கான்வா  விரதம் 
சாந்திப்பிரியா 

தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில் கங்கை நீரை சுமந்து கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிவ பக்தர்களின் பழக்கம். இதை கான்வா விரதம் என்பார்கள். அந்த பத்து நாட்களிலும்  அதை செய்பவர்கள்  கடுமையான விரதம் இருந்து கான்வா  எனும் காவடியை சுமந்து செல்வார்கள். ஷ்ராவன் என்பது இந்து  மாதங்களில் வரும்   ஐந்தாவது மாதம் ஆகும்.  பிற மாதங்கள் இவை :

 • சைத்ரா
 • வைஷாக்
 • ஜைஸ்த்தா
  ஆஷாதா
 • ஸ்ராவனா
 • பாத்ரா
 • அஷ்வின்
 • கார்த்திக்
 • மார்கஷீர்ஷா
 • பௌஷ
 • மாக்

கன்வா என்றால் நீண்ட மூங்கில் கட்டையின் இரு புறத்திலும் கட்டி வைக்கப்பட்டு உள்ள குடங்களை சுமக்கும் மூங்கில் கழி ( காவடி )  ஆகும். அதை சுமப்பவர்களை கன்வாரியா என்று அழைப்பார்கள். கன்வாரியா என்றால் சிவ பக்தர்கள் என்று பொருள்படும். அந்த விரத விழா மிகப் பெரிய விழாவாக சுமார் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அந்த பத்து நாட்களில் வடநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவி உடை உடுத்தி, விரதம் இருந்து தமது தோள்களில் காவடியின் இரு பகுதிகளிலும் தொங்க விடப்பட்டு இருக்கும் குடங்களில் ஹரித்துவார், கங்கோத்தரி, கோமுக் எனும் இடங்களில் உள்ள நதிகளில் ஓடும் கங்கை நீரை நிறப்பி எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை மேற்கொள்வார்கள்.

நடைப் பயணத்தில் அவர்கள் காலணி  அணிவது இல்லை. குடங்களை தரையில் வைக்கக் கூடாது என்பது இன்னொரு விதி முறை ஆகும்.  அவர்கள் செல்ல வேண்டிய பாதையும் முன்னரே முடிவாகி அறிவிக்கப்பட்டு விடும். குடங்களை தரையில் வைக்கக்கூடாது  என்பதினால் அங்காங்கே இளைப்பாறிக் கொள்வதற்காக  யாத்ரீகர்கள் தங்கும் நிழல் குடைகளை சிவபக்தர்கள் அமைத்து இருப்பார்கள். அங்கு மரப்பலகைகளினால் ஆன மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.  அதன் மீதே காவடியை தரையில் படாமல் வைத்து இருப்பார்கள்.  அந்த காவடியை எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள்  பெரும்பாலும் ஹரித்துவாருக்கு செல்வது பழக்கம்.

கான்வா  எனும் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அவர்கள் ஊர்களில் உள்ள சிவபெருமான் ஆலயத்துக்கு கங்கை நீரை ஏந்திச் சென்று அந்த நீரினால் அந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதிப்பார்கள். தமது வேண்டுகோட்களையும்   சிவபெருமானிடம் வைப்பார்கள்.

இந்த விரத விழாவிற்கான பின்னணிக்கு புராணக் கதை உண்டு. தேவர்கள் ஸ்ராவன  மாதத்தில் அமிர்தத்தைக் கடைந்தபோது அதில் இருந்து  வெளியான விஷத்தை சிவபெருமான் உண்டு உலகைக் காத்தார். அதனால் விஷத்தின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல்  ஹரித்துவாரைத் தாண்டி சின்ன மலை மீது உள்ள நீலகண்டேஸ்வர் எனும் ஆலய தலத்தில் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் விஷத்தின் தாக்கத்தைக் குறைக்க பல்லாயிரம் ஆண்டுகள் அங்கிருந்த வனத்தின் குளிர் சீதோஷ்ண நிலையில் தன்னை மறந்து  உறங்கிக் கொண்டு இருந்தாராம். அவர் உறங்கிக் கொண்டு இருந்ததினால் உலகமே செயல் இழந்து நின்றதினால் அவரைத் தேடி அலைந்த விஷ்ணு, பிரும்மா மற்றும் பிற தேவர்கள் அந்த மலை உச்சிக்குச் சென்று பார்வதியின் உதவியுடன் அவரைக் கண்டு பிடித்து அவரை உறக்கத்தில் இருந்து எழுப்பி உலகை காத்தார்களாம்.

த்ரேதா யுகத்தில் அப்போது இருந்த ராவணன் சிவபெருமானின் அவஸ்தையை குறைப்பதற்காக கடுமையான விரதம் மேற்கொண்டு கன்வாவை ஏந்திக் கொண்டு யாத்திரை (குடங்களை சுமப்பது) செய்து  ஒரு குடத்தில் கங்கை நீரைக் கொண்டு போய்  பூர மஹதேவ் எனும் சிவன் ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து சிவபெருமானின் சரீர உபாதைக்  குறைக்க  தன்னால் முடிந்த உதவியை செய்தாராம்.  சிவபெருமானைக் குறித்த அந்த  நிகழ்ச்சியை குறிக்கும் விதத்தில்தான் ஷ்ராவன மாதத்தில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.  சிவபெருமானுக்கு கங்கை நீரினால் அபிஷேகம் செய்து  அவர் தொண்டையில் விஷத்தினால் ஏற்பட்டு இருந்த உஷ்ணத்தைக் குறைப்பதாக ஐதீகம் உள்ளது. இதை செய்வதின் மூலம் சிவபெருமானின் கருணைக் கிடைத்து பல ஜென்ம பாபங்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.  இந்த மாத தினத்தின் பத்து நாட்களும் பல லட்சக்கணக்கான மக்கள் ஹரித்துவாரில் கூடி, கங்கையில் நீராடி கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள்.