COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : 

அத்தியாயம் – 51
அத்தியாயங்களின் சுருக்கம்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தரம் தொடர்ந்து கூறினார் ‘பரம்பொருளான பரப்பிரம்ம தெய்வம், தனது இருப்பிடமான பிரபஞ்சத்தோடும், அனைத்து உயிர்களோடும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்து நிற்கிறது; மனம், புத்தி, அகங்காரம் ஆகியவற்றைத் தாண்டி, ஆன்மா தன்னுள் ஒடுங்கி அமைதி பெறும் பேரானந்த நிலையே இந்த ஓய்விடம் ஆகும்; மனிதர்கள் வழிபடும் பொருட்டு, பல்வேறு குணங்களுடன் (சகுண பிரம்மம்) அந்தப் பரம்பொருள் இங்குப் போற்றித் துதிக்கப்படுகிறது ||1||

சுமார் 5400 செய்யுள்களைக் கொண்ட இந்த நூல், ஐம்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு விளக்கப்பட்டு உள்ளது; இது பக்தி, ஆன்மீக ஞானம் மற்றும் துறவு ஆகிய வழிகாட்டுதல்களை உள்ளடக்கி உள்ளது ||2||

இப்போது, ஒவ்வொரு அத்தியாயத்திலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள சாரம் மற்றும் பாடல்களின் கருத்து சுருக்கம், வரிசைக் கிரமமாக இங்கு வழங்கப்படுகிறது; இது முந்தைய ஐம்பது பாகங்களில் தரப்பட்டு உள்ள விரிவுரைகளின் குறிப்புரையாக அமைகிறது||3||

இந்த நூல் மங்கலமான தொடக்கத்துடன் துவங்கி உள்ளது; பக்தி முறை சார்ந்த ஒன்பது பிரிவுகள் விவரிக்கப்படுகின்றன; அதன் பின்னர், கண்ணுக்குப் புலனாகும் இந்தச் சிருஷ்டி (படைப்பு) எவ்வாறு தோன்றியது என்பது வரிசைக் கிரமமாக இதில் விளக்கப்பட்டு உள்ளன ||4||

தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் பெற்றோர்களான முனிவர் அத்திரி மற்றும் அன்னை அனுசூயா ஆகியோர்களின் உயர்ந்த பக்தியும், தூய்மையான இல்லற வாழ்க்கையும், நற் பண்புகளும் இதில் விளக்கப்பட்டு உள்ளன; சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிறந்த சீடனுக்கு இருக்க வேண்டிய ஆன்மீகத் தாகமும், அவனுக்கு நல்வழி காட்டக் கூடிய ஒரு முழுமையான குருவுக்கு இருக்க வேண்டிய தகுதிகளும் இங்கு விளக்கப்பட்டுள்ளன||5||

சீடன் தீபக், ஸ்ரீமத் தத்தரின் மேன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், மிகுந்த ஈடுபாட்டுடன் தனது குருவிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டான்; அவனது ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்த குரு வேத தர்மா, ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானுக்கும் அவரது தந்தையாருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலையும், முனிவர் கௌஷிகரைப் பற்றிய செய்திகளையும் அவனுக்கு விவரித்தார்||6||

தனது கற்பின் வலிமையால், சூரியன் உதிப்பதைத் தடுத்து நிறுத்திய ஒரு பக்தி மிக்க கற்புக்கரசியின் கதை இதில் உள்ளது; அதனால் துயருற்ற உலகமும் தேவர்களும் அன்னை அனுசூயாவிடம் அடைக்கலம் புகுந்தார்கள்; அன்னை அனுசூயா அந்தப் கற்புக்கரசியான சதி சாண்டிலியை அவள் சிக்கலிலிருந்து விடுவித்து உலகத்தின் துன்பத்தையும் விலக்கினாள்; இந்த முழு நிகழ்வும் இரண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது ||7||

அதன்பின் சூரியன் உதித்தபோது, கௌசிக முனிவர் உயிர் நீத்தார்; அப்போது அன்னை அனுசூயாவே அவரை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் மூலம் உலகிற்கும், தேவர்களுக்கும், பதிவிரதையான சாண்டிவிக்கும் மகிழ்ச்சியை தந்தாள் ||8||

அப் பகுதியின் மன்னன், ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானின் அம்சமான மாண்டவ்ய முனிவரைச் சிறையிலிருந்து விடுவித்தான்; அம்மன்னனின் செயலும், ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானின் ஆனந்தமயமான திருவிளையாடல்களும் மூன்றாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன||9||

எங்களுக்குச் சிறந்த மகப்பேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பிய ஹைஹேய குலத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு, ‘பானு-சப்தமி விரதம்’ மற்றும் ‘அனந்தப் பெருமானை வழிபடும் விரதம்’ ஆகியவை உபதேசிக்கப்பட்டன; அந்த விரதங்களை அவர்கள் கடைப் பிடித்ததன் விளைவாகவே, மாபெரும் வீரனான கார்த்தவீரியன் அவதரித்தான்||10||

கர்க முனிவர், கீழ் மக்களைத் தண்டிப்பதன் பின்னணியில் உள்ள தார்மீகக் கோட்பாடுகளை விளக்கினார்; மேலும் ஸ்ரீமத் தத்தாத்திரேயர் மீது பக்தி செலுத்துவதின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்; அந்த கருத்துக்கள் சஹஸ்ரார்ஜுனனின் மனத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின; இச்சம்பவம் முழுமையும் நான்காம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது||11||

அசுரர்களின் ஆதிக்கத்தால் தேவர்கள் எவ்வாறு பின்னடைவைச் சந்தித்தனர் என்பதை கர்க முனிவர் மன்னனிடம் எடுத்துரைத்தார்; அப்போது தேவர்கள் ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானின் உதவியை நாடத் தீர்மானித்து, தங்களால் இயன்ற மிகச் சிறந்த முறையில் அவரைச் சேவிக்க வந்தனர் ||12||

அதைத் தொடர்ந்து நடைபெற்ற போரில் அசுரர்கள் தங்கள் வலிமையையும் மன உறுதியையும் இழந்து மழுங்கிய நிலையில் காணப்பட்டனர் என்றாலும் முடிவில் தேவர்கள் வெற்றி பெற்றுத் தங்கள் ஸ்வர்க லோகத்தை மீட்டெடுத்தனர்; இச்சம்பவம் ஐந்தாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது ||13||

சஹஸ்ரார்ஜுனனும் ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானை மிகுந்த பக்தியுடனும் விடா முயற்சியுடனும் சேவித்தான்; அதன் பயனாக, இறைவனுடன் பக்தன் ஒன்றிணையும் பேறு அவனுக்குக் கிடைத்தது; அதற்கு முன்னதாக, இறைவன் அவனைப் பலவிதமான, விசித்திரமான, சோதனைகளுக்கு உட்படுத்தினார்; ஆயினும் அந்த சோதனைகள் எவையுமே அந்த பக்தனுக்குத் துன்பத்தையோ, அவனது பக்தியில் சலனத்தையோ ஏற்படுத்தவில்லை||14||

கார்த்தவீரிய மன்னன் இறுதியில் முழுமையான வெற்றியை அடைந்தான்; அவன் தன் தந்தையின் அரியணையில் அமர்ந்து முடிசூட்டிக் கொண்டான்; அவன் தன் அரசை சிறப்புறவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் இருக்கும் வகையில் ஆட்சி செய்தான் என்பது ஆறாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது||15||

ஐம்புலன்களின் இச்சைகளுக்கு அடி பணிந்து வாழ்வதைத் துறந்து விட்டு, பற்றற்ற மனப்பான்மையுடன் திகழ்ந்த சஹஸ்ரார்ஜுனன், மீண்டும் ஸ்ரீமத் தத்தாத்திரேயப் பெருமானை நாடிச் சென்று, அவரைப் பலவிதங்களில் போற்றித் துதித்தான் ||16||

எல்லாம் அறிந்த இறைவன், தன் பக்தனின் மன நிலையை உணர்ந்து, அந்த வலிமை மிக்க மன்னனுக்கு ஆறுதல் கூறினார்; அம்மன்னனோ இறைவனிடம் பல்வேறு ஐயங்களைக் கேள்விக் கணைகளை தொடுத்து பதிலை பெற்றான்; இச்சம்பவம் முழுமையும் ஏழாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது||17||

குரு ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அவருக்கு ஏழு நிகழ்வுகளை விவரித்தார்; அவற்றில், தேவலோக அதிபதியான இந்திரனுக்கும் அவரது குருவான பிரகஸ்பதிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் பற்றியும், ஒரு தலை சிறந்த சிற்பியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் எடுத்த பல்வேறு பிறவிகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது||18||

நர்மதை நதிக் கரையில் வாழ்ந்த ஒரு அந்தணரைப் பற்றிய மற்றொரு நிகழ்வு; அவர் காம சாஸ்திரக் கலையில் வல்லவர்; அவர் நிர்வாண நிலையை அடைவதற்காக மேற் கொண்ட படிப்படியான ஆன்மீக முன்னேற்றங்கள் எட்டாவது அத்தியாயத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன||19||

நன்னடத்தையில் சிறந்தவரான ‘சுஷீல்’ எனும் பக்தர், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அப்போது ஏழு அரக்கர்கள் அவரை ஆட் கொண்டனர்; உடனே ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவான் அவருக்குத் துணையாக வந்து, ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்தின் துணையோடு, அந்த பக்தரின் உடலிலிருந்து ஒவ்வொரு அரக்கனையும் வெளியேற்றினார் ||20||

விஷ்ணு தத்தர் எனும் மற்றொரு பக்தி மிக்க அந்தணர், தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மாறு வேடத்தில் வந்திருந்தபோது அவரை அடையாளம் கண்டு கொள்ள ஒரு பேயினால் வழி காட்டப்பட்டார்; அதன் விளைவாக, அந்த பேய் தான் தேடிய முக்தியை இறைவனிடமிருந்து பெற்றது; இந் நிகழ்வு ஒன்பதாவது அத்தியாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது||21||

அடுத்த நிகழ்வு ஒரு அந்தணரைப் பற்றியது; அவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பல நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தார்; அவர் தனது கர்ம வினையின் கசப்பான விளைவுகளை எதிர் கொண்டார்; இறுதியில், விஷ்ணு தத்தர் எனும் அந்த அந்தணர் அவரை அனைத்து நோய்களிலிருந்தும் குணப்படுத்தினார்||22||

மருந்துகளுடன் சேர்த்து மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட பழங்களும் அவருக்கு அளிக்கப்பட்டன; ‘ஜோட்டிங்’ (Zoting) எனும் பேய் இனத்தைச் சேர்ந்த மற்றொரு கொடிய ஆவி, அந்தப் பக்தி மிக்க அந்தணரால் கட்டுப்படுத்தப்பட்டது; சாஸ்திரங்களின் சாரம் மற்றும் அதன் விளக்கங்கள் பத்தாவது அத்தியாயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன||23||

ஆசிர்வதிக்கப்பட்ட பழங்களுடன் மருந்துகளும் வழங்கப்பட்டன; அசுர இனத்தின் மற்றொரு கொடிய சூனியம், புனிதமான பிராமணரால் கட்டுப்படுத்தப்பட்டது; சாஸ்திரங்களின் சாரமும் அதன் சித்தரிப்பும் பத்தாவது அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும் ||23||

கர்மாவின் பின் விளைவுகளின் அடிப்படையில், உயர்ந்த மற்றும் தாழ்ந்த இனங்களில் பிறவி எடுத்து ஆத்மாவின் பல்வேறு அலைச்சல்களும், கருப்பையில் பிரவேசிப்பதும் அதன் நிலைகளும் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன ||24||

ஒரு தம்பதியருக்கு மிகவும் புத்திசாலியான, ஞானம் பெற்ற குழந்தை பிறந்தது, ஆனாலும் அவன் பயத்தின் காரணமாக மந்த புத்தி உடையவனாகக் காட்டிக் கொண்டான்; கவலைப்பட்ட பெற்றோர் அவனை பிராமண விஷ்ணு தத்தரிடம் அழைத்துச் சென்றனர்; அவர் அவனுக்கு ஆறுதல் கூறி அவன் தேடிய ஞானத்தை வழங்கினார், இவை அனைத்தும் பதினொன்றாவது அத்தியாயத்தில் உள்ளன||25||

பிரபஞ்சத்தின் தோற்ற வரிசை, நுண் பிரபஞ்சம் மற்றும் பேரண்டத்தின் பண்புகள், மாயை என்பதின் சித்தரிப்பு மற்றும் கிளர்ச்சியூட்டும் சக்திகள், முன் மாதிரியான நடத்தையுடன் ஒரு குருவுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவம்…. ||26||

புனிதப் பிரசங்கங்களைக் கேட்பதன் முக்கியத்துவம், கேட்டவற்றைத் தியானித்தல், நிகழ் கால மற்றும் நிகழ் காலமல்லாத சாரம் தொடர்பான அறிவு, உடல் தாங்கிய தனி ஆன்மாவின் விளக்கம் ஆகியவை பன்னிரண்டாவது அத்தியாயத்தின் உள்ளடக்கமாக அமைகின்றன ||27||

சொற்கள், வாக்கியங்கள், தொடரியல் மற்றும் மொழியின் கோட்பாடு, அவற்றின் ஆறு பண்புகள், மேற்கூறிய பண்புகளைப் பற்றிய இன்னும் சில தகவல்கள், மற்றும் ‘தத்’ அல்லது ‘அது’ மற்றும் ‘த்வம்’ அல்லது ‘நீ’ ஆகிய சாரங்களை அடையாளம் காணுதல் ||28||

‘உடலுள்ள ஆத்மா, ‘தத்’ அல்லது ‘அது’ எனும் பரம கடவுளான விஷ்ணுவிடமிருந்து, தனிப்பட்ட ஆத்மா, ‘நீ’ எனும் அவரிடமிருந்தும் வேறுபடாத தன்மை, அவற்றின் ஒன்றிணைப்பு மற்றும் இந்த உண்மையுடன் உணர்வு பூர்வமாகத் தொடர்பு கொள்ளும் வழி ஆகியவை பதிமூன்றாவது அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன ||29||

லோகத்தினருக்கே தெரியாத பேரின்ப நிலை, மெய்யன்பர்களால் தேடப்படும் பேரின்ப நிலை, அவற்றை யோகத்தின் எட்டு அங்கங்களைக் கொண்ட பாதையின் வாயிலாக அடைவதற்கான வழி முறை, பற்றற்ற நிலையில் அவற்றை பயிலும் முறை போன்றவை இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளன. ||30||

ஸ்ரீமத் தத்தர், தனது பக்தரான அரசனுக்கு யோக மார்க்கத்தின் ‘யமம்’ மற்றும் ‘நியமம்’ குறித்தவற்றையும், அதன் பிறகு பிராணாயாமத்தின் சுவாச நுட்பங்களையும் விவரித்தார்; இவை பதினான்காவது அத்தியாயத்தின் உள்ளடக்கமாக அமைகின்றன ||31||

தெய்வீக அவதூத முனிவர், இன வேறுபாடுகளற்ற, கை, கால் போன்ற உறுப்பு வேறுபாடுகளற்ற பரம்பொருளின் இயல்புகள் குறித்த ஞானத்தை உபதேசித்தார்; அதன் பின்னர், அப் பொருளைக் குறித்து எவ்வாறு ஆழ்ந்து தியானிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் விரிவாக விளக்கப்படுகின்றன||32||

தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்திரேயரால் வழி காட்டப்பட்ட ஞானப் பாதையை, அரசர் முறையாக கற்று, அதை அப்படியே பின்பற்றினார்; அதன் விளைவாக அவர் பக்தி மயமான சமாதி நிலையை அடைந்தார்; இச்சம்பவம் முப்பத்து மூன்றாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது||33||

கற்றவற்றை அரசன் செயல் படுத்திய முறைகள் இறைவனின் திருப்திக்குரிய வகையில் நிறைவடைந்ததும், அவர் தன் சீடனை உறுதியுடன் அழைத்து இவ்வாறு கூறினார்: ‘இனி நீ பற்றுக்களற்றவனாகவும், எதனாலும் பாதிக்கப்படாதவனாகவும் இருக்கும் நிலையைப் பயிற்சி செய்; உன் ஆட்சிக்கும் நாட்டிற்கும் திரும்பிச் சென்று, விதிப்படி நிகழ வேண்டிய நிகழ்வுகளை எதிர்கொள்||34||

சஹஸ்ரார்ஜுனன் அதன்படியே தன் நாட்டிற்குத் திரும்பினான்; அவன் கடல் தெய்வத்தின் செருக்கை அடக்கினான்; வேத முறைப்படியான யாகங்களைச் செய்வதிலும், தாராளமாகத் தானங்கள் வழங்குவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்; இச்சம்பவங்கள் அனைத்தும் பதினாறாம் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன||35||

சஹஸ்ரார்ஜுனன் மேற்கொண்ட அத்தகைய நற்செயல்கள் அனைத்தும், அவனது உள் நோக்கம் குறித்துச் சந்தேகம் கொண்ட தேவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின; அதன் விளைவாக, அவர்கள் சூரிய பகவானை அரசனிடம் சென்று சந்திக்குமாறு தூண்டினர்; அந்தச் சந்திப்பு குறித்த விவரங்கள் பதினேழாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன||36||

நீதிநெறி தவறாத அந்த அரசன், விதிப்படி வசிஷ்ட முனிவரால் சபிக்கப்படுதல் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் ஆகியவை, அதே அத்தியாயத்தில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளன||37||

கடந்த காலத்தில், தன் தர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்தபோது, சஹஸ்ரார்ஜுனன் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரிடம் தனக்கு மரணத்தையே வரமாக கேட்டுப் பெற்றிருந்தான்; ரிஷிக முனிவர் குறித்த நிகழ்வும், சத்யவதிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் வேத முறைப்படி நடைபெற்ற திருமணமும் அடுத்த அத்தியாயத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளன||38||

எதிர்காலத்தை முன்னறிந்து கூறிய பிருகு முனிவர், சிவபெருமான் ஜமதக்னி முனிவராக அவதரித்தல், விஸ்வாமித்திர அரசன் தவ வலிமையால் விஸ்வாமித்திர முனிவராக உருமாற்றம் அடைதல் ஆகிய நிகழ்வுகள் அனைத்தும் பதினெட்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன||39||

ஸ்ரீமத் விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீமத் பரசுராமர், ஜமதக்னி முனிவரின் இளைய மகனாக அவதரித்தார். தன் தந்தையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, அவர் தன் சகோதரர்களையும் தாயாரையும் கொன்றார்||40||

ரேணுகா தேவிக்குச் சேவை செய்ததன் மூலமும், தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை முறையாக நிறைவேற்றியதன் மூலமும் பெரும் புகழை ஈட்டியவர் ஸ்ரீமத் பரசுராமர் எனும் தெய்வமே ஆவார்; அந்த சம்பவங்கள் பத்தொன்பதாம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன||41||

தெய்வங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றைச் சிரத்தையுடன் வழிபட்டு வந்தனர்; ஒருமுறை சஹஸ்ரார்ஜுன மன்னர் வருகை தந்தபோது, ஜமதக்னி முனிவர் அவருக்கும் அவரது படைக்கும் உண்மையான விருந்தோம்பலை அளித்தார் ||42||

விதியின்படி, மன்னன் தன் நீதியை மறந்து, முனிவரின் பசுவைக் கடத்திச் சென்றான்; அதன் விளைவாக, ஸ்ரீமத் பரசுராமர் அவனைத் துரத்தினார்; இந்த நிகழ்வு இருபதாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது||43||

பிரபஞ்சம் முழுவதையும் பிரளய காலத்தில் தன்னுள் மீண்டும் அடக்கிக் கொள்பவராக கருதப்படும் தெய்வத்தால் சஹஸ்ரார்ஜுனன் பாதுகாக்கப்பட்டாலும், விதியின் விளைவினால் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் மூலமே அவதரித்த ஸ்ரீமத் பரசுராமர் தனது கோடரியால்,சஹஸ்ரார்ஜுனனின் கைகள் அனைத்தையும் வெட்டினார் ||44||

அதன் பின்னர் அவர் மன்னனைக் கொன்றார்; இது பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது; அவர் தன் மகனை புனித யாத்திரைக்கு அனுப்பினார்; தந்தை அறிவுறுத்தப்பட்டபடி, பரசுராமர் புனிதத் தலங்களுக்குச் சென்றார்; இவை 21வது அத்தியாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன ||45||

தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க, சகஸ்ரார்ஜுனனின் மகன்கள் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரின் தலையைத் துண்டித்தனர்; இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வைக் கண்டு அன்னை ரேணுகா புலம்பினாள்||46||

ஸ்ரீமத் பரசுராமர் தாம் ஆசிரமத்திற்குத் திரும்பி, தான் இல்லாத நேரத்தில் நடந்ததைக் கண்டு, கோபமடைந்து, குற்றவாளிகளுக்கு எதிராகப் போர் தொடுத்தார்; அது 22 ஆம் அத்தியாயத்தில் முழுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது ||47||

அதன்பிறகு ஸ்ரீமத் பரசுராமர் தன் பெற்றோர் இருவரையும் தூக்கிக் கொண்டு, ஸ்ரீமத் தத்த பகவானைச் சந்திக்க அழைத்துச் சென்றார்; தாய் ரேணுகா தெய்வத்தை புகழ்ந்தார்; பதிலுக்கு ஸ்ரீமத் தத்தரும் அவளைப் புகழ்ந்தார்||48||

அங்கே ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவானின் முன்னிலையில் அனைத்து அத்தியாவசிய சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டன; தாய் ரேணுகா தன் கணவருடன் ஈமச் சடங்கு மேடையில் சென்றார்; இது 23 ஆம் அத்தியாயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது ||49||

ஸ்ரீமத் பரசுராமர், ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவானை வழிபட்ட பிறகு, தமது பெற்றோர்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தார், அதே கணத்தில், வேறொரு உலகில் தன் பெற்றோருக்காகத் துக்கமடைந்திருந்தவரை ஸ்ரீமத் தத்தாத்ரேயர் அவருக்குக் காட்டினார்||50||

தான் பெற்ற வரத்தின்படி, ஸ்ரீமத் பரசுராமர் போர்வீரர் குலத்தினர் அனைவரையும் அழித்து, பூமியை வென்று அதை பக்தியுள்ள காஷ்யப முனிவருக்குப் பரிசளித்தார்; பின்னர் 24 ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர் கடலோரத்தில் தங்கினார்||51||

தந்தையின் மனதிற்கு உகந்தவனே சிறந்த புதல்வன் ஆவான்; முனிவர் காலவர் தாம் வேண்டி பெற்ற தெய்வ சக்தி வாய்ந்த குதிரையை பெற்று, அவற்றை மன்னர் ரிதுத்வஜனிடம் ஒப்படைத்தார்; பின்னர், தாம் செய்த வேத யாகத்தைப் பாதுகாப்பதற்காக அந்த இளவரசரைத் தம்முடன் அழைத்துச் சென்றார்; அங்கே, பாதாளகேது என்னும் அரக்கன் வதம் செய்யப்பட்ட நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது ||52||

மன்னரால் துரத்தப்பட்ட அந்த அரக்கன், உடலில் அம்பு தைத்த நிலையிலேயே பாதாள உலகத்திற்குத் தப்பிச் சென்றான்; அங்கே அவன், பக்தியில் சிறந்த மதாலஸா என்னும் மங்கையை சந்தித்தான்; இந் நிகழ்வுகள் அனைத்தும் 25-ஆம் அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும்||53||

தேவ இனத்தைச் சேர்ந்த கந்தர்வர்களின் மகளான மதாலஸாவை அவளது தோழி ஒருத்தி மூலம் அவர்களின் குருவிடம் அறிமுகம் செய்து வைத்தனர்; இருவரின் பரஸ்பர சம மதத்துடன் திருமணம் இனிதே நடைபெற்றது; பின்னர், அந்த இளவரசர் தன் புது மனைவியுடன் தன் நாட்டிற்குத் திரும்பினார்||54||

அரக்கனை வதம் செய்தல், மனைவியுடன் நாடு திரும்புதல், அரக்கனின் சூழ்ச்சியில் அந்தப் பத்தினி சிக்கிக் கொள்ளுதல், இறுதியில் அவள் தன் உடலைத் நெருப்பிற்கு அர்ப்பணித்தல் ஆகிய நிகழ்வுகள் 26-ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன ||55||

மனைவியைப் பிரிந்து துயருற்ற இளவரசரின் பற்றற்ற நிலை, காட்டில் அவன் தனித்து வாழ்ந்த சூழல், தெய்வீக நாகமான அஸ்வத்தாரரின் புதல்வர்களுடன் அவனுக்கு ஏற்பட்ட நட்பு, மற்றும் அவனது துயர நிலையைக் கண்டு அவர்கள் காட்டிய பரிவு ஆகியவை இதில் கூறப்பட்டுள்ளன ||56||

அந்தத் தெய்வீக நாகமே முயற்சி எடுத்து, ஞானத்தின் தேவியான சரஸ்வதியிடம் வரம் பெற்றது; அதன் பிறகு, சிவபெருமானின் அருளையும் பெற்று, அந்த இளவரசனின் (தன் மகனின் நண்பனின்) உயிர் துறந்த மனைவியை மீண்டும் உயிர்ப்பித்து தந்தது போன்றவை 27-ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டு உள்ளன ||57||

துயரத்தில் இருந்த அந்த இளவரசன் பாதாள உலகத்திற்கு அழைக்கப்பட்டு, அங்கே தன் மனைவியை மீண்டும் பெறுவதற்காக மேற் கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் பற்றி அறிந்துகொண்டான்; நண்பர்களின் முயற்சிகளின் விளைவாக, அங்கே அந்தத் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர முடிந்தது||58||

சிறிது காலத்திற்குப் பிறகு அந்த இளவரசன் தன் நாட்டிற்குத் திரும்பினான்; அங்கே செல்வத்தின் தேவியான மகாலட்சுமியே நேரில் வந்து குடியேறியது போன்றதொரு செழிப்பு நிலவியது; அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்; அந்தப் பத்தினித் தாய், தன் மகன் குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுக்கு ஆன்மீக நெறிகளைப் போதித்து நல் வழிப்படுத்தினாள் ||59||

தன் மகன் உலகியல் இன்பங்களில் பற்றற்று இருப்பதைக் கண்ட மன்னர் பெரிதும் வியப்படைந்தார்; அத்தகைய மன நிலை கொண்டவர்கள் அரச வாரிசுகளாகத் திகழ முடியுமா என்று எண்ணி அவர் வருந்தினார்; அப்போதுதான் அவருக்கு ஒரு உண்மை தெரிய வந்தது; அந்த இளவரசனுக்கு அளிக்கப்பட்ட அனைத்துக் கல்வியும், அவனது தாயாரால் ஆன்மீகப் பாதையிலேயே செல்லும் முறையில் அமைத்துத் தரப்பட்டிருந்தது ||60||

அப்போது அவர் தன் மனைவியிடம், தங்கள் மகன்களுக்குத் துறவு நெறியைப் போதிக்காமல், ஆட்சி நெறியையே போதிக்குமாறு கூறினார்; அரச தர்மத்தின் வாயிலாகவே இதுவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்; இம் முழு விவரமும் 29-ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது ||61||

அரசி அவ்வாறு செய்யத் தயங்கினாலும், தன் இளைய மகனான இளவரசன் அலர்கனுக்கு, பகைவர் எவருமின்றி ஆட்சி நடத்துவதற்குத் தேவையான அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்; மேலும், அவற்றைச் செயல்படுத்துவதில் அவனைச் சிறந்த வல்லுநனாகவும் உருவாக்கினார் ||62||

விரைவிலேயே அலர்கன் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்; அவன் தன் வாழ்நாளைப் புலனின்பப் பொருட்களின் பின்னால் ஓடி வீணடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவனது சகோதரனும் ஞானியுமான சுபாஹு, அவனை நல்வழிப்படுத்த முடிவு செய்து அவன் மீது போர் தொடுத்தான்; இச்சம்பவம் 30-ஆம் அத்தியாயத்தில் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது||63||

போரில் அலர்கன் மிக மோசமாகத் தோல்வியடைந்தான்; அப்போது தன் தாயின் அறிவுரையையும், அவருக்காகத் தாய் எழுதி வைத்திருந்த இறுதி மடலையும் நினைவு கூர்ந்த அவன், பெரும் முயற்சி மேற்கொண்டு, தெய்வமான ஸ்ரீமத் தத்தரைச் சந்தித்தான்||64||

மன்னன் அலர்கன் இறைவனை மிகுந்த ஈடுபாட்டுடன் சேவித்தான்; இறைவன் அவனது அனைத்துத் துன்பங்களையும் போக்கி, அவனுக்கு மெய் ஞானத்தை உணர்த்தினார்; இவ்வாறு ஆன்மீக அறிவைப் போதித்து, அதற்கான நேரடி அனுபவத்தையும் அருளிய நிகழ்வு 31-ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது ||65||

தெய்வீக தத்துவத்தின் சாராம்சத்தை அறிதல், மனதின் தன்னிச்சையான அலை பாய்தல்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறை, உள்ளுக்குள் மறைந்திருக்கும் நுட்பமான ஆசைகளை வென்றெடுக்கும் வழிமுறை என அனைத்து ஞானத்தையும் மன்னன் அலர்கனுக்குப் இறைவன் போதித்தார்||66||

இறைவனுடன் உணர்வு பூர்வமான ஒன்றிப்பை அனுபவிக்க, யோகத்தின் எட்டு அங்கங்களைக் கொண்ட பாதை அரசருக்கு உபதேசிக்கப்பட்டது; 32-ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளவாறு, இறைவன் தன் பக்தனுக்கு நுட்பமான வழிமுறைகளை அறிவுறுத்தினார் ||67||

தத் விஷ்ணோ: பரமம் பதம்” (அதுவே விஷ்ணுவின் பரமபதம்) என்பது வேத வாக்கியமாகும்; இது இறைவனான விஷ்ணுவிடமிருந்து வேறு இல்லாத மிக உயர்ந்த நிலையைச் சுட்டிக் காட்டுகிறது; அதை புரிந்து கொள்வது கடினம்; எனவே, அடுத்த அத்தியாயத்தில் ‘தாரணை’ (மனதை ஒருமுகப்படுத்தி நிறுத்துதல்) எனும் வழிமுறையின் மூலம் இது விளக்கப்படுகிறது||68||

யோகப் பாதையில் வைத்துக் கொள்ள வேண்டிய உறுதியான மனநிலை, அந்த பாதையைப் பயில்வதிலும், கடைப் பிடிப்பதிலும் எழும் நற்பண்புகள் மற்றும் குறைகள் ஆகிய அனைத்தும், 33-ஆம் அத்தியாயத்தில் இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரால் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன ||69||

அந்த பாதையின் மூலம் அடையக் கூடிய பல்வேறு சித்தி நிலைகள் அற்புத ஆற்றல்கள், பற்றற்று இருப்பதன் முக்கியத்துவம் போன்றவை அந்த பாதையை நாடி வந்த அரசருக்கு விளக்கப்பட்டுள்ளது; அதில் ‘சகுண’ (குணங்களுடன் கூடிய) மற்றும் ‘நிர்குண’ (குணங்களற்ற) நிலைகளுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன||70||

அந்த பாதையின் ஆன்மீகத் தீச்சுடர் அணையாமல் இருப்பதற்காக, இறைவன் அந்த பாதையின் சிறப்பியல்பு குறித்த அனைத்தையும் வரையறுத்துக் கூறினார்; துறவிகள் பிச்சை (பிக்ஷை) ஏற்கும் முறைகள் குறித்து 34-ஆம் அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது||71||

யோகப் பாதையின் ஒரு வழி முறையாக, மனதை ஒருமுகப்படுத்தி நிலை நிறுத்துவதற்காக, நுட்பமான ‘அனாஹத’ ஒலிகளைக் கூர்ந்து கவனித்தலும், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மீதான தியானமும் தொடர்ந்து விளக்கப்படுகின்றன||72||

அரசருக்கு மேலும் ஒரு விளக்கம் அளிக்கப்படுகிறது: ‘அ’, ‘உ’, ‘ம’ ஆகிய மூன்றரை மாத்திரை எழுத்துக்களால் ஆன ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மீது தியானம் செய்வதன் மூலம், அந்த மந்திரத்தில் அடங்கியுள்ள அரை மாத்திரை உட்பட அனைத்துப் பகுதிகளையும் கடந்து, படிப்படியாக முக்தி அடைவது எவ்வாறு என்பது 35-ஆம் அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளது ||73||

வரவிருக்கும் மரணத்தின் அறிகுறிகள் மற்றும் முன்னறிவிப்புகள்; குறிப்பாக, ஒரு வருடத்திற்குள் நிகழக் கூடிய மரணத்தின் அறிகுறிகள் என அனைத்தும் விரிவாக விளக்கப்பட்டு உள்ளன; முக்தியை நாடும் யோகிகள், விரைவாகப் பற்றற்ற துறவு நிலையை அடைவதற்காக, அந்த விஷயங்களைக் கற்றுத் தெரிந்துகொள்வது அவசியமாகும் ||74||

யோகப் பாதையை முழுமையாகக் கடந்து முடிக்காமலேயே இவ்வுலகை நீத்துச் செல்லும் யோகப் பயிற்சியாளர்கள், எவ்வாறு படிப்படியான முக்தி நிலையை அடைகிறார்கள் என்பது 36-ஆம் அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது||75||

பேரானந்தம் அடைந்த அரசர், அந்த முழுமையான ஆன்மீக ஞானத்தையும் தன் உள்ளத்தில் உள் வாங்கிக் கொண்டார்; அவர் இறைவனைப் போற்றித் துதித்தார்; பின்னர் அலர்கன் (அரசர்), தன் சகோதரனான சுபாஹுவைச் சந்திக்கச் சென்றார்; அங்கு, பக்தி உணர்வு ததும்பும் புனிதமான சூழல் நிலவியது||76||

இறைவனின் திவ்ய ரூபம் மறைந்து போகக் கண்ட அரசன் அலர்கன், இறைவனின் குணங்களைச் சுமந்த அந்த ரூபமே மேலானது என்று கருதி, இறைவனைப் போற்றித் துதித்தான்; இச் செய்தி 37-ஆம் அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது||77||

அரசனின் அனைத்துத் தவறான நம்பிக்கைகளையும் களைவதற்கு இறைவன் அவனுக்கு உதவினார்; இறைவனின் உபதேசத்தைப் பெற்ற அரசன், தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று தன் சகோதரர்களைச் சந்தித்தான்; இறைவருள் மூலம் தான் அடைந்த ஆத்ம ஞானத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தான்||78||

காசி மன்னனும் அதே போன்று சுபாஹுவால் நல்வழிப்படுத்தப்பட்டான்; அதன் பிறகு அவன் காட்டில் சென்று வசிக்கும் வாழ்வை மேற் கொண்டான்; அரசன் அலர்கனும் தன் மகனை அடுத்த ஆட்சியாளராக முடி சூட்டி விட்டு, இறை பக்தியிலேயே திளைத்திருக்கத் தீர்மானித்தான்; இச்செய்திகள் 38-ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளன||79||

அரசன் புரூரவஸின் மகனும், ஆயு என்னும் நற்பண்புகள் நிறைந்த ஆத்மாவான மன்னன், தனக்கு வாரிசு இல்லையே என்று வருந்தி, இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் தீவிர பக்தனாக மாறினான்||80||

அவன் இறை சேவையிலேயே தன் காலத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டு, அதன் பயனாக இறைவனிடமிருந்து ஒரு வரத்தைப் பெற்றான்; இச்செய்திகள் அனைத்தும் அடுத்ததாக வரும் 39-ஆம் அத்தியாயத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன ||81||

மன்னன் ஆயு திரும்பி வந்து, தான் வரமாக பெற்ற பிரசாதத்தை புனிதப் பழத்தை தன் மனைவியிடம் அளித்தான்; அவள் கருவுற்று, கர்பவதியாக மாறினாள்; அவள் தன் கனவுகளில் தேவதைகளையும், பிற புனிதமான காட்சிகளையும் கண்டாள்; அந்த கனவுகளுக்கான விளக்கங்களைச் சௌனக முனிவர் விரிவாக எடுத்துரைத்தார் ||82||

ஹுண்டாசுரன் என்னும் வலிமை மிக்க அரக்கன், தன் எதிரியான அந்தக் குழந்தையைத் தாயின் கருவிலேயே அழித்து விடத் துடித்தான்; ஆனால் இறைவனின் திருவருளால் மட்டுமே அந்தக் குழந்தையான இளவரசன் எவ்விதத் தீங்கும் இன்றிப் பிறக்க முடிந்தது; இச்செய்திகள் அனைத்தும் 40-ஆம் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன ||83||

இதனுடன் ஸ்ரீ தத்த மஹாத்மியம் முடிவடைந்தது