…………அத்தியாயம் -2 (iii)
குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார்.
” ஒரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில் வேத சர்மா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவரை குருவாக ஏற்றுக்கொண்ட பல சீடர்கள் அவருக்கு இருந்தார்கள். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். அப்போதிருந்த மாமுனிவர்களில் மேன்மையானவர். அவருடைய சீடர்களில் தீபிகா என்ற சீடன் குருவிடம் அபார பக்தி கொண்டவராக இருந்தார். குருவுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளையும் செய்தவண்ணம் இருந்தார். இப்படியாக பல காலம் ஓடியது.
ஒருநாள் வேத சர்மா தனது அனைத்து சீடர்களையும் அழைத்து அவர்களிடம் கூறினார் ”பிள்ளைகளே, நீங்கள் அனைவரும் எனக்கு பக்தி பூர்வமாக பணிவிடை செய்வதைக் கண்டு ஆனந்தம் அடைகிறேன். நான் மரணம் அடைவதற்கு முன்னால் உங்களுக்கு இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுதலை கொடுத்து முக்தி தர விரும்புகிறேன். ஆனால் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறவியில் நான் செய்திருந்த பாவங்கள் என்னை இந்த ஜென்மத்தில் தண்டிக்க உள்ளன. நான் இத்தனை தவம் செய்தும், புண்ணிய நதிகளில் நீராடியும், புனித ஆலயங்களுக்கு சென்றும் சாப விமோசனம் எனக்குக் கிடைக்கவில்லை. நான் மோட்ஷம் பெற உள்ள வழியில் அந்த பாவங்களின் பிரதிபலிப்பு என் பயணத்தை தடுக்கலாம் என்று உணரத் துவங்குகிறேன். அப்படி அவற்றின் தாக்கம் ஏற்பட்டால் என் இலட்சியம் நிறைவேற இன்னும் பல காலம் பிடிக்கும். ஆனால் நானோ விரைவில் மோட்ஷத்தை அடைய ஆசைக் கொண்டுள்ளேன். ஆகவே பூர்வ ஜென்ம பாவங்களினால் கிடைக்க உள்ள தண்டனைக் காலம் வருவதற்கு முன்பாக நானே மனதார அவற்றை அவை வரும் முன்னரே ஏற்றுக் கொண்டு பிராயசித்தம் செய்ய விரும்புகிறேன். அப்படி செய்தால் அடுத்த ஜென்மத்தில் எனக்கு அந்த பாவங்களினால் எந்த கெடுதலும் ஏற்படாது. ஆகவே நான் காசிக்குச் சென்று தவம் செய்து அந்த பாவங்களை தொலைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். அங்கேயே உங்களது நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்வேன்.
காசியை அவிமுக்த ஷேத்திரம் என்பார்கள். அத்தனை புண்ணியமான ஷேத்திரம் அந்த பூமி. அங்கு சென்று தவம் இருந்து பிராயசித்தம் செய்தால் உலக பந்த ஆசைகள் அனைத்தும் அழிந்து போய் அந்த நிலையில் அனைத்து பாபங்களும் விலகி விடும். ஆகவே அங்கு செல்ல உள்ள என்னோடு யாரேனும் துணைக்கு வந்து நான் செய்ய உள்ள பிராயசித்ததின்போது எனக்கு உதவியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு சற்று நேரம் மெளனமாக இருந்தார்.
”பிள்ளாய், உன் குரு பக்தியை கண்டு நான் மனம் மகிழ்கிறேன். ஆனால் ஒன்றை நீ தெரிந்து கொள்ள வேண்டும். எனக்குள்ள பாவம் சாதாரணமானது அல்ல. அது தர உள்ள தண்டனை காலதீபிகா எனும் கடுமையான வெண்குஷ்ட வியாதி ஆகும். அந்த வியாதி என்னை இருபத்தி ஒரு வருடங்கள் ஆட்டிப் படைக்க உள்ளது. அப்படிப்பட்ட வியாதிஸ்தனின் அருகில் செல்லவே முகம் சுளிக்கும் அளவுக்கு அதன் ரணமும், ஒழுகிக் கொண்டு இருக்கும் ரத்தத்தின் சகிக்க முடியாத நாற்றமும் இருக்கும். அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வியாதியை சுமக்க உள்ள என்னை தோளில் சுமந்து கொண்டு என்னை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல வேண்டி வரும். ஆகவே இவற்றை மனதில் கொண்டு உங்களில் யாராவது மனமுவந்து வந்தால் மட்டுமே எனக்கு சேவை செய்ய இயலும். நானும் வருகிறேன் என்பது பெரியதல்ல. இப்படிப்பட்ட வியாதிஸ்தனுக்கு சேவை செய்ய இயலுமா என்பதை நன்கு ஆலோசித்தப் பின்னரே என்னுடன் வர சம்மதிக்க வேண்டும் என்பதினால்தான் இவற்றை நான் தெள்ளத் தெளிவாக கூறுகிறேன்”.
கேட்ட தீபிகா அசரவில்லை. அவர் கூறினார் ”குருநாதா , உங்களுக்கு என்ன வந்தாலும் உங்களை விட்டு பிரியாமல் இருந்து சேவகம் செய்வேன் என்பதை சத்திய வார்த்தையாகவே கூறுகிறேன். நீங்கள் தயங்காமல் என்னை அழைத்துக் கொண்டு போகலாம். ஒருவன் தன் வாழ்க்கையில் செய்யும் தெய்வீக சேவையில் பெருமைத் தரும் தெய்வீக சேவையே குருவிற்கு சேவை செய்வதுதான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். வருமுன் காப்போன் என்ற பழமொழி போல பிற்காலத்தில் வியாதிகள் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அவற்றை முற்காலத்திலேயே வேண்டிப் பெற்றுக் கொள்ளலாம் என்று சாஸ்திரங்கள் கூறுவதால், நீங்கள் தயங்காமல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்ல ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். உங்களுடன் அங்கு செல்ல இந்த சீடனுக்கு உத்தரவும் தாருங்கள்”.