COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -7

மன்னன் கார்த்தவீர்யன் யுத்தங்கள்

அத்தியாயம் 20
ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் கார்த்தவீர்யன் விருந்தோம்பல்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

சீடன் தீபக் தன் குருவிடம் மிகுந்த பணிவுடன் வினவினான் ‘எவரிடம் அனைத்து தெய்வீக சித்திகளும் ஏற்கனவே கை வசம் இருந்தனவோ, எவர் தன் ஆட்சிக் காலம் முழுவதும் அந்தணர்களை இடைவிடாது போற்றி வந்தாரோ, எவருடைய தான, தர்மங்களுக்கு நிகர் ஏதுமில்லையோ…||1||

ஒரு பேரரசனாக இருந்த கார்த்தவீர்யன், காட்டில் வசிக்கும் ஒரு அந்தணருக்குச் சொந்தமான பசுவை ஏன் விரும்ப வேண்டும்? அதற்கான காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்; தயவு செய்து என் சந்தேகங்களை போக்குங்கள்; நான் எப்போதும் உங்களுக்குச் சேவை செய்வேன் ||2||

குரு வேத தர்மா சீடன் தீபக்கிற்குத் பதிலளிக்கத் தொடங்கினார் ; அந்த மன்னன் ஒரு சாபத்திற்கு ஆளாகி இருந்தான்; அதன் விளைவாக அவனது புத்தி வேலை செய்யவில்லை; தவறு செய்யத் தூண்டியது; அதனால்தான், ஒரு பேரரசனாக இருந்தும், காட்டில் வசிக்கும் ஒரு முனிவரின் பசுவை அவன் பலவந்தமாகப் பறித்துச் செல்ல நேர்ந்தது ||3||

மன்னன் அர்ஜுனன் தினமும் வேத யாகங்களைச் செய்வதில் புகழ்பெற்றவன்; அந்தணர்களிடம் அவனுக்குள்ள பக்தி மிகச் சிறப்பானது; மேலும், நீதி மற்றும் தர்மத்தின் மீது அவனுக்குள்ள உறுதியும் அசைக்க முடியாதது; ஆயினும், அவன் அழிய வேண்டிய வேளை வந்தபோது விதி அவனை தன் வலையில் வீழ்த்தியது||4||

அவன் மெய் ஞானம் பெற்றவனாக இருந்தும், பக்தி மிக்க மன்னர்களுக்குரிய நன்னடத்தைகளிலும் அற நெறிகளிலும் வல்லவனாகத் திகழ்ந்தும், வேறு எந்தச் சிற்றாசைகளும் அற்ற ஒரு பேரரசனாக இருந்தும், விதி அவனையும் தன் வசப்படுத்திக் கொண்டது ||5||

விதி என்பது உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்தது; இதை அறிவாற்றல் கொண்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்; படைப்புக் கடவுளான பிரம்மதேவர் போன்ற தேவர்கள் கூட, விதியின் ஆதிக்கம் மேலோங்கியதால், தங்கள் இயல்புக்கு மாறான செயல்களைச் செய்ய நேர்ந்துள்ளது||6||

எது சூரிய பகவானை வான வெளியில் வலம் வரச் செய்கிறதோ, எது படைப்புலகின் அனுபவங்களுக்கு அதிபதியாகப் போற்றப்படுகிறதோ, எது படைப்பைக் காக்கும் கடவுளான விஷ்ணுவை அடியவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடச் செய்கிறதோ, எது பிரளய காலத்தில் அழிக்கும் கடவுளான ருத்ரனைச் செயல்படச் செய்கிறதோ, அதுவே விதியாகும் ||7||

விதி எனப்படும் அந்தச் சக்தி வலிமையானது ; அது அனைவரையும் இன்ப துன்பங்களுக்கு ஆளாக்குகிறது; விதி எந்த ஒரு தேவர்களையும், தேவியர்களையும் விட்டு வைக்கவில்லை; அத்தனை ஏன் வாழும்போதே ஞான நிலை எய்தியவர்களுக்கும் கூட விதி கருணை காட்டவில்லை ||8||

விதியை என்ற ஒன்றை உருவாக்கியவர் அந்தச் சர்வ வல்லமையான `பரமாத்மனே ஆவர்; படைக்கப்பட்ட உயிர்களில் எவராலும் விதியை வெல்ல இயலாது; இறைவனின் நேரடித் தொண்டர்களையே நான்கு சனத்குமார முனிவர்கள்* சபித்ததாலும், அதன் விளைவாக அவர்கள் திவ்ய லோகமான வைகுண்டத்திலிருந்து கீழே வீழ்ந்த கதையை நாம் கேள்விப்பட்டதில்லையா?
{*இந்து புராணங்களின்படி, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றிய சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வரும் நான்கு குமாரர்கள் அல்லது சனகாதி முனிவர்கள் என அழைக்கப்படுகின்றனர்; இவர்கள் நால்வரும் பிரம்மனிடம் வரம் பெற்று, எப்போதும் 5 வயது பாலகர்களாகவே (இளைஞர்களாகவே) காட்சியளிப்பவர்கள்; ஒருமுறை சனகாதி முனிவர்களை வைகுண்டத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த ஜெயா- விஜயா எனும் வைகுண்டத்தின் வாயில் காப்பாளர்களுக்கு சனகாதி முனிவர்கள் கொடுத்த சாபத்தின் காரணமாக ஜெயா -விஜயா என்ற இரு வாயில் காப்பாளர்களும் பூலோகத்தில் அசுரர்களாகப் பிறக்க நேரிட்டது}||9||

விதி, சந்திர தேவன் தன் குருவின் மனைவியைத் தன் துணையாகக் கொள்ள அனுமதித்தது; விண்ணுலக மன்னனான இந்திரன், பக்தியால் சிறந்த அஹல்யா எனும் முனிவரின் மனைவியுடன் உறவு கொள்ள விதி அனுமதித்தது; படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் தன் சொந்த மகளான சரஸ்வதி தேவியின் மீது காமம்* கொள்ள விதி அனுமதித்தது; அன்னை சீதா தேவி, ராவணன் எனும் அரக்கனால் கடத்தப்படவும் விதி அனுமதித்தது.
{*பிரம்மா படைப்புக் கடவுள் (Creator); ரஜோ குணத்தின் அதிபதியான அவர், சரஸ்வதியின் அளப்பரிய அழகைக் கண்டு மோகமுற்று, அவள் தன் படைப்பு என்பதையும், மகள் முறை என்பதையும் மறந்து, அவளைக் காமத்துடன் அணுகினார் என்று சில புராணங்கள் (உதாரணம் சிவபுராணம்) கூறுகின்றன; இக் கதை பிரபலமாக இருப்பினும், ஸ்ரீமத்மத் பாகவத மகா புராணத்தின் மூன்றாம் ஸ்கந்தம் (பகுதி), சரஸ்வதி தேவி மற்றும் பிரம்மதேவன் குறித்த இந்தத் தவறான புரிதலைத் தெளிவுபடுத்துகிறது} ||10||

‘விதி, பூஷதேவனின்* பற்கள் சிவபெருமானின் தொண்டர்களால் உடைக்கப்பட அனுமதித்தது; பாகா’ (Bhaga) தேவனின்** கண்கள் குருடாக்கப்பட விதி அனுமதித்தது; பிருகு முனிவரின் மீசை பிடுங்கப்பட விதி அனுமதித்தது; பிரஜாபதிகளின் தலைவனான தட்சன் ஆட்டுத் தலையைப் பெற விதி அனுமதித்தது.
{*(i)பூஷதேவன் என்பவர் சூரியனின் ஒரு வடிவம்; தட்சனின் யாகத்தில் சிவபெருமானை பார்த்து ஏளனமாக சிரித்தான்; அதனால் சிவபெருமானின் தொண்டர்கள், யாகத்தை அழிக்கும்போது, பூஷதேவனின் பற்களை உடைத்து அவரைத் தண்டித்தனர் என்பது ஒரு கதை; (ii) **இந்து புராணங்களில், பாகா என்பவர் செல்வம், செழிப்பு மற்றும் விநியோகத்தின் கடவுளாவார்; இவர் அதிதி மற்றும் காஷ்யபர் மகன்களான பன்னிரண்டு ஆதித்யாக்களில் (சூரியக் கடவுள்கள்) ஒருவர்} ||11||

நாரதர் போன்ற முனிவர்கள் விதியின் மகத்தான ஆற்றலை நன்கு அறிவர்; அவர்கள் ஒரு போதும் விதியின் எல்லைகளை மீறவில்லை; மேலும், மூன்று உலகங்களிலும், விதியால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றை மாற்றியமைக்க கூடிய ஆற்றல் பெற்றவர் எவரும் கிடையாது ||12||

விதிக்கு அளவற்ற ஆற்றல் இருப்பதாகத் தோன்றினாலும், அதனால் ஞானம் பெற்ற மேலோர்களுக்குப் பெரிய அளவில் தீங்கு விளைவிக்க இயலாது; ஏனெனில், விதி முதன்மையாக உடலையே பாதிக்கிறதே தவிர, ஆத்மா வை அல்ல; அத்தகைய ஞானம் பெற்றவர்கள், விதி அரங்கேற்றும் நாடகத்திற்குள் சாட்சிகளாக விளங்குகிறார்கள்||13||

வெளிப்புற உடலை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்; நமக்கு இந்த உடலை முதலில் வழங்கிய கர்ம வினையே நம்மைத் துன்புறுத்தவும் செய்யலாம். ஆயினும், ஞானம் பெற்றவர்கள் மேற் கூறிய துன்பங்களுடன் தங்களை ஒன்றிணைத்துக் கொள்வதில்லை; அவர்களின் முழுமையான ஆன்மீக உணர்வு ஒன்றிணைப்பு, அந்த பரமாத்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது ||14||

விதியின் விளைவாகவே மன்னன் சஹஸ்ரார்ஜுனன் (காத்தவீர்யார்ஜுனன்) சாபத்திற்கு ஆளானான்; அதன் காரணமாகவே அவன் அந்த முனிவரின் பசுவைக் கவர்ந்து சென்றான்; இச் செயலால் சீற்றமுற்ற தெய்வமான பரசுராமர், சஹஸ்ரார்ஜுனனின் உயிரைப் போக்கினார் ||15||

ஒரு நாள், தன் தேரில் அமர்ந்திருந்த சஹஸ்ரார்ஜுனன், காடுகளில் உலாவி வர எண்ணினான். பின்னர் தன் நாட்டிற்குத் திரும்ப நினைத்த வேளையில், தற்செயலாக ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தை அவன் கண்ணுற்றான் ||16||

மன்னனுடன் அவனது படைகளும் பரிவாரங்களும் உடன் வந்தன; போர் வாத்தியங்கள் அவனது வருகையை முழக்கமிட்டு அறிவித்தன; புலவர்கள் அவனது கம்பீரமான பெருமைகளைப் பாடினர்; அவர்கள் அவனை எவ்வளவாகப் புகழ்ந்தார்களோ, அந்த புகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவன் தகுதியானவன் என்பதில் சந்தேகம் கிடையாது ||17||

காட்டிற்குள் அமைந்திருந்த அந்த முனிவரின் ஆசிரமத்தைக் கண்ட மன்னன் இவ்வாறு தம்முடன் வந்திருந்த பரிவாரங்களை கூறினான் ‘நான் இந்தத் புனிதத் தலத்திற்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் முனிவரைத் தரிசிக்கிறேன்; அதன் பிறகு, நாம் அனைவரும் அவரிடம் ஆசி பெற்று, மன நிறைவுடன் நம் நாட்டிற்குத் திரும்புவோம் ||18||

இவ்வாறு முடிவெடுத்த மன்னர், தனது படையினரைப் பின் தங்கியிருக்குமாறு பணிந்து விட்டு, ஓரிருவருடன் சேர்ந்து, அந்தப் புனித ஆஸ்ரமத்தை நோக்கி சென்றார் ||19|

தனது தோழர்களுடன் நடந்து சென்ற மன்னர், பகைமைக்கே இடமில்லாத இடமாக இருந்த, புகழ் பெற்ற ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்திற்குள் நுழைந்தார்; அந்தப் புனிதமான சூழலைக் கண்டு மன்னர் வியப்பில் ஆழ்ந்தார் ||20||

இந்தப் புனித பூமியைக் கண்ணுற்ற மாத்திரத்திலேயே, பகல் நேரப் பயணத்தினால் ஏற்பட்ட களைப்பு அனைத்தும் அறவே நீங்கிப் போனது; மன்னர் இவ்வாறு கூறினார் ‘நாம் அனைவரும் இங்கே சிறிது நேரம் இளைப்பாறுவோம்; தர்மமே உருவெடுத்து இங்கே வீற்றிருப்பதைப் போலத் தோன்றுகிறது ||21||

இவ்வாறு சிந்தித்துக் கொண்டே மன்னர் ஆசிரமத்திற்குள் மேலும் முன்னேறிச் சென்றார்; அங்கே அவர் அந்தப் புனித முனிவரைக் கண்ணுற்றார்; நெருப்பு எவ்வாறு ஒளி வீசிப் பிரகாசிக்குமோ, அதே போலவே பிருகு முனிவரின் வம்சத்தைச் சேர்ந்த ஜமதக்னி முனிவரும் பேரொளியுடன் திகழ்ந்தார்||22||

பார்வதி தேவியும் சிவபெருமானும் வீற்றிருப்பதைப் போலவே, அன்னை ரேணுகாவும் ஜமதக்னி முனிவரும் வீற்றிருப்பதை மன்னர் கண்டார்; அந்த முனிவரின் தவ வலிமையின் மேன்மையை உணர்ந்த மன்னர், மிகுந்த பக்திப் பெருக்குடன் அந்தப் புனிதருக்கு மரியாதை நிமித்தமாக வணக்கத்தைச் செலுத்தினார்||23||

அவர் முறைப்படி தரையில் விழுந்து வணங்கினார்; அவ்வாறே மீண்டும் மீண்டும் வணங்கிக் கொண்டே இருந்தார்; ஒன்றன்பின் ஒன்றாக அந்த முனிவரைப் போற்றிப் பல துதிப் பாடல்களை அங்கேயே இயற்றிய மன்னர், மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவற்றை அங்கேயே வாய்மொழியாகப் பாடினார் ||24||

பின்னர் அவர் தனது இரு கைகளையும் கூப்பித் தலை மீது வைத்து வணங்கியவாறு, முனிவரின் கட்டளையை எதிர்பார்த்து நிற்பவரைப் போல அங்கே நின்றார்; வந்திருந்த விருந்தினர்களைக் கண்ணுற்ற ஜமதக்னி முனிவர், துறவிகளுக்குரிய இயல்புக்கேற்ப அவர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார் ||25||

வந்திருந்த விருந்தினர்களுக்கு முனிவர் தகுந்த இருக்கைகளை அமைத்துத் தந்து, அவர்களைத் தம் அருகிலேயே அமருமாறு பணித்தார்; பின்னர் அவர், மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அவர்களின் நலனைப் பற்றியும், மன்னரின் குடும்பத்தினர், குடிமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரின் நலனைப் பற்றியும் விசாரித்தார்||26||

மன்னரும் முனிவர் பணித்தபடியே தனது இருக்கையில் அமர்ந்தார்; மீண்டும் ஒருமுறை அந்த முனிவருக்கு தலை வணங்கினார்; பின்னர், தனக்குத் தொடர்புடைய அனைவரின் நலனும் சிறப்பாக உள்ளதாகப் பதிலளித்த அவர், தனது நாட்டில் தற்போது நிலவி வரும் மகிழ்ச்சியான சூழலைப் பற்றியும் முனிவரிடம் எடுத்துரைத்தார்||27||

மன்னர் கூறினார் ‘கேளும் முனிவரே, தங்களை போன்றவர்களின் அருளாசிகளினாலேயே என் இராச்சியத்தில் உள்ள அனைவரும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர்; எவருக்கும் எக் குறையும் இல்லை; அனைவரும் மனநிறைவுடன் காணப்படுகின்றனர் ||28||

தங்களை நேரில் தரிசிக்கும் போதே என் மனம் அளவற்ற மகிழ்ச்சியால் நிரம்புகிறது; அன்னை ரேணுகா தேவியின் புனிதத் திருவடிகளைக் காணும்போது, நான் தூய்மையடைந்ததாகவே உணர்கிறேன் ||29||

உங்களுடைய வேத யாகங்களை இயற்றும் இடத்தைக் காணும்போது, அங்கே மூன்று வேதத் தீ பிழம்புகளையும் (திரேதாக்னிகளையும்*) என்னால் தரிசிக்க முடிந்தது. என் விதி எனக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றே தோன்றுகிறது; அதனால்தான் இன்று தங்களை நேரில் சந்திக்கும் பேறு எனக்குக் கிடைத்தது.
{*திரேதாக்னி (Trithing) என்பது இந்து சமயத்தில் வேள்விகள் (யாகங்கள்) செய்யப் பயன்படும் மூன்று புனிதமான அக்னிகளைக் (நெருப்பு) குறிப்பதாகும். ஆதிகாலத்தில் முனிவர்களும், அந்தணர்களும் இந்த மூன்று அக்னிகளையும் எப்போதும் அணையாமல் பாதுகாத்து வந்தார்கள்}||30||

நாங்கள் ஷத்ரிய (போர் வீரர்) குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறோம்; ஞானம் பெற்ற சான்றோர்களின் புனிதத் திருவடிகளை நாங்கள் தரிசிக்கும் போதெல்லாம், எங்கள் மனம் விவரிக்க இயலாத பரவசத்தால் நிரம்பி வழிகிறது; அது, தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் திருவடிகளைக் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையானது ||31||

இப்போது தாங்கள் எங்களுக்கு எத்தகைய அறிவுரையை வழங்க விரும்பினாலும் சரி, அல்லது எங்கள் கரங்கள் தங்களுக்கு எவ்வகையில் தொண்டு செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் சரி அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்; அதன் மூலம் நாங்கள் உண்மையான மன நிறைவை அடைய முடியும்’ என்று மன்னர் பலமுறை வேண்டிக் கொண்டார் ||32||

அதற்குப் பதிலளித்த முனிவர் புன்னகைத்தவாறே கூறினார் ‘எங்களுக்கு இங்கே என்ன குறை இருக்க முடியும்? இருப்பினும், நீங்கள் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால், உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து படைக்க நான் விரும்புகிறேன்’ ||33||

அதற்குப் பதிலாக மன்னர் சஹஸ்ரார்ஜுனன் கூறினார் ‘நான் ஒரு பெரும் படையுடன் இங்கு வந்துள்ளேன். தங்களையும், இந்தத் தவச் சாலையையும் தரிசித்ததன் மூலமே, நாங்கள் அனைவரும் தூய்மையடைந்து விட்டோம்||34||

முனிவரே, இப்போது நாங்கள் எங்கள் இராச்சியத்திற்குத் திரும்ப எங்களுக்கு அனுமதியளியுங்கள்’ என்று மன்னர் வேண்டினார்; ஆனால் முனிவர் வற்புறுத்திக் கூறினார் ‘மன்னரே, தயங்க வேண்டாம். உங்கள் முழுப் படையுடனும், பரிவாரங்களுடனும் எங்கள் எளிய தவச் சாலையில் விருந்து உண்டு செல்லுங்கள்||35||

அந்த முனிவர் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்வதைத் தவிர மன்னருக்கு வேறு வழி தெரியவில்லை; அவர் நடந்தவற்றைத் தன் படைவீரர்கள் அனைவருக்கும் அறிவித்து விட்டு, தியானம் செய்த பின்னர் நிம்மதியாக அமர்ந்தார்||36||

முனிவர் ஜமதக்னி, நினைத்ததை நினைத்தவாறே உடனடியாக நிறைவேற்றித் தரும் தெய்வீகப் பசுவான காமதேனுவை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்; விருந்தினர்கள் அனைவருக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற உணவுகளைப் தயாரிக்குமாறு அவர் வேண்டிக் கொண்டார்; அதன் பின்னர், அந்த முனிவர் ஒரு பக்தி மிக்க மன்னருக்கும் அவரது படைக்கும் உரிய மரியாதையுடனும், மிகுந்த அன்புடனும் அனைவருக்கும் உணவைப் பரிமாறினார் ||37||

அரிசி மாவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு பண்டிகைக் கால வண்ண அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டன; பரிமாறுவதற்கு ஏற்ற பாத்திரங்கள் வைக்கப்பட்டன; அந்த பாத்திரங்களுக்கு அருகில் பொருத்தமான தூரத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன;நறுமணங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சாம்பிராணி வாசனைகள் ஆகியவை அந்தச் சூழலைப் புனிதமாக்கின ||38||

தட்டின் இடதுவெளிப்புற த்தில் சட்னிகள், சாலடுகள் மற்றும் தயிர் உணவுகள், பாலுடன் கூடிய பழத் துண்டுகள் மற்றும் பல்வேறு ஊறுகாய்கள், இனிப்பு வகைகள், அப்பளம் மற்றும் உள்ளூர் கச்சலி* எனும் சிறப்பு உணவு பரிமாறப்பட்டது.
{* கச்சலி (Kapur Kachali) என்பது ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையைக் குறிக்கும்; இது இஞ்சி வகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும் (Spiked Ginger Lily); இது செரிமானப் பிரச்னைகளைச் சரி செய்யவும், உடலுக்குப் புத்துணர்வு தரவும் உதவுகிறது.} ||39||

தட்டின் வலதுவெளிப்புற த்தில் பத்து வகையான காய்கறி உணவுகளும் அதே எண்ணிக்கையிலான பால் உணவுகளும் பரிமாறப்பட்டன; தட்டின் நடுவில் இனிப்பு சாதமும் ‘சித்ரன்னாவும்’ இருந்தன; அதனுடன் பரிமாறப்பட்ட பாதல்பாஜி அந்த உணவின் அலங்காரத்திற்கு மேலும் அழகு சேர்த்தது||40||

ஏலக்காய், குங்குமப்பூ மற்றும் பிற மசாலாப் பொருட்கள், பசு நெய் மற்றும் குளிரூட்டப்பட்ட தயிருடன் கலக்கப்பட்டன; இஞ்சி, மஞ்சள், மிளகு மற்றும் பெருங்காயம் சேர்க்கப்பட்டன; அந்தப் பரிமாறல்களில் நாக்கின் ஆறு சுவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.
(*ஆறு நாக்குச் சுவைகள்: இனிப்பு, உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் காரம்} ||41||

அனைத்து உணவுப் பொருட்களும் சரியான வெப்ப நிலையில் பரிமாறப்பட்டன, அவற்றின் நறுமணம் மனதை வசீகரித்தது; அந்த ஏற்பாட்டின் காட்சியே பசியைப் போக்கி திருப்தி அளித்தது; மேலும் பரிமாறல் குறைபாடற்றதாக இருந்தது||42||

படையின் விலங்குகளைப் பொறுத்தவரை, யானைகளுக்கும் குதிரைகளுக்கும் சிறந்த புல், பட்டாணி மற்றும் கீரை வகைகள் பரிமாறப்பட்டன; முனிவர் அடிக்கடி அவை அனைத்தையும் மனநிறைவுடன் உண்ணுமாறு கேட்டுக் கொண்டார் ||43||

அனைவரும் ஒரே நேரத்தில் வரிசையாக அமர முடிந்தது, இனிப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் அவரவர் சுவைக்கு ஏற்றவாறு கிடைத்தது; அவர்கள் தங்களால் முடிந்த அளவு பாலும் நெய்யும் குடித்தனர்; பொதுவாக திருப்தியான மனநிறைவு நிலவியது ||44||

மெல்லவும், நக்கவும், குடிக்கவும், உறிஞ்சவும் தந்த உணவுகளால் அனைவரும் திருப்தி அடைந்தனர்; இது சுவையை முழுமையாக அறிந்தவர்களுக்கான ஒரு விருந்தாக இருந்தது, பரிமாறப்பட்ட அளவைப் பொருட்படுத்தாமல் பாத்திரங்கள் ஒருபோதும் காலியாகவில்லை என்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்; உணவு தொடங்குவதற்கு முன்பு இருந்ததைப் போலவே அனைவரும் வயிறு நிறைந்திருந்தனர்||45||

உணவோ, பானமோ அல்லது ஊறுகாயோ எதுவாக இருந்தாலும், அவர்கள் உண்ட அனைத்தின் தெய்வீகச் சுவையும் அவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது; அந்த இனிப்புப் பண்டங்களின் இனிமை விவரிக்க முடியாதது என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர் ||46||

அனைவரும் வயிறார உண்ட பின், அவர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து, கஸ்தூரி மற்றும் சந்தனத்தால் தங்களைப் புத்துணர்ச்சியூட்டிக் கொண்டு, தங்கள் கைகளையும் முகத்தையும் கழுவினர் ||47||

பல்வேறு வடிவங்களில் வெட்டப்பட்ட பலவகைப் பலன்கள் , நெக்டரைன் இனிப்பு நீர், மற்றும் வாய் புத்துணர்ச்சிக்காக ஏலக்காய், பாக்கு, தாமரை இலைகளில் பிரசாதம் ஆகியவை படைக்கப்பட்டன ||48||

அந்த நேரம் முழுவதும் காற்று மென்மையாக வீசி, இனிய நறுமணங்களை பரப்பியது; அனைவரும் அனுபவித்த அந்த பிரம்மாண்டமான உணவின் கம்பீரம், தேவலோகங்களுக்குத் தகுதியானதாகத் தோன்றியது ||49||

அந்தப் புனித உணவை உண்ட அனைவரும், அந்த தெய்வீக சுவைகளை அனுபவித்த அனைவரும், எல்லாவற்றுடனும் ஒன்றிப் போன ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட உணர்வை உணர்ந்தனர்; மேலும் தாம் அங்கு வரும் முன் இருந்ததை விடப் புனிதமானவர்களாகக் கருதினர் ||50||

எல்லா யோக வித்தைகளையும் கை வசம் கொண்டிருந்த, மற்றும் ஒன்பது நிதி* செல்வங்களால் சூழப்பட்டு இருந்த மன்னன் சகஸ்ரார்ஜுனனைப் பற்றி பெரும் மதிப்பு கொண்டிருந்தவர்கள் கூட, முனிவர் மன்னனுக்கும் அவனது பரிவாரங்களும் பெருந் தன்மையோடு கொடுத்த உபசாரத்தைக் கண்ட பின்னர் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டதைக் கண்டனர்
{*குபேரனுக்குச் சொந்தமான நவ நிதிகள் (ஒன்பது நிதிகள்) என்பது செல்வத்தின் ஒன்பது வகையான தெய்வீகக் களஞ்சியங்களைக் குறிக்கும். இவை பெரும்பாலும் தெய்வீகச் செல்வமாகவும், அபரிமிதமான செழிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகின்றன; இவை ஆன்மீக ரீதியாக செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது}||51||

மன்னன் அர்ஜுனனை சுற்றி அங்கே நிகழ்ந்த அத்தனையும் விதியின் பலனாகும்; அவன் மனம் உடனடியாக தீய எண்ணங்களாலும், விருப்பங்களாலும் சூழப்பட்டது; ஆயினும் அவன் அந்த உயர்ந்த முனிவரை வணங்கி, ஒரு மன்னனுக்கு ஏற்றவாறு கூறினான் ||52||

ஓ, முனிவரே, வறுமையை விரும்பி ஏற்கும் தூய உள்ளம் கொண்டவரே, தங்கள் ஆசிரம வளாகத்தில் ஆடம்பரத்தின் சாயல் ஏதும் தென்படவில்லை; அப்படியிருக்க, இதற்கு முன் எவரும் கண்டிராத இத்தகைய அற்புதமான விருந்தோம்பல் உங்களால் எப்படி கொடுக்க முடிந்தது ||53||

இப்பகுதிகளுக்கெல்லாம் மன்னாதி மன்னனாக திகழும் நான், என் அரண்மனைச் சமையலறைகளில் கூட இத்தகைய சுவையான உணவுகளைக் கண்டதில்லை; அளவற்ற செல்வங்கள் என் கை வசம் இருந்தபோதிலும், இத்தகைய நேர்த்தியான விருந்து ஏற்பாடுகளைச் செய்வதில் உங்களைப் போலத் திறமை வாய்ந்த ஒருவரை நான் கண்டதே இல்லை||54||

ஓ மா முனிவரே, தங்கள் இடுப்பில் ஒரு கோவணம் மட்டுமே அணிந்துள்ளீர்கள்; காடு மேடெல்லாம் அலைந்து திரிவதின் மூலமே தங்கள் வாழ்வாதாரம் அமைகிறது; இத்தகைய எளிய சூழலிலும், எங்களையெல்லாம் வியக்கத் தக்க வகையில் தாங்கள் திருப்திப்படுத்தியது எவ்வாறு என்று எண்ணி நான் தொடர்ந்து வியந்து கொண்டிருக்கிறேன் ||55||

இத்தகைய பெருமைக்குரிய நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணத்தை எனக்கு விளக்கியருளுங்கள்’ என்று மன்னர் முனிவரை வேண்டினார்; ஆவலுடன் காத்திருந்த மன்னரின் கேள்வியைக் கேட்டதும், முனிவர் பதிலளித்தார் ‘இது, இங்கு வீற்றிருக்கும், நினைத்ததை அருளும் அந்தத் தேவலோகப் பசுவின் (காமதேனுவின்) அருளாலேயே சாத்தியமாயிற்று ||56||

வேத விதிமுறைப்படி நான் மேற் கொள்ளும் அன்றாட வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து தரும் இந்தப் பசுவை நீர் காணும்; தேவையான அனைத்தையும் இது கண் இமைக்கும் நேரத்தில் அளித்து விடுகிறது; இதன் தெய்வீகத் தன்மையையும் ஆற்றலையும் பற்றி நான் உமக்கு என்னவென்று எடுத்துரைப்பேன்? என் கை வசம் உள்ள இணைத்த பசுவானது நினைத்ததை அருளும் ‘சிந்தாமணி’* ரத்தினமோ அல்லது ‘ரசவாதி கல்’லோ** (Philosopher’s Stone)போன்றதாகும்.
{(i)*சிந்தாமணி என்பது இந்து மற்றும் பௌத்த புராணங்களில் கூறப்படும் ஒரு மாய ரத்தினமாகும் (மணி). இது நினைத்ததை முடிக்கும் (விருப்பங்களை நிறைவேற்றும்) ‘கற்பக விருட்சம்’ போல, கேட்டதை எல்லாம் தரும் ஒரு தெய்வீக ரத்தினமாகக் கருதப்படுகிறது; (ii)** ரசவாதி கல் (Philosopher’s stone) என்பது ஈயம், பாதரசம் போன்ற அடிப்படை உலோகங்களை சுத்தமான தங்கமாக மாற்றும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ஒரு கட்டுக் கதையான பொருள்; இது அடிப்படை உலோகங்களை உயர்ந்த உலோகங்களான தங்கம் அல்லது வெள்ளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது என விவரிக்கப்பட்டது; ஒரு ரசவாதியானவர், இக் கல்லைப் பயன்படுத்தி உடலையும் ஆத்மா வையும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பினார் என்று ஒரு புராணக் கதை கூறுகின்றது }||57||

எந்த நேரத்தில் என் மனதில் எதை விரும்பி நினைத்தாலும், அடுத்த கணமே அது நிறைவேறி விடுகிறது; இந்தப் புனிதப் பசுவின் அருளாலேயே, உங்கள் அனைவருக்கும் இத்தகைய சிறந்த விருந்தோம்பலை என்னால் வழங்க முடிந்தது ||58||

அதற்கு மன்னர் இவ்வாறு பதிலளித்தார் ‘அஷ்டமா சித்திகளும் (எட்டு யோக சக்திகளும்) நவநிதிகளும் (ஒன்பது வகையான செல்வங்களும்) நான் செல்லும் இடமெல்லாம் என்னைப் பின்தொடர்ந்து வரும் பெருமைக்குரியவன் நான் என்றே உலகம் பேசுகிறது; அரசனுக்குரிய சகல விதமான செல்வங்களும் பெருமைகளும் என்னிடம் நிறைந்திருந்த போதிலும், என் அரண்மனைப் பசுக் கொட்டிலில் இந்தப் புனிதப் பசு இல்லாமல் இருப்பது ஒரு குறை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது ||59||

ஆகவே, ஓ முனிவரே, தாங்கள் கருணை கூர்ந்து, இந்த அரிய வரத்தை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டுகிறேன்; இந்தப் ‘காமதேனு’ப் பசுவின் மீதே என் மனம் முழுமையாக லயித்து, அதை அடைவதே எனது லட்ஷியம் போல தோன்றுகிறது; இந்தப் பசுவின் குளம்பொலியை என் அரண்மனை வாசலிலேயே கேட்கும் நற்பேறு எனக்குக் கிட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்||60||

இந்தப் பசுவிற்கு ஈடாக, வேறு ஆயிரம் பசுக்களை நான் உமக்கு அளிக்கிறேன்; அல்லது, நீர் விரும்பும் அத்தனை பொன், ரத்தினங்கள் மற்றும் செல்வங்களை நான் தருகிறேன்; உம் மனம் விரும்பும் வேறு எந்த விதமான ஆடம்பரப் பொருட்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தையும் எவ்வித ஐயமுமின்றி நான் உமக்கு அளிப்பேன்||61||

என்னால் உங்களுக்கு ஒரு முழுப் பகுதியின் அரச பதவியையும், நீங்கள் விரும்பும் அளவுக்கு பக்தர்களையும், பரிவாரங்களையும் கூடத் தர முடியும்’ மன்னனின் கோரிக்கையையும் பசுவின் பரிமாற்றத்திற்கான சலுகையையும் கேட்ட முனிவர் பதிலளித்தார் ‘ மன்னா,இதுவே நீ உன் விவேக உணர்வை மேம்படுத்த வேண்டிய நேரம் ஆகும் ||62||

உனது தெய்வமான ஸ்ரீமத் குரு தத்தாத்ரேயரை, நீ தியானிக்க வேண்டிய நேரம் இது; ஸ்ரீமத் தத்தரின் திருப்பி பாதங்களுடன் ஒப்பிடுவதற்கு இந்த பசு உட்பட எந்தத் தேவலோக உயிரினமோ கூடக் கிடையாது*; எனவே அநியாயமாக நடந்து கொள்ளாதே, நியாயமற்ற கோரிக்கைகளை வைக்காதே.
{*இதன் உட்கருத்து என்னவென்றால்: கடவுள் தத்தாத்ரேயரை நேரில் தரிசித்து, அவருக்குப் பணிவிடைகள் செய்த பிறகும், அந்த முனிவரின் பசுவை அடைவதற்காக இவ்வளவு பிடிவாதமாக அலைவது முற்றிலும் அறிவற்ற செயலாகும்} ||63||

முனிவர் தொடர்ந்தார்: ‘நான் எனது ஆத்மா வினால் பூரண ஞானத்தை அடைந்திருந்தாலும், வேத முறைப்படி நான் தினமும் யாக பீடத்தில் ஆஹுதிகளைச் சமர்ப்பிக்கிறேன்; வரங்களை அருளும் இந்தக் காமதேனுப் பசு ஹோமதேனு என்றும் போற்றப்படுகிறது; அத்தகைய வேத ஆஹுதிகளுக்குத் தேவையான தூய பால் உட்பட அனைத்தையும் அது வழங்குகிறது||64||

ஆகவே, நீங்கள் உங்கள் தலை நகருக்குத் திரும்பி, உங்கள் பகுத்தறியும் நுண்ணறிவை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றே நினைக்கின்றேன்; நிபுணத்துவம் வாய்ந்தவர்களை எப்போதும் போற்றுவதில் நீங்களும் பெயர் பெற்றவர்’ ||65||

ஒருவனுக்கு வீட்டில், அவனது இயல்புக்கு முற்றிலும் பொருத்தமான, பக்தி மிக்க, அழகிய மனைவி இருக்கும்போது, அவளைப்வெளிப்புற ந் தள்ளி விட்டு, அவன் ஏதேனும் ஒழுக்கமற்ற பெண்கள் மீது இச்சை கொண்டால், அத்தகைய மனிதன் அறிவற்றவனே ஆவான்||66||

மேலும், இந்தப் காமதேனுவிற்கு ஈடாக நீங்கள் வழங்க முன் வந்தவற்றைப் பற்றிச் சொல்வதானால், உங்கள் செல்வத்தையோ அல்லது உங்கள் பணியாளர்களையோ வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?; இந்தப் காமதேனுவே எங்கள் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும்போது ஆயிரக்கணக்கான பிற பசுக்கள் இருந்தால் எனக்கென்ன பயன் ||67||

இவ்வாறு பல வழிகளிலும், அந்த முனிவர் மன்னனின் பகுத்தறிவற்ற கோரிக்கையை அவனுக்கு உணர்த்த முயன்றார்; ஆயினும், மன்னன் தன் பிடிவாதத்தால் முனிவர் கூறிய எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை; தன் தவறான சிந்தனையைத் திருத்திக் கொள்ள அவன் ஒரு சிறு முயற்சியைக் கூட மேற் கொள்ளவில்லை||68||

மன்னன் தனக்குள் இவ்வாறு எண்ணினான் ‘இந்த முனிவர் நற்பண்புகள் நிறைந்தவர்; அமைதி உருவானவர்;நான் இந்தப் பசுவை பலவந்தமாகப் பிடித்துச் சென்றால், அவரால் என்ன செய்து விட முடியும்? அதற்கு ஈடாக, நான் என் செல்வக் குவியல்களை இங்கேயே, முனிவரின் ஆசிரம வளாகத்திலேயே விட்டுச் செல்வேன்; பின்னர், என் விருப்பப்படி இந்தப் பசுவை என் சொந்த ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்வேன் ||69||

இவ்வாறு தீர்மானித்த மன்னன், தன் பணியாளர்களை அழைத்து, கட்டளையிட்டான் ‘இந்தப் பசுவைக் கட்டிப் போட்டுள்ள கயிற்றை அவிழ்த்து விடுங்கள்; பின்னர் அவளை நம்முடன் நம் ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் ||70||

தங்களுக்கு உணவளிக்கும் மன்னனிடமிருந்து வந்த இந்தக் கட்டளையைக் கேட்டதும், அந்த வீரர்கள் எந்தவிதத் சிந்தனையும் இன்றி, மன்னனது கட்டளைக்கு ஏற்ப முனிவரின் பசுவை ஆசிரம வளாகத்திலிருந்து விடுவித்தனர்; பின்னர் அவளைத் தங்கள் பரிவாரங்களுடன் சேர்த்துக் கொண்டு, தலை நகரை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர் ||71||

மன்னன், தான் கொண்டு வந்திருந்த ஏராளமான பிற பசுக்களையும் செல்வங்களையும் முனிவரின் ஆசிரம வளாகத்திலேயே விட்டுச் சென்றான்; அங்கிருந்து கிளம்பும்போது முனிவரை வணங்கி விட்டே சென்றான்; அதன் பிறகு நேராகத் தன் ராஜ்யத்தை நோக்கிப் பயணித்தான் ||72||

அந்தக் காமதேனுப் பசுவின் கன்றுக் குட்டி, தன் தாய் இவ்வாறு பிடித்துச் செல்லப்படுவதைக் கண்டதும், துயரத்துடன் கதறி அழுதது; ஆனால் மன்னனோ, அதன் வேதனையைச் சற்றும் பொருட்படுத்திப் பார்க்கவில்லை; திடீரென்று மன்னனின் மனம், எதையும் கண்டு கொள்ளாத ஒரு கல் மனமாக மாறி விட்டதைப் போலவே தோன்றியது; மன்னன் அர்ஜுனனின் நற்பண்புகளின் மீது விழுந்த களங்கம் அத்தகையதாக இருந்தது ’ ||73||

அந்த முனிவர், மன்னரின் படையினரால் விட்டுச் செல்லப்பட்ட செல்வங்களையும் பசுக்களையும் ஏற்கவோ அங்கீகரிக்கவோ இல்லை; அதே வேளையில், எளிதில் பலிக்கக் கூடிய சாபங்களையோ அல்லது கடுஞ் சொற்களையோ அவர் உதிர்க்கவும் இல்லை; மாறாக, தன் மனம் அதன் மூலப் பொருளில் (இறைவனின்) ஒன்றிணைந்த நிலையில், மௌனம் காப்பதையே அவர் தேர்ந்தெடுத்தார்||74||

அவர் சீற்றத்திற்கு ஆட்படவில்லை; துயரத்தால் தன் மனம் நிலை குலையவும் அனுமதிக்கவில்லை; மாறாக, அந்தத் தருணத்தில் தான் ஒரு சாபத்தை இட்டால், அது தான் கடுந் தவம் புரிந்து பெற்ற புண்ணியத்தை வீணாக்குவதாகவே அமையும் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்தார் ||75||

மேலும் அந்த முனிவர் இவ்வாறு சிந்தித்தார் ‘மன்னன் அர்ஜுனன் ஒரு நீதிமான்; அவனுக்கு இந்தப் பசுவினால் என்ன பயன் இருக்கப் போகிறது?; நிச்சயம் அவனுக்கு நல் விவேகம் பிறக்கும்; அவனது உள்ளம் தூய்மையடைந்து, அவனே முன் வந்து நமது பசுவை நம்மிடம் ஒப்படைப்பான்||76||

இவ்வாறு இயல்பாகவே அமைதியும் மன நிறைவும் கொண்ட ஜமதக்னி முனிவர், ஈடுசெய்ய முடியாத எந்தவொரு செயலையும் செய்ய முற்படவில்லை; மாறாக, அமைதியிலேயே தன் கவனத்தைச் செலுத்தி, மீண்டும் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார் ||77||

இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடந்து கொண்டிருந்த வேளையில், பரசுராமன் பெருமான் காடுகளுக்குச் சென்றிருந்தார்; சிறிது நேரத்திலேயே அவர் இல்லம் திரும்பினார்; யாகத் தீயில் போடுவதற்கு ஏற்ற விறகுக் கட்டைகள் அவர் கைகளில் நிறைந்திருந்தன||78||

அவர் உள்ளே நுழைந்த கணமே, கன்றுக் குட்டி ஒன்று வலியால் கதறி அழும் ஓசையைக் கேட்டார்; அதன் காரணத்தை அறிய அவர் அதை உற்று நோக்கினார்; பொதுவாகவே சாதுவான இயல்பு கொண்ட இந்தக் கன்றுக் குட்டி, இன்று ஏன் இவ்வாறு விசித்திரமாக நடந்து கொள்கிறது? என்று அவர் சிந்தித்தவாறே, அதை அதற்குரிய இடத்தில் கொண்டு போய்க் கட்டினார் ||79||

அப்போது அவரது சகோதரர்கள் அவரைச் சந்தித்து, நடந்தவற்றைத் தெரிவித்தனர்; ‘இன்று மன்னன் அர்ஜுனன் நமது ஆசிரமத்திற்கு வந்திருந்தான். அவனும் அவனது படைகளும் பரிவாரங்களும் இங்கேயே தங்கி, உணவு அருந்திய பின்னரேவெளிப்புற ப்பட வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினோம்||80||

அதன் பின்னர், மன்னனுக்கும் அவனது படை வீரர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது; அனைவரும் உண்டு மனநிறைவு பெற்றனர் ; அவர்கள் அப்படி கூறிக் கொண்டு இருக்கையிலேயே பரசுராமப் பெருமான் ஆசிரம வளாகத்தில் குவிந்து கிடந்த செல்வங்களையும், அங்கிருந்த வேறு பல பசுக்களையும் கண்டார்; உடனே அவர் தன் சகோதரர்களான முனிவர்களிடம் ‘இங்கு திடீரென்று இவ்வளவு செல்வச் செழிப்பு தோன்றியதற்குக் காரணம் என்ன?’ என்று விசாரித்தார் ||81||

அதற்கு அவர்கள், அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தனர்; மேலும், விருந்தினராக வந்த அந்த மன்னனின் இழிவான மனப்பான்மையைப் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர்; தங்கள் தந்தையார் திட்டவட்டமாக மறுத்திருந்த போதிலும், அந்த மன்னன் தன் ஆட்களை ஏவி, காமதேனுப் பசுவை வலுக் கட்டாயமாகப் பிடித்துச் செல்லும்படி உத்தரவிட்ட கொடுமையையும் அவர்கள் தெரிவித்தனர் ||82||

அந்த முழு சம்பவத்தையும் கேட்டதும், பரசுராமர் கடுங் கோபம் அடைந்தார், அவரது தோற்றம் திடீரென கட்டுக் கடங்காத கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போல மாறியது; அவரது சகோதரர்கள் இப்படியாக பயந்தார்கள் ‘இந்த நொடியே அவர் மூன்று உலகங்களையும் எரித்து விடுவாரா? ||83||

பரசுராமரும் தனது சாந்த ஸ்வரூப ஞானியான தந்தையிடம் முதலில் ஆலோசனைக் கேட்காமல், விருந்தாளியாக வந்த மன்னன் மீது தனது கோபம் முழுவதையும் கொட்டி, கூறினார் ‘இது ஒரு மன்னனின் இழிவான நடத்தை ஆகும்; நான் நிச்சயமாக அவனைத் துண்டு துண்டாக நொறுக்கி விடுவேன் ||84||

நான் சொல்வதை நம்புங்கள், நான் உண்மையிலேயே கடும் சீற்றம் கொண்டால், மூன்று உலகங்களும் நிச்சயம் கருகி விடும்; இந்த மன்னன் எனது உண்மையான ஆற்றலை அறியாதவனாகவே இருக்கிறான் போலும் ||85||

இனி சீற்றத்திற்கு இடமளிப்பதைத் தவிர வேறு வழியேதும் எஞ்சியிருப்பதாகத் தெரியவில்லை; நான் பிரளயத்தையே (உலக அழிவையே) நிகழ்த்திக் காட்டுவேன்; தேவர்களோ அசுரர்களோ – எந்த உயிரினத்தால் என்னை எதிர்த்து நிற்க முடியும்? போர்க் களத்தில் அவர்களால் மனவுறுதியுடன் நிற்க இயலுமா ||86||

நான் அமைதியாக அமர்ந்திருக்கப் போவதில்லை; அந்த மன்னன் தனது ஆசை நிறைந்த மனதின் பகுத்தறிவற்ற விருப்பங்களுக்கு அடிமையாகி விட்டான்; உண்மை தெரிந்திருந்தும், இவன் வேண்டுமென்றே அறியாதவனைப் போல நடந்து கொண்டுள்ளான்; இவனைத் தண்டிப்பதற்கு எனக்கு இப்போது வேறு என்ன காரணம் தேவை?||87||

வல்லமை படைத்தவனின் வலிமையை இவன் காணட்டும்; பிரளயத் தீயின் வெம்மையை இவன் அனுபவிக்கட்டும்; ஷத்ரிய குலத்து வீரர் அனைவரையும் நான் அழித்துச் சாம்பலாக்குவேன்; வேண்டுமென்றே வஞ்சகம் செய்வோரைத் தண்டிக்கும் கடுமையான நீதிபதியாக நான் அறியப்படுவேன் ||88||

பரமாத்மனை உணர்ந்த ஞானிகள் மீது இந்த மன்னனுக்கு வெறுப்பு இருப்பது போலத் தோன்றுகிறது; இவனைத் தண்டிப்பதற்கு எனக்கு இப்போது வேறு என்ன காரணம் தேவை?; இவனது வினைகள் (பாவங்கள்) இப்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன போலும்; அதனால்தான் இவன் இருபிறப்பாளர்களான* ஞானிகளுக்குத் துன்பம் விளைவிக்கும் காரணமாக மாறியுள்ளான்.
{*தாயின் கருப்பையில் ஒரு பிறப்பு; ஞானம் அடைவதன் மூலம் மற்றொரு பிறப்பு} ||89||

எனினும், இவனுக்கு விதித்திருப்பது வேறு ஒன்றாக இருக்க வேண்டும்; ஏனெனில், ஆற்றல் மிக்க என் தந்தை இவனைச் சபித்து எந்தச் சாபத்தையும் இடவில்லை; எனவே, என் கைகளாலேயே இவன் எமதர்ம ராஜனின் இருப்பிடத்திற்கு (எம லோகத்திற்கு) அனுப்பப்பட வேண்டும் என்பதே விதி என்று தோன்றுகிறது ||90||

இவனது ஆயிரம் கரங்களையும் நான் துண்டு துண்டாக வெட்டி ஏறிவேன்; இவனது படைகள் அனைத்தையும் நான் அழித்தொழிப்பேன்; இவன் திடீரென்று பிடிவாதமும் வஞ்சகமும் நிறைந்தவனாக மாறி விட்டான் போலும்; இவனது வம்சமே இந்த பூமியில் எஞ்சியிருக்க நான் விரும்பவில்லை ||91||

தெய்வமான பரசுராமர் மிகுந்த சீற்றத்துடன் இவ்வாறு மேற் கூறியவாறு கூறினார்; தன் தந்தையிடம் எவ்வித அனுமதியும் பெறாமலேயே, அவர் தனது பயங்கரமான கோடரியைக் கையில் ஏந்திக் கொண்டு, விரைந்த காலடிகளுடன் அந்த மன்னனின் அரசை நோக்கிப் பாய்ந்து சென்றார் ||92||

யானைக் கூட்டத்தைக் கண்டதும், வலிமை வாய்ந்த சிங்கம் ஒன்று தனது முழு ஆற்றலையும் திரட்டிப் பாய்ந்து செல்வது போலவே, இறைவன் பரசுராமரும் கர்ஜனை செய்தவாறு, மன்னன் அர்ஜுனனை நோக்கித் தனது காலடிகளை விரைவுபடுத்தினார்||93||

சமஸ்கிருதத்தில் சாவர்த்தகம்* என அழைக்கப்படும் மேகங்கள், பிரளய காலத்தில் பூவுலகம் முழுவதையும் சூழ்ந்து கொள்வது போலவும், அம்மேகங்கள், பயங்கரமான சூறாவளிக் காற்றாலும், இடியென முழங்கும் பேரொலியாலும் உந்தப்பட்டுச் சீறுவது போலவும்…
{*சமஸ்கிருதத்தில் ‘சாவர்த்தகம்’ (Samvarta) என்பது உலகை அழிக்கும் பிரளய காலத்து மகா மேகங்களைக் குறிக்கும்; உலக முடிவில் (பிரளயம்) தோன்றி, உலகையே அழிக்கும் பெரு மழையைப் பொழியும் மேகக்கூட்டம்; புராணங்கள் மற்றும் காவியங்களில், இறைவனின் உக்கிரமான கோபத்திற்கோ அல்லது போர்க்களத்தில் ஏற்படும் பேரழிவிற்கோ இந்த ‘சாவர்த்தக’ மேகங்கள் உவமையாகக் கூறப்படும்} ||94||

அவ்வாறே, தெய்வமான பரசுராமரும் அஞ்சத்தக்கப் பேரொளியுடன் காட்சியளித்தார்; அத் தருணத்தில், அவர் தன் உள்ளத்தில் கடும் சீற்றத்தை வளர்த்துக் கொண்டார்; மீண்டும் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டார் ‘அந்த மன்னனை என் கைகளால் எப்போது பற்றிக் கொள்வேன்?; இந்த மண்ணிலிருந்து அவனது இருப்பையே எப்போது அழித்தொழிப்பேன்? ||95||

அவர் காற்றின் வேகத்தில் ஓடினார்; அவரது காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் பூமி குழி விழுந்து தாழ்ந்தது; இன்றே அவனது உயிரைப் பறிப்பேன் என்ற உறுதியுடன், கோடரியைத் தாங்கிய இறைவன் பரசுராமர் பாய்ந்து சென்றார்||96||

இறைவன் ராமர் இத்தகைய வேகத்துடன் சீறிப் பாய்ந்து சென்றதைக் கண்ட வழிப்போக்கர்கள், அச்சத்தால் உறைந்து போய், அவர் தடையின்றி முன்னேறிச் செல்ல வழி விட்டு விலகினர்; அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்: ‘சர்வமும் அழியக் கூடிய பிரளய காலத்தில், இறைவன் ருத்ரனின் (சிவனின்) வல்லமை வெளிப்படுவது இதுதானோ? ||97||

அவர் முன்னேறிச் சென்ற விதத்தை வெறும் கண்ணால் கண்டது மட்டுமே போதும்; அன்று அதைக் கண்ட சாட்சிகள் அனைவரிடமிருந்தும் பல்வேறு கருத்துகள் எழுந்தன; இறைவன் ருத்ரனே நேரில் அவதரித்து வந்து விட்டது போலிருக்கிறதே என்று அவர்கள் நினைத்தார்கள்; ‘இவர் இந்த முழுப் பூவுலகத்தையுமே இறைவனுக்குப் படைக்கும் ஒரு வேள்விப் பொருளாக அர்ப்பணிக்கப் போகிறாரோ?’ என்றும் வியந்தனர் ||98||

இவ்வாறு அவர் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே மன்னன் அர்ஜுனனின் படைகளைக் கண்டார்; உடனே அவர் தன் முழு பலத்தையும் திரட்டி முழக்கமிட்டார் ‘ஏ, திருடனே, ஏ, கொள்ளையனே,வந்த வழியே திரும்பிச் செல்||99||

நீ எக் காலத்திலிருந்தும் ஒரு திருடனாகவே இருந்து வருகிறாய் போலும்; உனது இச்செயல் உனது குலத்திற்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது; இன்றே நான் உனது கழுத்தை முறித்து வீழ்த்துவேன்; இதை வெற்று மிரட்டல்களாக மட்டும் கருதி விடாதே ||100||

மேற் கூறியவாறு கர்ஜித்தபடி, இறைவன் பரசுராமர் தன் கண்ணில் பட்ட எதிரியான மன்னன் அர்ஜுனனை நோக்கிச் சீறிப் பாய்ந்தார்; மன்னன் அர்ஜுனனும், தன்னை அவ்வாறு அழைத்தது யார் என்று அறியத் திரும்பிப் பார்த்தான்; சீற்றத்துடன் நின்றிருந்த அந்த இறைவனைக் கண்டதும், அவன் தனக்குள்ளேயே இவ்வாறு எண்ணிக் கொண்டான் ||101||

இவர் மிகவும் வலிமையுடனும், பேரொளியுடனும் காட்சியளிக்கிறார்; இவரது கம்பீரம் சூரியனின் ஒளியை ஒத்திருக்கிறது; இறைவன் விஷ்ணுவைத் தவிர வேறு எவருக்கு இத்தகைய பேரொளி இருக்க முடியும்?; இறைவன் விஷ்ணுவைத் தவிர வேறு எவரால் என்னிடம் இத்தகைய அதிகாரத் தொனியில் பேச முடியும்? ||102||

நான் ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் அருளைப் பெற்றவன்; என்னை விடப் பெரும் புகழும் பெருமையும் கொண்ட ஒருவனாலேயே நான் வதம் செய்யப்பட முடியும். இப்போது என்னை எதிர்த்து நிற்பவர், ஒரு தூய அந்தணரின் திருமகன் ஆவார்; ஆகையால், ஐயமின்றி அவரது களங்கமற்ற பெருமையே என்னை விடச் சிறந்தது||103||

விதி எனக்காக வகுத்திருந்த நாடகங்கள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்து விட்டன; எனது இந்த உடலைத் துறப்பதற்கான காலமும் கனிந்து விட்டது; அதனால்தான், நான் இவ்வளவு அறிவீனமாக, ஒரு நற்பண்பு மிக்க அந்தணரின் புனிதச் செல்வமாகிய இந்தக் காமதேனுவை அபகரிக்க விரும்பினேன்; இல்லையெனில், இத்தகைய அற்பமானதொரு எண்ணம் என் உள்ளத்தை எவ்வாறு ஆட் கொண்டிருக்க முடியும்?||104||

நானும் பரம்பொருளை உணர்ந்த ஒரு ஞானியாக இருந்தும், ஒரு தூய அந்தண குருவின் பசுவை நான் ஏன் பலவந்தமாகப் பறிக்கத் துணிந்தேன்?; விதி ஒன்றே இதற்கு முழு முதற் காரணமாகத் தோன்றுகிறது; இப்போது, என்னை நோக்கி வரும் அந்தப் பேரொளியின் திருவடிகளில் நான் அடைக்கலம் புகுவதா?||105||

நான் அவரிடம் அடைக்கலம் புகுந்தால், அவர் நிச்சயமாக என் உயிரைக் காப்பாற்றி விடுவார்; அவ்வாறு நிகழ்ந்தால், போர்க் களத்தில் என்னை எதிர்த்துப் போரிட வேறு யார் வருவார்?; நான் விரும்பியபடியே, என்னை வதம் செய்யக் கூடியவர் வேறு யார் இருக்க முடியும்?’ ||106||

நான் நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த இந்த நன்னாளினை எனக்குப் பரிசளிப்பதே விதியின் தீர்மானமாகத் தெரிகிறது; எனவே, என் உடலை நான் இப்போது நிரந்தர ஓய்வுக்கு அர்ப்பணிக்கிறேன்; என் உள்ளத்தில் நான் கொண்ட இந்தத் தீர்மானம் ஒரு போதும் தளர்ந்து விடக் கூடாது’ ||107|| ‘

இவ்வாறு தன் உள்ளத்தில் தீர்மானித்தவனாய், மன்னன் அர்ஜுனன், தான் ஒரு ‘ஜீவன்முக்தன்’ (வாழும்போதே ஞானம் பெற்றவன்) எனும் நிலையில் இருந்தபோதிலும் தன் படைகளைத் திரும்பி, தன்னை எதிர்த்து நிற்கும் பகைவனை எதிர் கொள்ளுமாறு பணித்தான்; அவனோ, தான் மட்டும் அசைவற்று நின்று, இறைவனின் அந்தப் பேரெழில் மிக்க மகத்துவத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இரண்டாம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நான்காம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 2056 = 2164

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு  பாகம் -7, அத்தியாயம் -20 முடிவடைந்தது
அத்தியாயம் -21 தொடர்கின்றது