யோகினிகள்

சாந்திப்பிரியா  

புராண நூல்களின் செய்திகளின்படி, இந்து மதத்தின் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், ஆதி பராசக்தியானவர் சதி எனும் உருவில் இருந்தபோது அஷ்ட மாத்ரிகாஸ் என அழைக்கப்படும் எட்டு பெண் தெய்வங்களை வெளிப்படுத்தினாள் என்பதாகும். புராதன மற்றும் ஆற்றல் மிக்க ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்ததும், மக்களுக்கு உயர்ந்த ஞானத்தை அடைய வழி காட்டும் மற்றும் தந்திர பள்ளிகளில் மேன்மையானதுமான கௌல தந்திர எனப்படும் தந்திர நூலின்படி அந்த எட்டு அஷ்ட மாத்ரிகாஸ் என்பவர்கள் பிராமணி, வைஷ்ணவி, மகேஸ்வரி, இந்திராணி, கௌமாரி, வராஹி, சாமுண்டா மற்றும் நரசிம்ஹி என்பவர்கள் ஆவர். அந்த அஷ்ட மாத்ரிகாஸ் ஒவ்வொருவரும் தத்தம் உடல்களில் இருந்து தலா எட்டு தெய்வீக சக்திகளை யோகினிகள் எனும் வடிவத்தில் வெளிக் கொண்டு வந்தனர். இப்படியாக  மொத்தம் 64 தாந்த்ரீக யோகினிகள் வெளி வந்தார்களாம். ஆலயங்களில் உள்ள மாத்ரிகாஸ் எத்தனை பேர் என்பதில் எப்போதுமே சில குழப்பங்கள் உள்ளன என்பதின் காரணம் சில ஆலயங்களில் எட்டு மாத்ரிகாஸ் சிலைகளும், வேறு சில ஆலயங்களில் ஏழு மாத்ரிகாஸ் சிலைகளும் காணப்படுகின்றனர் என்பதே.

இப்படியாக 64 யோகினிகள் வெளிவந்த அதே நேரத்தில் தக்ஷ யாகத்தை அழிக்க சிவபெருமான் மூலம் வெளிவந்த மஹா கால பைரவர் மூலம் முதலில் எட்டு பைரவர்கள் வெளிவர, அந்த எட்டு பைரவர்களும் தத்தம் உடலில் இருந்து தலா ஏழு பைரவர்களை வெளிப்படுத்த, இப்படியாக அங்கு வெளிவந்த மொத்தம் 64 பைரவர்கள் அனைவரும் தாந்த்ரீக கலைகளில் சிறந்து விளங்கிய 64 யோகினிகளை மணந்து கொண்டு அவர்களது துணைவர்கள் ஆயினர். அவர்கள் அனைவருமே மஹா கால பைரவரது தலைமையில் அவரது கட்டுப்பாட்டில் இருந்தார்கள். மஹா கலா பைரவர் மூலம் முதன் முதலில் தோன்றிய எட்டு பைரவர்களின் பெயர்கள் அசிதங்கா, ருரு, காண்டா, க்ரோதா, உன்மட்டா, கபாலா, பீசானா மற்றும் சம்ஹாரா என்பன ஆகும்.

யோகினி என்றால் ‘ஒருங்கிணைந்த சக்தி’ அல்லது ஒருமித்த சக்தியை வெளிப்படுத்தும் சக்தி என்பதாக பொருள் கொள்ளலாம். அந்த 64 யோகினிகள் அனைவருமே தனித்துவமான தன்மைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தம்மை தியானிக்கும் சாதகர்களது விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மன பயத்தை விரட்டும் தன்மை கொண்டவர்கள், துரதிஷ்டங்களைத் தடுப்பவர்கள். அறிவு, அமைதி, பல வகைகளிலான செழிப்பு, நல்ல வம்சாவளி மற்றும் அனைத்து வகைகளிலான சுபங்களையும் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள். தாந்த்ரீக பாரம்பரியத்தில் யோகினிகள் குழந்தை பாக்கியத்தை தரும் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மந்திர தந்திரக் கலைகளை உள்ளடக்கியவர்கள், கருணை கொண்டவர்கள் என்றாலும் அதே நேரத்தில் கடுமையான கட்டுப்பாட்டுடன் ஆட்சி செய்பவர்கள் என்பதினால் மேலும் சிலரது பார்வையில் யோகினிகள் பேய் அல்லது சூனியக்காரி என்றும் பார்க்கப்படுகிறார்கள். 64 யோகினிகள் மற்றும் அவற்றின் சக்திகள் பற்றிய குறிப்புகள் பண்டைய வேதங்களான பிரம்மந்த புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், காளிக புராணம், நந்திகேஸ்வர புராணம் மற்றும் சரலா தாஸின் சாந்தி புராணம் போன்ற பல நூல்களிலும் காணப்படுகின்றன.

தந்திர போதனையின் சிறந்த தந்திர நூல்களில் ஒன்றான ‘குலர்னவா’ எனும் நூல் மிக முக்கியமான நூல் ஆகும். அந்த தந்திர போதனை நூலில் யோகினிகள் மற்றும் யோகினி சமயக் வழிபாட்டு முறை பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. அதை போலவே கௌல தந்திர போதனா முறை பள்ளியை சேர்ந்த ‘குலஜ்ஞானநிர்ணய’ எனும் தாந்த்ரீக போதனா நூலும் யோகினிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வழிபாட்டு முறைகள் பற்றி குறிப்பிடத்தக்க தகவல்கள் தருகின்றன. அந்த நூலானது மத்சியேந்திரநாத்  எனப்படும் மச்ச முனிவரால் இயற்றப்பட்டு உள்ளது. அவர் ஹடயோக கலை போதனையை துவக்கிய கோரக்ஷநாத் என்பவருடைய சீடர் ஆவார். ‘கௌலஞானநிர்ணய’ எனும் தாந்த்ரீக போதனா நூலும் யோகினிகளின் தாந்த்ரீக மகிமைகளை விரிவாக விளக்கி உள்ளது. அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்துமே வேண்டும் என்றே பொது மனிதர்களுக்கு விளங்கிடாத வகையிலான ரகசிய மொழியில் விளக்கப்பட்டு உள்ளன. ஆகவே அவற்றில் உள்ள போதனைகளை தாந்த்ரீக தந்திர போதனைகளை ஆழமாக பெற்று உள்ள குருக்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். புராணக் கதைகளின்படி, சிவன் பார்வதி தேவிக்கு பிரபஞ்சத்தின் மர்மங்கள் பற்றிய போதனைகளை செய்து கொண்டு இருந்தபோது, அந்த போதனைகளை ஒரு மீனின் வயிற்றில் இருந்தவாறு மச்ச முனிவர் கற்று அறிந்து கொண்டாராம். அதன் அடிப்படையில் அவர் எழுதிய ‘கௌலஞானநிர்ணய’ எனும் நூலினால் அவர் தாந்த்ரீக சாதகர்களது மத்தியில் பெரும் புகழ் பெற்றார்.

சமீப காலங்களில் கண்டறியப்பட்டதும், 400 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டு உள்ளதாகவும், தற்போது நேபாள தேசிய ஆவணப் பாதுகாப்பகத்தில் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படும் ‘ஸ்ரீ மடோத்தர தந்திர’ எனும் நூலில் தாந்த்ரீகத்தைப் பற்றிய பல முக்கியமான கருத்துக்கள் உள்ளதாக கூறுகின்றார்கள்.  குப்ஜிகா எனும் தேவிக்கு தந்திரங்கள் என்பது என்ன, 64 யோகினிகள் என்பவர்கள் யார், அவர்களை வழிபடும் குறிப்பிட்ட சக்கரங்கள் என்னென்ன போன்றவற்றை சிவபெருமான் விவரமாக கூறி உள்ள போதனைகள் அதில் உள்ளனவாம். அந்த போதனைகள் சமிஸ்கிருத உரை நடையில் அந்த நூலில் எழுதப்பட்டு உள்ளதாம். தந்திரங்களின் சுருக்கத் தொகுப்பு என்று அழைக்கப்படும் ‘ஸ்ரீ மடோத்தர தந்திர நூலில்’ ஒவ்வொன்றோடு தொடர்புடைய ஒவ்வொரு சடங்கு நடைமுறைகளின் முக்கியத்துவமும் வரைபட விளக்கக் காட்சியில் கூறப்பட்டு உள்ளதாம்.

குப்ஜிக எனும் தெய்வம் ஆதி பராசக்தி அன்னையின் வெளிப்பாடு என்று சாதகர்கள் நம்புகிறார்கள். குப்ஜிக தேவியின் அம்சம் யோகினிகள் மூலம் செய்யப்படும் தாந்த்ரீக வழிபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையது. அவர் ஒரு சக்தி வாய்ந்த தாந்த்ரீக தெய்வம். அவருடைய அவதாரம் காளி மற்றும் ஆதி பராசக்தி தேவியின் பல வெளிப்பாடுகளில் ஒன்றாகும். மேலும் குப்ஜிக தேவியின் கட்டுப்பாட்டில் உள்ள யோகினிகள் மூலம் தாந்த்ரீக சக்திகளைப் பெற காத்மாண்டுவில் உள்ள நெவாரி எனும் பிரிவினர் அவரை ரகசியமாக வழிபடுகிறார்கள். குப்ஜிக தேவியின் தாந்த்ரீக வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக புனித நூல் ‘குப்ஜிக மா தந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. அவள் வக்ரேஷ்வரி, வரிகா அல்லது வக்ரா என்றும் அழைக்கப்படுகிறாள்.

கி.பி 12 ஆம் நூற்றாண்டில் பரவலாக இருந்திருந்த குப்ஜிக தேவி வழிபாட்டு மரபு இமயமலையில் தோன்றியதாக நம்பப்படுகிறது. நேபாளம் மற்றும் வட இந்தியா முழுவதும் குப்ஜிக தேவி வழிபாட்டு முறையை நாத் எனும் பரம்பரையை சார்ந்த ஒன்பது நாத்தர்கள் பரப்பியதாக நம்பப்படுகின்றது.

பிரபஞ்சத்தில் வழிபடப்படும் யோகினிகள் எத்தனை என்பதில் சர்ச்சை உள்ளது. சிலர் யோகினிகள் மொத்தம் 64 என்று கூறினாலும், வேறு சில இந்து மத நூல்கள் யோகினிகள் என்பவர்கள் 42, 60, 81 என்ற எண்ணிக்கையில் உள்ளவர்கள் என்றும், வேறு சிலர் இவ்வுலகில் கோடிக்கணக்கான யோகினிகள் உள்ளனர் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட யோகினிகளின் ஆலயங்களில் காணப்படும் 64 யோகினிகளின் பெயர்கள் மட்டுமே தாந்த்ரீக வழிபாட்டு உலகில் முக்கியமான யோகினிகளாக கருதப்படுகிறார்கள். 

தக்ஷ யாகத்தின் போது அஷ்ட மாத்ரிகாஸ் மூலம் வெளியே வந்த யோகினிகளைத் தவிர, யோகினிகளின் தோற்றம் குறித்த மற்றொரு கதை வேறு தகவல்களை தருகிறது. அந்த கதையின்படி ஒரு காலத்தில், மஹிஷாசுரா என்று அழைக்கப்பட்ட ஒரு அசுரன் பல தெய்வங்கள், மற்றும் தேவலோகத்தை சார்ந்தவர்களை தொடர்ந்து சித்திரவதை செய்தபோது, அவனது சித்திரவதைகளிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு தெய்வங்களும், தேவதைகளும் அன்னை பரசக்தியிடம் பிரார்த்தனை செய்தனர். அதனால் ஆதி பராசக்தி தேவி தனது உடலில் இருந்து துர்கா தேவியை உருவாக்க. அந்த துர்கா தேவியின் உடலில் இருந்து எட்டு அஷ்ட மாத்ரிகாஸ் வெளிப்பட, ஒவ்வொரு மாத்ரிகாஸ் மூலமும் எட்டு எட்டு யோகினிகள் என மொத்தம் 64 யோகினிகள் வெளி வந்தார்கள். அந்த 64 யோகினிகளும் மஹிஷாசுரமர்தினி தேவியின் படைகளுடன் சேர்ந்து, அசுரர்களின் சகோதரர்களான கம்பன், நிசும்பா மற்றும் அவர்களின் அனைத்து சேனையினரையும் அழித்தனர். அந்த யோகினிகள் அனைவரும் லலிதா பரமேஸ்வரி தேவியை வணங்குகிறார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் மொத்தம் 64 யோகினிகள் உள்ளனர் என்று கூறப்பட்டாலும் வெவ்வேறு சமயங்களில் தெய்வங்களின் யுத்தங்களில் அவர்களுக்கு உதவிட பல யோகினிகள் வெளி வந்துள்ளார்கள் என்பதாக புராண நூல்களில் இருந்து அறிய முடிகின்றது. லலிதாம்பிகை தனது மூலஸ்தானமான மணித்வீபத்தில் அமர்ந்துள்ளபோது அவரை சுற்றி காவலில் இருந்த 64 யோகினிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடி யோகினிகள் உதவியாளர்களாக இருந்ததாக திரு ஆதிசங்கரர் கூறி உள்ளார் என்பதில் இருந்து தேவர்களை தவிர்த்து 64 கோடிக்கும் மேற்பட்ட யோகினிகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளனர்  எனத் தெரிய வருகின்றது.

முன் ஒரு காலத்தில் மஹாராஷ்டிரா மானிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தங்கி இருந்த ஒரு பெரும் பண்டிதர் திரு பாஸ்கர ராயர் என்பவர் ஆகும். அன்னை பராசக்தியின்  பக்தரான அவர் வேதங்களிலும் தந்திர சாஸ்திரங்களிலும் பெரும் புலமை வாய்ந்தவர். பல புராண மற்றும் வேதங்களின் கருத்துக்களை தன் கை விரல் நுனியில் அடக்கிக் கொண்டு இருந்த அந்த பண்டிதர், லலிதா சஹஸ்ரநாமாவில் காணப்படும் 1008 தேவியின் நாமகரணங்களின் மகிமைகளை விளக்கி உள்ளவர். அப்படிப்பட்ட ஆற்றலை கொண்டு இருந்ததில் இருந்தே அவருக்கு தெய்வத்தின் நேரடி அருள் இருந்துள்ளது விளங்கும். இல்லை எனில் அவற்றை அவரால் எழுதி இருக்க முடியாது என்பது திண்ணம். இன்றைக்கும் தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்து இருந்த கிராமத்தின் பெயர் பாஸ்கர ராயபுரம் என்று அழைக்கப்படுகின்றது. அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று அறிவார்ந்த பண்டிதர்களுடன் தர்க்கங்கள் மற்றும் விவாதங்கள் செய்து அவர்களை தோற்கடித்து வந்தார். இந்த நிலையில் அவர் ஒருமுறை காசிக்கு சென்று இருந்த நிலையில் அவர் மீது பொறாமை கொண்ட பண்டிதர்கள் சிலர் திரு பாஸ்கர ராயர் நடத்திய ஒரு யாகத்தில் கலந்து கொண்டு அவரிடம் விவாதத்தில் ஈடுபட்டு, எளிதில் விளக்க முடியாத பல கேள்விகளை எழுப்பினார்கள். லலிதா சஹஸ்ரநாமத்தில் காணப்படும் ரகஸ்யா நாமாவளியில் கூறப்பட்டு உள்ள 640 கோடி யோகினிகள் பெயர்களைக் கூற முடியுமா என்று கேட்க, அவரோ சற்றும் தயங்காமல் அவர்களது வினாக்களுக்கு விடைகளைக் கூறிய பின் தான் கூற உள்ள யோகினிகள் பெயர்களை குறித்துக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறிய பின் யோகினிகள் பெயர்களை கூறத் துவங்கினார். வினாவை எழுப்பிய பண்டிதர்கள் அவர் கூறிக் கொண்டே இருந்த யோகினிகள் பெயர்களை எழுத முடியாத நிலைக்கு சென்றபோது அவர்களில் ஒருவரான திரு குங்குமானந்த ஸ்வாமி என்பவர் எதேர்சையாக திரு பாஸ்கர ராயரின் தோளில் அமர்ந்து கொண்டு இருந்த தேவியே யோகினிகள் பெயர்களை கூறிக் கொண்டு இருந்ததைக் கண்டு பயந்து போய் உடனடியாக அவர் கால்களில் விழுந்து மன்னிப்பைக் கோரினார். மற்ற பண்டிதர்களால் அந்த காட்சியை காண முடியாவிடிலும் திரு பாஸ்கர ராயரின் தோளில் ஒரு ஜோதி உருவில் தேவி அமர்ந்து இருந்ததைக் கண்டார்கள். இப்படியாக லலிதாம்பிகை தனது மூலஸ்தானமான மணித்வீபத்தில் அமர்ந்துள்ளபோது அவரை சுற்றி காவலில் இருந்த 64 யோகினிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடி யோகினிகள் உதவியாளர்களாக இருந்ததாக, அதாவது 640 கோடிக்கும் மேற்பட்ட யோகினிகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளார்கள் என்பதாக திரு ஆதி சங்கரர் கூறிய உண்மை திரு பாஸ்கர ராயர் மூலம் மேலும் பரவலாக வெளித் தெரிந்தது.

யோகினிகள் தாந்த்ரீக மற்றும் யோக சக்திகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். முறையான சடங்குகளுடன் ஒருவர் அவர்களை துதித்தால் அவர்களுக்கு மகத்தான தாந்த்ரீக மற்றும் யோக சக்திகளை யோகினிகள் தருவார்கள் என்பதாக புராண நூல்கள் கூறுகின்றன. யோகினிகள் வழிபாடு தந்திர வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. அனைத்து யோகினிகளும் பெண்கள் என்பதினால் முன் காலத்தில், யோகினி வழிபாடு என்பதை பெண் யோகிகள் மற்றும் சாத்விக்கள் மட்டுமே அதிகம் செய்து வந்திருந்தார்கள்.

64 யோகினிகள் வழிபாட்டு முறை ரகசியமானது மட்டும் அல்ல அனைத்து வழிபாட்டு முறைகளுடன் அதை ஒப்பிட்டால், தாந்த்ரீக வழிபாடு ஆழ்ந்த சக்தி வாய்ந்த ஒன்றாகும். 64 யோகினிகளும் அஷ்ட மாத்ரிகாஸ் மூலமே வெளி வந்ததினால் யோகினி வழிபாட்டு முறையும் அஷ்ட மாத்ரிகாஸ் வழிபாட்டு முறை தழுவலாகவே உள்ளது.

உண்மையில் யோகினிகள் என்பவர்கள் யார்? யோகினிகள் தெய்வங்களுக்கு பணி புரியும் உப தெய்வங்களே. அவர்கள் தெய்வங்களின் உடலில் இருந்து வெளி வந்ததினால், தம்முள் தெய்வீக சக்திகளை உள்ளடக்கிக் கொண்டு உள்ளவர்கள். வெளிப்படையாக யோகினிகள் பயங்கரமான ரூபங்களில் இருந்தாலும், வேறு ரூபத்தில் இருந்தாலும் அவர்கள் தெய்வ அம்சங்கள்தான். கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை யோகினிகள் உப தெய்வங்களாக வணங்கப்பட்டு வந்துள்ளார்கள் என்றாலும், அதன் பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் மீதான வழிபாட்டு முறை  குறையத் துவங்கியது.

ஒரு கால கட்டத்தில் யோகினியை மாயக்காரி , மந்திரக்காரி அல்லது சூனியக்காரி என்று கூட கருதினார்கள் என்பதின் காரணம் யோகினிகளிடம் இருந்து தந்திர மந்திர சக்திகளை பெற்று இருந்த சிலர் அவற்றை தவறான வழி முறைகளுக்கு பயன்படுத்தினார்கள் என்பதே ஆகும். மேலும் யோகினிகளை மூல தெய்வங்களுக்கு பணி விடை செய்து வந்திருந்த ரகசிய தேவதைகள் என்று நம்பியதினாலும் புராண நூல்களில் அவர்களது மேன்மை காணப்பட்டு இருந்ததினாலும் காலபோக்கில் யோகினிகள் தனித்தன்மை கொண்ட முக்கிய தாந்த்ரீக தெய்வங்களாக கருதப்படத் துவங்கினார்கள். அவர்களது தோற்ற அமைப்பு மனித மற்றும் பிற உடல் அமைப்புகளைக் கொண்ட பல வகைப்பட்ட தெய்வீக அம்சங்களில் அமைந்து இருந்தது. யோகினிகளில் சிலர் இளமைப் பணிப் பெண்களாக காணப்பட்டனர். மேலும் சிலர் சதை பிடிப்பு அற்றவர்களாக, பானை போன்ற வயிறு படைத்தவர்களாகவும் காணப்பட்டனர். யோகினிகள் என்பவர்கள் மயானங்களில் வசிக்கும் பிணந் தின்னிப் பிசாசு மற்றும் பேய்கள் என்றும் தந்திர சாஸ்திரங்களை செய்த சாதகர்கள் நம்பினார்கள்.

துவக்க காலங்களில் யோகினி ஆலயங்களை யோகினி பீடங்கள் என்றே அழைத்தார்கள். அவற்றை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் தரும் தந்திர மந்திர மற்றும் அமானுஷ்ய சக்திகளை தரும் மையங்களாகவே சாதகர்கள் கருதினார்கள். இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி பெற்றவர்கள் பொதுவாக அந்த சக்திகளைக் கொண்டு நோய் வாய்பட்டவர்களை குணப்படுத்தினார்கள், செல்வங்களை பெறும் வழிமுறைக்கு பயன்படுத்தினார்கள் என்றாலும் வேறு சிலரோ அவரவர்கள் பெற்று இருந்த தந்திர மந்திர மற்றும் அமானுஷ்ய சக்திகளை அழிவுகரமான நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தினர்.

வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு வரை புத்த, சமண மதம் மற்றும் பல மதப் பிரிவுகளால் ஈர்க்கப்பட்டு பல மதப் பிரிவுகளில் இணைந்து இருந்த மக்களினால் யோகினிகள் வழிபாடு பரவலாகப் பரவி இருந்தன என்றாலும், அதன் பின்னர் மெல்ல மெல்ல மேற்கூறிய காரணங்களினால் யோகினிகள் வழிபாடு நலிவுறத் துவங்கின. யோகினிகளைப் பற்றி கூறப்பட்டு இருந்த இலக்கியங்களிலும், கதைகளிலும் அவர்கள் அதீத மந்திர சக்திகளைக் கொண்டிருந்தவர்களாகவும், பறவைகளைப் போல காற்றில் பறக்கக் கூடியவர்களாகவும், மக்களை விலங்குகளாக அல்லது பறவைகளாக மாற்றக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் காட்டப்பட்டு இருந்தார்கள். கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த இந்து நூல்களில் குறைந்தது நான்கு நூல்களில் யோகினிகள் சக்தியைப் பற்றிக் கூறப்பட்டு உள்ளது. அந்த நூல்களின் பெயர்கள் ‘சதுர்வர்க சிந்தாமணி’, ‘பிரதிஷ்டா லக்ஷன் சர் சமுசாயா’, ‘மடோத்தர தந்திர’ மற்றும் ‘மாயதிபிகா’ என்பவை ஆகும் என்றாலும் அவற்றில் மாயதிபிகா என்ற நூல் தற்போது காணப்படவில்லையாம்.

திருமதி வித்யா தேஹெஜியா * என்பவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பார்பரா ஸ்டோலர் மில்லர் பேராசிரியர் பதவியில் 1982 ஆம் ஆண்டு முதல் பணி புரிந்தவர் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., எம்.ஏ., மற்றும் பி.எச்.டி பட்டப் படிப்பு பெற்றவர். பம்பாய் பல்கலைக் கழகத்தின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றவர். இந்திய அரசாங்கத்தின் பத்ம பூஷண் பட்டம் பெற்றவர். கோவா பல்கலைக் கழகத்தில் மரியோ மிராண்டா கல்லூரிக்கு வருகை தரும் ஆராய்ச்சி பேராசிரியராகவும் திருமதி வித்யா தேஹெஜியா நியமிக்கப்பட்டு இருந்தார். இந்தியாவின் கலாச்சார மற்றும் அறிவுசார் வரலாற்று தலைப்புகள் குறித்த பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதிய அவரது கூற்றுப்படி ” யோகினி ஐதீகம் என்பது தாந்த்ரீக சம்மந்தம் கொண்டவை, கிராமப்புற மற்றும் பழங்குடி மரபு ஐதீகங்களுடன் வலுவான தொடர்புகளை கொண்டிருந்தவை என்பதாகும். மேலும் யோகினிகளின் தோற்றம் சிறிய, கிராமப்புற கிராமங்களில் இருந்து துவங்கியது. அவர்கள் கிராம மக்களை பாதுகாத்து வந்திருந்த கிராம தெய்வங்கள், கிராம தேவதைகள் என கருதப்பட்டார்கள். யோகினிகளுக்கு இருந்திருந்த மந்திர தந்திர சக்திகள் மூலம் பல புதிய தோற்றங்களை எடுத்தும், அவர்களை வழிபட்டு வந்தவர்களுக்கு தந்திர மந்திர சக்திகளை தந்தும் வந்தார்கள். இப்படியாக பரவலாக இருந்திருந்த கிராம தெய்வங்கள் படிப்படியாக சக்தி வாய்ந்த எண்ணிக்கையிலான குழுக்களாக இணைந்து பார்க்கப்பட்டார்கள். உலகின் பல்வேறு இடங்களிலும் முப்பதிற்கும் மேற்பட்ட யோகினிகள் பெயர் பட்டியல்கள் உள்ளதினால், அவைகளைக் கொண்டு யோகினிகள் யார் யார் என்பதை கண்டறிவது எளிதான காரியம் அல்ல. அந்த பெயர் பட்டியல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு உள்ளன” என்பதாக  எல்லாம் திருமதி வித்யா தேஹெஜியா கருத்து தெரிவித்து உள்ளார்.

பொதுக் கருத்து என்ன என்றால் முதன் முதலாக யோகினிகளைப் பற்றிய செய்திகள் சிறிய கிராமங்களில் இருந்துதான் வெளிப்பட்டு இருக்க வேண்டும். யோகினி வழிபாடு பிராமண நெறி முறைகளுக்கும் மரபுகளுக்கும் மாறுபட்டது என்று அறிஞர்கள் நம்பினர். கிராமப்புறங்களில் இருந்த உள்ளூர் தெய்வங்களை விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் தம்முடைய கிராமங்களை தீமைகளில் இருந்தும் நோய்களில் இருந்து காப்பாற்றும் கடவுளாக ஆராதித்து வந்திருந்த நிலையில் அவை தாந்த்ரீக தன்மை கொண்டிருந்த யோகினிகள் எனவும் கருதப்பட்டு அமானுஷ்ய சக்திகளை பெறவும் யோகினிகள் வழிபாடு கிராமங்களில் துவங்கியது. பெண்கள் முக்கியமான தெய்வங்களோடு இணைத்து பார்க்கப்பட்ட நிலையிலும், தாந்த்ரீக வழிபாட்டு முறை வெளிப்பட்டபோதும் அவர்களே கிராம தேவதை எனும் யோகினிகளாக கருதப்பட்டு வழிபடப்பட்டார்கள். மேலும் 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை ஒரிசா மாநிலத்தில் ஆறு பெண் மன்னர்கள் ஆட்சியில் இருந்தார்கள். தாயிடம் இருந்து மகள் என்றாகி மகளில் இருந்து அவளுடைய மகளுக்கு ஆட்சி என ஒருவருக்குப் பின்னர் ஒருவரான பெண்கள் ஆட்சி தொடர்ந்து கொண்டு இருந்தபோது பெண் தெய்வங்களின் வழிபாடும் பெருகியதாம்.

யோகினிகளைப் பற்றிய செய்தி முதன் முதலில் 9 ஆம் நூற்றாண்டை சார்ந்த அக்னி புராணத்தின் 52 வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். அதை போலவேதான் யோகினி வழிபாட்டு முறை கி.பி 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்றாலும் 9 ஆம் நூற்றாண்டில்தான் து முக்கியத்துவம் பெற்று கி.பி 13 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக இருந்தது. இடைக்காலம் என்பதில், அதாவது 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுகளின் சக்தி வழிபாட்டில் ரகசியமானதும், வெளி உலகிற்கு தெரியாமலும் இருந்திருந்த யோகினி வழிபாடு ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாக இருந்துள்ளது. பெண் பாதுகாப்பு தெய்வமான யோகினியின் சக்தி வழிபாட்டின் மைய நிலையில் வணங்கப்படும் தெய்வமே பைரவர் ஆவார். அப்படிப்பட்ட ரகசிய வழிபாட்டு முறையை ஒரு குருவினால் மட்டுமே தீட்ஷை வடிவில் அதை பயில முயலும் சாதகருக்கு தர முடியும். அந்த சடங்கு நடைமுறைகளை ஒரு குருவின் தீட்ஷை இன்றி புத்தகங்களை படித்து தீட்ஷை பெற முடியாது. அது மட்டும் அல்ல அப்படி ஒரு குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றாலும், அதை அவர் அனுமதி இன்றி மற்ற எவருக்கும் அவர் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று செய்யப்படும் சத்தியம் அதன் முக்கியமான விதியாகும்.

தந்திர சக்தி வழிபாடு பெண் தெய்வமான சக்தியுடன் சேர்ந்து இருந்ததினால் நடு இரவு நேரங்களில் அமானுஷ்ய சாதனைகளை பெற விரும்பிய சாதகர்கள் தந்திர பீடங்களாக கருதப்பட்ட யோகினி ஆலயங்களில், மத்யா (ஒயின்), மாம்சா (இறைச்சி), மத்ஸ்யா (மீன்), முத்ரா (தானியங்கள்) மற்றும் மைதுனா (செக்ஸ்) போன்ற ஐந்தை உள்ளடக்கிய பஞ்சமகர யோகினி தாந்த்ரீக வழிபாட்டை மேற்கொண்டார்கள். அங்கு அமர்ந்தபடி யோகினிகளை அழைக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது யோகினிகள் நேரில் வந்து நடனம் ஆடி சாதகர்கள் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான சக்திகளை வழங்குவார்களாம்.

26 பாகங்களைக் கொண்ட ‘ஞானார்னவ தந்திரம்’ என்று அழைக்கப்படும் தாந்த்ரீக நூலில் காணப்படுவது என்ன என்றால் ‘ ஒரு குருவிடம் இருந்து முறையான உபதேசம் பெறாதவருக்கு, குருவிடம் இருந்து உபதேசம் பெற்றவர் அந்த ரகசிய வழிமுறையை கூறினால் அவர் யோகினிகள் பசிக்கு இரையாக நேரிடும்’. ஞானார்னவ என்றால் பெருங்கடல் போன்ற அறிவு என்பது பொருள். இந்த நூல் 26 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இந்த தாந்த்ரீக நூலே ஸ்ரீ வித்யா தாந்த்ரீக வழிபாட்டு உரைகளில் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த நூல் கோடிக்கணக்கான யோகினிகளால் சூழப்பட்ட உள்ள, அறிவு அல்லது ஞானத்தின் மிக உயர்ந்த வடிவமாக கூறப்படும் திரிபுரா தேவியின் வழிபாட்டை வலியுறுத்துகிறது. பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடலாக எழுதப்பட்டு உள்ள இந்த தாந்த்ரீக நூல் மூலம் ஸ்ரீ வித்யாவின் உண்மையான தன்மையை அறிய முடிகின்றது. ஸ்ரீ வித்யாவின் மேன்மையையும், அதில் உள்ள தாந்த்ரீகங்களின் மகிமைகளைக் குறித்தும் தனக்கு விளக்குமாறு சிவபெருமானிடம் பார்வதி தேவி கேட்டுக் கொள்ள, சிவபெருமான் ஸ்ரீ வித்யா பற்றிய ரகசியங்கள், வெவ்வேறு மந்திரங்கள், மந்திர பாராயண விதிமுறைகள், மன வழிபாடு, யோகினிகள், தீக்ஷை குறித்த விதிகள் மற்றும் திரிபுராவின் வடிவங்கள் போன்ற அனைத்தையும் சிவபெருமான் விரிவாக தேவிக்கு விளக்குகிறார்.

வேத ஜோதிட நூல்களின்படி, ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் எட்டு யோகினிகள் கட்டுப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நட்ஷத்திரத்திற்கும் ஒவ்வொரு யோகினி அதிபதியாக உள்ளார். அந்த யோகினிகளின் பெயர்கள் மங்களா, பிங்கலா, தன்யா, பிரம்மாரி, பத்ரிகா, உலகா, சித்திதா, சங்கதா. யோகினிகள் ஓவ்வொருவரும் ஒன்பது கிரகங்களில் ஒன்று அல்லது இன்னொரு கிரகங்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளார்கள். வட மானில ஜோதிடர்கள் யோகினி தசை என்பதற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றார்கள். ஆனால் அந்த யோகினி தசைகளில் கேது நட்ஷத்திரம் எந்த பங்கையையும் வகிக்கவில்லை. ஜோதிடத்தில் காணப்படும் எட்டு யோகினி தசைகளில், நான்கு யோகினி தசைகள் நன்மைகளைத் தருபவை. மற்ற நான்கும் தீங்கு விளைவிப்பவை ஆகும். ஒருவர் ஜாதகத்தில் யோகினி தசையின் மொத்த காலம் 36 ஆண்டுகள் ஆகும். யோகினி தசையின் செல்வாக்கு அந்தந்த யோகினியின் இயல்பான தன்மையைப் பொறுத்தது. மிகவும் மோசமான தசையில் அமர்ந்துள்ள யோகினிகள் தீமைகளை தருவார்கள். அதை போலவேதான் நன்மை செய்யும் தசையில் அமர்ந்துள்ள யோகினிகள் நன்மைகளை தருவார்கள். யோகினி தசைகளின் தன்மைகளைக் குறித்த விளக்கத்தை முதன் முதலில் சிவபெருமானே பார்வதி தேவிக்கு கற்பித்ததாகக் கூறப்படுகிறது.

யோகினிகளை சிலர் தாகினிகள் என்று அழைக்கின்றார்கள். இந்து மதத்தைப் பொருத்தவரை தாகினி என்பவள் புனிதமான பெண் ஆவி என்று கருதப்பட்டாலும் திபெத்திய இலக்கியங்களில் அவர்களை வானவாசிகள் அல்லது வானத்தில் நடனமாடும் கலைஞர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தாகினிகள் என்றால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் வானங்கள் மீது நடனமாடும் மங்கைகள் என்பது பொருளாகும். சண்டி புராணத்தில் அவர்களை சக்தி தேவியின் உடலின் பல பாகங்கள் என்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தாகினிகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்கையில் வானத்தில் கூட்டமாக பறந்தே செல்வார்கள் என்பது மட்டும் அல்ல அவர்கள் தனித் தனியே செல்வது இல்லை என்பதாகவும் கூறப்படுகின்றது. தாகினிகள் அல்லது யோகினிகள் பொதுவாக கல்லறைகளுக்குச் சென்று கல்லறைகளில் தங்கியிருக்கும் பகவான் பைரவரை வணங்குகிறார்கள். யோகினிகள் கல்லறைகள் மற்றும் போர்க் களத்துடன் தொடர்புடையவர்கள். தாகினிகள் இறந்தவர்களை உண்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் யுத்தத்திற்கு செல்லும் மன்னர்கள் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக போரில் ஈடுபடுவதற்கு முன்பு மயானங்களில் சென்று யோகினிகள் அல்லது தாகினிகளை வணங்கி விட்டே செல்வார்கள் என்பதாகவும் கூறுகின்றார்கள். தாகினிகளைக் குறித்த குறிப்புக்கள் பாகவத புராணம், பிரம்மா புராணம், மார்க்கண்டேய புராணம் மற்றும் கதாசரித்ஸாகரா போன்ற நூல்களில் காணப்படுகின்றது. மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டு உள்ள தேவி கவச (மந்திரங்கள்) மந்திரம் தீய தாகினிகள் மற்றும் தீய தாந்த்ரீக யோகினிகளின் தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடை பகுதியில் உக்ரமான அல்லது கேளிக்கைக் காட்டும் வடிவங்களில் யோகினிகளுக்கு பணிபுரியும் துணை தெய்வங்களாக தாகினிகள் காணப்பட்டு வணங்கப்பட்டு வந்திருந்தார்கள். சில தாகினிகளோ மிக அழகிய பெண் உருவத்திலோ அல்லது நிர்வாண கோலத்தில், கழுத்தில் மண்டையோடு கோர்த்த மாலைகளை அணிந்து கொண்டு மனித உடலோடு காட்சி அளித்தாலும், அவர்கள் முதலில் தீய மற்றும் மோசமான ஆவிகள் என்று கருதப்பட்டாலும், அவை அனைத்துமே தாகினிகளின் போலியான கோலங்கள் என்றே நம்புகின்றார்கள். மாறாக தாந்த்ரீக சடங்குகள் மூலம் ஞானத்தை அடைய நினைக்கும் சாதகர்களுக்கு அவர்கள் நல் வழி காட்டுகின்றனராம். அவர்களின் திகம்பர (நிர்வாண) வடிவம் தூய்மையான மனநிலையை குறிக்கிறது, தீய எண்ணங்கள் இல்லாத மற்றும் அலை பாயும் மனத்தைக் கட்டுபடுத்தும் மன நிலையைக் காட்டும் கோலமே அது என்று கூறுகின்றார்கள். தாகினிகள் வேண்டும் என்றேதான் சாதகர்களின் மன நிலை அலை பாயாமல் உள்ளதா என்பதை சோதனை செய்ய நிர்வாண வடிவத்தில், காம இச்சைகளை தூண்டும் கோலங்களில் தோன்றி அவர்கள் முன் செல்வார்களாம். தாகினிகள் திபெத்திய புத்த மத தந்திர மார்க்கத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையவர்கள்.

சமண மற்றும் புத்த மத தாந்த்ரீக வழிபாட்டு மறுமலர்ச்சியின் போது, தேவதைகள் எனப்படும் யோகினிகள் எண்ணிக்கை மூன்று, ஏழு, பதினாறு, 64, 86, 108 என்று அதிகரித்துக் கொண்டே இருந்தன. அதே சமயத்தில் அவற்றுக்கான மந்திர உச்சாடனைகளும் அதிகரித்துக் கொண்டே இருந்தன. புதிய, புதிய தேவதைகள் (யோகினிகள்) வெளியாயின. தேவதைகளை (யோகினிகள்) நல்ல தேவதைகள் மற்றும் தீய தேவதைகள் என சாதகர்கள் பிரித்தார்கள். ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன் சாதகர்கள் அவர்களில் சிலரை ஆலயங்களில் கூட பிரதிஷ்டை செய்தார்கள்.

இடை வருட காலத்தில் பல்வேறு தேவதைகள் (யோகினிகள்) தீய தேவதைகளாக விலக்கி வைக்கப்பட்டன. நிர்வாணமாகவும், உக்கிரமாகவும் காட்சி அளித்த சிலைகள் துணிகளால் மூடப்பட்டிருந்தன. அவற்றில் சில சிலைகள் வயல்வெளிகளில் கூட வீசி எறியப்பட்டன. காலப்போக்கில், அப்படியாக தூக்கி எறியப்பட்டு புறக்கணிக்கப்பட்ட தேவதைகளின் சில சிலைகள் (யோகினிகள்) கிராம தெய்வங்களாக மாறினர், அல்லது ஆலய வளாகங்களின் வெளிப்புறங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை குறித்த சில கதைகளும் வெளியாயின.

64 யோகினிகளை வெளிப்படுத்திய அஷ்ட மாத்ரிகாஸ்களை குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன. ஆகவே யோகினிகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் மாத்ரிகாஸ் குறித்து ஒருவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். தக்ஷ யாகத்தின் போது சதி உருவில் இருந்த பராசக்தியின் மூலமே அஷ்ட மத்ரிகாஸ் தோன்றினார்கள் என்று கூறப்பட்டாலும், தேவி மஹாத்மியம் போன்ற புராண நூல்கள் சிவபெருமான் ஆலயங்களின் வெளிப்புற சுவர்களில் காணப்படும் ஏழு சப்த மாத்ரிகாஸ் குறித்து வேறு சில செய்திகளைக் கூறுகின்றன. அரக்கன் அந்தகா என்பவனை அழிப்பதற்காக சிவபெருமான் நடத்திய போரில் அவருக்கு உதவி செய்வதற்காக சப்த மாத்ரிகாஸ் எனப்படும் ஏழு அன்னைகளை சில ஆண் தெய்வங்களே உருவாக்கினார்கள் என்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. பகவான் பிரம்மாவிடமிருந்து பிராமணி எனும் மாத்ரிகாவும், விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி எனும் மாத்ரிகாவும், இந்திரனிடமிருந்து இந்திராணி எனும் மாத்ரிகாவும்,கார்த்திகேயரிடமிருந்து கௌமாரி எனும் மாத்ரிகாவும், வராஹாவிடமிருந்து வராஹி எனும் மாத்ரிகாவும், பராசக்தி மூலம் சாமுண்டா எனும் மாத்ரிகாவும், நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணு மூலம் நரசிம்மி எனும் அன்னையும் வெளி வர சிவபெருமானின் வாயிலிருந்து வெளி வந்த தீப்பிழம்புகளிலிருந்து எட்டாவதாக மகேஸ்வரி எனும் மாத்ரிகாவும் வெளி வந்தார்களாம்.

அசுர சக்திகளுக்கு எதிராக சிவபெருமான் மற்றும் துர்கா தேவி நடத்திய போரில் உதவி செய்த மாத்ரிகாஸ்களின் பெயர்கள் இரண்டு போர்களிலும் காணப்படுவதால் உண்மையில் அவர்களை வெளிப்படுத்தியது யார் என்ற குழப்பம் உள்ளது என்றாலும், அது தேவையில்லை என்று பண்டிதர்கள் கருதுகின்றனர். அவர்கள் கூறும் காரணம் என்ன எனில் அனைத்து மாத்ரிககாஸும் ஆரம்பத்தில் ஆதி பராசக்தியிலிருந்து மட்டுமே தக்ஷ யாகத்தின்போது தோன்றியவர்கள். தக்ஷ யாகத்திற்குப் பிறகு அவர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருந்தவாறு பராசக்திக்கு சேவகம் செய்தவண்ணம் இருந்தார்கள். அசுர சக்திகளுக்கு எதிரான போரின் போது தெய்வங்களுக்கு உதவும்படி அழைக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் வெளித் தோன்றி தெய்வ யுத்தங்களில் பங்கேற்றார்கள். அப்போது சிலருடைய பெயர்கள் மாறி கூறப்பட்டு வந்தன என்பதினால்தான் ஏழு அல்லது எட்டு எனும் அஷ்ட மத்ரிகாஸ் என்பதில் குழப்பம் உள்ளதே தவிர வேறு எதுவும் இல்லை. எது எப்படியிருந்தாலும், 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தாந்த்ரீக நூல்களில் இருந்து தெரிவது என்ன எனில் அஷ்ட அல்லது சப்த மாத்ரிகாஸ் வழிபாடு இந்தியா முழுவதும் உள்ள ஆலயங்களில் இருந்துள்ளது என்பதே.

இனி நாம் மீண்டும் யோகினியின் செய்திக்கு செல்வோம். ஜைன, ஹிந்து மற்றும் புத்த மதங்களை தழுவி இருந்த பல நாடுகளிலும் யோகினிகளை பைரவி, தாகினி , ஷாகினி, சாகினி மற்றும் சக்திகள் போன்ற பெயர்களில் அழைத்து உள்ளார்கள். ஸ்கந்த புராணத்தில் யோகினிகள்,தாகினிகள் , சக்தி அல்லது பைரவி என்று யோகினிகளை குறிப்பிட்டு உள்ளார்கள் . லலிதா சஹஸ்ரநாமமும் விஷ்ணு பகவத புராணமும் பராசக்தியை மகா யோகினி என்றும் குல யோகினி என்றும் பயபக்தியுடன் அழைக்கின்றன. சில நேரங்களில் துர்கா தேவியை யோகினிகளின் தலைவி என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள் என்பதின் காரணம் யோகினிகள் துர்கா தேவியின் உடலில் இருந்து வெளியானவர்கள் என்ற நம்பிக்கை ஆகும். யோகினிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதாக இருந்தாலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள 64 யோகினிகளில் , மிக முக்கியமான யோகினி ‘மகாமயா’ என்று கூறப்படுகின்றது. பிரபஞ்சத்தின் தாய் என்று விவரிக்கப்படும் இவர் பிற 63 யோகினிகளுடன் ஒப்பிடும்போது அவரது உருவம் மிகப் பெரியதாகவே காணப்படுகின்றது. ஒரிஸ்ஸா மானிலத்தில் வைஷ்ணவ பண்டிதர்களின் நம்பிக்கை என்னவென்றால், யோகினி மகாமயா என்பவள் விஷ்ணுவின் கண்களில் அமர்ந்து இருந்த ‘யோகனித்திரா’ எனும் யோகினியாவார். அதனால்தான் அவர் ஹிராபூர் ஆலயத்தின் நுழை வாயிலுக்கு நேர் எதிரே காணப்படுகின்றார்.

யோகினி என்பவர் பெண் இனத்தை சேர்ந்த விண் மீன்கள் அல்லது துணைக் கடவுள் அல்லது தேவதூதர்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது. அவர்கள் மந்திரங்களை ஓதி தம்மை வேண்டி துதிக்கும் சாதகர்களுக்கு தேவையான அசாதாரண சித்தி சக்திகளை அளிப்பவர்களாம். இந்து மத ஐதீகத்தின்படி 10 ஆம் நூற்றாண்டில் இருந்த யோகினி வழிபாடு என்பது யோக தத்துவம் மற்றும் தந்திரக் கலை என்பவற்றை ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது. இந்தக் கருத்து இந்து மத்தில் மட்டும் அல்ல, புத்த மதத்தின் தந்திரக் கலை ஐதீகத்திலும் இருந்துள்ளது.

யோகினி வழிபாடு குறித்து ‘டிரைபூன்’ (https://www.tribuneindia.com/2000/20000430/spectrum/main4.htm) என்ற வடநாட்டு பத்திரிகைக்கு பேட்டி தந்த திருமதி வித்யா தேஹெஜியா கீழ் கண்ட கருத்துக்களைக் கூறி உள்ளார்.

மேற்கோள்:-

-கி.பி 800 முதல் 1300 வரை 64 யோகினிகள் வழிபாடு பொதுவாகக் காணப்பட்டது. யோகினிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெரும்பாலான ஆலயங்கள் இந்த காலகட்டத்தில்தான் கட்டப்பட்டுள்ளன. யோகினி வழிபாடு எனும் சடங்கு தாந்த்ரீக சடங்குகளின் அடிப்படையில் அமானுஷ்ய சக்திகளை பெறவே நடத்தப்பட்டன. எண் கணித சாஸ்திரத்தின்படி 8 எனும் எண் பல மந்திர சக்திகளைக் கொண்டது. ஆகவே 8 என்பதின் இனப்பெருக்கமாக உள்ள 64 எனும் எண்ணும் மந்திர சக்திகள் கொண்டதே. யோகினி வழிபாட்டை செய்து வந்திருந்த சில சாதகர்கள் ‘ஷவ சேடன்’ அதாவது பூமியின் ஆசைகளிலிருந்து பிரிந்து செல்வதற்கான இறுதி அடையாளமாக ஒரு இறந்த உடலின் தலையை துண்டித்து ஏறிய வேண்டும் எனும் சடங்கையும் செய்து வந்தார்கள். ஆனால் அவர்கள் விலங்கு அல்லது மனித பலிகளை ஒருபோதும் நடத்தவில்லை.

கி.பி 1500 வரை, இந்த வகையிலான வழிபாட்டு முறை பரவலாகப் இருந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஒரு காலத்தில் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களிலும் இறந்தவர்களது சடலத்தை தாமே நல்ல முறையில் தகனம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, ஏழைக் குடும்பத்தினரின் இறந்தவர்களது சடலங்களை சாதகர்கள் மயானத்துக்கு கொண்டு சென்று ‘ஷவ சாதனா** அல்லது சடல சடங்குகளை’ செய்து முடிந்ததும் தகனம் செய்வார்களாம். ஆனால் பிற்கால நூற்றாண்டுகளில், சடங்குகளின் பயமுறுத்தும் தன்மையினாலும், இந்தியா முழுவதும் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் வளர்ச்சியினாலும் ஒரு சில சிறிய அளவில் மட்டுமே இருந்த இந்த வழிபாட்டு முறை மெதுவாக மறையத் துவங்கியது. அதனால் பல யோகினி ஆலயங்கள் பாழடைந்து புறக்கணிக்கப்படலாயின. –

-: மேற்கோள் முடிவு

** ‘ஷவ சாதனா’ என்பது யோகினிகள் சம்பந்தப்பட்ட தாந்த்ரீக வழிபாடுகளில் ஒன்றாகும், இது பொதுவாக அமாவாசை நாளில் நடத்தப்படுகிறது. இந்த தாந்த்ரீக சாதனா வங்காளத்தில் அதிக நடைமுறையில் உள்ளது. மயானம்,கல்லறை, கைவிடப்பட்ட வீடு, ஆற்றங்கரை, ஒரு மலை அல்லது வேறு ஏதேனும் ஒரு தனிமையான இடத்தில் சாதகர்கள் சடலத்தின் மீது அமர்ந்துகொண்டு 64 யோகிகளையும், திசைகளின் பாதுகாவலர்களையும் வணங்கிய பின்னர் தியானத்தில் அமர்வார்கள். சடங்கு முடியும்வரை சாதகர்கள் சடலத்தின் மீது அமர்ந்திருப்பார். சாதனா செய்பவர்கள், தனக்கு தீட்ஷை கொடுக்கப்பட்ட மந்திரத்தை தொடர்ந்து கூறுவார்கள். இறந்தவர்கள் சடலத்துடன் இரவில் தனிமையில் இருப்பார்கள். இறந்தவர்களது சடலம் பைரவராக கருதப்படும். சடங்கு முடியும்வரை சடலத்தில் உள்ள ஆற்றல் மற்றும் அதில் உள்ள ஆவி தப்பிக்காமல் இருப்பதற்கு, சடலத்தின் தலை முடியும், கால்களும் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கும். பின்னர், சாதகர்கள் அந்த சடலத்தின் மீது அமர்ந்து கொண்டு 64 யோகிகளையும், திசைகளின் பாதுகாவலர்களையும் வணங்கிய பின்னர் பிரதான சடங்கைத் தொடங்குவர். மேலும் அவர் சடங்கை முடிக்கும் வரை சடலத்தின் மீது அமர்ந்திருப்பார். அதன் பின்னர் தாந்த்ரீகத்தின் பஞ்சமகர யோகினி தாந்த்ரீக வழிபாட்டு முறைக்கு முக்கியத்துவம் தந்து வழிபடுபவர்கள். அங்கு நடைபெறும் சடங்கு முறையில் மது, இறைச்சி, மீன்,யோகப் பயிற்சிகள் மற்றும் உடலுறவு என்ற ஐந்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அப்படி அந்த சடங்குகளை செய்யும் சாதகர்களை பேரானந்த நிலையான பேரறிவு கிடைக்கவும் அதீத சக்தி பெறவும் செல்லும் பாதையில் யோகினிகள் அழைத்துச் செல்கின்றார்கள் என்பதாக நம்பப்படுகிறது.

தாய்மார்கள் என்ற பெயரில் யோகினிகளின் குறிப்புகளை மகாபாரத நூலில் காணலாம். மகாபாரத நூலில் பதினெட்டு முக்கிய கதைகள் உள்ளன, இதில் ஒன்பதாவது கதையான பர்வா எனும் பகுதி, ஷால்யா பர்வா என்று அழைக்கப்படுகிறது. ஷால்யா பர்வா 65 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அதில் சரஸ்வதி நதியின் வெளிப்பாடு மற்றும் 44 வது அத்தியாயத்தின் கீழ் ஸ்கந்தா (முருக பகவான்) என்று அழைக்கப்படும் கார்த்திகேயர் உட்பட பலரது கதைகளைக் கொண்டுள்ளது. வியாச முனியின் சீடராக இருந்த வைஷம்பயனா என்ற முனிவரால் இந்த கதைகள் மன்னர் ஜனமேஜயாவிற்கு விவரமாக கூறப்பட்டதாகவும், வியாச முனிவரிடமிருந்துதான் வைஷம்பயனா மகாபாரத விவரங்களை கற்று அறிந்தார் என்பதாகவும் கூறப்படுகிறது.

அசுரனான தாராஹாசனுடன் நடந்த போரில் கார்த்திகேயர் எனும் முருகனுக்கு உதவிட நூற்றுக்கணக்கான அழகான, கூர்மையான ஆணி போன்ற நகங்களைக் கொண்ட, கூர்மையான பற்களையும் கொண்ட பெண் தெய்வங்கள் அதாவது யோகினிகள் என்பவர்கள் யம பெருமான், ருத்ரர், சந்திரன், குபேரன், வருணன், இந்திரன், அக்னி, வாயு மற்றும் பிரம்மா போன்ற பல தெய்வங்களினால் தோற்றுவிக்கப்பட்டார்கள் என்பதாக ஜனமேஜயாவுக்கு முனிவர் வைஷம்பயானா கூறிய பின்னர் அவர்கள் பெயர்களையும் அவருக்கு கூறினார்.

 

முன் காலங்களில் ஒரிசா, காஷ்மீர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பல இடங்களிலும் ஆட்சி செய்து வந்திருந்த பல மன்னர்கள் தாம் பல்வேறு தந்திர மந்திர சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்காக யோகினிகள் மற்றும் தாகினிகளை ஆராதித்து வந்திருந்தார்கள். இன்றும், உஜ்ஜைனி மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் சக்தி வாய்ந்த தாந்த்ரீக சக்திக மையங்களாக பல ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றிலும் ஒரு காலத்தில் உஜ்ஜயினியை ஆண்டு வந்திருந்த புகழ் பெற்ற மன்னனான விக்ரமாதித்யா என்பவர் வணங்கி வந்திருந்தார் என்பது வரலாற்று செய்தியாகும். ஒருமுறை மந்திரவாதியின் சூழ்ச்சிகளால் அவருடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோது ஒரு யோகியின் அறிவுரைப்படி மயானத்தில் இருந்த ஒரு யோகியின் உடலை எடுத்து வந்தபோது அதில் குடி இருந்த, யோகினிகளுக்கு பணிவிடை செய்து வந்திருந்த பூத கணமான வேதாளம் யோகியின் தீய சதியை முடியடிக்க அந்த மன்னருக்கு உதவி செய்தது என்பதும் வரலாற்று செய்தியாகும்.

சோமதேவாசுரி என்ற ஆசிரியர் எழுதிய ‘யசதிலகா’, கல்ஹானா என்பவர் இயற்றிய ‘ராஜதாரங்கினி’ மற்றும் சோமதேவாவின் ‘கதா சரித்சாகரா’ போன்ற, இடைக்காலத்தில் இயற்றப்பட்டுள்ள இலக்கியங்களில் யோகினிகளை தெய்வங்களாக சித்தரித்து உள்ள பல கதைகளை  காணலாம்.

நதி போன்று வந்த மன்னர்கள் என்ற அர்த்தத்தைக் குறிக்கும், கல்ஹானா எனும் காஷ்மீர் பிராமணரால் எழுதப்பட்ட, காஷ்மீர் நூல்களில் ஒன்றானதும், எட்டு பாகங்களை கொண்டதுமான ‘ராஜதாரங்கினி’ எனும் நூல், 7826 தரங்கா (அலைகள்) எனப்படும் வசனங்களை கொண்டதாகும். யோகினி வழிபாட்டை ஆதரிக்கும் விதமாக எழுதப்பட்டு உள்ள காஷ்மீர் நூல்களில் அதுவும் ஒன்று ஆகும். ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த காஷ்மீர் மன்னர்கள் செய்து வந்திருந்த பல்வேறு தாந்த்ரீக அல்லது அகம வழிபாடு மற்றும் நடைமுறைகளுக்கு ஒரு சாட்சியாக கல்ஹானா இருந்திருக்கலாம் என்பதினாலோ என்னவோ அவர் பல தாந்த்ரீக குருமார்களின் பெயர்கள் , யோகினி வழிபாட்டின் ஆழ்ந்த நடைமுறைகள், சைவ உருவங்களின் வெளிப்பாடுகள் போன்றவற்றை ராஜதாரங்கினியின் உரையில் குறிப்பிடுகிறார்.

ராஜதாரங்கினி கதைகளின்படி, சில மன்னர்கள் அதிக சக்திகளை பெறுவதற்கான தாந்த்ரீக வழிபாட்டு நடைமுறைகளில் ஈடுபட்டனர். அதனால் சில மன்னர்கள் தவறான குருமார்களின் வழிகாட்டலினால் தங்கள் ராஜ்யத்தையும் இழந்துள்ளார்கள். அதில் காணப்படும் கதைகளில் ஒன்றில் ஆலயத்தில் இருந்த, தாந்த்ரீக தெய்வங்களான பைரவர் மற்றும் யோகினிகள் எனப்பட்ட பெண் தெய்வங்களை திருப்தி செய்வதற்காக நில உரிமையாளர் மற்றும் செல்வந்தர்களாக இருந்த ‘தமார்ஸ்’ என்ற கூட்டத்தினரின் தலைவரான ஒரு தமார்ஸை பலி கொடுத்த கதையும் உள்ளது.

அந்த கால கட்டங்களில், இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்திகளைப் பெற யோகினிகள் அல்லது பெண் தெய்வங்கள் ஆராதிக்கப்பட்டு வந்திருந்தன. அந்த தெய்வ சக்திகளுக்கு செய்யப்பட்ட சடங்குகளில் மிருகங்களின் மாமிசம் அல்லது இரத்தம் போன்றவை பலியாக படைக்கப்பட்டாலும் மனித பலிகள் தரப்பட்டது இல்லை.

அந்த நூலின் இன்னொரு சுவாரஸ்யமான கதையில் கல்ஹானா கூறுகிறார் ‘ஜெயேந்திர என்ற மன்னரால் ஆளப்பட்ட இராச்சியத்தில் இருந்த மந்திரிகளின் ஒருவரான ‘சந்திமாத்’ என்பவர் தவறான காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார். ஆனால் மயானத்தில் இருந்த யோகினிகளின் குழு, வட்ட வடிவத்தில் அமர்ந்து கொண்டு இயற்கைக்கு அப்பாற்பட்ட அவர்களுடைய அசாதாரண சக்திகளை பயன்படுத்தி சந்திமாத்தின் குரு இஷானாவின் வேண்டுகோளின் பேரில் சந்திமாத்தின் எரிந்த உடல் எலும்புகளை ஒன்றிணைத்து அவரை உயிர் பிழைக்க வைத்தார்கள். அதன் பின் சில காலம் சந்திமாத் போதையில் இருந்த யோகினிகளுடன் அவர்களது வட்டத்தின் தலைவராக இருந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார். தகன மைதானத்தில் அவர் புத்துயிர் பெற்ற காட்சி யோகினிகளின் தாந்த்ரீக சக்திக்கு ஒரு சாட்சியாக இருந்தது.

புராதன இலக்கியங்களில் உள்ள பல நூல்கள், புராணக் கதைகள் மற்றும் கதைகள் மூலம் யோகினிகளின் ஆற்றலையும் அவற்றின் அமானுஷ்ய சக்திகளையும் அறிய முடிகின்றது ஆனால் அவை சர்ச்சைக்குரியவை அல்ல.

நான் முன்பு குறிப்பிட்டது போல, யோகினி ஆலயங்களை துவக்கத்தில் யோகினி பீடங்கள் என்றே அழைத்தார்கள். அதன் பின்னரே அவை ஆலயங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் நான்கு இடங்களில் ‘அறுபத்து நான்கு யோகினி ஆலயங்கள்’ உள்ளன. அந்த நான்கில் இரண்டு ஒடிசா மானிலத்திலும், இரண்டு மத்திய பிரதேசத்திலும் உள்ளன. ஒடிசாவில் உள்ள கோயில்களில் ஒன்று ஹிரார்பூரில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள சௌசாதி யோகினி ஆலயம் ஆகும். மற்றொன்று பாலங்கீர் மாவட்டத்தின் திதிலாகருக்கு அருகிலுள்ள ராணிப்பூர்-ஜரியாலில் உள்ள சௌசாதி யோகினி பீடம் ஆகும். யோகினியின் இரண்டு ஆலயங்களுக்கும் மேற்கூரைகளும் கிடையாது. அவை எப்போதும் வானத்தை நோக்கி திறந்திருக்கும். மத்திய பிரதேசத்தில் கஜுராஹோவில் உள்ள சௌசாதி யோகினி ஆலயத்தை தவிர மற்ற அனைத்து யோகினி ஆலயங்களும் வட்டவடிவில் கட்டப்பட்டு உள்ளன.

மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு குறிப்பிடத்தக்க யோகினி ஆலயங்களில் ஒன்று ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த கஜுராஹோவில் உள்ள சௌசாதி யோகினி ஆலயம் ஆகும். இரண்டாவது ஜபல்பூருக்கு அருகிலுள்ள பேடாகாட்டில், 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள சௌசாதி யோகினி ஆலயம் ஆகும். யோகினி கோயில்களின் தனித்துவமான அம்சம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப கலைகளிலான சிற்பங்கள்.

நான்கு யோகினி ஆலயங்களிலும் உள்ள யோகினி சிலைகளின் அமைப்புக்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உள்ளன என்பது மட்டும் அல்ல, அனைத்து யோகினி ஆலயங்களிலும் உள்ள யோகினிகளின் உருவங்களும் ஒரே தோற்றம் கொண்டவையாக இல்லை. ஹிராபூர் ஆலயத்தில் உள்ள யோகினிகள் நின்ற நிலையில் அவரவர்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றார்கள். ராணிப்பூர்-ஜரியல் ஆலயத்தில் உள்ள யோகினிகள் மிகப் பெரிய உருவ அமைப்பில் நடனமாடிக் கொண்டு உள்ள நிலையில் காணப்படுகின்றன. அங்குள்ள மொத்த 64 சிலைகளில் இரண்டு சிலைகள் அழிக்கப்பட்ட நிலையில் அல்லது சேதமடைந்த நிலையில் இருக்க, பதினான்கு யோகினிகளுடைய முகங்கள் பூனை அல்லது யானை போன்ற விலங்குகள் உருவில் உள்ளது .

ராணிப்பூர்-ஜரியாலில் உள்ள சௌசாதி யோகினி ஆலயம் வட்ட வடிவிலான அமைப்பில் உள்ளது. இந்த ஆலயத்தின் மையத்தில் பறவை உட்காரும் இடம் போன்ற அமைப்பில் ஒரு சிலை காணப்படுகின்றது. அதில் உள்ள மூர்த்தியானது பிரம்மாவின் சிலை என்று கூறப்படுகிறது என்றாலும் யோகினிகளை கட்டுப்படுத்தி வைக்கும் பைரவரை தோற்றுவித்த சிவபெருமானுடைய சிலையே அது என்றும், அதுவே லிங்க வடிவில் உள்ளது என்றும் பலர் நம்புகிறார்கள். அந்த சிலை பிரும்மா எனக் கூறப்படுவதின் காரணம் அந்த சிலையில் காணப்படும் இறைவன் மூன்று முகங்களையும் எட்டு கரங்களையும் கொண்டிருப்பதால்தான். பகவான் பிரம்மாவிற்கு மூன்று தலைகள்  உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

மத்திய பிரதேசத்தில் உள்ள யோகினி ஆலயங்களில் ஆச்சர்யமாக பைராகட் எனும் இடத்தில் உள்ள யோகினி ஆலயத்தில் 64 யோகினிகளுக்கு பதிலாக தனித் தனி அறையில் 81 யோகினிகள் வைக்கப்பட்டு இருந்தார்கள் என்பதாக நம்புகின்றார்கள். ஆனால் வேறு சிலரோ முதலில் இந்த ஆலயம் அறுபத்து நான்கு யோகினிகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள தனித் தனி அறைகளில் மாத்ரிகாஸ் எனப்படும் அன்னையின் சிலைகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும் நம்பினாலும், சில வரலாற்றாசிரியர்கள் முதலில் அந்த ஆலயத்தில் 81 யோகினிகள் தனித் தனி அறையில் இருந்திருக்க வேண்டும் என்றும், பிற்காலத்தில் சில சிலைகள் அழிக்கப்பட்டு அல்லது திருடப்பட்டு இருக்கலாம் என்றும், ஆகவே அந்த வெற்று அறைகளில் குஷனாஸ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் சில ஆட்சியாளர்களால் வேறு சில தெய்வ சிலைகள் நிறுவப்பட்டு இருக்கலாம் என்றும் நம்புகின்றார்கள். ஸ்கந்த மற்றும் அக்னி புராணங்களும் அறுபத்து நான்கு யோகினிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றன என்பதினால் பெரும்பாலான யோகினி ஆலயங்கள் அறுபத்து நான்கு யோகினிகளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம்.

பைராகட் ஆலயம் குறித்த சுவாரஸ்யமான உள்ளூர் நாட்டுப்புறக் கதை ஒன்று உள்ளது. மொகலாய பேரரசனாக இருந்த ஒளரங்கசிப் என்ற மன்னர் இந்திய கண்டத்தின் பல இடங்களிலும் இருந்த ஆலயங்களை அழித்துக் கொண்டிருந்தபோது, அவர் ஜபல்பூரை அடைந்து இந்த யோகினி ஆலயத்தையும் அழிக்கத் தொடங்கினார். அவரது படைகளின் ஒரு பகுதி யோகினிகளின் சிலைகளை அழிக்கத் தொடங்கியதும், மற்றொரு படைக்க குழு ஆலய மையத்தில் இருந்த சிவபெருமான் மற்றும் பார்வதியின் கருவறைக்கு சென்றபோது திடீர் என எங்கிருந்தோ வந்த பல்லாயிரக்கணக்கான தேனிகள் படை வீரர்களை தாக்கத் துவங்க, தேனிகளின் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன ஒளரங்கசிப்பின் படைகள் அச்சமடைந்து ஓடினார்கள். உள்ளூர் நம்பிக்கை என்னவென்றால், அப்படி அங்கு வந்தவை தேனிகள் அல்ல, ஆனால் ஒளரங்கசிப்பின் படைகளின் நடவடிக்கையில் கோபமடைந்த யோகினிகளே தங்களை பல்லாயிரக்கணக்கான தேனிகளாக மாற்றிக் கொண்டு வந்து அவரது படைகளைத் தாக்கி விரட்டி அடித்தார்கள் என்பதாகும்.

___________________________

References:-  பின்வரும் இணைய தளங்களில் காணப்பட்ட சில தகவல்கள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மோகினி, யோகினி போன்றவர்களின் கதைகள் மேற்கண்ட கட்டுரையைத் தொகுக்க எனக்கு உதவியது. 

 1. https://www.scribd.com/document/492544372/81502299-Namavali-64-Yogini
 2. https://www.sahapedia.org/the-cult-of-chausath-yogini
 3. https://m.facebook.com/notes/para
 4. https://tamilandvedas.com/tag/64-crore-yoginis/
 5. https://www.hindu-blog.com/2015/08/goddess-kubjika.html
 6. https://sreenivasaraos.com/tag/kubjika-tantra/
 7. https://www.embodiedphilosophy.com/yoginis-of-past-and-present-2/
 8. https://en.wikipedia.org/wiki/Yogini_temples
 9. https://www.awanderingmind.in/2018/01/bhedaghat-home-of-81-yoginis.html
 10. https://www.sacred-texts.com/hin/m09/m09046.htm
 11. https://www.himalayanart.org/search/set.cfm?setID=2603
 12. https://mythus.fandom.com/wiki/%E1%B8%8C%C4%81kin%C4%AB
 13. https://sreenivasaraos.com/2012/10/07/saptamatrka-part-three/
 14. https://dbpedia.org/page/Shava_sadhana
 15. https://www.dollsofindia.com/library/bhairava/
 16. https://en.wikipedia.org/wiki/Yogini
 17. https://www.anuradhagoyal.com/yogini-cult-temples-vidya-dehejia/
 18. https://www.sahapedia.org/women-tantra-the-yoginis-of-hirapur
 19. https://www.yogapedia.com/definition/6503/panchamakara
 20. https://shivashakti.com/janarnav
 21. https://mysticsoul108.co.uk/products/yogini-figurine-silver-bordeaux
 22. https://en.wikipedia.org/wiki/Chausath_Yogini_Temple,_Ranipur_Jharial
 23. https://archive.org/stream/tales-from-the-rajatarangini-by-sl-sadhu/Tales%20from%20the%20Rajatarangini%20By%20SL%20Sadhu_djvu.txt
 24. https://cbkwgl.wordpress.com/2017/05/09/the-story-of-sandhimat-rajatarangini/
 25. http://bharatkalyan97.blogspot.com/2017/04/dont-whitewash-tyranny-bigotry-of.html
 26. https://www.tripadvisor.com/ShowUserReviews-g503699-d2708833-r299040865-Chausat_Yogini_Temple-Jabalpur_Jabalpur_District_Madhya_Pradesh.html