அத்தியாயம் – 34

சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ‘விலை மாதுவின் வீட்டில் அந்த தீ விபத்தில் இறந்து போன நாயும்  குரங்கும்தான் இந்த இரண்டு சிறுவர்களும்’ என்று பராசர மகரிஷி மன்னனிடம் கூறினார். அதனால் மன மகிழ்ச்சி அடைந்த மன்னனும் பராசர மகரிஷியிடம் தன்னுடைய மகனின்  வருங்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினான்.

அதைக் கேட்ட மகரிஷி மன்னனிடம் கூறினார் ‘மன்னா, உன்னுடைய மகன் இரண்டாவது வயதில் மடிந்து விடுவான். இன்றில் இருந்து எட்டாவது நாளன்று அவனுக்கு மரணம் சம்பவிக்கும்’. அதைக் கேட்ட மன்னனும் அவன் மனைவியும்  அதிர்ந்து போயினர். அவர் கால்களில் விழுந்து எப்படியாவது தங்களுடைய மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனக் கெஞ்சினார்கள்.

அதைக் கேட்ட அந்த முனிவர் கூறினார் ‘ மன்னா, உன்னுடைய மகன் இரண்டு ஆண்டு காலம் உயிருடன் இருப்பான். இன்றில் இருந்து  எட்டாவது நாள் அவன் மரணம் அடைய இருக்கிறான் என்று கூறினேன் அல்லவா?  அதை தடுக்க வேண்டும் என்றால்  நீங்கள் அந்த பரமேஸ்வரரான சிவபெருமானை துதித்து அவர் அருளைப் பெற்றால் மட்டுமே அது நடக்கும்.  காலனை தடுக்க சிவபெருமானால் மட்டுமே முடியும்.  அந்த பரப்பிரும்மனே  பிரும்மாவைப் படைத்து நான்கு வேதங்களையும் அவருக்கு கற்றுக்  கொடுத்தார். இந்த செய்தி யஜுர் வேதத்தின் ஐந்தாவது பாகத்தில் உள்ள ருத்திர அத்தியாயனாவில் கூறப்பட்டு உள்ளது.  பரமேஸ்வரருடைய பெருமைப் பற்றி அந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. அதைக் கற்றுக் கொண்ட பிரும்மா அவற்றை சில மஹரிஷிகளுக்கு  கற்றுத் தந்தார்.  இந்த உலகில் ருத்திர அத்தியாயனாவை விட சக்தி வாய்ந்த மந்திரம் வேறு எதுவும் கிடையாது. ருத்திர அபிஷேகத்தின் புனிதமான நீர் அமிர்தத்திற்கு சமம்.

மனதில் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மாத, மத்யார்யா போன்ற ஆறு தீய குணங்களை அழித்து தர்ம வழியில் செல்வது கடினம். ஆனால் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள ருத்ர மந்திரங்களை ஜெபித்துக் கொண்டே இருந்தால் வெகு எளிதில் அந்த ஆறு தீமைகளையும் ஒழித்து விட முடியும். அந்த இடத்தில் யமதூதர்கள்  கூட புக  முடியாது.
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த மந்திரத்தை முறையாக பக்தி சிரத்தையுடனும், அதில் கூறப்பட்டுள்ளபடி ஓதிக் கொண்டு இருந்தால் மட்டுமே அதன் முழுப் பயனும் கிடைக்கும். அதற்கு மாறாக அந்த மந்திரத்தை பக்தி சிரத்தை இன்றி தவறான உச்சரிப்பில் ஓதி வந்தால் அவர்கள் நரகத்தை அடைவார்கள். ஆகவே உங்கள் மகன் மரணத்தில் இருந்து தப்ப வேண்டும் என்றால் நல்ல பாண்டித்தியம் பெற்ற நூறு பிராமணர்களை அழைத்து வந்து அந்த மந்திரத்தை ஜெபிக்கச் சொன்னால் உன் மகன் மரணத்தில் இருந்து தப்ப முடியும் ‘.

பராசர மகரிஷி  கூறியதைக் கேட்ட மன்னனும் கற்றறிந்த பண்டிதர்களை அழைத்து வந்து அந்த பாகத்தை முறைப்படி ஏழு நாட்களும் இரவும் பகலுமாக ஜெபிக்க வைத்தார். அந்த அபிஷேக நீரைக் கொண்டே அனுதினமும் தன் மகனை குளிக்க வைத்தார். சிறுவனின் ஆயுள் காலமும் முடிவுக்கு வர இருந்த நாளன்றுதான் பூஜையும் நிறைவடைய இருந்தது.  பராசர முனிவர் தாமே அங்கிருந்து கொண்டு அந்த மந்திரத்தை ஓதி வந்த பண்டிதர்களுக்கு  வழி காட்டிக் கொண்டு இருந்தார்.  பூஜை முடிவடையும் நிலையில் அந்த சிறுவன் மயக்கம் அடைந்தான். அவன் உடலில் எந்த விதமான சலனமும் இல்லை.

அப்போது யமதூதர்கள் அங்கு வந்து சுற்றத் துவங்கினார்கள். இன்னும் சில நிமிடங்களே இந்த சிறுவனுக்கு உயிர் இருக்கும். அது பிரிந்ததும் அவன் ஆத்மாவை தூக்கிக் கொண்டு யமலோகம் செல்லத் தயார் ஆனார்கள். அந்த நேரத்தில் ருத்திராபிஷேக  அபிஷேக நீரை அந்த சிறுவன் மீது பிராமணர்கள் தெளித்து யாக அரிசியையும் அவன் மீது தூவியதும், அவன் உறக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்தான்.  அதே நேரத்தில் யம தூதர்கள் வந்து சேர்ந்த உடனேயே அங்கு சிவகணங்களும் வந்து விட்டார்கள். இருகணங்களுக்கும் இடையே அந்த சிறுவன் இறந்தப் பின் அவனை எங்கு கொண்டு செல்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை அந்த வழியே சென்று கொண்டு இருந்த நாரத முனிவரும் நோக்கினார்.

இதற்கு  இடையே மரணம் அடைவான் என எதிர்பார்த்துக் காத்திருந்த சிறுவன் உயிர் பெற்று எழுந்ததும் மன்னன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். சிறுவன் இறக்கவில்லை மீண்டும் பிழைத்து எழுந்து விட்டான் என்பதினால்  அவனை தம்முடன் அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்த யம தூதர்களும், சிவகணங்களும் திரும்பச் சென்று விட்டார்கள்.  அதே நேரத்தில் நாரதர் யமலோகத்துக்கு சென்று நடந்ததை யமதர்மராஜருக்கும் தெரிவிக்க அவர் உடனேயே சித்திரகுப்தரை அழைத்து அந்த சிறுவன் உயிர் பிழைத்தது எப்படி? அந்த சிறுவனின் கணக்கில் என்ன தவறு  உள்ளது என்பதைப் பார்த்துக் கூறுமாறு ஆணையிட்டார். சித்ரகுப்தரும் அந்த சிறுவனின் உயிரை ஆராய்ந்தப் பின் அவனுடைய ஜீவகாலம் 12 என இருக்க வேண்டியதை ஒன்று எனத் தவறாக எழுதி விட்டதினால் அந்த சிறுவன் மரணம் அடையவில்லை என்றும் தவறாக எழுதி வைத்துள்ளதற்காக மன்னிப்புக் கேட்டார். யமராஜரும் தன்னுடைய மந்திரிகள் செய்த தவறை உணர்ந்து வருந்தினார்.

பூலோகத்திலோ இறக்க இருந்த சிறுவனை பிழைக்க வைத்த பராசர முனிவருக்கு பெரும் மரியாதை  செய்து, பிற பண்டிதர்களுக்கும் நிறைய வெகுமதி அளித்து மன்னன் கௌரவித்தான். பல்லாயிரம் பிராமணர்களுக்கு போஜனமும் தந்தான். பூஜையின் முடிவில் அனைவரும் பரமேஸ்வரரை வணங்கினர். அந்தத் தம்பதியினரும் குருதேவரை வணங்கி தங்களுக்கு மந்திரோபதேசம் செய்து வைக்கும்படி வேண்டினர். அப்போது நடந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் – யமலோகம் போக இருந்த சிறுவன் இறக்காமல் உயிர் பிழைத்தது- காரணம் ருத்திராக்ஷத்தின் மகிமையே’ என்பதை பராசர முனிவர் அனைவருக்கும் கூறினார். சாவித்திரி தம்பதியினரும் அவரை வணங்கி எழுந்தார்கள் ”(இதனுடன் அத்தியாயம்-34 முடிவடைந்தது) .

………தொடரும்