திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையில் இருந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம். ஆந்திரவின் கிருஷ்ணாவரம் கிருஷ்ணா நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், பள்ளிப்பட்டு மற்றும் குமாரராஜபேட்டை எனும் கிராமத்தில் லவா மற்றும் குசா எனும் பெயர்களில் உள்ள ஆறுகளுடன் இணைந்து குசஸ்தலை எனும் சிறு ஆறாக மாறி இதன் வழியே ஓடுகிறது. சில இடங்களில் காணப்படும் கல்வெட்டு செய்திகளின்படி பதினைந்தாம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியும் கர்னாடகா மற்றும் ஆந்திராவை ஆண்டு வந்திருந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் இருந்ததாகவும் அந்த காலத்தில் எழுப்பப்பட்டு இருந்த வழிபாட்டுத் தலமாக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தில் அவருடைய ராஜகுருவாக இருந்தவரும் 1460 முதல் 1539 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்திருந்தவருமான வியாசராயர் எனும் ராஜகுருவினால் பல இடங்களிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்றும் அவற்றில் ஒன்றே இந்த நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும் என்கின்றார்கள். வியாசராயர் எதோ தீராத வியாதியினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அவர் தனது வியாதியை தீர்த்து வைத்தால் தன்னால் எந்த அளவு முடியுமோ அத்தனை ஆலயத்தை ஹனுமானுக்கு நிர்மாணிப்பதாக வேண்டிக் கொண்டதாகவும், அதனால்தான் அவர் சுமார் 732 ஆலயங்களை கர்னாடகாவின் பல இடங்களிலும் கட்டியதாகவும் அதில் ஒன்றே இங்குள்ள ஆலயம், பெங்களூரின் பிரபலமான கலி வீர ஆஞ்சனேயர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள பிரசித்தமான காட்டு வீர ஆஞ்சனேயர் ஆலயமும் என்றும் கூறுகிறார்கள். ஆகவே கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில்தான் இந்த ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது.

திருத்தணியை அடுத்த நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயத்தின் ஹனுமார் ஸ்வயம்பு மூர்த்தி என்றும், அது வடிவமைக்கப்பட்டதின் காலம் தெரியவில்லை என்றும், காலம் காலமாக வாய் வழிச் செய்தி மூலமே கிடைக்கும் செய்திகளின்படி இந்த ஆலயம் வியாச முனிவரின் அருளால் தானாகவே தோன்றி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் இன்னொரு செவி வழிக் கதையும் இதைக் குறித்து உள்ளது. பல இடங்களிலும் ஹனுமானுக்கு ஆலயம் எழுப்பியவாறு சென்று கொண்டிருந்த வியாசராயாவும் அவருடன் உடன் சென்றவர்களும் கால் நடையாக கர்னாடகாவில் இருந்து திருப்பதி மலையில் ஹனுமானுக்கு ஆலயம் அமைக்க பாறையில் செதுக்கப்பட்ட  ஒரு ஹனுமானின் சிலையை தம்முடன் எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றபோது வழியில் இளைப்பாற நல்லாட்டூரில் இரவு தங்கினார்களாம். ஹனுமானின் சிலையை தாம் இளைப்பாறிய இடத்தில் பூமி மீது பத்திரமாக  வைத்து இருந்தார்கள். மறுநாள் காலை எழுந்து தமது பயணத்தைத் துவக்கினார்கள். ஆனால் அவர்கள் கொண்டு சென்றிருந்த ஹனுமானின் சிலையை அவர்களால் பூமியில் இருந்து எடுக்க முடியவில்லை. என்ன செய்தும் அவர்களால் அந்த சிலையை அகற்ற முடியவில்லை. ஆகவே வருத்தத்துடன் அங்கேயே அன்று இரவும் தங்கி விட்டார்கள்.  அன்று இரவு வியாசராயரின் கனவில் தோன்றிய ஹனுமான் தனக்கு அங்கேயே ஒரு வழிபாட்டுத் தலம் எழுப்பி அதில் அந்த சிலையை வைக்குமாறு கூறியதாகவும் வியாசராயரும் அங்கேயே அந்த ஹனுமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவும் ஹனுமாரின் ஒரு வழிபாட்டுத் தலம் ஆயிற்று. அப்படி எழுந்ததே இந்த மூல ஆலயம் என்றும் கூறுகிறார்கள். அந்த வியாசராயரையே வியாசர் என்று கூறுகிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே இந்த ஆலயத்தின் காலம் ஆயிரத்துக்கும் முற்பட்ட வருட காலமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

ஆனால் அதற்குப் பிறகு காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளினால் இந்த வழிபாட்டுத் தலம் அழிந்து புதைந்து விட்டதாகவும், அங்கிருந்த பெரிய பாம்புப் புற்றின் அருகில் பாறையில் செதுக்கப்பட்டு இருந்த ஹனுமானின் சிலையும் புதைந்து இருந்ததாகவும், அந்த பாறை சிலையை யாரும் நாசப்படுத்தாமல் இருக்க ஒரு பெரிய பாம்பு ஒன்று அந்த புற்றில் மறைந்து இருந்தவாறு அதைக் காலம் காலமாக காத்து நின்றதாகவும் பிரசன்னத்தில் தெரிய வந்ததாகக் கூறுகிறார்கள்.

எது எப்படியோ காலப்போக்கில் நல்லாட்டூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  இருந்த இடமே தெரியாமல் மறைந்து இருந்தாலும், பாறையில் செதுக்கப்பட்டு இருந்த ஆஞ்சநேயர் பிற் காலத்தில் முன்னர் வழிபாட்டுத் தலம் அமைந்து இருந்த அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள ஆலய பண்டிதர்களின் கூற்றின்படி காலம் காலமாக ஐதீகமாக அவர்கள் கூறி வரும் இந்த தல வரலாற்றுக் கதை வாய் வழியே கூறப்பட்டு வந்த கதையே என்றும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றை தாமும் தெரிவிப்பதாகவும் கூறுகின்றார்கள். அப்படி என்றால் முன்னர் புதைந்து இருந்த ஆலயமும் ஹனுமானின் சிலையும் எப்படி வெளிவந்து புதிய ஆலயமாக ஆயிற்று?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வழிப்பாட்டு தலமாக இருந்த இந்த ஆலயத்தை இதே கிராமத்தை சேர்ந்தவரும் அப்போது சென்னையில் ஹோட்டல் தொழில் செய்து வந்திருந்த தனி நபர் ஒருவரே எழுப்பி உள்ளார் என்கின்றார்கள். சென்னையில் தொழில் அதிபராக இருந்த அந்த பக்திமான் ஒருவர் வேலை நிமித்தம் டெல்லிக்கு சென்று இருந்த நேரத்தில் அவருக்கு கனவில் தோன்றிய ஹனுமான், தான் புதைந்து உள்ள இடத்தைக் குறிப்பிட்டு அதே இடத்தில் தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூற, அந்த மனிதர் மறுநாள் காலை தனக்கு வந்த கனவைக் குறித்து மனைவிக்குக் கூற அவரும் தனக்கும் அதே போன்ற கனவு அதே நேரத்தில் வந்ததாகக் கூறினார்.  இது பகவானின் சித்தமே என எண்ணிய தம்பதியினர் பிரசன்னம் போட்டு பண்டிதர்களிடம் ஆலோசனைக் கேட்டப் பின், கனவில் கிடைத்த ஆலயத்தின் அங்க அடையாளங்களை வைத்துக் கொண்டு பண்டிதர்களின் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தை எப்படியோ கண்டு பிடித்து பூமிக்குள் மறைந்து இருந்த பாறையில் காணப்பட்ட ஆஞ்சநேயரை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு சிறிய ஆலயம் எழுப்பினார்களாம். இப்படியாக எழுந்ததே திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் ஆலயம் ஆகும். மூல கிராமம் குசஸ்தலை ஆற்றின் இடது புறத்திலும்  ஆலயம் வலது புறத்திலும் அமைந்து உள்ளது.

 ஆலய நுழைவாயில் 
சன்னதிக்கு செல்லும் வழி 

இன்னொரு செய்தியின்படி தற்போது அமைக்கப்பட்டு உள்ள பெரிய ஆலயம் 1932 களில் சென்னை ராஜதானி முதலமைச்சராக பணியாற்றிய திவான் பகதூர் முனுசாமி நாயுடுவின்  மகன் ஸ்ரீராமுலுவின் மருமகனின்  தனிப் பெரும் முயற்சியில் கட்டி முடிக்கப்பட்டதென்றும் 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அப்போதையை சட்டபேரை தலைவர் பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் முன்னிலையில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பட்டர் திருக்கரங்களால் இதில் குடமுழுக்கு நடைபெற்றது என்றும் தகவல் கிடைக்கிறது.

சன்னதியில் உள்ள ஹனுமானின் தோற்றம்

இந்த ஹனுமானின் சிலை கரும் பச்சை நிறத்திலான பாறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இந்த  சிலையின்  சிறப்பு பல உண்டு. இந்த சிலை ஹனுமாரை பால உருவிலான ஹனுமான் என்கின்றார்கள். வலது பக்கத்தை நோக்கி பார்த்தபடி அவர் நின்று இருப்பது விசேஷமானது. வலது கை மேலே தூக்கியபடி இருக்க அதில் அபய முத்திரை காணப்படுகிறது. சிலையின் சிறப்பு இன்னும் பல உள்ளது. ஹனுமான் நீண்ட வாலின் நுனியில் மணி, தலையில் நாமம், காதுகளில் குண்டலங்கள், கோரப்பற்களுடன் சங்கு, தலை உச்சியில் தாழம்பூ, அருகில் சுதர்சன சக்கரம், கழுத்தில் சாலிக்கிராமத்திலான மாலை, இடுப்பில் துஷ்டர்களை வதம் செய்யும் கத்தி போன்றவற்றுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் தனி ஆஞ்சநேயர் அல்ல.

சாதாரணமாகவே வாயுவின் புத்திரரான ஆஞ்சநேயரை சிவனின் அவதாரம் அல்லது சிவனின் அம்சம் என்பார்கள். ஆகவே மகாபாரத யுத்த காலத்திலே பூலோகத்தில் கொடுமைகளை செய்து வந்திருந்த அரக்கர்களை வதம் செய்து மக்களை துயரங்களில் இருந்து மீட்க இங்கு வந்து அவதரித்திருந்த ஆஞ்சநேயருக்கு அநேக சக்தி தரும் வகையில் அவருடைய உருவில் பல்வேறு அம்சங்களை சிவபெருமான் கொடுத்தார்.  தலையில் ராமர்  பாதம், இடது கையில் தாமரைப் பூ உருவில் மகாலஷ்மி, காதுகளில் அணிகலன்களாக காளி தேவி, கோரைப் பற்களாக துர்க்கை, இடுப்பில் கத்தியாக பரசுராமர், நெற்றியில் திருநேத்ரமாக (கண்) சிவபெருமான், இருபுறங்களிலும் சங்கும் சக்கரமுமாக விஷ்ணு பகவான், கால்களில் தண்டையாக கிருஷ்ணர் என பல தெய்வங்கள் ஆஞ்சநேயரின் உடலில் குடியேற, அங்கு வந்த பார்வதி தேவி அனைவரும் அனைத்து இடத்தையும்  அனைவரும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதினால் தனக்கு தங்க ஒரு இடம் இல்லையே என அனுமானிடம் கூற அவரும் தனது வாலை உயர்த்திக் காட்டி அதில் கட்டப்பட்டு இருந்த சிறு மணி கட்டப்பட்டு உள்ள இடமே மீதம் உள்ளது என்று கூற பார்வதி அவர் வாலில் மணியாக அமர்ந்து கொள்ள, அங்கு வந்த வியாசர் ஒரு பூணூலாக மாறி அந்த ஹனுமாரின் உடலில் அமர்ந்து கொண்டாராம். அந்த ஆஞ்சநேயர் இப்படியாக பல்வேறு தெய்வங்களின் சக்திகளைக் கொண்டவராக இருந்து கொண்டு அங்கு வந்து தன்னை வணங்கித் துதிக்கும் அனைத்து பக்தர்களுக்கும் செல்வமும், வாழ்க்கையில் வளத்தையும் குறைவில்லாது அள்ளித் தந்து வருகிறார் என்கின்றார்கள். மனதில் அமைதியையும், ஆனந்தத்தையும் அள்ளித்தரும் ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயரை வணங்கினால் வெற்றியும், செல்வமும் வீடு தேடி வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் தனித் தனி சன்னதிகளில் வினாயகரும், குடும்ப சமேதகர்களாக ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி போன்றவர்களும், தனி சன்னதியில் நவகிரகங்கள் தமது வாகனங்களுடன் காட்சி தந்தபடி இருக்கிறார்கள். ஹனுமானைப் நேராகப் பார்த்தபடி சனிபகவானும் உள்ளார் என்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். அதனால்தான் இங்கு வந்து சனி பகவானையும் ஹனுமானையும் வணங்கிச் சென்றால் சனியின் எந்த தொல்லை இருந்தாலும் அவை பூரணமாக விலகிவிடும் என்கிறார்கள். மூலஸ்தானத்தில் நின்றிருக்கும் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் தன்னிடம் வந்து வேண்டிடும் பக்தர்களுக்கு காட்சி தந்து அபயம் அளிக்க, அதே சன்னதியின் இடப்புறத்தில் நாகதேவதை சன்னதியும் இருக்க சன்னதியின் பின்னால் இரண்டு சந்தன மரமும், நாக சன்னதியின் பின்புறத்தில் சிவப்பு செம்பருத்தி மரமும் உள்ளன. அந்த நாக சன்னதியில்தான் ஹனுமானின் பாறையைக் காலம் காலமாக காத்து நின்ற நாகத்தின் வம்சமும் தொடர்ந்து வசிப்பதாகக் கூறுகிறார்கள். ஆகவேதான் அந்த பாம்பு புற்றை அகற்றாமல் பூஜித்து வருகிறார்கள். இன்றும் அந்த புத்தில் நாகம் வந்துவிட்டுச் செல்வதாகவும், ஆனால் யாரும் அதற்கு இடையூறு செய்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.
ஹனுமான் சன்னதிக்கு வலப்புறத்தில் 
நாக சன்னதியும் பாம்புப் புற்றும்

இந்த ஆலயத்தின் ஒரு முக்கிய அம்சம் இங்கு நடைபெறும் வருடாந்திர ஸ்ரீ சீதா திருக்கல்யாண உற்சவம் ஆகும். மாலை 6 மணியிலிருந்து ஸ்ரீராமரும், சீதையும் திருமணக் கோலத்தில் சன்னதியில் இருந்து புறப்பட அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம், அர்ச்சனை, தாம்பூலப் பிரசாதம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுமாம். இந்த சுப வைபவத்தின் பிரதான அம்சமே ராமர்- சீதை இருவரும் தம்பதி சமேதகர்களாக காப்புக் கயிறு கட்டிக் கொள்வதுதான். ஆகவே திருமண வயதை எட்டிவிட்ட ஆனால் திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலாரும் இங்கு வந்து ராம-சீதை திருமணத்தன்று வழங்கப்படும் காப்புக் கயிற்றைக் கட்டிக் கொண்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நீண்ட கால நம்பிக்கை ஆகும். அந்த நிகழ்ச்சியன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் காப்புக்கயிறு கட்டுவார்கள்.

புத்திர பாக்கியம்  வேண்டியும், திருமணம் 
நிறைவேற வேண்டியும் ஆலய  வேப்ப 
மரத்தில் கட்டப்பட்டு உள்ள  பிரார்த்தனை துணிகள்

சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பிரதான சாலையில் இருந்து திருத்தணி மலைக்  கோவிலுக்கு செல்லும் பாதையின் எதிர்புறமாக அதாவது நேர் எதிரில் அமைந்துள்ள சின்ன சாலை வழியே தாழவேடு, பூனிமாங்காடு போன்ற கிராமங்களின் வழியே இருபுறத்திலும் இயற்கை எழில் தரும் விவசாய நிலங்களின் வழியே போடப்பட்டு உள்ள நல்ல பாதையில் சென்று இந்த ஆலயத்தை அடையலாம். இருபுறமும் பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள விளை நிலங்களின் வழியே செல்லும்போது நமது மனம் அமைதி அடைகிறது.

ஆலயம் செல்லும் வழி
ஆலய வளாகத்தின் நுழை வாயில் அருகே உள்ள மைதானத்தில் அமர்ந்து கொண்டு தியானிக்கும் காட்சியில் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் திருத்தணிக்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கும் வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.