COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் –11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 35
யோகப் பயிற்சி; ஒலியின் மீதான தியானம்;
சுவாச முறைகள்; ‘ஓம்’மீதான தியானம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘ஸ்ரீமத் தத்த பகவான் அலர்கனுக்கு அறிவுரைகளை தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார் ‘யோகிகளுக்குப் பொருத்தமான நன்னடத்தையை வழி காட்டியாக கொண்டு, சாதகன் (ஆத்ம விடுதலையை தேடுபவன்) தான் தேர்ந்தெடுத்த பாதையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நிலைத்திருக்க வேண்டும்||1||
எவ்விதச் சச்சரவுகளும் அற்ற ஒரு பிரதேசத்தில், தனிமையான இடமானதாகவும், அருகிலேயே நீர் ஆதாரம் கொண்டதாகவும் உள்ள ஓர் இடத்தில் நீ யோக சாதனைப் பயிற்சியில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; அத்தகைய சூழல்களே ஆன்மீகத் தேடலுக்கு மிகவும் உகந்தவை||2||
அது ஒரு அடர்ந்த காடாகவோ, சோலையாகவோ, அல்லது தூய்மையான ஒரு குகையாகவோ இருக்கட்டும்; ஒரு புனிதமான இடத்திலோ, தெய்வங்களின் ஆலயத்திலோ, அல்லது வேறு எவரும் வசிக்காத இடங்களில் இந்த ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ||3||
யோக வழிப் பாதையின் வாயிலாக மனக் கட்டுப்பாடு வளர்க்கப்படுகிறது; மௌனத்தைக் கடை பிடிப்பதன் மூலம் பேசுவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஆசைகளுக்கும், சுவையின்பங்களுக்கு அடிமையாகாமல் உடலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்; மேற் கூறிய மூன்றையும் யோக வழிப் பாதையில் செல்ல விரும்புபவன் ஒருவன் இடை விடாமல் தொடர்ந்து கடைப் பிடித்து வர வேண்டும்||4||
மாறாக, கையில் துறவிகளுக்கான தண்டத்தை (கோலை) மட்டும் ஏந்திக் கொண்டு, மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் பேசும்போது மாற்றி பேசும் இரட்டை வேடம் போடும் கபட எண்ணம் கொண்டவர்களையும், மற்றவரை ஏமாற்றி பிழைப்பவர்களின் முகங்களைக் கூட சாதகன் ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது||5||
எவர் ஒருவர் தங்கள் உடல், மனம் மற்றும் வாக்கு (நாவன்மை) ஆகிய மூன்றையும் முழுமையாக கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார்களோ, அவர்களே உண்மையில் மூன்று முடிச்சுகளையுடைய துறவியின் தண்டத்தை (கோலை) ஏந்த தகுதியானவர் ஆவார்; வெளிப் பார்வைக்காக ஒரு மூங்கில் தண்டத்தை கையில் ஏந்திக் கொள்வதால் மட்டும் ஒருவன் புனிதமான துறவியாகி விட முடியாது; குறிப்பாக, விருப்பு வெறுப்புகளுக்கு அடிமையாகும் தன்மையை ஒருவன் வென்று விடாத பட்சத்தில் அவன் விரும்பும் லட்ஷியத்தை அடைய முடியாது||6||
மனதளவில் பேதங்களை வைத்துக் கொள்ளாதவன், மனதை துயரத்திற்கோ அல்லது வருத்தத்திற்கு ஆட்படாமல் வைத்துக் கொண்டிருப்பவன், உணவை உட்கொண்டாலும், அதன் சுவையில் பற்றற்று, உடலை நோய் நொடியின்றி வைத்துக் கொள்வதற்காக மட்டுமே எளிமையாக உண்பவன் போன்ற குணங்களைக் கொண்டவர்களே இறைவனுடன் ஒன்றிணைய முடிந்தவர்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொள் ||7||
தனக்குள் இருப்பவை அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவன்; அனைத்திலும் தன்னை தானே காணும் அளவுக்குப் பேரறிவு பெற்றவன்; பகைவர் அல்லது நண்பர் என எவர் பக்கமும் சாராமல் நாடு நிலைமையோடு இருப்பவன், மனதின் சம நிலையில் நின்று, எவ்விதப் பாகுபாடுகளுக்கும் ஆட்படாதவன்… ||8||
அப்படிப்பட்ட ஆன்மீக முதிர்ச்சி பெற்ற ஒருவனை, எவர் தனக்கு இணையானவராக கருதி வெறுத்து ஒதுக்க முடியும்?; மனதின் சம நிலையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அத்தகைய முதிர்ச்சி பெற்ற ஆத்மா க்கள், உண்மையில் ஈடு இணையற்றவரும், மிகவும் அரிதானவரும் ஆவர் ||9||
தங்கம் மற்றும் ஒரு கல் ஆகிய இரண்டையும் ஒரே மனப்பான்மையுடன் நோக்குபவர்கள்; தங்கள் மனதை முழுமையாகத் தூய்மைப் படுத்திக் கொண்டவர்கள் ஆவர்; அத்தகைய மனம் கொண்ட சாதகர்கள், யோக நெறியின் இலக்கணமாகத் திகழ்பவர்கள் என்று போற்றப்படுகிறார்கள்||10||
ஒரு பிராமண ஆசானின் குடும்பத்தில் பிறந்ததாலேயே ஒருவன் தகுதி வாய்ந்தவன் ஆகி விடுவதில்லை; வேத நூல்களைப் படித்து, அவற்றின் பொருளைப் புரிந்து, ஆழ்ந்து சிந்திக்கும் வல்லவர்களே சிறந்தவர்கள்; இவர்களை விடச் சிறந்தவர்கள், தாங்கள் அடைந்த ஆன்மீகத் தூய்மையை மற்றவர்களுக்கும் ஊட்டி, அவர்களும் அந்தப் புனிதத்தை உணர்ந்து கொள்ள உதவுபவர்களே ஆவர் ||11||
தினமும் தவறாமல் இறைவனின் திரு நாமத்தை ஓதுபவர்கள், தினமும் தெய்வத்திற்கான யாகங்கள் செய்து வழிபடுபவர்கள், அவர்கள் அனைவரும் நல்லவர்களே; ஆயினும், அவ்விரு வகையினரையும் விடச் சிறந்தவர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளின் சாரத்தை (தத்துவத்தை) உணர்ந்து, அதனால் செழுமை பெற்றவரே ஆவார்||12||
தினமும் தவறாமல் ஏதாவது ஒரு தெய்வத்தின் திரு நாமத்தை ஓதுபவர்கள், தினமும் யாகங்கள் செய்து வழிபடுபவர்கள் என அவர்கள் அனைவரும் நல்லவர்களே; ஆயினும், அந்த இரண்டு வகையினரையும் விடச் சிறந்தவர், எங்கும் விஸ்தரித்துக் கொண்டு நிலையாக உள்ள அந்தப் பரம்பொருளின் தத்துவத்தை உணர்ந்து, அவரை தியானிப்பவர்களே ஆவார்கள்||12||
தினமும் தவறாமல் தியானத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் சிறந்தவர்கள்; அத்தகைய பிராமணர்களே உண்மையில் போற்றுதலுக்குரியவர்கள்; அவர்களை விட உயர்ந்தவர்கள், தெய்வீகத்தை தங்கள் மனதின் மூலம் நேரடியாக அனுபவித்தவர்கள் ஆவர் ||13||
தேடுபவன், தேடும் செயல், தேடப்படும் பொருள் ஆகிய மூன்றையும் கடந்த நிலையிலான, ஆழ்ந்த பக்தி மயமான சிந்தனையில், அனைத்தும் ஒன்றே என உணரும் நிர்விகல்ப சமாதி* நிலையை அடைந்த பிராமணன், உண்மையில் மிகுந்த போற்றுதலுக்கு உரியவன் ஆவான்; அதே போல தெய்வத்தின் மீது மாறாத பக்தி கொண்டிருப்பவன் பிரம்மவித்-வரிஷ்டன்** என்று போற்றப்படுகிறான்
{(i)* நிர்விகல்ப சமாதி என்பது ஆழ்ந்த தியானத்தின் உச்ச நிலையாகும். இதில் அறிபவன் (ஆத்மா ) மற்றும் அறியப்படும் பொருள் (பரம்பொருள்) என்ற வேறுபாடுகள் அகன்று, மனம் எந்தவித எண்ணங்களும் இன்றி (விருத்திகள் அற்று) முழுமையாக அமைதியடைந்து பிரம்மத்துடன் ஒன்றி விடும்
(ii) **இறைவனை அறிந்தவர்களுள் மிகச் சிறந்தவன்; பிரம்மவித்-வரிஷ்டன் (Brahmavidvarishtha) என்பவர் ஆவார்; ஞானத்தின் நிலையின் உச்சமான ஏழாவது நிலையை எட்டியவரே உச்சக் கட்ட ஞானி ஆவார்} ||14||
முன்னர் குறிப்பிடப்பட்ட அந்தப் பிரிவினர் மிக உயர்ந்த வகையைச் சேர்ந்தவர்கள் ஆவர்; ஆனால், வேத ஞானம் தங்களுக்குத் தெரியும் என்று தற்பெருமை கொள்ளும் மற்றவர்களோ, எதனுடனும் ஒப்பிட முடியாத, எங்கும் நிறைந்த, தனித்துவமான பரம்பொருளைப் பற்றிய அனுபவமற்றவர்களாய் உள்ளனர்; அந்த ஒப்பிட முடியாத, எங்கும் நிறைந்த, தனித்துவமான பரம்பொருளை (இறைவனை) எவர் ஒருவர் அனுபவபூர்வமாக அறியாது இருக்கின்றார்களோ அவர்கள் வெகு விரைவில் துயரத்திற்கும் கவலைக்கும் ஆளாகி விடுகின்றார்கள்||15||
சமஸ்கிருதச் செய்யுள்: சதுர்வேதோப்பியோ விப்ரஹ ஸூக்ஷ்மம் ப்ரஹ்ம ந விந்ததி, வேத பாரஸமாக்ராந்தஹ ஸ ஸ்யாத் ப்ரஹ்மண் கர்தபஹ ||16||
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்த ஒரு அந்தணராக இருந்தாலும், தன்னுள் இருக்கும் நுட்பமான பிரம்மத்தை (ஞானத்தை) உணரவில்லை என்றால், அவர் வேதங்களின் பாரத்தைச் சுமக்கும் ஒரு கழுதைக்கு ஒப்பானவர்||16||
அலர்க்கா, முழு உண்மையையும் உறுதியாக அறிந்து கொள்; நீ உன்னை இந்த நல்வழியில் நிலை நிறுத்திக் கொள்ள உன் முழு முயற்சியையும் செலுத்து; உன் தியானத்தில் சீராகவும் விடா முயற்சியுடனும் இரு; ஏனெனில், அவ்வாறு செய்தால்தான் நீ தேடிக்கொண்டிருக்கும் அந்த ஆன்மீகத் தூய்மையை அடைய முடியும் ||17||
ஒரு வேளை இந்த வழி உனக்குக் கடினமானதாகத் தோன்றினால், அதே இலக்கை அடைவதற்கான இன்னொரு எளிய வழியை நான் உனக்குக் கூறுகிறேன், கேள்; காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை வென்று விடு (மெல்ல மெல்ல விலக்கிக் கொள் என்பது பொருள்); பின்னர், எவருடைய துணையையும் சற்றும் நாடாமல், தனிமையில் அமர்ந்து தியானிப்பாயாக||18||
பெரு விரல்களால் உனது காதுகளைப் பொத்தி மூடிக் கொள்; ஆள் காட்டி விரல்களால் கண்களை மூடிக் கொள்; நடு விரல்களால் மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்த மூக்குத் துவாரங்களை அமுக்கி வை; எஞ்சிய விரல்களால் உனது வாயைப் பொத்திப் பிடித்துக் கொள்||19||
குறிப்பாக வலது காதில் நீ கேட்கும் அந்த நுட்பமான ஒலி, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் அந்தத் தெளிவான நாதம், அதன் மீதே உனது அனைத்து மன ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்த வேண்டும்; முழு கவனத்துடன், அந்த ஒலியை மேலும் மேலும் ஆழமாகக் கேட்க முயல வேண்டும் ||20||
ஒருவேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டால், இடது மூக்குத் துவாரத்தை விடுவித்து, மூச்சை வெளியேற்றி, பின்னர் மீண்டும் வலது மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும்; இதுவே பின்பற்றப்பட வேண்டிய முறையாகும்; இதனைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருக்க வேண்டும் ||21||
மேற்கூறிய பயிற்சியைச் செய்வதில் ஒருவன் காலத்தைச் செலவிட்டு, தான் கேட்கும் அந்த நாதத்தின் மீது தன் மனதை ஒருமுகப்படுத்தும்போது, அவனால் அந்த நுட்பமான ஒலியை மட்டுமே கேட்க முடியும்; சுற்றிலும் உள்ள சூழலிலிருந்து எழும் எந்த விதமான ஒலிகளும் அங்கே இல்லாதது போலவும், தனக்குச் சற்றும் தொடர்பற்றவை போலவும் அவனுக்குத் தோன்றும்||22||
பத்து வகையான நுட்பமான நாதங்களைக் கேட்பதற்கான வழி முறையே இதுவாகும்; உனது உணர்வு நிலைகள் அனைத்தும் அந்த நாதங்களில் திளைத்து, அவற்றாலேயே முழுமையாக நிரம்பட்டும்; இவ்வாறு செய்வதன் மூலம், ஏதேனும் ஒரு செயலைச் செய்யத் தூண்டும் மன எண்ணங்கள் கூட மிக எளிதாகக் கடந்து செல்லப்படுகின்றன; இறுதியில், ஒருவன் ‘உன்மணி’* (Unman) என்று அழைக்கப்படும், முழுமையான ஒன்றிப்பு நிலையை அடையலாம்
{*உன்மணி (Unman) என்பது யோக தத்துவத்தில் மனமற்ற நிலை, சிந்தனையற்ற நிலை அல்லது விழிப்பு நிலைக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலை (State of thoughtlessness) ஆகும்; இது சமாதி நிலையை நெருங்கும் உயரிய ஆன்மீக அவஸ்தையாகக் கருதப்படுகிறது; இதில் மனம், எண்ணங்கள் மற்றும் புலன் உணர்வுகள் கடக்கப்பட்டு, முழுமையான அமைதி நிலவுகிறது.} ||23||
அந்தப் பத்து வகையான நாதங்களையும், அவை உணர்வு நிலைகளுக்கு அளிக்கும் பேரின்பத்தையும் முழுமையாக உணர்ந்து கொண்ட பிறகு, தனித்திருந்து தியானிப்பதிலும், முழுமையாக ஆன்மீகத்தில் அர்ப்பணித்துக் கொள்வதிலும் உன்னை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்; ஞானம் சார்ந்த விடுதலையை அனுபவிப்பதற்கான அடுத்த கட்டமே இதுவாகும் ||24||
நீ முழுமையான உணர்வு சார்ந்த ஒன்றிப்பு நிலையை அடைந்து விட்டால், அதாவது, அகத்தில் எழும் மன எண்ணங்களாலும், வெளியில் தெரியும் கவர்ச்சிகளாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருந்து விட்டால், இந்த உலகில் உள்ள எவராலும் ஆன்மீகச் சாதகர் (உனக்கு) எவ்விதமான மனக் கலக்கத்தையோ அல்லது தீங்கையோ விளைவிக்கவே முடியாது ||25||
அத்தகைய நிலையில் நீ முழுமையாக நிலை பெறுவது உனது குருவின் அருளாசியாலேயே சாத்தியம் ஆகும்; பொதுவாக குருவின் கருணைக்குரிய பாத்திரங்களாகத் திகழும் சாதகர்களை, அவர்களது ஆன்மீகப் பாதையிலிருந்து சற்றேனும் விலகச் செய்யவோ அல்லது தடுமாறச் செய்யவோ, காலத்தின் சுழற்சிகள் கூடச் சக்தி அற்றவைகளாகி விடுகின்றன||26||
ஒருவேளை, மேற் கூறிய பயிற்சி முறையைக் கடைப் பிடிப்பது மிகவும் கடினமாகத் தோன்றினாலோ; அல்லது தியானம் செய்யவும், ஆன்மீக நூல்களைப் பயில முயலும் போதெல்லாம் ஏதேனும் தடைகள் எழுந்தாலோ அல்லது ஆன்மீகப் பாதையில் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இடையூறுகளினால் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படுவதாகத் தோன்றா விட்டாலோ அதன் காரணம் தெரியுமா||27||
தடைகளின் காரணம் பல பிறவிகளாகச் சேர்ந்த இருந்த கர்மா வினையின் தொகுப்பு இப்போது செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்வீராக; அந்த பாவங்களின் விளைவாக எழும் நுட்பமான தாக்கங்களும் மனதை அமைதி அற்றதாகி விடுகின்றன; ஒரு யோகி, தான் செல்ல வேண்டிய ஆன்மீகப் பாதையில் உறுதியுடன் நடக்கத் தீர்மானித்திருந்தாலும் கூட, அந்த காரணங்கள் அனைத்தும் அவர் எதிர் கொள்ளும் துன்பத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன||28||
அத்தகைய சூழலில் இருப்பவர்கள் ஒன்றை செய்ய வேண்டும்; அவர்கள் இரவும் பகலும் தம்மை பாதுகாக்கும் தெய்வமான விஷ்ணு பகவானை தியானிக்க வேண்டும்; அதன் விளைவாக, பாவங்களும் அவற்றின் பின் விளைவுகளும் படிப்படியாகக் குறையத் தொடங்கும்; மேலும், மனம் மீண்டும் எளிதாகத் தன் மைய நிலையை அடைய இயலும் ||29||
விஷ்ணு பகவான் ஆயிரம் பாதங்களையும் ஆயிரம் கைகளையும் கொண்டவர் என்று போற்றப்படுகிறார்; இது அவரது தடையற்ற நடமாட்டத்தையும், எல்லையற்ற செயலாற்றல் திறனையும் குறிக்கிறது; அவர் ஆயிரம் கண்களைக் கொண்டவர்; படைப்பில் உள்ள அனைத்திற்கும் அவரே சாட்சியாகத் திகழ்கிறார்; மேலும், அவர் ஆயிரம் தலைகளைக் கொண்டவர்; இதன் மூலம் அனைவரின் எண்ணங்களையும் நோக்கங்களையும் அவர் முழுமையாக அறிந்திருக்கிறார்||30||
முழுப் பிரபஞ்சமும் அவரது வயிற்றுக்குள்ளேயே அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது; மூன்று உலகங்களும் அவரது திரு உருவத்தின் உள்ளேயே வியாபித்துள்ளன; ஆனந்த மயமான அவரது திருவுருவம், பேரானந்தத்தை அறிந்து கொள்ளவும் அதனைப் பகிர்ந்து கொள்ளவும் தேவையான தடையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது; அவரது திருமேனியின் ஒளிக் கதிர் கண்ணைப் பறிக்கும் வகையில் பிரகாசமாகத் திகழ்கிறது||31||
படைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களின் தலைகளும் அவரது தலைகளாகவே கருதப்படுகின்றன; அதே போன்று, அனைத்து உயிர்களின் உடல் உறுப்புகளும் அவரது உடல் உறுப்புகளாகவே காணப்படுகின்றன; எவர் ஒருவர் எங்கும் நிறைந்திருக்கும் அந்த திருவுருவத்துடன் தன்னை ஒன்றிணைத்துக் கொள்ள முடிந்தவராக உள்ளாரோ, அவரே மெய் ஞானம் கொண்ட திறமை உள்ளவர் ஆவார்||32||
அவரது திருப் பாதத்தின் அடிப்பகுதி அதல* (Atala) எனப்படும் பாதாள உலகமாகும்; திருப் பாதத்தின் மேற்பகுதி விதல** (Vitala) எனப்படும் மற்றொரு பாதாள உலகமாகும்; அவரது கெண்டைக் கால் பகுதி, பக்த சிரோமணியான மன்னன் பலி வீற்றிருக்கும் சுதல***(Stale) எனப்படும் உலகமாகும்; மேலும், அவரது தொடைப்பகுதி மகாதல **** (Mahabala) எனப்படும் உலகமாகும்.
{*(i) இந்து புராணங்களின்படி, அதல (Atala) என்பது பூமிக்குக் கீழே உள்ள ஏழு பாதாள லோகங்களில் முதலாவதாகும். இது அசுர மாயை மற்றும் சிற்றின்ப சுகங்களுக்குப் பெயர்பெற்ற ஒரு கீழ் உலகமாகும்.
**(ii) புராணங்களின்படி (விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம்), இது பூமியின் கீழ் அமைந்துள்ள ஏழு பாதாள உலகங்களில் ஒன்றாகும். இந்த உலகம் தங்கம் மற்றும் ரத்தினங்களால் ஆனது என்றும், அங்கு வாழும் உயிரினங்கள் உலக இன்பங்களில் மூழ்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
***(iii) இந்த உலகம் பக்தி, பணிவு மற்றும் அகங்காரத்தை வெல்வதைக் குறிக்கும் ஒரு ஆன்மீக இடமாக தத்துவங்களில் விவரிக்கப்படுகிறது; இது அசுரர்களின் ராஜாவான மகாபலி சக்கரவர்த்தியால் ஆளப்படும் ஒரு புகழ்பெற்ற உலகமாகும்.
****(iv) இந்த லோகம் மனித மனதின் மிகவும் ஆழமான, அறியாமை மற்றும் தீய எண்ணங்கள் நிறைந்த ஆழ்மன அடுக்குகளைக் குறிக்கிறது; இந்த லோகத்தில் ‘கத்ரு’வின் வழித்தோன்றல்களான பயங்கரமான, பல தலைகளைக் கொண்ட நாகங்கள் (பாம்புகள்) மற்றும் அசுரர்கள் வாழ்கின்றனர். குரோதவசன் மற்றும் கோஹகன் போன்ற அசுரர்களும் இங்கு வசிக்கின்றனர்}||33||
அவரது முழங்கால் பகுதி தலாதல* (Talegalla) உலகமாகவும், அதற்கு மேலுள்ள பகுதி ‘ரசாதல’ (Rasatala) உலகமாகவும் கூறப்படுகிறது; அவரது இடுப்புப் பகுதி பாதாள*** (Paataal) உலகம் ஆகும் ; இவ்வாறு, அவரது நாபிக்கு கீழே அமைந்துள்ள ஏழு பாதாள உலகங்களும் விவரிக்கப்படுகின்றன.
{*(i) இந்த உலகம் மாய வித்தைகள், தந்திரங்கள் மற்றும் மாயத் தோற்றங்களுக்கு பெயர் பெற்றது; இது ‘மாயா’ என்ற அசுரர்களின் தலைவனால் ஆளப்படும் உலகம்; இவர் சிறந்த கட்டிடக் கலைஞராகவும் அறியப்படுகிறார்; தலாத லோகத்தில் வசிக்கும் அசுரர்கள் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவர்; முப்புரங்களை அழித்த சிவபெருமான், திரிபுர அசுரர்களின் தலைவனான மாயாவுக்கு இந்த உலகத்தை அளித்து அருளியதாகப் புராணங்கள் கூறுகின்றன
**(ii) பாகவத புராணத்தின்படி, இது ‘சுதல’ மற்றும் ‘பாதாள’ உலகங்களுக்கு இடையில் அமைந்துள்ளது; இங்கு பெரும் வலிமை வாய்ந்த அசுரர்களும், நாகர்கள் எனப்படும் பாம்பு இனங்களும் வாழ்கின்றனர்; குறிப்பாக, நிவாதகவசர்கள் மற்றும் காலேயர்கள் போன்ற அரக்கர் குலங்கள் இங்கு வசிக்கின்றன; மற்ற பாதாள உலகங்களை போல இங்கு பயங்கரமான இருளோ அல்லது கொடிய தண்டனைகள் இல்லை. எனினும், அங்கு வாழும் அசுரர்கள் மற்றும் நாகர்களுக்கு தேவலோகத்தின் மீது தீராத பகையுணர்வு உண்டு
***(iii) பூமிக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த உலகம், சூரிய ஒளியின்றி சுயம்புவான (தானாக ஒளிரும்) ரத்தினங்களின் ஒளியால் பிரகாசிக்கிறது; இது அசுரர்கள், தைத்யர்கள், தானவர்கள் மற்றும் நாகர்கள் (பாம்பினங்கள்) போன்றவர்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது; இந்த உலகத்தில் அசுர மயனால் உருவாக்கப்பட்ட மிக அற்புதமான அரண்மனைகளும், அளவற்ற செல்வங்களும் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன} ||34||
அவரது நாபிப் பகுதி, பொதுவாக மனிதர்களும் விலங்கினங்களும் , பறவைகளும் வாழும் ‘பூலோகம்’ (Bulka) என்று கூறப்படுகிறது; அவரது வயிற்றுப் பகுதி ‘புவர்லோகம்’* (Bhuvarloka) எனப்படும் உலகமாகும்; அவரது இதயப் பகுதி ‘சுவர்லோகம்** (Swarloka) எனப்படும் உலகமாகும்; அவரது தொண்டைப் பகுதி ‘மகர்லோகம்*** (Maharloka) எனப்படும் உலகமாகவும் கூறப்படுகிறது.
{*(i)பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள இடைவெளி அல்லது வான்வெளி மண்டலமே புவர்லோகம் ஆகும்; இந்த உலகில் கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள், முனிவர்கள், கந்தவர்கள், மற்றும் பித்ருக்கள் (முன்னோர்கள்) போன்ற ஆன்மீகவாதிகள் வாழும் இடமாகக் கருதப்படுகிறது
**(ii)இங்கு தேவர்களும், இந்திரனும் வசிப்பதாக நம்பப்படுகிறது; தேவர்கள், முனிவர்கள் மற்றும் புண்ணியம் செய்த ஆத்மா க்கள் வசிக்கும் இன்பமயமான இடமாக நம்பப்படுகிறது
***(iii) பிரம்ம ரிஷிகள், முனிவர்கள் மற்றும் மிகுந்த ஆன்மீகப் பற்றுடைய தூய ஆத்மா க்கள் வாழும் இடமாகும்; மார்க்கண்டேயர் போன்ற முனிவர்கள் இந்த லோகத்தில் வசிப்பதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன; பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அழிவு காலமான ‘பிரளயத்தின்’ போது (Pralaya) கூட இந்த லோகம் அழியாமல் அப்படியே நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.} ||35||
அவரது முகம் ஜனலோக* உலகம்; அவரது நெற்றி தவம் செய்யும் இடமான தவ லோகம்**; அவரது தலையோ சத்யலோகம்*** ஆகும்; இப்படியாக ஏழு உலகங்களும் அவரது தொப்புளுக்கு மேலே உள்ளன.
*(i) முனிவர்கள், யோகிகள் மற்றும் ஆன்மீகத்தில் மேம்பட்ட பெரியோர்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றனர்; தூய்மையான ஆன்மீக அறிவு மற்றும் அமைதி நிறைந்த உலகம். இங்கு பிறப்பு, இறப்பு, முதுமை போன்ற பௌதிகத் துன்பங்கள் கிடையாது.
**(ii)இது பூலோகத்தைப் போல துன்பம் இல்லாமல், எப்போதும் இன்பம் மட்டுமே நிறைந்த ஒரு நிலையாகக் கருதப்படுகிறது; இந்த உலகத்தை இந்திரன் ஆட்சி செய்வதால் இது ‘இந்திர லோகம்’ என்றும் அழைக்கப்படுகிறது
***(iii) இங்கு பிரம்மன் தனது படைக்கும் தொழிலைச் செய்கிறார்; கலைமகள் சரஸ்வதி தேவி வீணையை மீட்டி இசையில் திளைப்பதாக ஆன்மீக நூல்கள் கூறுகின்றன ||36||
உணரப்படாத வளி மண்டலம்*, அவரது மூச்சாலும், அவரது காற்றுகளாலும் வியாபித்துள்ளது; இந்தப் பூமி அவரது உடல் மற்றும் பதினான்கு உலகங்களும் அவரது வடிவத்தில் உள்ளன.
{*பூமியில் மேல் பரப்பில் உள்ள நைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் பிற வாயுக்களின் அடுக்கு பகுதியாகும்} ||37||
நட்சத்திரங்கள் அவரது பற்கள்; மயக்கும் சக்தியான மாயை அவரது சிரிப்பு; அவரது கண் சிமிட்டல் பகலும் இரவும் ஆகும் என்று கூறப்படுகிறது ||38||
அவரது பார்வையால்தான் படைப்பு அனுபவமாக மாறுகிறது; அவரது அடி வயிறு சமுத்திரத்தின் நீரைத் தாங்கியுள்ளது; அவரது நரம்புகள் அனைத்தும் ஆறுகள்; அவரது தலைமுடி அனைத்தும் மரங்களும் மூலிகைகள் ஆகும்||39||
அவரது இனப்பெருக்க திரவங்கள் மழை; அவரது எலும்புகள் மலைகள்; அவரது வலிமை இடி போன்ற கரங்களின் சக்தி; அவரது சீற்றம் ருத்ர பகவானின் வெளிப்பாடு ||40||
திசைகள் அவரது காதுகள்; காற்றும் தொடு உணர்வும் அவரது தோல்; சூரியன் அவரது கண்; நீரின் அதிபதியான வருணன் அவரது நாவு ||41||
தேவலோக மருத்துவரான அஸ்வினிகுமார் அவரது நாசி; மேற் கூறிய ஐந்தும் அவரது ஞானத்தை உணரும் உறுப்புகள்; இப்போது நான் அவரது ஐந்து செயல் உறுப்புகளை விவரிக்கிறேன்; இந்த விளக்கம் தியானத்தில் அவருடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குவதற்காக மட்டுமே கூறுகின்றேன் ||42||
அக்னி பகவானே அவரது பேச்சாகத் திகழ்கிறார்; விண்ணுலக அதிபதியான இந்திரனே அவரது கைகளாக அமைகிறார்; பிழையற்ற இறைவனான அச்சுதனே அவரது பாதங்களாக விளங்குகிறார்; மரணமும், அதன் அதிபதியான நிருதியும்*அவரது கழிவுறுப்புகளாகத் திகழ்கின்றனர்
{*நிருதி (Niri) என்பது இந்து மதத்தில் மரணம், சிதைவு மற்றும் துக்கங்களை வெளிப்படுத்தும் ஒரு பெண் தெய்வத்தைக் குறிக்கும்} ||43||
பல்வேறு உயிரினங்களைப் படைக்க உதவும் தெய்வமான பிரஜாபதியே அவரது இனப்பெருக்க உறுப்பாகத் திகழ்கிறார்; சந்திரனே அவரது மனமாக அமைகிறார்; நாராயணப் பெருமானே அவரது உணர்வுத் திறன்களாகக் கூறப்படுகிறார்; தேவர்களின் குருவான பிரகஸ்பதியே அவரது அறிவாக (புத்தியாக) விளங்குகிறார்||44||
இறைவன் ருத்திரனே அவரது அகங்காரமாகத் திகழ்கிறார்; இத்தகையதே அந்த எல்லாம் தழுவிய இறைவனின் திருவுருவமாகச் சொல்லப்படுகிறது; ‘விஸ்வம்பரர்’ (உலகைத் தாங்குபவர்) எனப் போற்றப்படும் இந்தத் திருவுருவமே மூன்று உலகங்களையும் தாங்கி நிற்கிறது; ஸ்தூல நிலையில் (பூத உடல் ) தியானிக்கப்பட வேண்டிய வடிவமும் இதுவே ஆகும் ||45||
தியானம் கை கூடிப் பலனளிக்கும்போது, ஆத்ம தேடுதலில் உள்ளவரை பரமானந்தம் எனும் பெரு நிலை சூழ்ந்து கொள்கிறது; ‘ஓம்’ (AUM-ૐ) எனும் தெய்வீக எழுத்தால் குறிக்கப்படுபவர் அந்த இறைவனே ஆவார்; ஓம்’ (Om) எனும் பிரணவ மந்திரம் அ, உ, ம் ஆகிய மூன்று தனித் தனி எழுத்துக்களின் (ஒலிகளின்) இணைப்பால் உருவாகிறது ||46||
மேற்கூறிய அந்த மூன்று எழுத்துக்களும், மனக் கண் முன் தோன்றிய தெய்வத்தை தரிசித்த முனிவர்களையும் தேவர்களையும் குறிப்பதாக அமைகின்றன; ஆகையால், இவைகளையும் தியானிக்க வேண்டும்; இத் தியானம் ஒருவரின் பாவங்கள் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்க உதவுகிறது ||47||
ஒருவர் முதலில் தனிமையான ஓர் இடத்தில் அமர்வதற்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்; அதன்பின், உடல் அசைவின்றி உறுதியாக அமரக் கூடிய ஒரு தியான நிலையை மேற் கொள்ள வேண்டும். பின்னர், நீண்ட ஆழமான மூச்சுடன், தன் உணர்வுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்||48||
அ, உ, ம் ஆகிய எழுத்துக்களே ‘ஓம்’ எனும் பிரணவத்தின் வெளிப்படையான மூன்று பகுதிகளாகும்; உச்சரிக்கப்படாமல் எஞ்சி நிற்கும் அந்தப் பகுதியே, ‘ஓம்’காரத்தின் உள்ளே மறைந்திருக்கும் நுட்பமான அர்த்த மாத்திரை* ஆகும்.
{*மூன்று ஒலிகளையும் உச்சரித்த பிறகு எஞ்சியிருக்கும், உச்சரிக்கப்படாத, காதுக்குக் கேளாத அந்த மௌனமே ‘அர்த்த மாத்திரை’ அல்லது ‘துரீய நிலை’ (Turiya) என்று அழைக்கப்படுகிறது} ||49||
இந்த மூன்று நிலைகளும் யோகிகளுக்குத் தெளிவாகப் புலப்படுகின்றன; உடலில் ஏற்படும் அந்த அதிர்வு , எறும்புகள் ஊர்ந்து செல்வதைப் போன்றே உணரப்படுகிறது; எறும்புகள் தலையின் உள்ளும் வெளியும் ஊர்ந்து செல்வது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது; அவை மிக மெதுவான வேகத்தில், ஒரு வட்ட வடிவப் பாதையில் ஊர்ந்து செல்கின்றன||50||
இது, அந்தந்தப் பிரதேசங்களில் வழங்கும் ‘காந்தாரம்’ எனும் இசை ஒலியை ஒத்ததாக இருப்பதால், இது ‘காந்தாரி’ என்று அழைக்கப்படுகிறது; இந்த நுட்பம், தேர்ந்த யோகிகள் வாயிலாக சாதகர்களுக்கு (ஆன்மீகத் தேடுபவர்களுக்கு) உபதேசிக்கப்படுகிறது; இது அவர்களுக்கு அவர்கள் தேடிய அமைதியையும் ஓய்வையும் வழங்குகிறது ||51||
கீரியின் ஒலி அளவில் பாதி, தேன் கூட்டின் முழுமையான அளவிலான ஒலி, இரண்டு காகங்கள் எழுப்பும் ஒலி (கரைதல் என்பார்கள்) மற்றும் மூன்று மயில்கள் கூவும் அகவல் எனும் ஒலி ||52||
இத்தகைய ஒலி அளவுகளை மனக் கணக்கீடுகள் மூலம் ஆராயும்போது, ‘ஓம்’ (AUM) எனும் பிரணவத்திற்கு மூன்றரை ஒலி அளவுகள் (மாத்திரைகள்) உள்ளதை நாம் அறிகிறோம்; இவ்வாறுதான் அதன் உச்சரிப்பு தொடங்குகிறது; பின்னர் அது ஏழு ஒலி அளவுகள் வரை விரிவடைந்து, படிப்படியாக பதினான்கு ஒலி அளவுகள் வரை அதிகரிக்கின்றது||53||
ஓம்’ எனும் பிரணவத்தை நீண்ட ஒலிப்புடன் உச்சரிக்கும்போது, அதன் பின் எழும் எதிரொலிகள் மனதைச் சென்றடைய வைத்து, அதை மென்மையாக ஆட் கொள்ள வேண்டும்; குறிப்பாக, ஒரு நாளில் மூன்று முறை இதை உச்சரிக்கும்போது இத்தகைய அனுபவம் கை கூட வேண்டும் ||54||
‘ஓம்’ எனும் பிரணவம் அதற்கென வகுக்கப்பட்ட முறைப்படி உச்சரிக்கப்படும்போது, அதிலிருந்து எழும் ஒலி சாதகருக்கு இனிமையையும் இன்பத்தையும் பெருகச் செய்வதாகக் கூறப்படுகிறது; அப்போது மனதின் சஞ்சலங்களும் அலை பாயும் தன்மைகளும் இரண்டாம் பட்சமாகப் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன||55||
இங்கு ‘ஓம்’ எனும் பிரணவம் வில்லாகக் கருதப்படுகிறது; அதைத் திரும்பத் திரும்பப் பயில்வதே, நாடிச் செல்பவர் வில்லின் நாணை முழுத் திறனுடன் பின்னிழுக்கும் ஆற்றலாக அமைகிறது; அதன் உச்சரிப்பில் முழு கவனம் செலுத்துவதே அம்பாகிறது; இறுதியில் அந்த அம்பு குறி வைக்க வேண்டிய இலக்கோ, தெய்வத்தின் இருப்பை உணரும் நேரடி அனுபவமாகும்||56||
இது துப்பாக்கிச் சுடும் வீரர்கள் குறி வைப்பதைப் போன்றது; அவர்களின் அனைத்து உணர்வுத் திறன்களும் இலக்கின் மையப் புள்ளியிலேயே (Bull’s eye) முழுமையாகக் குவிகின்றன; அதன் பிறகு அவர்களின் குறி தவறுவதே இல்லை; ஆத்ம விடுதலையை தேடிச் செல்பவர்களுக்கும் இத்தகைய மன நிலையை வைத்துக் கொள்ள வேண்டும் ||57||
ஒருவர் குறி வைக்கும்போது அல்லது சுடும்போது கவனக் குறைவாக இருந்தாலோ, அல்லது அந்த இலக்கின் முக்கியத்துவத்தை மனதில் கொள்ளத் தவறினாலோ, நிச்சயமாக அவர் தனது இலக்கைத் தவற விடுவார்; தான் தேடியதை அடையாமலே போய் விடுவார்||58||
இதைப் போலவே இங்கும், நமது கவனம் சற்றே சிதறும் கணத்தில், நமது உணர்வுத் திறன்கள் அலைக் கழிக்கப்பட்டு திசை மாறி விடுகின்றன; அதன் விளைவாக, இறுதியில் நாம் அனுபவிக்க மிஞ்சுவதே ஆழ்ந்த துயரம் ஆகும் ||59||
ஆகவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; மனதின் ஆற்றலை எப்போதும் உயர்ந்த நிலையில் (இலக்கின் மீது) நிலை நிறுத்தி வைக்க வேண்டும்; அவ்வாறு செய்தால்தான் சாதகர் தேடிய ஞானத்தைப் பெற முடியும் ; பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியை கடந்து முக்தி அடைய முடியும் ||60||
‘ஓம்’ எனும் பிரணவத்தில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களின் உட்பொருளை அறிவது அவசியமாகும் ஆகும்; அந்தப் பிரணவ மந்திரத்திற்கு உரிய அதிதேவதை, சந்தம் (ஒழுங்கு முறை) மற்றும் அதை உணர்ந்த ஞானி ஆகியோரைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்; அவ்வாறு அவர்களை அறிந்து, அவர்களுக்குப் பணிவான வணக்கத்தைச் செலுத்திய பின்னரே, அந்த தெய்வீக மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் ||61||
‘அ’ என்ற எழுத்தை பொறுத்தவரை, அதனை உணர்ந்து தரிசிக்கும் முனிவர் அக்னி ரிஷி* ஆவார்; அதன் சந்தம்** காயத்ரி ஆகும்; பிரம்மதேவனே அதற்குரிய அதி தேவதை ஆவார்; மேலும் அது மஞ்சள் நிறம் கொண்டது.
{*(i) இந்து சமயத்தில் ‘அக்னி ரிஷி’ என்பது ரிக் வேதத்தின் முதல் பாடலான அக்னி சூக்தத்தை உலகுக்கு அருளிய முனிவரைக் (மதுச்சந்தா விஸ்வாமித்ரர்) குறிக்கும்; மேலும், ஆன்மீகத்தில் அக்னி தேவனையே குருவாகவும் ரிஷியாகவும் பாவித்து வேத மந்திரங்கள் போற்றுகின்றன
**(ii)சந்தம் (Sandham) என்பது பாடல்கள் அல்லது கவிதைகளில் அமையும் இசை ஒழுங்கு அல்லது ஓசை நயம் ஆகும்} ||62||
அதன் பீஜாக்ஷரம் (வித்து மந்திரம்)* ‘க்லீம்’ (Klim) என்பதாகும்; இது செயலுக்கான ஆற்றலையோ அல்லது விழிப்பு நிலையையோ குறிக்கிறது; புருவங்களுக்கு இடைப்பட்ட நடுப் பகுதியே இதற்குரிய இடமாகும்; இதனை உரத்த குரலில் உச்சரிக்க வேண்டும்.
{*வித்து மந்திரம் (அல்லது பீஜ மந்திரம்) என்பது ஒரு முழுமையான மந்திரத்தின் ஆற்றலையும், பொருளையும் உள்ளடக்கிய ஒற்றை எழுத்து அல்லது குறுகிய சொல்லாகும்; இவை பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கவும், உடலின் சக்கரங்களை தூண்டவும் பயன்படுகின்றன} ||63||
இது ரிக் வேதத்தையும், இயற்கையின் ‘ரஜஸ்’ குணத்தையும், அதற்குரிய ‘விஸ்வ’ எனும் அதி தேவதையையும் குறிக்கிறது. இது ‘பூலோகம்’ எனும் உலகத்தோடு தொடர்புடையது; இதனை காலை வேளையில் உச்சரிக்க வேண்டும்; மேலும் இதற்குரிய ஹோம ஆகுதி ‘கார்ஹபத்ய அக்னி’* எனப்படும் தீயில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
{*கார்ஹபத்ய அக்னி என்பது வேத சடங்குகளில் இல்லறத்தான் நிர்வகிக்கும், வட்ட வடிவமான, அணையாமல் காக்கப்பட வேண்டிய முதன்மையான குடும்ப நெருப்பு ஆகும்; இது க்ருஹபதிக்கு (வீட்டு உரிமையாளர்) உரியது; குடும்ப பாரம்பரியம் மற்றும் செழிப்பைக் குறிக்கிறது; இந்த அக்னியிலிருந்தே மற்ற இரு அக்னிகளான ஆஹவனீயம் (கிழக்கு) மற்றும் தக்ஷிணாக்னி (தெற்கு) உருவாக்கப்படுகின்றன} ||64||
இது கண்கள் ரம்யமான காட்சிகள், அவரது உரையாடல்கள் போன்ற அனைத்துமே பூத உடலுடன் தொடர்புடையது; அவை நமது ஆத்மாவுடன் தொடர்ப்பு கொண்டவை அல்ல என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொண்டு ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ மந்திரத்தின் முதல் எழுத்தான ‘அ’வை உச்சரித்து தியானிக்க வேண்டும்||65||
அதே போன்று, ‘உ’ என்ற எழுத்தைப் பொறுத்தவரை, அதை உணர்த்தும் முனிவர் வாயு ரிஷி* ஆவார்; அதன் சந்தம் ‘த்ரிஷ்டுப்’ (Trish up)** ஆகும்; விண்ணுலகில் உள்ள வைகுண்டப் பதியில் வீற்றிருக்கும் பரம்பொருளே இதற்குரிய அதி தேவதை ஆவார்; மேலும் இது இரத்தச் சிவப்பு நிறம் கொண்டது
{*(i) இந்து வேத மற்றும் புராண மரபுகளின்படி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் இறைவனிடமிருந்து தியானத்தின் மூலம் நான்கு வேதங்களை நேரடியாகப் பெற்ற நான்கு ஆதி ரிஷிகளில் வாயு ரிஷி (Vayu Rishi) முக்கியமானவர்;
**(ii) த்ரிஷ்டுப்’ (Tristup) என்பது வேத மந்திரங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான சந்தஸ் (PROSODY) ஆகும்; வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக சந்தஸ் அவசியம்; சந்தஸ் (Chandas/Prosody) என்பது சமஸ்கிருத கவிதை மற்றும் வேத மந்திரங்களின் தாளம், அசை மற்றும் கட்டமைப்பு பற்றிய ஆய்வாகும்; இது ஆறு வேதத்தின் உறுப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது; இது பாட்டிற்குத் தாளம் போன்றது} |66||
இதன் பீஜாக்ஷரம் (வித்து எழுத்து) ‘ஸ்ரீரிம்’ (Shrim) என்பதாகும்; இது அறிவின் ஆற்றலையோ அல்லது கனவு நிலையையோ குறிக்கிறது; இது புவர்லோகம்’ (Bhuvaloka) எனும் மண்டலத்தைச் சார்ந்தது; இதனை மிக உரத்த குரலில் அல்லாமல், மென்மையான சுரத்தில் உச்சரிக்க வேண்டும் ||67||
இது யஜுர் வேதத்தைக் குறிக்கிறது; இதற்கான ஹோமத் தீ ‘தக்ஷிணாக்னி’* (Dakshin-Agni) எனப்படுகிறது; இது ஆகாயத்தின் சாரத்தோடு தொடர்புடையது; இதனை நண்பகல் வேளையில் தியானிக்க வேண்டும். இது இயற்கையின் ‘சத்துவ’ குணத்தைச் சுட்டிக் காட்டுகிறது; இதன் அதிதேவதை ‘தைஜஸன்’ (Taijas)** என அழைக்கப்படுகிறார்.
{(i) *தக்ஷிணாக்னி (Dakshinagni) என்பது வேத கால யாகங்களில் பயன்படுத்தப்படும் மூன்று புனித நெருப்புகளில் (திரேதாக்னி) ஒன்றாகும்; இது ‘தெற்குத் திசை நெருப்பு’ என்று அழைக்கப்படுகிறது, இது முன்னோர்களை (பித்ருக்கள்) கௌரவிக்க மற்றும் ஹோமப் பொருட்களை அர்ப்பணிக்கப் பயன்படுகிறது; இது பெரும்பாலும் கார்ஹபத்யம் (மேற்கு) மற்றும் ஆஹவனீயம் (கிழக்கு) அக்னிகளுக்கு நடுவில், தெற்குப் பகுதியில் அமைக்கப்படுகிறது;
(ii)**தைஜஸன் என்பது இந்த நனவு மற்றும் ஆழ்ந்த உறக்க நிலைகளுக்கு இடையில் இருக்கும் மனதின் செயல்பாடு ஆகும் }||68||
இது தொண்டை வழியாக உணரப்படும் நுண்மையான இன்பத்தோடு தொடர்புடையது. இது ‘சூட்சும உடலையும்’ (Subtle body), வாயிலிருந்து எழாமல் தொண்டையிலிருந்தே தோன்றும் மத்யமா* (Madhyama) எனும் பேச்சு நிலையையும் குறிக்கிறது. இவையனைத்தையும் மனதில் இருத்திக் கொண்டு, அதன் பிறகு ‘ஓம்’ (AUM) எனும் பிரணவத்தின் ‘உ’ (U) எனும் எழுத்தை உச்சரித்துத் தியானிக்க வேண்டும்.
{*மத்யமா (Madhyama) என்பது சமஸ்கிருதத்தில் ‘நடு’ அல்லது ‘இடைநிலை’என்று பொருள்படும் ஒரு பொதுவான சொல்லாகும்.} ||69||
இனி, ‘ஓம்’ எனும் பிரணவத்தின் ‘ம’ (M) எனும் எழுத்தைப் பொறுத்தவரை, இதனைத் தரிசித்த மகரிஷி சூரிய ரிஷி’* ஆவார்; இதன் சந்தம் (metre) ‘ஜகதி’ (Jagati) எனப்படுகிறது. இதன் அதி தேவதை, கைலாயம் எனும் விண்ணுலகில் வீற்றிருக்கும் பரம்பொருளாகிய இறைவனாவார்; இது வெண்மை நிறம் கொண்டது
{*‘சூரிய ரிஷி’ என்பது பெரும்பாலும் அத்ரி மகரிஷியைக் குறிக்கும், ஏனெனில் தேவர்-அசுரர் போரின்போது அசுரர்களின் அம்புகளைத் தடுத்து, சூரியனாக ஒளிர்ந்து உலகைக் காத்தவர் இவர். சப்த ரிஷிகளில் ஒருவரான இவர், சூரியனுடன் தொடர்புடையவர் என்றும், ஜோதிட மற்றும் வைத்திய சாஸ்திரங்களில் சிறந்தவர் என்றும் போற்றப்படுகிறார்; இன்னொரு கூற்றின்படி ‘சூரிய ரிஷி’ என்பது அடிப்படையில் ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளில் சூரிய பகவானைக் குறிக்கும் சொல்லாகும்}||70||
இதன் பீஜாக்ஷரம் ‘ஹ்ரீம்’ (Hreem) என்பதாகும்; இது செல்வம் மற்றும் பொருட்களின் ஆற்றலைக் குறிக்கிறது; இது ‘துயில் (Sleep state)*’நிலையைக் குறிப்பதாகும்; இதன் மண்டலம் ‘சுவர்லோகம்’ (Swarloka) எனப்படுகிறது; இதனை உச்சரிக்கும் முறை, ஒருவித இசை நயத்தோடு கூடிய ஒலி (ஸ்வரித சுரம்) ஆகும்.
{*ஆத்மா வை விழிப்படையச் செய்யும் இறை வழிபாட்டு நிலை} ||71||
இது சாம வேதத்தைக் குறிக்கிறது; இதற்கான ஹோமத் தீ ‘ஆஹவனீயாக்னி * (Aahvaniya Agni) எனப்படுகிறது. இது ‘த்யௌ’(Dyou)** எனும் விண்ணுலக மண்டலத்தோடு தொடர்புடையது; இதனை அந்தி சாயும் வேளையில் தியானிக்க வேண்டும். இது இயற்கையின் ‘தாமச’ குணத்தைச் சுட்டிக் காட்டுகிறது; இதன் அதிதேவதை ‘பிராக்ஞன்’ (Praagjyna)*** என அழைக்கப்படுகிறார்.
{*(i) ஆஹவனீயாக்னி (Aahvaniya Agni) என்பது வைதிக மதத்தின் மிக முக்கிய சடங்குகளில் (யாகங்கள்) வளர்க்கப்படும் மூன்று புனித நெருப்புகளில் (முத்தீ) ஒன்றாகும். சம்ஸ்கிருதத்தில் ‘ஆஹவநீயம்’ என்றால் ‘வழிபாட்டிற்குரியது’ அல்லது ‘ஆகுதி (அர்ப்பணிப்பு) செலுத்த தகுதியானது’என்று பொருள்
**(ii) த்யௌ (Dyou) என்பது சமஸ்கிருத மொழியில் ஆகாயம், வானம் அல்லது ஒளி வீசும் சொர்க்கம் என்று பொருள்படும்
***(iii)உலகப் பொருட்கள் மற்றும் மனதின் செயல்பாடுகளில் இருந்து விடுபட்டு, ஆத்மா தனக்குள்ளேயே ஒடுங்கி அமைதியையும் பேரின்பத்தையும் அனுபவிக்கும் உன்னத நிலையின் அதி தேவதையே ‘பிராக்ஞன்’ ஆகும்} ||72||
இதன் இன்பம், இதயப் பகுதியில் உணரப்படும் பேரின்பமாகும்; இது ‘காரண உடலோடும்’ (Causal body)*, ‘பச்யந்தி’ (Pashyanti)** எனும் பேச்சு நிலையோடும் தொடர்புடையது; இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, அதன் பிறகு ‘ஓம்’ (AUM) எனும் பிரணவத்தின் ‘ம’ (M) எனும் எழுத்தை உச்சரித்துத் தியானிக்க வேண்டும்./
{(i)*காரண உடல் (Karana Sharira) என்பது இந்து யோக சாஸ்திரம் மற்றும் வேதாந்தத்தின்படி, மனிதன் கொண்டிருக்கும் மூன்று உடல்களில் (தூல, சூக்கும, காரண) மிக உயர்ந்த, நுட்பமான மூல உடலாகும்; இது ஆத்மாவைச் சுற்றி இருக்கும் முதல் அடுக்கு, முந்தைய பிறவிகளின் கர்ம வினைகள், சம்ஸ்காரங்கள் (பதிவுகள்) மற்றும் ஆசைகளை ‘விதை’ வடிவில் தன்னுள் கொண்டுள்ளது (ii) பச்யந்தி (Pashyanti) என்பது யோக மற்றும் தந்திர சாஸ்திரங்களில், ஒலியின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது நிலை; இது மனதின் ஆழமான, அறிவாற்றல் மற்றும் இச்சா சக்தியை (விருப்பம்) குறிக்கும் நிலை}||73||
இனி, ‘ஓம்’ (AUM) எனும் பிரணவத்தின் இறுதியில் வரும் ‘அரை மாத்திரையைப்’ (Half-syllable)* பொறுத்தவரை, இதனைத் தரிசித்த மகரிஷி ‘வருண ரிஷி’ ஆவார்; இது ‘விராட்’ (Viraat) எனும் சந்தத்தில் அமைந்துள்ளது; இதன் அதிதேவதை, பரம்பொருளாகிய ‘பரமாத்மா’ ஆவார். இதன் பீஜாக்ஷரம் ‘க்ரௌம்’ (Kroum) என்பதாகும்; இது அனுபவ ரீதியான ஞானத்தைப் பெறும் ஆற்றலைக் குறிக்கிறது.
{*தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கும் கால அளவு ‘மாத்திரை’ எனப்படும். கண் இமைக்கும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம் ஒரு மாத்திரை என வரையறுக்கப்படுகிறது}||74||
இது நிறங்கள் அனைத்திற்கும் மேலான ஒரு நிறம் போன்றது; இது பூலோகம், புவர்லோகம் மற்றும் சுவர்லோகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது; இது ‘துரியம்’ எனப்படும் சாட்சி நிலையைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறப்படுகிறது; இது இயற்கையின் அனைத்துப் பண்புகள் மற்றும் ஒலிகள் அனைத்தையும் தனக்குள்ளேயே கொண்டுள்ளது||75||
வேள்வித் தீயானது சம்வர்த்தக அக்னி* என்று அழைக்கப்படுகிறது; இது விடியற்காலை, நண்பகல், அந்தி மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் தேடப்படுகிறது; இது பிரத்யகாத்மா** எனப்படும் உள்ளுறை தெய்வத்துடனும், அனைத்துப் பூதங்களுடனும் தொடர்புடையது; மேலும் இது அதர்வ வேதத்துடனும், நாபிக்கு அருகில் தோன்றும் பேச்சின் ‘பரா’ வடிவத்துடனும் தொடர்புடையது.
{* (i)இந்து புராணங்களின்படி, சம்வர்த்தக அக்னி (Samvartaka Agni) என்பது பிரபஞ்சத்தின் முடிவில் (பிரளயம்) எல்லாவற்றையும் அழித்து சாம்பலாக்கக்கூடிய மிகக் கொடிய மற்றும் தீவிரமான நெருப்பைக் குறிக்கிறது. இது ‘பிரளய காலம்’ அல்லது ‘சம்வர்த்தக மேகங்கள்’ மற்றும் மின்னல்களுடன் சேர்ந்து உலகின் இறுதி அழிவின் போது வெளிப்படும் என்று புராணங்கள் கூறுகின்றன;
**(ii) ‘பிரத்யகாத்மா’ (Pratyagatma) என்பது வேதத்தில், ஒவ்வொரு உயிரினத்தின் உள்ளேயும், அறிவாகவும், சாட்சியாகவும் நிலை பெற்றுள்ள ஆத்மா வைக் குறிக்கும்} ||76||
இதன் இருப்பிடம், பேரானந்தம் நிறைந்த தலையின் உச்சியாகும் (பிரக்மா); இறைவனின் இந்த பகுதியே ‘தன்மை’ அல்லது ‘இருப்பு’ (Isness) எனும் உணர்வை உணர்த்துகிறது; இது ‘மூல காரண உடலுடன்’ (Causal Body) தொடர்புடையது; இவை அனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டு ‘ஓம்’ (AUM) எனும் பிரணவத்தின் ‘அரை மாத்திரை’ப் பகுதியைத் தியானிக்க வேண்டும் ||77||
இந்த முழுமையான ஒலியைத் தரிசித்த ஞானி ‘பிரம்ம ரிஷி’ ஆவார்; இதன் அதி தேவதை ‘பரப்பிரம்மம்’ எனப்படும் பரம்பொருளாகும்; இதன் சந்தம் அவ்யக்த காயத்ரி* என்று அழைக்கப்படுகிறது; இது ‘மன-உன்மணி’ எனப்படும் உணர்வின் தெய்வீக ஆற்றல் நிலையாகும்.
{*அவ்யக்த என்றால் கண்களுக்குப் புலப்படாத, வெளிப்படாத, எல்லையற்ற என்று பொருள்; இந்து சமயத்தில் காயத்ரி என்பது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை மட்டும் குறிக்காமல், 24 அட்சரங்கள் (எழுத்துக்கள்) கொண்ட சந்தஸ் (metre) முறையைக் குறிப்பதாகும்} ||78||
இதன் நிலையானது, தனி ஆத்மா வுக்கும், ‘உள்ளவை’ அனைத்திற்கும் இடையிலான ஒருமைப்பாட்டை உணரும் அனுபவமாகும்; இதன் இருப்பிடம் உணர்வுச் சக்திகள் நிறைந்த ஆகாயமாகும்; இவை அனைத்தையும் மனதில் நிறுத்தி, இந்த ஒளியை உச்சரித்துத் தியானிக்க வேண்டும்; அத்தகைய சாதகர்களே தாங்கள் தேடும் முக்தியை விரைவாகப் பெறுகிறார்கள்||79||
மேலே குறிப்பிடப்பட்ட நான்கு அதி தேவதைகளும் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன; ‘விஸ்வன்’ எனும் தேவன் அனைத்தையும் தன்னுள் கொண்ட ‘விராட்’ வடிவத்தையும்; ‘தைஜசன்’ எனும் தேவன் உள்ளுறைந்திருக்கும் ‘சூத்ராத்மா’வையும்; ‘பிராஜ்ஞன்’ எனும் தேவன் ‘ஓம்’ எனும் பிரணவத்தையும் குறிக்கின்றனர்; தூய அத்வைத (இரண்டற்ற) நிலையில், இவை அனைத்தையும் சம நோக்குடன் தரிசிக்க வேண்டும்||80||
உடல் தாங்கிய தனி ஆத்மா வானது பூத உடலுக்குள் அமைந்துள்ளது; அந்த உடலின் விரிவே நாம் காணும் பிரபஞ்சமாகும் (உலகம்); இவ்விரண்டிற்கும் அதிபதியாகத் தேடப்படும் இறைவன் ‘பிரிவற்றவர்’ (அத்விதீயர்- Advitiyar*) ஆவார்; இந்த பரம் பொருளையும், அவரது இயல்பையும் தியானிக்க வேண்டும்.
{*தெய்வத்தை ‘அத்விதீயர்’ என்று அழைக்கும்போது, அவர் ஒருவரே பரம்பொருள், அவருக்கு நிகராகவோ அல்லது இரண்டாவதாகவோ வேறு எதுவுமில்லை என்று பொருள்படும்} ||81||
AUM என்பதில், முதல் எழுத்தாகிய ‘A’-வின் ஒலிப்பு மென்மையாக இருக்கும்; அடுத்த எழுத்தாகிய ‘U’-வின் ஒலிப்பு சற்று நீண்டு ஒலிக்கும்; மூன்றாம் எழுத்தாகிய ‘M’-இன் ஒலிப்பு ஒரு ரீங்காரமாக நீட்டிக்கப்படும்; ‘AUM’ (ૐ) எனும் ஒலியின் கடைசிப் பாதியானது, தனித்து அறிய முடியாத நிலையில் இருக்கும்||82||
முதல் உச்சரிப்பு வெளிப்படையாகத் தெரியும் அனைத்தையும் குறிக்கிறது; அடுத்தது கண்ணுக்குப் புலப்படாத அனைத்தையும் குறிக்கிறது; மூன்றாவது, உணர்வின் மேன்மையான ஆற்றலைக் குறிக்கிறது; கடைசிப் பாதிப் பகுதியானது, பரம்பொருளைக் (Supreme Divinity) குறிக்கிறது||83||
ஒருமுறை ‘ஓம்’ (AUM) என்று உச்சரித்த பிறகு, அதன் நோக்கத்தை மனதில் கொண்டு, அதைத் தொடர்ந்து வரும் தியானத்திற்கு உண்மையுள்ளவராக இருந்து, அதன் பகுதிகளை வரிசைக் கிரமமாக சிந்திக்க வேண்டும் ||84||
ஓம் (AUM) அல்லது பிரணவம் என்பது ஆத்மாவின் பெயராகும்; எனவே, ‘அ’ (A) என்ற எழுத்தும் பரம் பிரம்மத்திலிருந்து வேறானதல்ல; பெயருக்கும், அப் பெயரால் அழைக்கப்படுபவருக்கும் இடையே தூய ஒன்றிப்பு (வேற்றுமையின்மை) நிலவுகிறது; ஆகையால், அந்த தேடல் முறையே மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது ||85||
மரணத்தின் அறிகுறிகளை உணர்ந்த ஒருவன், பின்னர் ஆத்மா வாகத் தன் உள்ளே இருக்கும் தூய வடிவத்தைத் தியானிப்பதில் உறுதியாக நின்று, அந்த தேடல் முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால், அவன் நிச்சயமாகப் பரம்பொருளுடன் உணர்வு பூர்வமாக ஒன்றிணைவான்||86||
ஒரு வேளை நமது மனம் பரம்பொருளுடன் ஒன்றிணைய இயலவில்லை என்றால், நமது வாய் மொழியைப் பயன்படுத்தி ‘ஓம்’ என்று உச்சரிக்க வேண்டும்; ஏனெனில், அதன் மூலமாகவும் ஒருவன் முக்தியைப் பெறுகிறான்||87||
நமது உணர்வுசார் ஆற்றல்கள் பரம்பொருளுடன் ஒன்றிணையும் பணியில் உதவவில்லை என்றால், நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள ‘ஓம்’ என்று உரக்க உச்சரிக்கும்போது, அந்த உச்சரிப்புடன் மூச்சுக் காற்று முழுமையான ஒத்திசைவுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், ஒருவன் ‘பிரம்மலோகம்’ எனப்படும் தேவலோகத்தில் சுதந்திரத்தைப் பெறுகிறான்||88||
ஒருவனது குரு மற்றும் இறைவனின் அருளாலேயே, ‘ஓம்’ என்பதைத் தியானிப்பதன் மூலம், இந்த வாழ்விலேயே, இந்த உடலைக் கொண்டே தான் தேடும் முக்தியைப் பெற இயலும்; அவ்வாறன்றி, ‘கிரம முக்தி’ (Krama-Mukti)* எனப்படும் படிப்படியான முக்தி நிலையை அடையவும் ஒருவன் தேர்ந்தெடுக்கலாம்
{*இந்த பிறவியிலேயே முழு ஞானம் அடையாத, ஆனால் பக்தி அல்லது தியானம் (உபாசனை) செய்தவர்கள், உடலைத் துறந்த பிறகு படிப்படியாக முக்தி அடைவதை இது குறிக்கிறது. } ||89||
ஒருவன் ‘பிரம்மலோகம்’ எனப்படும் தேவலோகத்தை அடைந்தால், அங்குள்ள அதி தேவதையான, படைப்புக் கடவுளாக நியமிக்கப்பட்ட பிரும்மனுடன் சேர்ந்தே முக்தியைப் பெறுகிறான்; இதுவே ‘கிரம முக்தி’ (படிப்படியான முக்தி) என்று அழைக்கப்படுகிறது; இது ஒருவன் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் சுழற்சியைக் கடந்து செல்ல உதவுகிறது||90||
‘ஓம்’ என்று உச்சரிப்பதன் மூலம் உயர்ந்த உலகங்களை அடைவது என்பது, அந்தத் தேடுபவரின் பயிற்சியைச் சார்ந்திருக்கிறது; பரிந்துரைக்கப்பட்ட வழியில் ஒருவன் எவ்வாறு முன்னேறியிருக்கிறானோ, அதற்கேற்பவே அவனுக்கு கிடைப்பதும் அமையும்; எனவே, அந்த ஆன்மீகப் பாதையிலிருந்து திடீரென்று விலகி விடாமல் இருப்பதில் ஒருவன் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ||91||
ஒருவன் தான் தேடிய இறை ஞானத்தை இவ்வுலகிலேயே பெற்றால், அவன் உயிருடன் இருக்கும்போதே முக்தியை அல்லது ‘ஜீவன் முக்தி’ நிலையை அடைகிறான்; அப்போது, இறைவனுடன் தன் உள்ளத்தில் ஒன்றிணைந்தபடியே, எஞ்சியிருக்கும் கர்ம வினைகளை மட்டும் பூத உடலின் வாயிலாக தீர்த்துக் கொள்கின்றான்||92||
உடலைத் துறக்கும் காலம் வரும்போது, அத்தகைய யோகிகள் தங்கள் இறுதி மூச்சை வெளியே விடுவதில்லை; மாறாக, அவர்களின் சுவாச ஆற்றலே (பிராணனே) அதன் மூல வடிவத்துடன் ஒன்றிணைந்து விடுகிறது; அத்தகைய முறையிலேயே அவர்கள் ‘நிர்வாண’ நிலையை அடைகிறார்கள்||93||
இது, நன்கு காய்ந்திருக்கும் ஒரு கல்லின் மீது சில துளி நீரை ஊற்றுவதைப் போன்றது; அந்த நீர் அங்கே ஒரு கணமும் தங்கியிருக்காது; சொல்லப்போனால், அந்த நீர் முழுவதும் அக் கல்லுக்குள்ளேயே உறிஞ்சப்பட்டு, ஜீரணிக்கப்பட்டு விடுகிறது ||94||
அதைப் போலவே, ‘ஜீவன் முக்தி’ நிலையில் இருப்பவர்களின் சுவாச ஆற்றலும் (பிராணனும்) உடலை விட்டு வெளியேறுவதில்லை; இறுதி மூச்சு வெளி விடுதல் அங்கே நிகழ்வதில்லை; மாறாக, அந்தச் சுவாச ஆற்றல் முழுவதுமாக ‘ஆத்மா வுக்குள்ளேயே’ (சுயத்திற்குள்ளேயே) ஒன்றிணைந்து விடுகிறது; உடலின் ஒன்பது துவாரங்கள் எதன் வழியாகவும் அது வெளியேறுவதில்லை||95||
இறைவனை அவனது செயல்களின் வாயிலாகத் தேடுபவர்கள் அனைவரும், உடலின் மையத்தில் அமைந்துள்ள ‘சுழுமுனை நாடி’ வழியாகவே பயணிக்க வேண்டியுள்ளது; இதன் வாயிலாகவே அவர்கள் ‘பிரம்மலோகம்’ எனப்படும் விண்ணுலகில் இளைப்பாறுகிறார்கள்; மேலும், படிப்படியான வரிசை முறையில் தங்கள் முக்தியைப் பெறுகிறார்கள் ||96||
ஒருவன் தான் எப்போது தனது உடலை துறக்க வேண்டும் என்பதை முன்னரே அறிந்திருந்தால், அவன் உடலின் ஒன்பது துவாரங்களையும் அடக்கி (மூடி), உச்சந் தலையில் அமைந்துள்ள ‘பிரம்மரந்திரம்’ வழியாகப் பயணித்து, ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ மந்திரத்தை இறுதியாக உச்சரித்தபடியே உடலைத் துறக்கிறான் ||97||
ஒரு யோகி ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் முதல் எழுத்தாகிய ‘அ’ (A) காரத்தின் மீது தியானம் செய்து கொண்டிருக்கும்போது, அவனது மூச்சு (பிராணன்) உடலை விட்டு வெளியேறினால், அவன் நிச்சயமாக மீண்டும் இவ்வுலகிற்கே திரும்பிப் பிறக்க நேரிடும்; ரிக் வேத நூல்கள் இம் முறையையே எடுத்துரைக்கின்றன ||98||
அத்தகைய யோகிகள், பிரம்ம ஞானம் பெற்ற ஆசான்களின் (பிராமணர்களின்) குடும்பத்தில் வந்து பிறக்கிறார்கள்; பின்னர் அவர்கள் தவத்தையும், பிரும்மச்சரியத்தையும் மேற் கொள்கிறார்கள்; தாங்கள் தேடிய இறை ஞானத்தை முழுமையாக அடைந்த பிறகு, அவர்கள் நிச்சயமாக ‘நிர்வாண’ நிலையை எய்துகிறார்கள்||99||
ஒரு யோகி ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் முதல் மற்றும் இரண்டாவது எழுத்துக்களின் மீது தியானம் வைத்துக் கொண்டிருக்கும்போது, அவனது மூச்சு (பிராணன்) உடலை விட்டு வெளியேறினால், அவன் சோமலோகம்* எனப்படும் விண்ணுலகை அடைவான்; யஜுர்வேத நூலானது அவன் அவ்வுலகை அடைவதற்குத் துணையாக அமைகிறது.
{*இந்து சமய மற்றும் உபநிடத தத்துவங்களின்படி, சோமலோகம் (சந்திரனின் உலகம்) என்பது ஆத்மா க்கள் தங்கள் நல்வினைகளுக்கான பலன்களை அனுபவிக்கச் செல்லும் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக/விண்ணுலக உலகத்தைக் குறிக்கிறது} ||100||
இவ்வுலகில் யோகி தவமியற்றி, மறுவுலக இன்பங்களை நுகர்கிறார்; பின்னர் மீண்டும் பூவுலகிற்குத் திரும்புகிறார்; இப் பிறவியிலேயே அவர் மெய் ஞானத்தைப் பெற முயன்று, அதன் வாயிலாக நிர்வாண நிலையை அடையும் தகுதியைப் பெறுகிறார்||101||
ஒரு யோகி ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ மந்திரத்தின் மூன்று எழுத்துக்களையும் ஒருங்கே தியானித்துக் கொண்டிருக்கும்போதே, அவரது உயிர் உடலை விட்டு நீங்குமாயின், சாம வேத மந்திரங்களின் துணையோடு, அவர் ‘சூரிய லோகம்’ எனப்படும் தேவலோகத்தை அடைவதற்குத் தகுதி பெறுகிறார்||102||
அங்கு, பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்ற யோகி, மேலுலகில் உள்ள ‘பிரம்ம லோகம்’ எனும் தேவ மண்டலத்தை நோக்கிச் செல்கிறார். அங்கு மீண்டும் அமர்ந்து தியானம் செய்து, தான் தேடிய மோட்ஷத்தை அடைகிறார்||103||
தோற்றங்களாகக் காணப்படும் இவ்வுலகம் முழுவதையும் விட மேலானதும், இயற்கையின் முழு எல்லைக்கும் அப்பாற்பட்டுத் தனித்து விளங்குவதுமான பரம்பொருள், அழிவற்ற திவ்ய புருஷனே ஆவான்; காலத்தால் அழியாத, நித்தியமான அந்தத் தெய்விகப் பொருளே ‘பரமாத்மா’ எனப் போற்றப்படுகிறது||104||
அந்தத் திவ்ய வடிவம் கொண்ட பரமாத்மாவைத் தேடி அலைபவர்கள், தாம் தேடிய அந்தப் பரம பொருளுடனேயே ஒன்றிணையும் பேறை பெறுகிறார்கள்; அவர்கள் துயரம், மயக்கமூட்டும் பற்றுக்கள் மற்றும் அச்சம் ஆகியவற்றைத் தாண்டிச் செல்கிறார்கள்; மேலும், சாதாரணப் பெயர்கள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் எழும் அனைத்து வேறுபாடுகளையும் முற்றிலுமாகத் துறந்து விடுகிறார்கள்||105||
ஒரு யோகி, ‘ஓம்’ (AUM ૐ) எனும் பிரணவ மந்திரத்தின் முழு வடிவத்தையும், அதன் இறுதிப் பாதியான ‘அர்த்த மாத்திரை’யையும் சேர்த்து தியானிக்கிறாரெனில், அவர் உண்மையாகவே எல்லை அற்ற நிலையை அடைகிறார்; அவர் எங்கும் நிறைந்த சர்வ வியாபியாகத் திகழ்கிறார்; அத்தகையவர் இனி எங்கு வருவார்? அல்லது எங்குதான் செல்வார்?||106||
அத்தகைய யோகிகள் எங்கும் வருவதில்லை, எங்கும் செல்வதுமில்லை; அவர்கள் தங்கள் ஆத்ம விடுதலையை இந்த பிறப்பிலேயே அடைந்து விடுகிறார்கள்; ஓ அலர்கனே, ஆத்ம விடுதலை என்பது ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் துணையோடு தேடுவதன் மூலமாகவே சாத்தியமாகிறது என்பதை நீ நன்கு உணர்ந்து கொள் ||107||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் முப்பத்தி ஐந்தாவது (35) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் முப்பத்தி ஐந்தாவது (35) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 3679 = 3786
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் -35 முடிவடைந்தது
அத்தியாயம் -36 தொடர்கின்றது