COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -8

ஸ்ரீமத் பரசுராமனின் புனிதப் பயணம்

அத்தியாயம் 23
ஸ்ரீமத் தத்தர் ஆஸ்ரமத்திற்கு
பரசுராமரும், பெற்றோரும் வருகை

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘ சீடனே, நான் கூறுவதை இன்னமும் கவனமாகக் கேள்; அன்னை ரேணுகையின் அற்புதமான ஆற்றலைக் கேட்பாயாக; வானிலிருந்து ஒலித்த தெய்வீக குரலைக் கேட்ட ஸ்ரீமத் பரசுராமர், அக்குரல் கூறியபடியே தம் கொண்டு வந்திருந்த காவடியை வைத்தார்||1||

புனிதமான துளசி, அத்தி, அரச மரம், ஆலமரம், முருக்க மரம் (Flame of the forest), வில்வ மரம் மற்றும் வன்னி மரங்கள் ஆகியவை அருகிலிருந்த ஆசிரமத்திற்கு நிழல் தந்து கொண்டு, அதனை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றின; அந்த ஆசிரமம் மலர்களாலும் கொடிகளாலும் சூழப்பட்டிருப்பதைப் போலக் காட்சியளித்தது||2||

காவடியை இறக்கி வைத்ததும் ஸ்ரீமத் பரசுராமர் அந்த இடத்தில் ஒரு அவதூதத் துறவியைக் கண்டார்; அவர் ஒளியின் வடிவமாகவே திகழ்ந்தார்; அக்னி தேவரே ஒரு உருவம் தாங்கி வந்திருப்பதைப் போல அவர் தோன்றினார் ||3||

அவரது தலை ஜடா முடிகளால் சூழப்பட்டிருந்தது; அவரது கைகள் முழங்கால் வரை நீண்டிருந்தன; கண்கள் தாமரை மலர்களைப் போல அழகாக இருந்தன; அவரது முகம், முழுமையாக மலர்ந்த தாமரை போலப் பேரொளியுடன் பிரகாசித்தது; அந்த ஆசிரமமே அன்னை மகாலட்சுமியின் போலத் திகழ்ந்தது||4||

அவரது கழுத்துப் பகுதி சங்கு போல காணப்பட்டது ; மார்பு மிகவும் பரந்து விரிந்திருந்தது; தொப்புள் பகுதி ஆழமான நீரில் தோன்றும் சுழலைப் போலக் காட்சியளித்தது; பக்தர்களுக்குப் புகலிடமாகத் திகழும் ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவானே அவர் ||5||

ஸ்ரீமத் பரசுராமர் ஸ்ரீமத் தத்த பகவானைக் கண்டதும், வியப்பு மேலிடத் திகைத்து நின்றார்; அந்தத் தெய்வீகத் துறவியின் அருகில் அவர் சென்றபோது, அந்தத் துறவியின் உருவில் தோன்றிய அற்புதத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போனார் ||6||

பின்னர், ஸ்ரீமத் பரசுராமர் அந்தத் துறவியின் மடியில் அமர்ந்திருந்த, பெண்களுக்கெல்லாம் சிறந்தவளாக திகழ்ந்த ஒரு திவ்ய ரத்தின பெண்ணை கண்டார்; அவளது நகங்களின் நுனிப் பகுதியின் அழகுக்கு ஈடாக, விண்ணுலகத் தேவ கன்னியர் அனைவரின் அழகையும் சேர்த்தே கூற வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு அவள் பேரழகுடன் திகழ்ந்தாள்||7||

அவளது முகத்தை ஒருமுறை கண்டாலே, நிலவு கூட வெட்கத்தில் தலை மறைந்து கொள்ளும்; அவளது கண்களை மான்கள் காண நேர்ந்தால், அவையும் வியப்பால் திகைத்துப் போகும் ||8||

செந்நிற இதழ்கள் நிறைந்த அவளது முகம், வைரங்களுக்கும் ஒளியூட்டும் அவளது பற்கள், கிளிகளையே வெட்கித் தலை குனியச் செய்யும் அவளது அழகிய நாசி என அனைத்து அங்க அடையாளங்களும் அவளது ஒப்பற்ற பேரழகிற்கு மேலும் மெருகூட்டின ||9||

அவளது கழுத்து சங்கு போன்ற வடிவு கொண்டிருந்தது; அவளது மார்பின் பகுதிகள் அவளது பக்கவாட்டு முகத்தின் அழகை மேலும் மிளிரச் செய்தன; அவளது வயிறு ஆழமான அமைப்பைக் கொண்டு, காண்போரை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியது ||10||

அவளது இடை நிகரற்றது; அதனைச் சிங்கங்களின் இடையோடு கூட ஒப்பிடவே இயலாது; அதேபோல, அவளது நடை கம்பீரமான யானைகளின் நடையோடு ஒப்பிட முடியாத தனித்துவத்தைக் கொண்டிருந்தது||11||

அவளது கைகளும் மணிக் கட்டுகளும், தங்கள் மென்மையில் புதிதாகத் துளிர்த்த இலைகளின் மென்மையையும் மிஞ்சி நின்றன; அவளது தொடைகள், மலைகளே தங்கள் வடிவழகைக் குறித்த பெருமையை இழக்கும் வகையில் அமைந்திருந்தன ||12||

கோடிக்கணக்கான மன்மதர்களை உருக்கிச் செதுக்கி, அந்த தெய்வீகப் பெண்மையை வடிவமைத்தது போல தோன்றியது; விதி படைத்த படைப்புகளிலேயே, எவ்விதக் குறையுமற்ற முதல் முழுமையான படைப்பு இதுவே என்று தோன்றியது||13||

அவ்விருவரும் ஒன்றிணைந்து காட்சியளித்தபோது, அவர்களது உடலின் ஒவ்வொரு அணுவிலும் கோடிக்கணக்கான சூரியன்கள் உறைந்திருப்பது போலத் தோன்றியது; அந்தத் துறவியின் மடியில் அமர்ந்திருந்த அந்தத் தேவி, கார் மேகங்களுக்கு இடையே மின்னும் ஒரு மின்னலைப் போலப் பிரகாசித்தாள் ||14||

அப்போது, அந்தத் துறவி அப் பெண்ணின் இதழ்களில் அன்போடு முத்தமிடுவதையும், பின்னர் அவளைப் பாசத்துடன் தழுவிக் கொண்டு, நீண்ட நேரம் அந்த நெருக்கமான நிலையில் திளைத்திருப்பதையும் ஸ்ரீமத் பரசுராமர் கண்டார் ||15||

அவ்விருவரும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தையே மறந்து, ஒருவருக்கொருவர் தங்கள் ஆழமான காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் போல தோன்றியது; மனம், உடல், சொல் மற்றும் ஆத்மா ஆகிய அனைத்திலும் முழுமையான ஒருமைப்பாடு நிலவும் இடத்தில், இருமை (பேதம்) எவ்வாறு நுழைந்து பிரிவினை ஏற்படுத்த முடியும்?||16||

மாயை எனப்படும் மயக்கும் சக்தியின் வலிமை அத்தகையது; அவளைக் கண்ணால் காண்பதற்கே மிகுந்த துணிவு தேவைப்பட்டது; அவள் எத்தகைய பந்தங்களை ஏற்படுத்தக் கூடியவள் என்பதை உணர்ந்தவர்கள் மட்டுமே, அந்தப் பற்றுக்களிலிருந்து விலகி, நேராகத் தெய்வீகப் பேரின்ப வீட்டை நோக்கிப் பயணிக்க இயலும் ||17||

அந்தத் தெய்வீகத் தம்பதியரின் அத்தகைய லீலைகளுக்கு இடையே, ஸ்ரீமத் பரசுராமர் அங்கு வந்து சேர்ந்தார்; அந்தத் தம்பதியினர் அவர் வந்ததைச் சிறிதும் கவனிக்கவில்லை; எவ்விதமான கூச்சமும் இன்றி, அந்தத் துறவி விரைவில் தன் உடலில் ஆடைகள் ஏதுமின்றியே காட்சியளித்தார் ||18||

எனினும், தெய்வீகக் குரல்கள் மூலம் உறுதிமொழி பெற்ற ஸ்ரீமத் பரசுராமர், அங்கே சென்று மிகுந்த பணிவுடன் அவர்களைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்; பின்னர், கை கூப்பியவாறு, எவ்வித ஆடம்பரமற்ற எளிய நிலையில் நின்று பின்வருமாறு கூறினார் ||19||

என் தந்தை சமீபத்தில்தான் காலமானார்; என் தாயாரோ, அவருடன் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் துறக்க விரும்புகிறார்; அவர்களின் மகனாகிய நான், தாங்களே எங்களுக்குச் சடங்குகளை நடத்தி வைக்கும் குருவாக இருந்து, வேத முறைப்படி அச் செயல்பாட்டை நிறைவு செய்வதற்கான வழி காட்டலை காட்டி அருள வேண்டும் என்று பணிவுடன் வேண்டிக் கொள்ளா இங்கு வந்துள்ளேன் ||20||

என் தந்தை ஜமதக்னி என்ற பெயருடனான முனிவர் ஆவார்; என் புனிதத் தாயார் ரேணுகா என்று அழைக்கப்படுகிறார்; நான் பரசுராமன் என்று அறியப்படுகிறேன்; எனினும், இறைவா, இவை அனைத்தையும் தாங்கள் முன்னரே நன்கு அறிந்திருப்பீர்கள் ||21||

நாங்கள் கன்யாகுப்ஜப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; அங்கேயே வசிப்பவர்கள்; என் தாயாரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் அவரை இங்கு அழைத்து வந்துள்ளேன்; தெய்வீகக் குரல்களின் வழிகாட்டுதலின் மூலமாகவேதான், பாக்கியசாலியான நான் இங்கு வந்து உங்களது புனிதமான தரிசனத்தைப் பெறும் பேற்றினைப் பெற்றேன் ||22||

ஸ்ரீமத் பரசுராமரின் கோரிக்கையை கேட்ட ஸ்ரீமத் தத்தர் பின்வருமாறு பதிலளித்தார் ‘அத்தகைய சடங்கு முறைகள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது; அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு நான் தொந்தரவுக்கு ஆளாகவும் விரும்பவில்லை; எப்படியாயினும், நீ ஒரு அந்தணனாக இருப்பதால் நீயே பார்க்கிறாய், நான் தர்ம நெறிகளிலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்கிறேன்; மக்கள் என்னைத் தீண்டத்தகாதவன் என்றும், என்னுடன் உரையாடக் கூடத் தகுதியற்றவன் என்றும் கருதுகிறார்கள்||23||

ஸ்ரீமத் தத்தரிடமிருந்தே இத்தகைய பதிலைக் கேட்டதும், ஸ்ரீமத் ராமர் என்ன பேசுவதென்று அறியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார்; ஆயினும், மிகுந்த பொறுமையுடன் அவர் பின்வருமாறு கூறினார்: ‘ஓ உலக நாயகரே, ஓ யோகங்களின் தலைவரே ||24||

நீங்கள் எல்லையற்றவர்; அனைத்தையும் தோற்றுவிப்பவரும் அழிப்பவரும் நீரே ஆவீர்கள்; முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவராகவும், நித்திய ஆனந்த வடிவமாகவும் திகழ்பவர் நீங்கள்; அறத்திற்கும் மறத்திற்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து அற நெறிகளுக்கும் மூலமாகவும் விளங்கும் உம்மை, எது அறம் அல்லது எது அறமற்றது என்பவை எவ்வாறு பாதிக்க முடியும்? ||25||

தெய்வமான ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘நீ அனைத்தையும் நன்கு அறிந்தவர் போலவே தோன்றுகிறீர்; ஆயினும் உம்முடைய இச்சொற்கள் சற்று மாறுபட்டவையாக உள்ளன; தூய்மையற்றவர்களின் அறிகுறிகளை உன்னிடத்தில் காணவில்லை; அப்படியிருக்க, நற்குணங்களையோ தீயகுணங்களையோ எவ்வாறு உன்னால் அறிந்து கொள்ள முடியும்?||26||

நான் ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டிருப்பதை நீ பார்த்தாய்;. அறத்திற்கும், மறத்திற்கும் அப்பாற்பட்டவனாக நான் திகழ்ந்த போதிலும், என்னுடன் பேசுவதற்கே எவரும் விரும்பாமல் என்னை ஒரு ‘தீண்டத்தகாதவனாகவே’ பார்க்கின்றார்கள்; ஆயினும் நான் ஒரு சார்பு நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது; பார் யோக சக்தியின் நுண்ணறிவோடு என்னை உற்று நோக்கு ||27||

ஸ்ரீமத் தத்தர் கூறியதைக் கேட்டதும், ஸ்ரீமத் பரசுராமர் பணிவுடன் மௌனம் சாதித்தார்; ஆனால் அத்தனையையும் செவிமடுத்த அன்னை ரேணுகாதேவி, தெய்வமான ஸ்ரீமத் தத்தரை வணங்கிய பின் இவ்வாறு கூறினார்||28||

உண்மையாகவே, உம்முடைய சொற்கள் அமுதத்தை பொழிந்ததை போல இனிமையாக இருந்தன; அவை தென்னை மரத்தின் கனியைப் (தேங்காயை) போன்றவை ; அவற்றை நான் விரிவாக விளக்குகிறேன் ||29||

செயலாற்றுவதும், செயலிலிருந்து விலகியிருப்பதும் போன்ற இரு நிலைகள், சத்துவம் (தூய்மை), ரஜஸ் (செயல்), தமஸ் (மந்தம்) ஆகிய முக்குணங்கள் நிலவும் இடங்களிலேயே பொருந்தும்; இவ்வுலகில் உள்ள பல்வேறு சாஸ்திரங்கள் அனைத்தும், இறை நிலையை அடைவதற்கான பன்முகப் பாதைகளை நோக்கி செல்ல வழி காட்டுகின்றன ||30||

ஆயினும், நீங்கள் எப்போதும் அனைத்துத் தொடர்புகளுக்கும் அப்பாற்பட்டவராகவும், எதனாலும் தீண்டப்படாதவராகவும் திகழ்கிறீர்; உம்முடன் இருக்கும் அப்பெண்ணும் உம்முடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை; பொதுவாகப் பெண்கள் ஆண்களை மயக்கவும், அவர்களை மாயையில் ஆழ்த்தவும் வல்லவர்கள்; ஆனால் உம்மைப் பொறுத்தவரை, அத்தகைய மயக்கங்கள் எப்படி ஒரு முயலின் தலையில் கொம்புகள் முளைக்காதோ அதை போன்று முற்றிலும் சாத்தியமற்றவை||31||

சத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களுக்கும் ஆதாரமாக இருப்பவர்; நீர் நித்தியமானவர்; அனைத்து விதங்களிலுமான உடல் சார்ந்த இச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்; ஸ்தூல , சூட்சும , மற்றும் காரண உடல்களின் செயல்பாடுகளை வெறும் சாட்சியாக இருந்து கவனிக்கும் ஆத்ம தத்துவம் நீரே; பிரபஞ்சத்திலும் (Macrocosm) சரி, ஒரு சிறு உயிரினத்திலும் (Microcosm) சரி, இரண்டற்ற (அத்வைத) நிலையில் நீக்கமற நிறைந்திருப்பவர்||32||

நாம் பார்க்கும், கேட்கும், உணரும் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவை. ஆனால் இவை எதற்கும் கட்டுப்படாமல், அனைத்துப் புலன் தொடர்புகளுக்கும், வாய் வழியே எழும் வார்த்தைகளுக்கும் அப்பாற்பட்டவராகவே நீர் விளங்குகிறீர்’ ||33||

இயற்கைப் பண்புகளால் கவரப்பட்டு, மயக்கத்திற்கு ஆட்பட்டவர்களும்; வீண் பெருமையினால் உந்தப்பட்டு, அறியாமையினால் தங்கள் உடல்களே தாங்கள் என்று தவறாக எண்ணுபவர்களுக்கும், வேத புனித நூல்கள், அறம் மற்றும் மறம் சார்ந்த நெறி முறைகளில் வழி காட்டுதல் உள்ளன; இக் காரணத்தினாலேயே சாஸ்திர ஞானம் பெரிதும் போற்றப்படுகிறது||34||

பக்தி கொண்ட அடியவர்கள் உங்களுக்கு நெருங்கியவர்கள் போன்று தோன்றினாலும், வீண் பெருமை உங்களை பாதிப்பது இல்லை; தானே தனித்து நின்று, ஒரே பரம்பொருளாக திகழும் உங்களை ‘நீதிமான்’ அல்லது ‘அநீதிமான்’ எனும் இருமை நிலைகள் எவ்விதம் பாதிக்க இயலும்? ||35||

ஓ பரம்பொருளே, நீர் ஒருவர் மட்டுமே தனித்து இயங்கும் சுதந்திரமானவர்; காரண-காரியங்களுக்கும், ஐம்புலன்கள் போன்ற கருவிகளுக்கும் அப்பாற்பட்டவர்; உங்களை இத் தன்மையுடன் தரிசிப்பதே ஒரு அற்புதமாகும்; மெய்யாகவே நீங்கள் ஒரு பிரம்மாண்டமான காட்சியாகவும், கண்களுக்குப் பெரும் விருந்தாகவும் திகழ்கிறீர் ||36||

‘நீர் எப்போதும் ஆத்மார்த்தமான ஆனந்தத்தில் திளைத்திருப்பவர்; ஆயினும், எங்கோ ஒருவரிடம் பக்தி மலர்வதைக் காண நீர் பேராவல் கொள்கிறீர்; அதனாலேயே, உங்களது தெய்வீகத்தை ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் மீது பக்தி கொண்டு உங்களிடம் வரும் பக்தர்களுக்கு இனியவராக இருக்கின்றீர்கள் ||37||

உமது அடியவர்கள் உம்முடன் எவ்விதம் உங்களைக் காண விரும்புவார்களோ, அதற்கேற்பவே நீர் பல்வேறு திவ்ய வடிவங்களை எடுக்கின்றீர்கள்; அதனால்தானோ என்னவோ வெறும் கற்பனையாகத் தோன்றுபவை கூட, கற்பனைக்கெட்டாத வகையில் நிஜமாகி விடுகின்றன; உண்மையாக பக்தி இல்லாதவர்களிடம் நீர் பேசுவதும் இல்லை; அவர்கள் உம்மிடம் வருவதை அனுமதிப்பதும் இல்லை’ ||38||

வேத சாஸ்திரங்களின் குறிப்புக்களில் போற்றப்படுவது உங்களது மேன்மையே ஆகும்; ஆனாலும் ஆன்மீகத் தேடலில் உள்ளவர்களுக்கு வழி காட்டும் பொருட்டு, அந்த நூல்கள் உங்களை கண்களுக்குப் புலப்படாத (அரூப) நிலையில் உள்ளவர் என சித்தரிக்கின்றன; மேலும், தான் எப்போது மற்றவர்களால் காணப்பட வேண்டும், அறியப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து, அதற்குத் தன் சம்மதத்தை அளிப்பவரும் நீங்களே ஆகும் ||39||

வேத சாஸ்திர நூல்கள் வாயிலாகத் தாங்கள் கேட்டறிந்தவற்றை ஆழ்ந்து சிந்திப்பவர்களும்; தங்கள் ஐயங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த நூல்களின் உட்பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து தெளிவு பெற்றுக் கொள்ளும் பக்தர்கள் மட்டுமே, உங்களிடம் சென்றடைவதற்குத் தடையாக நிற்கும் அனைத்துத் திரைகளையும் கிழித்தெறிந்து விட்டு, உங்களை பற்றிய மெய் ஞானத்தை முழு உணர்வுடன் புரிந்து கொள்ளும் நிலையிலானவர்கள் ||40||

நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் அல்லது எதிர்காலம் என எக்காலத்திலும் உங்களை தீண்ட முடியாது, உம்முடன் உரையாட முடியாது; வெறும் கண்களால் தரிசிக்க இயலாத திவ்ய வடிவத்தைக் கொண்டவர் என்றெல்லாம் உங்களைக் குறித்து வேத சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு உள்ளவை அனைத்தும் உண்மையே தான் ||41||

உள்ளே உறையும் ஆத்மா வாகத் திகழ்பவர் நீங்களே; எவ்வித இருமையுமின்றி ஒளிர்பவரும் நீங்களேயாகும்; பிரபஞ்சம் இழக்க காரணமாக உள்ளவர் என்பதாக போற்றப்படுபவரும் நீங்களே ; ‘பரப்பிரம்மம்’ என அறியப்படும் மிக மேலானவரும் நீங்களேயாகும்||42||

அன்னை ரேணுகையின் இத்தகைய வார்த்தைகளைக் பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயர் காத்து கொடுத்துக் கேட்டதும், அன்புடன் புன்னகைத்தவாறே, அந்தப் புனித அன்னைக்குப் புகழாரம் சூட்டும் வார்த்தைகளைத் தாமும் கூறத் தொடங்கினார்||43||

ஓ அன்னையே, இந்த அகிலத்தின் வடிவத்தை ஏற்றுக் கொண்டவள் நீயே; ‘ஓம்’ (AUM) எனும் பிரணவ வடிவமாகவும், அதற்கு அப்பாற்பட்ட நிலையாகவும் இருப்பவள் நீயே; மேலும், காணப்படுபவை, கேட்கப்படுபவை, தீண்டப்படுபவை, நுகரப்படுபவை, சுவைக்கப்படுபவை மற்றும் பேசப்படுபவை என்ற ஐம்புலன்களின் முழு வடிவமாகவும் நீயே ||44||

ஆதி-மாயை எனப்படும் ஆதி சக்தியாக இருப்பவள் நீயே; பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களின் வடிவங்களை ஏற்றுக் கொள்வாள் நீயே; அவர்கள் வாயிலாகவே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றை நிகழ்த்துபவளும் நீயே; ஆயினும், அந்தச் செயல்கள் எவற்றினாலும் பாதிக்கப்படாமல் விலகி நிற்பவளும் நீயே ||45||

நீ ஒருமையாய் (ஒன்றாய்) இருக்கின்றாய் என்றாலும் கண்களுக்கு புலப்படும் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கின்றாய்; இதனை அறியாதோர் இவ்வுண்மையை உணர்வதில்லை; உணர்வு சக்தியாகத் திகழ்ந்து, உள்ள பொருள் அனைத்திலும் ஊடுருவி நிற்கின்றாய் ||46||

காரணப் பெயர்களும் உருவங்களும் கொண்ட, கண்ணுக்குப் தெரியும் இப் பிரபஞ்சம் அனைத்தும், உன்னுடைய ஒரு சிறு அம்சம் மட்டுமே ஆகும் ; உணர்வு பூர்வமாகத் திகழும் இருப்பிடத்தின் ஆனந்தமாக விளங்கும் உன்னுடைய, கண்ணுக்குப் புலனாகாத வடிவத்தை, அறியாமை கொண்டவர்கள் சிறிதேனும் உணர்ந்து கொள்ள முடியாது ||47||

உடல், ஐம்புலன்கள், மனம், மூச்சுக் காற்று, அறிவு, நுண்மையான அகங்காரம் மற்றும் பிற தன்மைகளும் பண்புகளும் , ஏன் அவற்றிற்குச் சாட்சியாக இருப்பவர்களால் கூட, மலர்ந்த உணர்வின் ஆனந்தமாகத் திளைக்கும் உன்னைச் சென்றடைய முடிவதில்லை||48||

சாட்சிகளால் சுட்டிக் காட்டப்படும் அந்த மெய்ப்பொருள் (Essence) உண்மையில் எதுவென்று எனக்குக் கூறுவாயாக? சாட்சியாகவும் இருந்து கொண்டே, சாட்சிக்கான பொருளாகவும் விளங்கும் அந்தப் பரம்பொருள் எது? இதனை அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்வது எவ்வாறு சாத்தியமாகும் ||49||

ஆகவே, பௌதிகமான ஆதாரங்களின் தேவைக்கு அப்பாற்பட்டவள் நீயே; ஏக்வீரா’ (Ekvira)* எனும் தேவியாக, ஒப்பற்ற பேராற்றலாகப் போற்றப்படுபவளும் நீயே; பௌதிக உடலுடன் ஒன்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தாங்குபவள் நீயே; அதே வேளையில், அகத்தின் ஆழத்தை ஆராயும்போது, அனைத்திற்கும் அப்பாற்பட்டு விளங்குபவளும் நீயே.
{*ஏக்வீரா தேவியின் புகழ்பெற்ற ஆலயம் ஒன்று, மும்பையின்வெளிப்புற நகர் பகுதியான விராருக்கு (Virar) அருகில் அமைந்துள்ளது; இது, நித்யானந்தர் மற்றும் அவரது சீடரான முக்தானந்தர் ஆகிய முனிவர்களின் ஆசிரமம் அமைந்துள்ள கணேசபுரிக்குச் (Ganesh Puri) செல்லும் வழியில் உள்ளது} ||50||

‘உனக்கே நன்கு தெரியும் போற்றுதலுக்கு உரிய உன் கணவரான அந்த முனிவர், அவரது தூய அறிவாற்றலுக்காகப் பெரிதும் புகழப்படுபவர்; துறவிகளாலும் தவ யோகிகளாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்; அவரது புகழ் மூவுலகங்களிலும் பரவியுள்ளது||51||

காலத்தின் கடவுள் கூட (எமன்), அவரது பெயரைத் தன் நாவால் உச்சரிக்க அஞ்சுவார்; அத்தகைய மகத்தான தவத்தை அவர் மேற் கொண்டிருந்ததை, என்னால் எவ்வாறு வெறும் வார்த்தைகளால் விவரித்துரைக்க இயலும்?||52||

உண்மையைக் கூறுவது என்றால் அத்தகைய பேராற்றல் மிக்க ஒரு முனிவரை, மரணத்தால் என்ன செய்ய இயலும்?; ஆகையால், உன் கணவர் எவ்வாறு உயிர் இழந்தார் என்பது குறித்த நிகழ்வுகளை, நீயே எனக்கு எடுத்துரைப்பதே சாலச் சிறந்தது ||53||

அத்தகைய வார்த்தைகளைக் கேட்டதும், அன்னை ரேணுகா தேவியும் அமைதி காத்து, அசைவற்று நின்றாள்; பின்னர் ஸ்ரீமத் பரசுராமன் தானே முன் வந்து, பின்வருமாறு கூறலானார் ‘நான் பல ஷத்ரிய வீரர்களைக் கொன்றழித்துள்ளேன்||54||

ஒரு நாள் அவர்கள் தற்செயலாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்தனர்; அந்தத் துயரமான நாளில் நான் அங்கு இல்லை; அவர்கள் எங்கள் ஆசிரம வளாகத்தை முற்றுகையிட்டனர்; அப்போது என் தாயின் மன்றாடலுக்கும் செவி சாய்க்காமல், நான் பெரிதும் மதித்து வந்திருந்த எனது தந்தையின் தலையைத் துண்டித்தனர் ||55||

இறைவன் ஸ்ரீமத் பரசுராமனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட இறைவன் ஸ்ரீமத் தத்தர், தான் பக்தி மிக்க முனிவர் அத்திரிக்கு மகனாகப் பிறந்ததை நினைவு கூர்ந்தார்; அது அவருக்குப் பெருங் கோபத்தை உண்டாக்கியது; அதன் விளைவாக அவர் பின்வரும் சாபத்தை உரைத்தார் ||56||

இறைவன் ஸ்ரீமத் தத்தர் கூறினார் ‘பரம்பொருளை உணர்ந்த ஞானிகளை வெறுப்பவர்கள் எவரோ, அத்தகைய போர் வீரர்கள் இவ்வுலகில் இழப்புகளுக்கும் துன்பங்களுக்கும் மட்டுமே காரணமாக அமைவார்கள்; அவர்களின் வம்சங்கள் அனைத்தும், உடல் ரீதியாக அதிக காலம் பிழைத்திருக்காமலேயே, அழிந்து போகட்டும்||57||

அறிவற்ற, இழிவான அந்த போர் வீரர்கள், கடந்த காலத்திலும் கூட தங்கள் தீய செயல்களால் காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீரைக் கொண்டே எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த காடுகளில் தங்கி இருந்த பிராமண ஆசிரியர்களையும், ஊமை விலங்குகளையும், நீரிலுள்ள மீன்களையும் அச்சுறுத்தித் துன்புறுத்தியவர்கள் ||58||

அதே போல நேர்மையற்றவர்களாகவும், மன நிறைவற்றவர்களாகவும் இருந்த அந்தப் பிராமணர்களும், தங்கள் செல்வச் செருக்கால் மிதமிஞ்சிய அகங்காரம் கொண்டிருந்த அந்தப் போர் வீரர்களும், தாங்கள் சேர்த்து வைத்துள்ள பாவங்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காத அனைவரும் மிக விரைவிலேயே தங்கள் முடிவை எய்தட்டும் ||59||

இறைவன் ஸ்ரீமத் தத்தரின் அந்த சாபத்தைக் கேட்டதும், அன்னை ரேணுகா சாமர்த்தியமாகத் தன் மகனுக்கு ஒரு சைகை காட்டினாள்; அந்தச் சைகையின் பொருளைப் புரிந்து கொண்ட ஸ்ரீமத் பரசுராமனும் கை கூப்பி முன்னே சென்று , எவ்வித ஐயமுமின்றிப் பின்வருமாறு கூறினார் ||60||

ஸ்ரீமத் பரசுராமர் பணிவுடன் கூறினார் ‘நான் என் தந்தையின் ஆசிரமத்திற்குத் திரும்பியபோது, அந்த இளவரசர்கள் என் தந்தையின் தலையைத் துண்டித்த செய்தியைக் கேட்டறிந்து, நானும் துயரத்தால் அவர்களுக்கு ஒரு சாபத்தை கொடுத்தேன் ; தயவு செய்து நான் அவர்களுக்கு கொடுத்த அந்தச் சாபத்தை கேளுங்கள்||61||

நான் இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, தொடர்ந்து இருபத்து ஒரு முறை, ஷத்ரிய போர் வீரர் குலத்தினர் அனைவரையும் அழிப்பேன்; அவர்களின் இரத்தத்தைக் கொண்டு ஐந்து ஆழமான நீர் நிலைகளை நிரப்புவேன்; அதன் பின்னரே என் கடனைத் தீர்த்து, என் முன்னோர்களுக்குத் தர வேண்டிய பிதுர் கடனைச் செலுத்தித் தர்ப்பணம் செய்வேன்||62||

அதன் பின்னரே, என் முன்னோர்களுக்கு நான் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களிலிருந்தும் நான் விடுபட்டவனாக உணர்வேன்; நான் அப்போது உரைத்த அந்தச் சாபமானது, தங்கள் திருவடிகளின் ஆசியால் மட்டுமே முழுமையாகப் பலிக்கக் கூடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் ||63||

தெய்வமான ஸ்ரீமத் தத்தர், ஸ்ரீமத் பரசுராமர் கூறியவற்றைக் கேட்ட பின்னர் பின்வருமாறு கூறினார் ‘நீ மிகக் கடினமானதொரு சபதத்தை ஏற்று உள்ளாய்; ஆயினும், தற்போதைய சூழலுக்கு அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது; நீ கொண்ட சபதம் நிச்சயமாக நிறைவேறும்; இதுவே எனது ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எடுத்த முடிவாகும் ||64||

எனது சக்தியால் நீ ஊக்கம் பெறுவாய்; அந்தத் தெய்வீக ஆற்றலைக் கொண்டு, நீ பல வீரர் குலங்களை அழிப்பாய்; இவ்வுலகத்தை நீர் வெற்றி கொள்வாய். மனிதக் காலக் கணக்கின்படி பார்த்தால், மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே இவை அனைத்தும் நிகழ்ந்து விடும் ||65||

ஸ்ரீமத் பரசுராமன் தொடர்ந்து பேசினார் ‘எங்கள் காமதேனுப் பசுவைக் கவர்ந்து சென்றவன் சஹஸ்ரார்ஜுனனே ஆவான்; முதலில் நான் அவனோடு போர் தொடுத்து, போர்க் களத்திலேயே அவனைக் கொன்று வீழ்த்தினேன்||66||

நான் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் அங்கு வந்தவர்கள் அவனது புதல்வர்கள் ஆவர்; அந்த இளவரசர்களும், அவர்களது போர் வீரர்களும் சேர்ந்து என் தந்தையைக் கொன்று விட்டனர்; அவர்களது இழி செயலைக் கண்டு சீற்றமடைந்த நான், அதைத் தொடர்ந்து மஹிஷ்மதி நகரில் நடந்த போரில், கடும் கோபத்துடன் அவர்கள் அனைவரையும் கொன்று முடித்தேன் ||67||

சஹஸ்ரார்ஜுனன், மெய்ஞானம் பெற்ற சான்றோர்களைப் போற்றுபவனாகப் பெரிதும் புகழப்பட்டவன்; மேலும், அவன் உங்களுக்கு மிகவும் பிரியமான சீடனாகவும் திகழ்ந்தான்; புண்ணியம் வாய்ந்த பக்தர்களுள் முதன்மையானவனான அவன், யோக நெறியிலும் உங்களிடம் அசைக்க முடியாத பற்றுக் கொண்டு, நற்பண்புகளின் இருப்பிடமாகவே விளங்கினான்||68||

துரதிர்ஷ்டவசமாக, அவன் என் கையாலேயே கொல்லப்பட்டு விட்டான்; நான் தவறிழைத்து விட்டேன்; தயவுசெய்து என்னை மன்னித்தருள வேண்டும்’ என்று கூறியவாறே, ஸ்ரீமத் பரசுராமர், தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் ||69||

அதற்குப் பதிலாக தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் பின்வருமாறு பதிலளித்தார் ‘அவன் விரும்பிய வரங்களை அளித்து அவனை ஆசீர்வதித்தவன் நானே ஆவேன்; நிகழ்ந்த இச் சம்பவத்தில், நீ ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டாய் என்று கருதிக் கொள்; உண்மையில், இதில் உன் மீது எவ்விதத் தவறும் இல்லை ||70||

அது உனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதிருக்கட்டும்; உன்னை நான் என்னுள் இருந்து வெளிப்படுத்தியவனாக கருது; நீ எனக்கு ஒரு வகையில் நண்பன் என்பதை புரிந்து கொள்; சந்தேகமின்றி இந்தப் பூமியை பிடிவாதமான போர்வீரர் குலத்திலிருந்து விடுதலை செய்||71||

ஸ்ரீமத் பரசுராமர் கூறினார் ‘ஓ, குரு தத்த தேவா, தயவு செய்து இப்போது ஒரு கணம் கூட தாமதிக்க வேண்டாம், எனது காலஞ் சென்ற தந்தையின் இறுதிச் சடங்குகளை நிறைவு செய்வதற்காக, நீங்கள் எங்களை வழி நடத்தும் ஆசானாக இருந்து செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்||72||

அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீமத் தத்தர் அவருக்கு ஆசி வழங்கினார் ‘அப்படியே ஆகட்டும்’; பின்னர் தேவையான புனித தர்ப்பை புல்லையும் எள் விதைகளையும் எடுத்துக் கொண்டு, விரைவாக சுடுகாட்டிற்குச் சென்று, சிதைக்கான விறகுகளையும் உலர்ந்த பசு சாணத்தையும் சேகரிக்க ஸ்ரீமத் பரசுராமருக்கு உதவினார் ||73||

அதன்பிறகு ஸ்ரீமத் தத்த பகவான் கூறினார்; ஸ்ரீமத் பரசுராமர் நீ உண்மையிலேயே வலிமை வாய்ந்தவன்; இப்போது ஒரு அம்பை எய்து அனைத்து புனித யாத்திரை தலங்களையும் இங்கே கொண்டு வா; சடங்குகளின்படி அன்னை ரேணுகா தேவி நீராடுவதற்கு அவற்றின் புனித நீர் தேவைப்படும்; மேலும் அது மக்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்||74||

ஸ்ரீமத் தத்தர் கட்டளையிடப்பட்டபடி, ஸ்ரீமத் பரசுராமர் ஒரு அம்பை எய்தார்; அது பூமியின் மையத்தைத் துளைத்து, கீழ் உலகங்கள் வரை சென்று, அனைத்து புனித தலங்களின் நீர்களுடன் திரும்பியது||75|| ‘

ஸ்ரீமத் பரசுராமரின் செயலால் திருப்தியடைந்த ஸ்ரீமத் தத்த பகவான், முதலில் ஸ்ரீமத் பரசுராமரை அவர்கள் சேகரித்த புனித நீரில் நீராடுமாறு கூறினார்; இதைத் தொடர்ந்து அன்னை ரேணுகா, வழக்கத்தை அறிந்து, வேத சாஸ்திரத்தின்படி தேவையான அனைத்தையும் செய்தார் ||76||

பின்னர் ஸ்ரீமத் தத்த பகவான் புண்ணிய சபதங்களை உரைத்தார்; இதற்கிடையில் அன்னை ரேணுகாவும் தம்மை தூய்மைப்படுத்தும் நீராடலை மேற்கொண்டார்; அதன் பிறகு புனித தலங்கள் முறையாக கௌரவிக்கப்பட்டபோது, இப்பகுதியும் மாத்ரு-தீர்த்தம்* என்று அறியப்பட்டது
{*சித்தபூரில் உள்ள மாத்ரு-தீர்த்தம் தான் பெரும்பாலும் ‘மாத்ரு கயா’ என்று குறிப்பிடப்படுகிறது. சில இடங்களில் உள்ள சிறிய தீர்த்தங்களும் இந்த பெயரில் அழைக்கப்பட்டு இருக்கலாம்; ஆனால் முக்கியத்துவம் மிக்கது சித்தபூர் தான்; மாத்ரு-தீர்த்தம் (மாத்ரு கயா) என்பது தாய்க்கு செய்ய வேண்டிய திதி, பித்ரு கர்மாக்களை நிறைவேற்றும் புனித இடமாகும்; புராண காலத்திலேயே இது புனித ஸ்தலமாக அறியப்பட்டு, மாத்ரு ருணம் அதாவது தாய் கடன் தீர்க்கும் இடமாக கருதப்படுகிறது} ||77||

பின்னர், தவம் செய்து, திரேதாக்னி எனப்படும் வேத கால நெருப்பை மூட்டிய பிறகு, மறைந்த ஆத்மா வை மையமாகக் கொண்டு, சடங்குகளின் வரிசையையும் நேரத்தையும் மனதில் கொண்டு செயல்கள் நிகழ்த்தப்பட்டன||78||

பின்னர், ரேணுகா தேவி பொருத்தமான மேலாடைகள் மற்றும் அனைத்து அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு, மங்களகரமான மஞ்சள் மற்றும் குங்குமம் இட்ட பிறகு, மறைந்த அவருடைய கணவருடன் செல்ல கம்பீரமாகத் தயாரானார் ||79||

கண்களில் அஞ்சனமும், வகிட்டில் புனிதமான குங்குமமும் அணிந்து, சூரிய பகவானை வணங்கிய பிறகு, அவள் சிதை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தாள்||80||

வானில் தங்கள் திவ்ய வாகனங்களில் அமர்ந்தவாறு தேவர்கள் ஒன்று கூடினர்; தங்கள் துணைவியருடன் இணைந்து, அன்னை ரேணுகா மற்றும் அவருடைய பதியின் சடங்கைக் காண, அவர்கள் விரைவாகவும், பெருந் திரளாகவும் அங்கு வந்து சேர்ந்தார்கள் ||81||

அன்னை ரேணுகா சிதையில் நுழைய முற்பட்டபோது, ஊர்வசி என்னும் தேவ மங்கை அங்கு வந்தாள்; அந்த முனிவரின் மனைவியான ரேணுகாவின் ஆடையின் நுனியைப் பற்றிக் கொண்டு, மிகுந்த அன்புடனும் பக்தியுடனும் பின்வருமாறு கூறினாள்||82||

வானுலகின் சப்த ரிஷிகளுக்கும் தலைவரானவர், மற்ற அனைத்து முனிவர்களோடும், அவர்களின் புனிதமான துணைவியருடனும் இங்கு வந்துள்ளனர்; அவர்கள் உங்களைக் காண வந்துள்ளனர்; மேலும், உங்கள் பக்தியைக் கண்டு அந்த முனிவர்கள் அனைவரும் பேரானந்தம் அடைந்துள்ளனர்||83||

அந்தப் புனித அன்னையர் அனைவரும், அன்னை ரேணுகாவை உரிய மரியாதையுடன் வணங்கினர்; மரபின்படி அவளுக்கு மங்கலப் பொருட்களான மஞ்சள் மற்றும் குங்குமத்தை அளித்து, மிகுந்த பாசத்துடன் அவளைத் தழுவிக் கொண்டனர் ||84||

அன்னை ரேணுகாவும் அங்கு ஒரு புனிதமான சங்கல்பத்தை மேற் கொண்டாள்; ஒவ்வொரு முனிவர் தம்பதியினருக்கும் தகுந்த ஆசிகளை வழங்கினாள்; பதிலுக்கு அவர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தி, அவர்களுக்குச் செல்வங்கள், ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பரிசளித்தாள் ||85||

பின்னர், சடங்குகளை நடத்தி வைக்கும் குருவாக வீற்றிருந்த பகவான் ஸ்ரீமத் தத்தர் வணங்கப்பட்டார்; புனிதமான அக்னியைச் சுற்றி வரும் சடங்கு நடைபெற்றது; இறுதியாக, அன்னை ரேணுகா பகவான் ஸ்ரீமத் பரசுராமரிடம் பின்வருமாறு கூறினாள் ‘நீ எப்போதும் பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயருக்குக் கட்டுப்பட்டு நடப்பாயாக||86||

மாசற்ற பசுக்களையும், பிரம்ம ஞானிகளான முனிவர்களையும் ஆசிரியர்களையும் காத்திடுவீராக; நீ எடுத்த உறுதி மொழியைச் சொன்னபடியே நிறைவேற்று; அதன் பின், போரில் வென்றெடுத்த நிலப் பகுதியை முனிவர் காசியபருக்குத் தானமாக அளித்து, இறைப் பேரின்பத்துடன் என்றும் ஒன்றிணைந்தவராக வாழ்ந்து வா||87||

எனக்கான அழைப்பு வந்து விட்டது; எனது காலம் நெருங்கி விட்டது; என் பதியுடன் இணைந்து எனது மூல இருப்பிடத்திற்கு நான் திரும்புகிறேன்; உன் மனம் துயரத்தால் சூழப்பட அனுமதிக்காதே; உன் பகுத்தறிவைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக’ ||88||

பின்னர் அவள் பகவான் ஸ்ரீமத் தத்தரிடம் பின்வருமாறு கூறினாள் ‘ஓ இறைவா, ஸ்ரீமத் பரசுராமனை உம்முடைய சொந்த மகனாகவே கருதுவீர்களா; உம்முடைய ஆசி நிறைந்த கரத்தை அவன் தலையில் வைத்து, என்றென்றும் அவனுக்குக் காவலனாகத் திகழ்வீராக ||89||

இவ்வாறு அன்னை ரேணுகா தேவி விண்ணப்பித்த பிறகு, மீண்டும் தெய்வமான ஸ்ரீமத் தத்தரை வணங்கி, ஈமச் சூளையை* இறுதியாக வலம் வந்தபின், தன் கணவருடன் உயர் உலகங்களுக்கு திரும்பிச் சென்றாள்
{*இது இறந்து போனவர்களின் உடலைத் தீயிலிட்டு எரிக்கும் இடத்தைக் குறிக்கும்} ||90||

தன் விருப்பங்கள் நிறைவேறும் அறைக்கு ஒரு பெண் எவ்வளவு ஆவலுடன் விரைந்து செல்வாளோ, அதேபோல, மகிழ்ந்த மனதுடன் அன்னை ரேணுகா தேவி சிதையில் பிரவேசித்தாள் ||91||

தன் ஞானியான கணவனையும் தலைவனையும் தியானித்து, தன் ஆத்மா வையும் மனதையும் அவருடன் ஒன்றிணைத்து, அந்தப் புனிதமான சிதையில் சயனித்திருந்த தன் கணவனுடன் இணைந்து,ரேணுகா தேவி இவ்வுலகை விட்டு விலகிச் சென்றாள் ||92||

தேவர்களும், முனிவர்களும், தவ யோகிகளும் ‘ஜய ஜய’ என வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்; வானிலிருந்து மலர்களைப் பொழிந்தனர்; அந்த நிகழ்வுகள் அனைத்துமே வாத்திய இசையின் பெரும் முழக்கத்துடன் நிகழ்ந்தது ||93||

தீ சுடர்கள் அந்தப் புனித அன்னையைத் தீண்டியபோது, அவை நண்பகலில் ஒளி வீசும் ஆயிரம் சூரியன்களைப் போலக் காட்சியளித்தன; அன்னை ரேணுகாவின் பக்திப் பெருமை திசையெங்கும் பரவியது; வானம் முழுவதும் ஒளி வீசும் வெண்மை நிறத்துடன் திகழ்ந்தது ||94||

கணவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட அந்தப் புனித மனைவியான அன்னை ரேணுகா, சிதையில் தன் மறைந்த கணவனுடன் சென்றபோது, அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும், புனிதமான அஸ்வமேத யாகத்தைச் செய்ததற்கான புண்ணியத்தைப் பெற்றாள் ||95||

தன் உடலின் ஒவ்வொரு அணுவும் தன் கணவருடனேயே ஒன்றியிருக்க, அவள் தன் கணவனுடன் முனிவர்கள் வாழும் விண்ணுலகத்தை அடைந்தாள்; அங்கே பல்லாயிரம் கோடி ஆண்டுகள் வசித்தாள்; தன் ஆழ்ந்த பக்தியாலும் அறநெறியாலும், அவள் தனக்கெனத் தனித்த ஒரு உயர்ந்த இடத்தை அங்கே பெற்றுக் கொண்டாள்||96||

நம் தலையில் மூன்றரை கோடி (3.5 கோடி) மயிரிழைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றை அறநெறியுடன் இறைவனுக்கு அர்ப்பணித்தால், அதனால் விளையும் புண்ணியமும் அளவிடற்கரிய பெருமையுடையதாகத் திகழும் ||97||

பிற முனிவர்களின் மனைவியர், அன்னை ரேணுகாவைப் பற்றிப் பேசுகையில் ‘ஆகா, எத்துணைச் சிறப்பு அந்தப் பதிவிரதை பெண்ணுக்கு; அவள் பெற்ற புண்ணியத்திற்கு முடிவே இல்லை; அத்தகைய பெருமைக்குரியவளான அவளை நாங்கள் ஆயிரமாயிரம் முறை பணிந்து வணங்குகிறோம்’ என்று போற்றினர் ||98||

ஒரு பெண்ணுக்கு, அவள் பிறந்த தாய் வழிக் குடும்பமே முதல் குடும்பமாகும்; அடுத்து அவள் தந்தை வழிக் குடும்பம் இரண்டாவது; அவளைக் காத்து நிற்கும் கணவனின் குடும்பம் மூன்றாவது; அன்னை ரேணுகாவோ, இம் மூன்று குடும்பங்களையும் தன் நற் பண்புகளால் தூய்மைப் படுத்திப் புனிதப்படுத்தினாள்||99||

தன் கணவன் மீதே முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, அவள் தன் உயிரை சிதையில் அர்ப்பணித்தாள்; அதன் விளைவாக, அவள் மிக உயர்ந்த பரம பதத்தை அடைந்தாள்; இனி அவளுக்கு மறுபிறவி என்பதே கிடையாது ||101||

ஒரு பதிவிரதை பெண்ணின் கணவன் பாவியாகவோ அல்லது இழிந்த புத்தியுடையவனாகவோ இருந்தாலும் கூட, தன் பக்தியால் பெற்ற புண்ணியத்தின் துணையோடு, அப் பெண்ணால் தன் கணவனையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். அத்தகைய அளப்பரிய ஆற்றலும் புண்ணியமும் பதிவிரதை பெண்களுக்கு உண்டு ||102||

மாறாக, மேலே குறிப்பிடப்பட்ட மூன்று குலங்களையும் களங்கப்படுத்திய துரதிர்ஷ்டவசமான மனிதர்களுக்கு இகழ்ச்சியே வந்து சேரும்; அவர்கள் அக் குலங்களை இழிந்த நிலைக்குத் தள்ளியதால், மரண தேவனான யமனிடமிருந்து கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் ||103||

ஒரு பதிவிரதை பெண், தன் கணவனின் சிதையில் அவனுடன் இணைந்து உயிர் துறப்பது, அவனது அனைத்துப் பாவங்களையும் போக்கி விடுகிறது; அதற்கு ஈடான வேறெந்த வேத யாகமும் இல்லை; எனவே, அங்கே கூடியிருந்த அனைத்துப் பெண்களும் அன்னை ரேணுகாவைப் பணிந்து வணங்கினர்||104||

அங்கே கூடியிருந்த அனைவரும் அன்னை ரேணுகாவின் பதிவிரதா தர்மத்தைப் போற்றிச் சிந்தித்தனர்; அவர்கள் ‘ஜே ஜே, வெற்றி, வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள்’ என்று முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்; அப்போது ஸ்ரீமத் தத்த பகவான், ஸ்ரீமத் பரசுராமனை நோக்கி ‘பரசுராமா, உன் அன்னை மெய்யாகவே பரம திருப்தியை அடைந்து விட்டாள்’ என்று கூறினார் ||105||

ஸ்ரீமத் தத்த பகவான் அவ்வாறு கூறியதும், ஸ்ரீமத் பரசுராமருக்கு தன் அன்னையின் பதிவிரதா தர்மம் உடனே நினைவுக்கு வந்தது; அவர் துயரம் தாங்காமல் கண்ணீர் மல்க அழுதார்; தரையில் வீழ்ந்து, துயரத்தின் மிகுதியால் அங்கேயே புரண்டு அழுதார் ||106||

கடவுள் தத்தர் அவரிடம் கூறினார் ‘ஏற்கனவே மிக உயர்ந்த நிலைகளை அடைந்து விட்ட ஒருவருக்கு, இப்போது உமது கவலையாலோ அல்லது துயரத்தாலோ என்ன பயன்?; ஏன் நீர் வீணாகப் பற்றுதலுக்கு ஆளாகின்றாய்?||107||

தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் அந்த ஆறுதல் மொழிகளைக் கேட்டதும், தெய்வமான ஸ்ரீமத் பரசுராமர் விவேகத்துடன் பொறுமையை மேற்கொண்டார்; பின்னர் அனைத்துத் துயரங்களையும் களைந்து விட்டு ‘ஓ இறைவா, இப்போது எனது தகுந்த கடமைகளை நான் முழுமையாக நிறைவேற்ற எனக்கு அருள்புரிவீராக’ என்று கூறினார்||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்து மூன்றாம் (23) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்து மூன்றாம் (23) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 2381 = 2489

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -8, அத்தியாயம் -23 முடிவடைந்தது
அத்தியாயம் -24 தொடர்கின்றது