அத்தியாயம் – 2 

அற்புதமான கனவில் மிதந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சடாலென விழித்து எழுந்தார்.  தான் கண்டது உண்மையிலேயே கனவா அல்லது நனவா என்பதை அவரால் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் மனதில் மகிழ்ச்சி நிலவி இருந்தது. இனி நிச்சயமாக  தனது குருநாதரை விரைவில் சந்திப்போம் என்ற மன உறுதி அவர் மனதில் விழுந்தது. ஆகவே முழித்து எழுந்தவர் அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீரை எடுத்து, முகம் மற்றும் கை கால்களை அலம்பிக் கொண்டப் பின் அங்கிருந்து மீண்டும் நடையை தொடர்ந்தார்.

அப்படி சென்று கொண்டு இருந்தவர் திடீர் என சற்று தூரத்தில் ஒரு மகான் போன்ற ஒருவர் சென்று கொண்டு இருப்பதைக் கண்டார்.   பின்னால் இருந்து பார்த்தபோது அந்த மனிதர் தன கனவிலே வந்த குருவின் சாயலில் இருப்பதைக் கண்டார். ஒருவேளை அவர்தான் தான் தூங்கிக் கொண்டு இருந்தபோது தன்னுடன் பேசியவரோ என நினைத்தவர் தூரத்தில் சென்று கொண்டு இருந்த  அவரைக் கண்டதும் மனதில் மகிழ்ச்சிப் பொங்க ஓடோடி அந்த மனிதருக்கு அருகில் சென்று பார்த்தால், அமைதியான முகமும் ஆறுதல் அளிக்கும்  கண்களையும்  கொண்ட அந்த முனிவர் தன்  கனவில் வந்தவர் போல இருப்பதையும், ஆனால் அதே சமயம் சற்று வேறு முகமாக இருந்ததையும்  கண்டு சற்றே குழம்பினாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டார். ஆனால் அவரே தனக்கு உதவ வந்துள்ளவர் போல மனதில் எண்ணம் தோன்றியது. அப்படியே தடாலென அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அவர் கால்களைப் பற்றிக் கொண்டவர் அவரிடம் கேட்டார் ”ஸ்வாமி, என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் உங்கள் பயணத்தை தடுப்பதாகக் கருதாதீர்கள். நான் எனது குருவை தேடிச் சென்று கொண்டு இருக்கிறேன். களைப்படைந்து நேற்று நான் உறங்குகையில் என் கனவில் நீங்கள் வந்து  நான் தேடிக் கொண்டு இருக்கும்  என் குருநாதர் என  உங்களை அடையாளம் காட்டிக் கொண்டீர்கள். கருணைக் கடலே இந்த அபலையை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு  தயை  புரிவீர்களா? நீங்களே என் கனவில் வந்த என் குரு என்பதும் சத்தியமா ” என்று  நமத்ஹரகா  கேட்டார்.

அது மட்டுமல்லாமல் அந்த குருவை பிரும்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பிற சக்தி வாய்ந்த தெய்வங்கள் எனப் போற்றி தோத்திரம் செய்தபடி அவர் கால்களை விடாமல் பற்றிக் கொண்டு அவரை நோக்கி நமத்ஹரகா ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கையில் மெளனமாக அவரை நோக்கிய அந்த மகான்  அவர் பேசுவதை நிறுத்துமாறு சைகையைக் காட்டிய பின் நமத்ஹரகாவிடம் கூறினார் ”மகனே, நீ யார் என்பதைக் குறித்து நான் சிந்திக்கவில்லை.  ஆனால் உன் மனதில் ஓடும் எண்ணத்தை  நான்  முற்றிலும் அறிகிறேன்.  ஆனால் உனக்கு ஒன்று கூறுகிறேன். கவனமாகக் கேள்.    நீ தேடிக்கொண்டு செல்லும் குருநாதர் நான் அல்ல. எனது குருநாதரான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை சந்திக்கச் சென்று கொண்டு இருக்கும் நான் ஒரு சித்த புருஷன். அவ்வளவே. அவரை சந்திக்கச் செல்லும் வழியில் உள்ள அனைத்து பல புண்ணிய தீர்த்தங்களுக்கும் சென்று அவற்றில் குளித்தப் பின் அவரை வேண்டிக் கொண்டு நடைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். அவர் தற்போது தென் பகுதியில் உள்ளல பீமா மற்றும் அமரஜா எனும் நதிகள் சங்கமிக்கும் இடமான கனகபுரா எனும் ஊரில் இருக்கிறார். அவர் தத்தாத்திரேயரின் அவதாரம் ஆவார். அவர் ஒரு தெய்வப் பிறவி. கருணாமூர்த்தியான அவர் தம்மை நாடி வரும் பக்தர்களை சம்சார சாகரத்தில் இருந்து  விடுவிப்பவர். அவரைக் கண்டாலேயே அனைத்து பாபங்களும் விலகி ஓடும். அவரைக் காணச் சென்று கொண்டு இருக்கும் என்னைப் போய்  உன்னுடைய குரு என்கிறாயே. உன்னுடைய குருவும் நான் காணச் சென்று கொண்டு இருக்கும் அதே கருணாமூர்த்தியான ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  ஆவார்” .

அவர் எப்படியாக குருவைக் குறித்துக் கூறியதைஅவர் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நமத்ஹரகா கேட்டதும், திக்குற்ற நமத்ஹரகா எழுந்து நின்று அவரைக் கேட்டார் ”ஸ்வாமி, என் மனதில் இப்படித்தான் நினைக்கிறேன். நீங்கள்தான் என் குருநாதரை அடையாளம் காட்டுவதற்காக வந்துள்ள மகான். தயவு செய்து நீங்கள்தான் நான் அவரை சந்திக்க எனக்கு உதவிட வேண்டும். அவரை எனக்கு நீங்கள்தான் அடையாளம் காட்ட வேண்டும்.  நான் என்ன பாபம் செய்தேன் என்பது புரியவில்லை. இதுவரை என் குருநாதர் எனக்கு ஏன் காட்சி தர மறுக்கிறார் என்பதும் புரியவில்லை. ஆகவே அதற்கான காரணத்தை நீங்கள்தான் எனக்குக் கூற வேண்டும்”.

அதைக் கேட்ட குரு கூறினார் ”மகனே, நீ வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. எந்த ஒரு குருவும் தன்னை வணங்குபவனை கை விட்டது இல்லை.  உன் இந்த நிலைக்குக் காரணம் ஒரு வேளை  நீ உன் குருவை நீ மனதார நம்பவில்லையோ  என்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு குருவானவர் பரிபூரணத்துவத்தின் அடையாளம்.  மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு  மற்றும் சிவபெருமான் போன்றவர்கள் ஒரு பக்தன் மீது கோபம் அடைந்தாலும் கூட அந்த கோபத்தின் தாக்கம்  தன்னுடைய சீடனின் மீது  விழாமல் ஒரு உண்மையான குருவினால் தடுக்க முடியும். ஆனால் ஒரு உண்மையான குருவானவர் கோபமுற்றால் அவரது கோபத்தின் தாக்கத்தை அந்த மும்மூர்த்திகளினால் கூட தடுக்க முடியாது என்பதே பிரகிர்தியின் நியதி ஆகும்.   உண்மையான குருவின் கோபத்தின் தாக்கம் அந்த  குருவினால் மட்டுமே குறைக்க முடியும் என்று இருக்கையில் நீ ஏன் அனாவசியமாக மனத்தைக் குழப்பிக் கொள்கிறாய்?” என்று கூறியதும்,  அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த   நமத்ஹரகா கேட்டார் ”சித்த குருவே, நீங்கள் கூறுவதைக் கேட்டு மிக்க ஆச்சர்யம் அடைகிறேன். இந்த  உலகிலேயே பிரும்மா, விஷ்ணு  மற்றும்  சிவபெருமான் எனும் மும்மூர்த்திகளே சக்தி மிக்கவர்கள் என்று கூறப்படும்போது, ஒரு குரு என்பவர் அவர்களை விட சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்று கேட்கும்போது என்னால் நம்பவே முடியவில்லையே ! அது எப்படி சாத்தியம் ஆகும்?” என்று கேட்டார்.

அதைக் கேட்டு நகைத்த சித்த முனிவர் கூறினார் ”இதை உன்னால் நம்ப முடியாததுதான். நான் கூறியபோது ஒரு உண்மையான குரு என்று நான் கூறியதை  நீ கவனித்தாயா? உண்மை என்றால் சத்தியத்தின் பிரதிபலிப்பு. உண்மையான குரு யார் தெரியுமா? அந்த மும்மூர்த்திகளின் மூன்று சக்திகளையும் உள்ளடக்கியவர். அவர் அந்த மும்மூர்த்திகளின் பிம்பம். அனைத்து குருமார்களும் அந்த நிலைப் பெறுவதில்லை. ஒரு சிலருக்கே அந்த பாக்கியம் கிட்டும்.  எந்த ஒரு குருவானவர் அந்த மும்மூர்த்திகளின் சக்தியை அவர்களிடமே இருந்து பெற்று இருப்பாரோ அவர்களே உண்மையான, சத்தியமான குரு ஆவார்” என்று கூறியதும், ”சித்தபெருமானே, இந்த அற்பனுக்கு இந்த குரு தத்துவத்தின் விளக்கத்தை முழுமையாக கூறுவீர்களா?” என்று கேட்க சித்த முனி மேலும் கூறலானார்.

அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அங்காங்கே மர நிழல்களில் இளைப்பாறினார்கள்.  நதி இருந்த இடங்களில் குளித்தார்கள். பயணம் தொடரத் தொடர சித்த முனிவரின் போதனையும் தொடர்ந்தது.   நமத்ஹரகா அதி அதிசயமான விஷயங்களை கேட்டவாறு மனம் குளிந்தபடி பேச்சு மூச்சில்லாதது  போல அவரைத் தொடர்ந்து சென்றார்.

 …….தொடரும்