பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன? இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால் காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் தம்முடைய பெண்ணை வேறு இனத்தவருக்கு மணமுடித்துக் கொடுக்க உடன்படவில்லை. மன்னன் எத்தனையோ முறைக் கேட்டும் அவர்கள் அதற்க்கு உடன்படவில்லை என்பதினால் கோபம் கொண்ட மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். அங்கிருந்த பலரும் தீயினால் மரணம் அடைய, அவர்களில் வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோரு பேர் தீயிலிருந்து தப்பி பல பொருட்களையும் எடுத்துக் கொண்டு அந்த நகரை விட்டு வெளியேறி தாம் தங்கி இருக்க நாட்டின் பல இடங்களுக்குச் சென்றனர். ஆனால் எந்த இடமும் சரிவர அமையவில்லை என்பதினால் அந்த பதினோரு வணிகர்களும் தங்கள் பொருட்களுடன் ஐயர் மலைக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் தாம் கொண்டு வந்திருந்த பொருட்களை பாகம் பிரித்துக் கொண்டார்கள். எப்படி பாகம் பிரித்தாளும் அதை மீண்டும் எண்ணும்போது அது பன்னிரண்டு பாகங்களாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே சலித்துப் போனவர்கள் சரி நம்முடைய பங்கை எடுத்துக் கொண்டபின் மீதி உள்ள பன்னிரண்டாம் பங்கை செய்வது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தபோது அங்கு ஒரு அந்தணர் வந்தார். வந்தவர் ‘ஏன் இப்படி சோகமாக அமர்ந்திருக்கிறீர்கள்’ என அவர்களிடம் கேட்டதும் அவர்களும் நடந்ததை அவர்கள் அவரிடம் கூற அந்த அந்தணர் ‘சரி அந்த பன்னிரண்டாம் பாகத்தை நீங்கள் ஏன் இங்குள்ள இறைவனுக்கு தரக்கூடாது’ என்று கேட்க, அதுவே சரியான வழி என அவர்கள் மனதில் விழுந்தது. தயங்காமல் அவர்களும் ‘ஐயா, உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம். இதை இதோ இறைவனுக்கு உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கிறோம்’ என தயங்காமல் கூறிவிட்டு பன்னிரண்டாவது பாகத்தை இறைவன் சன்னதியில் வைக்க அந்த அந்தணரும் மறைந்தார். சிவபெருமான் அவர்கள் முன் காட்சி தர அவர்கள் அப்படியே அவர் பாதத்தில் விழுந்து வணங்கினார்கள். அவரும் ‘பக்தர்களே, இனி நானும் உங்களில் ஒருவன். இனி நீங்கள் பதினோரு பேர்கள் அல்ல, பன்னிரண்டாவதாக நானும் உங்களுடன் இருப்பேன்’ என அவர்களுக்கு ஆசிகளை தந்தப் பின்னர் மறைந்து போனார். அதைக் கண்டு மகிழ்ந்து போன பன்னிரண்டு செட்டியார்களும் ‘இனி நாங்கள் சம்பாதிப்பதில் எங்களால் முடிந்ததை இங்குள்ள இறைவனுக்கே தந்து விடுகிறோம்’ என அங்கேயே சங்கல்பம் செய்து கொண்டார்கள். அது முதல் அவர்கள் வருவாயில் பன்னிரண்டில் ஒரு பங்கு இறைவனுக்குச் சேர்க்கிறார்கள்.
இதனால்தான் அந்த வணிகர்களின் குலத்துக்கு பன்னிரண்டாம் செட்டியார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. பல ஊர்களில் பரவி உள்ள இந்த பன்னிரண்டாம் செட்டியார் இனத்தவர் ரத்தினகிரீஸ்வரரையே தங்கள் குல தெய்வமாகக் ஏற்றுக் கொண்டு பக்தி மார்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்கள். சிவபெருமான் பன்னிரண்டாம் பங்கு பெற்ற வரலாறு வாட்போக்கிக் கலம்பகம், இரத்தினகிரி உலா போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளது.
ஆலயத்துக்குள் நுழைந்துடன் தட்சிணாமூர்த்தி சன்னதி காணப்படுகிறது. அவரை தரிசனம் செய்தபின்னரே மூலவரான ரத்னகிரீஸ்வரரை தரிசிக்க வேண்டுமாம். சித்திரை மாத சிவராத்திரி நாட்களில் சூரிய ஒளி கிரணங்கள் கருவறைக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக உள்ளே வந்து மூலவர் மீது விழுவதை குறிப்பிடுகையில் அன்று சிவபெருமானை இங்கு வந்து சூரியன் நமஸ்கரிப்பதாகக் கூறுகிறார்கள். எட்டு பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் திருவாட்போக்கி எனும் ரத்னகிரீஸ்வரராக ஸ்வயம்புவாக அவதரித்துள்ள சிவபெருமான் அங்கு வந்து தன்னை வணங்கி வேண்டி நிற்கும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார்.
இந்த ஆலயத்தில் மூலவர் மேற்கு நோக்கியும், அவருடைய மனைவியான பார்வதி சுரும்பாற்குழலி மற்றும் ஆராளகேஸ்வரி எனும் பெயருடன் கிழக்கு நோக்கி இருந்தபடி காட்சி தருகின்றனர். இந்த தலத்தில் சாப விமோசனம் பெறுவதற்காக இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், அகத்தியர் முதலியோர் வந்துள்ளனர். ரத்னகிரீஸ்வரரை இங்கு வந்து வணங்கி வழிபட்டால் திருமணத்தில் ஏற்படும் தடங்கல் விலகும், தொழில் அபிவிருத்தி அடையும், புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். மலையில் படிகள் வழியே மேலே ஏறிச் செல்லும்போது அங்குள்ள மூலிகை மரங்கள் மீது விழுந்தபடி வீசும் காற்றை சுவாசிப்பதினால் ஆஸ்தும, ரத்த கொதிப்பு, நெஞ்சுவலி, கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் விலகுமாம்.