பாகம் – 4
ஆத்மாவின் பயணம்

அத்தியாயம்-11
பல்வேறு கருப்பையில் ஆத்மாவின் பயணம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு பிருஹஸ்பதி, தேவேந்திரன் (இந்திரன்) அவர்களுக்குத் தொடர்ந்து உபதேசம் செய்தார்: ‘எந்த ஒரு சாஸ்திரம் ஒருவரது சந்தேகங்களை போக்க உதவவில்லையோ, அந்த சாஸ்திரங்கள் மூலம் ஒருவரால் முக்தியைப் பெற இயலாது; அத்தகைய சாஸ்திரங்களை மீண்டும் மீண்டும் படிப்பவர்கள்,தொடர்ந்து மறு பிறவிகளையே சந்திக்க நேரிடும் ||1||
மரணத்திற்குப் பிறகு, மானிடர்களின் சூட்சும உடல்கள் மேகங்களுடன் கலக்கின்றன; அந்த ஆத்மாக்களின் சக்தி மழையாகப் பொழிந்து மீண்டும் பூமிக்கு வந்து உணவில் கலக்கின்றன; அந்த உணவின் வழியாக, ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகும் தகுதி பெற்ற ஒருவரின் உடலில் அவை நுழைகின்றன; அங்கே அவை மூன்று மாதங்கள் உரு மாற்றத்திற்கு உட்பட்டு பொழுதைக் கழிக்கின்றன||2||
இறுதியில் அவை இனப் பெருக்கத் திரவங்களின் (விந்துவின்) ஒரு பகுதியாக மாறுகின்றன; காமத் தீயினால் அவை சூடாகி, தக்க நேரத்தில் உடலுறவு கொள்ளும்போது, அத்திரவங்கள் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு வழியாகக் கருப்பைக்குள் நுழைகின்றன ||3||
இப்படியாக பெண்களின் பிறப்பு உறுப்பு மூலம் உள்ளே நுழையும் அவை பெண்ணின் இனப் பெருக்கத் திரவங்கள் மற்றும் இரத்தத்திற்கு இடையே பயணித்து, கருப்பையில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை பெறுகின்றன; பெண்ணின் உடலுக்குள் பனிக் குடத்தால் (amniotic sac) சூழப்பட்ட நிலையில் அவை உள்ளே வளர்கின்றன; இது மிகவும் கடினமான ஒரு காலக் கட்டமாக இருப்பினும், அவை இறந்து விடுவதில்லை||4||
எலும்புகள், தசை நார்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை* போன்றவை அனைத்துமே இனப் பெருக்கத் திரவங்களிலிருந்து உருவாகின்றன; தோல், தசைகள் மற்றும் இரத்தம் ஆகியவை, இரத்தத்தின் வழியாகக் கிடைக்கும் ஊட்டச் சத்திலிருந்து உருவாகின்றன; குறிப்பிட்ட சில இனிப்புப் பண்டங்கள் எவ்வாறு கொதிக்க வைக்கப்படுகின்றனவோ, அதே போன்று கருவானது, உள்ளே வளர்ந்து வருகிறது
{* எலும்புகள் உள்ளே இருக்கும் மென்மையான, பஞ்சு போன்ற திசுவே எலும்பு மஜ்ஜை (Bone Marrow) எனப்படும்.} ||5||
சிறுநீர் மற்றும் கழிவுப் பொருட்களின் அடுக்குகளுக்கு நடுவே, கருவின் இரத்தம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான திரவங்கள் மிக அதிக அளவில் சூடாகின்றன ; அக் காலக் கட்டத்தில் தாயின் கருப்பையானது ஒரு பாத்திரம் போலச் செயல்படுகிறது; ஜீரண சக்தி எனும் தீயினால் (உடல் வெப்பத்தினால்) அதற்குத் தேவையான வெப்பம் கிடைக்கின்றது ||6||
கருவில் ஆண் சார்ந்த திரவங்களின் அளவு அதிகமாக இருந்தால், ஆண் குழந்தை பிறக்கும்; கருவில் பெண் சார்ந்த திரவங்களின் அளவு அதிகமாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும் |7||
ஆண் மற்றும் பெண் உயிரணுக்கள் அளவு சமமாக இருந்தால், ஒரு இருபால் உயிரினம் (அலி) பிறக்கும்; உடலின் காற்றுகள் (வாயுக்கள்) ஆண் உயிரணுக்களைப் பிரித்து விட்டால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் ||8||
கருவின் சூழல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது; அது தாயின் கழிவுகளுக்கு மத்தியிலும், குறிப்பாக மாதவிடாய் கழிவுகளுக்கு இடையிலும் அமைகிறது; காலப்போக்கில், உடலின் காற்றுகள் உதவியுடனும் குழந்தை பிறக்கிறது; பிறப்புக்குப் பிறகு கழுவிச் சுத்தம் செய்வதால் மட்டும் அக் குழந்தை தூய்மை ஆகி விடும் என்று கருத முடியுமா?’
||9||
ஆண் மற்றும் பெண் உயிரணுக்கள் இணைந்த பிறகு, ஐந்து இரவுகளுக்குள் கரு முட்டையானது ஒரு குமிழியின் அளவை அடைகிறது; ஒரு வாரத்திற்குள் ஒரு வகையான பையோ அல்லது பைப் போன்ற அமைப்போ உருவாகிறது; இரண்டு வாரங்களுக்குள் அது மேலும் வீக்கமடைந்து பெரிதாகிறது ||10||
ஒரு மாதத்திற்குள் அது கெட்டியாகிறது; இரண்டாவது மாதத்தில் குழந்தையின் தலை உருவாகிறது; மூன்றாவது மாதத்தில் வயிற்றுப் பகுதி உருவாகிறது; மேலும் கைகள், கால்கள் மற்றும் விரல்களின் முனைகள் தனித்தனியாக நீண்டு, வெளிப்படையாகத் தெளிவாகத் தெரியும் ||11||
நான்காவது மாதத்தில் தோல் வளர்ச்சி மற்றும் உடல் மூடுதல் நிகழ்கிறது; ஐந்தாவது மாதத்தில் நகங்கள் வளர்கின்றன; ஆறாவது மாதத்தில் உடலின் ஒன்பது துவாரங்களும் (வாயில்களும்) தெளிவாகத் தெரிகின்றன; இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகவே நிகழ்கின்றன ||12||
கருவில் வளரும் சிசுவின் பாதங்களுக்கு அருகிலிருந்து எழும் காற்று, உடலுக்குள் உயிர் மூச்சாகவே நிலைத்திருக்கிறது. ஏழாவது மாதத்தில், அண்ணப்* பகுதியிலுள்ள துவாரத்தின் வழியாக இந்த மூச்சு காற்று உள்ளே நுழைகிறது; அப்போது நுண்மையான ஆத்மா கருவினுள் பிரவேசிக்கிறது’
{* palate என்ற ஆங்கில வார்த்தைக்குத் தமிழில் அண்ணம் அல்லது மேல்வாய் என்று பொருள். இது வாயின் மேல் கூரை போன்ற பகுதியைக் குறிக்கிறது} ||13||
குழந்தையின் தாய் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும், அது நஞ்சுக் கொடியின்* வழியாகக் குழந்தையின் தொப்புளோடு இணைகிறது; அங்கிருந்து வயிற்றுக் குழி வழியாக உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்தை உள்ளிருந்தே வழங்குகிறது.
{*”Placental cord” (பிளாசென்டல் கார்ட்) என்பது தமிழில் தொப்புள் கொடி அல்லது கொப்பூழ் கொடி என்று அழைக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தையை, தாயின் நஞ்சுக் கொடியுடன் (Placenta) இணைக்கும் ஒரு நெகிழ்வான, குழாய் போன்ற அமைப்பாகும். இதன் மூலம் குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.}||14||
தாயானவள் குழந்தை உள்ளே அசைவதை உணரத் தொடங்குகிறாள்; தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் இதயங்களும் ஒன்றிணையும் போது, தாய்க்குப் பலவிதமான வினோதமான உணர்வுகள் தோன்றுகின்றன; பசியின்மை, செரிமானமின்மை, வாந்தி மற்றும் உடல் சோர்வு ஆகியவை அவளுக்கு ஏற்படலாம்; அதே வேளையில், தாயின் மனம் அமைதியடைவதோடு, ஓய்வெடுப்பதில் அதிக நாட்டம் கொள்ளத் தொடங்குகிறாள்||15||
கருப்பையில் வளரும் குழந்தை ஏதோ ஒரு வகையான தண்டனையை அனுபவிப்பதாகச் சித்தரிக்கப்பட்டாலும், அங்கும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே அக் குழந்தையைப் பாதுகாத்து வருகிறான்; தாயின் மார்பகங்கள் பெரிதாகி வீக்கமடைகின்றன; முலைக் காம்புகள் கருமையடைகின்றன; எதிர்காலத்தில் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் உடலுக்குள்ளேயே அப்போதே தொடங்கி விடுகின்றன||16||
கருப்பையின் வலது பக்கப் பகுதி பெரிதாகி விரிவடைந்தால், பிறக்கப் போவது ஒரு ஆண் குழந்தை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; மாறாக, கருப்பையின் இடது பக்கப் பகுதி பெரிதாகி விரிவடைந்தால், பிரசவ காலத்தில் ஒரு ரத்தினம் போன்ற பெண் குழந்தை பிறக்கும் என்பதை அனுமானமாக அறிந்து கொள்ளலாம் ||17||
ஒன்பது மாதங்கள் மெதுவாகக் கடந்து, கருவின் வளர்ச்சி ஏறக்குறைய நிறைவடையும் நிலையில், பிறக்கவிருக்கும் ஆத்மா , இப்போது உணர்வுடன், தனது தண்டனைக்கு (தான் பிறப்பதற்கு) சாட்சியாக இருந்த தெய்வத்திடம் பிரார்த்திக்கிறது. ||18||
அந்த குழந்தை தெய்வத்திடம் என்ன கூறுகின்றது என்றால் ‘ஏழாவது மாதத்திலிருந்து என்னால் நகர முடிந்தது; நான் தலைகீழாக இருக்கிறேன்; என் தலை கீழ்நோக்கி இருப்பதால் நான் வேதனைப்படுகிறேன்’; இப்படியாக அது தெய்வத்திடம் மீண்டும் மீண்டும் தலை வணங்கி, தன்னை விடுவிக்குமாறு மன்றாடுகிறது ||19||
அது கூறுகின்றது ‘தெய்வமே இந்தத் தொடர்ச்சியான வலியை நான் தாங்கிக் கொள்ளக் காரணமான அந்தக் கொடிய செயல்கள் யாவை?; தயவுசெய்து கருணை காட்டி, என்னை மேலும் தண்டிப்பதை நிறுத்துங்கள்; இவ்வளவு காலமாக நான் இதையெல்லாம் கடந்து செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ||20||
உள்ளே இருக்கும் துர்நாற்றத்தால் நான் சோர்வடைந்து விட்டேன்; உள்ளே இருக்கும் செரிமான நெருப்பால் நான் சுடுவதை போன்று உணர்கின்றேன்; நான் ஏதோ ஒரு நரகத்தில் புரள்வது போல் தெரிகிறது; நான் சோர்வடைந்து விட்டேன், ஓ தெய்வமே இங்கிருந்து என்னை விடுதலை செய்யுங்கள்||21||
எனது கடந்த கால செயல்களின் காரணமாக நான் பல்வேறு உயிரினங்களில் பிறந்திருக்கிறேன்; இப்போது நான் இன்னும் மோசமான சூழ்நிலைகளில் இங்கே இருக்கிறேன்; நான் இருக்கும் இந்தச் சூழலால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; இந்தக் கருப்பை வாசம் நிச்சயமாக இனிமையானதும் சமாளிக்க முடியாததும் அல்ல||22||
தயவுசெய்து நான் இருக்கும் இடத்திலிருந்து என்னை விடுவியுங்கள்; நான் இனி பாவியாக இருக்க மாட்டேன்; அதற்குப் பதிலாக என்னால் முடிந்த வழியில் உங்களுக்கு ஊழியம் செய்வேன் ||23||
உள்ளிருக்கும் குழந்தை இவ்வாறு பிரார்த்தனை செய்யும்போது, பத்தாம் மாதம் வருகிறது; பிரசவிக்கும் காற்றின் அலைகள் தாயின் உடலில் தொடங்குகின்றன; மேலும் ஒரு பயங்கரமான தள்ளலுடன் குழந்தை மற்ற புழுக்களைப் போல வெளியே வீசி எறியப்படுகின்றது ||24||
தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்த உடனேயே வெளி புறத்தில் உள்ள காற்று அந்த குழந்தையின் உடலை ஸ்பரிசிக்கின்றது; தான் உள்ளே இருந்த கொடிய சூழ்நிலைகளைப் பற்றிய நினைவு இப்போது அதற்கு மறந்து விடுகின்றன; ஜீவாத்மாவும் (மனித ஆத்மா ) பரமாத்மாவும் (இறைவன்) வேறு வேறு அல்ல, அவை இரண்டும் ஒன்றே என்ற தத்துவத்தை மறந்து அழத் தொடங்குகிறது; அதற்கு பதிலாக அது எண்ணுகின்றது ‘நான் உண்மையில் யார்?’ ||25||
அந்த குழந்தையினால் தன் மனதில் உள்ளவற்றை கூற முடிவது இல்லை; அதன் மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டுள்ளது என்பது அதன் பெற்றோர்களுக்கும் புரிவது இல்லை; அதனால் அதன் பெற்றோர்கள் தடுமாறுகிறார்கள்; உறக்கமும் அல்லது உணவு கொடுக்கப்படுவதும் அதன் விருப்பத்திற்கு மாறாக உள்ளதாக அதற்கு தோன்றும்; ஆயினும் அதன் பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை அதற்கு தேவையானவற்றை கொடுக்க முயற்சி செய்கின்றார்கள் ||26||
குழந்தைப் பருவம் விளையாட்டிலும், இளமைப் பருவம் புலன் இச்சைகளின் மீதான நாட்டத்திலும் வீணாக விரயமாகின்றன ; அதற்கு நல்லவை எது கேட்டவை எது என்பது புரிவது இல்லை; அந்த குழந்தையின் மனதில் என்ன எண்ண அலைகள் உள்ளன என்பதை நல்ல குருமார்களிடம் கேட்க வேண்டும் என்று எவருக்கும் தோன்றுவதில்லை||27||
திருமணம் ஆன பின்னர் தனது மனைவியின் துர்போதனைக்கு ஆளாகி தன் தாயே தனது மிகப் பெரிய எதிரி என்று நினைக்கத் துவங்குகிறான்; யாராவது அவனுக்கு வேத, புராண உபதேசங்களைக் கேட்குமாறு அறிவுரை கூறினால், அதில் அவன் ஆர்வம் காட்டுவதில்லை ; சலிப்படைகின்றான்||28||
மல்லிகைப் பூக்கள் வாடுவதற்கு அதிக காலம் எடுப்பது இல்லை; அதை போன்றதுதான், அலைபாயும் மனதால் தூண்டப்படும் எல்லாப் புலன் இச்சைகளும் இருக்கும்; அதனால் அவன் விரைவாகவே வீரியமின்மை எனும் நிலையை அடைகின்றான் |29||
தெய்வத்திற்கு சேவை செய்வதில் மெத்தனமாக இருப்பதின் விளைவு இதுவே ஆகும் ; விரைவில் முதுமை அவர்களை பற்றிக் கொள்கிறது; முதுமையை கொண்டு வருவதில் காலம் விரைவாகவே செயல்படுவதால் காதுகளுக்கும் நெற்றிக்கும் அருகில் விரும்பத்தகாத நரை முடி தெளிவாக வெளித் தெரியத் துவங்கும்||30||
முதுமை காலம் காதுகளில் துவங்கத் தொடங்க, செவிப் புலன் கருவிகள் அவனுக்கு தேவைப்படுகின்றன; விரைவில் பற்கள் விழத் துவங்க செயற்கை பற்கள் தேவைப்படுகின்றன; கண்களும், காதுகளும் உள்நோக்கி இழுக்கப்பட்டுத் தங்கள் வலிமையை இழக்கத் தொடங்குகின்றன’ ||31||
முதுமையின் விளைவாக தோள்கள் சுருங்கத் துவங்கி, இளமையைக் காட்டாத வடிவத்தைக் கண்டு, குழந்தைகள் அவர்களை ஏளனம் செய்யும் விதத்தில் ‘பூ’ அல்லது ‘ஹூப்’ என்று கத்துகிறார்கள்; முதுமையை எட்டியவர்கள், உள்ளுக்குள் கோபம் அடைந்தாலும் அவர்களால் குழந்தைகளை எதுவும் செய்ய முடிவது இல்லை; அவர்கள் எண்ணுவார்கள் குழந்தைகள் கூட எந்தத் தூண்டுதலும் இல்லாமல் நம்மை அவமதிக்கின்றன ||32||
பிறகு அந்த நபர், ‘ராம்’, ‘ராம்’ என்று பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டு இருக்க ஆசை படலாம்; தெய்வீக மற்றும் வேத பாராயணங்களில் ஈடுபட விரும்பலாம்; அது அவர்களுக்கு மன ஆறுதல் தரக் கூடும்; ஆனாலும் உலகின் மீதான பற்று, செல்வம், போன்ற ஆசைகளை துறக்க முடியாமலும், கஞ்சத்தனம் போன்றவற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமலும், பயனற்ற பொருட்களை குப்பைத் தொட்டிகளில் வீசி எரிந்து விடுவதை போல அவர் விரைவில் மரணம் அடைந்து காணாமல் போய் விடுவார் ||33||
மீண்டும் காலத்தின் சுழற்சி தொடங்குகிறது; அவர்களுக்கு ஜனன மரணங்கள் தொடர்கின்றன; அவர்களால் எப்போது மனதை முற்றிலுமாக அடக்கிக் கொள்ள முடிகிறதோ அப்போதுதான் முடிவற்ற சுழற்சி ஒரு முடிவுக்கு வருகிறது ||34||
‘வாழ்க்கை அனுபவங்கள், ஒருவரின் மனோபாவம் மற்றும் இயல்புக்கு ஏற்ப, நுட்பமான பதிவுகள் (இதை பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடக்க உள்ள விதி என்பார்கள்) தாயின் வயிற்றுக்குள் உள்ள குழந்தையின் உடலில் சேமிக்கப்படுகின்றன; அவை, செயல்படுவதற்கான சூழ்நிலைகளும் அங்கேயே உருவாக்குகின்றன; அவற்றை மாற்றுவதற்கு சாஸ்திர வழிகாட்டுதல் கிடையாது என்பதினால் நடைபெற உள்ளவற்றை மாற்ற முடியாது; எனவே, முடிந்தவரை குழந்தை வயிற்றில் உள்ளபோதே தெய்வீக அறிவுரைகளை தாயார் கேட்க அறிவுறுத்தப்படுகிறார்கள் ||35||
அத்தகைய தெய்வீகமான சாஸ்திரங்களின் உதவியால்தான் தவறான நம்பிக்கைகளை வெல்ல முடியும்; அதற்கு நல்ல ஒரு வழிகாட்டியின் அறிவுரை தேவை; ஒருவேளை உண்மையான வழிகாட்டிகளைக் கண்டறிய முடியாமல் போய் விட்டால், தேவையற்ற பயம், மரண பயம், பிற அச்சுறுத்தல்கள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள இயலாது’ ||36||
குரு பிருஹஸ்பதி இந்திர பகவானிடம் தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தார் ‘தேவேந்திரா நான் இப்போது உங்களுக்கு ஏழாவது உதாரணக் கதையைக் கூறுகின்றேன், அதையும் கேள்; பிரதிஷ்டான் என்ற ஊரில் ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார்; அவருக்கு விரைவில் ஒரு மகன் பிறந்தான்||37||
அப்படி பிறந்த மகன் ஒரு மாபெரும் யோகி, ஆனால் அவரது முந்தைய பிறவியில் நிறைய பாவங்களை செய்தவர்; இப்போது அவர் இருமை எனும் சித்தாந்தத்திற்கும் , எதிர் எதிரான நிலைப்பாட்டின் சித்தாந்தங்களுக்கும் அஞ்சினார்; அவற்றின் அடிப்படை சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், எதிலும் நிலையில்லாமல் பேய் பிடித்தவன் போல சுற்றித் திரிந்து வந்தார்; தனிமையில் இருக்கும்போது கூட எதையோ பிதற்றி கொண்டு இருந்தவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்||38||
எவருடனும் நெருங்கிப் பழக முடியாத, அவர்கள் நல்லவர்களா, தீயவர்களா என்பதை அறிந்து கொள்ள முடியாத மன நிலையில், சந்தேக பாவனையுடன் மற்றவர்களை பார்த்து வாழ்ந்து வந்தார்; புலன் இச்சைகளை விஷம் போல கருதினார்; எவருமே தன்னைப் பற்றி உயர்வாக பேசாமல் இருக்கும் வகையில் மந்த புத்தி அல்லது முட்டாள் போல நடந்து கொண்டு இருந்தார்||39||
தனது தாயார் கொடுத்த எந்த அறிவுரைகளையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; அவற்றை உதாசீனப்படுத்தி வந்தார்; தனது ஆடைகள் மீதே சிறுநீர் மற்றும் மலம் கழித்து, அவற்றை சுத்தம் கூட செய்யாமல் அப்படியே திரிந்து வந்தார் ; அதனால் அவரது நடத்தையைக் கண்ட அவரது தந்தை சிந்தனை செய்தார் ‘இவரை ஏதேனும் தீய சக்திகள் ஆட்கொண்டு இருக்குமோ?||40||
அதனால் அவரது நடத்தை சரியாக வேண்டும் என்ற பிரார்தனைகளுடன் அவருடைய பெற்றோர் விரதங்களை மேற்கொள்ளத் தொடங்கினர்; மேலும் தாங்கள் குலதெய்வத்தை தவறாமல் வழிபட்டனர்; தீய சக்திகளிடமிருந்து காக்க மகனின் உடலில் தாயத்துக்கள் கட்டப்பட்டன; மகனது வியாதி குணமடைய வேண்டும் என்பதற்காக பிராமணர்களுக்கு தாராளமாக சன்மானங்களையும் கொடுத்தார்கள்||41||
மருத்துவர்களையும், மாந்த்ரீகர்களின் உதவிகளைக் கூட நாடினார்கள்; அவரது பெற்றோர் தீர்த்த யாத்திரைகளுக்கு சென்று சடங்குகளை செய்தும், மந்த்ர தந்திர முறையும் பலன் அளிக்கவில்லை; அவன் இயல்பாகவும் அமைதியாகவும் இருப்பான் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவருக்கு மந்திரித்து கொண்டு வந்திருந்த தெய்வீக சாம்பலை (மந்திரித்த வீபூதி) உடலில் பூசினர்; அவர்களது மற்ற குழந்தைக்கும் பேய், பிசாசுகள் பிடித்து விடுமோ என்று பயந்தனர்||42||
என்ன செய்தும் எந்த மருந்தும் பயனளிப்பதாகத் தெரியவில்லை, அவனுக்குள் ஏதோ ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் குடியிருக்கிறது என்று மட்டும் தெரிய வந்தது; உண்மையில் அது ஒரு சக்தி வாய்ந்த எதிர்மறை சக்தி தெருவமாகவேதான் இருக்க வேண்டும் என்றே நினைத்தார்கள்; அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள் ||43||
அந்த மகன் அடிக்கடி ‘நான் பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்துள்ளேன் (அத் வைத்திய நிலைப்பாடு) கொண்டிருக்கிறேன்’ என்று கூறி, அந்த தெய்வீக ஐந்து எழுத்து மந்திரத்தை திரும்பத் திரும்பச் கூறுவார்; அவரது தந்தையும் அவர் முன்னிலையில் மற்ற மந்திரங்களை ஓதுவார்; அவர் (மகன்) ஸ்ரீமத் பாகவதம் போன்ற புனித நூல்களையும் படிப்பார்||44||
பலவிதமான முயற்சிகளை செய்தும், என்னதான் முயன்றும், அவனது நடத்தையில் மாற்றம் எதுவும் தெரியவில்லை; அவன் தனது உடல் கழிவுகளால் தன் உடைகளை அசுத்தப்படுத்திக் கொண்டதை கூட அறிந்து கொள்ள முடியாமல் தரையில் உருண்டு கொண்டே இருப்பான் ||45||
அவன் நின்ற நிலையிலேயே சிறுநீர் கழிப்பான் அல்லது மலம் கழிப்பான்; தான் என்ன உணவு உண்கின்றோம் என்பதைக் குறித்தோ அல்லது என்ன அருந்துகின்றோம் என்பதைக் குறித்தும் கவலை படவில்லை; சிறுவயது முதலே அவனுக்கு எதுவுமே தெரியாதது போல அவன் நடந்து கொண்டான்; மேலும், அவன் உளறும் குழப்பமான பேச்சைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது ||46||
எது தனக்கு நன்மை தரும், எது நன்மை அளிக்காது என்பது ஏதும் தெரியாதது போல அவன் பாவனை செய்தான்; இப்படியாக சுமார் எட்டு ஆண்டுகள் கழிந்தன; விரைவில் அவனுக்கு உபநயனச் சடங்கும் (பூணூல் அணிவிக்கும் விழா) செய்தார்கள்; அவனது காதுகளில் தெய்வீக காயத்ரி மந்திரம் ஓதப்பட்டது ||47||
ஆனாலும் அவன் சந்தியாவந்தனம் செய்ய மறுத்தான்; பெற்றோர்கள் அவனை அடித்துத் துன்புறுத்தினாலும் கூட காயத்ரி மந்திரத்தை ஓத அவன் மறுத்து விட்டான்; வேறு யாருடனும் நட்பு கொள்ளவும் அவன் விரும்பவில்லை ||48||
கவலையுற்றிருந்த அவனது பெற்றோர்கள், தற்செயலாக விஷ்ணு தத்தரின் நற்பெயரைப் பற்றிக் கேள்விப் பட்டனர்; உடனே அவர்கள் தங்கள் மகனை அழைத்துக் கொண்டு விஷ்ணு தத்தரை பார்க்கச் சென்றார்கள்; அவரது தெய்வீக இல்லத்தை அடைந்ததும், அவர்கள் மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் அவரை வணங்கிய பின்னர் அவரிடம் கூறினார்கள் ||49||
‘பிறந்தது முதலே எங்கள் மகன், மன வளர்ச்சி குன்றியவன் போலவே நடந்து கொள்கிறான்; நீங்கள்தான் ஏதாவது செய்து அவனது வியாதியை குணப்படுத்த வேண்டும்; எங்கள் மகனை மற்ற சிறுவர்கள் இயல்பாக உள்ளதை போன்ற நிலைக்கு கொண்டு வந்து எங்களுக்கு நிம்மதி அளிக்க வேண்டும் ||50||
இவன் எங்களுடைய ஒரே மகன்; இவனுக்கு மட்டும் ஏன் இத்தகைய நோய் பிடித்து உள்ளது?; இவனை ஏதேனும் ஆவி பிடித்திருக்கிறதா, அல்லது இவன் மனநிலை தடுமாறிப் போயிருக்கிறானா, அல்லது வேறு ஏதேனும் ஒரு சக்தி இவனது நடத்தையைக் கட்டுப்படுத்துகிறதா என்பது எங்களுக்குப் புரியவில்லை’ என்று புலம்பினார்கள் ||51||
விஷ்ணு தத்தர் அவர்கள் கூறியவற்றை அமைதியாகக் கேட்டார்; பின்னர் அந்தச் சிறுவனை உன்னிப்பாகப் பரிசோதித்தார்; அந்தச் சிறுவன் நீண்ட காலமாகவே பரமாத்மனுடன் (இறைவனுடன்) ஒன்றிணைந்த நிலையில் இருப்பவன் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்; பின்னர் அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் ‘உங்கள் மகனைச் சில நாட்களுக்கு என்னுடனேயே என் இல்லத்தில் இருக்க வைத்து விட்டு செல்லுங்கள்’ என்று கூறினார் ||52||
விஷ்ணு தத்தரின் பதிலைக் கேட்டதும், அச் சிறுவனின் தந்தை ‘ஐயா, நீங்கள் வேத வேள்விகள் நடத்தும் தெய்வீகமான இடத்தில் என் மகன் சிறுநீர் கழித்து விட்டால் என்ன செய்வது என்று கவலையாக உள்ளது’ என்று கூறினார்; அதற்கு விஷ்ணு தத்தர் ‘கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கின்றேன்’ என்று கூறி அவர்களைத் தேற்றிய பின்னர் ‘உங்கள் கவலைகள் அனைத்தையும் என்னிடத்தில் விட்டு விட்டு நிம்மதியாக உங்கள் இல்லத்திற்குச் சென்று ஓய்வெடுங்கள்’ என்று கூறி அவர்களை அனுப்பி விட்டார் ||53||
அதை ஏற்றுக் கொண்ட அந்த சிறுவனின் பெற்றோர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்; விஷ்ணு தத்தர் அந்தச் சிறுவனை மிகுந்த அக்கறையுடன் பராமரிக்கத் தொடங்கினார்; ஒரு நாள் அவர் அச் சிறுவனிடம் கேட்டார் ‘உன்னை அச்சுறுத்துவது எது?; எந்தக் கவலை உன் அறிவுத் திறனை அழித்துக் கொண்டிருக்கிறது?’ என்று கேட்ட பின் மேலும் தொடர்ந்து கேட்டார் ||54||
நீ யாருக்குச் சொந்தமானவன்?; உண்மையில் நீ யார்?; நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன?; ஏன் எப்போதும் இத்தகைய முறையற்ற நடத்தையை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றாய்? இத்தகைய நிலையில் உன்னை அடக்கி வைத்திருப்பது யார்? ||55||
மற்ற சிறுவர்களை போல நீ ஏன் உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லக் கூடாது ?; உன் பெற்றோர் நீண்ட காலமாக இழந்துள்ள மகிழ்ச்சியை நீ ஏன் அவர்களுக்கு அளிக்கக் கூடாது?; ஆன்மீகப் பாதையில் மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்வதை நீ கைவிடாதே; இத்தகைய கட்டுப்பாடற்ற, வீணான நடத்தையால் யாருக்கு என்ன பயன் கிடைக்கும்?’ ||56||
நீதி செய்யும் சிறு பிள்ளைத்தனமான செயல்கள் அனைத்தையும் விட்டு விடு; ஏற்கனவே மெய்ஞானம் அறிந்த உனக்கு நான் புதிதாக வேறு என்ன சொல்ல முடியும்?; பரமாத்மாவின் சாரத்தை அறிந்தவனே, நீயே எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுவாயாக; இவ்வாறு கூறிய விஷ்ணு தத்தர், அந்த சிறுவனின் தலையில் தம் கைகளை வைத்து கேட்டார் ||57||
அந்த சிறுவனோ கலகலவெனச் சிரித்துக் கொண்டே கூறியது ‘ஓ அந்தணரே, தாங்கள் எனக்குப் புதிதாக எதைத்தான் போதிக்கிறீர்கள்?; எனது உண்மையான சொரூபம் என்னவென்று தாங்கள் நன்கு அறிவீர்களே; நான் உண்மையில் யார் என்பதை முழுமையாக உணர்ந்தவர் தாங்கள் ஒருவரே அல்லவா||58||
உண்மையில், பரமாத்மனிடம் இருந்து நான் வேறுபடவில்லை; நான் இவ்வுலகில் இன்னமும் பிறக்கவே இல்லை; அப்படியிருக்க, எனக்குப் பெற்றோரோ அல்லது குடும்பமோ உண்டு என்று எப்படிச் சொல்ல முடியும்?; நான் இங்கு இருப்பதென்பது, எனது கர்ம வினைகளின் விளைவாக மட்டுமே நிகழ்ந்த ஒன்றாகும்; அந்தக் கர்ம வினைகளின் முடிச்சுகளை அவிழ்த்துப் போடுவதற்கான வழியைத் தாங்கள் எனக்கு விளக்கிக் கூற முடியுமா?||59||
பிரளய காலத்தில் உள்ள சச்சிதானந்த நிலையில் உள்ளவன் நான் (சத்-சித்-ஆனந்தம்) ; அதில் இருந்து வேறுபட்டவன் நான் இல்லை; அப்படியிருக்க, நான் யாருக்குச் சொந்தமானவன் என்று தாங்கள் கூற முடியுமா? மேலும், இரண்டற்ற, அழிவற்ற பரமாத்மனான நான், எங்கு செல்ல வேண்டும் அல்லது எங்கு வர வேண்டும் என்பதற்கு நியதிகள் உள்ளனவா ||60||
உணவாக இருப்பவனும், உணவை அளிப்பவனும் நானே ஆவேன்; ‘அறிபவன் ’ யார்? ‘அறியப்படும் செயல்’ எது? மற்றும் அறியப்படும் பொருள்’ எது?; எங்கும் எதிலும் துவைதம் (இரட்டைத் தன்மை) என்பதே இல்லாதபோது, ஏன் வீணாக இத்தகைய வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?’ ||61||
ஒருவேளை நான் அந்த பரமாத்மனிடம் இருந்து வேறானவனாகவும், தனித்துப் பிறந்தவராக இருப்பேயானால் தாங்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் நியாயமானவையாகவும், பொருத்தமானவையாகவும் அமைந்திருக்கும்; ஆனால், தாங்களே கூறுவது போல, நான் அந்த பரமாத்மனிடம் இருந்து வேறானவன் அல்ல; அப்படியிருக்க, நான் இதற்கு என்ன பதில் கூற முடியும்? ||62||
முக் காலங்களிலும் அழிவற்றவராகவும், எங்கும் எதிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மனிடம் இருந்து நான் சிறிதும் வேறுபட்டவன் அல்ல; தங்கள் இல்லத்திற்கு வருகை தந்துள்ள இந்த உடல்தான் நான் என்று என்ன வேண்டாம்; நான் அந்தப் பரமாத்மனுடன் ஒன்றிணைந்தவன், என்பதால் என்னுள் ஏன் வீணாக வேறுபாடுகளைக் காட்ட முயல வேண்டும்?’ ||63||
அந்த அற்புதமான பதில்களைக் கேட்டதும், விஷ்ணு தத்தர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்; பேரன்புடன் அந்த சிறுவனை தழுவிக் கொண்டார்; சிறிது நேரம் அவனை அணைத்தபடியே இருந்து விட்டு, பின்னர் மிக எளிமையாக இவ்வாறு கூறினார் ||64||
மகனே, உன்னை நான் பாராட்டுகின்றேன், நீ கூறிய அனைத்தும் அந்த தெய்வத்தின் வார்த்தைகளேதான் ஆகும்; உன்னைப் போன்ற ஒருவரை வேறு எங்கு காண இயலும்? நீ மெய்யாக ஒரு உண்மையான துறவி ஆவாய்||65||
ஆனால் உனக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்: நம் கண்கள் யாரையேனும் பார்த்தால், பார்க்கும் தன்மையின்படி, நமது இயல்பு மற்றும் நம் உடலமைப்பு ஆகியவற்றின் படி அது தனது செயலைச் செய்யாமல் இருப்பதில்லை; அதன் ஓட்டம் இடை விடாதது; எனவே, நாம் அதை உணரா விட்டாலும் அல்லது கவனத்தில் கொள்ளா விட்டாலும், அதனதன் செயல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் ||66||
நிலைமை இவ்வாறிருக்கையில், நாம் ஏன் சாஸ்திரங்கள் விதித்துள்ள நெறி முறைகளின்படி செயல்படக் கூடாது?; அவ்வாறு செய்வதன் மூலம், ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் பிறருக்கு நாம் ஒரு முன் மாதிரியாகத் திகழலாம்; அது அவர்களின் குறைகளைக் களைந்து கொள்ள உதவக் கூடும்; அது மட்டும் இல்லாமல் அவர்கள் தங்கள் இலக்கை நோக்கிய பயணத்திலும் பயனடையக் கூடும் ||67||
ஞானத்தின் வடிவமாகத் திகழ்ந்த ஸ்ரீமத் வசிஷ்டர் போன்ற உயர்ந்த மகரிஷிகளைப் பற்றி நாம் கேள்விப் பட்டதில்லையா? அவர் எப்போதும் சஞ்சலமற்ற மன நிலையில் இருந்தார்; ஆயினும், அவர் தாம் பிறப்பு எடுத்ததிற்கான கடமைகளை ஒரு போதும்வெளிப்புற க்கணித்ததாக கூறிக் கொள்ளவில்லை ||68||
கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதற்கேற்ப அறிவாற்றலும் கொண்ட அனைவருக்கும் ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் வகையில், அவர் தனது சொந்த வாழ்க்கை மற்றும் தனது நடத்தையை அமைத்துக் கொண்டார்; அதே வேளையில், துறவியான அவரது நிலைக்கு ஏற்ற ஆன்மீக ஞான உயர் நிலைகளில் தம்மை இணைத்துக் கொண்டு இருந்ததும் அவருக்கு மிக எளிதாகவே அமைந்திருந்தது ||69||
யோக வழிப் பாதையின் வாயிலாக அடையக் கூடிய இந்த நிலைகள் மொத்தம் ஏழு ஆகும்; முதல் மூன்று நிலைகள் விழிப்புணர்வு நிலையோடு தொடர்புடையவை; நான்காவது நிலை கனவு நிலையோடு தொடர்புடையது; இந்த நிலைகளைத் தெளிவாக அறிந்தவர் பிரம்ம வேத்தா (அல்லது பரமாத்மனை அறிந்தவர்’) என்று அழைக்கப்படுகிறார் {இந்த ஏழு நிலைகளும் அவற்றின் விளக்கங்களும் ‘யோக வாசிஷ்டம்’ என்ற நூலிலும், பி. டெம்பே மகாராஜ் எழுதிய ‘தத்த புராணம்’ நூலின் 24-ஆம் அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டு உள்ளன} ||70||
உதாரணமாக
(i) சுபேச்சா நிலை – இது ஞானத்தின் முதல் நிலை; உண்மையை அறிய வேண்டும் என்ற ஏக்கமும், தத்துவ ஞானத்தின் மீதான ஆர்வமும் தொடங்கும் நிலை
(ii) விசாரணா நிலை: இது இரண்டாம் நிலை; வேத சாஸ்திரங்களை ஆராய்ந்து, உண்மை எது, பொய் எது என்று பகுத்தறியும் நிலை
(iii) தனுமானஸா நிலை – இது மூன்றாம் நிலை; இதில் மனப்போக்குகளும் உடல் தேவைகளும் மையமாக உள்ளன.
(iv) சத்வாபத்தி நிலை – இது நான்காம் நிலை; மனம் பற்றற்ற தூய ஞான நிலையில் நிலை பெறுதல்.
(v) அசம்சக்தி நிலை – இது ஐந்தாம் நிலை; வெளி உலகப் பொருட்களின் மீது எந்தப் பற்றும் இல்லாமல், அகங்காரம் அழிந்த நிலை
(vi) பதார்த்தபாவன நிலை – இது ஆறாம் நிலை; மாயையை கடந்து, அனைத்திலும் ஆத்மாவை (சத்தியத்தை) உணரும் நிலை
(vii) துரியா நிலை – இது ஏழாவது நிலை; முக்தி நிலை அல்லது சமாதி நிலை. ஆத்ம ஞானத்தில் நிலை பெற்று, பரமாத்மாவுடன் ஒன்றிணையும் நிலை ||71||
ஐந்தாவது நிலை என்பது ஒருவர் லேசான உறக்கத்தில் இருக்கும்போது விழிப்புடன் இருப்பது; ஆறாவது நிலை என்பது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விழிப்புடன் இருப்பது; ஆறாவது நிலையில் இருப்பவர்களைச் தட்டி எழுப்ப வேறு ஒருவர் தேவைப்படுகிறார், ஏனெனில் அவர்கள் ஆழ்ந்த தியான நிலையில் இருந்து விடுகின்றார்கள் ||72||
ஏழாவது நிலை அனைத்தையும் விட மேலான நிலையில் இருப்பதைக் காட்டும்; அவர்கள் தம்மையும் மறந்த நிலையில் தெய்வத்துடன் இணைந்து இருப்பார்கள்; அந்த நிலையை எட்டி விடும் ஒரு யோகி, பிரம்மவித்வாரிஷ்டர்* என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்; ஆனால் நீயோ அந்த நிலையில் இல்லை ; எனவே உன்னைப் போன்ற ஒருவனுக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்’; என்று விஷ்ணு தத்தர் அந்தச் சிறுவனுக்கு அறிவுறுத்தினார்
{* இந்த இறுதி உச்ச நிலையில் சென்று விடும் யோகியானவன் தெய்வத்துடன் இணைந்து விட்ட நிலையை அடைந்து விடுவதினால் அவரை பிரம்மவித்வாரிஷ்டர் என்று கூறுவார்கள்; தெய்வத்துடன் ஐக்கியம் ஆகிவிடும் அத்தகைய ஒரு மேன்மையான யோகியை எவராலும் எழுப்ப முடியாது; அவர் உலக செயல்பாடுகளில் இருந்து விலகி அனைத்து பந்தத்தையும் கடந்தவர்} ||73||
தெய்வத்தின் சாட்சியாக இருக்கும் அந்த யோகிகளின் நிலை, சாஸ்திர நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது; அவற்றை எல்லாம் இன்னமும் நீ அறியாதவன்; அதனால் உன்னை சூழ்ந்துள்ள அச்சமும், பயமும், எந்த விதமான பாராட்டையும் பெற தகுதி இல்லாத நிலை மற்றும் உன் பெற்றோருக்கும் சமூகத்திற்கும் துன்பம் விளைவித்த உன் செயல்கள் அனைத்தும் பயனற்றவை ||74||
ஞான நிலையை எட்டி விட்டவர் மகிழ்ச்சியாக இருப்பார்; அவரது நடத்தை மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும், அவர் அனைத்தின் இருந்தும் பற்றற்ற நிலையில் உள்ளவர்; அவரது வாழ்க்கை சாஸ்திர நெறி முறைகளை அனுசரித்து செய்யப்படும் செயல்களுக்கு ஒரு உதாரணமாகும்; மேலும் அவர்கள் எவருடைய மற்றும் எந்த விதத்திலான துணையும் இன்றி சுதந்திரமாக அலைகிறார்கள் ||75||
இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் இருப்பதினால்தான் அவர்களால் மேலும் அறிவாற்றல் அடைய முடிகின்றது; அவர்கள் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமான புருஷர்களாக இருப்பார்கள்; அந்த நிலையில் இருப்பதினால்தான் அவர்களால் வீண் பெருமை அல்லது எதிர்மறை அகங்காரங்கள் என எதுவும் இல்லாமல் இருக்க முடிகின்றது; இதையே தெய்வீக மற்றும் வேத நூல்கள் வெளிப்படுத்துகின்றன||76||
பந்தம்* என்பது உண்மையில் இல்லாத ஒன்றுடன் உங்களை நீங்கள் தாமாகவே தவறாக அடையாளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன?; ஆகவே அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்; இந்த புத்திமதியைத்தான் ஆத்ம ஞானம் பெற்ற குருமார்கள் மற்றவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்; இப்படித்தான் ஆத்ம விடுதலை தேடுபவர்கள் சுய அறிவையும், சுய உணர்தலையும் அடைகின்றார்கள்.
{* ஒருவன் தன்னை தன் உடலுடன், தனது புலன்களுடனும் அடையாளப்படுத்திக் கொண்டு, தேவை அற்ற தற்பெருமை கொள்வதையும், தான் என்பதாக தன்னை தனியே அடையாளப்படுத்திக் கொள்ள முயல்வதையே பந்தம் என்ற நிலை என்றும், அதில் இருந்து முழுமையாக விடுபடுவதையே விடுதலை என்றும் ஆன்மீகத்தில் கூறுவார்கள்) ||77||
அனைத்துமே ஒன்றிணைந்த நிலையான நானே ஆத்மா என்பதில் ஒருவன் நிலை பெற்று விடும்போது, அவனால் எப்படி எதிர்மறையான நான்* மற்றும் என்னுடையது’* என்ற எண்ணங்கள் எழ முடியும்?; புகழ்ச்சி அல்லது இகழ்ச்சி அவர்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்? அனைத்திலும் வியாபித்திருக்கும் பரமாத்மனுடன் ஒன்றிணைந்து விட்டதாக கூறும் ஒரு ஞானி, இதுபோன்ற கூற்றுகளை எப்படி வாயால் கூட உச்சரிக்க முடியும்.
{*நான் அல்லது எனது என்ற நிலைப்பாட்டுடன் தன்னை ஒரு ஜடமான உடலோடு ஐக்கியப்படுத்திக் கொள்வது, ஏற்கனவே பரமாத்மனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டதாக கூறிக் கொள்பவர்களுக்கு எப்படி பொருந்தும்; ‘என் வீடு, என் கார், என் செல்வம்’ என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இன்னமும் உலக பற்றை துறக்கவில்லை என்பதை, ‘என்’ என்பதின் மூலம் வெளிப்படுத்துவார்கள்}? ||78||
பரமாத்மனுடன் முழுமையாக ஒன்றிணைந்து விட்டதாக நினைக்கும் யோகியின் ஜீவனில் ஏக்கமோ அல்லது வேறெந்த ஆசைகளோ எப்படி இருக்க முடியும்?; ஒருவர் தன்னைத் தனது தனிப்பட்ட மனதுடன் அடையாளப்படுத்திக் கொள்ளாத போது, அவர்களது மனம் எப்படி மற்றவற்றில் மீது ஆசை கொள்ள முடியும், அல்லது பற்றுதல்களுக்கு அடிபணிய முடியும்? ||79||
இவ்வாறு முழுமையான சுதந்திர மனநிலையை அடைந்து விட்ட, அல்லது ஆத்ம மன விடுதலை தேடுபவர்களுக்கும், அவர்கள் மானிட உடலில் ஒரு பிரேதம் போல வாழ்ந்து கொண்டு இருக்கையிலேயே முக்தியின் ஆனந்தத்தை அனுபவிக்க முடிகின்றது ; அத்தகைய மேன்மையான மானிடர்கள் எங்கு இருந்தாலும், அங்கும் அவர்களால் சமாதி நிலையை எட்ட முடியும் அல்லது தெய்வீகத்துடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் கொள்ள முடியும் ||80||
உலக செயல்பாடுகளை கடந்தவர் செய்யும் அனைத்திலும், ‘நான்’ என்பதை வெளிப்படுத்த அனுமதிக்காமல் இருந்து கொண்டவாறு வெளிப் பார்வைக்காக சமூகத்தில் தன்னை ஒரு பயனற்றவனாக காட்டிக் கொண்டாலும், அவரால் மறுபிறவி எனும் பந்தத்தை கடக்க முடியும்’ ||81||
விஷ்ணு தத்தர் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் ‘மகனே, நீ உண்மையாகவே ஒரு மஹானாகவும், ஞானியாகவும் இருந்தால், மீண்டும் உலக பந்தத்தினால் கட்டுப்பட்டு விடுவோமோ என்ற எண்ணம் எப்படி வர இயலும்?; வேத புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நெறி முறைகளின்படி நீ செயல்பட்டுக் கொண்டிருந்தால், இதற்கான நீ கர்மா அல்லது மறுபிறவி குறித்து அஞ்ச வேண்டும்? ||82||
தங்கள் புலன்களை எவர்களால் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்க இயலவில்லையே, அவர்கள்தான் மீண்டும் அதில் சிக்கிக் கொண்டு வெளி வர இயலாமல் இருப்பார்கள்; அக்கறை இன்றி செயல்படும் அத்தகையவர்களினால் ஒரு போதும் முக்தியை அடைய முடியாது; மேலும் அவர்களால் உணரக் கூட முடியாத வழிகளில் இழப்பைச் சந்திக்கிறார்கள்||83||
தாம் அடைக்கலமாக விரும்பும் தெய்வத்துடன் முழுமையாக ஒன்றிப்போன அவர்கள் தமது வேற்று உடலை உலக இயக்கத்தில் ஈடுபடுத்தி வைத்து இருந்தாலும் அவர்கள் மன நிலையில் எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை; அவர்களை எந்த நிலையும் பாதிப்பது இல்லை; அவர்களது மனநிலையை எவராலும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது ||84||
இந்த நிலை எப்படிப்பட்டது என்றால் கணவரோடு உடல் அளவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனைவி, மனதளவில் தன் முன்னால் கள்ளக் காதலனுடன் உறவாடும் நிலையோடு ஒப்பிடக் கூடியது ||85||
தனது உண்மையான வடிவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், மனதளவில் உலகில் தான் விரும்பும் இடமெல்லாம் சுற்றித் திரிய முடியும்; அது போலவே, என் அன்பு மகனே, நீ அச்சமின்றி முற்றிலும் பற்றற்று இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்; ஏனெனில் அப்போதுதான் ஆத்ம விடுதல் எனும் அந்த முழுமையும் நீ உணர்வு பூர்வமாக அனுபவிக்க முடியும் ||86||
வருங்காலத்தில் சொர்க்கத்தில், அல்லது பூமியிலேயே சிறந்த, வசதியான மற்றும் சாதகமான சூழ்நிலைகளில் இருந்தவாறு ஆத்ம விடுதலை பெற வேண்டும் என்று முயற்சி செய்யாதே; தாங்கள் தேடி அலையும் தெய்வத்துடன் ஒன்றிணைந்து இருக்கும் நிலையில் ‘நான்’ என்பதை ‘அவருடைய’ என்ற நிலையில் ஐக்கியம் ஆக்கி விடுவார்கள்; தாம் பேரானந்த நிலையில் இருப்பதை உணர்வார்கள் ||87||
ஒரு மல்லிகைப் பூவைப் பார்; அதை நசுக்கித் தூசியாக வாடச் செய்வதற்கு எவ்வளவு முயற்சி தேவைப்படும்?; அதை விட குறைவான முயற்சியே, தவறான அடையாளங்கள் அனைத்திலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, பட்டற்ற நிலையில் சென்று வாழ்வதற்கான முயற்சிக்கு தேவையாக இருக்கும் ||88||
ஆயினும், சாதாரணமான ‘நான்’ மற்றும் ‘என்னுடையது’ என்ற நிலையை வெல்வது சவாலானது; காரணம் குழந்தைப் பருவம் முதலே நாம் இவ்விரண்டையையும் தவறான எண்ணத்திலேயே வளர்த்துக் கொண்டு வந்துள்ளோம்; இந்த பதில்கள் நமது மனதின் எதிர் வினையின் விளைவு என்பதை அறிந்துகொள்; தன்னைத் தானே உணர்ந்து கொண்டவன் இவற்றினால் பாதிக்கப்படாமல் இருக்கின்றான் ||89||
இந்த அறிவுரையை என்றென்றும் உன் இதயத்திலும் நனவு நிலையிலும் வைத்திரு; அதன் பிறகு எந்த உறவும் உனக்கு எந்தத் தீங்கையும் அல்லது பந்தத்தையும் ஏற்படுத்தாது; நீ இந்தப் பிறவியைப் பெற்றதற்கு காரணமான செயல்களின் மீதும் உள்ள பந்தங்களை நீ வென்று விடுவாய், தெய்வீகத்துடன் உறுதியான ஒருமைப்பாட்டுடன் இருப்பது உண்மையில் பெரும் பலனைத் தரும்||90||
அதன் பிறகு ஞானம் தடுமாற்றத்தை அடையாது; உன் உடல் உன் உள் மன நிலையை பிரதிபலிக்கும்; ஆத்ம விடுதலையும் அதன் ஆனந்தமும் உன் காலடியில் நடனமாடும்; நான் உனக்குச் கூறிய அனைத்தையும் மறுக்க முடியாத உண்மைகளாகக் கருது’ ||91||
விஷ்ணு தத்தரின் அந்த அன்பான மற்றும் ஞானமிக்க அறிவுரைகளை கேட்டதும், மந்த புத்தி மற்றும் தன்னை முட்டாள் போல் காட்டிக் கொண்டு நடித்ததை அந்த சிறுவன் தன்னிடம் இருந்து விலக்கிக் கொண்டான்; அவன் தனக்கு ஞானம் அளித்த குருவுடன் அவரது வீட்டிற்கு சென்றான் ||92||
பக்தி மிக்க விஷ்ணு தத்தரின் மனைவியான பக்தியுள்ள சுஷிலா அன்புடன் அளித்த உணவை அவன் உட் கொள்ளாத துவங்கியதும், அவனது தவறான எண்ணங்கள் அனைத்தும் மேலும் விலகத் துவங்கின; அவனது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது; அவர்களும் ஞான நிலையை அடைந்த தங்கள் மகனின் அமைதியான இயல்பையும், அவனிடத்தில் காணப்பட்ட மாறுதலையும் கண்டு அமைதியடைந்தனர்|93||
தனது பெற்றோர்களிடம் அந்த சிறுவன் கூறினான் ‘பிறந்தது முதல், என் அச்சத்தின் காரணமாக, உங்கள் இருவரிடமும் நான் ஒருபோதும் தகுதியான சொற்களை உதிர்த்ததில்லை; அப்படி பலகாலமாக நான் உங்களுக்கு இழைத்த தவறுகளை ஈடுசெய்ய விரும்புகிறேன்; இங்குள்ள என் குருநாதரால் நான் மன மாற்றம் அடைந்து ஞானம் பெற்று விழித்தெழுந்துள்ளேன்’ ||94||
அவனது பெற்றோர்கள் விஷ்ணு தத்தரிடம் மிகுந்த மரியாதையுடன் கூறினார்கள் ‘தாங்கள் எங்கள் அனைவர் மீதும் கருணையைப் பொழிந்துள்ளீர்கள்; எங்கள் மகன் இவ்வளவு விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப, தாங்கள் அவனுக்கு என்ன பரிகாரம் செய்தீர்கள்? ||95||
நீங்கள் எங்களுக்கு மீண்டும் ஒருமுறை உயிர்ப் பிச்சை அளித்துள்ளதை போன்று நாங்கள் உணர்கின்றோம்’ என்று கூறிவிட்டு, அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்; பின்னர் அவர்கள் அனைவரும் விடைபெற்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்; அங்கே அக்குழந்தை மிகச் சிறந்த முறையில் நன்னடத்தையுடன் வாழத் துவங்கியது ||96||
‘ஒருவன் சாஸ்திரங்களின் உட் கருத்தையோ, நோக்கத்தையோ, சாரத்தையோ புரிந்து கொள்ளத் தவறும்போது, ஒவ்வொரு நிலையிலும் அது அவற்றைக் குறித்து அறிந்திடாதவர்களை அச்சுறுத்துகிறது; இந்த முழுப் படைப்பும் தெய்வீகத்தில் இருந்து வேறானதல்ல என்ற போதிலும், அதன் உண்மையான சாரத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு அது ஒரு பந்தமாகவே தோன்றுகிறது ||97||
எவன் ஒருவன் தனது உண்மையான சொரூபத்தையும், தன்மையையும் அறிந்து கொள்ளாமல் இருப்பானோ, அவன் பொய்யான அடையாளத்தையும், பொய்யான உணர்வையும் கொண்டவனாக வாழத் தொடங்குகிறான்; அவனது அனைத்துச் செயல்களும் வீணாகின்றன; இது அறியாமை உள்ளவர்கள் செய்யும் செயலே தவிர வேறில்லை||98||
இது எதனைப் போன்றதென்றால், ஒரு மூக்குத்தியைத் தன் கழுத்தணியிலேயே (மாலை) கோர்த்து வைத்து விட்டு, அதை எங்கே வைத்தோம் என்று மறந்து விட்டு, அதைக் கண்டு பிடிப்பதற்காகப் ரகளை செய்வது போன்றதே ஆகும்; இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த உபதேசமும் அத்தகையதே; இதை முழுமையாகப் புரிந்து கொள்ள உங்கள் கூர்மையான அறிவாற்றலைப் பயன்படுத்துங்கள்||99||
ஒரு நண்பரோ அல்லது அண்டை வீட்டாரோ, நகையுடன் தெளிவாகத் தெரியும் அந்த மூக்குத்தியைச் சுட்டிக் காட்டும் போது, அதை மறந்து போயிருந்தவன் பெரும் நிம்மதியை அடைகின்றான்; அதேபோல, சாஸ்திரங்களின் துணையோடு ஒருவன் தனக்குள் இருக்கும் ஆத்மா வை (சுயத்தை) உணரும்போது அவற்றை முழுமையாக புரிந்து கொள்கின்றான்||100||
ஒரு சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள நெறிமுறைகள் விரிவானதாகவோ அல்லது சுருக்கமானதாகவோ, எப்படி இருப்பினும், அவை அனைத்தும் நம்மை விழித்தெழச் செய்வதற்கான அறிவுரைகளை கொண்டுள்ளன’; இவ்வாறு குரு பிருகஸ்பதி இந்திரனுக்கு அறிவுரை வழங்கினார்; அதை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த இந்திரன் அவரை மரியாதையுடனும் வணங்கிய பின்னார் கூறினார்||101||
தங்கள் மீது தேவை இல்லாமல் சந்தேகப்பட்ட எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்; தயவு செய்து இதற்காக என் மீது கோபமோ அல்லது வருத்தமோ படவேண்டாம்’ என்று வேண்டிக் கொண்ட விண்ணுல அதிபதி இந்திரன், அவருக்கு உரிய மரியாதைகளைச் செலுத்திய பின்னர் அங்கிருந்து விடை பெற்றுத் திரும்பினான்||102||
இப்படியாக பிரகஸ்பதியிடம் போதனைகளை கேட்ட இந்திரனின் கதையை ஸ்ரீமத் தத்தாத்ரேய பகவான் அர்ஜுனனுக்கு கூறிய பின்னர் அவனுக்கு அறிவுரை கூறினார் ‘ அனைத்தையும் கேட்டாய் அல்லவா; ஆகவே நீயும் சாஸ்திரங்களின் நெறி முறைகளை ஆழமாக படித்துக் கொண்டு உன் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்; ஏனெனில் அவை சாதாரண மானிடர்களின் அறிவாற்றல்களுக்கு எட்டாத பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன; சாஸ்திர வேத நெறி முறைகளின் சாராம்சத்தை ஆழமாக புரிந்து கொள்ளும்போது அனுபவப் பூர்வமான உண்மைகளை புரிந்து கொள்ள முடிகின்றது ||103||
அணிமா போன்ற எட்டு வகையான யோக சித்துகள் கூட, யோகப் பாதையில் கூறப்படுகின்றன; ஆயினும், அந்த ஆற்றல்களால்* உன் மனம் சலனமுற அனுமதிக்காதே; ஏனெனில், அவையும் காலத்தின் எல்லைக்கு உட்பட்டவையே
{* ‘ஆற்றல்’ என்பது, யோகப் பாதையில் போற்றப்படும் எட்டு சித்திகளை குறிக்கிறது. அந்த எட்டு சித்திகளையும் அஷ்டமா சித்தி என்பார்கள் அவை:
(i) அணிமா – தன்னை மிகச் சிறிய வடிவமாக மாற்றிக் கொள்ளுதல்;
(ii) மகிமா – ஒரு மலையைப் போல மிகப் பிரம்மாண்டமான வடிவமாக மாற்றிக் கொள்ளுதல்;
(iii) கரிமா##: மலையைப் போல மிகவும் பாரமாக மாறும் ஆற்றல்
(iv) இலகிமா (லகிமா) – தன்னை காற்றை விட லேசாக மாற்றிக் கொள்ளுதல்;
(v) பிராப்தி –எங்கும் நிறைந்திருக்கும் ஆற்றல், நினைத்தவற்றை அடையும் திறன்;
(vi) ஈஸித்வம் – அனைத்தையும் அடக்கி ஆளுதல், வழிநடத்துதல், ஆட்சி செய்தல்; பஞ்ச பூதங்களால் ஆன பொருட்கள் மீதும், அந்தப் பூதங்கள் மீதும் முழுமையான ஆதிக்கம் செலுத்துதல்;
(vii) பிராகாம்யம் – நினைத்த காரியங்களை உடனே சாதிக்கும் ஆற்றல்; ஈரேழு உலகிலும் செல்லக் கூடிய திறன்;
(viii) வசித்வம் – இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களையும், தேவதைகளையும், மக்களையும் தன் வசப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் அதீத சக்தியைக் குறிக்கிறது
## இந்த தத்த மஹாத்மியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உள்ளவர் கரிமா சக்தியை குறிப்பிடவில்லை; மாறாக எட்டாவதாக யதாகாமாவசாயித்வம் எனும் சக்தியைக் குறிப்பிட்டு உள்ளார் – அதன் மூலம் ஒருவர் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தி பெற முடியும் என்கின்றார்கள்: இத்தகைய யோகப் பெருமைகளின் வாயிலாக, யோகிகள் தாங்கள் விரும்பும் எத்தனை வடிவங்களையும் ஏற்க இயலும்} ||104||
அனைத்து சாஸ்திரங்களையும் நன்றாக படித்த பின்னர் , தனக்கு உண்மையாகவே எது நன்மை பயக்கும் என்பதை ஒருவன் கண்டறிய வேண்டும். எப்படி ஒரு அன்னப் பறவையானது (ஹம்சம்), நீர் கலந்த ஒரு பாத்திரத்திலிருந்து நீரை விலக்கி விட்டு, பாலை மட்டுமே அருந்துமோ அப்படியாகவே, தமக்கு ஏற்ற சாஸ்திரத்தை கற்றுக் கொண்டு ஞானத்தை அடைய முயல வேண்டும்’ இவ்வாறு ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் கூறி முடித்தார் ||105||
ஸ்ரீமத் தத்தாத்திரேய பகவான் உரைத்த போதனைகளை ஆர்வத்துடனும் , கவனத்துடனும் கேட்ட பின்னர் கார்த்தவீர்யார்ஜுனன் எனும் அர்ஜுனன், தான் தேடி வந்த அந்த தெய்வத்திடம் மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் பின்வருமாறு கூறினான் ||106||
‘இந்தத் தூய சஹ்யாத்ரி மலைக்கு வந்ததற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்; சற்றே கலைந்த சுருள் முடிகளால் சூழப்பட்ட உங்களது திவ்ய திரு முகத்தை தரிசிக்கும் பேறு எனக்குக் கிடைத்தது; இதன் விளைவாக, எனது ஆத்மா வும், எனது இல்லமும் பெரும் செழுமையை பெரும் என்ற நம்பிக்கை உள்ளது ‘||107||
முடிவில் அர்ஜுனன் தான் விரும்பிய, தான் தேடி அலைந்த பற்றற்ற நிலையை (வைராக்கியத்தை) அடைந்தான்; அவனது குருநாதரால் போதிக்கப்பட்ட சாஸ்திரங்களின் சாரத்தை முற்றிலுமாக கவனத்துடன் கேட்டு தன்னுள் அதை உள்வாங்கி கொண்டு தன்னுள் தக்க வைத்து கொண்டான் – இந்த நிலையை அடைவதும் தெய்வத்தின் அருளினால் மட்டுமே சாத்தியமாகிறது||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் பதினோராம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை:108
முதலாவது அத்தியாயம் முதல் பதினோராம் அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108+1082 = 1190
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
.…..இதோடு பாகம் -4, அத்தியாயம் -11 முடிவடைந்தது
அத்தியாயம் -12 தொடர்கின்றது