வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் ” தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ”.

வசிஷ்டர் தன்  மனைவி அருந்ததிக்கு  
பத்ரிநாத்தின் மகத்துவம் பற்றிக் கூறினார் 

முன் ஒரு காலத்தில் இந்த பூமியில் விஷ்ணுமனஸ் எனும் ஒரு ஏழை பிராமணன், சாஸ்திர சம்பிரதாயங்களைக் நன்கு கற்றறிந்திருந்தவர் வசித்து வந்தார்.  அவர் வைஷ்ணவ பக்தர்.  வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவரினால் பிட்சை எடுத்தே  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் மிகப் பெரிய வைஷ்ணவ பக்தர் என்பதினால் தனக்குப் பிறந்த மகனுடைய பெயரையும் விஷ்ணுரதி என வைத்திருந்தார். பிறந்த மகன் வளரத் துவங்கியதும், விஷ்ணுமனஸ் அவனுக்கு  விஷ்ணுவின் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும்  கற்றுக் கொடுத்து வளர்த்தார்.

தன்னைப் போலவே தன்  மகனும் வறுமையில் வாடிக் கொண்டு பிட்ஷை எடுத்தே வாழ்வதை விட பிற்காலத்தில் புரோகித்தியம் செய்து பிழைக்கலாமே என விரும்பினார்.  ஆனால் வயதுக்கு வந்த விஷ்ணுரதியோ  புரோகிதம் செய்வதில் நாட்டம் இன்றி   இருந்தது மட்டும் அல்லாமல் வேறு எதிலும் மனதை செலுத்தாமல் இருந்தார்.  தன்  தந்தையைப் போலவே பாடல்களைப் பாடிக் கொண்டே அனைவர் வீட்டிலும் சென்று பிட்ஷை எடுக்கலானார். இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த விஷ்ணுரதி பத்ரினாத்திற்கு வந்தார். அங்கும்  அதிபக்தி கொண்டு விஷ்ணு மீதான பாடல்களைப் பாடிக் கொண்டே  பிட்ஷை எடுத்து வந்தார்.  பத்ரினாத்தும் மிகப் பெரிய புண்ணிய பூமி.  விஷ்ணுவும், சிவபெருமானும் வசிக்கும் பூமி என்பதினால் தன் மீது அபார பக்தி கொண்டு பாடிக் கொண்டு இருந்த விஷ்ணுரதியை கண்டு மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணுவும்   சங்கு சக்கரங்களை தன் கையில் ஏந்திக் கொண்டு தன் மனைவியுடன்  ஒருநாள் விஷ்ணுரதிக்கு பிரதிஷ்டமாக தரிசனம் தந்து அவருக்கு  ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார்.

தன் வாழ்நாளில் அப்படி ஒரு நிலை வரும் என்பதை சற்றும் எதிர்பாராத விஷ்ணுரதியும் என்ன செய்வது எனத் தெரியாமல் தன்னை மறந்து நின்றிருந்தார். நிலை தடுமாறி விஷ்ணுவின் முகத்தையும் அவர் பாதங்களையும் பார்த்துக் கொண்டே அவர் மீதான துதிகளை இன்னும் அதிகமாக பாடத் துவங்க அதனால் அவர்  மீது இன்னும் அதிக மகிழ்ச்சி கொண்ட விஷ்ணுவும், அவர்  கேட்காமலேயே அவர்  பெயரை நாரதர் என மாற்றி அமைத்து, அவர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லக் கூடிய சக்தியையும், பரிபூரணமான யோக மனதையும் அளித்து அவரை ஆசிர்வதித்தார். அதைக் கேட்ட விஷ்ணுரதி ஆச்சர்யம் அடைந்தார். தனக்கு ஏன் நாரதர் என்ற பெயரை பெருமாள் சூட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அவர் கால்களில் விழுந்து வணங்கியப் பின் தனது சந்தேகத்தை அவரிடமே கேட்டார்.

அதற்கு விஷ்ணு பகவான் கூறினார் ‘விஷ்ணுரதி, நீ பூர்வ ஜென்மத்தில் பத்ரினாத்தில் ஒரு பண்டிதராக இருந்தாய். அப்போது நான் இங்கு சிலை வடிவில் இருந்தபோது எனக்கு தினமும் கங்கை நீரை ஊற்றி வழிபட்டாய்.  பல ஆண்டுகளாக இப்படி பூஜை செய்து எனக்கு பிரியமானவனாக ஆகி இருந்த நேரத்தில் விஷ்ணு  பக்தனாக நீ   இருந்தாலும் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் தந்தை தக்ஷன் செய்த  யாகத்தில் கலந்து கொண்டு அந்த யாகத்தை நடத்தித் தருவதில் முக்கிய  பங்கை வகித்தாய். ஆனால் அதில் தக்ஷன் தனது மகளுடைய கணவரான சிவபெருமானை வேண்டும் என்றே அழைக்காமல் இருந்து அவரை அவமதித்தான். யாகம் நடந்து முடியும் நிலையில் அங்கு வந்த சிவபெருமானை தக்ஷன் அவமதிக்க அந்த கோபத்தினால்  யாகத்தை அழித்த சிவபெருமானின் சாபத்தினால் அந்த யாகத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அல்ல, அதை நடத்தித் தந்த அனைவருக்கும் கூட பாவம் ஏற்பட்டது. அதனால்தான் நீ மீண்டும் பூலோகத்துக்கே  சென்று மனிதப் பிறவி எடுத்து வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு பிட்ஷை எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டது.

உனக்குக்  கிடைத்த சாபம் நீ  வேண்டும் என்றே நீ  செய்த தவறினால் கிடைத்த சாபம் அல்ல. பொதுவாகவே கூறுவார்கள். நம்மை அறியாமலே தீயவர்களுடன்  நாம் சஹவாசம் வைத்தால் அவர்கள்  செய்யும் தவறுகளில் நாமும் பங்கு பெற்றவர்களாகி விடுவோம். ஏன் எனில் அவர்கள் செய்யும் தவறுகளை நாம்  தட்டிக் கேட்பது இல்லை. தீமை உள்ள இடத்தில் இருந்து விலகி நிற்பதே விவேகம் ஆகும். தீமை எனத் தெரிந்தும், நம்முடைய தற்காலிக  மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக   அந்த இடத்தில் நாம் இருப்பது அந்த தீமையில் பங்கு கொள்வதைப் போலவே அமைந்து விடும். அதனால்தான் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் தக்ஷன் செய்த யாகத்தில் நீ கலந்து கொண்டது உன்னை அறியாமல் நீ செய்த பிழை ஆகும்.

ஆனால் பார்வதி தேவி என்னுடைய சகோதரி என்பதினால் என்னுடைய பக்தர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு இருக்கக் கூடாது என எண்ணிய  சிவபெருமானும் கோபம் தணிந்ததும் உனக்கு என் மூலமே பத்ரிநாத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என உன்னை ஆசிர்வதித்தார். அதனால்தான் நீயும் இங்கு வந்தாய். பூர்வ ஜென்மத்தில் என்னுடைய பரம பக்தனாக நீ இருந்ததினால் இந்த ஜென்மத்திலும் அந்த பந்தம் தொடர என் மீது   உனக்கு  பக்தி தானாகவே ஏற்பட்டது.  நீயும் உன்னை அறியாமலேயே சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து என்னை துதித்து வரத் துவங்கினாய்.

சாப விமோசனமும் அடைந்து மீண்டும் வைகுண்டத்திற்கு வரும் நிலைக்கு நீ  வந்து விட்டதினால்தான் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு வந்துள்ளாய்.   நான் உனக்கு பிரசன்னம் ஆகி உனக்கு வரம் கொடுத்தேன். எப்போதுமே தன் கையில் வீணையை ஏந்திக் கொண்டே என்னை துதித்துப் பாடும் நாரதரின் நிலையில் நீ இருந்ததினால் என் மீது துதியை பாடிக் கொண்டே அலைந்த உன் பெயரையும் நாரதர் என வைத்தேன். இந்த இடத்தில் நான் ஐம்பது ரூபங்களில் இருக்கிறேன். அவை அனைத்தையும் நீ வழிபாட்டு வந்தால் விரைவில் வைகுண்டப் பிராப்தி அடைவாய்’  என அவரை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

விஷ்ணுவை ஆராதித்து வழிபடும் அனைத்து பக்தர்களும் பத்ரினாத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் விஷ்ணுவை ஒரு முறை மட்டுமே வழிபட்டாலும் கூட வைகுண்ட பிராப்தி கிடைக்கும் என்பதை விளக்கும் இந்தக் கதை மூலம் பத்ரினாத் எனும் புண்ணிய பூமியின் மகாத்மியம் உனக்குப் புரியும் என்று வசிஷ்டர்  கூறியப் பின்னர் மேலும் இன்னொரு கதையைக் கூறத் துவங்கினார்.

……..தொடரும்