COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக  தத்துவம்

அத்தியாயம் 44
காட்டில் நகுஷனுக்கு ஆகாயவாணியின் தெய்வீக செய்தி

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

அடக்கமும் பணிவும் கொண்ட சீடனான தீபக் மீண்டும் ஒரு முறை குரு வேத தர்மாவின் திருவடிகளை வணங்கினான்; அதன்பின், அரசர் ஆயுவின் மகனின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிக் கேட்டறிந்தான் ||1||

‘ஒளி வீசும் சூரியக் கதிரைப் போலத் திசைகளின் காவலனாகப் பிறந்து, ஆட்சி புரியும் நற்பேறு பெற்றவனாய், யோக மார்க்கத்தின் அதிபதியான இறைவனால் பிறப்பிலிருந்தே காக்கப்பட்டு வந்த அந்த இளவரசன், தன் எதிரியை எவ்வாறு வீழ்த்தினான்? ||2||

அந்த முழு வரலாற்றையும் எனக்கு விரிவாக எடுத்துரைப்பீராக’ என்று அவன் விடுத்த வேண்டுகோளைக் கேட்ட குரு வேத தர்மா ‘இப்போது உன் கவனத்தை ஒருமுகப்படுத்தி, இந்த அமுதமயமான உபதேசத்தை கேள்’ என்று கூறினார் ||3||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘சகோத்ரா: பிதரௌ சாஸ்ய வியுக்த பால்ய ஏவ ச:, நிமித்தீக்ருத்ய நகுஷோ முனிம் தத்தேன ரக்ஷித’
இதன் விளக்கம் மற்றும் கருத்து என்ன என்றால் ‘நகுஷன் சிறு வயதிலேயே ஒரு சாபத்தின் அல்லது விதியின் தன் பெற்றோரை விட்டுப் பிரிந்தான்; அதன் காரணமாக, நகுஷன் ஒரு முனிவர் தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டான் (ஸ்ரீமத் தத்தாத்திரேயரால் காப்பாற்றப்பட்டான்)’||4||

முனிவர் வசிஷ்டர் சமநோக்குடையவரும் புனிதரும் ஆவார்; அவர் எப்போதும் இறைவனான ஸ்ரீமத் தத்தரின் சிந்தனையிலேயே நிலைத்திருப்பவர்; நகுஷனை வளர்க்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதும், அவர் அத் திருப்பணியிலேயே தன் பொழுதைச் செலவிட்டார்||5||

எதிரிகளின் செல்வங்களை அழிப்பதற்கும், தேவர்களின் செல்வங்களைப் காப்பாற்றுவதற்கு பிறப்பிக்கப்பட்ட நகுஷன், தன்னை வளர்த்து வந்திருந்த முனிவர் வசிஷ்டர் மற்றும் அவரது சகாக்களின் தகுந்த வழிகாட்டுதலின் பேரில் கல்வி பயின்றான்; விரைவில் அறிவு மற்றும் ஒழுக்கத்தால் உயர்ந்த நிலையிலான இளைஞனாக வளர்ந்து வந்தான் ||6||

அவனுக்கு வில் வித்தையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது; அந்தப் பயிற்சியில் எத்தனை மணி நேரம் செலவிட்டாலும் அவனுக்குச் சலிப்பேற்பட்டதில்லை; ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், சாஸ்திர ஞானத்தைப் புரிந்து கொள்வதிலும் அவன் சிறந்து விளங்கினான்; விரைவில், பிறர் வந்து கருத்து கேட்கும் அளவிற்கு அவன் தகுதி வாய்ந்தவனாக மாறி விட்டான் ||7||

அறிவுச் செழுமை மிக்கவனாக இருந்த போதிலும், அவனிடம் கர்வத்தின் அறிகுறிகள் ஒருபோதும் தென்பட்டதில்லை; தனக்குக் கிடைத்த ஒவ்வொரு கணத்தையும் அவன் தன் ஞான மிக்க வளர்ப்புப் பெற்றோருடன் செலவிட்டான். அவனது நடத்தையில் பிடிவாதம் இல்லை; அவனது பணிவும் மரியாதையும் அவனுக்கு பெருமளவு புகழை பெற்றுத் தந்தது ||8||

புகழ்ச்சியையோ, இகழ்ச்சியையோ பற்றிக் கவலைப் படாமல், தன் கடமையில் முழுமையாக ஈடுபட்டிருந்தான்; படிப்படியாக, தான் முதிர்ச்சியடைந்து வளர்வதற்குத் தேவையான அனைத்து வகைகளிலான அறிவுகளையும் அவன் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தான் ||9||

அவனது நடத்தையைக் கண்ட மக்கள், அவன் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறான் என்று அவனைக் குறித்தும் அவனது வளர்ப்பு முறை குறித்தும் பெருமையாக பேசி மன நிறைவு அடைந்தனர்; அப்போது வசிஷ்ட முனிவர் அவனை நோக்கி ‘நகுஷா, நீ காட்டிற்குச் சென்று, அங்குள்ள சில காட்டு விலங்குகளை வேட்டையாடி வா’ என்று கட்டளையிட்டார்||10||

அப்படி ஒரு விசித்திரமான கட்டளையைக் கேட்ட அந்த இளவரசன், முனிவரின் ஞானத்தை எள்ளளவும் சந்தேகிக்காமல், அவரது தீர்க்க தரிசனத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு, தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குப் புறப்பட்டான் ||11||

பசுக்களையும் பிற விலங்குகளையும் கொன்று தின்னும், அதே வேளையில் அங்குள்ள பழங்குடி இன மக்களுக்கு தீங்கு விளைவித்து வந்த பல ஊனுண்ணி* விலங்குகளை அவன் அங்கே கண்டான்; அந்த வனப் பகுதியை அந்த விலங்குகளின் அச்சுறுத்தலிலிருந்து விடுவித்தான்
{*ஊனுண்ணி (Carnivore) என்பது மற்ற விலங்குகளின் இறைச்சியை அல்லது புலால் உணவை உண்டு வாழும் சிங்கம், புலி, நரி, ஓநாய் போன்ற விலங்குகளைக் குறிக்கும்} ||12||

வில் வித்தையில் அவனுக்கிருந்த திறமையை அங்கிருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள், அவனது குறி தவறாத ஆற்றலைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர்; அவர்கள் தங்களுக்குள்ளேயே அவனைப் பற்றிப் பேசிக் கொண்டனர்’ ||13||

ஒரு முறை தேவர்கள் அவனை நோக்கி ‘நீ சந்திர குலத்தைச் சேர்ந்த மன்னன் ஆயு மற்றும் அரசி இந்துமதி ஆகியோரின் மகன் ஆவாய்; நீ மிகுந்த பக்தியுடன் போற்றி வணங்கும் அந்த முனிவர் தம்பதியர் அல்ல; அவர்களே (மன்னரும் அரசியுமே) உனது உண்மையான பெற்றோர்கள் ஆவர்’ என்று கூறினர் ||14||

‘நீ ஒரு முனிவரின் மகன் என்று தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்; அந்தத் தவறை விவேகத்துடன் மாற்றிக் கொண்டு விடு; நீ சென்று உன் உண்மையான பெற்றோரைச் சந்திக்க வேண்டும்; அவர்கள் உன்னை நினைத்து இடை விடாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அசோக சுந்தரி என்னும் இளவரசியை நீ மணப்பது விதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது||15||

மண்ணுலக மனிதர்கள் அனைவரையும் தனக்கான உணவாகக் கருதும் ஹுண்டாசுரன் என்னும் அரக்கனின் நாட்டிற்குச் செல்வாயாக; அவனை அழித்து விட்டு, அதன் பிறகு உனது உண்மையான பெற்றோரைச் சந்திக்க செல்வாயாக||16||

மீதமுள்ள கொடிய அசுரர்கள் கூட, உன் வலிமையால் கொல்லப்படுவார்கள்; ஸ்ரீமத் தத்த பகவானின் ஆசீர்வாதங்கள் உனக்கு சக்தியளித்துள்ளன; சிறிதளவு சந்தேகத்திற்கோ அல்லது அச்சத்திற்கோ இடம் கொடுக்காதே’ ||17||

அந்த தெய்வீக ஒலியையும் தேவர்களின் அறிவுரைகளையும் கேட்ட நகுஷன் சிந்தித்தான்; இங்குள்ள அனைவரும் என்னை வசிஷ்ட முனிவரின் மகன் என்று கூறுகின்றார்கள், அப்படியிருக்க இந்த தெய்வீகக் குரல் முற்றிலும் வேறொன்றை எப்படி வெளிப்படுத்துகின்றது||18||

வானத்திலிருந்து வந்த அந்த வார்த்தைகள், தம்மை சில குறும்புக்காரர்கள் ஏமாற்றுவதற்காக செய்யும் தந்திரமாக இருக்குமோ?; அதைப் பேசியவர்கள் தாம் யார் என்பதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை; அவர்கள் என்னை ஏமாற்ற விரும்புகிறார்களா? ||19||

தாம் கேட்ட குரலை பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்த நகுஷன், ஒன்றன் பின் ஒன்றாக பல வழிகளைப் பரிசீலிக்கத் தொடங்கினான்; விரைவில் அவன் முனிவரின் ஆசிரமத்திற்குத் திரும்பி, தன் தந்தை போன்ற முனிவரை வணங்கினான் ||20||

அவன் அன்றைய நிகழ்வுகளை முனிவரிடம் விவரித்தான்; அவரும் அந்தத் தேவ குரலை புறந் தள்ளாமல் இவ்வாறு கூறினார் ‘உண்மையிலேயே நீ இந்துமதி அரசியின் கருவில் பிறந்த ரத்தினமும், சூரிய குலத்தைச் சேர்ந்த நீதியுள்ள அரசன் ஆயுவின் மகனுமாவாய்||21||

தனித்துவமான, எல்லாம் வல்ல தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் உனது தந்தை ஆயுவை ஆசீர்வதித்தார்; அதனால்தான் நீ பிறந்தாய் என்பது மட்டுமல்ல அவரே உன்னை அனைத்து நேரங்களிலும் பாதுகாத்து வருகின்றார்; மேலும் அனைத்தையும் அறிந்தவராக உள்ளதினால் உன்னுடைய அனைத்து துரதிர்ஷ்டங்களையும் விலக்கி வைக்கிறார் ||22||

நீ இந்துமதி அரசியின் கருவில் இருந்த காலத்திலிருந்தே அவர் உன்னைக் காப்பாற்றி வருகிறார், இனியும் காப்பாற்றுவார்; மேலும் நீ பிறந்தபோது , ஹுண்டாசுரன் என்ற அசுரன் அதை அறிந்து கொண்டான் ||23||

அவன் உனது தாயாரின் உடலுக்குள் சென்று கருவை கலைக்க முயன்றான்; ஆனால் அரசியின் உடலுக்குள் அவனால் நுழைய முடியவில்லை; அப்போது இறைவன் ஸ்ரீமத் தத்தர் தனது ‘சுதர்சனம்’ எனும் தெய்வீகச் சக்கரத்தை அனுப்பினார்; அது அந்த அரக்கனால் ஏற்பட இருந்த அனைத்து தீங்குகளிலிருந்தும் உன்னைச் பாதுகாத்து வந்தது||24||

அரசன் ஆயுவின் மகனே தன்னை வதம் செய்யப் போகிறான் என்று ஹுண்டாசுரனுக்கு முன்னரே தெரிந்து இருந்தது; அதன் விளைவாக, நீ பிறந்த சமயத்தில், அவன் தனது அனைத்து மாயா ஜால சக்திகளையும் பயன்படுத்தி அரசியின் அந்தப்புரத்திலிருந்து உன்னைத் திருடிச் சென்றான் ||25||

அரசியிடமிருந்து உன்னை கடத்திச் சென்ற பின்னர் உன்னை தனது இராஜ்ஜியத்திற்கு அழைத்துச் சென்று, தன் மனைவியிடம் ஒப்படைத்தான்; உன்னைக் கொன்று சமைத்து உண்ணுமாறு அவளுக்கு உத்தரவிட்டான்; அவளோ, உன்னைத் தன் பணிப் பெண்ணிடம் ஒப்படைத்தாள் ||26||

எதிரியின் அரண்மனைக்குள் இருந்த போதிலும், உனக்கு எவ்விதத் தீங்கும் நேரவில்லை; உன் உடலில் ஒரு மயிர் கூடப் பிடுங்கப்படவோ அல்லது கீறப்படவோ இல்லை; அனைத்து ஆபத்துகளுக்கு மத்தியிலும் அந்த தெய்வமே உன்னை உயிரோடு காத்து வந்துள்ளார்; அந்தத் தெய்வீகக் கருணையை எப்படி விவரித்துரைக்க முடியும்? ||27||

நகுஷா, அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கேள்; ஹுண்டாசுரனின் மனைவியின் பணிப் பெண் உன்னை எடுத்துக் கொண்டு, ஒரு கசாப்புக்காரனிடம் ஒப்படைத்து இந்தக் குழந்தையை விரைவாகக் கொன்று சமைத்து, ஹுண்டாசுரனுக்குக் காலை உணவாகப் பரிமாறுவாயாக என்று கூறினாள் ||28||

பகுத்தறிவற்ற அந்த கசாப்புக்காரன், கத்திகள் மற்றும் பிற கருவிகளைக் கொண்டு உன்னைக் கொல்ல மூன்று முறை முயன்றான்; விண்ணுலக மன்னனான இந்திரன், மலைகளின் சிறகுகளை வெட்டி வீழ்த்துவதற்காக அவற்றின் மீது வஜ்ராயுதத்தைப் பொழிவது போன்றே அவனும் உன்னைக் கொல்ல முயன்றான்||29||

மனிதர்களைக் கொல்வதிலேயே கை தேர்ந்த அந்த வன்முறை மிக்க அரக்கர்களும் அவர்களின் உதவியாளர்களும் உன்னைக் கொல்ல முயன்றபோது, இறைவனின் சுதர்சனச் சக்கரம் மீண்டும் உன்னைச் சூழ்ந்து நின்று, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் காத்தது ||30||

உனது உயிரை கொல்ல நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தோல்வியடைந்ததைக் கண்டு கோபமும் குழப்பமும் அடைந்த அந்த கசாப்புக்காரன், திடீரெனத் தன் உள்ளத்தில் கருணை உணர்வு பொங்குவதை உணர்ந்தான்; அதனால் உனது உயிரைக் காப்பதற்கான முயற்சியில் இறங்கினான்||31||

உனக்கு எவ்விதத் தீங்கும் நேராதது ஏன் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை; தனது ஆயுதங்களும் வலிமையும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததைக் கண்டு வியப்படைந்த அவன், அரசியின் பணிப் பெண்ணிடம் நாம் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு, வேறெங்காவது இடத்தில் விட்டு விடுவோம் என்று கூறினான் ||32||

அதன்பின் அவர்கள் உன்னை அழைத்துக் கொண்டு, இந்த ஆசிரமத்திற்கு வந்தனர்; எங்களது வாசலில் உன்னை விட்டு விட்டு, விரைவாக ஓடி மறைந்தனர்; இவ்வாறே உனது விதிப்படி அமைந்த பிறப்பும், அதன்பின் நிகழ்ந்த சம்பவங்களும் அரங்கேறின; உன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தெய்வீகச் சக்தியே உன்னைப் பாதுகாத்து வருகிறது ||33||

முதலில் நீ யார் என்பதையும், எங்கள் வாசலுக்கு நீ எப்படி வந்தாய் என்பதையும் என்னாலும் புரிந்து கொள்ள இயலவில்லை; உன்னைப் பற்றி ஆழ்ந்து தியானித்த பின்னரே, இவையனைத்தும் எனக்குத் தெளிவாகின; உன்னை வளர்த்துப் பேணும் பொறுப்பு எனக்கே அளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, நாங்கள் அதைச் செவ்வனே செய்து வருகிறோம்||34||

அரக்கர்களின் தொடர் தாக்குதல்களால் நீ இனிமேல் துன்புறாதிருக்கவும், உன் பெற்றோரும் உன் நாடும் பாதுகாப்பாகத் திகழவும் வேண்டி, நீ இவ்விடத்தின் பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்பட்டாய்||35||

இவ்வாறு, உனக்கு மட்டுமல்லாமல், மன்னன் ஆயுவிற்கும் அவனது குடி மக்களுக்கும் நன்மையளிக்கும் இறைவனின் தொலை நோக்கு திட்டத்தின்படி, நீ எங்கள் பராமரிப்பில் வளர்ந்தாய்; இப்போது நீ முற்றிலும் முதிர்ச்சியடைந்து விட்டாய்; எனவே, உன் எதிரியைக் கண்டறிந்து அவனை அழிப்பதற்கான காலம் வந்து விட்டது||36||

அந்த பணியை நீ நிறைவு செய்த பிறகு, முதலில் இங்கு திரும்பி வந்து எங்கள் ஆசிகளைப் பெற்றுக் கொள்; அதன் பின்னர், உன் தந்தையான மன்னன் ஆயுவின் நாட்டிற்குச் சென்று, அந்நாட்டை அறநெறி வழுவாமல் ஆட்சி செய்||37||

அசோக சுந்தரி எனும் மங்கை ஒருத்தி, முன்னொரு காலத்தில் ஹுண்டாசுரன் எனும் அரக்கனால் கடத்திச் செல்லப்பட்டாள்; உனது (மன்னன் ஆயுவின் மகனால்) கையால் நீ (ஹுண்டாசுரன்) கொல்லப்படுவாய் என்று அவள் அந்த அரக்கனைச் சபித்தாள்; அன்று முதல் அவள் அந்த அரக்கனின் சிறைச்சாலையிலேயே அடைபட்டுக் கிடக்கிறாள் ||38||

ஓ நகுஷா! உன்னையே தன் கணவனாக வரித்துக் கொண்ட அசோக சுந்தரி, நீண்ட காலமாகத் தவமியற்றி வருகிறாள்; நீ வந்து அவளை மீட்க வேண்டும் என்றும், உனக்கு இடப்பட்ட பணியை நீ நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவள் இடை விடாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறாள் ||39||

இனி நீ சிறிதும் தாமதிக்கக் கூடாது; உடனே சென்று அந்த அரக்கர்களை அழித்து விட்டு வா; அதன்பின் இங்கு வந்து, பிறகு மன்னன் ஆயுவிடம் செல்வாயாக; நீண்ட காலப் பிரிவிற்குப் பிறகு உன்னைக் காணும் மகிழ்ச்சியை அவர்களுக்கு அளிப்பாயாக||40||

உலகங்களைக் காப்பவராகப் போற்றப்படும் இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயர், உன் எதிரிகளை அழிப்பதில் உனக்குத் துணையாக இருப்பார்; அவருடைய திவ்ய திருவடிகளைத் தியானித்து, அரக்கர்களுடன் போரிட்டு வெற்றி பெறுவாயாக ||41||

ஓ நற்பண்புகள் நிறைந்த மைந்தனே, சிறந்த வீரனே, இனிமேல் காலம் தாழ்த்தாதே; நீ நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ்வாயாக; நீ கற்றுத் தேர்ந்த கலைகளையும், உன் சொந்தத் திறமையையும் வலிமையையும் முழுமையாக நம்பு; பொறுமையைக் கடைப் பிடித்து உன் எதிரிகளை எதிர் கொள்வாயாக||42||

சமஸ்கிருத செய்யுள்: ‘வர்தா: ஸந்து பிதர: பலதா: ஸந்து தே ஸுரா:, யசோதா: ஸந்து தே மந்த்ரா:, ஆயுர்தா: ஸந்து தே த்விஜா:’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘நம்முடைய முன்னோர்கள் (பித்ருக்கள்) நமக்கு வேண்டிய வரங்களை அளிப்பவர்களாக இருக்கட்டும்; தேவர்கள் நமக்கு நல்ல பலன்களைத் தருபவர்களாக இருக்கட்டும்; நாம் உச்சரிக்கும் மந்திரங்கள் நமக்கு புகழைத்) தருபவையாக இருக்கட்டும்; வேத விற்பன்னர்கள் நமக்கு நீண்ட ஆயுளை அருளட்டும்.’ ||43||

நீங்கள் மிக உயர்ந்த மங்களத்தையும் நன்மையையும் அடைய வேண்டும்; இவையே உனக்கு எங்கள் ஆசிகள்; அன்பிற்குரிய நகுஷா, அனைத்து திசைகளிலும் உன் பெயர் நன் மதிப்புடன் ஒளிரட்டும்’ என்று வாழ்த்தினார் ||44||

முனிவரின் அன்பான வார்த்தைகளை கேட்ட நகுஷன், பணிவுடன் அவரை வணங்கி, அவரிடம் இருந்து ஆசிகளையும் பெற்றுக் கொண்டான்; முனிவரின் விளக்கங்களால் முழுத் திருப்தியடைந்த அவன், தன் கடமையை நிறைவேற்றத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான் ||45||

நகுஷனுக்கு ஏதேனும் ஐயங்கள் எஞ்சியிருந்தால், அவற்றை விளக்கத் தான் உதவலாமா என்று முனிவர் மீண்டும் வினவினார்; ஆனால் அந்த இளவரசனோ, தான் முழுத் திருப்தி அடைந்து விட்டதாகக் கூறி, மீண்டும் முனிவரின் பாதங்களில் பணிந்து வணங்கினான்; அவன் இவ்வாறு கூறினான் ‘சர்வமும் அறிந்த முனிவரே, என் தந்தையே, தங்கள் பாதங்களும் ஆசிகளுமே என்னை உயர்த்தும் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்; தங்கள் மீது நான் கொண்டுள்ள பக்தி என்றும் குறையாமல் இருக்க, எனக்கு ஆசியளியுங்கள் ||46||

காமம் மற்றும் கோபம் ஆகிய தீய உணர்வுகளின் பிடியில் சிக்குபவர்கள், சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்; தங்கள் பாதங்களில்தான் நான் உண்மையான மன அமைதியைக் காண்கிறேன்; என் விதிப்படி நான் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் முடித்த பிறகு, தங்கள் பாதங்களைச் சரணடைந்திருக்கும் ஒரு நிரந்தரத் தொண்டனாக என்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும்||47||

கழுகின் சிறகடிப்பைக் கண்டு பாம்புகள் அஞ்சி ஓடுவது போலவே, தங்கள் பாதங்களைச் சிரத்தையுடன் சேவிக்கும் அடியார்கள் அனைவரும், தங்கள் எதிரிகளின் வலிமையும் ஆற்றலும் குறைந்து போவதைக் காண்பார்கள் ||48||

தாங்கள் அருளும் வரங்கள் இத்தகைய சிறப்பு வாய்ந்தவை; அப்படியிருக்க, அரக்கர்களை எதிர் கொள்வது குறித்து நான் ஏன் இப்போது அஞ்ச வேண்டும்?; தங்கள் பாதங்களை என் மனத்தில் இருத்தி, அந்த அரக்கர்களை நான் நிச்சயம் அழிப்பேன் ||49||

நகுஷன் இவ்வாறு கூறிவிட்டு முனிவர் பாதங்களில் மீண்டும் விழுந்து வணங்கினான்; தன் சீடன் மீது மிகுந்த வாஞ்சை கொண்ட அந்த முனிவர், அவனைத் தன் கைகளால் தூக்கி நிறுத்தி, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நெற்றியை முகர்ந்து ஆசி கூறுவது போலவே, நகுஷனின் நெற்றியை முகர்ந்து ஆசி கூறினார் ‘நீ நிச்சயம் வெற்றி வாகை சூடுவாய்||50||

உன் எதிரிகளை வேரறுப்பாய்; அந்தணர்களையும் பித்ரு தேவதைகளையும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பாய்; பூவுலகையும் விண்ணுலகையும் காப்பாய்; அனைத்தையும் தூய்மைப்படுத்தும் சூரிய பகவானைப் போலவே, நீயும் பாவங்களை அழிப்பாய் ||51||

வசிஷ்ட முனிவர் இவ்வாறு ஆசி வழங்க, அந்த இளவரசன் காடுகளை நோக்கி நடந்தே பயணமானான்; அவன் இவ்வாறு பிரார்த்தித்தான் ‘ஸ்ரீமத் தத்த பகவான் என் மீதும், நான் மேற்கொள்ள இருக்கும் இந்த முயற்சியின் மீதும் பிரசன்னமாகி அருள் புரியட்டும்||52||

நான் என் தாயின் கருவில் இருந்த காலம் தொட்டே, என்னைச் சொந்தமெனக் கருதிப் பாதுகாத்து வரும் அந்தத் ஸ்ரீமத் தத்த பகவானின் திருவடிகளில், நான் மிகுந்த பணிவுடன் தலை வணங்குகிறேன் ||53||

அவர் எங்களுக்கு உண்மையான நலனையும் நன்மையையும் அருளட்டும்; போரில் எங்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்; அவருடைய திருவடிகளைக் காணும் ஆற்றலை அருளி எங்களை ஆசீர்வதிக்கட்டும்; நாங்கள் எப்போதும் அவருடைய சேவையிலேயே திளைத்திருக்க அவர் அருள் செய்யட்டும்||54||

தீயவர்களைத் தண்டித்து, நல்லவர்களைக் காக்கும் ஸ்ரீமத் தத்த பகவான், ஒப்பற்ற பரம்பொருள்; எப்போதும் என்னைப் பாதுகாத்து அருளட்டும்||55||

நான் அவருடைய திருவடிகளைச் சிந்திக்கும் போதெல்லாம், அந்தத் ஸ்ரீமத் தத்த பிரபு என் உள்ளத்தில் ஆனந்தத்தைப் பொழியட்டும்; மிகச் சிறிய அளவிலான வருத்தமும் என் உள்ளத்தில் நுழையாதிருக்கட்டும்; என் வெற்றி எங்கும் பரவிப் புகழை தரட்டும் ||56||

தேவர்களின் குருவான பிரகஸ்பதி முனிவரும், இறைவனின் ஆசனமாகத் திகழும் ஆதிசேஷன் என்னும் தெய்வீக பாம்பும் கூட, இறைவனின் எல்லையற்ற தெய்வீகப் பண்புகளை விவரிப்பதில் திகைத்து நிற்கும்போது, என்னால் அப்படி அவரை முழுமையாக விவரிக்க முடியும்?||57||

கைகூப்பி வணங்கி என்னால் இயன்ற முழுப் புனிதத்துடனும் பக்தியுடனும் நான் அவரை வணங்குகிறேன்; ஸ்ரீமத் தத்த பகவான் என் மீது தன் கருணையைப் பொழிந்து, எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்து அருளட்டும்||58||

வரவிருக்கும் போர் நிகழும் போதோ, அல்லது போர்க் களத்தில் யாரேனும் வஞ்சகமாகத் தாக்கும் போதோ, அத்தனை ஏன், போர்க் களத்தில் உயிருக்கே ஆபத்தான சூழல் சூழ்ந்து கொள்ளும் போது கூட, ஸ்ரீமத் தத்த பகவானே எப்போதும் எனக்கு பாதுகாப்பை வழங்கட்டும் ||59||

என் பயணம் எவ்விதத் தடையுமின்றி அமையட்டும்; என் பணியில் தேவர்கள் எனக்குத் துணையாக நிற்கட்டும்; தேவைப்படும் போது எனக்கு உணவும் நீரும் கிடைக்கட்டும்; என் உள்ளம் எப்போதும் மனநிறைவுடன் திகழட்டும்||60||

போர்க் களத்தில் எதிரிகளை எதிர் கொள்வதற்காகவே, இந்திர பகவானின் உதவி பெரும்பாலும் நாடப்படுகிறது; அந்தத் தேவாதி தேவனும் எனக்குத் துணையாக வரட்டும்; போரைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்களையும், போரில் ஈடுபட்டிருப்பவர்களையும் அவர் பாதுகாத்து அருளட்டும்||61||

மிகுந்த எச்சரிக்கையுடனும் பக்தியுடனும் இளவரசன் நகுஷன் பிரார்த்தனை செய்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தான்; அவனது நன்னடத்தையைக் கண்டு, குறிப்பாக அவனது பணிவையும் பொறுமையையும் கண்டு தேவர்கள் பெரிதும் மகிழ்ந்தனர் ||62||

மகிழ்ச்சியால் தலை அசைத்தவாறே, விண்ணுலகத் தேவர்கள் தங்கள் ஒப்புதலைத் தெரிவிக்கும் விதமாக மலர்களைப் பொழிந்தனர்; இளவரசன் நகுஷன் தன் பாதையில் நல்ல சகுனங்களைக் கண்டவாறே, தன் நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான் ||63||

பசுக்கள், சிறுமிகள் மற்றும் மயில்கள் அவனை நோக்கி நடந்து வருவதைக் காண முடிந்தது; கலசம் ஏந்தியவாறும், தயிர், பலன்கள் மற்றும் மலர் மாலைகளைக் கையில் கொண்டவாறு இரு அந்தணர்கள் தென்பட்டனர்; மான்கள் பாதுகாப்பான தொலைவிலிருந்து அவனைச் சுற்றி வலம் வருவது போலக் காட்சியளித்தன ||64||

அந்த நல்ல சகுனங்களைக் கண்டதும், இளவரசன் நகுஷன் தன் உள்ளத்தில் பெரிதும் மகிழ்ந்தான்; விண்ணுலக மன்னனான இந்திரன் கூட, அவன் தன் இலக்கை நோக்கி நடந்தே செல்வதை உற்று நோக்கினான்||65||

எனவே இந்திரன் தேவர்களைத் தன் முன் அழைத்து, இவ்வாறு கூறினான் ‘நமது காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே இவன் சென்று கொண்டிருக்கிறான்; பாருங்கள்; இவனது பாதங்கள் வலிக்கத் தொடங்கி விட்டன; இன்னும் இவன் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம்; எனவே, நாம் இப்போதே இவனுக்குத் துணையாகச் செல்ல வேண்டும் ||66||

பூவுலகில் அவனது பயணத்தை விரைவுபடுத்த, எனது தேரை அவனிடம் அனுப்ப நான் முடிவு செய்துள்ளேன்; நீங்களும் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு, போர்க்களத்தில் அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்||67||

அப்போதுதான் நீங்கள் பெரிதும் விரும்பும் வெற்றியைப் பெற முடியும்’; இவ்வாறு கூறி, இந்திரன் தனது தேர்பாகனான மாதலியை நோக்கி ‘நீ எனது குதிரைகளையும் தேரையும் எடுத்துக் கொண்டு, இளவரசன் நகுஷாவிற்கு உதவச் செல்வாயாக’ என்று கட்டளையிட்டான் ||68||

ஒரு பாதுகாப்புக் கவசம், கூர்மையான அம்புகளும் அவற்றைச் சுமக்கும் அம்புக் கூடுகள், காதணிகள், புஜவளைகள், கை வளைகள், பல்வேறு வகையான தேவலோக ஆயுதங்கள் மற்றும் எறி படைகள், இவை அனைத்தையும், நீ அவனுக்கு உதவச் செல்வதற்கு முன்பாகவே தேரில் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று கட்டளை இட்டார் ||69||

மாதலி மன்னன் இந்திரனின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு, அவற்றைச் சிறிதும் பிசகாமல் நிறைவேற்றினான்; ஓர் இளவரசனுக்குப் பொருத்தமான வகையில் தேரை ஆயுதங்களால் நிரப்பிய அவன், இந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு பூவுலகிற்கு இறங்கி வந்து, இளவரசன் நகுஷாவை மிகுந்த பணிவுடன் சந்தித்தான் ||70||

நகுஷா தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான்; அவனது மனம், தந்தைக்கு நிகரான குருவும் தெய்வமுமான ஸ்ரீமத் தத்தரின் திருவடிகளைச் சிந்தித்தவாறே இருந்தது; அச் சமயத்தில்தான் மாதலி அங்கு வந்து அவனைச் சந்தித்து, இந்திர பகவானின் விருப்பத்தை அவனிடம் எடுத்துரைத்தான் ||71||

சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதும், உனக்குத் தேவையான அனைத்து வகையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களால் நிரப்பப்பட்டதுமான இந்தத் தேர், இந்திர பகவானால் உனக்காக அனுப்பப்பட்டுள்ளது; இதனை ஏற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடனும் விரைவுடனும் போருக்குப் புறப்படுவாயாக||72||

இந்தப் போர் களத்தில் உனக்கு வேறு எதுவும் தேவைப்படாது; அனைத்தும் மிகக் கவனமாக ஆராயப்பட்டு, இந்தத் தேரில் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன’ மாதலியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட நகுஷா, அவற்றை மிகுந்த கண்ணியத்துடனும் பெருந் தன்மையுடனும் ஏற்றுக் கொண்டான் ||73||

அனைத்துத் திசைகளிலும் ஒளியை பாய்ச்சும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தைத் தனது தலையில் சூட்டிக் கொண்டான்; சூரியக் கதிர்கள் படும்போது மின்னி ஒளிரும் காதணிகளையும் அவன் அணிந்து கொண்டான் ||74||

ஒளி வீசும் ஒரு பாதுகாப்புக் கவசத்தைத் தனது உடலில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்; இவ்வாறு தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு முன்பாகவே, தனது குருவும் தந்தையுமான முனிவர் தனக்குக் கற்றுக் கொடுத்திருந்த மந்திரங்களை அவன் முறைப்படி ஓதினான் ||75||

அதன்பின்னர், இளவரசன் நகுஷா அந்தத் தேரையும், அதில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளையும் நோக்கி மிகுந்த பக்தியுடன் தலை வணங்கினான்; அத் தேரை வலம் வந்து, தேவையான மந்திரங்களை ஓதியவாறே, தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் திருவடிகளைத் தன் மனதில் நினைத்துக் கொண்டு, தான் புதிதாகப் பெற்ற அந்தத் தேரின் மீது ஏறி அமர்ந்தான் ||76||

அவனது கழுத்து முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது; ஒரு இளவரசனுக்கு ஏற்ற கம்பீரத்துடன் தேரில் அமர்ந்த அவன், தனது புதிய தேரோட்டியான மாதலியிடம் ‘நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நம்மை விரைவாக அழைத்துச் செல்’ என்று கூறினான்||77||

இளவரசனின் கட்டளைகளைக் கேட்ட மாதலி, அவனைத் தனது தற்காலிக எஜமானராக ஏற்றுக் கொண்டான்; கையில் சாட்டையை ஏந்தியவாறு, குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து, அவற்றை முன்னோக்கி விரட்டிச் சென்றான்||78||

உலகைக் காக்கும் தெய்வமான ஸ்ரீமத் தத்தர், தேவைப்படும் போதெல்லாம் துணையாக வருகிறார்; அப்படியிருக்க, வேறு என்ன குறைதான் இருக்க முடியும்? அனைத்துக் குறைகளும் செவ்வனே நிவர்த்தி செய்யப்படுகின்றன ||79||

அதன்பின்னர், முப்பத்து மூன்று கோடி தேவர்களும் அணி வகுத்துத் திரண்டனர்; அவர்கள் நகுஷனின் முன் தோன்றி, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘நாங்கள் விண்ணுலகத் தேவர்கள்; உமக்குத் துணையாக வந்துள்ளோம்’ என்று கூறினர்]||80||

அதற்கு இளவரசன் நகுஷன் பதிலளித்தான் ‘நான் எப்போதும் தெய்வமான ஸ்ரீமத் தத்தரால் காக்கப்பட்டு வருகிறேன்; இந்த இக்கட்டான தருணத்தில் எனக்குத் துணையாக வருமாறு உங்கள் அனைவரையும் தூண்டியவர் அவரே ஆவர்||81||

எனது குருவின் கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிவதையே நான் எப்போதும் முதன்மையாகக் கருதி வந்துள்ளேன்; அதன் பலனை இப்போது என் கண்களாலேயே காண்கிறேன்; அந்த குருவின் கட்டளைகளே எனது துரதிர்ஷ்டத்தை தடுத்து நிறுத்தவும், என் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும் எனக்கு உதவியுள்ளன ||82||

பக்தர்களின் புனிதமான விருப்பங்களை நிறைவேற்றுபவராக அவர் அறியப்படுகிறார்; பரம யோக குருவான ஸ்ரீமத் தத்த பகவான், இவ்வுலக நாடகத்தின் சூத்திரதாரியாகத் திகழ்கிறார்; அவர் அருளும் ஒவ்வொரு உதவியும் கூட ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது; இதைத் தவிர வேறு எதையும் நாம் விரும்பத் தேவையில்லை; இந்த உண்மைக்கு நானே நேரடிச் சாட்சியாக இருக்கிறேன் ||83||

இவ்வாறு கூறிய நகுஷன், அவர்களை வரவேற்று உபசரித்ததும் அனைவரும் இணைந்து அந்த அரக்கனின் சாம்ராஜ்யத்தை நோக்கிப் பயணமானார்கள்; இதற்கிடையில், அசோக சுந்தரி தனது தவ வலிமையால் அந்த செய்தியைத் தெரிந்து கொண்டாள்||84||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘யா விபும் ப்ரார்த்தயந்தீஷம் – நகுஷோ மே வ்ருணோத்விதி, ஆ ததாகமனம் ஜ்ஞாத்வா – ரம்பா தஸ்மை சமீரியத’
இதன் அர்த்தம் என்ன என்றால் எந்த ஒரு பெண் (அசோக சுந்தரி), நகுஷன் தனக்கு கணவனாக அடைய வேண்டும் என்று ஈசனிடம் (சிவபெருமானிடம்) பிரார்த்தனை செய்தாளோ, அவனது (நகுஷனுடைய) வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டவள் ரம்பையை அவனிடம் (நகுஷனிடம்) அனுப்பினாள்.||85||

தனது தோழியால் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட ரம்பா, நகுஷனை அணுகி, அவனிடம் இவ்வாறு வேண்டினாள் ‘இளவரசே, நான் உங்களைச் சந்திக்க வந்ததற்கான காரணத்தை தயவு செய்து கேளுங்கள்||86||

உங்கள் எதிரியை எதிர் கொள்ள நீங்கள் தயாராக இருப்பதை அறிந்து, கடத்திச் செல்லப்பட்ட இளவரசியான அசோக சுந்தரி, தனது தியான நிலையில் இருந்தவாறே என்னை உங்களிடம் தூது அனுப்பியுள்ளாள் ||87||

அவள் எனது உயிர்த் தோழி ஆவாள்; தற்போது அவள் ஹுண்டாசுரன் எனும் அரக்கனால் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளாள்; அவள் இடை விடாமல் உங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறாள்; மேலும், எதிர் காலத்தில் என்ன நிகழப் போகிறதோ என்ற கவலையில் வாடி, உடல்நலம் குன்றி இருக்கிறாள் ||88||

நீங்கள் அவளைத் திருமணம் செய்து கொள்வது விதியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; நீங்கள் சென்று அவளைச் சிறையிலிருந்து மீட்க வேண்டும்; அவள் இன்னும் சிறை வளாகத்தில்தான் இருக்கிறாள்; அவள் களங்கமற்றவளும், அடக்கமானவளும் ஆவாள் ||89||

நான் கூறியவற்றில் ஏதேனும் உண்மைக்குப் புறம்பானதாக இருப்பின், நாங்கள் தற்போது இருக்கும் உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சியடைய நேரிடட்டும்’ என்று அவள் கூறினாள்; அவளது வார்த்தைகளைக் கேட்ட நகுஷன், அவளிடம் மிகவும் பணிவுடன் இவ்வாறு பதிலளித்தான் ‘தேவையான அனைத்தையும் நான் நிச்சயமாகச் செய்வேன்; ஆனால், நீங்கள் இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டும்||90||

விதியால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்தையும் நானும் அறிந்து கொண்டேன்; நீங்கள் காண்பது போலவே, நான் போருக்கு முழுமையாகத் தயாராக இருக்கிறேன்; ஹுண்டாசுரனும் அவனது கூட்டாளிகளும் அழிந்து ஒழிந்த பிறகு, நாம் மீண்டும் ஒருமுறை, மிகவும் சிறந்த சூழலில் சந்திப்போம்||91||

ரம்பை புன்னகைத்தாள்; பின்னர், அது தன் வருங்காலப் பேரரசரின் கட்டளை என்பதை உணர்ந்து, திரும்பிச் சென்று தன் தோழியைத் தேற்றினாள்; ‘உன் துயரத்தை ஒதுக்கி விடு; மகிழ்ச்சியான நாட்களுக்கான நற் செய்தியைச் சுமந்து வரும் தூதுவியாகவே நான் இங்கு வந்துள்ளேன்’ என்று கூறினாள் ||92||

கடுந் தவம் புரிவதில் தன் காலத்தைச் செலவிட்டிருந்த அசோக சுந்தரி, அந்த நற்செய்தியைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைந்தாள்; அதே வேளையில், நகுஷனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களின் படைகள், அங்கே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தின ||93||

அவர்களின் ஆரவாரத்தைப் பின் தொடர்ந்து, சித்தர்கள், சாத்தியர்கள், வித்தியாதரர்கள், நாகர்கள் மற்றும் குஹ்யகர்கள் ஆகிய பிற தேவர் இனத்தாரும் அந்தப் பெருங் கூட்டத்தில் இணைந்து கொண்டு, வானையே அதிரச் செய்யும் வகையில் பெரும் அமளியை உண்டாக்கினர்||94||

இதற்கிடையில், ஹுண்டாசுரன் அமைதியற்ற நிலையில் உறங்கிக் கொண்டிருந்தான்; அந்த ஒலிகளைக் கேட்டு விழித்தெழுந்த அவன் ‘யார் அவன்? இத்தகைய இரைச்சலை எழுப்பி, என் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு, தனக்கே அழிவைத் தேடிக் கொள்ள விரும்புபவன் யார்?’ என்று சீறினான்||95||

என் பணியாளர்களும் ஒற்றர்களும் எங்கே?; ஏதேனும் ஆபத்தான எதிரி என் வாசலிலேயே வந்து நின்று விட்டானா?; அவன் யார்?; அவன் யாருக்குச் சொந்தமானவன்?; அவனுடன் ஒரு வலிமை மிக்க படையும் உடன் வந்துள்ளதா? ||96||

ஹுண்டாசுரன் தன் பணியாளனிடம் ‘உடனே சென்று, என் கேள்விகள் அனைத்திற்கும் விரைவாகப் பதில்களைக் கண்டறிந்து, உன்னால் இயன்ற அளவு வேகமாகத் திரும்பி வா’ என்று கட்டளையிட்டான்; ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்த அந்த அரக்கன் எடுத்த முதல் நடவடிக்கை இதுவேயாகும் ||97||

ஹுண்டாசுரனின் பணியாளனும் அங்கு நிலவிய தீவிரமான சூழலை உணர்ந்து கொண்டான்; விரைவாகச் சென்று தேவையான தகவல்கள் அனைத்தையும் சேகரித்தான்; பின்னர் தன் அரசனிடம் திரும்பி வந்து ‘அரசே, மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நான் கூறுவதைக் கேளுங்கள்’ என்று கூறினான் ||98||

அவன் வேறு யாருமல்ல; ஆயு மன்னனின் இளவரசனே ஆவான்; அவனுடன் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் துணையாக வந்துள்ளனர்; உங்களையும், நம் அனைவரையும் அழித்துக் கொல்வதே அவர்களின் நோக்கமாகும்; அரசே, இத்தகைய துரதிர்ஷ்டவசமான செய்திகளையே நான் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன்||99||

அந்தச் செய்திகளை ஹுண்டாசுரனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை; உடனே அவன் தன் மனைவியை அழைத்தான்; அவளிடம் ‘மிக நீண்ட காலத்திற்கு முன்பு, நான் கடத்தி வந்த ஒரு குழந்தையை உன்னிடம் ஒப்படைத்திருந்தேனே, அந்தக் குழந்தையை நீயே கொன்று சமைத்து எனக்குப் பரிமாறினாயா இல்லையா?’ என்று இடி முழக்கம் போலக் கர்ஜித்தான் ||100||

அந்த இளவரசனை வைத்து நீ என்ன செய்தாய் என்பதை எனக்கு முழுமையாகச் சொல்; அவனை நீ யாரிடம் ஒப்படைத்தாய்? என்று அவன் கேட்டான்; அச்சத்தால் நடுங்கிய அவள் ‘நான் அவனை என் பணிப் பெண்ணிடம் ஒப்படைத்தேன்; நானும் அங்கேயே உடனிருந்தேன்’ என்று பதிலளித்தாள்||101||

‘உங்களுக்காக சமைக்கப்பட்ட அந்த உணவை நான் கண்டேன்; அதில் தோலோ எலும்போ கூட மிச்சமிருக்கவில்லை’ தன் மனைவி இவ்வாறு கூறியதைக் கேட்டதும், ஹுண்டாசுரன் பணிப் பெண்ணை அழைத்து, அந்த இளவரசனுக்கு என்ன நேர்ந்தது என்று விசாரித்தான் ||102||

அந்தக் குழந்தையைக் கொன்றது யார்?’; அச்சம் மேலிட அவள் பொய் உரைத்தாள் ‘நான்தான் கொன்றேன்; அப்போது அரசியாரும் அங்கேயே உடனிருந்தார்’; அரசியாருக்கும் அவர் பணிப் பெண்களுக்கும் இடையிலான இத்தகைய மௌனமான உடன்பாடுகள், அரிதானவையோ அல்லது கேள்விப்படாதவையோ அல்ல ||103||

அந்த அரக்கன் தன் நாவைக் கடித்துக் கொண்டு வியந்தான் ‘விஷயம் இதுவென்றால், என் வாசலிலேயே வந்து நிற்கும் இந்தப் புதிய எதிரி யார்?; முதலாவதாக நான் அவனை எதிர் கொண்டு முடித்து விடுகிறேன்; அதன் பிறகு, உண்மை முழுவதையும் நான் அறிந்து கொண்டதும், எனக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களைத் தண்டிப்பேன் ||104||

இன்றைய தினமே, என் அரசைச் சூழ்ந்து கொண்டு, எனக்காகக் காத்திருக்கும் படைகள் அங்கே உள்ளனவே; இதை முன்னரே அறிந்து கொள்ளாத என் ஒற்றர்கள் நாசமாகட்டும்’; பின்னர் அவன் தன் அரக்கர்கள் அனைவருக்கும் இட்டான் ‘உங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஏந்திக் கொள்ளுங்கள்; நாம் போர் தொடுக்க வேண்டும்||105||

போர்க் களத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று எவரெல்லாம் உள்ளுக்குள் ரகசியமாக எண்ணுகிறார்களோ, போர்க் களத்தில் அத்தகைய தந்திரங்களில் ஈடுபட நினைக்கிறார்களோ; அந்த வரவிருக்கும் எதிரியை எதிர் கொள்வதற்கு முன்னரே, அவர்கள் அனைவரையும் இங்கேயே, இப்போதே நான் கொன்று வீழ்த்துவேன்; கோழைகள் எவரும் என்னுடன் வரவில்லை என்று நான் முழுமையாகத் திருப்தியடைந்த பின்னரே, நான் போருக்குப் புறப்படுவேன் ||106||

பின்னர் அவன் தன் நம்பிக்கைக்குரிய தளபதிகள் ஐவரை அழைத்தான்; ஒரு மன்னனுக்குரிய முறைப்படி அவர்களுக்குப் பட்டாபிஷேகம் செய்து சிறப்பித்தான்; பின்னர், ஒரு கொடூரமான போரைத் தொடுக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டான்; அவனது ஆட்சி அதிகாரம், குறிப்பாக அவனது சொந்தப் படைகளுக்குள்ளேயே, எவராலும் கேள்விக்குள்ளாக்கப்படாத வகையில் அசைக்க முடியாததாக திகழ்ந்தது||107||

தங்கள் மன்னனின் கடுமையான கட்டளைகளைச் செவியுற்ற அசுரர்கள், ஆயுதங்களை ஏந்திப் போர்க் களம் புகுந்தனர்; அப்போது அவர்கள் ‘இந்த போரில் நாம் மடிந்தால், தர்ம விதிப்படி நாம் சுவர்க்கத்தை அடைவோம்; எனவே, இறுதி மூச்சு வரை போரிட்டு, நம் மன்னனுக்கு நாம் கடைசியாக ஒருமுறை கடமையாற்றுவோம்’ என்று முழக்கமிட்டனர்||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்து நான்காவது (44) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்து நான்காவது (44) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4647 = 4755

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 44 முடிவடைந்தது
அத்தியாயம் 45 தொடர்கின்றது