COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் – 6 : தெய்வ அவதாரங்கள்
அத்தியாயம் 18
ரிஷிகர்-சத்தியாவதி திருமணம்; ஜமதக்னி மற்றும் விசுவாமித்திரர் பிறப்பு
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
‘சீடன் தீபக் தன் குருவிடம் வினவினான் ‘குருவே, ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? இறைவனின் புகழ் பெற்ற புனிதத் தாயான ரேணுகா தேவி யார்? ஒரு மானிட உருவில் தோன்றிய தெய்வத்திற்கே தாயாகும் பாக்கியத்தை அவள் எவ்வாறு பெற்றாள்? ||1||
அந்த தெய்வம் எதற்காக தானே மானிட அவதாரம் எடுக்கத் முடிவு எடுத்தார், அவர் ஏன் அர்ஜுனனுடன் போர் புரிந்தார்?; அந்த முழு விவரத்தையும் எனக்குச் சொல்வீர்களா; அந்த தெய்வமே தனது பக்தனை எவ்வாறு வென்று வாகை சூடினார்? ||2||
அவர் ஏன் ஒரு அந்தண அவதூதராக வடிவம் எடுக்கத் முடிவு செய்தார்?; தன் சொந்த பக்தனுடனேயே போரிடுவதை அவரால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடிந்தது?; தயவு செய்து அனைத்தையும் துவக்கத்தில் இருந்து எனக்குச் சொல்லுங்கள்; மேலும் தேவ லீலைகளின் சூட்சுமங்களை எனக்கு விரித்துரையுங்கள்’ என்று கேட்டார் ||3||
தனது சீடனின் கேள்விகளை கேட்ட குரு வேத தர்மா பெரிதும் மகிழ்ந்தார்; ஏனெனில், அவை அனைத்துமே அவர் தேடிய இறைவனை அவருக்கு நினைவூட்டின; அவர் கூறினார் ‘தீபக், கவனத்துடன் கேள்; அந்த முழு கதையையும் நான் உனக்கு விரிவாக எடுத்துரைக்கிறேன்||4||
பொதுவாக, விண்ணுலகத் தேவர்கள் தங்கள் வானுலக இன்பங்களிலேயே மூழ்கி இருப்பதாக கூறுவார்கள்; ஆனால், ஏதேனும் நெருக்கடிகள் என்று வந்து விட்டால், அவர்கள் பரமாத்மனை நினைவு கூறி, இறைவா, நாங்கள் உனக்கே உரியவர்கள்’ என்று சரணடைகிறார்கள்; இறைவனும், தன்னிடம் சரணடைந்த அனைவருக்கும் அச்சமற்ற நிலையை தந்து அருள்பவர் என்று போற்றப்படுகின்றார்||5||
தெய்வமான ஸ்ரீமத் தத்தர், தன் அன்பிற்குரிய சீடனான அர்ஜுனனைப் பற்றியும், அவன் கடும் தவத்தின் வாயிலாக ‘ஜீவன் முக்தி’ (வாழும்போதே ஞானம் பெறும்) நிலையை எட்டி இருந்ததையும் நன்கே உணர்ந்தவர்; அவர்தானே அவனுக்கு அந்த நிலையைக் கொடுத்தவர்; அப்படியிருக்க, இறைவன் இப்போது தன் சேவகனிடம் ஏன் பாராமுகமாக இருக்கப் போகிறார்?; மாறாக,மன்னன் அர்ஜுனனுக்கு வரங்களை அருளியதின் மூலம் அவனது விருப்பத்தை நிறைவேற்றினார் ||6||
ஒருமுறை, ஜீவன் முக்தி நிலையை அடைந்த மன்னன் அர்ஜுனன், தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரை அணுகி, கை கூப்பி வணங்கியவாறு, தான் தேடி வந்த அந்த இறைவனிடம் இவ்வாறு வேண்டினான் ‘இறைவா, நான் என் உடலைத் துறந்து இவ்வுலகை விட்டுப் பிரியும் காலம் வரும்போது, அதற்கு காரணமாக நீங்களே இருக்க வேண்டும்; உங்கள் மூலமே நான் உயிர் இழக்க வேண்டும’ ||7||
இறைவனின் அருளைப் பெற்ற பக்தர்களாகிய போர் வீரர்களின் உடல் தூய்மையானது; அத்தகைய உடலை, பூமியில் உள்ள ஒரு புண்ணியத் தலத்தில் துறந்த பிறகு, தெய்வங்களின் அருளை பெற்று நடைபெறும் இறுதிச் சடங்குகள் அதற்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை வந்தால், பூமியில் பொதுவாக மரணம் அடைபவர்கள் நிலை எத்தகையதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்||8||
அர்ஜுனன் மிகச் சிறந்த யோகிகளில் ஒருவன்; அவன் உயிருடன் இருந்தவரை அவனது வலிமைக்கு ஈடு இணை எதுவும் கிடையாது ; அத்தகைய ஞானம் பெற்ற ஒரு வீரனின் இறுதிப் பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய அளவுக்கு, அவனை விட வலிமை வாய்ந்தவர் வேறு யார் இருக்க முடியும்?; தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மனதில் இவ்வாறு சிந்தித்தார் ‘தற்போதைய சூழ் நிலையில், இவனுக்குச் சமமானவர் வேறு எவரும் இல்லை’||9||
எனவே, ஸ்ரீமத் தத்தர் அவனிடம் இவ்வாறு பதிலளித்தார் ‘உன்னை இதுவரை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்ததே நான்தான்; அப்படியிருக்க, உன் மீது நான் கொண்டுள்ள அன்பை மாற்றிக் கொண்டு, உன் உடலை அழிக்கும் செயலை நான் எப்படிச் செய்ய முடியும் என்று நீ எதிர்பார்க்கிறாய்? ||10||
அதற்கு அர்ஜுனன் இவ்வாறு பதிலளித்தான் ‘தெய்வமே ஒருவேளை அந்தப் பணியை உங்களால் செய்ய இயலாது என்றால், குறைந்த பட்சம் என்னை விடத் தாழ்ந்த ஒருவனால் நான் கொல்லப்படக் கூடாது; உடல் ஊனமுற்றோ,மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டோ நான் மரணம் அடையாக கூடாது ||11||
தங்களைப் போலவே மிகுந்த பெருமை வாய்ந்த ஒருவரின் கரங்களால் நான் இவ்வுலகை விட்டுப் பிரிய வேண்டும்; அனைவரும் நினைவு கொள்ளும் வகையிலான ஒரு வீர மரணம் எனக்கு வாய்க்க வேண்டும்’ அந்த வரத்தையே மன்னன் அர்ஜுனன் தான் தேடி வந்த தெய்வத்திடம் வேண்டினான்; அவன் கேட்ட அந்த வரத்தையும் அவனுக்கு ஸ்ரீமத் தத்தர் அருளினார்||12||
அந்த வரத்தை மனதில் கொண்டு, கூடியிருந்த தேவர்கள் தெய்வத்தின் உதவியை நாடியபோது, அர்ஜுனனை எதிர் கொள்வதற்காக, அவர் பூமியில் அவதரிக்கத் தேர்ந்தெடுத்த இடம் சமூகத்தில் போர் வீரர்களை விடவும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பிரம்ம ரிஷியின் இல்லம் ஆகும்||13||
இந்தச் சூழலில் தெய்வத்தை எப்படிக் குறை கூற முடியும்?; தெய்வம் கோபத்திற்கு ஆளாகிறார் என்று எப்படிக் கூற முடியும்?; தெய்வம் தனது உண்மையான பக்தனின் விருப்பம் நிறைவேற அன்போடு அருள் புரியும் நிலை ஆகும்; இறைவனுக்கு இணையான பெருமை கொண்ட ஒருவரின் கரங்களால் தான் மரணம் அடைய வேண்டும் என்ற அந்த பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஆகும்||14||
தனது சொந்த விருப்பத்தினால், இந்த அண்டத்தைப் படைத்து, காப்பாற்றி, பின்னர் தான் படைத்ததையே அழித்து, மீண்டும் அதே பிரபஞ்சத்தை தனது பரிசோதனை சாலையாக மாற்றிக் கொள்ளும் பரமாத்மன், அனைத்திலும் சம நோக்கு கொண்ட, பாரபட்சமற்ற இறைவன், பிரபஞ்சத்தில் எந்தவொரு உயிரினத்தின் மீதும் தனியான பற்று கொள்வதில்லை; சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எவ்வித சலனமும் இன்றி அவர் நடந்து கொள்கிறார்||15||
உள்ளவை அனைத்திற்கும் அதிபதியான அந்தப் பரமாத்மன், இளம் குழந்தைகளைப் போலவே தனது திருவிளையாடல்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுகின்றார்; அத்தகைய இறைவனை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? பந்தம் மற்றும் விடுதலை என்ற கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்லவா அவர்? ||16||
பூமியில் பிறக்கும் அனைவரும் என்றாவது ஒரு நாள் இங்கிருந்து விடைபெற வேண்டும் என்பது மாற்ற முடியாத ஒரு உண்மையாகும்; வெளித் தெரியும் பூத உடல் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் (பௌதிக கூறுகளால்) ஆனது; அதனால் அது சிதைகிறது; ஆனால் ஆத்மா பௌதிகக் கூறுகளுக்கு அப்பாற்பட்டது, அதற்கு அழிவு என்பதே கிடையாது; ஆகவே ஒருவரது மரணத்திற்குப் பின்னர் அவரது பூத உடல் மட்டுமே அழிக்கப்படுகிறது; அதற்குள் இருக்கும் ஆத்மா அழிந்து போவதில்லை; அது தனது பயணத்தைத் தொடர்கிறது ||17||
ஆகவே, உயிருடன் இருக்கும்போதே முக்தி நிலையை அடைந்திருப்பவர்கள், தங்கள் உடலைத் துறக்கும்போது, அவர்கள் இழப்பது என்ன? அத்தகையோர், வெறும் பௌதிக* உடலே தாம் எனும் அடையாளத்தை, தங்கள் அனுபவப் பூர்வமான ஞானத்தின் மூலம் ஏற்கனவே கடந்து விட்டவர்களாவர்
{* பல இடங்களிலும் பௌதீக உடல் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது; பௌதீக உடல் என்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம் பூதங்களால் ஆன, கண்ணால் காணக் கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய உடலைக் குறிக்கிறது} ||18||
கடலில் பல அலைகள் தோன்றி, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வது போலவே, அந்த உராய்வினால் அலைகளின் எழுச்சியோ அல்லது ஓட்டமோ தடைபட்டாலோ அல்லது உடைந்தாலோ கூட, அதனால் கடலுக்கோ அல்லது நீருக்கோ என்ன இழப்பு ஏற்படப் போகிறது ||19||
அதேபோல, இந்த உடலானது மாற்றங்களுக்கு உட்பட்டதாகும்; என்றாவது ஒரு நாள் அது துறக்கப்பட்டு விட்டாலும் கூட, அழியாத ஆத்மா வாகத் திகழும் ஒருவரின் உண்மையான அடையாளத்திற்கு, ஒரு எள்ளின் அளவுக்காவது பாதிப்பு ஏற்பட முடியுமா?’ ||20||
ஒருவர் தன் உள்ளத்தில் இவ்வாறு ஆழ்ந்து சிந்தனை செய்தால், அவர் எவற்றிலும், எவரிடமும் குறைகளைக் காண்பதில்லை; ஏனெனில், இருப்பவை அனைத்தின் மிக ஆழமான மையத்திலும் தெய்வீக தன்மையே வியாபித்திருக்கிறது; இந்த உண்மையை புரிந்து கொள்வதும் அனுபவிப்பதும் சற்று கடினமானதே என்றாலும், கவனத்துடன் கேட்க வேண்டும்’ என்று கூறிய பின் வேத தர்மா தொடர்ந்தார்||21||
‘முன் ஒரு காலத்தில், கன்யாகுப்ஜம் (Kanauji) என்னும் பகுதியில், சந்திர குலத்தைச் சேர்ந்த, காதி (Gadhi) என்னும் புகழ் பெற்ற, நீதிநெறி தவறாத மன்னன் ஒருவர் வாழ்ந்து வந்தார்; விதி வசத்தால், அவர் திருமணம் செய்து கொண்டிருந்த போதிலும், அவருக்குச் சந்ததி ஏதும் கிடைக்கவில்லை ||22||
ஆகவே, மன உளைச்சல் அடைந்த அந்த மன்னன் , தன் மனைவியுடன் இணைந்து வனவாசம் மேற்கொண்டு தவம் புரியத் தீர்மானித்தார்; அவர்கள் சிவபெருமானை வழிபட்டுத் துதிப்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவிட்டனர்; அவர்களின் தவம் பலித்தது; அதன் விளைவாக, அவர்களுக்கு ஒரு ரத்தினம் போன்ற பெண் குழந்தை பிறந்தது ||23||
அக்குழந்தைக்கு ‘சத்யாவதி’ (Satyavati) என்று பெயரிட்டார்கள்; சத்யாவதி என்றால் எப்போதும் உண்மையையே பேசுபவள் என்பது பொருள்; அவள் பேரழகும் ஒளியும் நிறைந்தவளாகத் திகழ்ந்தாள்; மெத்த அறிவுக் கூர்மை கொண்ட அவள், சமயோசித புத்திக்கு ஒரு உதாரணமாகவே விளங்கினாள்; அழகிய பல் வரிசையைக் கொண்ட அந்த இளவரசியின் தோற்றம் பிரமாதமாக இருந்தது ||24||
ஒரு நாள், ரிஷிகர் (Richika) என்னும் முனிவர் தனது தந்தையும், முனிவர்களில் பெரும் புகழ் பெற்றவருமான ‘பிருகு’ (Bhrigu) முனிவரை சந்திக்கச் சென்றார்; தந்தையின் இல்லத்திற்கு சென்றதும் அவர் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் தன் பெற்றோரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்||25||
அப்போது அவருடைய தந்தை பிருகு முனிவர், அவரை நோக்கி இவ்வாறு கூறினார் ‘இதுநாள் வரை நீ தீவிரமான தவத்தில் ஈடுபட்டிருந்தாய்; இனி என் அறிவுரையை ஏற்று, ஒரு நன்னெறி தவறாத இல்லறத்தானாக (கிருஹஸ்தனாக) வாழ வேண்டும்||26||
இல்லற வாழ்க்கையில் (கிரஹஸ்தர் ஆசிரமத்தில்) இணைந்த பிறகு வேத முறைப்படி யாகங்கள் செய்து தேவர்களைத் திருப்திப்படுத்துவாயாக; உனக்கு ஒரு மகன் பிறந்ததும், அவனது முகத்தை பார்த்து விட்டு, மீண்டும் காடு சென்று துறவற வாழ்க்கையை மேற் கொள்வாயாக’ ||27||
தன் தந்தையின் இத்தகைய அறிவுரைகளைக் கேட்ட முனிவர் ரிஷிகர், அவற்றை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்; தனக்கு ஏற்ற துணைவியை ஒரு ரத்தினம் போன்ற பெண்ணைக் தேடும் நோக்கத்தில் அவர் தியானத்தில் அமர்ந்தார்; அவரது தியானத்தில் சத்யாவதியை விடச் சிறந்தவள் வேறு எவரும் தனக்கு ஜோடியாக கிடைக்க முடியாது என்ற உண்மையை அவர் உணர்ந்தார் ||28||
அதன் பிறகு, காதி மன்னரிடம் நேரடியாக சென்று, அவரது இளவரசியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு வேண்டினார்; தன் மகளின் விருப்பம் என்னவென்று அறிந்திடாத மன்னர், அந்த கோரிக்கையைக் கேட்டுத் திகைத்துப் போனார்; அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் குழப்பமடைந்தார்||29||
அவர் மனதில் எண்ணினார் ‘என் மகளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இந்த முனிவர் ஒரு துறவி ஆவார்; இவர் காட்டில், வறுமை மிகுந்த சூழலில் வாழ்ந்து வருகிறார்; இவருக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால், அதனால் என்ன பலன் கிடைத்து விடப் போகின்றது ||30||
இவள் எனக்கு பிறந்துள்ள ஒரே மகள் ஆவாள்; மிகவும் மென்மையானவள், அறிவுக் கூர்மை மிக்கவள் மற்றும் உணர்ச்சி வசப்படக்கூடிய இயல்புடையவள்; காட்டில் வாழும்போது ஏற்படும் பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் இவளால் எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும்?; ஆகவே இந்த முனிவருக்கு மனைவியாக இவளுக்கு தகுதி கிடையாது||31||
மேலும், ஒருவேளை நான் இம் முனிவரின் திருமணக் கோரிக்கையை மறுத்தால், அவர் சினமுற்று, அடுத்த கணமே சாபமிட்டு, நம் அனைவரையும் சாம்பலாக்கி விடக் கூடும்; அதன் பிறகு என்னுடைய இராஜ்யத்தின் பகுதி என்று எதுவும் இருக்காது||32||
ஆகவே, அவரை நேரடியாக மறுப்பதற்குப் பதிலாக, தந்திரமான ஒரு உபாயத்தைக் கையாண்டு அவரது கோரிக்கையை நிராகரிக்கலாம்; முனிவரால் நிறைவேற்றுவதற்கு மிகவும் கடினமான ஒரு நிபந்தனையை முன் வைத்து அதன் மூலம், சத்யாவதியை அடைவது குறித்த அவரது நம்பிக்கையை முற்றிலுமாகத் துண்டித்து விடலாம்’ என்று மன்னர் தன் மனதிற்குள் எண்ணினார்||33||
தனது எண்ணத்தை வெளி காட்டிக் கொள்ளாமல் தனது அரண்மனைக்கு வருகை தந்திருந்த முனிவருக்குத் தக்க உபசரிப்புகள் அனைத்தையும் செய்த பின்னர் மன்னர் காதி, தன்னிடம் வந்த முனிவரிடம் பின்வருமாறு கூறினார் ‘ஓ மாபெரும் தபஸ்வியே நான் கூறுவதைக் கேட்பீர்களாக; என் மகளை பார்த்துள்ள மன்னர்கள் பலரும் அவளைத் தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு என்னிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளனர் ||34||
அந்த மன்னர்கள் அனைவருக்கும் நான் கூறிய அதே பதிலையே உங்களுக்கும் கூறுகிறேன்; என் மகளை மணந்து கொள்வதற்கான நிபந்தனை இதுவாகும்; எவர் ஒருவர், காதுகள் மட்டும் கருமை நிறம் கொண்ட ஆயிரம் குதிரைகளை எனக்குக் கொண்டு வந்து தருகிறார்களோ, அந்தப் பாக்கியசாலி ஒருவரே, என் ஒரே மகளுக்கு மணாளனாகத் திகழ்வார் ||35||
இதுவே நான் அனைவருக்கும் கூறிய வார்த்தைகள்; இதுவே எனது நிபந்தனையும் கூட; இதை உங்களால் எவ்வாறு நிறைவேற்ற இயலும்?’; மன்னன் காதி கூறியதைக் கேட்ட அந்த முனிவரும் சற்றும் கோபம் அடையாமல் மன்னனுக்கு பதில் கூறினார்||36||
அரசனே, நீங்கள் இந்த விஷயத்தில் சற்றும் கவலை கொள்ள வேண்டாம்; உங்களுக்கு விருப்பமான அந்தக் குதிரைகளை நான் தருகின்றேன்; அதற்கு அதிக காலம் ஆகாது; ஆனால், அத்தகைய நான் உங்களுக்கு கொடுத்த பின்னர் கால தாமதம் இன்றி என்னை உங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்; தாங்கள் வாக்கிலிருந்து ஒருபோதும் பின் வாங்கக் கூடாது’ ||37||
மன்னனிடம் இவ்வாறு உறுதியளித்த பிறகு, முனிவர் ரிஷிகர் தியானத்தில் அமர்ந்தார்; அப்படிப்பட்ட குதிரைகள் அனைத்தும் கடல் அதிபதியான வருணனிடம் இருப்பதை அவர் ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டார்;எனவே, அவர் சூட்சும வழிகள் வழியே பயணித்து, வருண பகவானைச் சந்திப்பதற்காகச் சென்றார்
||38||
வருணனிடம் சென்ற அந்த முனிவர் கூறினார் ‘ஓ வருண பகவானே, நான் ரிஷிக முனிவன் என்பவர்; எனது தந்தையின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றித் தருவதாக அவரிடம் நான் ஒப்புக் கொண்டுள்ளேன்; அதனால் நான் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளேன்; எனவே, தங்கள் தாராளமான உதவியை நாடி உங்களிடம் வந்துள்ளேன்’ என்ற பின் தொடர்ந்தார் ||39||
மன்னர் காதியின் மகளான சத்யாவதியை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்; ஆனால், அதில் ஒரு சிக்கல் உள்ளது; அந்தத் சிக்கலை குறித்து தாங்கள் சற்றுச் செவி சாய்த்துக் கேட்டால், நான் எனது தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியும் ||40||
தனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்க மன்னன் காதி ஒரு நிபந்தனையை விதித்துள்ளார்; எவர் ஒருவர் அவருக்குச் செவிகள் மட்டும் கருமை நிறம் கொண்ட ஆயிரம் குதிரைகளை பரிசாகத் தருகிறாரோ, அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பாராம்; அத்தகைய குதிரைகள் தங்களிடமே உள்ளன.; அவற்றை நான் அவருக்கு பெற்றுத் தந்தால், அவர் தன் வாக்கின்படி நடப்பதாக உறுதியளித்துள்ளார் ||41||
ஓ வருண பகவானே,தங்களுக்குப் பெரும் நன்மைகள் உண்டாகட்டும்; தயவுசெய்து அந்த ஆயிரம் குதிரைகளையும் எனக்கு தானமாக அளிப்பீரா’ என்று கேட்டார் ; அவரது கோரிக்கையை பொறுமையுடன் கேட்ட வருண பகவான் தன் மனதிற்குள் ஒருவித அச்சத்தையும் உணர்ந்தார் ||42||
அந்த முனிவர் தனது கடந்த காலத் தவ வலிமையால் மிகுந்த ஆற்றல் பெற்றவர் என்பதை வருண பகவான் தன் உள்ளுணர்வால் அறிந்து கொண்டார்; ஒருவேளை, அந்தக் குதிரைகளைத் தானமாக அளிப்பதற்குத் மறுப்புத் தெரிவித்தால், அந்த வலிமை மிக்கத் முனிவரால் தான் சாபம் பெறக் கூடும் என்று அவர் அஞ்சினார் ||43||
அதற்கு மாறாக, அந்தக் குதிரைகளுக்கு மதுவை அருந்தச் செய்து விட்டால் அவை அந்த முனிவரின் அருகில் செல்ல முரண்டு பிடிக்கும் என்று தன் மனதிற்குள் ஒரு சூழ்ச்சி வலையை கட்டமைத்துக் கொண்ட வருண பகவான், அந்த முனிவருக்குப் பின்வருமாறு பதிலளித்தார் ||44||
‘ஓ முனிவரே, தங்கள் கோரிக்கையை நான் கவனமாகக் கேட்டேன்; ஆனால், எனது குதிரைகள் மிகவும் மூர்க்கத் தனம் கொண்டவை; அவற்றை அடக்கி ஆள யாரால் இயலும்? தாங்கள் விரும்பினால், அந்தக் குதிரைகளை நான் தங்களுக்குக் காட்டுகின்றேன்; அவற்றை உங்களால் அடக்கிக் கொள்ள முடியும் என்றால் அவற்றை நான் தங்களுக்கே அளிக்கவும் தயாராக இருக்கிறேன்||45||
அந்த குதிரைகளின் வேகம் காற்றைப் போன்றது; அவற்றின் குளம்புகள் தரையைத் தொடுவதே இல்லை; யாரேனும் ஒரு மனிதனைக் பார்த்து விட்டால் அவர்கள் மீது கோபத்தோடு பாய்ந்து வந்து தக்க முயலும் தன்மை கொண்டவை ||46||
வருண பகவான் கூறியதைக் கேட்ட அந்த முனிவர் அவருக்கு பதில் கூறினார் ‘அதனால் என்ன வருண பகவானே, என்னால் அவற்றை அடக்கி, என்னுடன் அழைத்துச் செல்ல இயலும் என்று உறுதியாக பதிலளித்தார்; அதன்பின், அந்த வருண பகவானும் முனிவரும் குதிரை லாயத்தை நோக்கிச் சென்றனர்; அங்கே, மதம் பிடித்த ஆண் குதிரைகள் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன ||47||
தவத்தின் மூலம் யோக சக்தியைப் பெற்றிருந்த ரிஷிக முனிவர் அங்கே துள்ளி விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குதிரைகளை ஒரு முறை கண்ணால் நோக்கிய மாத்திரத்திலேயே, அவை தங்கள் முரட்டுத்தனமான தன்மைகளை விட்டு விட்டு சாதுவான குதிரைகளாக அங்கே நின்று இருந்தன ||48||
அந்த முனிவரின் யோக சக்தி ஈடு இணையற்றதாகத் திகழ்ந்தது; முனிவர் வழி காட்டியபடியே அவை நேர் கோட்டில் நடந்து சென்றன; அவை எவ்விதத் தொந்தரவும் செய்யவில்லை; வரம்பு மீறியோ அல்லது அடங்காமலோ அவை நடந்து கொள்ளவில்லை’ ||49||
அவற்றை தானமாக பெற்றுக் கொண்ட முனிவரும்வெளிப்புற ப்படுவதற்கு முன் மனம் மகிழ்ந்து, வருண பகவானுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார்; வருண பகவானைச் சந்தித்து தனது நோக்கம் வெற்றி அடைந்ததும் நீரிலிருந்து வெளியே வந்த அவர், அந்தச் சிறந்த குதிரைகளுடன் கிழக்கு திசையை நோக்கிப் பயணமானார்||50||
முனிவர் அந்தக் குதிரைகளை நீரிலிருந்து கரைக்கு அழைத்து வந்த அந்த நிலப்பகுதி, ‘அஸ்வதீர்த்தம்’ (Atwater)* என்று புகழ்பெற்று விளங்குகிறது; அப் பகுதிக்குச் சென்றால் தூய்மை கிட்டும் என்ற பெருமை அதற்கு உண்டு; இது, கிழக்குப் பகுதியில் கங்கை நதி கடலுடன் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
{*இது கல்கத்தாவிற்கு அருகில் ‘கங்கா-சாகர்’ என்று அழைக்கப்படுகிறது; இப் பகுதியில்தான் கங்கை நதி ஆயிரக்கணக்கான கிளைகளாகப் பிரிந்து பாய்கிறது} ||51||
அந்த முனிவர் குதிரைகளை அழைத்துக் கொண்டு விரைவில் காதி மன்னனின் அரசவையை அடைந்தார்; மன்னனிடம் கூறினார் ‘மன்னா நான் உமது நிபந்தனையை நிறைவேற்றி விட்டேன்; இனி நீர் உமது நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும்’ ||52||
முனிவர் மேலும் கூறினார் ‘ஸ்வஸ்த்யஸ்து தே’* (SwasatyastuTe) அதாவது, நீங்கள் கூறிய வாக்குறுதியின் உண்மையை நிலை நிறுத்தும் வகையில் நடந்து கொள்ளும்; உமது மகளை எனக்குத் திருமணம் செய்து தாரும்; இப்போது ஏன் இந்தத் திருமணத்தை தாமதப்படுத்துகிறீர்
{* ஸ்வஸ்த்யஸ்து தே (Swastyastu te) என்பது ‘உங்களுக்கு நலம் உண்டாகட்டும்’ அல்லது ‘நீங்கள் நலமுடன் வாழ்க’ என்று வாழ்த்தும் ஒரு மங்களகரமான சமஸ்கிருத வாசகமாகும்} ||53||
அந்த முனிவரின் அற்புதமான ஆற்றலைத் தன் கண்களாலேயே கண்ட காதி மன்னன் வியப்பில் ஆழ்ந்தான்; அவனது மனம் உள்ளூர மகிழ்ச்சியால் பூரித்தது; அவன் எண்ணினான் ‘யோக மார்க்கத்தின் உண்மையான ஆற்றலை, அதன் முழுமையான பரிமாணத்தில் எவரால் முழுமையாக விவரிக்க இயலும்? ||54||
அந்த முனிவர் ஒரு எளிய துறவி மட்டுமே என்று நான் தவறாகக் கருதினேன்; அது எனது பிழை ஆகும்; இப்போது, அவர் உண்மையில் எத்தகைய ஆற்றல் படைத்தவர் என்பதை நேரில் கண்ட பிறகு, அவருக்கு நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றச் சிறிதும் தயங்கக் கூடாது ||55||
யோக சித்தியைக் கை கொண்டிருக்கும் வலிமை மிக்க சாதகர்களுக்கு, இவ்வுலகில் என்ன குறை இருக்க முடியும்? அவர்கள் மிக உயர்ந்த ஆன்மீக நிலைகளைத் தங்கள் முழு உணர்வுடன் அடைந்து அனுபவிக்கிறார்கள்; தேவர்கள் கூட அத்தகைய யோகிகளை சேவிக்கின்றார்கள் ||56||
இந்த முனிவர் எனது மருமகனாக அமைவாரேயானால், என் மகள் அவளது வாழ்வில் நிறைவை அடைவது உறுதி; இவர் எனது குலத்தினர் அனைவருக்கும் ஒரு பெரும் பெருமையை தருவார்; ஆகையால், என் மகள் சத்யாவதியை இவருக்கே மணம் முடித்துத் தருகிறேன் ||57||
இவ்வாறு தன் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டு, பஞ்சாங்க அறிவில் தேர்ந்த அந்தணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவர் அந்த முனிவருக்கு ஒரு மங்கலமான நன்னாளில் தன் அன்பு மகளை மணம் முடித்து வைத்தார்; அதன் மூலம், அந்தப் புகழ் பெற்ற முனிவருக்குத் தான் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார் ||58||
அந்தத் திருமணம் ஒரு பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது; சத்யாவதி அளவற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள்; அந்த முனிவரும், தான் தேடிய துணைவியின் கரங்களை பற்றிக் கொண்டதில் மன நிறைவு அடைந்தார்||59||
சத்யாவதி உண்மையில் பேரழகு வாய்ந்தவள்; அவளைத் தேவதைகளின் மகள்களுக்கு இணையாகப் புகழ்ந்தனர்; சூரிய பகவான் கூட அவளைக் கண்டதும் சற்றே நிலை குலைந்து போனார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்; அத்தகைய பேரழகியான சத்யாவதியே, அந்த முனிவரை மணம் புரிந்து கொண்டாள் ||60||
மேலிருந்து அந்த விழாவைக் கண்ட இந்திரனும் பிற தேவர்களும் ‘இது ஒரு இணையற்ற நிகழ்சியாக உள்ளது ; யோகத்தின் மகத்துவத்தினால் அடைய முடியாதது எதுவாக இருக்க முடியும்?; வேறு எந்தத் திருமணத்தையும் எதனுடனும் ஒப்பிட முடியாது’என்று கூறினர் ||61||
இவ்வாறு, பிருகு முனிவரின் மகனான ரிஷிக முனிவர், காதி மன்னரின் மென்மையான மகளான சத்யாவதியை மணந்து கொண்ட பின், அந்தத் தம்பதியினர் அங்கேயே சில காலம் தங்கி இருந்து, பேரானந்த நிலையில் இருந்து கொண்டு மனநிறைவுடன் வாழ்ந்தனர் ||62||
அதன் பிறகு ஒரு நாள், காதி மன்னர் அந்த முனிவரிடம் சென்று, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி இவ்வாறு வேண்டினார் ‘ஓ கருணை மிக்க முனிவரே, என் வம்சத்தில், இந்த முழு அரசாட்சியையும் ஒப்படைப்பதற்குத் தகுந்த வாரிசு எவரும் இல்லை என்பது தங்களுக்கு தெரியும் ||63||
நான் வாரிசைப் பெறாமலும், முன்னோருக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாமலும் போனால், என் முன்னோர்கள் நிச்சயம் மன வருத்தம் அடைந்து, விண்ணுலகில் தங்கள் இருப்பிடத்தை இழப்பார்கள்; தாங்கள் மிகுந்த யோக வல்லமை படைத்தவர்; கருணை மிக்க முனிவர்; நான் எதிர் கொண்டுள்ள இந்தத் துயரத்திலிருந்து என்னைக் காத்தருளுங்கள் ||64||
பக்தி மிக்கவனாகவும், இரக்க குணம் கொண்டவனாகவும், தவ வாழ்வில் நாட்டமுடையவனாகவும் திகழும் ஒரு மகனைப் பெற எனக்கு உதவுங்கள்; அவனது புகழ் மூன்று உலகங்களிலும் பரவட்டும்; சூரியனும் சந்திரனும் இப்பூவுலகில் ஒளிரும் காலம் வரையிலும் எங்கள் வம்சம் நிலை பெற்று விளங்கட்டும் ||65||
ஏனெனில், அவ்வாறு ஒரு வாரிசைப் பெறுவதன் மூலமே என்னால் என் முன்னோர்களுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் தீர்க்க முடியும்; எந்நாளும் மேலுலகில் ஒரு நற் பதவியை அடைய முடியும். என் அரசாட்சிக்கு ஒரு நல்ல ஆட்சியாளன் கிடைப்பது உறுதி செய்யப்படும்’ என்று வேண்டிக் கொண்டார்; தான் நேரில் கண்ட அந்த முனிவரின் யோக வல்லமையை நினைத்து, மீண்டும் ஒருமுறை அவரைப் பணிந்து வணங்கினார் ||66||
கருணை மனம் கொண்ட அந்த முனிவர் இவ்வாறு பதிலளித்தார் ‘ஓ மன்னா, நான் சொல்வதைக் கேளுங்கள்; நீங்கள் நிச்சயம் ஒரு மகனைப் பெறுவீர்கள்; அவன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடியவனாகத் திகழ்வான்||67||
இப்போது நான் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு, என் மனைவியுடன் சென்று என் தந்தையான பிருகு முனிவரைச் சந்திக்க விரும்புகிறேன்’; முனிவரின் விருப்பத்தைக் கேட்ட மன்னர், அவர்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துச் சிறப்புகளையும் செய்து, மிகச் சிறந்த முறையில் அவர்களை வழியனுப்பி வைத்தார் ||68||
சத்யாவதியுடன் இணைந்து சென்ற ரிஷிக முனிவர், தன் தந்தையும் புகழ் பெற்ற, பக்தி மிக்க முனிவருமான பிருகு முனிவரைச் சந்தித்தார்; நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவரிடம் விரிவாக எடுத்துரைத்தார் ||69||
தன் மகனின் நற் புகழைக் கேள்வியுற்றதும், தேவதையைப் போன்ற அழகிய மருமகளைக் கண்டதும், அவ்விருவரும் இணக்கத்துடன் இருப்பதைக் கண்ணுற்றதும், பிருகு முனிவர் தம் அகத்தில் அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, அவர்களை மனதார வாழ்த்தினார்||70||
அதன்பின் பிருகு முனிவர், அவ்விருவரும் தம்முடனேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார்; சத்யாவதி ஒரு பக்தி மிக்க முனிவரின் மனைவிக்குரிய கடமைகளைச் செவ்வனே ஆற்றினாள்; அவர்களின் ஆசிரமச் சூழல் முழுவதும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து விளங்கியது ||71||
காதி மன்னனின் அறிவுக் கூர்மை மிக்க மகளும், தூய அறிவாற்றல் கொண்டவளுமான சத்யாவதி, பிருகு முனிவரின் மனம் அக மகிழ்ந்து நிறைவு கொள்ளும் வகையில், அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள் ||72||
அவளின் மனப்பூர்வமான பணியைக் கண்ட பிருகு முனிவர் பெரிதும் மகிழ்ந்து, அவளை நோக்கி இவ்வாறு கூறினார் ‘உன் நன்னடத்தையைக் காணும் போது, என் அகத்தில் பொங்கும் மகிழ்ச்சிப் பெருக்கை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை||73||
‘மகளே, உன்னால் நான் பெரும் மகிழ்சியில் உள்ளேன்; நீ விரும்பும் வரங்களை உனக்கு நான் அருளுகிறேன்’; அதற்குப் பதிலளித்த சத்யாவதி, கைகூப்பி வணங்கி, மிகுந்த பணிவுடன் தன் வேண்டுகோளை முன் வைத்தாள் ||74||
என் மனம் எப்போதும் அற நெறியிலேயே நிலைத்திருக்க வேண்டும்; ஞானம் மிக்க பெரியோர்களுக்குப் பணி விடை செய்யும் பாக்கியம் எனக்கு எப்போதும் கிட்ட வேண்டும்; இவ்விரு நன்மைகளையும் நான் பெற வேண்டும்; இவற்றைத் தவிர வேறு எத்தகைய நன்மையையும் நான் உங்களிடம் நாடப் போவதில்லை ||75||
பிருகு முனிவர் அதற்குப் பதிலளித்தார் ‘அது உண்மையே, உன் உறுதியும் உன் சொற்களைப் போலவே உறுதியாக உள்ளது; ஆயினும், உன் மனதில் வேறு ஏதேனும் விருப்பம் இருந்தால் அதைக் கேள் என்று நான் உனக்குக் கூறுகிறேன்; நீ கேட்பதை நான் நிச்சயம் அருளுவேன் என்பதில் ஐயமில்லை; தயங்காமல் என்னிடம் கேட்கலாம்’ என்றார் ||76||
அம் முனிவரின் சொற்களுக்குக் கீழ்படியும் நற் பண்பு கொண்ட மருமகள், மிகுந்த மரியாதையுடன் இவ்வாறு பதிலளித்தாள் ‘தந்தையே, என் தாயாருக்கு ஒரு மகன் இல்லை; வாரிசு இல்லை; அதே போல எனக்கும் ஒரு மகன் இல்லை. தாங்கள் என்மீது உண்மையாகவே மகிழ்ந்திருப்பீர்களேயானால்’ அப்படி கூறிவிட்டு தொடர்ந்தாள்||77||
‘எங்கள் மீது கருணையைப் பொழியத் திருவுள்ளம் கொண்டிருப்பதினால் எத்தகைய துயரமும் எங்களை அணுகாது; நாங்கள் நற் பண்புகள் மிக்க புதல்வர்களைப் பெறுவோம் என்பது ஐயத்திற்கு இடமற்ற உண்மையாகும்; தங்கள் கருணையால் சாதிக்க முடியாத மாபெரும் காரியம் என்று எதுவும் இல்லை; இதுவே மிகச் சிறியதொரு விருப்பமேயாகும் ||78||
தங்கள் அருளால், மனித வாழ்வின் நான்கு வகையான முக்தி நிலைகளையும் ஒருவரால் உணர்வு பூர்வமாகப் பெற முடியுமென்றால், தாய்மை அடைய வேண்டும் என்ற இந்தச் சாதாரணமான விருப்பத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?; இது எங்களைச் சிறிது துன்புறுத்திக் கொண்டிருக்கின்றது’ ||79||
பிருகு முனிவர் தன் மருமகளிடம் பின்வருமாறு பதிலளித்தார் ‘உங்கள் இருவருக்கும் புத்திரப் பேறு உண்டாகும்; ஆயினும், அதற்கான வழி முறைகளைச் கேளுங்கள்; மேலும், மிகுந்த பக்தியுடனும், அதற்கேற்ற ஒழுக்கத்துடனும் அவற்றை முறையாகக் கடைப் பிடித்து வாருங்கள் ||80||
மாதவிடாய் காலம் முடிந்ததும், பரமாத்மனை தியானித்தவாறே நீங்கள் அரச மரத்தின் (Peepul tree) அருகே செல்ல வேண்டும்; அங்கு அம்மரத்தை வழிபட்ட பிறகு, மிகுந்த அன்புடன் அதைத் தழுவிக் கொள்ள வேண்டும்||81||
அதே போன்று, உங்களில் இன்னொருவர் அத்தி மரத்தின் (Udumban fig tree) அருகே சென்று, அதை வழிபட்டுத் தழுவிக் கொள்ள வேண்டும்; அதன்பின், புத்திரப் பேறு வேண்டிச் செய்யப்படும் புத்திர-காமேஷ்டி யாகம்* எனும் வேத வேள்வியை நீங்கள் இருவரும் நிகழ்த்த வேண்டும்; அந்த யாகமானது, நான் உங்களுக்குக் கூறும் முறைப்படியே செய்யப்பட வேண்டும்.
{*புத்திர காமேஷ்டி யாகம் என்பது இந்து சமயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி செய்யப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த யாகம் அல்லது வேள்வியாகும்; இது வேத மந்திரங்களை உச்சரித்து, தெய்வங்களின் அருளைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது.} ||82||
வேள்வியின் பிரசாதமாகிய பாயசத்தை (Charu) மிகுந்த பக்தியுடன் படைத்து, பிரம்ம தேவதைக்குரிய மந்திரங்களை ஓதியவாறு, ஒரு தூய அந்தண ஆசான் அதை உங்களுக்கு உண்ணத் தருவார்; நீங்கள் எவ்விதத் தயக்கமுமின்றி அதை ஏற்று உண்ண வேண்டும் ||83||
இப்படி செய்த பின்னர் அதன் விளைவாக, பரமாத்மனை உணர்ந்த ஒரு தூய அந்தணச் செல்வனை நீங்கள் மகனாகப் பெறுவீர்கள்; அவன் வேத சாஸ்திரங்களில் வல்லவனாகவும், மூவுலகிலும் மிகுந்த மதிப்பைப் பெற்றவனாகவும் திகழ்வான் ||84||
மேலும், வேத சாஸ்திரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி, க்ஷத்திரிய (வீரர்) மந்திரங்களை ஓதியவாறு, ஒரு தூய அந்தண ஆசான் உங்கள் தாயாருக்கு அந்த பாயச பிரசாதத்தை உண்ணத் தரும்போது, அவளும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுப்பாள்||85||
அந்த வீரன் அளவற்ற வலிமை கொண்டவனாகவும், மிகுந்த தயாள குணம் படைத்தவனாகவும் விளங்குவான்; மெய்யாகவே, இவ்வுலகில் அவனது பெருமையும், வீரச் செயல்களும் எங்கும் பரவிப் பெரும் புகழை பெற்றுத் தரும்||86||
இவ்வாறு கூறிய பிறகு, பிருகு முனிவர் பின்வருமாறு கூறினார் ‘மகனே ரிஷிகா, இப்போது நீ உன் மனைவியை அழைத்துக் கொண்டு, உன் மாமனாரின் அரண்மனைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது ||87||
நீ என் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு இருந்தாய் ; இப்போது சென்று, நன் மக்களைப் பெறுவதற்காகச் செய்ய வேண்டிய அந்த வேத யாகத்தை நிறைவேற்று; அதன் பிறகு, நான் குறிப்பிட்டது போலவே, உன் மாமியாருக்கும் உன் மனைவிக்கும் அந்த பாயசத்தை (யாகப் பிரசாதம்) உண்ணக் கொடுப்பாயாக’ என்றார் ||88||
தன் தந்தையின் கட்டளைகளைக் கேட்ட ரிஷிக முனிவர், தன் மனைவியுடன் காதி மன்னனின் அரண்மனைக்குச் சென்று, பிருகு முனிவர் அளித்த அறிவுரையை அவனிடம் எடுத்துரைத்தார் ||89||
காதி மன்னனும், அவனது மருமகனும் (ரிஷிக முனிவர்) இணைந்து, அந்த வேத யாகத்தை மிகுந்த தூய்மையுடனும் பக்தியுடனும் நிறைவேற்றினர்; ஆயினும், அந்த பாயசத்தை அருந்தும் வேளையில் ஒரு பெரும் பிழை நிகழ்ந்து விட்டது ||90||
மகளுக்காக ஒதுக்கப்பட்ட பிரசாதத்தை அவளது தாயார் உண்டு விட்டார்; தாயாருக்காக ஒதுக்கப்பட்ட பிரசாதத்தை சத்யாவதி உண்டு விட்டாள்; அதை தன் ஞானக் கண்ணால் பிருகு முனிவர் அறிந்து கொண்டார்; ஏனெனில், இவ்வுலகில் நிகழும் எச்செயலையும் நேரில் கண்டறியும் ஆற்றல் அவருக்கு இருந்தது||91||
எனவே, பிருகு முனிவர் உடனடியாகக் காதி மன்னனின் நாட்டிற்குப்வெளிப்புற ப்பட்டுச் சென்றார்; அங்குச் சென்று அவர் பின்வருமாறு கூறினார் ‘நான் உங்களிடம் ஒப்படைத்த பணியில் நீங்கள் அனைவரும் என்ன தவறு செய்து விட்டீர்கள்?; வேத யாகப் பிரசாதத்தை உண்ணும் முறையில் ஒரு தலை கீழ் மாற்றம் நிகழ்ந்து விட்டதால், உங்களுக்குப் பிறக்கப் போகும் புத்திரர்களின் இயல்புகளிலும் ஒரு தலை கீழ் மாற்றமே நிகழும்’||92||
பின்னர், தன் மருமகளான சத்யாவதியை நோக்கி அவர் பின்வருமாறு கூறினார்; ‘இப்போது உனக்குப் பிறக்கப் போகும் மகன், ஒரு வலிமை மிக்க போர்வீரனாகப் பிறப்பான்; அதே வேளையில், உன் தாயாருக்குப் பிறக்கப் போகும் மகன், பரமாத்மனை உணர்ந்த ஒரு பிராமண ஆசானைப் போலவே, மிகுந்த நற்பண்புகளும் புகழும் கொண்டவனாகத் திகழ்வான் ||93||
அந்த முனிவரின் சொற்களைக் கேட்ட சத்யாவதி, மிகுந்த மன வேதனை அடைந்தாள்; அவள் முனிவரிடம் பின்வருமாறு வேண்டிக் கொண்டாள்; தந்தையே நான் இப்போது ஒரு பிராமண ஆசானாகவும் முனிவராகவும் திகழும் ஒருவரின் மனைவியாக உள்ளேன்; எனவே, எனக்கு ஒரு போர் வீரனான மன்னன் போன்ற மகன் பிறக்கதிருக்க அருள் புரியுங்கள் ||94||
தந்தையே, நீங்கள் வேத சாஸ்திரங்களில் மிகச் சிறந்த நிபுணராகத் திகழ்கிறீர்கள்; உங்களைப் போல வேதங்களின் நுட்பங்களை அறிந்தவர் வேறு எவரும் இல்லை; எனவே, பரமாத்மனை உணர்ந்தவராகவும், பிற பிராமண ஆசான்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகவும் திகழும் ஒரு மகன் எனக்குப் பிறக்க அருள் புரியுங்கள்’||95||
பிருகு முனிவர் பதிலளித்தார் ‘அது இயலாத காரியம்’; மீண்டும் அவரது மருமகள் கண்ணீர் மல்க வேண்டினாள்; மீண்டும் அவள் கெஞ்சினாள் ‘தந்தையே, நான் ஒரு பிரம்ம ரிஷியான மகனைப் பெற்றெடுக்க எனக்கு அருளுங்கள் ||96||
பிருகு முனிவரின் மனம் இளகியது; அவர் கூறினார் ‘நான் இப்போது மந்திரங்களின் பலனை மாற்றி அமைப்பேன்; எனவே, நீ ஒரு பிரம்மரிஷியான மகனைப் பெற்றெடுத்தாலும், அவனது மகன் (உன் பேரன்) பிற்காலத்தில் ஒரு மாபெரும் ஷத்ரிய வீரனாகத் திகழ்வான்’||97||
சத்தியவாதி மேலும் வேண்டினாள் ‘தந்தையே , தங்கள் கொள்ளுப் பேரன் ஒரு வீரனாகவும், தங்கள் பேரன் ஒரு தவ சீலராகவும் அமைந்தால், அது எங்கள் குலத்திற்குப் பெருமை சேர்ப்பதாகவே அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் ||98||
‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறி அம்முனிவர் அங்கிருந்து விடை பெற்றார்; காதி மன்னன் தன் உள்ளத்தில் இவ்வாறு சிந்தித்தான் ‘என் பேரனாக ஒரு வீரனும், என் மகனாக ஒரு பிரம்ம ரிஷியும் பிறந்தால், என் புகழ் நிச்சயமாக எங்கும் பரவிப் பிரகாசிக்கும் ||99||
காலப்போக்கில், தாயும் மகளுமாகிய அவ்விருவரும் கருவுற்றனர்; உரிய காலங்களில் கர்ப்பத்திற்கான அறிகுறிகள் இருவருக்கும் தென்பட்டன; காதி மன்னனின் மனைவி அடிக்கடி பிரம்ம தத்துவத்தை உணர்த்தும் மந்திரச் செய்யுள்களை ஓதி வந்தாள்; இதனால் மன்னன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான் ||100||
உரிய மாதத்தில் ‘பும்சவன’ சடங்கு (கருவுற்ற காலத்தில் செய்யப்படும் சடங்கு) சிறப்பாக நடத்தப்பட்டது. பிரசவ காலம் நெருங்கியதும், முன்னரே கணிக்கப்பட்டு இருந்தபடியே அவ்விருவரும் தத்தமது மகன்களைப் பெற்றெடுத்தனர்||101||
அதன்பின் ஜாத கர்ம* சடங்கு நடத்தப்பட்டது; பல அந்தணர்களுக்குப் புத்தாடைகள் தானமாக வழங்கப்பட்டன; குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிட வல்லுநர்களான அந்தணர்கள், ‘இவன் பிற்காலத்தில் ஒரு மகரிஷியாகத் திகழ்வான்’என்று கூறினர்
{*இந்து மதத்தில் குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் முதல் சடங்கு ‘ஜாதகர்மா’ (Jatakarma) ஆகும். இது நமது வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 16 முக்கிய சம்ஸ்காரங்களில் நான்காவது சடங்காகும்; குழந்தையின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது }||102||
சத்யாவதியின் மகனான அக்குழந்தை, பிற்காலத்தில் ‘ஜமதக்னி’ என்னும் புனித மகரிஷியாகப் பெரும் புகழ் பெற்றார்; அறிவுக் கூர்மையும் மன ஒருமைப்பாடும் கொண்ட அவர், வெகு விரைவிலேயே அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுத் திகழ்ந்தார் ||103||
இவர் உண்மையில் சிவபெருமானின் மற்றொரு அவதாரமே ஆவார்; இவர் நம் இல்லத்திலேயே அவதரிக்கத் திருவுள்ளம் கொண்டுள்ளார்; இவர் இவ்வுலகில் தர்மத்தை நிலை நாட்டுவார்; அன்னை பராசக்தியின் திவ்ய பதியான சிவபெருமான் நம் இல்லத்தில் எழுந்தருளியுள்ளார் என்று அந்தணர்கள் போற்றிப் புகழ்ந்தனர்||104||
பக்திச் செழுமை மிக்க அன்னையான சத்தியாவதி, தன் மகனைக் கண்டதும் அளவற்ற பக்திப் பரவசத்தில் திளைத்தாள்; சிவபெருமான் நம் அனைவர் மீதும் கருணை கொண்டு, எதிர் காலத்தில் ஒரு தலை சிறந்த மகரிஷியாகத் திகழப் போகும் இக் குழந்தையின் வடிவில் நம் இல்லத்திற்கு எழுந்தருளியுள்ளார் போலும் என்று அவள் உள்ளம் நெகிழ்ந்தாள்||105||
இதற்கிடையில், அரசன் காதியின் மைந்தன், விஸ்வாமித்திர முனிவர் எனப் பெரும் புகழ் பெற்றார்; அவரும் அதீத புனிதத்துவம் வாய்ந்தவர்; மேலும், புனிதமான காயத்ரி மந்திரத்தை அவர் காயத்ரி தேவியிடம் இருந்து நேரடியாக தரிசித்துப் பெற்றார்||106||
ஆகையால், விஸ்வாமித்திர முனிவர் ஒரு ஷத்ரிய (வீரர்) குலத் தாய்க்கு பிறந்திருந்த போதிலும், வேத வேள்விப் பலன்களின் பரிமாற்றத்தால் ஏற்பட்ட விளைவின் காரணமாக, அவர் ஒரு பிராமணருக்குரிய நன்னடத்தைகளை நோக்கி இழுக்கப்பட்டார் ; மேலும், தானும் ஒரு பிராமணராக உயரும் பொருட்டுத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார் ||107||
எனவே, தனக்கு அறிமுகமான அனைத்து முனிவர்களிடமும் அவர் சென்று ‘என்னை ஒரு பிராமணராக மாற்றியருளுங்கள்’ என்று வேண்டினார்; அதற்கு அம் முனிவர்கள், ‘இப்பணியை செய்வதற்குத் தகுதியுடைய முனிவர் ஒருவர் மட்டுமே உள்ளார்; வசிஷ்ட முனிவர் உங்களை ஒரு பிராமண ஆசானாக அங்கீகரித்து அறிவிப்பாரேயானால், நாங்களும் அனைவரும் அதை ஏற்றுக் கொள்வோம்’ என்று பதிலளித்தனர்||108||
அதன்படி, விஸ்வாமித்திர முனிவர் வசிஷ்ட முனிவரிடம் சென்று பணிவுடன் வேண்டினார். வசிஷ்டரோ, அறுபதாயிரம் ஆண்டுகள் கடுந் தவம் புரியுமாறு விஸ்வாமித்திரருக்கு அறிவுறுத்தினார். விஸ்வாமித்திரரும் அதை மனமுவந்து ஏற்றுச் செய்து முடித்து, ஒரு புகழ்பெற்ற பிராமண ஆசானாகத் திகழ்ந்தார். அனைவருக்கும் காயத்ரி மந்திரத்தை அருளியதற்காக, இவ்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது ||109||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பதினெட்டாவது (18) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 109
முதலாவது அத்தியாயம் முதல் பதினெட்டாவது (18) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
109 + 1839 = 1948
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -6, அத்தியாயம் -18 முடிவடைந்தது
அத்தியாயம் -19 தொடர்கின்றது