அத்தியாயம் -36 

குருதேவருடைய சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்க அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ‘அவர் கூறுவதைக் கேட்கும்போதே தன்னுடைய அறியாமையை விலக்கிக் கொண்டு வருகின்றது என்பதால் இன்னமும் எத்தனைக் கதைகளைக் கூற முடியுமோ அவற்றையும் கூறுமாறு’ சித்த முனிவரிடம் வேண்டிக் கொண்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன  முனிவரும் மேலும் சில கதைகளைக் கூறத் துவங்கினார்.

”கந்தர்வபுரத்தில் மெத்தப் படித்த பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய குணம் என்ன என்றால் யாரிடமும் எதையும் யாசகமாகப்  பெறக்கூடாது  என்பதை தம் வாழ்கையின் முக்கியக் கோட்பாடாக வைத்து இருந்தார். ஆனால் அதில் அவருடைய மனைவிக்கு கருத்து வேறுபாடு  இருந்தது. அவள் பொருளாசைக் கொண்டவள். சுகமாக வாழ நினைத்தவள். அவளுடைய குறை  என்ன என்றால்  நம்மை சுற்றி உள்ள அனைவருமே அனைத்து சுகபோகங்களையும் பெற்றுக் வாழ்ந்து வருகையில் நாமோ அன்றாடம் காய்ச்சிகளைப்  போல அல்லாடிக் கொண்டு வறுமையில் அல்லவா உழன்று கொண்டு இருக்கிறோம். நம்முடைய கொள்கையினால் நமக்கு என்ன விசேஷமான பலன் கிடைத்துள்ளது என்று அவருடன்  சண்டை போடுவாள். மனதார அவருக்கு மனைவியாக அமைந்ததற்கு அவள் வருந்தினாள். இப்படியாக அவள் மனதளவில் உத்தம மனைவியாக இல்லாமலேயே அவருடன் வாழ்ந்து   கொண்டு இருந்தாள்.

ஒருமுறை அந்த ஊரில் இருந்த செல்வந்தர் ஒரு விழாவை நடத்தினார். அதன் முடிவில் அவர் அந்த ஊரில் இருந்த அனைத்து பண்டிதர்களுக்கும் தம்பதி சமேதமாக  போஜனம்  செய்வித்து தானமும் செய்ய விருப்பம் கொண்டான்.  அந்த சடங்கில் பங்கேற்ற அந்த ஏழை பிராமண பண்டிதரும் அந்த சடங்கை  செய்து தந்ததில் தனக்கு உரிய தக்ஷிணையை  மட்டும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். ஆனால் அந்த செல்வந்தர் ஏற்பாடு செய்திருந்த போஜன வைபவத்துக்கு செல்ல மறுத்தார். அதனால் அவருடைய மனைவியுடன் அவருக்கு  கருத்து வேற்பாடு ஏற்பட்டது.  அவளோ சுவையான போஜனம் எங்கு கிடைக்கும் எனக் காத்திருந்தவள். அது மட்டும் அல்ல போஜனம் செய்ததும் ஏராளமான தானமும் கொடுக்க இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டாள். அப்படிப்பட்டவள் அவர்கள் வீட்டிற்கும் உணவு அருந்த வருமாறு வேலையாள் மூலம் செல்வந்தன் அனுப்பிய செய்தி கிடைத்ததும் தமக்கு வந்த  அழைப்பை ஏற்க மறுப்பாளா?

போஜனத்துக்கு தனது கணவனை அவருடைய மனைவி அழைக்க அவர் தன்னுடைய அத்தனை வருட கொள்கையைக் கூறி அந்த போஜன வைபவத்துக்கு அவளோடு செல்ல மறுத்தார். தகராறு முற்றியதும் அந்த பிராமணர் அவளிடம் கூறினார் ‘நீ வேண்டுமானால் போஜனத்துக்கு சென்று உணவு உண்டு விட்டு வா, ஆனால் நான் வரமாட்டேன்’ என்றதும் அவளும் விடவில்லை ‘சரி நான் மட்டும் அந்த போஜன வைபவத்துக்கு வருகிறேன்’ என அந்த செல்வந்தர் அனுப்பிய வேலையாளிடம் செய்தி அனுப்பினாள். ஆனால் அந்த செல்வந்தனோ தான் நடத்திய அந்த சடங்கில்  தம்பதி சமேதமாக மட்டுமே போஜனம் செய்வித்து தானம் கொடுப்பதாக சடங்கில் சங்கல்பம் செய்து உள்ளதினால்  அவள் தனது  கணவரையும் கண்டிப்பாக அழைத்துக் கொண்டு வர வேண்டும் என மீண்டும் செய்தியை அனுப்பினார்.

அதைக் கேட்ட அவள் மனம் வருந்தியவள்  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமியிடம் நேராகச் சென்று தன்னுடைய கணவர் தனக்கு எந்த விதத்திலும் ஆறுதலாக இல்லாமல் இருக்கிறார் என்றும், அவரால் தனக்கு எந்த விதத்திலும்  சுகத்தைத் தர முடியவில்லை என்றும், தான் இதுவரை  வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதாகவும், நல்ல உணவு உண்டே பல நாட்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது செல்வந்தர் அழைத்த போஜன வைபவத்திலும் கலந்து கொள்ள மறுப்பதாகவும், அங்கு செல்லாததினால் தங்களுக்கு  கிடைக்க  உள்ள புடவை, ரவிக்கை, வேட்டி போன்றவற்றை கூட  இழக்க நேரிட்டுள்ளது என்பதினால் வாழ்க்கையே தனக்கு வெறுத்து விட்டது என்று கூறி அழுதாள்.

அதைக் கேட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவளது கணவரை தம்மிடம் அழைத்து வருமாறு கூறினார். அவருடைய பரம பக்தரே அவளுடைய கணவர். ஆகவே ஸ்வாமிகள் அழைத்ததினால் அவரிடம் வந்ததும் ஸ்வாமிகள் அவரை அவருடைய மனைவியுடன் அந்த வைபவத்துக்குச் சென்று அதில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விட்டார். ஸ்வாமிகளின் சொல்லை  தட்ட முடியாமல் அந்த பிராமணரும் மனைவியை அழைத்துக் கொண்டு  போஜன வைபவத்துக்கு சென்றார்.  வந்தவர்களை அன்புடன் வரவேற்ற செல்வந்தர் அவர்களை  உணவருந்த அமர வைத்தார். பிராமணரோ தான் அன்று விரதம் என்றும் தன்னுடைய மனைவி மட்டும் உணவை உண்பாள் என்று கூறி விட்டு அவள் பக்கத்து இலையில் சம்பிரதாயமாக அமர்ந்து கொண்டு ஒரு குவளை நீர் மட்டும்  குடிப்பதாகக் கூறி விட்டார்.

இலையில் அமரும் முன் அவர்கள் தம் கைகளை அலம்பிக் கொண்டு வர மண்டபத்தின் மூலையில் சென்றபோது சற்று தள்ளி இருந்த இடத்தில் முதல் பந்தியில் உண்ட பிராமணர்களின் உண்ட இலைகளைக் கொட்டிக் கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அந்த இலைகளில் மீதம் இருந்த உணவை பன்றிகளும், நாய்களும் உண்பதைக் கண்டவள் சாப்பிடாமலேயே தனது கணவரை அழைத்துக் கொண்டு பரிசையும் பெற்றுக் கொள்ளாமலேயே வீட்டுக்கு வந்து விட்டாள். அந்த காலங்களில் பிராமண போஜனம் ஆனபின் அவர்கள் உண்ட இலைகளை எடுத்துப் போய்  ஒரு புதை குழியில் போட்டு மூடி விடுவார்கள். அவற்றை பன்றியோ அல்லது நாயோ தின்பது பிராமணர்களை அவமதிப்பதற்கு சமம் என்று கருதினார்கள். ஆனால் அந்த செல்வந்தன் வீட்டிலோ அவருக்கு இருந்த செல்வத்தினால் அந்த மாதிரியான முறையைக் கடைபிடிக்காமல் பிராமணர்கள் உண்ட இலைகளில் இருந்த மீதத்தை அப்படியே கொண்டு போய் குப்பைக் குழியில் கொட்டியதால் அதை நாய்களும் பன்றிகளும் தின்றன.

வீடு வந்து சேர்ந்தவள் தான் அனாவசியமாக தன் அல்ப சுகத்திற்காக, ஷணநேர நாக்கின் ருசிக்காக கணவரின் தன்மானத்தைக்  காற்றில் பறக்க விட்டு விட்டோமே என்றும்  தன்னுடைய அல்ப ஆசையினால் எத்தனை பெரிய பாவத்தை செய்து, நல்ல மனதுடை, நல்ல கொள்கைகளை வைத்திருந்த கணவரின் மனதை காயப்படுத்தி விட்டோம் என மனம் புழுங்கினாள். அதே நேரம் அவளுடையக் கணவனும் அது நாள் வரைக் காப்பாற்றி வந்திருந்த தன்னுடைய மனசாட்சியை தேவை இல்லாமல் தனது மனைவியின் அல்ப எண்ணங்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்ததே என்று மனம் புழுகியபடி இருந்தார்.  குருநாதர் கூறிவிட்டார் என்பதினால் அவர் சொல்லைத் தட்ட முடியாமல் மனைவியுடன் செல்ல வேண்டி இருந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டு இருந்தார். ஆனால் நடந்தது என்ன?  உண்மையில் ஸ்வாமிகள் அந்த நல்ல பிராமணனின் கொள்கையைக்  காப்பாற்ற வேண்டும் என்றே அவரை அவளுடன் செல்லுமாறு வேண்டும் என்றே அனுப்பி அங்கு அவளை  அவமானம் அடைய வைத்ததின் மூலம் நாக்கின் ருசி மற்றும், பொருளாசைகளை அவள் மனதில் இருந்து விலக்கி, கணவரே கண்கண்ட தெய்வம் என்பதை உணர வைத்தார்.

அதன் பின் சாவித்திரி நேராக ஸ்வாமிகளிடம் சென்று நடந்ததைக் கூறி அவர் கால்களில் விழுந்து தன்  தவறுக்கு மன்னிப்பைக்  கேட்டாள். அப்போது ஸ்வாமிகள் கூறினார் ‘மகளே, எந்த ஒருவரும் செய்யும் விழாக்களிலும், சடங்குகளிலும் விருந்து உண்ண அழைக்கப்படும் பிராமணன் அவரவர் கொள்கைக்கேற்ப அதில் தம்பதியினராக அல்லது தனியாகவோ பங்கேற்பது பாபம் அல்ல. அது அவரவர்களுடைய ஒரு தார்மீகக் உரிமை.  அதை மாற்ற முயல்வது பாபச் செயல் ஆகும். சில  முக்கியமான புனித சடங்குகளில் மட்டும் அழைப்பை உதாசீனப்படுத்தாமல் ஏற்க வேண்டுமே தவிர அந்தக் கட்டாய நிலையே அனைத்து சடங்குகளுக்கும் பொருந்தாது’ என்று கூறியதும் அவள் அவரிடம் கேட்டாள்  ‘ஸ்வாமிகளே தயவு செய்து எங்களுக்கு அறிவுரைக் கூறுங்கள். அழைப்புக்களை ஏற்க வேண்டிய இடங்கள் எவை? அழைப்புக்களை ஏற்கக் கூடாத இடங்கள் எவை?  சாதாரணமாக வேதம் ஓதும் பண்டிதர்களும், பிராமணத் தம்பதியினரும் அனுஷ்டிக்க வேண்டியவை மற்றும் தார்மீக வாழ்க்கை என்ன என்பதை எமக்கு எடுத்துரைத்து நல்வழி காட்ட வேண்டும்’ என்று பணிவுடன் கேட்க குருதேவர் கூறலானார்.

‘பொதுவாக ஒருவருடைய குருமார்கள் உள்ள இடங்களில் இருந்து வரும் அழைப்புக்கள், சகோதர சகோதரிகளின்  வீட்டு வைபவங்கள், தாய் மாமன் வீடுகளில் வைபவம், பிராமணர்கள் வீடுகளின் சடங்குகள் மற்றும் அங்கு நடைபெறும் விழாக்கள், ஆலயங்களில் நடைபெறும் விழாக்கள், தெய்வ காரியங்கள் நடைபெறும் இடங்கள் போன்றவற்றில் இருந்து வரும்  சமபந்தி போஜனம் போன்றவற்றை ஒதுக்கலாகாது.

ஆனால் அதே சமயம் அழைப்பவர்கள் இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் வாழ்பவர்கள், பிறரை நம்பாதவர்கள், பிறரை வஞ்சித்து பிழைப்பவர்கள்,  மிருகங்களை வெட்டி விற்பவர்கள்,  திருடர்கள், அடகுக் கடை வைத்து அதில் ஆதாயம் காண்பவர்கள், பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவர்கள், மோசடிக்காரர்கள், குருவை உதாசீனப்படுத்துபவர்கள், சாஸ்திரங்களை அனுஷ்டிக்காதவர்கள், குல தெய்வங்களை  வழிபடாதவர்கள், வேசிகளின் வீடுகள், வேதங்களை விற்று வாழ்கையை ஓட்டுபவர்கள்  போன்றவர்களின் அழைப்பை  நிராகரிப்பது உத்தமம்.

சாதாரணமாக விழா அல்லாத, சடங்குகள் அல்லாத பொதுஜன விருந்து நடைபெறும் இடங்களில் விருந்து உண்பவர்களின் ஆயுட்காலம் குறைந்து போய் விரைவில் முதுமை அடைவார்கள் என்பது திண்ணம். மேலும் மற்றவர்கள் அமர்ந்து உண்ட இடத்தை பசுவின் சாணம் அல்லது மஞ்சள் பொடியைத் தூவி  சுத்தம் செய்யாமல் வெறும் ஜலத்தைக்  கொண்டு துடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டு உணவை அருந்துபவனுக்கு அவனுக்கு முன் உண்டவனின்  வீட்டில் உள்ள பாபத்தில் ஒரு பங்கு வந்து சேரும். முக்கியமாக பௌர்ணமி தினங்களில் இந்த நிலையில் உண்பது முன் பிறவியில் செய்திருந்த அனைத்து  நற்பலன்களையும் அழிக்கும் என்பது திண்ணம்.

தன்னுடைய திருமணமான மகள் பிரசவிக்கும் வரை அவள் புகுந்த வீட்டில் சென்று உணவு அருந்தக் கூடாது. ஒரு பிராமணன் விட்டில் பிராமணன் அல்லாதோர் உணவு அருந்தக் கூடாது. கிரண காலங்களிலும், குழந்தைப் பிறந்த அடுத்த பத்து நாட்களிலும் அந்த வீட்டில் தானம் பெறலாகாது. அது தீட்டு உள்ள காலமாக கருதப்படும்.  அப்படிப்பட்ட வீடுகளில் தேவதைகள் கால் வைக்க மாட்டார்கள்’.  இவற்றைக் கூறிய பின் ஸ்வாமிகள் அமைதியாக இருக்க  அந்தப் பெண்மணியின் கணவரான பிராமணர் கேட்டார் ‘குருதேவரே, உங்கள் அருளினால் இன்று என் குடும்பத்துக்கு விடிமோட்ஷம்  கிடைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். ஒரு நல்ல பிராமணன் தினமும் அனுசரிக்க வேண்டிய கடமைகள் என்னென்ன?’

ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அதற்கான போதனைகளை செய்யத் துவங்கினார் ‘உனக்கு இதைப் பற்றி நான் கூறுவதை விட பராசர முனிவர் தம் சீடர்களான முனிவர்களுக்கு கூறியவற்றையே உனக்கும் கூறுகிறேன் கேள். ஒவ்வொருவரும் அதிகாலை பிரும்ம முகூர்தத்துக்கு  முன்னர் அதாவது சூரியன் உதிக்கும் முன்னதாக எழுந்து விட வேண்டும். முதலில் இயற்கை உபாதையை கழித்துக் கொண்டு விட வேண்டும்.

அதன் பின் பல் விளக்க வேண்டும். பல் விளக்க சந்திரமேதி, மரக்குச்சி, ஆல மரக்குச்சி, வேலம், மரக்குச்சி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பன்னிரண்டு முறை தண்ணீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். அதன் பின் தென் கிழக்குப்  பக்கமாக அந்தக் குச்சிகளை வீசி  எறிந்து  விட வேண்டும்.
 காலை  மற்றும் மாலையில் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டும், இரவில் தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டும் கைகால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும். கைகால்களை அலம்புவதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் முதலில் தனது காதுகளை தொட்டுக் கொண்டு ஆசமனம் செய்யலாம்.
பிராமணனின் காதுகளில் நீர், நெருப்பு, சூரியன், சந்திரன், காற்று மற்றும் வேதங்களின் அதிபதி  தேவதைகள் வசிக்கிறார்கள் என்பதினால் காதை தொட்டப்  பின் ஆசமனம் செய்வது கைகால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்வதற்கு சமமாகும்.  அச்சுதா, கேசவா, நாராயணா, மாதவா என்று கூறியபடி கையில் சில சொட்டு தண்ணீர் விட்டுக் கொண்டு அதை குடிக்க வேண்டும். கோவிந்தா என முடிவாக கூறும்போது தட்டில் சிறிது தண்ணீர் விட வேண்டும்.
ஒவ்வொருவது கைகளிலும் தீர்த்த தேவதைகள் குடி கொண்டு  உள்ளார்கள். கட்டைவிரல் அடிப்பகுதி மற்றும் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதியின் இடையே அடிப்பகுதியில் பித்தரு தீர்த்தம் உள்ளது. கட்டை விரலின் அடிப்பகுதியில் பிரும்ம தீர்த்தம் இருக்க, சுண்டி விரலின் அடியில் ரிஷி தீர்த்தம் இருக்க, அக்னி தீர்த்தம் உள்ளங்கையில் உள்ளன. ஆகவே  தர்ப்பணம் செய்யும்போது அந்தந்த விரல்களின் மூலமே நீர் ஊற்ற  வேண்டும்.

காலையில் எழுந்து குளிக்க வேண்டும். காலையில் குளிப்பதின் மூலம் வாழ்வு வளம் பெறும், அறிவு விருத்தியாகும், உடல் பலம் பெறும், துயரங்கள் விலகும், கெட்ட கனவுகள் வராது. பிரும்மச்சாரிகள்  கண்டிப்பாக ஒரு வேளையாவது குளிக்க வேண்டும்.   கிரஹஸ்தர்கள் காலை மற்றும் மதியம் நிச்சயம் குளிக்க வேண்டும். தபஸ்வி மற்றும் சன்யாசிகள் மூன்று  வேளைக்  குளிக்க  வேண்டும். நல்ல  உடல் நிலையில் உள்ளவர்கள் சுத்தமான குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதுவே சிறந்தது. அதுபோலவேதான் கிரஹஸ்தர்களும் உடல் நலம் அற்றவர்களும்  வென்னீரில் குளிக்கலாம். ஆனால் அவர்களும் கிரகண தினங்கள் மற்றும் சிரார்த தினங்களில் வென்னீரில் குளிக்கலாகாது.

குளிக்க சிறந்த இடம் ஆறு அல்லது நதிகளாகும். அவற்றில் குளிக்கும்போது நதியின் ஓட்டத்திற்கு நேராக நின்றபடி குளிக்க வேண்டும். மற்ற இடங்களில் குளிக்கும் பொழுது கிழக்கு நோக்கி நின்றபடி குளிக்க வேண்டும். நதிகளும், ஆறும் இல்லாத ஊர்களில் தண்ணீர் கிடைக்கும் இடத்துக்கு தகுந்தார் போல குளிக்கலாம். குளித்தப் பின் நெற்றியிலும் உடம்பிலும் திருநீர் எனும் வீபுதியை பட்டையாக பூசிக் கொள்ள வேண்டும். வைஷ்ணவர்களாக இருந்தால் அவர்கள் நெற்றில் நாமம் சாத்திக் கொள்ள வேண்டும்.  தினமும் குளித்தப் பின் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

சந்தியாவந்தனத்தை  செய்யும் போது அதை  ஏற்று அருள் புரிய காலையில் வரும் காயத்ரி தேவி இளம் மங்கை உருவில் இருப்பாள். மதிய சந்தியின்போது வெளிப்படும் காயத்ரி தேவி வெண்மை துணிகளை உடுத்திக் கொண்டு வெளிர் நிறத்தில் இளம் மங்கையாக காணப்படுவாள். மாலை சந்தியாவனத்தை ஏற்றுக் கொள்ள வரும் காயத்ரி தேவியானவள் கருப்பு நிறத்தில் வயதான மங்கையின் தோற்றத்தில் இருப்பாள்.

காயத்ரி மந்திரத்தை  மனதில் ஓதியபடி சந்தி செய்வது சிறந்தது.  ஒரு கிரஹஸ்தர் குறைந்தது 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். யதி அல்லது சன்யாசி தினமும் 1000 முறையாவது காயத்ரி மந்திரம் ஓதி ஜெபம் செய்ய வேண்டும். வாயினால் ஓதிக் கொண்டு இருப்பது மத்திம பலனைத் தரும். சத்தமாக ஓதியபடி காயத்ரி ஜெபம் செய்வது தீய பலனைத் தரும். அது போலவே எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியமே. கருப்பு மான் தோலின் மீது அமர்ந்து சந்தி செய்வது அறிவை விருத்தி செய்யும். சிங்கத்தின் தோல் மீது அமர்ந்து கொண்டு சந்தி செய்வது மோட்சத்தை அடைய வழி செய்யும்.  உடைந்து போன மரக் கட்டை மீது அமர்ந்து கொண்டு சந்தி செய்வது துயரத்தைத் தரும். கல் மீது அமர்ந்து கொண்டு சந்தி  செய்வது  உடல் பிணியைக் கொடுக்கும்.

மன்தேஷ் என்ற பிரிவை சேர்ந்த ராக்ஷசர்கள் சூரியனின்   ஒளியைத் தடுத்துக் கொண்டு இருப்பதினால் அவர்களை விரட்டி அடிக்க சந்தியாவந்தனத்தில் அர்கியம் தருகிறார்கள். அர்கியம் தரும்போது அந்த அர்கியத்தின் சக்தியானது வஜ்ராயுதத்தைப் போல மேலே எழுந்து சென்று அந்த ராக்ஷசர்களை அடித்து விரட்டும்.

சடங்குகளை செய்பவர்கள், முக்கியமாக  பித்ரு காரியங்களை செய்பவர்கள் தங்களுடைய விரலில் தர்பைப் புல்லினால் ஆன மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் தர்பைப் புல்லின் அடிப்புறத்தில் ருத்திரன் வசிப்பதாகவும், மத்தியப் பகுதியில் திருமாலும், மேல் பகுதியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் நம்பப்படுகின்றது. தர்பை இல்லை என்றால் அதற்கு மாறாக வெள்ளி அல்லது தங்க மோதிரங்களை அணிந்து கொண்டு சடங்குகளை செய்யலாம்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒருவேளை வீட்டில் மண் தாழ்வாரம் இருந்தால் அங்கு பசு சாணத் தண்ணீரை தெளித்து துடைத்து வைக்க வேண்டும்.  அதன் பின் வாயிலில் அரிசி மாவைக் கொண்டு கோலம் போட வேண்டும். எந்த விதமான சடங்குகளை செய்தாலும்,  எந்த விதமான மந்திரங்களையும்  ஜெபிக்கும் போதும்  மந்திரத்தின் எண்ணிக்கையை எண்ணும் போது  கையில் ருத்திராட்சம், முத்து, பவழம், தங்க மணிகள் போன்றவை கோர்த்த மாலைகளைக் கையில் கொண்டு எண்ணியவாறு ஜெபம் செய்வது சிறந்தது. மந்திரம் ஓதுவதின்  மூலம் பாபம் விலகி அறிவு வளரும். பூஜைகளை செய்யும்போது தண்ணீர் உள்ள குடுவையை அமர்ந்து இருப்போர் தமது இடப்புறத்திலும், பூஜை சாமான்களை வலப்புறத்திலும் வைத்துக் கொண்டு பூஜையை செய்ய வேண்டும்.

வீட்டில் பூச்செடி இருந்தால் அந்த செடியில் இருந்து பறித்து வந்த பூக்களையே பூஜைக்கு உபயோகிக்கலாம். அதுவே சிறந்தது. வெளியில் இருந்து கொண்டு வரும் பூ அன்றாடம் பறித்தப் பூவாக இருக்க  வேண்டும். வாடிய பூவையும், இரண்டு நாட்களுக்கு முற்பட்ட பூக்களும் பூஜைக்கு சிறந்ததல்ல. அவற்றை தினமும் பூஜிக்காத  மற்ற  படங்களுக்கு  போட பயன்படுத்தலாமே தவிர  விசேஷ பூஜைகளுக்கு அவை சிறந்தது அல்ல.  பூக்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்கள் சிறந்தவை. தாமரை, மல்லிகை, நாகலிங்கப் பூ போன்றவை தெய்வங்களுக்கு போட்டால் நல்ல பலனைத் தரும். காட்டுப் பூக்கள் பூஜைகளுக்கு ஏற்றவை அல்ல,  அவை  காகிதங்களினால்  ஆன  செயற்கை பூக்களாகவே கருதப்படும். பூஜைகளை செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு மனதார, மானசீகமாக செய்யும் பூஜையும் தெய்வங்களால் ஏற்கப்படும். அது போல குருவை தியானித்து வணங்குபவர்கள் மூதையார்களின்  ஆசிகளைப் பெறுவார்கள்.

உணவை உண்ணும் முன் கைகால்களை அலம்பிக் கொண்டு உணவை அருந்த உட்கார வேண்டும். விருந்தினர் வந்தால் அவர்கள் அருகில் உட்காரலாகாது. சற்று  தள்ளியே அமர வேண்டும். உணவை உண்ணும்போது பேசக் கூடாது,  அமைதியாக உண்ண வேண்டும். உண்ணும்போது விளக்கு அணைந்து விட்டால் விளக்கு வந்ததும்தான் மீதத்தை உண்ண வேண்டும். இல்லை என்றால் ஒரு திரி விளக்கை  எரிய வைத்து அந்த ஒளியில் உண்ண  வேண்டும். இருட்டில் உணவை அருந்தும்போது ராக்ஷசர்களின் ஆத்மாக்கள் அந்த அன்னத்தில் அமர்ந்து கொண்டு உண்பவர் உடலில் சென்று  விடும். வயிற்ருக்குள் சென்றதும் பசியால் துடிக்க உண்டவனும் பசி பசி என அலையத் துவங்குவான். ராக்ஷசர்கள் இருட்டில் மட்டுமே அன்னத்தின் மீது வந்து அமர வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்டு  உள்ள நியதி. ஆகவே அவர்கள் விளக்கு வெளிச்சம் உள்ள இடங்களில் அன்னத்தின் மீது அவர்களது ஆத்மாக்கள் வந்து அமராது. அப்படியாக அது வெளிச்சம் உள்ளபோது அன்னத்தில் வந்து அமர்ந்தாலும் ஒருவருடைய வயிற்றிலே சென்றதும் அந்த ஆத்மாவும் உணவைப் போல ஜீரணிக்கப்பட்டு மரணம் அடைந்து  மீண்டும் ராக்ஷசனாகவே பிறப்பை எடுப்பார்கள். அதனால்தான் இருட்டிலே உண்ணும் உணவு  தரித்திரத்தை தரத் துவங்கும், அமைதியைக் கெடுக்கும். சாப்பாடு பரிமாறும் பெண்கள் கறுப்பு நிற உடைகளை  அணிந்து கொண்டு பரிமாறக் கூடாது.

பெரியவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால் அவர்களை எழுந்து நின்று வரவேற்க வேண்டும். வந்தவர்கள் திரும்பப் போகும் பொழுது அவர்களை வாயில்வரை சென்று வழி அனுப்ப வேண்டும். குருவை தரையில் விழுந்து நமஸ்கரித்தபடி வரவேற்க வேண்டும். குருவை கை அசைத்தோ, கை நீட்டியோ அழைப்பது ஆயுளையும் அமைதியையும் குறைக்கும் (இப்படியாக அத்தியாயம்- 36 முடிவடைந்தது).

…………தொடரும்