COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION
பகுதி 5
சமாதி நிலை

அத்தியாயம் 14
அஷ்டாங்க யோகத்தின் எட்டு (8) அங்கங்கள்;
அரசருக்கு அறிவுரை
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
மன்னன் அர்ஜுனன் ஸ்ரீமத் தத்தாத்ரேயரை வணங்கிய பின்னர் கூறினான் ‘தாங்கள் வேதக் கோட்பாடுகளை விளக்கியுதைக் கேட்ட பிறகு, என் மனம் பேரானந்தத்தில் மிதக்கிறது; தயவு செய்து எனக்கு யோக மார்க்கத்தை பற்றி எடுத்துரைப்பீர்களா? ||1||
ஸ்ரீமத் தத்தாத்ரேயர் பதிலளித்தார் ‘ஓ அர்ஜுனா, இப்போது கவனத்துடன் நான் கூறுவதைக் கேள்; அலைபாயும் மனதை நிலை நிறுத்த உதவும், எட்டு அங்கங்களைக் கொண்ட யோகப் பாதையை நான் உனக்கு விவரிக்கிறேன் ||2||
நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிமுறையான எட்டு அங்கங்களின் பெயர்கள் இவையே: இயமம் (Yama), நியமம் (Niyama), ஆசனம் (Aasan), பிராணாயாமம் (Pranayama), பிரத்யாஹாரம் (Pratyahara), தாரணை (Dharana), தியானம் (Dhyana) மற்றும் சமாதி (Samadhi); இவைகளே யோகத்தின் எட்டுப் படிகளாகும்
{விளக்கம்: – இச்சொற்கள் ஒவ்வொன்றின் பொருளும் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படுகின்றன} ||3||
சில அறிஞர்கள், யோகத்தின் முதல் இரண்டு அங்கங்களான இயமம் மற்றும் நியமம் ஆகியவை இயல்பானவை என்றும், பொருத்தமான முறையில் அமைந்துள்ளவை என்றும் கருதுகின்றனர்; எனவே அவர்கள் யோகத்திற்கு எட்டு அல்ல ஆறு படிகள் மட்டுமே உண்டு என்று கூறுகின்றனர்; வேறு சிலரோ, யோகத்தின் உச்ச நிலையான சமாதி என்பது ஒரு இலக்கு (அதாவது பரிசு) மட்டுமே என்று மட்டுமே கருதி; யோக நிலை ஏழு படிகள் கொண்டது என்று வாதிடுகின்றனர்||4||
இன்னும் சில அறிஞர்கள், சமாதி நிலை அதன் தன்மையை பொறுத்து ‘பீஜத்துடன்* கூடியது என்றும், ‘பீஜமற்றது’** என்றும் இரு வகையாகப் பிரிக்கின்றனர். அதன்படி, பீஜத்துடன் கூடிய சமாதி நிலையை ஏழாவது படியின் ஒரு பகுதியாகவும், பீஜமற்ற சமாதி நிலையை யோகத்தின் இறுதிப் பரிசாகவும் (இலக்காகவும்) அவர்கள் கருதுகின்றனர்; ஆகையால், இவர்களும் யோகப் பாதை எட்டு அங்கங்களைக் கொண்டது என்றே போற்றுகின்றனர்.
{*பீஜம்’ என்றால் விதை (Seed). இது ஒரு ஆதரவு அல்லது பொருளை (Object) மையமாகக் கொண்ட சமாதி; இதில் தியானம் செய்யும் மனம் ஒரு குறிப்பிட்ட மந்திரம், உருவம், மூச்சு, அல்லது ஒரு தத்துவத்தின் மீது நிலை பெற்று, அந்தப் பொருளுடன் ஒன்றிணைந்து நிற்கிறது;
** நிர் பீஜம் அதாவது விதை அற்றது (Seedless), எந்த ஆதரவும் (Support) இல்லாத உச்ச கட்ட நிலை; தியானத்தின் பொருளும் மறைந்து, யோகியின் மனம் தூய உணர்வுடன் (Pure Consciousness) ஒன்றிணைந்து, அறியாமை மற்றும் மனப் பதிவுகள் முற்றிலும் நீங்கிய நிலை} ||5||
யோகத்தின் ‘இயமம்’ எனும் முதல் அங்கத்தில் ஐந்து உட் பிரிவுகள் உள்ளன; வேறு சில அறிஞர்கள் இதில் பத்து உட் பிரிவுகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவற்றுள் முதலாவது பிரிவு ‘அகிம்சை’ (Non-violence) ஆகும்; இது அனைத்து உயிரினங்களுக்கும் எவ்விதத் தீங்கும் இழைக்காமல் இருப்பதை அடிப்படையாகக் கொண்டது; இரண்டாவது பிரிவு ‘சத்தியம்’ (Truthfulness) என்பது ஆகும்; இது உடல், மனம் மற்றும் வாக்கு ஆகியவற்றில் உண்மையை நிலை நிறுத்துவதைக் குறிக்கிறது; ஓ அர்ஜுனா, உண்மையை மென்மையாகவும், இனிமையாகவும், கேட்பதற்கு ஏற்ற வகையிலும் எடுத்துரைப்பதே இந்த (சத்தியம்) பிரிவில் அடங்கும்||6||
மூன்றாவது பிரிவு ‘அஸ்தேயம்’ (கள்ளாமை); பிறர் பொருளைக் களவாடாமல் இருப்பது என்பதே இதன் மிகக் கடுமையான விதியாகும்(திருடாமை); நான்காவது பிரிவு ‘கருணை’; பிறரின் துன்பத்தை உணர்வதும், அதைத் தீர்க்க முன் வருவதும் இதில் அடங்கியுள்ளன||7||
பிரம்மச்சரியம் என்பது புலன்களைக் கட்டுப்படுத்தி, தேவையற்ற சிற்றின்பங்களில் ஈடுபடாமல் இருப்பது; இது இயமத்தின் ஐந்தாவது பிரிவாகும்; இயமத்தின் ஆறாவது துணை அங்கமாகிய முதல் படி நிலை ‘எளிமை’ ஆகும்; இது ஒருவரின் அனைத்துச் செயல்பாடுகளிலும் நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்வதைக் குறிக்கிறது ||8||
ஏழாவது பிரிவு ‘பொறுத்தல்’ (மன்னிப்பு); துன்பங்களையும் இடர்களையும் தாங்கிக் கொள்ளும் போது மன உறுதியுடன் நிற்றல் இது குறிக்கிறது; எட்டாவது பிரிவு ‘சகிப்புத்தன்மை’; இழப்புகள் ஏற்படும்போது கூட, அதனால் பாதிக்கப்படாமல், மன அமைதி குலையாமல் இருப்பது இதில் அடங்கியுள்ளது||9||
ஒன்பதாவது பிரிவு அங்கத்தின் முதல் படி நிலை மிதாகாரம் எனும் உணவுப் பழக்கம் ஆகும்; வயிற்றை நான்கு பாகங்களாகப் பிரித்து, அதில் இரண்டு பாகங்களை உணவாலும், மூன்றாவது பாகத்தை நீராலும் நிரப்பிக் கொள்ள வேண்டும்; நான்காவது பாகத்தை, உடலின் உள்ளுறுப்புகளுக்குள் காற்று தடையின்றிச் செல்லுமாறு காலியாக விட வேண்டும் ||10||
அடுத்த அங்கம் ‘தூய்மை’ ஆகும். குறிப்பாக கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, கிடைக்கும் வசதிக்கேற்ப சோப்பு, மண், காகிதம் அல்லது நீரைக் கொண்டு உடலைச் சுத்தம் செய்து கொண்டாலே வெளிப்புறத் தூய்மை கிடைக்கும்; தியானப் பயிற்சிகளைத் தவறாமல் கடைப் பிடித்தால் ‘உள்ளத் தூய்மை’ கிடைக்கும் ||11||
‘இவையே ‘இயமத்தின்’ பத்து அங்கங்களாகும். இனி, அடுத்த படி நிலையான ‘நியமத்தின்’ பத்து அங்கங்களைக் கேள்; இவை ‘ரிஷி ஸ்தோமா’ என்னும் வேத முனிவரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
{*ரிஷி ஸ்தோமா (Rishi Stoma – Sistema) என்பது பண்டைய வேத கலாச்சாரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான ஆன்மீக மற்றும் சடங்கு சார்ந்த சொல்லாடலாகும்; சமஸ்கிருதத்தில் ‘ரிஷி’ என்றால் முனிவர் அல்லது மந்திரங்களை உணர்ந்த ஞானி என்றும், ‘ஸ்தோமா’ என்றால் துதிப் பாடல் அல்லது யாகங்களில் பாடப்படும் இசை வடிவம் என்றும் பொருள்படும். } ||12||
அமாவாசைக்குப் அடுத்த நாள் முதல் ஒரு கவளம் உணவை உண்டு விட்டு, பௌர்ணமி வரை படிப்படியாக ஒவ்வொரு நாளும் இன்னொரு கவளம் என்று உணவின் அளவை பதினைந்து கவளங்களாக உயர்த்திய பின்னர் ஒரு மாத காலத்திற்குள் அதே வரிசையில் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து உண்ணும் சந்திராயண விரதம்* போன்ற தவங்களை மேற்கொள்ளுதல் ஒரு அங்கமாகும். விதிப்படி தனக்குக் கிடைத்த எப்பொருளைக் கொண்டும் மனநிறைவுடன் வாழுதல் திருப்தி எனப்படும் இரண்டாவது அங்கமாகும்.
{*சந்திராயண விரதம் என்பது இந்து மதத்தில் பாவங்களை போக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் மிகச் சிறந்த மற்றும் கடினமான ஒரு மாத கால விரதமாகும். இது சந்திரனின் சுழற்சியை (வளர்பிறை மற்றும் தேய்பிறை) அடிப்படையாகக் கொண்டு கடைப் பிடிக்கப்படுகிறது}||13||
வேத சாஸ்திரங்கள் மீது நம்பிக்கை கொள்ளுதல் ‘சிரத்தை’ (நம்பிக்கை) என்னும் அங்கமாகும்; இது வேத நூல்களைத் தொடர்ந்து பயில்வதையும், அறிவார்ந்த பெரியோர்கள் நிகழ்த்தும் சமயச் சொற்பொழிவுகளைக் முழுமையான மன நிலையுடன் இருந்தவாறு கேட்பது ஆகும் ||14||
தகுதியுடையோருக்குப் பொருத்தமான முறையில் தானம் அல்லது உதவி செய்தல் ‘தாராள குணம்’ எனப்படும். ஒருவன் தான் யார் என்பதையும், தன்னிடம் உள்ள அனைத்தையும் தெய்வத்திற்கே அர்ப்பணித்தல் ‘வழிபாடு’ என்று போற்றப்படுகிறது’ ||15||
அடுத்த பகுதி நம்பிக்கை என்பதாகும்; அது வேத நியமங்கள் கூறும் செயல்களில் ஈடுபடுவதில் உள்ள ஆர்வத்தைக் குறிக்கிறது, எந்தவொரு தீய செயலையும் செய்ய மனமில்லாமல் தர்ம சங்கடத்தில் ஆழும் நிலையையே யோக வழி முறையில் விருப்பமின்மை என்று அழைக்கிறார்கள்||16||
மாதத்தின் தேய்பிறை மற்றும் வளர் பிறையின் 11 ஆம் நாட்களில் விரதம் இருப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொள்வதும், ஒருவரின் குரு அறிவுறுத்தியபடி அவர் வழங்கிய மந்திரத்தை மீண்டும் மீண்டும் கூறுவது பாராயணம், ஜபம் என்று அழைக்கப்படுகிறது||17||
இதில், வாய் விட்டு, சத்தமாக, மற்றவர்கள் கேட்கும்படி ஜபிப்பது தாழ்ந்த வகையைச் சேர்ந்தது; இதை வாசிக ஜபம் என்பார்கள்; உதடுகள் அசைந்து, தனக்கு மட்டுமே கேட்கும் வகையில் மெதுவாக ஜபிப்பது நடுத்தர வகையைச் சேர்ந்தது; இதை உமாம்சு ஜபம் என்பார்கள்; உதடு, நாக்கு அசையாமல், மனதிற்குள் மட்டும் ஜபிப்பது மிகச் சிறந்தது; இதை மானஸ ஜபம் என்பார்கள்; இதுவே வேத நூல்களில் கூறப்பட்டு உள்ள ஜபத்தின் மும்முனை வழியாகும்’ ||18||
‘மேற்கண்டவை, ஸ்தோம முனிவரால் விவரிக்கப்பட்ட யோகாவின் முதல் இரண்டு படிகளான இயமம்* மற்றும் நியமத்தின் பத்து உட் பிரிவுகள் ஆகும்; யோக-சூத்திர நூலின் அதிபதியாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பதஞ்சலி முனிவர், அதே இரண்டு படிகளை ஐந்து உட்பிரிவுகளுடன் பரிந்துரைக்கிறார்.
{*இயமம் என்பதில் அகிம்சை (non-violence), திருடாமை (not stealing), பதுக்காமை (non- hoarding), மையப்படுத்தப்பட்ட பிரம்மச்சரியம் (Celibacy) மற்றும் வாய்மை (Honesty) ஆகியவை அடங்கும்; நியமத்தில் தூய்மை (righteousness) மற்றும் பரிவு (Compassion), பொறுமை (Patience), சுய ஆய்வு (Self-analysis), உள்ளிருக்கும் தன்னைப் பற்றிச் சிந்தித்தல் (Self-realization) மற்றும் தெய்வீக பக்தி (Devotion/Piety) ஆகியவை அடங்கும்} ||19||
மனிதர்கள் அல்லது சாதுவான பசுக்கள் போன்ற நிரபராதிகளுக்கு தீங்கு விளைவிப்பது மிகக் கடுமையான பாவமாகக் கருதப்படுகிறது; ஒருவர் மற்ற உயிரினங்களுக்குத் தீங்கு செய்தால் அதற்கு வெவ்வேறு விளைவுகள் உண்டு; வன் முறைக்கான விளைவு அல்லது கர்ம வினை, அது எந்த உயிரினத்திற்கு இழைக்கப்பட்டது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கருதப்படுகிறது; ஆனால் விலங்கு வதை போன்றவை பெரும்பாலும் கர்ம வினைச் சுழற்சியில் தாழ்வான – எதிர்மறை வினையைத் தரும் என்று நம்பப்படுகிறது||20||
புனிதத் தலங்களில் அமைதியைக் காக்கவும், ஆன்மீக ஆற்றலை நிலை நிறுத்தவும் வன்முறை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்; வழிபாடுகள் அல்லது நினைவுச் சடங்குகளை மேற் கொள்ளும் போதும், முன்னோர்களுக்கான சடங்குகள் செய்யும் போதும், வழிபாட்டு நேரங்களிலும் வன்முறையை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது என்ற நெறி முறைகள் உள்ளன||21||
எந்த ஒரு உயிரினங்களுக்கோ, எந்த ஒரு இடத்திலோ அல்லது எந்த காலத்திலும் வன்முறையை கடை பிடிக்காமல் இருக்கும் முறையிலான ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பது மகா விரதம் அல்லது மாபெரும் சபதமாகக் கருதப்படுகிறது ||22||
இயமம் மற்றும் நியமம் ஆகிய பிரிவுகளில் கூறப்பட்டுள்ள அப்படிப்பட்ட அனைத்து ஒழுக்க நியமங்களையும் எந்த ஒருவன் கடைப்பிடித்து வாழ்ந்து வருவானோ அவன் மெத்த பாராட்டிற்கும் உகந்தவன் ஆகின்றான் என்பதாக கருதப்படுகிறது; அதுவே மிக உயர்ந்த தர்மத்தை அடைவதற்கான முதல் படியாகும்; அப்படிப்பட்ட வாழ்க்கையில் இருப்பது அனைத்துச் செயல்களிலும் வெற்றியை உறுதி செய்கிறது ||23||
வன்முறையின்மையை கடைப் பிடிப்பதில் ஒருவர் வெற்றி பெற்றதற்கான அடையாளம் என்னவென்றால், எந்த ஒரு உயிரினமும் அத்தகையோரின் அருகில் பயமின்றி உலாவிக் கொண்டு இருப்பதைக் காண முடியும்; அத்தகைய சாதகர்களின் மனம் ஒரு போதும் பகைமைக்கு இடமளிப்பதில்லை; தம்மோடு நட்புணர்வுடன் இல்லாதவர்களையும் கூட அவர்கள் நட்புணர்வோடு நடத்துகிறார்கள் ||24||
இதனால்தான், முனிவர்கள் மற்றும் ஞானிகளின் ஆசிரமங்களில் பூனைகளும் எலிகளும் ஒன்றாக விளையாடுவதை காண முடிகிறது; அங்கெல்லாம் இயல்பாகவே வேட்டையாடும் குணம் கொண்ட விலங்குகளும் கூட தமது வன் முறையைக் கைவிட்டு விட்டு உலவும் ; மேலும், ஒரு பசுவானது புலியின் அருகில் இருக்கும்போதும் பய உணர்ச்சி இல்லாமல் சாதாரண நிலையில் நடமாடிக் கொண்டு இருக்கும் ||25||
பொய் பேசாமல் இருப்பது, உண்மையையே பேசிக் கொண்டு இருப்பது போன்றவை ஒருவர் தமக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை ஜெபிப்பதின் முழுப் பலனையும் எளிதாகப் பெற உதவுகிறது; உறுதியான பிரம்மச்சரியம் உடல் வலிமையை அதிகரிக்கிறது; திருடாமை என்பது அளவற்ற செல்வத்தை எளிதாகப் பெற உதவுகிறது; தேவைக்கு மேல் பொருட்களைக் சேர்த்து வைக்காத மனநிலை தனது முற்பிறவிகளைப் பற்றி அறிந்து கொள்வதை எளிதாக்குகிறது ||26||
உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வது உடலின் மீதான பற்றின்மையை ஏற்படுத்தும் ; உடலைத் தூய்மைப் படுத்தும்போது இந்த உடல் அழியக் கூடியது மற்றும் அசுத்தங்களை வெளியேற்றக் கூடியது என்ற உண்மையை உணர்கிறோம்; மனம், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் தூய்மையாக (அகத் தூய்மை) இருக்கும்போது, ஐம்புலன்களும் நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன; அகத் தூய்மை (மனம்) மற்றும் வெளிப்புற த் தூய்மை (உடல்) ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம், ஒருவன் தன் உள்ளே ஒளிரும் ஆத்மா வை தரிசிப்பதற்கான தகுதியைப் பெறுகிறான் ||27||
மனநிறைவு (திருப்தி) அளவற்ற ஆனந்தத்தை அனுபவிக்க வழி வகுக்கிறது; விரதங்கள் உடல் மற்றும் ஐம்புலன்களின் தூய்மைக்கு வழி வகுக்கின்றது ; குருவின் அறிவுரைப்படி மந்திரங்களை ஜபிப்பது, தான் தேடும் தெய்வத்தின் இருப்பை உணரச் செய்கிறது; முழுமையான பக்தி என்பது ஆழ்ந்த தியானத்தின் மூலம் பெறும் சமாதி நிலையை எளிதில் பெற உதவுகிறது’||28||
ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார் ‘இமயம் மற்றும் நியமம் ஆகிய பகுதிகளை விரிவாக விவரித்த பிறகு, இப்போது நான் கூற உள்ள மூன்றாவது அங்கமான ஆசன நிலைகளைக் கவனி; இவற்றுள் முதலாவது ‘சுவத்திகாசனம் (Swastikas Ana)’* என்று அழைக்கப்படுகிறது; இதில் வலது காலை மடக்கி இடது தொடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பாதத்தை செருகி வைத்துக் கொண்ட பின் இடது காலை மடக்கி வலது முழங்காலுக்கும் தொடைக்கும் இடையில் பாதத்தை வைத்துக் கொண்டு முதுகுத் தண்டு, கழுத்து மற்றும் தலையை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். எளிமையாகவும் நேராகவும் அமரும் அந்த நிலை சுவத்திகாசனம் ஆகும்.
(*சுவத்திகாசனம் (Swastikas Ana) என்பது சமஸ்கிருதத்தில் ‘மங்களகரமான நிலை’ என்று பொருள்படும். தியானம் மற்றும் பிராணாயாமம் செய்வதற்கு மிகச் சிறந்த, எளிமையான அமர்ந்த நிலை யோகாசனமாகும்||29||
கோமுகாசனம் (Gymkhana)* என்பது பசுவின் முக அமைப்பை ஒத்திருக்கும் ஒரு அமர்ந்த நிலை யோகாசனம் ஆகும்; ஒருவர் தனது முழங் கால்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக வைத்து, ஒரு பசுவின் முகத்தைப் போன்ற வடிவத்தை உருவாக்கும்போது அது ‘பசு முக நிலை’ என்று அழைக்கப்படுகிறது; வலது காலை இடது தொடைக்குக் கீழ் மடிக்கவும். அதைப்போல் இடது காலை வலது தொடைக்குக் கீழ் மடக்கவும். வலது கையால் இடது காலையும் இடது கையால் வலது கையையும் பின்புறமாக பற்றிக் கொள்ளவும்; இப்படி அமர்ந்து கொண்டு இருப்பதே ‘கோமுகாசனம்’ எனும் ஆசன முறை ஆகும்.
{*கோமுகாசனம் (Gymkhana) என்பது அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஒரு சிறந்த யோகாசனம், இது பசுவின் முகத்தைப் போன்ற வடிவத்தை உருவாக்குவதால் இப் பெயர் பெற்றது. இது மார்பு, தோள்கள், கைகள் மற்றும் இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்தி, நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது }||30||
‘தாமரை ஆசனம்’ அல்லது ‘பத்மாசனம்’* என்பது, வலது பாதத்தை இடது தொடையின் மீதும், இடது பாதத்தை வலது தொடையின் மீதும் வைத்து அமரும் நிலையாகும். அதன்பிறகு, கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று, வலது உள்ளங் கையால் வலது பாதத்தையும், இடது உள்ளங் கையால் இடது பாதத்தையும் பற்றிக்கொண்டு, நேராக அமையும் அந்த ஆசன நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
{*பத்மாசனம் (Lotus Pose) என்பது தியானம் மற்றும் பிராணாயாமம் செய்வதற்கு ஏற்ற மிகச் சிறந்த யோகாசனம் ஆகும்; இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, இடுப்பு மற்றும் முழங் கால்களை வலுப்படுத்துகிறது.} ||31||
இப்போது ‘சிம்மாசனம்’* அல்லது ‘சிங்க ஆசனம்’ என்பது விவரிக்கப்படுகிறது: இரு முழங் கால்களையும் முன்புறமாகத் தரையில் பதிய வைத்து அமர்ந்த பின், இரு பாதங்களின் அடிப் பகுதிகளின் மீது தனது பிட்டத்தை வைத்துக் கொண்டு அமர்ந்த பின் கையின் விரல்களை முழங் கால்களின் மீது வைத்து, வாயை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு, மூக்கின் நுனிப் பகுதியின் மீது கவனத்தைச் செலுத்தும் போது, இந்த ஆசன நிலை எய்தப்படுகிறது.
{*இது குரல்வளை, தொண்டை மற்றும் முக தசைகளை வலுப்படுத்துவதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது} ||32||
ஒருவர் தனது இடது பாதத்தை விதைப்பைக்கு அடியிலும், வலது பாதத்தை இனப் பெருக்க உறுப்புக்கு மேலாகவும் வைத்து, கழுத்து, மார்பு மற்றும் முதுகு ஆகியவற்றை நேராக நிமிர்த்தி அமர்ந்து, அதன்பிறகு தனது தலையை முன் புறமாக சாய்த்து, தாடைப் பகுதி மார்பைத் தொடுமாறு செய்யும் நிலை ||33||
அதன்பிறகு, மூக்கின் நுனிப் பகுதியின் மீது ஒருவர் தனது கவனத்தைச் செலுத்தும் போது, அவ்வாறு அமையும் ஆசன நிலை ‘சித்தாசனம்*’ அல்லது சித்தர்களின் ஆசனம் என்று அழைக்கப்படுகிறது; இந்த நிலையில், உடலின் மூன்று** முக்கிய மையங்களான கீழ், நடு மற்றும் மேல் ஆகிய பகுதிகளை ஒருவர் ஒரே நிலையில் நிலை நிறுத்திப் பிடித்துக் கொள்ளும் போது, சமாதி நிலையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது.
{*சித்தாசனம் (Siddh asana) என்பது தியானத்திற்கும் பிராணாயாமத்திற்கும் உகந்த, சித்தர்கள் போற்றும் மிக முக்கியமான அமர்வு யோகாசனமாகும். இது முதுகுத் தண்டை நேராக வைத்து, 72,000 நாடி நரம்புகளை தூய்மைப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி, ஆற்றலை (Prana) கீழ்நிலை சக்கரங்களிலிருந்து மேல்நோக்கி செலுத்த உதவுகிறது;
**மலத் துவாரத் தசைகளை உள்ளிழுப்பதன் மூலம் உடலின் கீழ் பகுதியை இறுக்கலாம்; வயிற்றை உள்ளிழுத்து முதுகெலும்பை தொடுமாறு செய்வதன் மூலம் நடுப் பகுதியை இறுக்கலாம்; தாடையை மார்போடு அழுத்தி வைப்பதன் மூலம் மேல் உடல் பகுதியை இறுக்கலாம் — இவையே மூன்று உடல் இறுக்கங்கள் (பந்தங்கள்) ஆகும்} ||34||
அடுத்து ‘மயூராசனம்’* (மயில் ஆசனம்) என்பது ஆகும்; முழங்காலிட்டு அமர்ந்து, உள்ளங் கைகளைத் தரையில் ஊன்றி வைக்க வேண்டும்; கை விரல்கள் கால் பகுதியை நோக்கி இருக்க வேண்டும்; முழங் கைகளை மடக்கி, தொப்பிளுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் வைக்கவும்; உடலை முன்னோக்கிச் சாய்த்து, கால்களைப் பின்னோக்கி நேராக நீட்டவும்; மெதுவாகக் கால்களைத் தரையிலிருந்து உயர்த்தி சமநிலைப்படுத்தவும்.
{* மயூராசனம் (Peacock Pose) என்பது உடலின் சமநிலையை மேம்படுத்தும் ஒரு மேம்பட்ட யோகாசனமாகும். இது வயிற்று உறுப்புகளைத் தூண்டி, செரிமானத்தை மேம்படுத்தி, கைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளை வலுப்படுத்துகிறது }||35||
இரு பாதங்களின் அடிப் பகுதிகளையும் கைகளின் உதவியால் ஒன்றோடொன்று இணைத்து, அவ்வாறு இணைக்கப்பட்ட பாதங்களை மலத் துவாரத்திற்கும் இனப்பெருக்க உறுப்பிற்கும் இடைப்பட்ட நடுப் பகுதியில் தாங்கி வைத்து, கண்களை மூக்கின் நுனி மீது ஒருமுகப்படுத்தி அமரும் நிலையே, முனிவர்களால் ‘பத்ராசனம்*’ (நன்மை பயக்கும் ஆசனம்) என்று போற்றப்படுகிறது.
{* இது இடுப்பு, உள் தொடை மற்றும் கால் பகுதிகளை வலுப்படுத்துவதோடு, கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படவும், சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது} ||36||
ஒரு விரிப்பில் மல்லாக்க படுக்கவும்; கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும்; கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும்; உள்ளங் கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும்; வாயை லேசாக திறக்கவும்; மூச்சுக் காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும்; இந்த ஆசன நிலையில் இருக்கும்போது மூச்சுக் காற்று மந்தமடையும், மன இயக்கங்கள் நிறுத்தப்படும்; ஒருவர் இவற்றைத் தொடர்ந்து பயின்று, சோர்வு குறைவதை உணர்கிறார் என்றால், அது ஆசனங்களை அமைத்துக் கொள்ளும் மூன்றாம் படியில் அடைந்த வெற்றியின் அடையாளமாகும் ||37||
எங்கு எந்த விதமான சச்சரவுகள் இல்லையோ, எங்கு பிறர் பேசும் ஒரு வார்த்தை கூடக் காதில் விழாதோ, எங்கு ஏகாந்தமான, தெய்வீக நிலையும் இணைந்து அமைந்திருக்குமோ, எங்கு அப்படியே அமர்ந்திருந்தாலே உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து விடும்||38||
அத்தகைய ஓர் இடத்தில், ஒருவர் ஒரு சிறிய குடிலை அமைத்துக் கொள்ள வேண்டும்; அதற்கு ஒரு சிறிய நுழை வாயில் மட்டுமே இருக்க வேண்டும்; உள்ளிருந்து பார்க்கும்போது வேறு எந்தத் திறப்புகளோ அல்லது துளைகளோ இருக்கக்கூடாது; அக் குடிலைச் சாணம் போன்றவற்றால் மெழுகிப் புனிதப் படுத்திக் கொள்ள வேண்டும்||39||
தோள் பட்டை முதல் விரல் நுனி வரையிலான ‘நான்கு கை’ அளவுள்ள பரப்பளவில், அதிக வெப்பமோ அல்லது கூர்மையான கற்களோ இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்; அத்தகைய ஓர் அமைதியான இடத்தில், தன் குருமார்களுக்கு தக்க மரியாதைகளை உரிய வந்தனங்களை செலுத்திய பிறகு, எவ்விதக் கவலையுமின்றி அமர்ந்து கொண்டு, இந்த ஆசனங்களைப் பயில வேண்டும்||40||
ஆசனங்களை செய்யும் இடத்தை பொறுத்தவரை, அமர உள்ள இடத்தின் அடிப் பகுதியில் காய்ந்த தர்ப்பைப் புற்களை பரப்பி வைக்க வேண்டும்; அதன் மேல், பரம்பரை வழியாக வந்த மான் தோலை* விரித்து வைக்க வேண்டும்; அதன் மீது ஒரு மெல்லிய துணியைப் போட்டு மூடிய பிறகு, யோக ஆசனங்களைப் பயில்வதற்குரிய சடங்குகளை முடித்து விட்டு, அந்த ஆசனத்தில் அமர வேண்டும்.
{*வேட்டையாடுதலும் விலங்குகளைக் கொல்வதும் குற்றமாகப் கருதப்படும் இக் காலத்தில், மான் தோலுக்குப் பதிலாக, ஒரு கனமான போர்வையை விரித்து, அதன் மேல் ஒரு மெல்லிய துணியை விரித்து அமர்ந்தாலே நமது நோக்கத்திற்குப் போதுமானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது} ||41||
‘உடல், கழுத்து மற்றும் முதுகு ஆகியவற்றை நேர் நிலையில் (செங்குத்தாக) வைத்துக்கொண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, பார்வையை இங்குமங்கும் அலைய விடாமல், மூக்கின் நுனிப் பகுதியிலேயே பார்த்தவாறு இருக்க பழக வேண்டும்||42||
அனைத்துக் கவலைகளையும் முற்றிலுமாக ஒதுக்கி வைத்து விட்டு, பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆன்மீகப் பாதையில் மேலும் முன்னேறிச் செல்வோம் என்ற உறுதியுடனும், அசைக்க முடியாத மனவுறுதியுடனும், ‘பிராணாயாமம்’* எனும் நான்காம் படியைத் தொடங்க வேண்டும்.
{* பிராணாயாமம் என்பது உடலின் உயிர் சக்தியை (பிராணன்) சீரமைத்து, மூச்சை முறைப்படுத்தும் ஒரு உன்னதமான யோகப் பயிற்சியாகும்; ‘பிராணன்’ என்றால் உயிர் சக்தி என்றும், ‘அயாமா’ என்றால் அதனை நீட்டித்தல் அல்லது கட்டுப்படுத்துதல் என்றும் பொருள்படும். பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தில் இது நான்காவது அங்கமாக விளங்குகிறது }||43||
மனதின் அலை பாயும் தன்மையானது, மூச்சின் சீரற்ற மூச்சு ஓட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையது; இது இருபுறமும் பொருந்தும்—அதாவது, மூச்சுக் காற்று சீரற்று வேகமாக இயங்கும்போது, மனமும் அதற்கேற்ப வேகமாக அலைபாயத் தொடங்குகிறது||44||
ஆகையால், மூச்சு விடுதல் அல்லது மனம் ஆகிய இரண்டில், எதையாவது ஒன்றை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடிந்தால் போதும், மனமும் சுவாசமும் இரண்டும் சேர்ந்து அடங்கி, அத்வைத சமாதி நிலையை அனுபவிக்க வழி வகுத்து விடும்||45||
இந்த சுவாசப் பயிற்சிகளை நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்; அதன் மூலம் ஒருவர் ஸ்வாசக் கட்டுப்பாட்டில் (மூச்சு விடுதலில் கட்டுப்பாடு) வெற்றி பெற்று விடலாம்; மேலும் உள்ளே செல்லும் மூச்சையும், வெளியில் விடும் மூச்சையும் விருப்பப்படி நிறுத்தி வைக்கவும் முடியும்||46||
ஸ்வாசக் கட்டுப்பாட்டில் (மூச்சு விடுதலில் கட்டுப்பாடு) வெற்றி பெற்று விடும்போது, மனதையும் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு விட முடியும்; காரணம் இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஒன்றிணைகின்றன என்ற உடல் கூற்றை புரிந்து கொள்ள வேண்டும்||47||
உடலின் ஒன்பது துவாரங்களான இரு கண்கள், இரு காதுகள், இரு நாசிகள், வாய் மற்றும் கீழ் துவாரங்கள் அனைத்தின் செயல்களையும் ஒருவர் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு விட முடிந்தால் அவரால் ஸ்வாசத்தையும் வெல்ல முடியும்; ஆனாலும் பற்றின்றி இருக்கும் நிலையில் உறுதியாக இருக்காதவரை அலைபாயும் உணர்வை வெல்ல முடியாது||48||
மனம் அமைதியற்றது என்று அறியப்படுகிறது; புலன்கள் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப மனதை அலைபாய வைத்து அவற்றின் இசைக்கு ஏற்ப மனதை ஆட வைக்கின்றன; புலன்களின் ஆதிக்கத்திற்கு அடிமையாகி விடுவதினால், அந்த ஆத்மாக்களை எண்ணற்ற பிறவிகள் எடுக்க வைத்து விடுகின்றன; இதன் காரணமாகவே மன ஆற்றல்களை வெல்வது என்பது சவாலானது||49||
ஆகையால், பிராணயாமத்தின் வழி முறையில் ஸ்வாசத்தைக் கட்டுப் படுத்தும்போது , அமைதியற்ற மனதையும் அடக்கி, கட்டுப்படுத்தி வைக்க முடிகின்றது; அதன் பின்னர் அந்த புலன்களின் அதிபதி தேவதைகளை வணங்கி துதிப்பதின் மூலம் ஒருவரது மனதை எளிதில் அவர்களால் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும்||50||
இடது நாசி வழியாகச் செல்லும் பிராண வாயு ‘இடா’ எனப்படும் சூட்சும நாடியுடன் தொடர்புடையது; சந்திரன் அதன் அதிபதி தெய்வம்; இது மன அமைதி, சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் ஓய்வு நேரங்களுக்கு உகந்தது||51||
வலது நாசி வழியாகப் பாயும் பிராண வாயு, பிங்கலா எனப்படும் சூட்சும நரம்புடன் தொடர்புடையது; சூரிய பகவான் அதன் அதிபதி தெய்வம், அது பாயும் போது மேற் கொள்ளப்படும் அனைத்து ஆக்ரோஷமான செயல்களும் வெற்றி பெறும் ||52||
இடது மற்றும் வலது நாசித் துவாரங்களுக்கு இடையில், சுஷும்னா எனப்படும் மற்றொரு நுட்பமான நரம்பு நாடி உள்ளது; அது தலையின் முன் உச்சியை அடைகிறது; அதன் வேர் குண்டலினி எனப்படும் சக்தியில் உள்ளது, அது முதுகெலும்பின் அடிப் பகுதியில் தன்னைச் சுற்றி மூன்றரை சுற்றுக்களாக சுருண்டு நிலை கொண்டுள்ளது ||53||
இந்தச் சுருள்களின் முன்பகுதி, அதாவது பாம்பின் தலைப் பகுதி, சுழுமுனையின் நுழை வாயிலை நேரடியாக மூடிக் கொண்டு, அது திறக்காத வண்ணம் தடுக்கிறது; இந்தச் சுருள்கள் சுழு முனை நாடியின் கீழ் வாயிலை (Brahma Dwaram) மூடி, அதன் மூலம் ஆற்றல் மேலேறுவதைத் தடுக்கின்றன; இதனால் எந்தவொரு பிராண வாயுவும் இந்தத் தனித்துவமான நாடிக்குள் நுழைய இயலாது; எனவே, அதன் மடிப்புகளை விடுவித்து, அதைத் தட்டி எழுப்புவதற்கு, யோக வழிமுறை மூலம் அந்நாடியை அசைக்கவோ அல்லது கிளறவோ வேண்டும் என்று கூறப்படுகிறது.
{இதன் தோற்றம் எப்படி இருக்கும் எனில் தன் சொந்த வாலை தானே விழுங்குவதைப் போன்றது} ||54||
முறையான பிராணாயாமம் மற்றும் தியானம் (Kundalini Yoga) மூலம் பயிற்சி செய்யப்படும்போது அது வெற்றிக்கு வழி வகுக்கிறது; இதை பகலிலோ இரவிலோ தொடங்கக் கூடாது; ஏனெனில் சாஸ்திரங்கள் இவ்விரு நேரங்களுக்கும் எதிராக வலியுறுத்தியுள்ளன’||55||
இதைப் புரிந்து கொள்வது கடினம், எனவே இதை எளிமையாக விளக்க வேண்டும் எனில், இடது நாசி செயல்படும்போது, அது சந்திரனின் கீழ் இருப்பதால், அந்த நிலை இரவாகக் கருதப்படுகிறது, அதேபோல் வலது நாசி செயல்படும்போது, அது பகலாக கருதப்படுகிறது ||56||
பிராண வாயுக்கள் இரண்டு வகைப் படும்; இடது நாசி வழியாகப் பாயும் பிராணவாயு அபான மூச்சு என்றும் வலது நாசி வழியாகப் பாயும் பிராணவாயு, பிராண மூச்சு எனவும் வகைப்படுத்தப்படுகின்றன; இடது மற்றும் வலது நாசிகளில் பாயும் மூச்சு, சமநிலை பெற்று ஒன்றாக இணைந்தால், அது சுஷும்னா நாடியை (முதுகெலும்பின் மைய நரம்பு) செயல்படுத்துகிறது, கிளர்ச்சியூட்டுகிறது, தட்டி (குண்டலினி சக்தி) எழுப்பப்பட்டு, பகல் மற்றும் இரவு, சூடு மற்றும் குளிர்ச்சி, விழிப்புணர்வு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டு நிலைகளையும் கடந்து, சமநிலையை (சுஷும்னா) அடைகின்றான் ||57||
பதினாறு மாத்திரை* அளவுகளில் காற்றை உள்ளிழுத்து, அறுபத்து நான்கு மாத்திரை* அளவுகளில் மூச்சை அடக்கி வைத்திருந்து, முப்பத்திரண்டு மாத்திரை* அளவுகளில் அடக்கிய மூச்சை வெளியிடுவது, அல்லது முறையே 1:4:2 என்ற விகிதத்தில் அவற்றை செய்வது போன்ற சுவாசப் பயிற்சிகள் உன்னதமானதாக கருதப்படுகின்றன
{*தமிழ் இலக்கணத்தில், ஒரு மாத்திரை என்பது ஒரு முறை கண் இமைக்கும் நேரம் அல்லது ஒரு முறை கை நொடிக்கும் நேரத்தைக் குறிக்கும்} ||58||
இடது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து உடனடியாக முகவாய் கட்டையை மார்போடு தொட வேண்டும்; அப்போது மூச்சு தன்னால் அடக்கப்படும்; சிறிது நேரத்திற்குப் பிறகு வலது நாசி வழியாக மூச்சை வெளி விடத் தொடங்க வேண்டும்||59||
வயிற்று இறுக்கத்தைப் பயன்படுத்தி, மெதுவாக மூச்சை வெளி விட அறிவுறுத்தப்படுகிறது. அதன்பிறகு, வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, முகவாய் கட்டையை மார்போடு தொட வேண்டும்; அப்போது மூச்சு தன்னால் அடக்கப்படும்; சிறிது நேரத்திற்குப் பிறகு இடது நாசி வழியாக மூச்சை வெளி விடத் தொடங்க வேண்டும்||60||
மூச்சை எந்த நாசி (மூக்கு) வழியே உள்ளே இழுக்கின்றோமோ, அதே நாசி வழியே காற்றை வெளியே விடக் கூடாது; இன்னொரு நாசி (மூக்கு) வழியேதான் வெளி விட வேண்டும்; இவ்வாறாக, ஸ்வாசப் பயிற்சிகளை விடியற் காலை, நண்பகல் மற்றும் அந்தி வேளைகளில், ஒரு நாளைக்கு மூன்று முறை, பக்தியுடன் கடைப்பிடிக்க வேண்டும்.
{அதாவது வலது பக்க மூக்கை மூடிக் கொண்டு இடது பக்க மூக்கு மூலம் காற்றை உள்ளே இழுக்க வேண்டும்; முடிந்த அளவு காற்றை உள்ளே இழுத்ததும், இடது பக்க மூக்கை மூடிக் கொண்டு வலது பக்க மூக்கு மூலம் காற்றை வெளியில் விட வேண்டும்; பின்னர் வலது பக்கம் இழுத்து, இடது பக்கம் விடுவது ஒரு சுழற்சி} ||61||
வலுவாக மூச்சை வெளி விடும் மற்றொரு முறையும் உள்ளது; இது முதல் படியாகக் மூச்சை இடது மூக்கு வழியே உள்ளே இழுத்த பின் வலது பக்க மூக்கின் மூலம், வயிற்றில் இருந்து அனைத்து காற்றையும் வெளியே விட்ட பின்னர், காற்று போன பலூன் போன்ற வயிற்றின் அந்த நிலையை சற்று நேரம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் ||62||
அதன் பிறகு ஒரு மூக்கு வழியே காற்றை மெதுவான உள்ளிழுத்து இன்னொரு மூக்கு வழியே காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்; இவ்வாறு, மேலே கூறிய இரண்டு ஸ்வாச முறைகளில் எந்த முறையை கையாள விரும்புகின்றோமோ அதில் ஏதேனும் ஒன்றை கடுமையாக பயிற்சி செய்து அதில் வெற்றி பெற வேண்டும்||63||
பிராணாயாமம் பயிற்சியில் 1:4:2 என்ற விகிதம் என்பது மூச்சை ஒழுங்குபடுத்தும் அடிப்படை மற்றும் நிலையான விகிதமாகும்; இந்த விகிதத்தை முறையாகப் பின்பற்றி, அதன் கால அளவை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் பிராண சக்தியை வெல்வது எளிதாகிறது இந்த விகிதத்தை முறையாகப் பின்பற்றி, உடல் பழகிய பிறகு, மெதுவாக கால அளவை 16:64:32 என்ற விகிதத்தில் அதிகரிக்க வேண்டும்||64||
உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் படிப்படியாகச் சம நிலைக்கு வந்ததும் சாதனாத்விகள் தங்கள் உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள்; அப்போது அவருக்குள் இருக்கும் ஆன்மீகத் தீ (உள் சக்தி) தூண்டப்பட்டு பிரகாசிக்கத் துவங்கும்||65||
சுவாசப் பயிற்சியின் ஆரம்ப நிலை உடல் முழுவதும் வியர்வை பெருகி நனைவதாகும்; மெல்ல மெல்ல பயிற்சியை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கையில் உடல் முழுவதும் லேசான நடுக்கம் ஏற்படும்போது அது சுவாசப் பயிற்சியின் இடைப்பட்ட (மத்திய) நிலையை அடைந்து விட்டதை எடுத்துக் காட்டும்||66||
சுவாசப் பயிற்சியின் மிக உயர்ந்த நிலையை உணர்த்தும் அறிகுறி என்னவென்றால், பிராண வாயுக்கள் மண்டையோட்டின் உச்சியில் அமைந்துள்ள ‘பிரம்மரந்திரம்’ (Bregma) என்ற பகுதியை சென்றடைவதாகும். இந்த நிலையை எட்டும்போது, யோகி ஆழ்ந்த சமாதி நிலை, பேரின்பம் (Bliss), மற்றும் பிரபஞ்ச உணர்வுடன் கலத்தல் (Universal consciousness) ஆகியவற்றை அனுபவிக்கிறார்||67||
ஐம்புலன்களையும் அவற்றின் இச்சைகளையும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால், முதுகெலும்பின் அடியில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்ப முடியாவிடில், உடலின் மையப்பகுதியில் ஓடும் சுஷும்னா எனும் நுண் நரம்பைத் தூண்ட முடியவில்லை என்றால், அனைத்துப் பயிற்சிகளையும் விடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்||68||
நாம் கஷ்டப்பட்டு செய்யும் அனைத்து பயிற்சிகளும் பயன் தரவில்லையே என்ற எண்ணம் மேலோங்கும் விரக்தி வரலாம் அல்லது நாம் செய்தது வெறும் கடின உழைப்பாகவே உள்ளது என்று தோன்றலாம்; ஆனால், நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒரே அறிகுறி, அந்த மைய நுண் நரம்பான ‘சுஷும்னா’வின் செயல்பாடுதான்; அந்த நரம்பு தூண்டப்படும்போது மட்டுமே, நமது கடும் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளது என்பதை நம்மால் உறுதியாக அறிந்துகொள்ள முடியும் ||69||
யோகப் பயிற்சிக்கு வர விரும்பும் ஒருவர் உடல் பருமனாகவும், உடலில் அதிகப்படியான கொழுப்பு தன்மையையும் கொண்டவராக இருந்தால் அவரை ‘ஷட்கிரியா’ (Kshatriya)* எனப்படும் ஆறு வகையான தூய்மைப்படுத்தும் பயிற்சிகளைச் செய்யுமாறு கூறுவார்கள்; அவ்வாறு இல்லையெனில், நுண் நரம்புப் பாதைகளைத் தூய்மைப் படுத்துவதற்காக, குருவால் (ஆசிரியரால்) கற்பிக்கப்பட்ட பிற சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.
{*ஷட்கிரியா (Kshatriya) அல்லது ஷட் கர்மா என்பது ஹத யோகாவில் உடலை உட்புறமாகத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஆறு முக்கிய சுத்திகரிப்பு வழிமுறைகளாகும்; ‘ஷட்’ என்றால் ஆறு, ‘க்ரியா’ என்றால் செயல் என்று பொருள். இவை உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்கள், கபம், மற்றும் வாயுக்களை நீக்கி, உடல் மற்றும் மனதை சம நிலைப்படுத்த உதவுகின்றன}||70||
யோகப் பயிற்சிகள் செய்யும்போது, தியானத்தையும் மந்திர உச்சாடனங்களையும் துணையாகக் கொண்டு, சுவாசத்துடன் மந்திரத்தை இணைத்துச் செய்யும் முறை ‘மந்திர வித்துக்களுடன் கூடிய முறை’ என்று கூறப்படுகிறது; அவ்வாறு தியான நிலையிலான மந்திரங்கள் பயன்படுத்தப்படாவிடில், அது ‘வித்துக்களற்ற முறை’ எனப்படும் ||71||
யோகிகள், இவ்விரண்டில் மந்திர வித்துக்களுடன் கூடிய முறையையே சிறந்ததாகவும் எளிதானதாகவும் கருதுகின்றனர்; ஏனெனில் இது மனம் மற்றும் உணர்வுத் திறன்களைத் மண்டையோட்டின் உச்சியில் அமைந்துள்ள தலைச் சந்தியில் (Bregma) ஒருமுகப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் உதவுகிறது; மேலும், யோக சாதனாவில் வெற்றியும் மிக விரைவாகக் கிடைக்கின்றது||72||
பிராணாயாமம் பயிற்சியில் துவங்கும் 1:4:2 என்ற விகிதத்தை தினமும் ஐந்து எண்ணிக்கைகள் வீதம் அதிகரித்துக் கொண்டே சென்று 20:80:40 என்ற விகிதத்தை அடைய முயல வேண்டும்; இவ்வாறு தினமும் மூன்று முறை பயிற்சி தொடர வேண்டும்; இந்த பயிற்சியை 90 நாட்களுக்குத் தடையின்றி மேற் கொள்ளப்பட வேண்டும்||73||
மூன்று மாதப் பயிற்சிக்கு பின்னரே, மையத்தில் அமைந்துள்ள நுண் நாடிகளின் (ஷூட்சும நாடிகளின்) பாதை தூய்மையாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது; அந்த நிலையை எட்டிய பின்னர்தான் (90 நாட்கள் பயிற்சிக்கு பின்னர்) உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை ஒருவனால் தட்டி எழுப்பி விழிப்படையச் செய்ய முடியும்; இதன் மூலமாகவே, பிராண வாயு தலையின் உச்சிக்கு ஏறிச் செல்வதை எளிமையாக்க முடியும்||74||
குண்டலினி சக்தி விழித்தெழும் போது, மூலாதாரத்திலிருந்து சுழு முனை நாடி வழியாக மேல் நோக்கிப் பயணித்து, ஆறு சக்கரங்களையும்* (மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை) கடந்து, இறுதியில் சஹஸ்ராரத்தை அடைகிறது; இந்த பயணத்தில், பிரம்ம, விஷ்ணு, ருத்ர கிரந்திகள்** (முடிச்சுகள்) தகர்க்கப்பட்டு, ஆற்றல் தடையின்றி பாய்ந்து, உணர்வு நிலை உயர்ந்து, சஹஸ்ராரத்தில் சிவனுடன் (Universal Self) இணைகிறது; இதன் மூலம் ஆன்மீகப் பாதையானது எளிமையாகவும், உறுதியான வெற்றியைத் தரக் கூடியதாகவும் அமைகிறது
{*ஆறு சக்கரங்களும், அவற்றை அறிந்து கொள்ளும் இடங்களும் பின்வருமாறு: (i)மூலாதாரம் – முதுகெலும்பின் அடிப்பகுதி மற்றும் பிறப்புறுப்பிற்கு இடையில் அமைந்துள்ளது (செயலூக்கம் அல்லது செயலற்ற நிலை);
(ii)சுவாதிஷ்டானம் – மூலாதாரத்திற்கு மேலே, அடிவயிறு அல்லது இனப்பெருக்க உறுப்புகளின் பகுதியில் அமைந்துள்ளது (படைப்பாற்றல் அல்லது இனப் பெருக்கத் திறன்);
(iii)மணிபூரகம் – தொப்புள் பகுதி அல்லது நாபிக்கு பின்புறம் அமைந்துள்ளது (மகிழ்ச்சி, தாராள குணம் அல்லது பொறாமை மற்றும் பேராசை);
(iv)அனாகதம்– நெஞ்சுப் பகுதி அல்லது இதயத்தின் மையத்தில் அமைந்துள்ளது (அன்பு, வெறுப்பு அல்லது அச்சம்);
(v)விஷுத்தி – தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது (நன்றியுணர்வு அல்லது துயரம்); (vi)ஆக்ஞை – புருவ மத்தி (இரு புருவங்களுக்கும் இடையில்) அமைந்துள்ளது (அறிவு அல்லது சீற்றம்);
**மும்மூர்த்திகளோடு தொடர்புடைய பிரம்ம, விஷ்ணு மற்றும் ருத்ர கிரந்திகள் எனும் மூன்று முடிச்சுகள் முறையே முதுகுத் தண்டின் அடிப்பாகம், இதய மையம் மற்றும் புருவங்களுக்கு இடைப்பட்ட இடங்களில் அமைந்துள்ளன} ||75||
செரிமானத் தீயானது (ஜாடராக்னி) தொப்புள் பகுதியை சுற்றியே அமைந்துள்ளது; ஆள் காட்டி விரலை அவ்விடத்தில் ஊன்றிக் கொண்டு, அந்தத் தீயோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதனை முழுமையாகக் கட்டுப்படுத்தி ஆளுவதற்கு ஒருவன் முயல வேண்டும்; இது யோகக் காலையில் உடலின் மையப் பகுதியை (மணிபூர சக்கரம்) வலுப்படுத்தும் ஒரு நுட்பமாகும்; இந்த பயிற்சியும் தினமும் மூன்று முறை மேற் கொள்ளப்பட வேண்டும்||76||
ஒருவன் தனது பாதங்களைப் பற்றிக் கொண்டு, குதி கால்களைக் கொண்டு ஆசன வாய்க்கும் இனப் பெருக்க உறுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியை அழுத்த வேண்டும்; இந்த அழுத்தம் குண்டலினி சக்தி அமைந்துள்ள பகுதியைத் தூண்டி, ஆற்றலை மேல் நோக்கி (சுஷும்னா நாடி வழியாக) எழுப்ப உதவுகிறது; குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பும் செயல் முறையை எளிதாக்கும் வகையில், துருத்தி ஊதுவது போல, வயிறை வேகமாகக் சுருக்கி விரித்து, மூக்கின் வழியாகவே வேகமாக மூச்சை இழுத்து விடும் வேகமான சுவாசப் பயிற்சியை எட்டு முறை மேற்கொள்ள வேண்டும்; மேலும் இது மனதை அலை பாய விடாமல் இருக்க வைக்கின்றது||77||
இந்த சக்தி வாய்ந்த பயிற்சிகளைச் செய்யும்போது மனம் சிதறாமல், உறக்க மயமான நிலைக்கோ அல்லது வெளிப்புறத் தூண்டுதல்களுக்கோ ஆட்படாமல், முழு கவனத்துடன் இருக்க வேண்டும்; இவ்வாறு செய்வதன் மூலமே, பிராண வாயுவை (உயிர் மூச்சை) மேல் நோக்கி, உச்சியில் உள்ள சஹஸ்ரார புள்ளியை நோக்கிச் பாயச் செய்ய முடியும்; அதன் விளைவாக, மனதின் ஆற்றல்கள் படிப்படியாக முழுமையாக வெல்லப்படுகின்றன||78||
ஒருவேளை 2 முதல் 5 பல்* (இதை சுமார் ஒரு நிமிட காலம் என்பார்கள்) நேரத்திற்கு, நமது தனிப்பட்ட மூச்சுக் காற்றானது பிரபஞ்சப் பெருமூச்சுடன் (Cosmic Breath) ஒன்றிணைந்து இயங்க முடிந்தால், அது நமது சுவாசப் பயிற்சியின் வெற்றிக்கு ஒரு சிறந்த அடையாளமாகும்; மேலும், அது அந்தச் சாதகன் கடந்த காலத்தில் செய்த அனைத்துப் பாவங்களையும் போக்கி விடுகிறது.
{*பல்’ என்பது கால அளவைக் குறிக்கும் ஒரு பாரம்பரிய இந்திய முறை; ஆகவே, 2 முதல் 5 பல் என்பது தோராயமாக 48 வினாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை (2 x 24 முதல் 5 x 24 வினாடிகள்)} ||79||
இத்தகைய ஸ்வாச பயிற்சிக்காக ஒருவர் செலவிடும் நேரத்தைப் போலப் பன்னிரண்டு மடங்கு நேரத்தை, அடுத்த நிலையான ‘பிரத்யாஹாரம்’* பயிற்சிக்காகச் செலவிட வேண்டும்; மேலும், அந்தப் பிரத்யாஹாரம் பயிற்சியின் கால அளவை போல பன்னிரண்டு மடங்கு நேரத்தை, அதற்கு அடுத்த நிலையான ‘தாரணை’** என்ற பயிற்சிக்காக செலவிட வேண்டும்’
{* இது ஐம்புலன்களையும் வெளிப்புற உலக விஷயங்களிலிருந்து (காட்சி, ஒலி, சுவை, மணம், தொடுதல்) திருப்பி, மனதை உள் முகமாகத் திருப்புவதாகும்;
**இது மனதை ஒரு குறிப்பிட்ட இடம், பொருள், அல்லது கருத்தில் உறுதியுடன் ஒருமுகப்படுத்துதல் (Concentration) ஆகும்} ||80||
ஒருவேளை, தகுந்த வழிகாட்டுதலின் துணையோடு, பிராண வாயுவை உச்சியில் உள்ள சஹஸ்ரார புள்ளியை அடையச் செய்து, அங்குத் தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்கு அதை நிலை நிறுத்த ஒருவரால் முடிந்தால், அந்த நிலையே ‘நிர்விகல்ப சமாதி’* எனப்படும் அத்வைத (இரண்டற்ற) அனுபவ நிலையாகக் கருதப்படுகிறது; தேர்ந்த யோகிகள் அனைவரும், எப்பாடுபட்டாவது அந்த நிலையை அடைய முயலுவார்கள்.
{*யோகக் கலையிலும் ஆன்மீகத்திலும், நிர்விகல்ப சமாதி என்பது மனதின் எண்ண அலைகள் முற்றிலும் அடங்கி, அறிபவன், அறியப்படும் பொருள் என்ற பாகுபாடின்றி, ஆத்மா பிரம்மத்துடன் (இறை நிலையுடன்) இரண்டறக் கலக்கும் மிக உயர்ந்த நிலையைக் குறிக்கிறது} ||81||
மேற் கூறிய நிலையை எட்ட முடியாவிடில், ஸ்வாச பயிற்சியில் வெற்றி பெற்ற பிறகு, உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அகமுகமாக மனதை அதாவது உள் நோக்கி திருப்புவதாகும்; இதுவே யோகத்தின் ஐந்தாவது படியான ‘பிரத்யாஹாரம்’ எனும் செயல் முறையாகும் ||82||
காலம் தாழ்த்துதல் மற்றும் கவனக் குறைவு ஆகியவற்றை அறவே நீக்கி விட்டு, மேற்கூறிய பிரத்யாஹாரப் பயிற்சியை ஒருவர் திரும்பத் திரும்ப மேற்கொள்ள வேண்டும்; ஒருமுறை, தனது ஐம்புலன்களை தன் விருப்பப்படி கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும் என்ற மன உறுதி ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அதன் பிறகு இந்த யோகப் பாதையில் அவர் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் வீணானது போல தோன்றாது ||83||
ஒரு ஆமை அதற்கு ஆபத்து நேரும் போது தனது உறுப்புகளைத் தனது பாதுகாப்புக் கூட்டிற்குள் எப்படி மிக விரைவாக உள்ளிழுத்துக் கொள்ளுமோ அதை போலவேதான் யோக சாதனை செய்யும் ஒருவரும், தொடர் பயிற்சியின் மூலம் தனது ஐம்புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்தித் தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்||84||
எவ்வளவுதான் திரும்பத் திரும்ப முயன்ற போதிலும், ஐம்புலன்கள் உள்ளுக்குள் ஒரு முகப் பட மறுத்து, மனம் வெளியில் ஓடும் போதெல்லாம், சோர்வடையாமல் அதை மீண்டும் மையப் புள்ளிக்குக் கொண்டு வரும் பயிற்சியைத் தொடர வேண்டும்; மனம் காற்றைப் போல அடக்க முடியாததுதான் என்றாலும் தொடர் பயிற்சி மற்றும் வைராக்கியத்தால் அதை நிச்சயம் அடக்க முடியும்*.
{*தியானம், ஜெபம் மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் புலன்களை மென்மையாக உள்ளே திருப்பலாம்; பிரத்யாஹாரம் என்பது புலன்களை வலுக் கட்டாயமாக வெளி விஷயங்களில் இருந்து மீட்டு மனதின் பக்கம் திருப்புவதாகும்; அதை கடை பிடிக்கலாம்} ||85||
எவன் ஒருவன் தனது புலன்கள் அனைத்தையும் அடக்கி கொண்டு விடுவானோ, அவனுடைய ஞானம் நிலை பெற்று விடுவதைக் காண்பான்; அதன் பின் அவனுக்கு எந்த பொருட்கள் மீதும் ஆசை இருக்காது; உலகின் மீது பற்றற்று இருக்கத் துவங்குவான்; அத்தகையவனுக்கு அந்த சாதனா எளிதானது போலவும், விரல் நுனியில் இருப்பது போலவும் இருக்கும் ||86||
இப்படித்தான் மெல்ல மெல்ல அந்த பயிற்சியில் வெற்றி அடைய வேண்டும் ; இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், ஒரு யோகி புலன் பொருட்களால் சூழப் பட்டிருந்தாலும், மனதளவில் அவற்றுடன் ஒட்டாமல் (தாமரை இலை நீர் போல) வெகு தொலைவில் இருப்பதைப் போல உணர்வான்||87||
மனம் தற்காலிகமாக அமைதியடைவதை, நிரந்தரமாக அடங்கி விட்டதாகக் கருதி விழிப்புணர்வை தளர்த்துவது ஒரு பொறியில் அகப்பட்டுக் கொள்வதை போல ஆகி விடும்; விழிப்புணர்வு குறையும் தருணத்தில், புலன்கள் வலுப்பெற்று, மீண்டும் வெளி உலக விஷயங்களில் லயிக்க முற்படும்; அதுவே யோக சாதனாவின் தோல்வியாகி விடும்; மீண்டும் அனைத்து பயிற்சிகளையும் தொடர வேண்டிய நிலையில் கொண்டு சென்று விடும்||88||
உணர்வு பூர்வமான பின் வாங்கல் (Conscious Withdrawal) என்பது ஏதோ ஒன்றிலிருந்து வலுக்கட்டாயமாக விலகுவது அல்ல; மாறாக அகப் புரிதல் (Self-awareness) மற்றும் புலன்களின் ஒத்துழைப்புடன் (Cooperation of senses) செய்யப்பட வேண்டிய ஒரு நுட்பமான பயிற்சியாகும்; ஏனெனில் அப்போதுதான் மனதின் அலைபாயும் தன்மைகளை வெல்வது எளிதாகிறது; அகப் புரிதல் மற்றும் புலன்களின் கட்டுப்பாடு என்ற இரண்டையும் இணைத்து விடும்போது, மனதின் அலை பாயும் தன்மை நீங்கி, ஆன்மீக அல்லது மன ஒருமைப்பாட்டுப் பாதையில் விரைவான முன்னேற்றம் சாத்தியமாகும்.||89||
அடுத்த நிலை தாரணா என்பதாகும்; இது கவனச் சிதறல் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பொருள், மந்திரம், சக்கரம், அல்லது மூச்சின் மீது கவனத்தை நிலை நிறுத்தும் திறன் கொண்ட பயிற்சி ஆகும்; இது பொதுவாக இரண்டு நிலைகளாகக் கூறப்படுகிறது ; முதலாவது பண்புகளுடன் கூடிய தாரணா; இரண்டாவது பண்புகள் கடந்த தாரணா ஆகும் |90||
இங்கு கவனம் என்பது தனக்குள் நிலை பெற முயற்சிப்பதாகும்; தனக்குள் இருக்கும் நான்கு நிலைகளையும் சீராகப் பயிற்சி செய்வதன் மூலம், ஆழ்ந்த அமைதியையும், தன்னுள் நிலை பெற்ற கவனத்தையும் (Mindful Awareness) அடைய முடியும்; ஒரு வேளை ஒருவர் அமைதியற்று, நிலை குலைந்து காணப் பட்டால், அவர் இந்தச் செயல் முறையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் ||91||
ஆத்மா என்பது உருவம், குணம், எல்லைகள் இல்லாதது; அதன் மீது தியானம் செய்வது துவக்கத்தில் கடினமாக இருக்கலாம்; அத்தகைய சூழலில், கவனத்தை மீண்டும், மீண்டும் உடலுக்குள் உள்ள ஆத்மாவின் மீது திருப்ப வேண்டும்; மனம் அலை பாயும் போதெல்லாம், சளைக்காமல் மீண்டும், மீண்டும் அந்த ஆத்ம உணர்வுக்கு கவனத்தைக் கொண்டு செல்ல முயல வேண்டும்; நீங்கள் ஆத்ம ஞானம் அல்லது ஞான நிலையை அடையும் வரை, அதாவது மனம் தானாகவே அந்த ஆத்மாவில் நிலைத்திருக்கும் வரை, இந்தப் பயிற்சியை விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்ய வேண்டும்’ ||92||
ஸ்ரீமத் தத்தர் மேலும் கூறினார் ‘ ஓ அர்ஜுனா, என்னை உனக்குள் இருக்கும் ஆத்மாவின் உருவமாக நினைத்துக் கொள்; நான் எல்லாப் பண்புகளுக்கும் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், எனது இந்த வடிவம் ஆத்ம ஞானம் பெற விரும்புவார்கள் செல்ல வேண்டிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும் வகையில் இருக்கும்; ஏனெனில் ஒருவரின் உள்ளே இருக்கும் ஆத்மா, குரு மற்றும் தெய்வம் ஆகிய மூன்றும் இரண்டற்ற, ஒரே நிலையிலானவை ஆகும் ||93||
ஒருவர் கண்களால் பார்க்கப்படும் என்னுடைய இந்த வடிவம், அழகானது மற்றும் வசீகரிக்கும் தன்மை கொண்டதாக தோன்றும்; அப்போது உங்கள் மனம் எங்கு அலை பாய்ந்து செல்ல முயன்றாலும், உங்கள் புலன்கள் திருப்தியடையாது; என்னை பார்க்கவே விரும்பும் என்பதை நீங்கள் காண்பீர்கள் ||94||
சாதகர், தனது இயல்புக்கு உகந்த ஒரு தெய்வ வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்; அவரை ஒரு மையப் புள்ளியாக கருதிக் கொண்டு, அவரோடு தமது சம்ஸ்காரங்கள் மற்றும் விருத்திகள் போன்ற அனைத்தையும் இணைத்துக் கொண்டு விடும்போது மனிதன் தன் எல்லையற்ற பற்றுதலிலிருந்து விடுபட்டு, நிலையான நிம்மதி மற்றும் ஆனந்தத்தை அடைகிறான் ||95||
விருப்பங்களுக்குப் பின்னால் மனம் ஓடும் போது, மனக் கசப்பிற்கோ, ஏமாற்றத்துக்கோ அடி பணியாமல், சோர்ந்தும் விடாமல் தொடர்ச்சியான பயிற்சிகளை செய்தவாறு இருக்கும்போது, தாம் விரும்பும் உள்ளும் புறமும் உள்ள ஸ்திரத் தன்மை விரைவில் தென்படும்||96||
கவனக் குறைவினால் இப்படிப்பட்ட படிகளை வெற்றிகரமாக கடந்து செல்ல முடியவில்லை என்றால் அதுவரை சாதகர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடும்; எனவே, எல்லா தன்னிச்சையாக நடத்தல், பிடிவாதம் போன்ற நெளிவு சுழிவுகளையும் ஒதுக்கி வைத்துக் கொண்டு பயிற்சி செய்ய வேண்டியதைச் செய்து முடிக்க வேண்டும்||97||
தியானப் பயிற்சியில் முறையான வழி முறைகளைப் பின்பற்றாமல், இடையிலுள்ள எளிதான நிலைகளுக்குத் தாவிச் சென்று, மீண்டும் ஆரம்பத்திற்கு வருவதை எதிர்மறை சிந்தனை முறை என்று சொல்வதை விட, தவறான பயிற்சி முறை அல்லது கவனம் சிதறும் தியான நிலை என்று சொல்வதே சரியாக இருக்கும்; தியானத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல், ஒவ்வொரு படியையும் பொறுமையுடன் கடப்பதே மன அமைதி தரும் சமாதி நிலை ஆகும் ||98||
ஆகையால், யோகத்தின் இந்த எட்டு மடங்கு பாதையில் ஒரு தொடர்ச்சியான படிமுறை அணுகுமுறை வெற்றியை உறுதி செய்கிறது, தியானம் கூட இருவகைப்பட்டது; ஒன்று தேடப்படும் பொருளின் மீதும் அதன் பண்புகளின் மீதும், மற்றொன்று அதற்கு அப்பாற்பட்டதன் மீதும்… ||99||
தொடர்ந்து எண்ணெய் ஊற்றப்படுவதைக் காண்பது போல, நமது உணர்வு நிலை தியான செயல் முறையுடன் கலந்திருந்தால், அது வெற்றிகரமாகும்; ஆனால் கடக்க வேண்டிய பல உள் தடைகள் உள்ளன; ஆயினும் போதுமான பயிற்சி மற்றும் நடைமுறை வழிகாட்டுதலுடன் இது சாத்தியமாகும்||100||
தியானிப்பவர், தியான செயல்முறை மற்றும் தியானிக்கப்படும் பொருள், இதுவே இந்த படியில் உள்ள மும்மூர்த்திகள்; தேர்ந்த யோகிகள் மற்றும் ஞானிகளின் கூற்றுப்படி, எப்போது தியானிப்பவர், தியான செயல், தியானிக்கப்படும் பொருள் ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து, எந்தவிதமான பேதமும் இல்லாமல் இரண்டறக் கலக்கிறதோ, அந்த நிலையே உண்மையான தியானத்தின் உச்சம் அல்லது சமாதி (Samadhi) என்று அழைக்கப்படுகிறது||101||
ஆகையால், அஷ்டாங்க யோகாவின் எட்டு வழிப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும்போது சாதகனின் வெற்றியை உறுதி செய்கிறது; தியான நிலை இரு முக்கிய பிரிவுகளாக அல்லது நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது; முதல் முறை தியான நிலையில் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனத்தை நிலை நிறுத்தி, அந்த உருவத்தின் மீது இடைவிடாமல் தியானம் செய்வது சவிகல்ப தியான நிலை என்பார்கள்; இரண்டாவது தியான முறையில் எந்தவொரு உருவத்தையும் மனதில் நிறுத்தாமல், உருவமற்ற பிரம்மத்தின் மீது கவனம் செலுத்தி தியானிப்பது ஆகும்; அதை நிர்விகல்ப தியானம் என்பார்கள் ||99||
ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றும்போது, அது இடையில் அறுபடாமல், மெலிதான கோடு போலத் தொடர்ந்து, இடைவெளி இன்றி பாய்ந்து செல்லும்; அதேபோல், சாதகனின் மனம் இடைவெளி இன்றி, அலை பாயாமல், ஒரே எண்ணத்தில் அல்லது விழிப்புணர்வோடு தியானம் செய்யும்போது, அது அவனுக்கு வெற்றியைத் தரும்; ஆனால் அதில் அவ்வப்போது எழும் பல உள் தடைகளை கடந்து செல்ல வேண்டும்; ஆயினும் முறையான, தொடர் பயிற்சியால் அவன் அதில் வெற்றி பெறுவான் ||100||
தியானத்தின் மூன்று கூறுகள் ‘திரிபுடி’ (Tripti)* என்று யோகக் கலையில் அழைக்கப்படுகின்றன; தியானிப்பவர், தியான செயல் முறை மற்றும் தியானிக்கப்படுவது என்பவைகளே அவை; ஒருவர் மேற்கூறிய மூன்றின் தன்மைகளையும் தனித் தனியாக உணர்ந்து, அதன் பிறகு அந்த மூன்றின் வேறுபாட்டையும் உணர்வதையே தியானத்தின் பண்பு என்று யோகிகள் கூறுகிறார்கள்.
{*’திரிபுடி’ (Tripti) என்பது அத்வைத வேதாந்தம் மற்றும் தத்துவங்களில் கூறப்படும் மூன்று பிரிவுகளின் சங்கமம் ஆகும். அதாவது அனுபவத்தை உணரும் நபர் (அறிபவன் / காண்பவன்) ; அறியப்பட வேண்டிய பொருள் அல்லது இலக்கு (அறியப்படும் பொருள்); அறிபவனையும் அறியப்படும் பொருளையும் இணைக்கும் செயல்முறை அல்லது அறிவு (அறிவு / காட்சி)}||101||
தியான நிலையின் ஒரு கட்டத்தில் தியானிப்பவர், தியானப் பொருள், தியானம், என்ற மூன்றும் மறக்கப்பட்டு விடும்; அப்போது அந்த சாதகர், தான் தியானிக்கும் இறைவனோடு (அல்லது பரமாத்மாவுடன்) இரண்டறக் கலந்து விடுவார்||102||
காற்று வீசாத இடத்தில் அணையாமல் எரியும் தீபத்தைப் போல, சலனமற்ற மனதுடன் தியானத்தில் நிலைத்திருப்பவன், ஆத்மா -பரமாத்மா வேறுபாடற்ற அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே எனும் அத்வைத நிலையை பெறுகின்றான்||103||
ஒருவன் தன் உடல் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய உணர்வு (Attachment to objects) நீங்கி, உடலுக்கு அப்பாற்பட்ட நிலையில் நிலைத்து இருந்தால் அந்த நிலையை ‘உன்மணி’* நிலை என்பார்கள்; தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எனும் நிலை இதுவேயாகும். இது ஒரு யோகி சமாதி நிலையை அடையும் முன் கடக்கும் இறுதிப் படி நிலையாகக் கருதப்படுகிறது.
{*உன்மணி என்பது யோகக் கலை மற்றும் ஆன்மீகத்தில் ‘மனமற்ற நிலை’ அல்லது ‘சிந்தனையற்ற நிலை’ (State of no-mind) என்று அழைக்கப்படுகிறது. } ||104||
அத்தகைய நிலையில் எதிர் மறையான அனைத்து எண்ணங்களும் அழிந்து விடும்; அப்போது அப்போது இருமை எனும் நிலை எவ்வாறு இருக்க முடியும்?; அனைத்து அறியாமைகளும் நீங்கப்பட்டு இருக்கும் ஒருவன் உணர்வுள்ள, ஆனந்தமான சாட்சியின் நிலையில் நிலை பெறுகிறான் ||105||
அப்போது ஒருவன் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும்போது தன்னுடன் ஒன்றி விடுகிறான்; அப்போது எப்படி அவன் பூத உடலை மறந்து விடுவானோ அதை போலவேதான் சூட்சும உடலையும் கடந்து விடுகிறான்; குருவின் போதனைகள், சாஸ்திர ஞானம் (அறிவாற்றல்) மற்றும் யோகப் பயிற்சிகள் மூலம் ஒரு யோகி இதை அறிந்து கொள்கின்றார்.
{இதன் விளக்கம் என்ன என்றால் ஒரு யோகி தியானத்தின் மூலம் மனதை அடக்கி, தன்னைத்தானே ஆய்வு செய்து கொள்ளும்போது அவருக்கு ‘நான் உடல்’ என்ற எண்ணம் மறைந்து, ‘நான் ஆத்மா ‘ என்ற உணர்வு ஏற்படுகிறது. அப்போது அவன் தன்னுடன் (ஆத்மாவுடன்) ஒன்றி விடுகிறான்; ஆழ்ந்த தியானத்தில், உடலைப் பற்றிய உணர்வு (பசி, தாகம், வலி) முற்றிலும் நீங்கி விடும். உடல் தன்னிச்சையாக அமர்ந்திருந்தாலும், அதன் மீது பற்று இருக்காது. இதுவே பூத உடலை மறந்து, அதற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ளதைக் காட்டும்}||106||
நான் பிரம்மம்’ என்ற தூய அத்வைத உணர்வு ஏற்படும்போது, கர்ம வினைகள் அனைத்தும் பஸ்பமாகி, விதியிலிருந்து விடுதலை (முக்தி) கிடைக்கிறது; இந்த உயர்ந்த நிலையை எட்டியவுடன் அவன் உள்ளத்தில் ‘தர்ம-மேகம்’* அல்லது ‘தர்ம-அமிர்தம்’# என அழைக்கப்படும் அமுத மழை பொழிகிறது; இது, இடை விடாத முயற்சியுடன் யோகிகள் அடைந்த அரிய வெற்றியின் கொண்டாட்டமாகத் திகழ்கிறது
{*(i) தனி மனிதன் தன் அகந்தையை முற்றிலும் துறந்து, இறை நிலையை அடைவதையே ‘தர்மத்தின் மேகம்’ அல்லது ‘புண்ணிய மேகம்’ என்பார்கள்; இது முடிவில்லாத அறத்தையும் ஞானத்தையும் பொழிகிறது;
#(ii) தர்ம-அமிர்தம்: கர்மாவிற்கு அப்பாற்பட்ட நிலையை எட்டுவதை தர்ம அமிர்தம் என்பார்கள்; அதாவது, புண்ணியமும் பாபமும் இல்லாத, சச்சிதானந்த சொரூபமான அத்வைத நிலை ஆகும்’ ||107||
ஸ்ரீமத் தத்தர் தொடர்ந்து கூறினார் ‘ஓ அர்ஜுனா, யோக வழி முறை இத்தகையதே ஆகும்; இது அனைத்து விதமான துயரங்களையும் நீக்குகிறது; அனைத்து விதமான கவலைகளும் துன்பங்களும் அடியோடு ஒழிகின்றன; வாழ்வானது எப்போதும் இறைத் தன்மையோடு ஒன்றிணைந்து, அதனை முழு உணர்வுடன் பிரதிபலித்துக் கொண்டு இருக்கும்’||108||
|| பி. தெம்பே மகாராஜ் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலின் பதினான்காம் (14) அத்தியாயம் இத்துடன் நிறைவு பெறுகிறது ||
இது கடவுள் தத்தாத்ரேயரின் திருவடிகளில் பணிவுடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் பதினான்காம் (14) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+1407 = 1515
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -5, அத்தியாயம் -14 முடிவடைந்தது
அத்தியாயம் -15 தொடர்கின்றது