COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -7 : கார்த்தவீர்யன் யுத்தங்கள்
அத்தியாயம் 22
அர்ஜுனன் புதல்வர்கள் வெறிச் செயல்; ஜமதக்னி முனிவர் படுகொலை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிடம் தொடர்ந்து கூறினார் ‘ஸ்ரீமத் பரசுராமர் மன்னன் அர்ஜுனனைக் கொன்றார்; மறைந்த மன்னரின் புதல்வர்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்தனர்; அவர்களின் துயரத்திற்கு எல்லையே இல்லை||1||
அந்தப் புதல்வர்கள் புலம்பினர் ‘நமக்கு எவ்வளவு வெட்கக்கேடு ஆகி விட்டது; தெய்வத்தின் கோபம் எங்களை எத்தகைய நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது என்று பாருங்கள்; அனு தினமும் உதிக்கும் கம்பீரமான சூரியனைப் போன்ற எங்கள் தந்தை, இவ்வளவு சீக்கிரமாக எப்படி மறைந்து போனார்?||2||
மூவுலகிலும் எவரைக் கண்டு அனைவரும் அஞ்சினார்களோ, எவர் போற்றப்பட்டாரோ; எவர் ஒருவர் ஒழுக்கமற்ற தேவர்களையும் அசுரர்களையும் சமமான நிலையில் பார்த்து தண்டித்தாரோ; காலத்தின் அதிபதியான எந்த கால தேவன் கூட எவரைப் பார்த்து நடுங்குவாரோ ||3||
அத்தகைய வலிமை மிக்க ஒரு பேரரசன், ஒரு முனிவரின் மகனின் கைகளால் தாக்கப்பட்டு, எவ்வாறு உயிரற்ற உடலாய் தரையில் வீழ்ந்தார்?; நாம் ஏமாந்து விட்டதினால் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதா; இல்லை நடந்த அனைத்துமே உண்மை கனவா?||4||
ஒரு மின்மினிப் பூச்சி சூரியனை மிஞ்சி ஒளிர முடியுமா?; நரி, ஐராவதம் எனப்படும் தேவ யானையை விழுங்க முடியுமா?; அல்லது விஷத் தன்மை அற்ற ஒரு பாம்பு, தேவ நாகமான ஆதிசேஷனை விழுங்க முடியுமா? அல்லது ஒரு எலி, வேதங்களின் இருப்பிடமான மேரு மலையையே குடைந்து தள்ளி விட முடியுமா? ||5||
அல்லது ஏதேனும் ஒரு பாம்பு தன் தலையை உயர்த்தி, தன் வலிமையால் தேவலோகப் பறவையான கருடனை பிடித்துக் கொள்ள முடியுமா? சிறு குழந்தையால், ஒரு கல்லை எறிந்து, முழு நிலவையும் வெகு தொலைவிற்குத் தள்ளி விடத்தான் முடியுமா||6||
மேற் கூறிய அனைத்தும் நடக்க இயலாதவை என்றாலும், இயற்கையை மீறி ஒருவேளை அவை நிகழ்ந்தாலும் கூட, அவற்றையெல்லாம் விட மிகக் கடினமான செயலான, எங்கள் தந்தையை கொல்வது நிஜமாகவே நிகழ்ந்து விட்டதே; இதை நாங்கள் எவ்வாறு உண்மை என்று நம்புவது?||7||
இவ்வாறு அவர்கள் மனதில் துயரம் அடைந்து மனதில் கதறினார்கள்; மன்னன் அர்ஜுனனின் புதல்வர்கள் அனைவரும், நடந்து முடிந்திருந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள இயலாமல் போர்க்களத்திற்கு வந்தனர்; அங்கே அவர்களது தந்தையின் உயிரற்ற உடலைக் கண்டதும், உணர்ச்சிப் பெருக்கால் குரல் தழுதழுத்து நின்றனர்||8||
அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் புலம்பினர்; ஒவ்வொருவரும் மறைந்து விட்ட தமது தந்தையின் பெருமைகளை நினைவு கூர்ந்தனர்; உண்மையை அறிந்த அதிர்ச்சியால் வியப்பால் சூழப்பட்டு ஒவ்வொருவரும் மயக்கமுற்ற நிலையை அடைந்தனர்; அவர்களின் துயரம் மிக அதிகமாகவே இருந்ததினால், உணர்ச்சி அற்றவர்களாக அங்கே நின்று கொண்டு இருந்தார்கள்||9||
இவ்வாறு அவர்கள் துயரம் ததும்பி புலம்பிய பின்னர், தம் நிலைக்கு சிறிதே வந்தவர்கள் அங்கேயே ஒரு சபதத்தை எடுத்தார்கள்; ‘எங்கள் தந்தையைக் கொன்றவனை நாங்கள் கொல்வோம்; அப்போதுதான், அவருக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடனிலிருந்து மீண்டவர்களாக நாங்கள் இருக்க முடியும்’ ||10||
இவ்வாறு சபதம் செய்த பிறகு, அவர்கள் தங்கள் தந்தையின் உடலைத் தங்கள் தலை நகருக்கு எடுத்துச் சென்றனர்; வேத விதி முறைகளுக்கு ஏற்ப, ஈமச் சடங்குகள் அனைத்தையும் குறைவின்றி செய்தார்கள் ||11||
பின்னர், தெய்வமான ஸ்ரீமத் பரசுராமரைத் தேடி கண்டு பிடிக்க அனைத்துத் திசைகளுக்கும் ஒற்றர்களையும் வீரர்களையும் அனுப்பி வைத்தனர்; அப்போதுதான், அவர் இறுதியாகத் தன் தந்தையின் ஆசிரமத்திற்கு திரும்பிச் சென்று விட்டார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர் ||12||
ஆகவே, பழி தீர்க்கும் வெறியுடன் அவர்கள் அனைவரும் தங்கள் படைகளைத் திரட்டிக் கொண்டு, காட்டிலுள்ள ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை நோக்கிப்வெளிப்புற ப்பட்டனர்; விரைவில் அவர்கள் அந்தப் புனிதமான ஆஸ்ரம வளாகத்திற்குள் நுழைந்தனர்||13||
அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கு சற்று முன்னர்தான், ஸ்ரீமத் பரசுராமர் தன் சகோதரர்களுடன் காட்டிற்குச் சென்றிருந்தார்; அதன் பின்னரே, மறைந்த மன்னனான அர்ஜுனனின் புதல்வர்கள் தமது படையினருடன் ஜமதக்கினி முனிவரின் இருப்பிடத்திற்குள் நுழைந்தது||14||
அவர்கள் ஸ்ரீமத் பரசுராமரை அனைத்து இடங்களிலும் தேடினர்; அந்த இடத்தை முழுமையாகச் சல்லடை போட்டுத் துழாவினர்; ஆயினும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை; ஆனால், அதே சமயத்தில் வேத வேள்விகள் நடைபெறும் இடத்தில், ஜமதக்னி முனிவர் தன் தவத்தில் ஆழ்ந்திருப்பதை அவர்கள் கண்டனர்||15||
பசுக்களை வேட்டையாடுபவர்கள், ஒரு பசுவைக் கண்டதும் அதை நோக்கி எவ்விதம் பாய்ந்து செல்வார்களோ, அதே போலவே அப்போது இழிவான மனநிலையில் இருந்த இளவரசர்களும் அந்த முனிவரைப் பிடித்துக் கொண்டனர்||16||
ஒருவர் தனது மரணத்திற்கு முன்னர் எம தர்மனின் தூதர்களைக் காண்பது எத்துணை எளிதானது, அதை போலவே அந்த இளவரசர்களும் வீரர்களும் பயங்கரமான தோற்றத்துடன் காட்சியளித்தனர்; அவர்களைக் கண்ட ரேணுகா தேவி, ‘இவர்கள் என் கணவனைக் கொன்று விடுவார்களோ?’ என்று எண்ணி நடுங்கினாள் ||17||
ஒரு புலி பசுவின் மீது எவ்விதம் பாய்ந்து தாக்குமோ, அதேபோலவே அந்த முனிவரும் தன் பகைவர்களால் சூழப்பட்டிருந்தார்; அதைக் கண்டு பெரும் அச்சம் கொண்ட ரேணுகா தேவி, அந்த இடத்திற்கு ஓடிச் சென்று, தன்னால் இயன்ற அளவு பணிவுடன் ‘இவருக்குத் தீங்கு ஏதும் செய்யாதீர்கள்’ என்று உருக்கமாக வேண்டினாள்||18||
அவள் தொடர்ந்து கூறினாள் ‘கருணை மிக்க இளவரசர்களே, நான் கூறுவதை சற்றுச் செவி கொடுத்துக் கேளுங்கள்; எதற்காக நீங்கள் அனைவரும் உங்கள் தலைகளில் பாவத்தைச் சுமந்து கொள்ள முயல்கிறீர்கள்? விவேகத்தால் உங்கள் இரத்த வேட்கையை, பழி வாங்கும் எண்ணத்தை அடக்கிக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையையே அடைவீர்கள் ||19||
நீங்கள் அனைவரும் தாராள மனப்பான்மை கொண்ட வள்ளல்கள் என்பதை நான் அறிவேன்; என் ஆடையின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு நான் உங்களை வேண்டுகிறேன்; திருமணமான பெண்கள் அனுபவிக்கும் சௌபாக்கியம்* எனும் வரத்தை எனக்கு அருளுங்கள்; குறைந்தபட்சம் எங்கள் இருவர் மீதும் சிறிது மரியாதையாவது காட்டுங்கள்.
{*கணவன் உயிருடன் இருக்கும் பேறு} ||20||
என்னை உங்கள் சகோதரியாகவே கருதுங்கள்; நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்; முனிவரான என் கணவரின் உயிரை விட்டு விடுங்கள்; இங்கு நல் விவேகம் மேலோங்கட்டும்||21||
நீங்கள் அனைவரும் செல்வம் கொழிக்கும் இளவரசர்கள்; நாங்களோ உங்கள் ஆதரவை நம்பியே பிழைத்து வருகிறோம்; நான் இப்போது உங்களிடம் ஒரு தானத்தை கேட்பதை போலவே கேட்கின்றேன்; என் கணவரின் உயிரைக் கொல்லாமல் பாதுகாப்பை தாருங்கள் ||22||
என் அச்சம் நீங்க எனக்கு உதவுங்கள்; மீண்டும் ஒருமுறை, என் ஆடையின் ஓரத்தைப் பற்றிக் கொண்டு உங்களை பணிந்து வேண்டுகின்றேன்; , உங்கள் அனைவரையும் மீண்டும், மீண்டும் கெஞ்சுகிறேன்; என் கணவரின் உயிரை எனக்குப் பரிசாக அளியுங்கள்; எதிரிகளைப் போல என்னை பார்க்காதீர்கள் ||23||
இது என் மகனின் பிழையினாலேயே நிகழ்ந்தது; உங்கள் அனைவரின் கண்களும் சினத்தால் சிவந்திருப்பதை நான் உணர்கிறேன்; ஆயினும், ஒரே ஒரு முறை மட்டும், என் முகத்தில் மீண்டும் புன்னகை மலரச் செய்யுங்கள் ||24||
தாயார் ரேணுகாதேவி பல வழிகளிலும் அந்த இளவரசர்களைச் சமாதானப்படுத்த முயன்றார்; எத்தனை முறை தளராமல் கெஞ்சியும், வேண்டியும், உறுதி மொழிகள் அளித்தும், முயற்சித்தும் அவர்களில் எவருடைய மனமும் இரங்கவில்லை; தீய புத்தி கொண்ட எதிரிகளைப் போலவே செயல்பட அவர்கள் தீர்மானித்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது ||25||
முனிவர் ஜமதக்னியும் பணிவான குரலில் பேசத் தொடங்கினார்; தன் மனைவியின் பரிதாப நிலையைக் கண்டு அவர் கூறினார்; ‘விவேகத்துடன் செயல்பட்டு, எங்கள் இருவரின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டு, உங்கள் தலை நகருக்கே திரும்பிச் செல்லுங்கள்||26||
நான் கூறுவதைச் சற்றுச் செவிமடுத்துக் கேளுங்கள்; அவற்றை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் உங்கள் அரண்மனைக்குத் திரும்பிச் செல்லுங்கள்; அதன் மூலம் உங்கள் குலம் முழுவதையும் காத்துக் கொள்ளுங்கள் ||27||
ஞானம் பெற்ற ஒரு அந்தணரைக் கொல்வது பெரும் குற்றமாகவும் பாவமாகவும் கருதப்படுகிறது; அது உங்கள் வம்சம் முழுவதையும் இப் பூவுலகிலிருந்து அழித்து விடும்; எனவே, விவேகத்துடன் செயல்பட்டு உங்கள் சினத்தைக் கை விடுங்கள்||28||
நாங்கள் உங்களுக்குக் குருமார்களாகத் திகழ்கிறோம்; நீங்கள் எங்களுக்கு விருப்பமான, சிறப்புக்குரிய சீடர்கள் ஆவீர்கள்; எனவே, இறை நெறிக்கு மாறான வன் முறையால் உங்கள் கைகளைத் களங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள் ||29||
முனிவர் ஜமதக்னியும் பல வழிகளிலும் அவர்களை அணுகி, அறிவுரை கூறவும் எச்சரிக்கவும் முயன்றார்; ஆயினும், பகுத்தறிவு இழந்த இளவரசர்கள், கண் மூடித்தனமான வெறுப்பினால் உந்தப்பட்டு, அவர் கூறிய வார்த்தைகளையோ, அவர் அளித்த தொலைநோக்குடைய எச்சரிக்கையை சற்றும் பொருட்படுத்தவில்லை||30||
அவர்கள் தங்கள் வாளை உறையிலிருந்து உருவி, முனிவரைக் கொல்லத் தயாரானார்கள்; அப்போது தாயார் ரேணுகாதேவி, தன் தலையைக் குனிந்தவாறே விரைந்து முன்னே வந்து ‘முதலில் என்னைக் கொன்று விடுங்கள்’ என்று உரக்கக் கூவினார் ||31||
என் கணவரின் உயிரைக் காப்பாற்றுங்கள்; இல்லையெனில், உங்கள் கூர்மையான வாள்களால் முதலில் என் தலையை வெட்டி வீழ்த்துங்கள் என்று தாயார் ரேணுகாதேவி அவர்களை மீண்டும், மீண்டும் வேண்டிக் கொண்டார்; பின்னர், தாங்கொணா துயரத்தால் மனம் உடைந்து, தரையில் வீழ்ந்தார் ||32||
இத்தகைய நெஞ்சை உருக்கும் அவலக் குரலை, இரக்கமற்ற ஒரு கசாப்புக் கடைக்காரன் கேட்டிருந்தால் கூட, அவனது உள்ளமும் உருகிப் போயிருக்கும்; அவன் தான் செய்யத் துணிந்திருந்த அந்தப் பாதகச் செயல்களிலிருந்து பின் வாங்கியிருப்பான்||33||
ஆயினும், இரக்கம் அற்ற அந்த இளவரசர்கள், எவ்விதச் சலனமுமின்றி, இரக்கமற்ற பகைவர்களைப் போலவே நின்றிருந்தனர்; அவர்கள் அன்னை ரேணுகாவை கீழே தள்ளிவிட்டு, அடுத்த கணமே அந்த முனிவரின் தலையை வெட்டி வீழ்த்தினர் ||34||
அன்னை ரேணுகாவின் புலம்பல்: ‘தூ …தூ….வெட்கக்கேடு என்னே பரிதாபம், இந்தத் துயரச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது? அறநெறி அறிந்த சான்றோர்கள் எவரும் இன்று இங்கு வந்து உதவ முன் வரவில்லையே, அது ஏன்?’ ||35||
மன்னன் அர்ஜுனனின் மைந்தர்கள், முனிவர்கள் மீது கொண்டிருந்த அளவற்ற மரியாதையை முற்றிலும் தள்ளி வைத்து விட்டு, ஈவு இரக்கமற்ற அவரது மகன்கள் எவ்வாறு இப்படி ஒரு கேவலமான முறையில் நடந்து கொண்டனர்?; இத்தகையதொரு அழிவு எப்படி விளைந்தது? ||
தூ …தூ….வெட்கக்கேடு, எங்களுக்கு வாய்த்த பிள்ளைகள் எத்தகையவர்கள் என்று எண்ணி நான் வியக்கிறேன்; இங்கு ஒருவரும் எங்களுக்கு துணையாக இல்லை; அச்சத்தாலும் ஆத்திரத்தாலும் நான் உரக்கக் கதறுகின்றேன்: எத்தனை முறை நான் ‘ராமா, ராமா, ராமா’ என்று கூவினேன்; ஆயினும் இன்று அவர் எனக்குப் பதிலளிக்கவில்லையே; ஓ ராமா, இந்தத் துயரத்திலிருந்து என்னைக் காக்க, நீ ஏன் இன்னமும் வரவில்லை?’ ||36||
இனி நான் என்ன செய்வேன்? நீ இல்லாத நிலையில் நான் எவ்வாறு பொறுமை காப்பேன்? ; ஓ இறைவா ஹரா, ஓ இறைவா ஹரா, எப்படி அந்த இளவரசர்கள் இன்று கருணையற்றவர்களாக மாறி உள்ளார்கள்? ||37||
இவ்வாறு, அன்னை ரேணுகா மிகுந்த துயரத்துடன் தொடர்ந்து கதறி அழுதாள்; அந்த இளவரசர்களின் கொடிய செயலைத் தடுத்து நிறுத்த, இயற்கை கூடத் தன் கூக்குரலுக்குச் செவி சாய்க்கவில்லை என்பதை அவள் உணர்ந்தாள் ||38||
ஞானம் பெற்ற ஒரு முனிவரின் தலையைத் துண்டித்ததன் மூலம் தாங்கள் அடைந்திருந்த பாவத்தைப் பற்றி, மறைந்து விட்ட வீரமிக்க மன்னனின் மைந்தர்கள் சிறிதும் யோஜனை செய்யவில்லை போலும்; இப்போது அவர்கள், பெரும் பாவத்தை சுமந்து கொண்டு தங்கள் தலை நகருக்குத் திரும்பியுள்ளனர் ||39||
திரும்பிச் செல்லும்போது அவர்கள் இவ்வாறு எச்சரித்தனர் ‘உன் மகன் ராமன் எங்கோ ஒளிந்திருக்கிறான் போலும்; நாங்கள் நாளை மீண்டும் வருவோம்; அவனைக் கொன்று, எங்கள் தந்தைக்கு நாங்கள் செலுத்த வேண்டிய கடனிலிருந்து விடுபடுவோம் ||40||
இவ்வாறு மிரட்டிய பிறகு, தவறான பாதையில் சென்ற, ஈவு, இரக்கமில்லாத இளவரசர்கள், தங்களைப் பற்றித் தாங்களே மிகவும் பெருமிதம் கொண்டு, தாங்கள் செய்த அந்தச் செயலால் மிகுந்த மனநிறைவு அடைந்தவர்களாக, தங்கள் வெற்றியைப் பறை சாற்றியவாறு தங்கள் தலை நகருக்குத் திரும்பினர்||41||
ஆசிரம வளாகத்தில் அன்னை ரேணுகா தொடர்ந்து புலம்பினாள் ‘இதுவரை நான் செய்த பாவங்கள் என்னென்ன? யார் எனக்கு கொடுத்த சாபமோ அல்லது தண்டனையோ, இப்போது இந்தத் தீராத துயரத்தின் வடிவில் என்னை தள்ளி வைத்து உள்ளது ? அந்தத் துயரத்தின் ஆழத்தை யாரால் அளவிட முடியும்? ||42||
ஐயோ, என் நிலை இப்படி ஆகி விட்டதே, இனி நான் என்னதான் செய்ய முடியும்? என்று கூறியவாறே அவள் தன் கால்களால் தரையை எட்டி எட்டி உதைத்தாள் ; தன் மார்பில் அடித்துக் கொண்டாள்; ஒரு கல் மீது தன் தலையை மோதிக் கொண்டாள்; அன்னை ரேணுகாவின் துயரம் தாங்க முடியாததாக இருந்தது ||43||
உதவி கோரியும், துயரத்திலும் அவள் எழுப்பிய அந்தக் கூக்குரலைக் கேட்டு, பல முனிவர்கள் அங்கு கூடத் தொடங்கினர்; அவர்கள் தங்கள் அறிவுரைகள் மூலம் அவளுக்கு மனத் தைரியத்தை ஊட்ட முயன்றனர்; ஆயினும், அவள் கதறி அழும் இதயத்தை அமைதிப்படுத்தக் கூடியவர் அங்கு எவருமே இல்லை||44||
பலரும் அவளைத் தேற்ற முயன்ற போதிலும், அவளது உள்ளத்தில் உணர்ந்த அந்தத் துயரத்திலிருந்தே அவளது மனம் மீளவில்லை; அவள் இவ்வாறு கூறினாள் ‘இத்தகைய கையாலாகாத நிலையில், அவமானகரமான நிலையில் நான் என்றுமே இருந்தது இல்லை; என் மகன்கள் ஏன் இன்னும் காட்டிலிருந்து திரும்பி வரவில்லை என்று தெரியவில்லையே||45||
‘ஓ ராமா, இன்று நீ என்னை விட்டு வெகு தொலைவு சென்று விட்டாய்; இது எங்கள் பகைவர்களுக்கு அவர்கள் தேடிய வாய்ப்பை அளித்து விட்டது; இந்தத் துயரத்தால் என் உயிர் நீங்குவதற்குள், நீ விரைந்து திரும்பி வா, நீ திரும்பும் வரை நான் என்னை எப்படிக் காத்துக் கொள்வேன் என்பது எனக்கே புரியவில்லை ||46||
இந்த ஆசிரம வளாகம் திடீரென வெறிச்சோடி, வெறுமையாகி விட்டது; குறைந்த பட்சம் ஒரு முறையாவது உன் முகத்தைக் காட்டு; என் கணவருடன் நானும் என் உயிரைத் துறப்பதற்கு முன், உங்களை அனைவரும் நான் கடைசியாக ஒரு முறை பார்க்க விரும்புகின்றேன்||47||
அந்த இழிவான இளவரசர்கள், ஒரு மணப் பெண்ணாகிய என் மங்கலச் சின்னங்களைச் சூறையாடி விட்டனர்; இப்போது என் நெற்றியில் குங்குமத் திலகம் இல்லை; இப்போது என்னைத் துயருற்ற ஒரு விதவையாகவே பாருங்கள்; விதி இன்று மிகவும் விபரீதமாகி விட்டது; ஒரே ஒரு கொடிய அடியால் அது இரண்டு உயிர்களைப் பறித்து விட்டது ||48||
ஐயகோ, இனிமேலும் நான் உயிர் வாழ்வதால் என்ன பயன்? ; எனது கணவரின்; பிரிவின் வேதனையை நான் ஏன் தொடர்ந்து சுமக்க வேண்டும்? என் தலைவன் இல்லாத நிலையில் நான் மட்டும் உயிர் வாழ்வது தகுதியன்று; நான் நிச்சயமாக அவருடனேயே என் உயிரையும் துறப்பேன் ||49||
ஓ ராமா! உன் விரைவாக வந்து விடு ; சீக்கிரம் திரும்பி வா; ஓ நற்குணங்கள் நிறைந்த மைந்தனே, நான் இன்னும் எவ்வளவு நேரம் உன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பேன்? என் வாழ்வின் எஞ்சிய கணங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன; உன் ஆறுதல் அளிக்கும் முகத்தை நான் கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொள்ள அனுமதியளி ||50||
என் கணவரும் தலைவருமானவர், எனக்காகக் காத்திருக்கிறார்; இந்த உயிர் மூச்சு, என் உடலை இனி நீண்ட நேரம் தாங்கி நிற்காது; எனவே, நான் இவ்வுலகை விட்டுப் பிரியும் இந்தக் கணத்தில், உன்னைச் சந்திக்கப் பெரிதும் விரும்புகிறேன்’ என்று கதறினாள்; குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘இவ்வாறு அந்தப் பதிவிரதை பெண்மணி தன் துயரத்தை வெளிப்படுத்தினாள் ||51||
இதற்கிடையில், காட்டில் இருந்த இறைவன் ஸ்ரீமத் பரசுராமன், சில தீய சகுனங்களை கண்டார்; அவை அவரை வியப்பிலும் கலக்கத்தில் ஆழ்த்தின; அந்தத் தீய அறிகுறிகளைக் கண்டு அஞ்சிய அவரது மனம், அன்று ஏதோ ஒரு பெரும் விபரீதம் நிகழப் போகிறது என்ற எண்ணத்தால் திடீரென நிரம்பி வழிந்தது ||52||
அவர் தனக்குத் தானே கூறிக் கொண்டார் ‘இந்த விலங்குகள் ஏன் பின்னோக்கி நடந்து செல்கின்றன?; எல்லா திசைகளும் ஏன் மங்கலாகவும், புகை மூட்டத்தில் சூழப்பட்டு காட்சியளிக்கின்றன?; கரடிகள் ஏன் இன்று ஊளையிட்டபடி என் கண்களுக்குத் தென்படுகின்றன?; இன்று என்ன மாதிரியான பேரழிவு நிகழப் போகிறது என்பதை என்னால் ஊகிக்கவே முடியவில்லை ||53||
சூரிய மண்டலம் முழுவதும் துளைகள் விழுந்தது போலக் காட்சியளிக்கிறது; என் இதயம் மிக வேகமாகத் துடித்துக் கொண்டிருக்கிறது; எனக்குத் தெரிந்த எந்தக் காரணமும் இல்லாமலேயே, என் உள்ளத்தில் எழுந்திருக்கும் இந்தக் கலக்கத்திற்கு மூல காரணம் என்னவாக இருக்கக் கூடும் ||54||
என் உடலின் இடது பாதியும், என் கண்ணும் துடிப்பது போல் தோன்றுகிறதே; கட்டுப்படுத்த முடியாத இந்த நடுக்கம் எதனால் ஏற்படுகின்றது ?; இன்று மட்டும் ஏன் இத்தகைய தீய சகுனங்கள் தென்படுகின்றன?; ஏதோ ஒரு பெரும் விபத்து எங்கள் அனைவரையும் தாக்கப் போவது போல் தோன்றுகிறதே ||55||
இத்தகைய காட்சிகளாலும் எண்ணங்களாலும் கலக்கமுற்று, அவற்றுக்கான காரணத்தை உறுதியாக அறிய இயலாததால் மனதளவில் பெரிதும் வருந்தி, இறைவன் ஸ்ரீமத் பரசுராமன் தன் கையில் கோடரியை ஏந்தியவாறு, விரைந்து ஓடி வந்து ஆசிரமத்தை அடைந்தார்||56||
தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் காட்டிலிருந்து விரைவாகத் திரும்பி, விரைவில் தன் தந்தையின் ஆசிரம வளாகத்திற்குள் நுழைந்தார்; அங்கே தன் தாயைச் சந்தித்து, நிகழ்ந்த துயரமான சம்பவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து கேட்டறிந்தார்; பின்னர், மிகுந்த பணிவுடனும் துயரத்துடனும் தன் தந்தையை நினைத்து அவர் புலம்பத் தொடங்கினார் ||57||
‘தந்தையே! ஓ தெய்வமே , எங்களைக் காட்டிற்கு அனுப்பி விட்டு, இப்போது எங்களை நிரந்தரமாகப் பிரிந்து சென்று விட்டீரே, ஓ, தெய்வமே, நீர் எங்கே சென்றீர்? ஏன் எங்களை அனைவரும் அனாதைகளாக விட்டுச் செல்லத் துணிந்தீர்? ||58||
தந்தையே, நீங்கள் உயிரை துறக்க நான்தான் காரணமாக இருந்துள்ளேன் ; நான் உமக்கு ஒரு எதிரியாக மாறி விட்டேன் போல் தோன்றுகிறது; நிச்சயமாக நான் உமக்கு ஒரு சிறந்த மகனாக அமையவில்லை’ ||59||
தன் தந்தையின் நற்பண்புகளை நினைவு கூர்ந்து, இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் கட்டுக்கடங்காமல் புலம்பினார்; அவர் கூறினார்: ‘இப்போது எனக்கு வேறு யார் துணை, ஓ தந்தையே? இனி எங்கள் அனைவரையும் யார் காப்பாற்றுவார்கள் ?||60||
‘எனக்கு இருந்த அனைத்து ஆதரவுகளையும் நான் இழந்து விட்டது போல் தோன்றுகிறது; இனி இந்தத் துயரத்தை என்னால் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள இயலாது’ என்று இவ்வாறு கூறிக்கொண்டே, அவர் தரையில் சிரம் தாழ்த்தி தந்தை முன் விழுந்து வணங்கினார்.’ ||61||
கண்களில் நீர் ததும்ப, மிகுந்த மனக் கலக்கத்துடன் அவர் தரையில் புரண்டார்; அவர் கூறினார் ‘எல்லாம் அறிந்த காலத்தின் திருவிளையாடலைப் பாருங்கள்; என் முகத்தில் கரியைப் பூசி, என்னை அவமானப்படுத்தியது போல் தோன்றுகிறதே ||62||
கடும் அச்சமும், துயரமும், சீற்றமும் அவரை நடுங்கச் செய்தன; தன் தந்தையை இழந்த துயரத்திலிருந்து அவரால் மீளவே இயலவில்லை; அவர் கூறினார் ‘இந்தக் கணமே நானும் என் உயிரைத் துறப்பதே சிறந்தது; ஏனெனில், என் வாழ்நாள் முழுவதும் மக்கள் என் தந்தையின் இறப்பிற்கு நீயே காரணம் என்று என்னையே பழிப்பார்கள் ||63||
இவ்வாறு துயரத்தில் ஆழ்ந்து புலம்பியவாறே, அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். பின்னர் அவர் கூறினார்: ‘இப்போது நான் விரைவில் என் எதிரிகளின் தலை நகருக்குச் செல்வேன்; என் தந்தையைக் கொன்ற அந்தப் பாதகர்களை அழித்து விட்டுத் திரும்புவேன்||64||
என் சொந்தக் கரங்களாலேயே அவர்களைக் கொன்றாலன்றி, இந்தக் கடனில் இருந்து நான் விடுபட இயலாது; அப்போதுதான் என் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை முழுமையாக நிறைவேறியதாகக் நான் கருதிக் கொள்வேன்; இல்லையேல் நான் நரகத்திற்கு செல்வது உறுதி||65||
இவ்வாறு முழங்கிய பிறகு, பிருகு முனிவரின் வம்சத்தைச் சேர்ந்த அவர், தன் கோடரியை ஏந்தி, தன் பகைவர் அனைவரையும் வேரறுக்கத் துணிந்து, தன் தந்தையின் ஆசிரமத்திலிருந்து வெளியேறினார்||66||
அவர் கடும் சீற்றத்துடன் வெளியேறுவதைக் கண்ட அவருடைய சகோதரர்களும் தாய்மார்களும் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர்; அவர் செய்யத் துணிந்திருந்த செயலிலிருந்து அவரைத் தடுக்கவும் அவர்கள் முயன்றனர்; ஆயினும், அவர் எவர்களது அறிவுரையையும் சற்றும் பொருட்படுத்தவில்லை||67||
பின்னர் ஸ்ரீமத் பரசுராமர் அதிவேகமாக ஓடினார்; அவருடைய ஆவேசக் குரலில் அந்த பிரபஞ்சமே குலுங்குவது போல் தோன்றியது; அவருடைய பார்வை முழுமையாக அவர் செல்லும் பாதையிலேயே நிலைத்திருந்தது; வழியில் அவர் எங்கும், எதையும் திரும்பிப் கூடப் பார்க்கவில்லை||68||
மனதின் வேகத்திற்கு இணையான வேகத்துடன் பயணித்து, ‘மஹிஷ்மதி’ என்னும் தலை நகரை அவர் அடைந்தார்; அங்கே தன் பகைவர்களை நோக்கி, ‘வாருங்கள், நீங்கள் அனைவரும் என்னுடன் போரிடுங்கள்’ என்று யுத்த முழக்கமிட்டார்||69||
என் தந்தையின் ஆசிரமத்தில் நான் இல்லாத சமயத்தில்தானே, நீங்கள் அனைவரும் அங்கே புகுந்து அந்தப் புனித முனிவரைக் கொன்றீர்கள்? ; அவருடைய மரணம் வீணானதாகவே தோன்றுகிறது; இதன் மூலம் நீங்கள் சாதித்தது என்ன||70||
போர்க்களத்தில் உங்கள் தந்தையான அர்ஜுனனைத் தன் வலிமையால் கொன்றவன் நானே; ஒருவேளை நீங்கள் பழி வாங்க விரும்பியிருந்தால், என்னைத் தேடி வந்து என்னுடன் போரிடாமல் ஏன் ஓடி ஒளிந்தீர்கள்?||71||
அந்தப் பெருமை மிக்க முனிவரும் என் தந்தையும் முற்றிலும் நிரபராதிகள்; ஆயினும், அவர்களைக் கொல்வதற்கு முன் நீங்கள் சற்றும் யோசிக்கவில்லை; அவர்களைக் கொன்ற பிறகு, அற்பத் திருடர்களைப் போல உங்கள் நாட்டிற்கு ஓடி ஒளிந்து கொண்டீர்கள்; இதை நான் நன்கு அறிந்துள்ளதினால்தான், இப்போது உங்கள் சொந்த நகரத்திற்கே உங்களை தேடி வந்திருக்கிறேன்||72||
என் தந்தையின் ஆசிரமத்தில் நீங்கள் ஒன்று திரண்டு காட்டிய அந்தப் பெரும் படை பலத்தை, இப்பொழுது என் முன் நிலை நிறுத்தி, இந்தப் போர்க் களத்தில் என்னை எதிர்த்து நீங்கள் நிற்க வேண்டும்||73||
இத்தகைய கடுஞ் சொற்களை கூறியவாறு, தம் கைகளில் ஏந்தி வந்திருந்த கோடாரியினால் ஸ்ரீமத் பரசுராமர் தன்னை நோக்கி போரிட வந்த எதிரிகள் அனைவரையும் அழிக்கத் தொடங்கினார்; ஒவ்வொருவராக அவர்களைக் கொன்று வீழ்த்தினார் ||74||
பலருடைய கைகள் முறிந்து போயின; சிலர் கண்கள் இழந்துக் குருடர்களாயினர்; சிலரது வயிற்றின் மீது வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன; இன்னும் பலர் தரையில் சாய்ந்து கிடந்தனர் ||75||
சகஸ்ரார்ஜுனனின் படை முழுமையாக அழிந்து ஒழியும் வரை, அணி அணியாக வந்த எதிரிகளுடன் அவர் இடைவிடாமல் போரிட்டார்; இறுதியில், அந்த மறைந்த மன்னனின் புதல்வர்கள் அனைவரின் தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்; அவர்களில் ஒருவனைக் கூட அவர் உயிரோடு விட்டு வைக்கவில்லை ||76||
அதன்பின், அவர் எதிரிகளின் கோட்டைகளையும் அரண்மனைகளையும் அழிக்கத் தொடங்கினார்; அரச குடும்பங்களின் இருப்பிடங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார்; கொடிகளையும் தோரணங்களையும் பிடுங்கி வீசினார்; தம்மை தடுக்க வந்தவர்கள் அனைவரையும் கொன்று குவித்தார்||77||
போராட வீரர்கள் எவரும் மிச்சம் இல்லாத நிலையில், அந்த நகரம் வெறிச்சோடிப் போய், உயிரற்ற நகரம் போல காட்சியளித்ததும், ஸ்ரீமத் பரசுராமர் மீண்டும் தம் தந்தையின் ஆசிரமத்திற்கே திரும்பிச் சென்றார்||78||
அங்குச் சென்றதும், அவர் தம் அன்னை ரேணுகா தேவியைப் பணிவுடன் நோக்கி இவ்வாறு கூறினார் ‘அன்னையே,நான் எதிரிகள் அனைவரையும் அழித்து விட்டேன்; என் தந்தையைக் கொன்றவர்களோ அல்லது அந்தக் கொலையில் ஏதேனும் ஒரு வகையில் பங்கு கொண்டவர்களோ, அவர்கள் அனைவரும் இப்பொழுது எமதர்ம ராஜனின் இருப்பிடத்தைச் சென்றடைந்து விட்டனர் ||79||
அவர்களின் படைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன; அவர்களின் தலை நரகத்தையும் நான் சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டேன்; ஆயினும், அந்த எதிரிகளின் வம்சமே இன்னும் உயிரோடு எஞ்சியிருக்கிறது என்பதை நினைக்கும்போது, என் மனம் இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை ||80||
தம் அன்னையிடம் இவ்வாறு கூறிய பிறகு, இராமபிரான் ஒரு மிகக் கடுமையான சபதத்தை மேற் கொண்டார்; அவருடைய சீற்றம் எவ்வளவென்றால், தம் குடும்பத்தினர் அனைவரும் கூறிய அறிவுரைகள் எதையும் கேட்காத நிலையில், அவர் தம் தணியாத ஆவேசத்துடன் தொடர்ந்து செயல்படத் தொடங்கினார் ||81||
அவர் இவ்வாறு சபதம் செய்தார் ‘தொடர்ந்து இருபத்து ஒரு முறை, நான் இந்த பூமி முழுவதும் சுற்றி வருவேன்; எங்கு இருந்தாலும் சரி அந்தச் ஷத்ரிய (வீரர்) குலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், என் கரங்களின் வலிமையால் நான் வேரோடு அழித்து ஒழிப்பேன்||82||
இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்து அந்தச் ஷத்ரிய குல வீரர் இனத்தையே இந்த பூமியில் இல்லாமல் அழித்து விடுவேன்; அவர்கள் உடலில் இருந்து சிந்தும் ரத்தத்தைக் கொண்டு ஐந்து பெரிய குழிகளை நிரப்புவேன்; அந்த இரத்தத்தால் என் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் (நீர்க் கடன்) செலுத்திய பின்னரே என் சபதம் நிறைவு பெறும் ||83||
இவ்விதம், என் முன்னோர்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடனிலிருந்து முழுமையாக விடுபட்டு, நான் சுதந்திரம் அடைவேன்; இத்தகைய பயங்கரமான சபதத்தை, இடி முழக்கம் போன்ற குரலில் உரைத்த பிறகு, இறைவன் ராமன் மௌனம் சாதித்தார்||84||
தன் மகனின் அந்தப் பயங்கரமான முழக்கத்தைக் கேட்ட அன்னை ரேணுகாதேவி, பின்னர் இவ்வாறு கூறினார் ‘மிக நன்று, மிக நன்று என் மகனே, நீ வாயால் உரைத்ததை, செயலிலும் நிகழ்த்திக் காட்டுவாயாக ||85||
கற்புடைய மனைவியர் தம் கணவரைப் பின் தொடர்வதே மரபு; அதன்படியே நானும் என் கணவராகிய இறைவனைப் பின் தொடர்ந்து, மேலுலகங்களை அடைவேன்; ராமா, இத்தருணத்தில் எனக்குப் பொருத்தமானது இதுவேயாகும்||86||
நான் என் இவ்வுடலைத் துறந்த பிறகு, நீ செய்ய வேண்டிய ஈமச் சடங்குகள் அனைத்தையும் முறையாக நிறைவேற்ற வேண்டும்; அதன் பின்னரே நீ உன் சபதத்தை நிறைவேற்றும் பணியைத் தொடங்கி, உன் சொற்களைச் செயலாக மாற்ற வேண்டும் ||87||
சஹஸ்ரார்ஜுனன், இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் பக்தன் என்பதை நீ நன்கு அறிவாய்; அவன் உன் கையாலேயே மரணமடைந்தான்; இதனால் இறைவன் ஸ்ரீமத் தத்தர் சினமுற்றால், அவர் நிச்சயமாக உன் உயிரையே பறித்து விடுவார||88||
அவருடைய சர்வ வல்லமைக்கு எல்லையே இல்லை; போர்க்களத்தில் அவரை எதிர்த்து நிற்கக் கூடியவர் மூவுலகிலும் எவர் உள்ளார்கள் ?; ஆயினும், அவர் தம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவர் என்று அறியப்படுகிறார்; என் சொற்களை இப்போது மிகக் கவனமாகக் கேட்பாயாக||89||
முதலில் இறைவன் ஸ்ரீமத் தத்தரின் திருவருளைப் பெறாமல், உன் விருப்பமோ அல்லது உன் சபதமோ ஒருபோதும் நிறைவேறாது; இது மாற்ற முடியாத உண்மையாகும்; இது வெறும் அலங்காரமான புகழ்ச்சி சொற்கள் அல்ல ||90||
ஆகவே, ஸ்ரீமத் பரசுராமா , நீ இறைவன் ஸ்ரீமத் தத்தரின் திவ்ய தரிசனத்தை பெறும் வகையில், நான் என் மதி நுட்பத்தால் ஒரு வழி வகை செய்வேன்; உன் சபதத்தை நிறைவேற்றுவதற்காக ஆற்றலை உனக்கு அருள்பவர் அவரேயாவார் ||91||
அவருடைய திருவருளைப் பெற்று, உன்னை அவரிடமே ஒப்படைத்த பிறகு, நான் என் கணவரின் ஈமத்தீயில் விழுந்து அவரைப் பின் தொடர்வது மிக அவசியமாகும்; அதன் பின்னரே நீ உன் சபதப்படி செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் ||92||
நான் கூறுவது போலவே நீ நடந்து கொண்டால், உனக்குத் தடையாக இருக்கக் கூடிய தடைகள் ஏதும் எஞ்சியிருக்காது; மாறாக, உன் குழந்தைக்குரிய அறியாமையினால் நீ என் சொற்களைப்வெளிப்புற க்கணித்தால், நீ பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு துன்புறுவாய், என் குழந்தையே ||93||
இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் திருவருளால் மட்டுமே, கால தேவனின் தலையையே கொய்து வீழ்த்தும் வல்லமையை உம்மால் பெற இயலும்; நிலைமை இவ்வாறிருக்கையில், இந்தச் சிறிய பூமியில் எஞ்சியுள்ள அற்பமான போர் வீரர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதென்ன? ||94||
முதலாவதாக, நீ ஒரு ‘காவடி’ (சுமந்து செல்லும் கூடை) போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும்; அதன் ஒரு புறத்தில் உம்முடைய ஞானியான தந்தையின் உடலை வைக்க வேண்டும்; மறுபுறத்தில் நான் அமர்வதற்கான இடத்தை அமைக்க வேண்டும்; பின்னர், அந்த அமைப்பின் மையப் பகுதியை உனது தோள்களில் வைத்துக் கொண்டு எங்களை சுமந்து கொண்டு நடக்கத் தொடங்க வேண்டும்|95||
இவ்வாறு, எங்களிருவரையும் சுமந்து கொண்டு , நீ தெற்கு திசையை நோக்கி நடக்கத் தொடங்க வேண்டும்; வானிலிருந்து ஒரு தெய்வீகக் குரல் ஒலிக்கும் போது மட்டுமே நீ நடப்பதை நிறுத்த வேண்டும்; பின்னர் எங்களிருவரையும் கீழே இறக்கி வைத்து, செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் ||96||
அங்கு நீ, யோக நெறியில் உறுதியாக நிற்கும் ஒரு அந்தண ஆசானைச் சந்திப்பாய் ; அவரே உமக்கு ஏற்ற குருவாக அமைவார்; அதன் பிறகு, என் கணவரின் சிதையில் அவருடன் நானும் சயனித்து, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள அந்த ஈமச் சடங்கை முழுமையாக நிறைவேற்ற இயலும் ||97||
அன்னை ரேணுகாதேவியின் அப்படிப்பட்ட தெளிவான அறிவுரைகளைக் கேட்டருளிய இறைவன் ஸ்ரீமத் பரசுராமர், அன்னையின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றத் மன திடம் கொண்டார்; அவர் தனது பெற்றோர்களை சுமந்து செல்லும் காவடியை உருவாக்கினார்; அதில் தம் பெற்றோரை அமர்த்தினார் ||98||
தம் தந்தையின் உயிரற்ற உடலைத் தாங்கிப் பிடிப்பதற்காக, எண்ணெய் நிரம்பிய ஒரு கலன் பயன்படுத்தப்பட்டது; அது ஒருவெளிப்புற ம் கனத்து நின்றது; அதற்கு நேர் எதிர் வெளிப்புற த்தில், மறு முனையில் அன்னை ரேணுகாதேவி சௌகரியமாக அமர்ந்து கொள்வதற்கு ஏற்ற வசதிகளை இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் அமைத்தார்||99||
பின்னர் அவர் அவ்விருவரையும் மேலே தூக்கி, நடுவில் அமைந்திருந்த மரத்தண்டைத் தன் தோள்களில் தாங்கியவாறு, ‘கான்யகுப்ஜம்’* என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி, தெற்கு திசையை நோக்கிப் பயணித்தார்.
{*கன்யாகுப்ஜம் என்பது தற்போதைய கன்னோசி – கண்னுஜ் எனும் நகரம் ஆகும்; அது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும்; அது கன்யாகுப்ஜ பிராமணர்கள் வாழும் இடமாக அறியப்படுகிறது; பஞ்ச கௌட பிராமண சமூகத்தின் ஒரு பகுதியான இவர்கள், வட இந்தியாவில் பரவலாக வாழ்கின்றனர்} ||100||
அவர் பல்வேறு நிலப் பரப்புகளையும், பல புண்ணியத் தலங்களையும் கடந்து சென்றார்; அந்த பயணத்தில் பல காடுகளையும், தவ யோகிகள் வசிக்கும் ஆசிரமங்களையும் அவர் கடந்தார்; புனித நதிக் கரைகளையும், அக் கரைகளில் வசிப்பவர்களையும் அவர் பார்த்தவாறே சென்றார் ||101||
தன் கடமையை (தர்மத்தை) நன்கு உணர்ந்தவரும், தன் தந்தையின் அறம் சார்ந்த சொற்களின் மீது மிகுந்த பற்று கொண்டவருமான அந்த சிறந்த மகன், பல மலைத் தொடர்களைக் கடந்து, ‘சஹ்யாத்ரி மலை’ என்று புகழ்பெற்ற ஒரு இடத்தை வந்தடைந்தார் ||102||
சஹ்யாத்ரி மலை பகுதியில்தான், முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தபடி, அந்தத் தெய்வீக குரலை அவர் திடீரெனக் கேட்டார்; அக்குரல் ‘ஓ ஸ்ரீமத் பரசுராமா உன் தந்தைக்குரிய ஈமச் சடங்குகளை நீ நிறைவேற்ற வேண்டிய இடம் இதுவே ஆகும்’என்று கூறியது ||103||
விரைவிலேயே உனக்கு ஏற்ற ஒரு ஆச்சாரியரை (குருவை) நீ காண்பாய்; அவர் உன் அனைத்துச் செயல்களிலும் உனக்குத் துணையாக இருப்பார்; நீ வெற்றியை அடைவாய்; உன் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும் ||104||
அந்தத் தெய்வீக குரல் கூறியதை கேட்டதும், இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் தன் தாயிடம் கேட்டார் ‘அம்மா, நீங்களும் அந்தத் தெய்வீக குரலை கேட்டிருப்பீர்கள் அல்லவா?; அதைப் பற்றி நீங்களே முன்னரே கணித்துக் கூறியிருந்தீர்களே ||105||
ஆகவே, நாம் இவ்விடத்திலேயே இறங்கி நிற்க இதுவே தகுந்த நேரமாகும்; உங்கள் அறிவுறுத்தல்களின்படியே நான் இங்கு அனைத்தையும் செய்வேன்; இனி எனக்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, முன் முடிவுகளோ ஏதுமில்லை; நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதையே நானும் செய்வேன்||106||
தன் மகன் அவ்வாறு கூறியதைக் கேட்டதும், அன்னை ரேணுகா அவருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார் ‘எங்கள் இருவரையும் இங்குள்ள தரையில் கவனமாக இறக்கி வை; பின்னர், பரமாத்மனான பிரம்மத்தின் மீது அசைக்க முடியாத பற்று கொண்ட ஒரு ஞானியைத் தேடிச் செல்||107||
தன் தாயின் விருப்பத்தைக் கேட்டறிந்த இறைவன் ஸ்ரீமத் பரசுராமர் தான் பார்த்த ஒரு ஆசிரமத்திற்கு அருகிலேயே அவ்விருவரையும் கீழே இறக்கி வைத்தார்; அந்த ஆசிரமம் யாருக்குச் சொந்தமானது என்று விசாரித்து, அதைத் தன் கண்களாலேயே கண்டு களித்த போது, அவரது உள்ளம் அமைதி நிறைந்த பேரின்பத்தால் நிரம்பியது’ ||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்திரண்டாம் (22) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்திரண்டாம் (22) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 2273 = 2381
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -7, அத்தியாயம் -22 முடிவடைந்தது
பாகம் -8, அத்தியாயம் -23 தொடர்கின்றது