அத்தியாயம் -25

இப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை  முகலாய மன்னன் ஒருவன்  ஆண்டு வந்தான். அவன்  பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து  அவன் எதிரில் தர்க்கம் செய்யுமாறு கூறுவான். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு  சன்மானமும் கொடுத்து  அனுப்புவான். ஆனால் அவனுக்கு ஒரு விதமான தீய  குணம் உண்டு. அவன் ஏன் பிராமணர்களை அழைத்து தர்க்கம் செய்ய வைத்தான் என்றால் அவர்கள் தர்க்கம் செய்யும்போது அவ்வப்போது இடையே அவர்களை தடுத்து ஹிந்து தர்மங்களைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்து அவர்களுடைய வாதங்களுக்கு அருவறுப்பான அர்த்தங்களை தன் மனதிற்கேற்ப கூறி அவதூறாகவும் அவமானபடுத்தும் விதத்திலும்  பேசுவான். அவன் மன்னனாயிற்றே  என்பதினால் பயம் கொண்டு அங்கு தர்க்கம் செய்யும்  பிராமணர்கள் அவன் கூறுவதற்கு மாறாக எதையும் கூற மாட்டார்கள். மறுத்து பேசி அவனை கோபப்படுத்தி விட்டால் அவர்களை சிறையில்  அடைத்துக் கொடுமைப்படுத்துவான். அதில் ஒரு அசாத்திய சந்தோஷம் அவனுக்கு கிடைத்தது. உள்ளூர அவன் பிராமணர்களை அளவுக்கு மீறி   வெறுத்தான்.

ஒரு நாள் அந்த அரசனிடம் இரண்டு பண்டிதர்கள் வந்தனர். அவர்கள் தாங்கள் நான்கு வேதங்களிலும், ஆறு சாஸ்திரங்களிலும், பதினெட்டு புராணங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும், தாங்கள் கஷ்டப்பட்டு படித்த பாடங்களை பல ராஜ்யங்களுக்கும் சென்று  அங்குள்ள பண்டிதர்களுடன் தர்க்கம் புரிந்து அவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டு வந்துள்ளதாகக் கூறினார்கள். ஆகவே அவரது நாட்டில் வேதங்களிலும், சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் தர்க்கம் செய்து தோற்க அடிக்கும் வல்லமைப் படைத்த பண்டிதர்கள் எவராவது   உண்டா என்று கேட்டார்கள்.

அவர்களக் கூறியதைக் கேட்ட அரசனும் அவர்களை வரவேற்று அவனுடைய அரச சபையில் இருக்கும் எவருக்காவது திறமை இருந்தால் அவர்களுடன் விவாதப் போட்டியில் கலந்து கொள்ளலாம் எனவும் அதில் வெற்றி பெறுபவர்களுக்குப் பொன்னும் பொருளும் தருவதாகக் கூறினான். ஆனால் நன்கு கற்றறிந்த பண்டிதர்கள்  தீய புத்தியுடையவர்களுக்கு  வேத சாஸ்திர விளக்கம் தருவது வீணான காரியம், அவர்களை கேலி செய்து அனுப்பவே மன்னனும் அதை ஊக்குவிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு தாம் அங்கு வந்து உள்ளவர்களைப் போல அதி ஞானம்  பெற்றவர்கள் இல்லை  என்று கூறி போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். வேறு சிலரோ பொருளாசையினால் அங்கு வந்து அவர்களிடம் வாதிட்டு தோற்றுப் போய் அரசனால் அவமானப்படுத்தப்பட்டனர்.

அந்த மன்னனும் அங்கு வந்துள்ள அந்த இரண்டு பிராம்மணர்களை வைத்துக் கொண்டே அவர்கள் மூலம் மற்றவர்களை அவமானப்படுத்தலாம் என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்த இரண்டு பண்டிதர்களையும்  தன்னுடைய அரச சபையில் வித்வான்களாக நியமித்து பெரும் செல்வமும் கொடுத்தான். அதனால் அந்த இரண்டு பண்டிதர்களும் தலைகனம் பிடித்து அலைந்தார்கள். அவர்களும் அங்காங்கே சென்று பல பண்டிதர்களையும் விவாதங்களுக்கு அழைத்து  அவர்களை போட்டியில் தோற்கடித்தபடி வலம் வந்தார்கள். தீய எண்ணம் கொண்ட மன்னனும் வேண்டும் என்றே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தப் பண்டிதர்கள் போன இடங்களுக்கு எல்லாம் தன்னுடைய ஆட்களையும்  துணைக்கு அனுப்பி  வைத்தான்.

இப்படியாக அவர்களின் விளையாட்டு தொடர்ந்து கொண்டு இருந்தபோது குமாசியில் இருந்த திருவிக்ரமபாரதி குறித்துக் அவர்கள்  கேள்விப்பட்டார்கள். ஆகவே அவரிடம் சென்ற அந்த இரண்டு பண்டிதர்களும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு  வேதாங்க தர்கங்களில் வல்லுனர்களான தம்முடன் வேத, சாஸ்திர, புராணங்களில் விவாதம் புரிய அவரை  அழைத்தார்கள். அப்படி தர்கம் செய்ய விருப்பம் இல்லை என்றால் விவாதத்தில் தான் தோற்று விட்டதாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் அதை அரசனிடம் தாங்கள் சமர்பிக்க வேண்டும் எனவும் கூறினர்.

திருவிக்ரமபாரதி மனதுக்குள் எண்ணினார். வந்துள்ளவர்கள் உண்மையிலேயே சுயபுத்தி கொண்டவர்களாக தெரியவில்லை. மண்டை கனம் பிடித்து மன்னனின் வலையில் விழுந்து பண்டிதர்களை அவமானப்படுத்தவே வந்துள்ளார்கள் என்பதினால் இவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். எதற்காக எவனோ ஒரு மன்னனின் மாளிகையில் சென்று இந்த அறிவற்ற மூடர்களுடன் தர்க்கம் செய்ய வேண்டும்? நான் ஒன்றும் மன்னனின் அடிமை அல்லவே! இவர்களது தலைகனம் மற்றும் திமிரை அடக்கி ஒடுக்க ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளால் மட்டுமே முடியும் எனக் கருதியவர்  அவர்களிடம் தாம் தனது குருநாதரிடம் அவர்களை அழைத்துப் போவதாகவும், அவர் ஆணையிட்டால் மட்டுமே தன்னால் விவாதத்தில் கலந்து கொள்ள முடியும் என்றும்,  அப்படி வேண்டாம் என அவர் நினைத்தால் அவர்கள் கேட்டபடி விவாதத்தில் தோற்று விட்டதாக  எழுதிக் கொடுப்பதாக கூறி விட்டு அவர்களை ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம்  அழைத்துச் சென்றார்.

அவர்களை நோக்கிய ஸ்வாமிகள் கேட்டார் ‘பண்டிதர்களே, எதற்காக வீண் விவாதம் செய்து திருவிக்ரமபாரதியை தர்கத்துக்கு அழைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?’ என்று கேட்டதும் வந்தவர்களோ தாம் பெரிய மேதாவிகள் என்றும், வேத சாஸ்திரங்களை கரைத்துக் குடித்துள்ள தாம் பல ராஜ்யங்களுக்கும் சென்று அங்குள்ள பண்டிதர்களுடன் விவாதித்து அவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டு வந்துள்ளதாகவும், அதை பெருமையாக தாம் கருதுவதாகவும் அவரிடம் கூறினார்கள்.  அவர்கள் மேலும் கூறினார்கள் ‘திருவிக்ரமபாரதி பெரும் பண்டிதர் எனக் கேள்விப்பட்டு அவரிடம்  வாதிட வந்தால் அவர் பயந்து போய் நீங்களே வேத சாஸ்திரங்களில் பெரும் பண்டிதர் என கூறி எங்களை இங்கு அழைத்து வந்துவிட்டார். முடிந்தால் எங்களிடம் வாதித்து எங்களை  தோற்கடித்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என சவால் விட்டனர். ஸ்வாமிகள் எத்தனைக் கூறியும் அவர்கள் அவருடைய அறிவுரையை  ஏற்காமல் தர்கத்துக்கு அழைத்தார்கள் (இத்துடன் அத்தியாயம் -25 முடிவடைந்தது)

…………..தொடரும்