4
தவறோ நடந்து விட்டது. ஆனால் என்ன்ன செய்வது ? அதுவும் நீல மாதவரின் சித்தமே என எண்ணியவாறு சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு நாரத முனிவர் கூறியதினால் இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். இந்ரதைய்யுமா பிரும்மலோகத்துக்கு சென்று இருந்தபோது கண்களை மூடியபடி பிரும்மா தவத்தில் அமர்ந்து இருந்தார். அவர் கண் முழிப்பதற்கு பல நூற்றாண்டு காலம் பிடித்ததினால் இந்ரதைய்யுமாவினால் திரும்பி வரமுடியவில்லை. பிரும்மலோகத்திலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆகவே பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டதினால் அவர் பூமியிலே கட்டி இருந்த ஆலயம் திறக்கப்படாமல் இருக்க அது அப்படியே பூமியிலே மெல்ல மெல்ல புதைந்து போகத் துவங்கியது.
இந்ரதைய்யுமா தேவ லோகத்துக்கும் சென்று இருந்த அதே நேரத்தில் அவர் ஆண்டு வந்திருந்த ராஜ்யமும் மன்னன் இல்லாத ராஜ்யமாகி விட, ஆண்டுகளும் பலநூற்றாண்டுகளைக் கடந்து விட, அந்த ராஜ்யத்தை இந்ரதைய்யுமாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இரண்டு மன்னர்கள் ஆண்டார்கள். அவர்களுக்கு நடந்தவை எதுவுமே தெரியாது. அதில் இரண்டாமதாக ஆட்சி செய்த கலாமாதவா எனும் மன்னன் ஆட்சியில் புதைந்து இருந்த அந்த ஆலயம் கண்டு பிடிக்கப்பட்டது.
இத்தனை அற்புதமான ஆலயம் புதைந்து கிடக்கிறதே என்று எண்ணிய கலாமாதவா அதை வெளியே எடுக்க வைத்து சிதலமடைந்த பகுதிகளை மீண்டும் பழுது பார்த்து ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய இருந்த நேரத்தில் இந்ரதைய்யுமாவும் தேவலோகத்தில் இருந்து பிரும்மாவுடன் அங்கு வந்து சேர்ந்தார். நீல மாதவர் கூறி இருந்ததைப் போல அந்த ஆலயத்தில் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை திறந்து வைக்க பிரும்மாவை இந்ரதைய்யுமா அழைத்து வந்ததைக் கண்ட கலாமாதவா, முதலில் அவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தம் ராஜ்யத்தின் மீது படையெடுத்து வந்துள்ளவர்கள் அவர்கள் என எண்ணிக் கொண்டு அவர்களுடன் போரிடத் தயார் ஆனார். ஆனால் மீண்டும் அங்கு வந்த நாரத முனிவர் மூலம் நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்டவர், தனது தவறுக்கு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டப் பின் அந்த ஆலயத்தை இந்ரதைய்யுமாவின் முன்னிலையில் பிரும்மாவே திறந்து வைக்கட்டும் என வேண்டிக் கொண்டார். வேப்ப மரத்தில் விஸ்வகர்மாவின் ஆட்களினால் வடிவமைக்கப்பட்டிருந்த ஜகன்னாதர், சுபத்ரை மற்றும் பாலபத்திரர் மூவரையும் பிரும்மாவே சன்னதியில் பிரதிஷ்டை செய்து, ஆலயத்திலும் ஹோமங்கள் போன்றவற்றை முறைப்படி செய்து அந்த ஆலயத்தை உலகுக்கு அர்பணித்தப் பின்னர் தன்னுடன் இந்ரதைய்யுமாவையும் அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குச் திரும்பிச் சென்று விட்டார் . இப்படியாகத்தான் இந்த பூமியிலே பூரி மானிலத்தில் பிரும்மாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜகன்னாதர் ஆலயமும் எழும்பியது. இது நடந்தது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால்.
பிரும்மா தேவலோகத்துக்கு செல்லும் முன்னால், வரும் காலத்தில் அந்த ஆலயத்தில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் தான் நிறுவிய மூலவரை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அப்படி மாற்றி அமைக்கப்படும் மூர்த்தியில் தான் முதலில் ஸ்தாபித்த மூர்த்தியின் சக்திகளை எப்படி உட் புகுத்தி சக்தியூட்ட வேண்டும் என்ற அனைத்தையும் கலாமாதவா மூலம் உலகிற்கு தெரியப்படுத்தினார். மேலும் அதற்கான வழிமுறைகளை தானே அங்கு வகுத்து விட்டுப் போனார். அந்த வழிமுறையே இன்றும் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் தொடர்கிறது.
அந்த ஐதீகத்தின் விளைவாகவேதான் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மூலவர்களுடைய மூர்த்திகளை மாற்றி அமைக்கும் நபகலேபரா எனும் திருவிழா 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த இருபதாவது நூற்றாண்டில் மட்டும் ஆறுமுறை அதாவது 1912, 1931, 1950, 1969, 1977 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இந்த திருவிழா நடைபெற்று உள்ளது. அதற்கு முன் 1575 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆம் ஆண்டுவரை இந்த வைபவம் 23 முறை நடைபெற்று உள்ளது என்பதை ஏற்கனவே கூறி உள்ளேன். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அதாவது 2015 ஆம் ஆண்டில் இந்த திருவிழா நடைபெறத் துவங்கி உள்ளது.
நபகலேபரா திருவிழா :-
65 நாட்கள் தொடரும் இந்த நபகலேபரா எனும் ஆலயத் திருவிழாவில் பூரி ஜகன்னாதர், பாலபத்ரா, சுபத்ரா என்ற மூன்று தெய்வங்களின் சிலைகளும் புதிய சிலைகளினால் மாற்றி அமைக்கப்படும் திருவிழாவினை தைத்தியாபதி எனும் பிரிவினரே செய்கிறார்கள். அந்த உரிமை அவர்களுக்கு மட்டுமே உள்ளது. பஞ்சாங்கத்தைப் பார்த்துவிட்டு இன்ன வருடத்தில் ஆஷாத மாதம் இருமுறை வருகிறது என்பதைக் கணக்கிட்டுக் கொண்டு அந்தந்த வருடத்தில் சிலைகளை மாற்றி அமைக்கும் காலம் வந்து விட்டதாக கருதி பண்டிகையை துவக்குவார்கள். அதில் முதல் பணியே பழைய சிலைகளை எடுத்து விட்டு புதிய சிலைகளை அங்கு வைக்கும் முன்னர் புதிய சிலைகளை வடிவமைப்பதற்கான மரங்களை ஆலயக் குழுவினர் தேடி எடுத்து வருவதுதான். அந்த சிலைகளை அனைத்து மரங்களின் கட்டையினாலும் செய்ய இயலாது. அந்த சிலைகள் வடிவமைக்க குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட வேப்ப மரக் கட்டையிலேயே வடிவமைக்க வேண்டும். ஆகவேதான் அதை வேப்ப மரம் என்று அழைக்காமல் அந்த புனித வேப்ப மரத்தை ‘தாரு பிரும்மா’ அதாவது பிரும்மா வாழும் இடம் என்று அழைக்கிறார்கள். ஆகவே தாரு பிரும்மா எனப்படும் அந்த குறிப்பிட்ட வேப்ப மரம் புனிதமான வேப்ப மரமாக கருதப்பட்டு அது உள்ள இடத்தைத் தேடி அலைவார்கள்.
இதில் ஒரு முக்கியமான செய்தியைக் குறிப்பிட வேண்டும். ஆலய சிலைகளை மாற்றி அமைக்க குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட வேப்ப மரத்தை திருவிழாவின்போது மட்டுமே ஆலயக் குழுவினர் தேடுவதை விட, முதலிலேயே அங்காங்கு உள்ள அந்த தன்மைகளைக் கொண்ட வேப்ப மரங்களின் இருப்பிடங்களை ஆலயக் குழுவினர் அறிந்து வைத்து பாதுகாத்து வந்தால் அந்த மரங்களை நபகலேபரா ஆலயத் திருவிழாவின்போது தேடி அலைவதை தவிர்க்கலாமே என்ற கேள்வி எழலாம்.
ஆனால் இங்குதான் தெய்வ லீலை என்பது வெளிப்படுகிறது. சாதாரண நாட்களில் அந்த மரங்கள் எங்கு உள்ளன என்பதை யாராலும், அவ்வளவு ஏன், அந்த மரங்கள் உள்ள இடத்திலேயே உள்ளவர்களால் கூட அறிந்து கொள்ள முடிவதில்லையாம். ஒருமுறை நபகலேபரா ஆலயத் திருவிழா முடிந்து விட்டால் அடுத்த நபகலேபரா துவங்கும்வரை அந்த மரங்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படுவது இல்லையாம். அந்த தன்மைகளைக் கொண்ட வேப்ப மரம் அருகிலேயே இருந்தாலும், அதில் உள்ள சங்கு, சக்கரம், கண்கள் மற்றும் தாமரை சின்னங்கள் எவருடைய கண்களுக்கும் புலப்படாதாம். மேலும் பாம்புப் புற்றும், அதில் வாழும் பாம்பும் கூட வெளித் தெரிவதில்லையாம். தேடுதல் வேட்டை துவங்கியதும் அவை திடீர் என வெளியில் தெரிகிறதாம். அதே இடத்தில் பல நாட்கள் தங்கி இருந்தவர்கள் கூட அந்த மரத்தைப் பார்த்ததே இல்லை என்பது அதிசயமாகவே உள்ளது. அதற்கான காரணம் அந்த மரமும் தேவலோகத்தில் இருந்து இங்கு தேவலோகத்தினரால் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வரப்பட்டு புதைத்து வைக்கப்படுகிறது என்றும் அதே நேரத்தில்தான் மங்களா தேவியும் அந்த மரம் உள்ள இடத்தை அதை தேடி அலையும் குழுவினருக்கு தெரியப்படுத்துகிறாள் என்பதான நம்பிக்கையும் இங்கு உள்ளது. ஆகவே இந்த தேவ ரகசியத்துக்கான விளக்கத்தை இன்றுவரை எவராலும் தர இயலவில்லை.