…………அத்தியாயம் – 6( i)

இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின் அங்கிருந்து  எடுக்க முடியாது. அதை நீ அங்கேயே ஆராதித்தாலும் உனக்கு அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் அதே சமயம் அந்த இடத்தில் அதை வணங்கி பூஜிக்கும் மற்றவர்களுக்கு  அவர்கள் விரும்பியவை கிடைக்கும். உனக்கு நான் கொடுத்த வரம் வீணாகிவிடும். அது மட்டும் அல்ல அதோடு நீ உன் பிடியில் வைத்துள்ள அனைத்து தேவர்களும், உனக்கு சேவகம் செய்யும் அனைத்து தேவலோக அதிபதிகளும் விடுதலை ஆகி விடுவார்கள். அதன் பின் அவர்களை உன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் அவர்கள் உன்னை விட சக்திசாலிகளாகி  விடுவார்கள், பத்திரம்’ என்று கூறிவிட்டு அவனிடம் தனது ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து அனுப்பின.

 நடந்த அனைத்து விஷயங்களும் நாரதருக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக  விஷ்ணு மற்றும் பிரும்மாவிடம் ஓடிச் சென்று அதைக் குறித்துக் கவலையுடன் விவாதித்தார். சிவபெருமான் என்ன காரியம் செய்து விட்டார். ஏற்கனவே ராவணனை அடக்க முடியாத அளவு அவன்  அக்கிரமங்கள் தொடர்ந்து  கொண்டு இருக்கிறது. ஆத்மலிங்கத்தை பூஜித்து அவன் சிவபெருமானின் சக்தியையும்  பெற்று விட்டால் அவன் சிவபெருமானையே அழித்து விடுவானே எனக் கவலைக் கொண்டு  சிவபெருமானிடம் ஓடிச் சென்று தமது  கவலையையும் கோபத்தையும்  வெளிப்படுத்தினார்கள். சிவபெருமானும்  தான் செய்து விட்ட தவறை உணர்ந்து விட்டார். ஆனால் அதையும் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே தாம் செய்ததாகவும், அதை நிவர்த்திக்க தனது மகன் வினாயகர் மூலம் மட்டுமே முடியும் என்றும் ஒரு சின்ன குறிப்புத் தந்தார். இப்போது என்ன செய்யலாம் என அனைவரும் யோசித்தப் பின் ஒரு  நாடகத்தை நடத்தி ராவணனின் கையில் உள்ள லிங்கத்தை பூமியிலே வைக்க வைத்து விட்டால் அவன் பெற்ற வரம் அழிந்து விடும் என்பதை உணர்ந்தார்கள் .
அடுத்தடுத்து யோசனைகளை செய்தபின், ராவணன் அவன் நாட்டுக்கு செல்லும் முன்னரே அவனை வழியிலே தடுத்து நிறுத்தி மாலைவரை  அவனது நேரத்தை வீணடிக்க வேண்டும். அதற்குள்  எப்படியாவது ராவணனை ஏமாற்றி   லிங்கத்தை பூமியிலே வைக்க வைத்து விடலாம் என திட்டம் தீட்டினார்கள். ராவணன் தன் கையில் ஆத்மலிங்கத்தை எடுத்துக் கொண்டு வேக வேகமாக சென்று கொண்டு இருக்கையில் அந்த பாதையில் நின்றபடி வழியை  மறைத்தார் நாரதர். ராவணனுடன் தேவை இல்லாமல் எதை எதையோ பேசி அவனை மேற்கொண்டு செல்ல முடியாமல் பாதையை மறைத்தவண்ணம் இருக்க கோபமுற்ற ராவணன் அவரை தள்ளிக்  கொண்டு செல்ல முடியாமல் தவித்தான். மாலை நேரமும் வேகவேகமாக வந்து கொண்டு இருந்தது.  எதை எதையோ பேசிப் பேசி ராவணனின் என்னத்தை திசை திருப்பி அவனை ஏமாற்றி அவன் வாயினாலேயே அந்த ஆத்மலிங்க மகிமையைக் கூறவைத்த நாரதர் நகைத்து விட்டு ராவணனிடம் கூறினார் ‘ராவணா, உன்னை நினைத்தால் பரிதாபமாக உள்ளது. உன்னை சிவபெருமான் நன்கு ஏமாற்றி விட்டார். அவரிடம் பத்து ஆத்மலிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் மட்டுமே அவர் குடி இருக்கிறார். இப்போதைக்கு உன்னை திருப்தி செய்து அனுப்பி விட வேண்டும் என்பதற்காக  உண்மையான ஆத்மலிங்கத்தை கொடுக்காமல் வேறு ஒன்றைக் கொடுத்து அனுப்பி உள்ளார்.  யாராவது தன்னை ஒரு கைதி போல மற்றவர்களிடம் கொடுப்பார்களா? மூன்று வருடங்கள் நீ அதை பூஜித்துக் கொண்டு இருப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிடும். நீ நன்கு ஏமாற்றப்பட்டு விட்டாய்  என்பதையும் உனக்கும் அவர் சக்தி கிடைக்காது என்பதையும்  உணர்வாய்’ என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அதற்குக் காரணம் சற்று தொலைவில் வினாயகர் ஒரு அந்தணர் உருவில் வேகமாக வந்து நாரதர் பின்னால் நின்று விட்டதை அவர் கவனித்ததுதான். ராவணன் ஒரு கணம் சஞ்சலத்தில் ஆழ்ந்தான். இதென்ன  நாரதர் என்னைக் குழப்பி விட்டாரே !! நாரதர் சென்று விட்டதும் ஏற்கனவே முடிவாகி இருந்தபடி திடீர்  அந்த இடத்தைக் கடும் குளிர் பற்றிக் கொண்டது. வருணன் ஏற்படுத்திய தாங்க முடியாத குளிரினால்  ராவணன் வயிற்றில் நீர் நிறைந்து போக இயற்கை உபாதையினால் அவஸ்தைப்பட்டு தவித்தபடி நடந்தான். அவனால் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை.  தவித்தான். மடியில் சிவலிங்கத்தை வைத்துக் கொண்டா இயற்கை உபாதைக் கழிக்க முடியும்? அப்போதுதான் அந்த வழியில் அந்தணர் உருவில் வந்து கொண்டு இருந்த வினாயகரை அவர் யார் என்று அறிந்து கொள்ளாமல் சந்தித்தான். அவரிடம் கேட்டான் ‘அந்தணரே, நீங்கள் எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள்?’ அந்தணர் கூறினார் ‘வழியை விடப்பா, நான் மாலைக்குள் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு ஆரம்பிக்க உள்ள யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும்’
அவரை தடுத்து நிறுத்திய ராவணன் கூறினான் ‘அந்தணரே தயவுசெய்து எனக்கு சின்ன உதவி செய்யுங்கள். இயற்கை உபாதையை என்னால் பொறுக்க  முடியவில்லை.  நான் அதோ இருபது அடி தள்ளித் தெரிகிறதே அந்த மறைவில் ஓடைக்கு அருகில் சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு வருகிறேன்.தயவு செய்து இந்த லிங்கத்தை அதுவரை பூமியில் வைக்காமல் கையில் வைத்து இருந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.  இதை கண்ட கண்ட இடங்களில் உள்ள தரையில் வைக்கக் கூடாது’ என்று  கூறினான். அதன் பின் அந்த லிங்கத்தின் கதையையும் சுருக்கமாக கூறினான். அவரும் ‘சரி ஆனால் ஒரு நிபந்தனை. நான் ஒரு நாழிகைப் பொறுத்து பத்து எண்ணுவேன். அதற்குள் நீங்கள் வராவிடில் இதை கீழே வைத்து விடுவேன்’ என்றார். ஒரு நாழிகை மிகப் பெரிய அளவிலான நேரம் என்பதால் அதற்குள் தாராளமாக தன்  வேலையை முடித்துக் கொண்டு கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணியவாறு ராவணன் அந்த லிங்கத்தை வினாயகரிடம் தந்து விட்டு சென்றான். அதுதான் அவன் செய்த பெரும் தவறு. ராவணன் காட்டிய ஓடையின்  தூரம் இருபது அடி கூட இருக்காது போல இருந்தது. அங்கு சென்று விட்டு இயற்கை உபாதைக் கழித்துவிட்டு அரை நாழிகையில் வந்து விட முடியும் என்பதினால்தான்   தைரியமாக ராவணன் அப்படிக் கூறினான்.
அந்த மறைவிடத்துக்கு சென்று இயற்கை உபாதைக் கழித்து விட்டு திரும்பினான். ஆனால் அந்த இடத்தில் இருந்து சிவலிங்கத்தை  வினாயகரிடம் அவன் கொடுத்திருந்த இடத்துக்கு செல்ல இரண்டு நாழிகை ஆகும். அவ்வளவு தூரத்தில் இருந்தது அந்த இடம். ராவணன் திடுக்கிட்டான். இதென்ன நான் இங்கு வர கால் நாழிகக்கூட ஆகவில்லை.  ஆனால் இப்போது  அங்கு செல்ல இரண்டு நாழிகைக்கு மேலாகிவிடும் போலிருக்கிறதே என குழம்பினான். அதெப்படி அருகில் தெரிந்த இடம் இத்தனை தூரமாகிவிட்டது என திடுக்கிட்டவன் அங்கிருந்து ஓடி வரலானான். ‘அந்தணரே தயவு செய்து அதை கீழே வைத்து விடாதீர்கள்’ எனக் கூவியவாறு அவன் வருவதற்குள் ஒரு நாழிகைக் கடந்ததும் பத்து எண்ணிய அந்தணர் அதை கீழே வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.  அங்கு ஓடோடி வந்தும் வந்து சேர மூன்று நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். (பூமியிலே பதிந்திருந்த சிவலிங்கத்தை எடுக்க பலவாறு பல பக்கங்களிலும் இருந்து முயன்றதில் அது ஒரு பசுவின் காது போல உருமாறியதே தவிர, பூமியில் இருந்து அதை வெளியில் வெளிவரவில்லை. பசுவின் காது போல லிங்கம் மாரிவிட்டதினால் அந்த இடம் கோ கர்ணம் அதாவது பசுவின் காது என ஆயிற்று.)  ஆனால் என்ன செய்வது? அவன் சக்தி எல்லாம் வீணாகிப்  போயிற்று. தேவர்களும், தேவலோக அதிபதிகளும் அவனிடம் இருந்து விடுதலைப் பெற்றார்கள். ராவணன் துயரத்துடன் நாடு திரும்பினான்.  (இத்துடன் அத்தியாயம் – 6 முடிந்தது).
…………தொடரும்