COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -1 : மங்கல துவக்கம்

அத்தியாயம்-3
பிராமணர் கௌசிகர் மீண்டும் புத்துயிர் பெறுதல்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

அந்த கதையை தனது சீடர் தீபக்கிற்கு கூறிக் கொண்டு இருந்த குரு வேத தர்மா கூறினார் ‘உண்மையான சீடனே இனி கூறப்போகும் கதையை கவனமாகக் கேள்; அனுசூயாவிடம் கெளதம முனிவரின் மனைவி அவ்வாறு கூறியவுடன், அன்னை அனுசூயா தம்முடன் வந்திருந்த தேவர்களை ஒருமுறை நோக்கினார்; அதன்பின், பின்வருமாறு பதிலளித்தார்||1||

‘நீ சாபமிட்டு உதிக்காமல் செய்துள்ள சூரியனை மீண்டும் உதிக்கச் செய்யுமாறு நீ கேட்டுக் கொள்வாய் என்ற நம்பிக்கையில், தேவர்கள் அனைவரும் உன் இல்லத்தில் கூடியுள்ளனர்; அவர்கள் அனைவரும் உன்னிடம் அதையே பணிவுடன் கேட்டுக் கொள்கின்றார்கள்; என் மனதிலும் அதே எண்ணமே உள்ளது ||2||

சூரியன் மறைந்து விட்ட நேரத்திலிருந்து இதுவரை எவராலும் எதையும் கணிக்க முடியவில்லை; அதன் விளைவாக, அனைத்து வேதச் சடங்குகளும் நின்று போய் விட்டன; இத்தகைய நிலை நீடிப்பதினால் அனைத்து மக்களும் தேவையற்ற துன்பங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்; ஆகவே இப்படிப்பட்ட சாபம் விலக்கிக் கொள்ளப்படாவிடில் நமக்குள்ள சக்தியை நாம் துஷ்பிரயோகம் செய்வதை போல ஆகி விடும் ||3||

இந்த உண்மைகள் அனைத்தையும் நன்கே அறிந்துள்ள கற்புக்கரசியே, நீ ஏன் இன்னமும் இந்த துரதிஷ்டவசமான நிலைமையை நீடிக்க வைப்பதில் பிடிவாதமாக இருக்கின்றாய்?; அனைவரது நலனுக்காக தன்னுயிரையே தியாகம் செய்ய வேண்டியபோது, நீ வீணான பிடிவாதத்தைப் பற்றிக் கொண்டு அனைவரையும் துன்பத்திற்கு உள்ளாக்குவது நியாயமான செயல் இல்லை அல்லவா’ என்று அனுசூயா கேட்டாள் ||4||

அதற்கு கௌசிகனின் பக்தி மிக்க மனைவி கூறினாள் ‘அன்னை அனுசூயா அவர்களே, விவேகம் எதைக் கூறுகிறது?; நான் சூரியனை உதிக்கச் செய்தால், நான் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி விடுவேன்; என்னை ஆறாத துயரங்கள் சூழ்ந்து கொள்ளும்||5||

அதன் காரணம் மாண்டவ்ய முனிவரின் சாபம் மாற்றியமைக்க முடியாத ஒன்றாகும்; என் கணவரே என் உயிர் மூச்சாவார்; சூரியன் உதித்த அடுத்த கணமே அவர் உயிரை இழக்க நேரிடும்; அது எனக்குப் பேரிழப்பாகவும், என் வாழ்க்கையில் மிகக் கொடுமையானதாகவும் அமையும்; இந்த உண்மையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்’ ||6||

அதற்கு அன்னை அனுசூயா பதிலளித்தாள் ‘ஓ கற்புக்கரசியே , சாபத்தின் காரணமாக உன் கணவன் இறக்க நேரிட்டாலும், அந்த கணமே அவரது உடலில் உள்ள ஒரு மயிர்க் கால் கூட சேதம் அடையாமல் நான் அவரை மீண்டும் உயிர் பிழைக்க வைத்துத் தருகின்றேன் ||7||

எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் உனது கணவர், அனைத்து வியாதிகளும் விலகி, நல்ல உடல் நலத்தோடு உயிர் பிழைத்து எழுவார்; நீ மனதளவில் கற்பனை செய்து கொள்ளும் துயரங்களுக்கு சிறிதும் இடமளிக்காதே; நான் தரும் வாக்கின் வலிமையையும் சத்தியத்தையும் உன் மனதில் ஆழமாக பதிய வைக்கவே இவற்றை நான் மூன்று முறை கூறுகிறேன்’ என்றாள் ||8||

அனுசூயா கூறிய வார்த்தைகளைக் கேட்ட கௌசிக முனிவரின் மனைவி மனதை திடமாக வைத்துக் கொண்டு, அனுசூயா கூறியதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்று கூறிய பின்னர் சூரிய பகவானை வணங்கி விட்டு சூரிய பகவானிடம் கூறினாள் |9||

‘ஓ சூரிய பகவானே, எண்ணற்ற ஒளிக் கதிர்களை கொண்டவரே, சர்வ வல்லமை படைத்தவராயினும், எனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நின்றவரே, நீர் என் வார்த்தைகளை புறக்கணிக்காமல், அவற்றுக்கு மதிப்பு அளித்து உதிக்காமல் இருக்கின்றீர்கள்; அதற்காக உங்களுக்கு என் பணிவான வணக்கங்களை தெரிவிக்கின்றேன் ||10||

ஆனால் உலக நன்மைக்காக இப்போது நான் கூறியவற்றை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்; தயவு செய்து விரைவில் நீங்கள் எழுந்தருள வேண்டும்’ இவ்வாறு அவள் மரியாதை கலந்த வேண்டுகோளை சூரிய பகவானிடம் விடுக்க, வானில் சூரியன் மீண்டும் தோன்றினார்||11||

நீங்கள் எழுந்தருளக் கூடாது என்று அந்தப் பதிவிரதை வேண்டிக் கொண்டபோது மறைந்து இருந்த சூரிய பகவான்; மீண்டும் தோன்ற வேண்டும் என்று அவள் கோரிக்கை விடுத்ததும், அவளுக்குரிய மரியாதையை உடனடியாக அளித்து, மூன்று உலகங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் அளவிலான ஒளி வீசியவாறு சூரிய பகவான் வானில் தோன்றினார் ||12||

ஒரு பதிவிரதை, நீண்ட பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பும் தன் கணவனைக் காணும்போது முகத்தில் புன்னகையும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்க அவனை வரவேற்பாள்; அப்போது அவளது முகம், சூரிய உதயத்தின்போது மலரும் தாமரை மலரைப் போலவே பொலிவு பெறுகிறது ||13||

அதே போலவேதான் வானில் சூரியன் உதித்த அதே கணத்தில், இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடந்தேறின; இருள் அனைத்தும் அகன்றது; அதே வேளையில், அந்தப் பதிவிரதையின் கணவனான அந்தணரின் உயிரும் பிரிந்தது ||14||

அதைக் கண்டதும் அந்தப் பதிவிரதையின் முகம் பொலிவிழந்து வெளிறிப் போயிற்று; உடனே அன்னை அனுசூயா அவளுக்கு ஆறுதல் கூறினாள்; அஞ்ச வேண்டாம், அமைதியோடு இருந்தவாறு நான் முன்னரே உனக்குக் கூறிய உறுதி மொழிகளை நினைவு படுத்திக் கொள்||15||

நான் முழுமையான பக்தி பூர்வத்தோடு எனது உடலை வருத்திக் கொண்டு, சொல்லிலும் செயலிலும் எந்த குறை பாட்டையும் காட்டாமல், என் கணவனுக்கு செய்யும் சேவையில் உறுதியான பக்தியோடு இருந்தவாறு, என் மனம், உடல் மற்றும் வாக்கு ஆகிய மூன்றாலும், தர்ம நெறி வழுவாமல் சத்தியத்தைக் கடைபிடித்தவாறு, என் கணவனுக்குப் பணிவிடை செய்திருப்பேனானால்… ||16||

என் கணவரை விடச் சிறந்தவராக நான் வேறொருவரையும் கனவு நிலையில் கூட நான் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை என்பது சத்தியம் என்றால், கற்புடைய மனைவிக்குரிய அற வழியில் நான் என்றென்றும் வழுவாமல் உறுதியுடன் இருந்திருந்தேன் என்பது உண்மை என்றால், அவ்வாறே என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்து வந்துள்ளேன் என்பது உண்மை என்றால்….. ||17||

அத்தகைய முழுமையான அறச் செயலால் கிடைத்த புண்ணியத்தின் ஒரு சிறு பகுதியின் விளைவாக, இந்த அந்தணர் மீண்டும் உயிர் பெற்று எழ வேண்டும்; அவர் சகல நோய்களிலிருந்தும் முழுமையாக நிவாரணம் பெற்றவராக இருந்து கொண்டு, நூறாண்டு வாழும் வகையில் மீண்டும் விழித்தெழட்டும் ||18||

மீண்டும் எழும் இவரது மனம், தடம் புரண்டு, இங்குமங்கும் அலை பாய்ந்து கொண்டு இருந்திருந்தாலும், இனிமேல் அவற்றை துறந்து விட்டு தூய வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், அவரது மன நிலையை வந்தடையட்டும்’ என்று உரத்த குரலில் கூறினாள்||19||

அன்னை அனுசூயா இவ்வாறாக சூளுரைத்ததும், இறந்து கிடந்த கௌசிக முனிவர் தூக்கத்தில் இருந்து எழுந்தவரைப் போல விழித்து எழுந்தார்; அவர் தனது மனைவியை நோக்கி நடந்து சென்று, அவளருகே அமர்ந்தார்; அந்த காட்சியைக் கண்ட அந்தப் புண்ணிய தம்பதியினர் (அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா அன்னை) அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர் ||20||

அந்த அந்தணர் அகத்தாலும் புறத்தாலும் முழுமையாக மாற்றம் அடைந்திருந்தார் என்பது தெரிந்தது; அவரது முகத்தில் மிளிர்ந்த தெய்வீக ஒளியை அவரது மனைவியால் தெளிவாகவே உணர முடிந்தது; அதைக் கண்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்; கூடியிருந்த தேவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் மீது மலர்களை பொழிந்தனர் ||21||

கூடியிருந்த தேவர்கள் அனைவரும் அனுசூயாவை மரியாதையுடன் தலை வணங்கினர்; தேவலோக மங்கையர் ஆனந்தப் பரவசத்துடன் நடனமாடத் தொடங்கினர். தேவலோக இசைக் கலைஞர்களான கந்தர்வர்கள், அன்னை அனுசூயாவின் புண்ணியப் புகழைப் பாடியவாறே இசைக் கருவிகளை இசைத்துப் பாடினார்கள் ||22||

‘கற்புக்கரசிக்கான இலக்கணமே, வாழ்க, வாழ்க; வேதங்களில் மறைந்துள்ள மெய்ப் பொருளே, அத்ரி முனிவரின் அன்புத் துணைவியே, வாழ்க, வாழ்க; தர்மத்தின் சிகரமே, வாழ்நாள் முழுவதும், முழுமையான மன நிறைவுடன் கணவருக்குப் பணிவிடை செய்பவளே வாழ்க, வாழ்க; உனது கற்பின் வலிமையினால் சூரியனை மீண்டும் உதிக்கச் செய்து, அதன் மூலம் அனைவரது துயரங்களையும் நீக்கியவளே, தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிப்படியே வாழ்ந்து வந்துள்ள பொறுமையின் சிகரமே, ஆரிய நாட்டின் அன்னையே, நாங்கள் அனைவரும் உனக்கு தலை வணங்குகிறோம்’||23||

கூடியிருந்த தேவர்கள் அவளை நோக்கி கூறினர் ‘நீ இவ்வுலகைப் பேரழிவிலிருந்து காத்திருக்கிறாய்; மிகவும் கடினமான அரும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறாய். அதன் மூலம், எங்களனைவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்திருக்கிறாய்||24||

‘நாங்கள் அனைவரும் உங்கள் மீது மிகுந்த மகிழ்ச்சி கொண்டுள்ளோம்; எனவே, நீங்கள் விரும்பும் வரங்களை தர ஆசைப்படுகின்றோம்’ என்றார்கள்; அதைக் கேட்ட அன்னை அனுசூயா அவர்கள் அனைவரையும் பக்தியோடு வணங்கி ‘இந்த சபையில் கூடியுள்ள தேவர்களே,நான் உங்களிடம் எதைக் கேட்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்? ||25||

தர்ம நெறி சார்ந்த வழியில் நடப்பதிலேயே நான் முழுமையான திருப்தி கொண்டுள்ளேன்; அதையும் மீறி நீங்கள் எனக்கு வரங்களை அருள விரும்பினால், நான் பணிவுடன் கேட்கும் ஒரே ஒரு வரம் இதுதான்; நான் உயிருடன் உள்ளவரை முழுவதும் என் கணவருடனேயே இணைந்திருக்க வேண்டும் ||26||

பிரம்மா, விஷ்ணு மற்றும் முக்கண் கொண்ட சிவபெருமான் ஆகிய மூவரும் என் புதல்வர்களாக அவதரிக்க வேண்டும்; எனக்கு இவ்வுலகம் சார்ந்ததோ அல்லது மறுவுலகம் சார்ந்ததோ வேறு எதுவுமே தேவை இல்லை; என் மனம் வேறு எதன் மீதும் சலனப்படாமல் இருக்க வேண்டும்’||27||

அதற்கு பதிலளித்த தெய்வங்கள் கூறினார்கள் ‘உனது விருப்பம் நிறைவேறும். விதி (பிரம்மா), ஹரி (விஷ்ணு) மற்றும் ஹரன் (சிவன்) எனும் மூன்று தெய்வங்களும் உமது புதல்வர்களாகப் பிறப்பார்கள்; நிச்சயமாக அவர்கள் உங்களுக்கு மகனாகப் பிறந்து இந்த உலகின் மேன்மையை நிலை நாட்டுவார்கள்; அன்னை அனுசூயா இதை நீங்கள் முழுமையாக நம்பலாம்’ ||28||

இப்படியாக அனுசூயா அன்னைக்கு அங்கு வந்திருந்த தெய்வங்களும், தேவர்களும் அருள் புரிந்த பிறகு பிறகு, அவர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு தத்தமது தேவலோகங்களுக்கு திரும்பிச் சென்றார்கள். முனிவர் அத்திரியும் அன்னை அனுசூயாவும் தமது ஆஸ்ரமத்திற்கு திரும்பிச் சென்றார்கள்||29||

இதற்கிடையில், மாண்டவ்ய முனிவரைத் திருடன் என்று தவறாகக் கருதிய மன்னன், தனது தவறை உணர்ந்தான். உடனே அவரைத் தூக்கு மேடையிலிருந்து கீழே இறக்கி, அமைதியான சொற்களால் அவரிடம் மன்னிப்புக் கோரினான்; முனிவரும் அவனை மன்னித்தருளி விட்டு, நேராக மரணத்தின் அதிபதியான எம தர்மராஜனிடம் சென்றார் ||30||

மாண்டவ்ய முனிவர் எம தர்மராஜனிடம் கேட்டார் ‘ஒரு மன்னன் என்பவன், இவ்வுலகைக் காக்கும் தெய்வீக காவலர்களின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறான். எனவே, ஒரு மன்னன் எத்தகைய தண்டனையை அறிவித்தாலும், அது அந்த தெய்வீகக் காவலாளிகளின் தலைவனிடம் இருந்து நேரடியாக வந்ததாகவே கருதப்படும் ||31||

ஆகவே, நான் எதற்காக தவறாக தூக்கிலிடப்பட்டேன் என்பதின் காரணத்தை எனக்கு விரைவாக கூற வேண்டும்’. அதற்கு எம தர்மராஜன் பதிலளித்தார் ‘முனிவரே, நீங்கள் சிறு வயதாக இருந்தபோது, ஒரு பறவையின் உடலில் முட்களைக் குத்தி அதைக் கொடுமைபடுத்தினீர்கள் ||32||

அந்தப் பாவச் செயலின் விளைவாகவே, நீரும் இப்போது தூக்கிலிடப்பட்டீர்கள்’; அதற்கு அந்த முனிவர் பதில் கூறினார் ‘இதை நியாயமான தண்டனையாக ஏற்க முடியாது. ஏன் எனில் ஏனெனில், பக்குவமடையாத சிறுவர்களால் சிறுவயதில் செய்யப்படும் பாவங்கள், அக் குழந்தையின் தந்தையை சென்று சேருமே தவிர, அக் குழந்தையை சேராது||33||

ஆகவே, யமதர்மனே, நீங்கள் தர்மத்தின் வடிவமாகத் திகழ்ந்த போதிலும், என் விஷயத்தில் அந்தத் தர்மத்தை தவறாக பயன்படுத்தி விட்டதினால் நீர் ஒரு பணிப் பெண்ணின் மகனாகப் பிறக்க நேரிடும்’ என்று சாபமிட்டார்; அதன் விளைவாகவே யம தேவரும் மகாபாரத இதிகாசத்தில் வரும் ‘விதுரராக’ அவதரிக்க வேண்டியதாயிற்று; யம தேவரின் சாபம் விலகும்வரை யம தேவரின் தண்டத்தை (செங்கோலை) ஆரியமா தேவர்* என்பவரே ஏந்தியிருந்தார்
{*ஆர்யமன் (Aryaman) ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு முக்கியமான மற்றும் உயர்ந்த தேவர் ஆவார். இவர் சூரியன், மித்ரன், வருணன் ஆகியோருடன் ஆதித்யர் எனப்படும் குழுவில் ஒருவராகக் கருதப்படுகிறார்; இவர் நீதி மற்றும் நேர்மையின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். } ||34||

அந்த கதையை தீபக்கிற்கு கூறிக் கொண்டு இருந்த முனிவர் வேத தர்ம தொடர்ந்து கூறினார் ‘இப்போது நான் கூறுவதைக் கேட்பாயாக. ஓ தீபக்! அன்னை அனுசூயாவிற்கு அளிக்கப்பட்ட வரத்தை நிறைவேற்றும் பொருட்டு, மும்மூர்த்திகளும் அவளுடைய தெய்வீக மற்றும் புனிதமான கருப்பையில் பிரவேசித்து, அவளே விரும்பிப் பெற்றெடுத்த சொந்தக் குழந்தைகளைப் போலவே அங்கே வளர்ந்தனர்||35||

எவரை நினைத்த மாத்திரத்திலேயே ஒருவன் அனைத்து பந்தங்களிலிருந்தும் விடுதலை அடைகின்றானோ, எவர் ஒருவருக்கு இறப்பும் பிறப்பும் இல்லையோ, அத்தகைய பரமாத்மா, ஒரு தாயின் கருப்பையில் சிறை இருந்து பிறக்க விரும்புவாரா?; அவர் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர் என்றாலும், தம் பக்தர்களின் மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்தும் விதத்தில் அன்னை அனுசூயாவின் கருப்பையில் பிரவேசித்தார்
{ விளக்கம் :- உண்மையில் அது ஒரு மாயைதான். அவர் அவ்வாறு செய்தது மற்றவர்கள் கண்களுக்கு அவ்வாறு தெரிய வேண்டும், அவர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக செய்த ஒரு நிழல் நாடகமே ஆகும். ஆகவே இந்த நாடகமும் ஒரு வகையில் பந்தம் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்ட நாடகமாகவே கருத வேண்டும். பந்தம் என்பது தர்மத்தினால் உருவாகி மறு பிறவியில் முடிவடையும்} ||36||

மாதங்கள் உருண்டோடின; அன்னை அனுசூயா அதற்கு முன்னர் எவரும் கேட்டிராத ஞான மொழிகளை உரைத்து வந்தாள்; அவ்வாறாக ஒன்பது மாதங்கள் நிறைவுற்றன; அந்த ஒன்பது மாதங்களிலும் முனிவர் அத்திரி அனைத்து சடங்குகளையும் முறைப்படி நிறைவேற்றி வந்து கொண்டிருந்தார்||37||

மார்கழி மாத பௌர்ணமி தினத்தன்று, புதன்கிழமை, பிரதோஷ வேளையில், மிருகசீரிஷ நட்சத்திரம் (மான் வடிவிலான விண்மீன் கூட்டம்) ஒளிரும் ஒரு தெய்வீக மற்றும் புனிதமான தினத்தில், அன்னை அனுசூயா ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்||38||

அச்சமயத்தில் முனிவர் அத்திரி அங்கு வந்து சேர்ந்தார்; தன் மகனின் முகத்தை உற்று நோக்கிய அவர், ஒரே கணத்தில் மும் மூர்த்திகளின் (படைத்தல், காத்தல், அழித்தல் தெய்வங்களின்) திருவடிவை அந்த குழந்தை முகத்தில் கண்டு வியப்பால் திகைத்து நின்றார்||39||

கீழ் இரு கரங்களில் ஜப மாலையையும் கமண்டலமும், நடு இரு கரங்களில் திரிசூலமும், டமருகமும் (சிறிய உடுக்கை) காணப்பட, மேல் இரு கரங்களில் சங்கும் சக்கரமும் கொண்டவராக காட்சி அளித்த குழந்தை, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தெய்வங்களின் வடிவத்தில் அந்த முனிவருக்கு காட்சி அளித்தார் ||40||

காவி நிற ஆடைகளை அணிந்தவாறும், திருமேனி முழுவதும் திருநீறு பூசி, சிரசில் ஜடா முடியைத் கொண்டு, பெற்றோர் பாசத்திற்கு இருப்பிடமாகத் திகழ்ந்த அந்தத் தெய்வத்தை, அனுசூயா பக்கத்தில் இருந்த குழந்தையின் மீது அந்த மாமுனிவர் கண்டு களித்தார்||41||

அந்தத் திவ்ய வடிவை தரிசித்தவர், ஆழ்ந்த நன்றியுணர்வுடன், தனது மனைவி அனுசூயாவுடன் சேர்ந்து இரு கரங்களையும் கூப்பி, குழந்தை வடிவில் தோன்றிய தெய்வத்தை வணங்கிய பின்னர், அவரை போற்றித் துதிக்கத் தொடங்கினார்||42||

போற்றி, போற்றி, எல்லையற்ற பரம்பொருளே, போற்றி; இறப்பும் பிறப்பும் அற்றவரே, பிரித்துப் பார்க்க முடியாத, எந்த மாற்றமும் அற்ற மெய் பொருளே, உலகத்துக்கே மூலாதாரமாக திகழ்பவரே, போற்றி, போற்றி; மாற்றமே இல்லாத, தனித்து நிலைத்திருக்கும் சத்தியத்தின் வடிவமே போற்றி ||43||

அனைத்து இடங்களிலும் வியாபித்து பரமாத்மனும், எவருடைய திவ்ய திருஉடலில் அனைத்து விண்மீன் மண்டலங்களும் (எண்ணற்ற அண்டங்கள்) உலவிக் கொண்டிருக்கின்றனவோ, அந்த பரமாத்மனே, இங்கு வந்து ஒரு தாயின் கருவினுள் புகுந்து தம்மை வெளிப்படுத்திக் கொள்ள சம்மதித்தது எம்மால் நினைத்தே பார்க்க முடியாமல் உள்ள ஒன்றாகும் ||44||

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் நீ மட்டுமே இருந்து பிரபஞ்சத்தை படைத்தாய்; படைக்கப்பட்டவற்றை நிலை நிறுத்தத் செய்யும் காலத்திலும் நீயே சத்திய உருவாய் நின்றிருக்கின்றாய்; பிரளய காலத்தில் அனைத்தும் அழிந்த பின்னரும், காலங்களைக் கடந்த மெய்ப் பொருளாய் நீயே நிலைத்திருப்பாய்; இவை அனைத்தும் நீயே உரைத்த அருள் மொழிகள் அல்லவா?; அவை எவ்வாறு பொய்யாக முடியும்? ||45||

உமது தெய்வீக மற்றும் புனிதமான புகழை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தவாறு, பக்தர்களின் உள்ளத்தில் வெளிப்படாமல் உறங்கிக் கிடக்கும், தேவையற்ற உலக பந்தங்களின் மீதான ஆசாபாசங்களை அழித்து அவர்களைக் காப்பவரே, உமது பக்தர்களை காக்கும் கடமையில் நீர் ஒருபோதும் தளர்ச்சி அடையாமல் உள்ளீர்கள் ||46||

நீர் முற்றிலும் சுதந்திரமானவர், தனித் தன்மை கொண்டவர்; அடியவர்களின் பக்தி உணர்வுகளுக்கு ஏங்கி நிற்கிறீர்; அதனால் அந்த பக்தர்களின் பக்திக்கும் கட்டுப்பட்டு விடுகின்றீர்கள்; உம்மை முழுமையாக உணர்ந்து கொள்ளும் வகைக்கான மூல துதிகளோ அல்லது சூத்திரங்களோ எதுவும் கிடையாது; ஒரு பொறியாளன் தனது இயந்திரத்தை இயக்குவது போலவே, நீங்களும் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வருகின்றீர்கள்||47||

தற்போது நீங்கள் காட்சி தரும் திரு உருவத்தில் நீங்களே எங்களுக்கு மகனாகத் இருக்கின்றீர்கள்; இதை நாங்கள் யாரிடம் சென்று உரைத்தாலும் அவர்கள் நகைப்பார்கள் என்பதினால் நீங்கள் சிறு குழந்தையின் வடிவில் இங்கு இருப்பதே சிறந்ததாகும்; அது அனைவருக்குமே அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மனதளவில் சங்கடம் இன்றி ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும்||48||

உங்களை எங்களுடைய தெய்வ மகனாகவே பாவித்து, உங்களை வளர்க்கும் கடமையை நாங்கள் மேற் கொள்வோம்; அந்த வழி முறையில் மட்டுமே உங்களது மாய சக்தியால் ஏற்பட்ட திரையை எங்களால் விலக்க முடியும்’ என்று கூறிய பின்னர் அந்த பக்தி மிக்க தம்பதியினர் அங்கு காட்சி தந்து கொண்டிருந்த இறைவனின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்||49||

பாதங்கள் வரை நீண்ட மலர் மாலை அணிந்திருந்தபடி காட்சி தந்த அந்த தெய்வம் அவர்களுக்கு இவ்வாறு கூறினார் ‘முன் ஒரு காலத்தில் , நீங்கள் குலச்சல மலையில் கடுந் தவம் புரிந்தவாறு இருந்தபோது உங்களுக்கு நாங்கள் மூவருமே காட்சியை தந்தோம். அப்போதுதான் முதன் முதலில் நீங்கள் இருவரும் எங்களை தரிசனம் செய்தீர்கள்||50||

நீங்கள் அந்த ‘ஒரே பரம்பொருளை’ (பரமாத்மனை) பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தில் இருந்தபோது உங்கள் முன் தோன்றிய எங்களை ‘நீங்கள் யார்?’ என்று கேட்பீர்கள்; அதற்குப் பதிலளித்த நாங்கள் ‘நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அந்த ‘ஏகமே’ அதாவது பரமாத்மன் நாங்கள்தான் இப்போது மூன்று வடிவங்களில் உங்களுக்குக் காட்சி தருகின்றோம்’ என்று கூறினோம் ||51||

காலப் போக்கில் ஏற்பட்ட சில நிகழ்வுகளினால் நாங்கள் பிட்ஷை எடுக்கும் அந்தணர்கள் வடிவில் உங்கள் இல்லத்திற்கு வந்தோம். எங்கள் பசியைத் தணிக்கும்படி உங்களை கேட்டுக் கொண்டோம்; அன்னை அனுசூயா, நீங்கள் மிக்க மதி நுட்பத்துடன் எங்கள் விருப்பத்தை நிறைவேற்றினீர்கள்; அதனால்தான் நாங்கள் உங்கள் குழந்தைகளாக உருமாறினோம் ||52||

அதன்பின், எங்கள் மனைவியார் மூவரும் உங்களை அணுகி, எங்களை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்குமாறு வேண்டினர்; அப்போது, உம்முடைய குழந்தைத் தொட்டிலானது வெறுமையாக இருந்து விடக் கூடாது என்பதற்காக அதை ஒரு குழந்தையினால் நிறப்ப வேண்டும் என்ற வகைக்கான வரத்தை கேட்டீர்கள்||53||

அந்த வரத்தை கேட்ட உங்களுக்கு அந்த வரத்தை தந்து விட்ட பின்னர் நாங்கள் மீண்டும் எங்கள் சுய ரூபங்களை அடைந்து, எங்கள் தேவியருடன் எங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினோம். அதன்பின், எங்கள் அடியவர்களான தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, நீங்கள் விரும்பிய வரங்களை உங்களுக்கு அருளினார்கள்||54||

அன்று நடந்தேறிய அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் நீங்கள் வேண்டிய வரத்தை உங்களுக்கு இப்போது நினைவூட்டினோம்; உங்களுடைய பக்தியின் மேன்மையை இந்த உலகிற்கு வெளிப்படுத்தவே இப்போது நான் மும்மூர்த்தி வடிவத்தில் காட்சி தந்தேன்||55||

உங்களது மேன்மையான பக்தி உணர்வுகளைக் கண்டே, நான் என்னை உங்களிடம் அர்ப்பணித்துக் கொண்டேன்; நீங்கள் என்மீது பொழியும் அன்பிற்கு நான் என்றும் கட்டுப்பட்டிருப்பேன்; இதை வலியுறுத்தும் விதமாக, நான் உங்களுக்கு மும்முறை உறுதியளிக்கிறேன்||56||

என்னைத் வழிபடுவது ஒருபோதும் வீணாகாது; அது ஆத்மா வை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வழிகாட்டும்’; இவ்வாறு திருவாய் மொழிந்த அந்தத் தெய்வம், கருமை நிறம் கொண்ட, அழகிய, மூன்று குழந்தைகளாக உருமாறியது||57||

அதன் பின்னர், அத்ரி முனிவர் நதிக்கு சென்று புனித நீராடி, சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்தபடியே ‘ஜாத-கர்மம்’* எனும் சடங்கை செய்தார்; உடன் கூடியிருந்த பிற முனிவர்கள் மற்றும் சான்றோர்கள் அந்த வைபவத்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு சடங்கை சிறப்பித்தார்கள்
{* ஜாத கர்மா (Jatakarma) என்பது இந்து மதத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் செய்யப்படும் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். இந்து தர்மத்தில் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 16 சடங்குகளில் (ஷோடச சம்ஸ்காரங்கள்) இது நான்காவது சடங்காகும்; பொதுவாகக் குழந்தையின் தொப்புள் கொடியை தாயிடமிருந்து பிரிக்கும் நேரத்தில் அல்லது அதற்கு முன்னதாக இந்தச் சடங்கு செய்யப்படுகிறது; குழந்தையின் நீண்ட ஆயுள், அறிவு மற்றும் ஆரோக்கியத்திற்காக செய்யப்படுகின்றன}||58||

தேவர்கள் மகிழ்ச்சி பெருக்கால் மலர் மாரி பொழிந்தனர்; தென்றல் காற்று இதமாக வீசியது; பரமாத்மன் இவ்வாறு அவதரித்ததால், உலகம் முழுவதும் அளவற்ற ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தது ||59||

பரமாத்மன் பிரபஞ்சத்தில் அவதரித்ததினால் அந்த மகிழ்ச்சியில் காய்காத மரங்கள் கூட கனிகளைச் சுமக்கத் தொடங்கின; குழந்தைப் பேறில்லாத பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றனர்; எங்கெல்லாம் பஞ்சம் தலை விரித்தாடியதோ, அங்கெல்லாம் அவை அனைத்தும் மறைந்து போயின||60||

அபார பக்தி கொண்ட அன்னை அனுசூயாவிற்கு அளவற்ற வாழ்த்துக்கள்; பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அவளே அன்னையாக திகழ்ந்தவள்; முன்னொரு காலத்தில், தெய்வக் குழந்தைகளாக மாறிய அவர்களுக்கு அவளே தன் மார்பிலிருந்து பாலூட்டி பசித் தாகத்தைத் தணித்தவள் ||61||

பன்னிரண்டாம் நாளன்று அத்ரி முனிவர் அந்தக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாவை நடத்தினார். தன்னிடம் இருந்த அன்பு மற்றும் ஞானம் அனைத்தையும் ஒன்று திரட்டி, அந்தத் தெய்வீகக் குழந்தைகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான பெயர்களை அவர் சூட்டினார்||62||

நம் அனைவருக்கும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்தத் தெய்வ குழந்தையை ஸ்ரீமத் ‘தத்தர்’ (Datta) என்ற திருப் பெயரால் அழைத்தார்; அனைவருக்கும் இதமான குளிர்ச்சியும் மகிழ்ச்சியையும் அருளும், பிரம்மா தேவனின் அம்சமாகத் திகழ்ந்த குழந்தையை சந்திரன் (Chandra) என்ற பெயரால் அழைத்தார் ||63||

ருத்திரனின் அம்சமாக அவதரித்த குழந்தையை துர்வாச (Durvasa) என்ற பெயரால் அழைத்தார். அதனால் அன்னை அனுசூயா அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள்; அவள் தன் விருப்பப்படியே மூன்று தொட்டில்களை அமைத்து, அந்தத் தெய்வீகக் குழந்தைகளைத் தாலாட்டித் தூங்கச் செய்தாள்||64||

தாலாட்டுப் பாடல்-1: பாரீர், பாரீர், பாரீர், பரபிரும்மனை பாரீர்; தம்மிடத்தில் பக்தி கொண்ட அடியவர்களுக்குப் புகலிடமாய் விளங்கும் அவரை பாரீர், பாரீர், பாரீர்; பரபிரும்மனை பாரீர்; சஹயாத்ரி மலையில், அத்ரி முனிவரின் இல்லத்தில், கற்புக்கரசி அனுசூயா தேவியின் கருவில் உதித்துத் தோன்றிய அவரை போற்றி, போற்றி, போற்றி; அவரே உள்ளத்தில் தூய்மையுள்ள அடியவர்களை மேன்மைப்படுத்தி அருள் புரிபவர்; இந்த பிரபஞ்சத்தை மேன்மைபடுத்திட எழுந்தருளியவர்; பக்தர்களுக்கு தாய் வீடு போன்றதே அவர் வாழும் இடம்; அனைத்திற்கும் அப்பாற்பட்ட அந்த பரந்தாமனை போற்றி, போற்றி, போற்றி||65||

தாலாட்டு-2 : மேன்மையான பக்தன் பிரகலாதருக்கு மெய் ஞானத்தை அருளியவர் அவரே; அவரிடம் அடைக்கலம் அடைந்த மன்னன் சஹஸ்ரார்ஜுனனுக்கு பலவிதமான சித்திகளை அருளி, அவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவரும் அந்த தெய்வம்தான்; அவரை தம் திருவடிகளில் சரணம் அடைய வைத்தவரும் அவரேயாகும்; மன்னர் அலர்க்கனுக்கும், யது குல மன்னனுக்கும் புகலிடமாக விளங்கி, அவர்கள் மேன்மையான நிலைக்கு செல்ல அருள் புரிந்த அனைத்திற்கும் அப்பாற்பட்ட அந்த பரமாத்மனை போற்றி, போற்றி, போற்றி ||66|

தாலாட்டு-3 : போற்றி, போற்றி, போற்றி, எல்லையற்ற பரம்பொருளே,பிரபஞ்சத்தின் ஆத்மாவாக விளங்குபவரே; அனைத்து இடங்களிலும் வியாபித்து உள்ளவரே, உனக்கு எங்கள் வந்தனம், எங்கள் வந்தனம்; தெய்வமே, உனக்கு எங்கள் வந்தனங்கள்; நீங்கள் படுத்துறங்கிய தொட்டிலை நான்கு திசைகளிலும் உள்ள நான்கு பள்ளங்களின் மூலைகளிலும் கட்டி வைத்துள்ளோம்; அந்த தொட்டில் இருபத்து நான்கு தத்துவங்களின்* சாரத்துடன் பிணைக்கப்பட்டு, மிக உறுதியாகப் பொருத்தப்பட்டுள்ளது.
{*சாங்க்ய தத்துவத்தின்படி, பிரபஞ்சம் மற்றும் மனித உடலின் உருவாக்கத்திற்கு காரணமான 24 தத்துவங்கள் ஆத்ம தத்துவங்கள் என அழைக்கப்படுகின்றன; 24 தத்துவங்களின் பட்டியல்: பிரகிருதி: அனைத்திற்கும் காரணமான மூல சக்தி; மஹத் (புத்தி); .அகங்காரம்: ‘நான்’ எனும் உணர்வு; மனம் (மனஸ்): சிந்திக்கும் கருவி; ஐந்து ஞானேந்திரியங்கள் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு; ஐந்து கர்மேந்திரியங்கள்: வாக்கு, கைகள், பாதம், பாயு (மல விசர்ஜனம்), உபஸ்தம் (இனப்பெருக்கம்); ஐந்து தன் மாத்திரைகள்: ஒலி, ஸ்பரிசம், ரூபம், சுவை, மணம்; ஐந்து பூதங்கள் (ஸ்தூல பூதங்கள்):ஆகாயம் வாயு, நெருப்பு, நீர், பிருதிவி ஆகும்}||67||

உம்மை (முற்பிறப்பு), இம்மை (தற்போதைய பிறப்பு), மறுமை (வருங்கால பிறப்பு) எனும் மூன்று முக்கியப் பிறப்பு நிலைகளைக் குறிக்கும் காலத்தை மூன்று இழைகளாக ஆக்கி அந்த கயிற்றால் தொட்டிலைக் கட்டி வைத்துள்ளோம்; உம்மை ஆட்டித் தாலாட்ட, பக்தி எனும் ஒரு கயிறு எங்களிடம் உள்ளது;அப்படியிருக்க, நீங்கள் ஏன் வீணாக உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? ||68||

புறம் பேசுபவர்களை ஒதுக்கி வையுங்கள்; சாது சன்யாசிகளின் புகழாஞ்சலிகளைக் கேளுங்கள்; அப்போது எழும் உறக்கம் இறைவனோடு ஒன்றிணையும் நிலைக்கு அழைத்துச் செல்லும்; அங்குதான் ஆனந்த நிலையிலான ஆத்மாவுடன் ஒன்றிணைந்து கொள்ள கொண்டிருக்க முடியும் ||69||
[இதோடு தாலாட்டுப் பகுதி நிறைவடைகிறது]

படைத்தல், காத்தல், மற்றும் அழித்தல் எனும் மூன்று தொழில்களையும் செய்பவரே இங்கே ஒரு குழந்தையாக உருவெடுத்து உள்ளார்; அன்னை அனுசூயா, தன் கைகளாலேயே அந்த குழந்தையைத் திரும்பத் திரும்பத் தடவிக் கொடுத்து, உறங்க வைக்கிறாள்; உண்மையான பக்தியினால் அந்த அன்னைக்கு கிடைத்துள்ள ஆனந்த மயமான நிலையைப் பாருங்கள்||70||

மூவுலகையும் காப்பவர் என்று போற்றப்படுபவர் பசி எடுக்கும்போது, அன்னை அனுசூயாவிடம் தனது ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்; உண்மையில், அவர் பசிக்கு கேட்டதெல்லாம் பக்தர்களின் தூய்மையான பக்தி உணர்வுகளைதான் ||71||

இரண்டு குழந்தைகள் அன்னையின் அனுசூயாவின் இரு மார்புகளிலும் பால் அருந்திக் கொண்டிருக்கையில், மூன்றாவது குழந்தையான இவர், உரக்கக் கூச்சலிட்டு அழத் தொடங்குகிறார்; உடனே அன்னை அனுசூயா, தன் அமுதமயமான கருணைப் பார்வையால் அவரை பார்க்கும் பார்வையிலேயே அவர் அமைதி அடைந்து விடுகின்றார் ||72||

எண்ணற்ற வேத யாகங்களில், அவருக்காக ஆஹுதியில் போடப்பட்ட பலிகளாலும் முழுத் திருப்தி அடையாதவர், அன்னை அனுசூயாவின் கரத்தால் ஊட்டப்பட்ட உணவை உண்டு திருப்தியடைந்து, ஏப்பம் விட்டுத் தன் நிறைவை வெளிப்படுத்துவார் ||73||

பிரபஞ்சத்தில் எத்தகைய இன்பங்களை ஒருவன் அடைந்தாலும், அவை நிச்சயமாகத் தூய பக்தியின் விளைவாக கிடைத்து இருக்க முடியாது; எந்த ஒருவரும் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்து முக்தி அடைந்தாலும் சரி அந்த மகிழ்ச்சியான நிலை கூட, பக்தியினால் இவர்களுக்கு கிடைத்த ஆனந்த மயமான நிலையோடு ஒப்பிட முடியாத அளவில் குறைந்தே காணப்படும் ||74||

எல்லையற்ற அன்பு ஒன்றே தூய பக்திக்கான உண்மையான பலனாகும்; அப்படியிருக்க, அந்தத் தெய்வீகக் குழந்தையைத் தன் கரங்களால் வளர்த்துப் பேணியதற்கு என்ன வெகுமதி கிடைக்க முடியும்?; அதற்குப் பலன் முன்னோர் அனைவரும் மேன்மையான நிலையை அடைவார்கள் என்று எவரேனும் கூறினால், அந்தப் பலன் இச்செயலின் {தெய்வத் குழந்தையை வளர்த்ததிற்கு} மகத்துவத்திற்கு முன் மிகவும் அற்பமானதாகவே கருதப்படும்’ ||75||

பிரபஞ்சத்தை தோற்றுவித்தவர் இப்போது ஒரு குழந்தை வடிவில் வந்துள்ளார்; எத்தனை தலைமுறைகளாக செய்திருந்த புண்ணியங்கள் இந்த அளவிலான தெய்வீகப் பரிசைப் தந்திருக்க முடியும்?; இந்த நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பது எவராலும் புரிந்து கொள்ள முடியாது; அதை இந்த மகிழ்ச்சியான விளையாட்டை நடத்தியவர் மட்டுமே அறிவார்||76||

‘மூன்று மகன்களில், சந்திர பகவான், பக்தி மிக்க பெற்றோரை வணங்கி, சந்திர லோகத்துக்கு சென்று, தனது கதிர்கள் மூலம் மருத்துவ குணங்களைக் கொண்ட தாவரங்களுக்கு புத்துணர்ச்சியையும் உயிரையும் அளித்து, குழந்தைகள் மற்றும் பிற குழந்தைகள் பூமியில் உயிர் வாழ உதவி செய்யலானார்||77||

முன் கோபத்திற்கு பெயர் பெற்ற துர்வாச முனிவர், துறவிகளுக்கு ஏற்ற வாழ்க்கையில் இருந்து கொண்டிருந்து, அங்கும் இங்கும் சென்ற வண்ணம் இருந்தார்; எங்கெல்லாம் துறவிகள் கீழ்த்தரமான வாழ்க்கையில் இருந்தார்களோ அவர்களை தண்டித்தும் கண்டித்தும் அவர்களை தூய்மையான வாழ்க்கையில் வழி நடக்க வைத்துக் கொண்டு இருந்தார் ||78||

தன் இரு மகன்களும் பிரிந்து செல்வதைக் கண்ட அன்னை அனுசூயா இயல்பாகவே துயரத்தில் ஆழ்ந்தாள்; அப்போது ஸ்ரீமத் தத்தர் அவள் முன் சென்று ‘அன்னையே, கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைச் சற்று நினைத்துப் பார்’ என்று கூறினார்’ ||79||

அவள் அவ்வாறே செய்தபோது, மும்மூர்த்திகளின் அற்புதமான ரூபத்தை அதே அழகுடன் தரிசித்தாள்; அது மட்டும் அல்ல, மெல்ல, மெல்ல அந்த உருவம் உலகம் முழுவதையும் வியாபித்திருப்பதை கண்டாள்; அதைக் கண்டவளின் மனதும், இதயமும் (அகமும் புறமும்) வியப்பில் ஆழ்ந்தன ||80||

அவளது அந்தப் பரவச நிலையைக் கண்ட பரமாத்மன், தனது யோக சக்தியான ‘யோகமாயை’யை வெளிப்படுத்தி, தனது முழுமையான ஆற்றலையும் வெளிப்படுத்த, அந்த மாய சக்தி தூய்மையான எண்ணம் கொண்டிருந்த அன்னை அனுசூயாவை சற்று தடுமாற வைத்தது; அடுத்த நிமிடம், அவரே மீண்டும் ஒரு பச்சிளங் குழந்தையின் வடிவம் பூண்டு, அன்னையிடம் பால் அருந்தத் தொடங்கினார் ||81||

தனது யோக வலிமையினால் தான் எத்தகைய தெய்வம் என்பதையும், தன்னுடைய சுய உருவையும் அனுசூயாவிற்கு வெளிப்படுத்திக் காட்டிய பின்னர், மீண்டும் தனது திவ்ய சரீரத்தை குழந்தை வடிவிலாக்கிக் கொண்டு, தனது திருவிளையாடலை நடத்தினார் ||82||

அவர் ஒரு பச்சிளங் குழந்தை போலவே மழலை மொழி பேசினார்; இவ்வுலகப் பொருட்களின் மீது பற்றுக் கொண்ட குழந்தை மயங்குவதை போலவே நடித்தார்; பேச இயலாதவர்களுக்கும் கூட வளமான பேச்சுத் திறமையை மீட்டுத் தரும் அந்தப் பரமாத்மன், அத்தகைய திருவிளையாடலை எதற்காக நிகழ்த்தினார்?||83||

முடவர்களையும் நடக்கச் செய்யும் அந்த தெய்வம், தானே பிஞ்சு நடைகளை எடுத்து வைத்தார்; பிரபஞ்சத்திற்கே ஆதாரமாகத் திகழும் அவர் அன்னை அனுசூயாவின் கழுத்தை பிஞ்சுக் கரங்களால் தழுவிக் கொண்டு இருக்கையில், அனுசூயாவோ அவரை தாங்கி நிற்கின்றாள்; அவரைத் தாங்கிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படும் போதெல்லாம், அன்னை விரைவாக அவரை அணைத்துக் கொள்கிறாள்’ ||84||

குழந்தைகள் இயல்பாகவே செய்யும் அந்த மகிழ்ச்சிகரமான சேட்டைகள் அனைத்தையும் கண்டு அன்னை அனுசூயா மகிழ்ந்தாள்; பல்வேறு முனிவர்களின் குழந்தைகளை ஒன்று கூட்டி, அவர்களுடன் சேர்ந்து விளையாட வைப்பார்||85||

அன்னை அனுசூயா அவரை உணவருந்த அழைக்கும்போது, விளையாட்டில் முழுமையாக மூழ்கியிருந்தால் அவர் வர மாட்டார் என்பதினால் அன்னை விரைந்து சென்று அவரைத் தூக்கிக் கொள்ள முயலுவாள்; ஆனால் அவரோ அவளிடமிருந்து விலகி ஓடுவார் ||86||

அன்னை அனுசூயா அவரைத் துரத்திச் செல்லும்போது, பல ஆண்டுகள் கடும் தவமியற்றிய யோகிகளாலும் எளிதில் அடைய முடியாத அந்தப் பரமாத்மன், தன்னைப் பிடிக்க முடியாமல் அனுசூயா களைப்பினால் பெருமூச்சு விடுவதைக் பார்த்தால், மேலும் ஓடாமல் அவளை நோக்கி அவரே விரைந்து வந்து விடுவார் ||87||

எவருடைய திவ்ய சரீரத்திற்குள் கோடிக்கணக்கான உலகங்கள் அடங்கியுள்ளனவோ, அந்தப் பரமாத்மனை, அன்னை அனுசூயா தனது இடுப்பில் தாங்கிப் பிடித்தபடி வந்து, அவரைக் குளிப்பாட்டி தன் பூஜை அறையில் அமரச் செய்தாலும் அவர் மீண்டும் ஓடிச் சென்று தன் உடல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொண்டு விளையாடத் தொடங்கி விடுவார்||88||

இவ்வாறு, குழந்தைப் பருவத்திற்கும் சிசுப் பருவத்திற்கும் இடையில், அந்தந்த வயதிற்கேற்ப பல்வேறு லீலைகளை நிகழ்த்திக் காட்டி, தன் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தார்; மேலும், அந்த பரமாத்மன் தானே தனித் தத்துவம் வாய்ந்த சத்தியம் என்ற உண்மையை வெளிப்படுத்தியபடி இருந்தாலும் பக்தியின் உணர்வுகளுக்குக் கட்டுப்படக் கூடியவர் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தியபடியேதான் வாழ்ந்தும் வளர்ந்தும் வந்தார் ||89||

அவருக்கு எட்டு வயதானபோது உபநயனச் சடங்கு (பூணூல் அணிவிக்கும் விழா) நடைபெற்றது; முனிவர் அத்திரி அவருக்கு ஞானத்தை உபதேசித்தார்; அனைத்துப் புனித நூல்களுக்கும் மூலமும் ஆதாரமாகவும் இருந்த அந்தப் பரமாத்மனும் அதை ஏற்றுக் கொண்டார் என்ற நிலையில், அப்படிப்பட்ட தெய்வீகமும், ஆனந்தமும் கொண்ட லீலைகளை யாரால் முழுமையாகப் புரிந்து கொள்ள இயலும்?||90||

இடுப்பில் மெல்லிய துணி அணிந்து கொண்டு, தன்னடக்கத்துடன், அவர் சுடுகாடுகளில் அமர்ந்திருக்கவே விரும்பினார்; தன் பார்வையை மூக்கின் நுனியில் வைத்து மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி, அசைவற்ற நிலையில், ஒரு பரிபூரண யோகியாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பார்||91||

அச்சமயத்தில், ‘பிங்கலன்’ என்னும் தெய்வ நாகமும், சாத்திய தேவர்கள் என்னும் தேவர் பிரிவை சேர்ந்த சிலரும், இதற்கு முன் எவரும் கண்டிராத தங்கள் சுய ரூபங்களில் அங்கு தோன்றினர்; அவர்கள் மிகுந்த கர்வத்துடன், அவரிடம் கேள்விகள் பலவற்றைத் தொடுக்கத் தொடங்கினர்; கருணை உள்ளம் கொண்ட தெய்வச் மகனும் அவர்களுக்கு அனைத்தையும் விளக்கத் துவங்கினார்||92||

அவர்களது கேள்விகளுக்கான தக்க விளக்கங்களை (உபதேசத்தை) அவர் வழங்கி அவர்களது சந்தேகங்களை போக்கினார்; யோக மார்க்கத்தின் வழியாகப் பரமாத்மனுடன் இணைவதற்கான ஞானத்தையும் அவர்களுக்குப் போதித்தார்; அது முதல் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது||93||

தீயவர்களை தண்டித்தபடியும், நல்லவர்களை காத்து அருளிக் கொண்டு இருந்தவாறும், யோக மார்க்கத்தை உலகிற்குப் போதனை செய்தவண்ணம் இருந்தவருமான அந்தப் பரமாத்மன், வேண்டும் என்றேதான், எதோ ஒரு காரணத்திற்காக, ஒரு முனிவரின் மகனாக, தானாகவே எழுந்தருளினார்; மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை நாடி வரத் துவங்கினார்கள்; பிரபஞ்சத்தையே இயக்கிக் கொண்டிருந்த அந்தப் பரமாத்மன், அடுத்து என்ன செய்யத் திட்டமிட்டு இருந்தார் என்பதை யாரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை ||94||

பல நேரத்தில் அவருடைய தெய்வீகத் தன்மையையும் உண்மை நிலையையும் சோதித்துப் பார்க்க விரும்பிய மக்கள் கூட்டம் திரண்டு வரும் போதெல்லாம், ஸ்ரீமத் தத்தர் வேண்டும் என்றே ஆழ் கடலுக்குள் மூழ்கி மறைவார். அவரைப் பின் தொடர்ந்து ஆழ் கடலுக்குள் செல்ல விரும்பாமலும், அடுத்து என்ன செய்வதென்று அறியாமலும், அச்சத்தினாலும் அங்கு கூடும் மக்கள் கலைந்து சென்று விடுவார்கள் ||95||

ஆயினும் அதை அவரது லீலைகளில் ஒன்றாகவே கருதி, பல துறவிகளும், சாது, சன்யாசிகளும் அங்கேயே தங்கி விடுவதுண்டு; அவர்களது உண்மைத் தன்மையை மேலும் சோதிக்க எண்ணிய சிறுவன் உருவில் இருந்த ஸ்ரீமத் தத்தர், மேலும் சில லீலைகளை வெளிப்படுத்துவார் ||96||

அரைகுறை ஆடை அணிந்து வந்திருந்த ஒரு பெண்ணை தன்னுடன் அழைத்து வந்து, ஸ்ரீமத் தத்தர் நீருக்கு மேல் மீண்டும் தோன்றி, தனது ஆடைகளை கழற்றி எறிந்த பின்னர், அவர்கள் இருவரும் சரச விளையாட்டில் மூழ்குவார்கள் ||97||

அதன் பின், முற்றிலும் சுதந்திரமானவர் என்று புகழப்பட்டவர், ஆதிமாயை என்று அழைக்கப்பட்ட, மாய உருவிலான பெண் தெய்வத்தின் மடியில் அமர்ந்திருந்தவாறு ஒரு இசைக் கருவியை இசைத்துக் கொண்டு இருப்பதையும் கண்டார்கள் ||98||

அதன் பின்னர் அவர் அந்தப் பெண்மணியிடம் தனக்கு வெற்றிலையில் பாக்கு கலந்த தாம்பூலத்தை தருமாறு கேட்க, அதை தயாரித்த அந்த பெண்ணும், முதலில் அதை தனது வாயால் கடித்து ருசித்துப் பார்த்தப் பின்னர், அதை அவருக்கு கொடுத்தாள்; அப்படிப்பட்ட காட்சியைப் பார்த்த மேலும் பல சாது, சன்யாசிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்கள் ||99||

எக்காலத்திலும் பிரகாசிப்பவரிடம் குறை இருக்க முடியாது; இது மாயைதான் என்று கருதி இன்னமும் காத்து இருந்தவர்களின் பொறுமை மற்றும் அவர்களின் திடமான நம்பிக்கையினால் மனம் மகிழ்ந்து போனவர் அவர்களுக்கு யோகப் பாதையை விரிவாகக் கற்பித்தார் ||100||

தெய்வ லீலைகள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டது; வேண்டுமென்றே எல்லைகளை மீறுவது போல சித்தரிக்கப்பட்டு காட்டப்படுபவை; தம்மை நாடி வருபவர்களின் பக்தியை சோதனை செய்து பார்க்கவே, தங்கத்தின் தூய்மையை உரசிப் பார்த்து உண்மையான தங்கத்தை தெரிந்து கொள்வதை போல, தமது பக்தி களங்கமற்றது, நெருப்பு போன்ற தூய்மையானது என்பதை எல்லாம் வெளிப்படுத்தவே அவை செய்யப்படுகின்றன என்பதை உணர்ந்தவர்கள் அங்கேயே இருந்தார்கள் ||101||

ஒருவருக்கு அத்தகைய தெய்வீக மகத்துவத்தின் ஆற்றல் இல்லையென்றால், மந்த புத்தி உள்ளவரைப் போல தெய்வத்தின் ஆற்றலை பின்பற்ற முயற்சித்தால், அவர்கள் வீழ்ச்சியை மட்டுமே அடைவார்கள்||102||

தர்மத்தை வெளிப்படுத்தும் தெய்வமோ பல நேரங்களில் சில காரணங்களுக்காக தர்மத்தையும் மீறி செயல்படுவார்கள்; அதை பார்க்கும் மந்த புத்தி உள்ளவர்கள் தெய்வத்தைப் போலவே தாமும் நடக்க முயன்றால் தங்கள் உயிரை இழப்பார்கள்; உதாரணமாக கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்கும்போது வெளி வந்த காலகூட் எனும் கொடிய விஷத்தை சிவபெருமான் விழுங்கியதை* போல மானிடர்களும் விழுங்க முயற்சி செய்தால் என்ன ஆகும்?||103||
{*இந்த நிகழ்ச்சி ஸ்ரீமத்மத் பாகவதத்தின் 8வது காண்டத்தில் விளக்கப்பட்டு உள்ளது}

அவரே அனைத்து தெய்வங்களுக்கும் மேலான தெய்வம் ஆவார். அவர் எந்த விதி முறைகளுக்கும் கட்டுப்படாதவர்; அவரிடம் இருந்தே அனைத்து வேத புராணங்களும் தோன்றி உள்ளன; அவர் காற்றைப் போன்றவர்; நறுமணமோ இல்லை துர்நாற்றமோ எது வீசினாலும் அந்த வாசனை காற்றை எப்படி களங்கப்படுத்த முடியாதோ, அதை போலவேதான் அவர் எதனாலும் மாசுபடாதவர் ||104||

வெளிப்படையாகத் தெரியும் செயல்களின் மீது மட்டுமே கவனத்தை வைத்துக் கொள்ளாமல் இருந்தவாறும், அவரவர் செவிகளில் விழும் நல்ல போதனைகளை இதயத்தில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டும், அதன் பிறகு, தான் பெற்ற அறிவுரைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தர்மம் வகுத்துள்ள எல்லைகளை மீறாத வகையிலான செயல் பாதையைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் ||105||

வேதங்கள் என்ன அறிவுறுத்துகின்றன என்றால் தெய்வத்தின் லீலைகளை நன்கே புரிந்து கொண்டு செயல்பட முயற்சியுங்கள்; சூரியனின் பேரொளி கூட அவருடைய மேன்மைக்கு ஈடாக முடியாது எனும்போது, பிற எளிய உயிரினங்களைப் பற்றிச் கூறவும் வேண்டுமோ?||106||

அனைத்தையும் அறிந்த தெய்வத்திற்கும் (Omniscient), அறிவு வரம்பிற்குட்பட்ட மனிதனுக்கும் (limited in knowledge) இடையிலான எல்லையை எவரும் ஒருபோதும் மீறக்கூடாது; இவ்வார்த்தைகளை ஏற்று நடப்பவர்களே உண்மையில் புத்திசாலிகளாகவும் ஞானிகளாகவும் திகழ்வர்; மாறாக, தவறான தர்க்கங்களுக்கு அடி பணிபவர்கள் மந்த புத்தி கொண்டவர்களே ஆவர்; தன்னிடம் முழுமையான அறிவு இருப்பது போலச் காட்டிக் கொள்வதற்கு பதிலாக, பணிவைக் கடைப்பிடித்து மனிதப் புரிதலின் வரம்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்|107||

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட போதிலும், எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும், தனது நிலையில் உறுதியாக நின்று, தான் தேடிய யோக ஞானத்தை ஸ்ரீமத் தத்தரிடமிருந்தே நேரடியாகப் பெற்றுப் பேரானந்த நிலையை அடைந்த ‘கார்த்தவீரிய அர்ஜுனன்’ இதற்கு ஒரு உதாரணம் ஆவார் ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் மூன்றாம் அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அத்தியாயங்களின் மொத்த பாடல்கள்:
108 + 218 + 108 = 326

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு அத்தியாயம் -3 முடிவடைந்தது
அத்தியாயம் -4 தொடர்கின்றது