்’ எனக் கூறி அழுதார். அதே சமயத்தில் அந்தப் பக்கமாக சென்று கொண்டு இருந்த ஒருவன் கையில் அடுப்பு எரிக்க உலர்ந்த அத்தி மரக் குச்சிகளை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
அதைக் கண்ட ஸ்வாமிகள் நரஹரியிடம் அவனிடம் சென்று சிறிது அத்திக் குச்சிகளை வாங்கிக் கொண்டு வருமாறு கூறினார். நரஹரியும் அவற்றை வாங்கிக் கொண்டு வந்து ஸ்வாமிகள் முன் நின்றார். ஸ்வாமிகளும் அவற்றை எடுத்துப் போய் சங்கமேஸ்வரா நதிக் கரையில் எந்த இடத்திலாவது நட்டு விட்டு அதை பாதுகாத்து வருமாறும் அவை எப்போது துளிர் விடத் துவங்குமோ அப்போதே அவருடைய வியாதியும் குணமாகும் என்று கூற நரஹரி மிகுந்த நம்பிக்கையுடன் அவற்றை எடுத்துப் போய் ஸ்வாமிகள் கூறியது போல அந்தக் குச்சிகளை நதிக்கரையில் நட்டு வைத்தப் பின் அதை யாரும் பிடுங்கி எரிந்து விடாவண்ணம் அவற்றை தினமும் சென்று பார்த்து பாதுகாத்து வந்தார்.
அதைக் கண்டவர்கள் அவரை கேலி செய்தார்கள். ‘உலர்ந்து போன கட்டை எங்காவது துளிர் விடுமா? நீங்களும் ஸ்வாமிகள் சொன்னார் என்பதற்காக அதை நதிக்கரையில் நட்டு பாதுகாத்து வருகிறீர்களே. அதை விட அதை சமையல் அடுப்புக்கு உபயோகப்படுத்தலாம் அல்லவா’ என்று கேவலமாக கூறினார்கள். அனால் நரஹரி மனம் தளரவில்லை. அவர்களது கேலியான பேச்சுக்களையும் பொருட்படுத்தவில்லை. வேதங்களை நன்கு கற்றறிந்திருந்த அவர் தன்னை கேலி செய்தவர்களிடம் கூறினார் ‘என் குருதேவர் மீது எனக்கு அபார நம்பிக்கை இருக்கின்றது. அவருடைய வாக்கு பொய்யாகாது. ஒவ்ஒருவரும் தன்னுடைய குரு கூறும் அறிவுரைகளை எந்த அளவு சிரத்தையுடன் செய்கின்றனரோ அதற்கேற்ப அதற்கு உண்டான பயனை அடைவார்கள் என்பது நியதி. சாஸ்திரங்களின்படி எவன் ஒருவன் தன்னுடைய குரு, தேவர்கள், மருத்துவர், படித்த பண்டிதர்கள், புனித இடங்கள், மந்திரங்கள் போன்ற அனைத்தையுமே மனபூர்வமாக ஏற்றுக் கொள்வார்களோ அவர்களது முயற்சி வீணாகாது என்றே கூறுகிறது.’ எனக் கூறி விட்டு நதிக்கரையில் நட்டு வைத்திருந்த குச்சிகளை பாதுகாத்தபடி இருந்தார். அன்று முதல் அவருக்கு முன்பின் தெரியாத யார் யாரோ வந்து பிட்ஷை கொடுத்து விட்டுச் சென்றார்கள். அவருடைய உணவு தேவை தினமும் நல்லபடியாக பூர்த்தி ஆகிக் கொண்டே இருந்தது. துயரத்தினால் கனந்து இருந்த மனமும் லேசாகத் துவங்கியது. ஒரு அமைதி தன்னை சுற்றி சூழ்வதை உணர்ந்தார்.
இப்படியாக நரஹரி இரவும் பகலும் மனதார ஸ்வாமிகள் கூறிய அறிவுரைப்படி நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டவர்கள் ஸ்வாமியிடம் சென்று நரஹரி அந்த உலர்ந்த குச்சிகளை பராமரிப்பதில் எப்படி தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறார் என்பதைக் கூறியதும் ஸ்வாமிகள் கூறினார் ‘முதலில் எவரும் தன்னுடைய குரு எந்த அளவு தகுதி பெற்றவர் என்றே பார்க்கக் கூடாது. குருவை திருமூர்த்திகளின் அவதாரமாகவே பார்க்க வேண்டும். அவருடைய சிஷ்யர்கள் அவருக்கு செய்யும் உண்மையான சேவையின் தன்மையை பொறுத்தே அவருடைய கருணையும் அவர்களுக்குக் கிடைக்கும். தன்னுடைய குருவை கடவுளாகவே பாவித்து அவருக்கு பணிவிடைகள் செய்து வந்தால் அவர்களுடைய அனைத்து வேண்டுதல்களும் பலிக்கும். ஒரு முறை நைமிசாரண்ய நதிக்கரைக்கு அருகில் இருந்த காட்டில் சூதக முனிவர் அங்கு கூடி இருந்த மற்ற முனிவர்களுக்குக் குருபக்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது என்பதற்கு உதாரணமாக கூறிய ஒரு கதையை உங்களுக்கும் இப்போது கூறுகிறேன். அதைக் கேட்டப் பின் நரஹரிக்கு வந்துள்ள வியாதி குணமாக வாய்ப்பு உள்ளதா என்பதை நீங்களை தீர்மானியுங்கள் ‘ என்று கூறிய பின் அந்தக் கதையை கூறலானார்.
‘முன்பு சிம்மகேது என்ற மன்னன் பஞ்சால தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு தனஞ்சயா என்ற மகன் இருந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாட காட்டிற்கு சென்றவன் காடுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்த கிராதகன் என்று கூறப்படும் ஒரு காட்டும்பிராணியையும் (காட்டும்பிராணி என்பது அகோர முகத்தை மற்றும் உருவத்தைக் கொண்ட ராக்ஷச வம்சத்தை சேர்ந்த காட்டுவாசிகளைக் குறிக்கும். அவர்களை தேவலோக பாஷையில் கிராதகர்கள் என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தற்போது காணப்படவில்லை) துணைக்கு அழைத்துச் சென்றான். கிராதகர்கள் காடுகளின் அனைத்து நுணுக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள் என்பதினால் பல மன்னர்கள் தமது அரசாங்கத்தில் கிராதகர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தார்கள். அவர்கள் துணையுடன்தான் காட்டுக்கு வேட்டை ஆடச் செல்வார்கள். வேட்டை ஆடிய களைப்பில் அரசகுமாரனும், கிராதகனும் வனத்தில் இருந்த பாழடைந்த ஒரு சிவன் கோவிலுக்குள் சென்று இளைப்பாறினார்கள். அங்கு சென்றதும் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்ட காட்டும்பிராண்டி அரசகுமாரனிடம் தனக்கு அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய ஆசையாக உள்ளதினால் அதற்கு பூஜை செய்யும் முறையை ஒரு குருவைப் போல இருந்து கற்றக் கொடுப்பீர்களா எனக் கேட்டான். அதற்க்குக் காரணம் அந்த அரசகுமாரன் வேத சாஸ்திரங்களைப் பயின்றவன். பூஜை புனச்காரங்கலையும் செய்து வந்தவன். அதற்கு அரசகுமாரன் கூறினான் ‘அப்படி என்றால் அந்த சிவலிங்கத்தை உன் வீட்டிற்கு எடுத்துப் போய் தினமும் தண்ணீரால் அபிஷேகம் செய்த பின் அதற்கு சந்தானம் மற்றும் குங்குமத்தைக் கொண்டு பொட்டை இட்டப் பின் சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்த பஸ்மத்தை (புதிய சாம்பலை) வீபுதிப் பட்டையைப் போல போட்டு பூஜிக்குமாறு கூறினான்.
அந்த காட்டும்பிராண்டியும் வேட்டை ஆடிவிட்டு திரும்பும்போது அந்த சிவலிங்கத்தை தன் வீட்டுக்கு எடுத்து சென்றான். தனக்கு குருவாக மனதார ஏற்றுக் கொண்டிருந்த அரசகுமாரன் கூறியபடியே தினமும் சிவலிங்க பூஜையை செய்து வந்தான். சில காலம் கழிந்தது. ஒருநாள் சிவராத்திரி வந்தது. அன்று கிராதகனுக்கு சுடுகாட்டில் புதிய பஸ்மம் கிடைக்கவில்லை. என்ன செய்வது என முழித்தபோது அவனுடைய தர்ம பத்தினி அதைக் குறித்துக் கவலைப் பட வேண்டாம் என்றும், புதிய சாம்பல் கிடைக்கவில்லை என்றால், தன்னை எரித்து விட்டு அந்த பஸ்மத்தை பயன்படுத்துமாறும் யோசனைக் கூறினாள். அதைக் கேட்ட அந்த காட்டும்பிராண்டி அவளிடம் கூறினான் ‘அடியே, என் பத்தினியே, நான் அந்த பாவத்தை செய்ய மாட்டேன். ஏன் என்றால் உன்னை திருமணம் செய்து கொண்டு என்னுடன் அழைத்து வந்தபோது உன்னை நல்ல முறையில் பாதுகாத்து வருவேன் என உன்னுடைய பெற்றோர்களுக்கு சத்தியம் செய்து கொடுத்தே உன்னை இங்கு அழைத்து வந்தேன். ஆகவே உன்னை பலி கொடுத்து விட்டு அந்த ஏழை பெற்றோர்களை நான் துக்கத்தில் ஆழ்த்த விரும்பவில்லை’ என்று கூறிவிட்டு அவள் கொடுத்த யோசனையை நிராகரித்து விட்டான்.
ஆனால் அவனுடைய பத்தினியோ காட்டும்பிராண்டி வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சில நெறிமுறைகளோடு வாழ்ந்து வந்தவர்கள் என்பதினால் கணவனே கண்கண்ட தெய்வம் எனக் கருதி வாழ்ந்தவள். இத்தனை நாட்களும் தன கணவன் செய்த பூஜையின் பலன் சிவராத்திரி அன்று வீணாகி விடக் கூடாது என்று நினைத்தாள். தெய்வ காரியத்தை நிறுத்துவது பெரும் பாபம் என்று கருதியவள் சற்றும் தாமதிக்காமல் குடிசையை விட்டு வெளியேறி அருகில் இருந்த மரத்தடிக்குச் சென்று கட்டைகளை அடுக்கி அதற்கு தீ மூட்டி அதில் விழுந்து உயிரை விட்டாள். அதை சற்றும் எதிர்பார்க்காத காட்டும்பிராண்டி ஓடிச் சென்று அவளை காப்பற்ற முயன்றும் அவளை காப்பாற்ற முடியவில்லை. ஆனாலும் பூஜைக்கு நேரமாகி விட்டதினால் ஒரு இயந்திரம் போல எரிந்து விட்ட அவள் உடலின் சாம்பலை எடுத்து வந்து சிவலிங்கத்துக்கு பஸ்மம் பூசி பூஜையை செய்தான். அந்த பூஜையை செய்தவுடன் வீட்டுக்கு வெளியே வந்து மரத்தடியில் எரிந்திருந்த விறகுக் கட்டைகள் இருந்த பகுதிக்குச் சென்று சிதையை மூன்று முறை வலம் வந்தப் பின் அதில் விழுந்து உயிரை விட்ட மனைவியை மானசீகமாக வணங்கி விட்டு வீட்டுக்கு வந்தவன் மீண்டும் திடுக்கிட்டான்.
வீட்டின் உள்ளே நின்று கொண்டு இருந்த அவனுடைய மனைவி அவனுக்கு உணவை தயாராக எடுத்து வைத்திருந்தாள். அவன் அவளிடம் கேட்டான் ‘அடியே, நீ தீ மூட்டி உன்னை எரித்துக் கொண்டாய் அல்லவா? இங்கே எப்படி?’. அவன் மேலே கேட்கும் முன் அவள் கூறினால் ‘நாதா, நான் என்னை தீ மூட்டி எரித்துக் கொள்வதற்காக உள்ளே சென்று தீப்பெட்டியை எடுத்து வரச் சென்றபோது அப்படியே மயக்கம் வந்து உட்கார்ந்து விட்டேன். அதன் பின் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. நான் உறங்கிவிட்டேன் என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக எழுந்து குளித்து விட்டு சமையல் செய்தேன். நான் எங்குமே செல்லவில்லையே ‘ என்றாள்.
அவனுக்கு புரிந்தது இது தெய்வத்தின் திருவிளையாடலே என்பது. ‘அப்பனே, என்னை எப்படி ஏன் சோதிக்கிறாய்’ என சிவலிங்கத்தின் முன் சென்று கலங்கியபோது சிவபெருமான் அவர்கள் முன் காட்சி தந்தார். அவர்களை ஆசிர்வதித்து விட்டுச் சென்றதும், அடுத்த கணம் அவர்களது தோற்றமே காட்டும்பிராணியின் தோற்றத்தில் இருந்து மாறுபட்டு மற்றவர்களைப் போல ஆயிற்று. அதைக் கேள்விப்பட்ட அரசன் அந்த காட்டும்பிராண்டியை அரண்மனைக்கு அழைத்து தனது மெய்காப்பாளனாக நியமித்துக் கொண்டு நிறைய சன்மானமும் தந்தார். அவர்கள் வாழ்கை அது முதல் நலமடைந்தது. இப்படியாக எந்த ஒருவரையும் குரு என ஏற்றுக் கொண்டு மனதார அவர்கள் கூறியபடி நடப்பவர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் என்பதற்கு உதாரணமே இந்தக் கதை’ எனக் கூறிய ஸ்வாமிகள் அவர்களை ஆசிர்வதித்தார்.
அதன் பின் அங்கிருந்து எழுந்து சென்ற ஸ்வாமிகள் அதுநாள்வரை நரஹரி பத்திரமாக பாதுகாத்து வந்த அத்திமரக் குச்சி செடிகள் அருகில் சென்று அவற்றின் மீது தனது கமண்டலத்தில் இருந்து தண்ணீரை தெளிக்க அவை அப்படியே துளிர்விடத் துவங்கின. அதைக் கண்ட அனைவரும் பிரமித்து நின்றார்கள்.
‘அத்ரி மகரிஷி மற்றும் அனுசூயா மூலம் வெளிப்பட்ட தத்தாத்திரேய ஸ்வரூபமானவரே, இந்த கலிகாலத்தில் மாயை எனும் கடலில் மூழ்கிக் கிடக்கும் மானிட ஜென்மங்களைக் காக்க சூரிய, சந்திர ஒளிக்கிரணங்களை விட அதிக பிரகாசத்துடன் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற அவதாரம் எடுத்து வந்துள்ளவரே உங்களை நான் நமஸ்கரிக்கின்றேன்.
மதம் பிடித்த யானையைப் போல ஆசாபாசங்கள், பேராசை, தலைகனம் பிடித்து அலையும் என்னைப் போன்ற மானிடர்களை பக்தி மார்கத்தில் அழைத்துச் சென்று கரை சேர்ப்பீராக. எங்களை கரை சேர்க்க ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற அவதாரம் எடுத்து வந்துள்ளவரே உங்களை நான் நமஸ்கரிக்கின்றேன்.
உங்களுடைய இரண்டு கண்களும் சந்திர சூரியன் போன்றவை, நீங்கள் காமதேனுப் பசுவைப் போல வற்றாது அருள் மழைப் பொழிகிறீர்கள். உங்கள் முகமோ சாந்தமாக மலர்ந்த தாமரைப் போல ஜொலிக்கிறது. வாழ்க்கையில் துயரத்தையும் துன்பங்களையும் அனுபவிப்பவர்கள் அவற்றைத் தாங்க முடியாமல் போய் உம்மிடம் வந்து வேண்டியதும் ஒரு தாயைப் போல அரவணைத்து அவர்களுக்கு ஆறுதல் தருபவரே, கருணைக் கடலான ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற அவதாரம் எடுத்து வந்துள்ளவரே உங்களை நான் நமஸ்கரிக்கின்றேன்.
ஆதியும், அந்தமும் போல கனகபுரத்தில் அமர்ந்து கொண்டு பக்தர்களின் துயர் தீர்ப்பவரே, ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற அவதாரம் எடுத்து வந்துள்ளவரே உங்களுக்கு நான் நான் கோடி கோடி நமஸ்காரம் செய்து வழிபடுகிறேன்’
வெண் குஷ்ட வியாதியால் அவதிப்பட்டு ஸ்வாமிகளின் அருளினால் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைந்த பிராமணர் இப்படியாக ஸ்வாமிகளின் மீது தோத்திரம் பாடி வணங்கினார். இனி தான் அங்கேயே இருந்தபடி ஸ்வாமிகளுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறினார். ஸ்வாமிகளும் அந்த பிராமணரை ஆசிர்வதித்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி மீண்டும் கனகாபுரத்திற்கு வந்தார். அங்கு வந்தப் பின் ஸ்வாமிகள் அந்த பிராமணனுக்கு அஷ்டாங்க யோகத்தை கற்றுத் தந்து யோகீஸ்வரர் என்ற பட்டமும் தந்து அனுப்பினார். அது மட்டும் அல்ல மந்திரங்களிலேயே மிகச் சிறப்பான வித்யா ஸரஸ்வதி மந்திரத்தையும் அவருக்கு கற்றுத் தந்தார். அதன் பின் அந்த பிராமணரும் தன் குடும்பம், பேரக் குழந்தைகளுடன் வெகு காலம் அங்கு தங்கி இருந்தவாறு குருவிற்கு சேவை செய்து வந்தார் (இப்படியாக அத்தியாயம் -40 முடிவடைந்தது).
First of all kindly accept my heartful thanks for your wonderful blog which makes easier to access many spiritual books in this pandemic period.
I am not able to locate அத்தியாயம் 39. Can you Kindly send me the same to my e mail
Id: radsun1991@gmail.com?