ரகுவம்சம்-11
– சாந்திப்பிரியா – 

லவ குசர் பிறப்பும் 
ராமருக்கு வந்த சோதனையும்

ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்பைப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது.

ஒருநாள் ராமபிரான் தனது ஒற்றன் ஒருவனை அழைத்து நாட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஒற்றன் கூறினான்  ‘மன்னா, இந்த நாட்டில் அனைவர் மனதிலும் பரவலாக ஒரு எண்ணம் சுற்றிக் கொண்டு உள்ளது. உமது மனைவியை மாற்றான் ராவணன் கவர்ந்து கொண்டு போய் அத்தனைக் காலமும் தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்து சில காலத்திலேயே அவள் கர்பவதியாகவும் ஆகி விட்டாள். மாற்றானிடத்தில் அத்தனைக் காலம் தங்கிய பத்தினியை எப்படி ராமர் சந்தேகப்படாமல் ஏற்றுக் கொண்டார் என  மக்கள் உம்மை தூற்றுகிறார்கள்’ என்று கூற அதைக் கேட்ட ராமரும் திடுக்கிட்டார்.

உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து அது குறித்து ஆலோசனை செய்த பின் சீதையை தன்  வாழ்க்கையில் இருந்து நீக்கி விட தீர்மானம் செய்து விட்டு கர்பவதியான அவளை  வனத்தில் இருந்த வான்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டு வரச் சொல்லி விட்டார். ஆனாலும் ராமருக்கு சீதையின் பிரிவு மன வருத்தத்தை தந்தது. அதை அடக்கிக் கொண்டு நாடாண்டு வந்தார்.

சில காலம் சென்றதும் ராவணனுடைய தங்கை கும்பேசினி என்பவளின் புதல்வன் இலவணன் என்பவன் தமக்கு பெரும் துயரங்களையும் துன்பத்தையும்  அளிக்கிறான் என ராமரிடம் முனிவர்கள் சென்று முறையிட்டபோது ராமரும் தனது சகோதரன் சத்ருக்னனை அனுப்பி அந்த அசுரனை அழிக்கச் சொன்னார்.  சத்ருக்னனும்  இலவணனை அழிக்கச் சென்றபோது வனத்தில் இருந்த வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று இருந்தபோது அங்கிருந்த சீதைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். அதன் பின் அவர் இலவணனை அழித்து விட்டு  நாடு திரும்பும் வழியில் நதிக்கரையில் இருந்த தம்முடைய ராஜ்யத்தை தமது புதல்வர்களான ஸ்வாகு மற்றும் வெகுசறுகு  என்பவர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து தம்மை விலகிக் கொண்டார்.  அதன் பின் அயோத்தியாவுக்கு திரும்பியவர் இலவணன் வதத்தைக் குறித்துக் கூற அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை பிரசவித்ததையோ, அல்லது லவ குசா பிறந்த செய்தியையோ அவர் யாரிடமும் கூறவில்லை. அதன் காரணம்  தக்க நேரத்தில் தன்னால் லவ குசா யார் என்பதை  வெளிப்படுத்தப்படும்வரை சத்ருக்கனன் அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பதான வால்மீகியின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.

வால்மீகி முனிவரும் சீதையின் இரு புதல்வர்களுக்கும் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தப் பின் ராமாயணத்தையும்* பாடலாக கற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் அயோத்தியில் சில குறிப்பிடத்தக்க  சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் ராமரின் அரண்மனைக்கு முன்னால்  ஒரு அந்தணர் தனது இறந்து கிடந்த குழந்தையை எடுத்து  வந்து நின்று கொண்டு பூமியை நோக்கி  ‘ஓ …பூமா தேவியே  தசரத மகாராஜா ஆண்டு வந்திருந்த பூமியில் அவர் ஆட்சி இருந்த காலத்தில் எந்த ஒரு அகால மரணமும் நிகழ்ந்தது இல்லை. ஆனால் இன்றோ அதே மகாராஜனின் புதல்வர்  ஆட்சியில் நடந்துள்ள இந்த அகால மரணத்தை தாங்கிக் கொண்டு எப்படி  உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது?’ என்று கூறி ஒப்பாரியிட்டு அழுது கொண்டு இருந்தார்.

அந்த செய்தியைக் கேட்ட ராமனும் ஓடோடி  வெளியில் வந்து இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையையும், ஒப்பாரி வைத்தபடி இருந்த அந்தணரையும் பார்த்துக் கூறினார் ‘அந்தணரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் குழந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டு இருந்தால் அதன் உயிரை நான் மீட்டுக் கொண்டு வருவேன். அதற்கு நான் பொறுப்பு’ என் சூளுரைத்து விட்டு ஆக்ரோஷத்துடன் பல ஆயுதங்களையும்  எடுத்துக் கொண்டு புஷ்ப விமானத்தில் ஏறி  யமலோகத்தை நோக்கிச்  செல்லத் துவங்கியபோது ஒரு அசரீரி  குரல் கொடுத்தது ‘மன்னனே, உங்கள் ஜனங்களில் சிலர்  தர்ம நெறிக்கு மாறாக குற்றம் செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டு பிடித்து அவற்றைக் களைந்தாலே உன் நாட்டுக்கு  விமோசனம் கிடைக்கும். வேறெங்கும் போவதை தவிர்த்து உன் நாட்டிலேயே நடைபெறும் இந்த தர்மநெறிக்கு எதிரான குற்றத்தை தடுத்து நிறுத்து’ என்று கூறிவிட்டு  மௌனமாயிற்று.

அதைக் கேட்ட ராமரும் பல திக்குக்களிலும் சென்று தகாத குற்றத்தை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் தர்ம நெறி முறைக்கு மாறாக ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி  அந்தணர் அல்லாத ஒருவன் தவத்தில் இருந்ததைக் கண்டார்.  உடனே அவன் அருகில் சென்று அவன் தலையை தனது வாளினால் சீவி எறிய  அகால மரணம் அடைந்த குழந்தையும் பிழைத்து எழுந்த செய்தியும் கிடைத்தது. அரண்மனைக்கு சென்றவரை வாயிலிலே நின்று வரவேற்ற அந்தக் குழந்தையின் தந்தையும் அவரை பல்வேறு வகைகளிலும்  துதி செய்து வாழ்த்திய பின் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.

*சிறு  குறிப்பு:- 
(வால்மீகி முனிவருக்கு ராமாயணம் எழுதத் தூண்டிய சம்பவமாக கீழ் காணும் கதையை கூறுகிறார்கள். ஒரு நாள் எப்போது போல  குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்கு  வந்த வால்மீகி முனிவர் அங்கே ஆண் மற்றும் பெண் புறாக்கள் இரண்டும் கலவியில் இருந்தபோது வேடன் ஒருவன் எய்த அம்பினால் ஆண் புறா இறந்து விழுந்ததைக் கண்டு பெண் புறா பரிதவித்து அழுததைக் கண்டு கருணையும் கோபமும் ஒருங்கே எழும்ப அந்த வேடனைக் சபிக்கும் விதத்தில் அவரை அறியாது  அவர் வாயில் இருந்து   ஒரு ஸ்லோகம்  எழுகிறது. இப்படி ஒரு ஸ்லோகம் தன்னையறியாது தன் வாயில் இருந்து எப்படி வெளிவந்தது வந்துள்ளது யோசிக்கையில் அவர் முன் பிரும்மா தோன்றுகிறார்.  அவர் முன் தோன்றிய பிரும்மா ராம கதையை எழுதுமாறு வால்மீகி முனிவருக்கு கட்டளை இடுகிறார். அப்படி அவரால் எழுதப்படும் ராமனின் கதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மனித இனத்தவரால்  கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வால்மீகி முனிவரும் தியானத்தில் ஆழ்கையில் ராமரின்  பிறப்பிலிருந்து  பட்டாபிஷேகம் மற்றும் சீதாவை துறக்கும் வரையிலான ராம கதையின் அனைத்து நிகழ்வுகளும் அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான  வெளிப்பட அதை மனதிலே ஆழமாக உருவேற்றிக் கொண்டார். இப்படியாக மனதில் தன்னால் இயற்றப்பட்ட இராமாயண மகா காவியத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார்.  முதலில் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ராமரின் பிறப்பில் இருந்து ராமர் அயோத்தியா திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சீதையை வனத்துக்கு அனுப்பியவரைதான் இயற்றப்பட்டு உள்ளது என்று நம்புகிறார்கள். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளாக வால்மீகி ராமாயணத்தில் காணப்படுபவை வேறு யாராலோ எழுதப்பட்டு  பிற காலத்தில் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டவை என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் லவ குசர்கள் அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையிலும் பாடிய ராமாயணம் ராமர் பிறப்பில் இருந்து  பட்டாபிஷேகம் வரையில் மட்டுமே இருந்ததென்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய்வழி செய்தியாகவே  காலம் காலமாக வந்து உள்ளது. )
தொடரும்……….12