சாந்திப்பிரியா

பாகம்-8
சிங்கவன்மர்  கதை

இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காமல் இன்னொருவரும் தில்லைவனத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த பிரபஞ்சத்தை சிவபெருமான் படைத்தபோது சூரியனுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் மனு மற்றும் யமன் என்பவர்கள் ஆவர். பாவங்கள் செய்தவரை பூமியிலே தண்டிக்க மனுவும், இறந்தப் பின் அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனைத் தர யமனும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள்.

மனுவானவர் இமயமலையின் தெற்கே உள்ள கெளட தேசத்தில் ஆட்சியில் இருந்தார். அவர் வம்சத்தை சேர்ந்த நான்கு மனுக்கள் ஆட்சி புரிந்து மறைந்தப் பின் ஐந்தாம் மனுவிற்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள் . அவர்களில் மூத்தவளுக்கு உடல் முழுவதும் சிங்கம் போல இருக்க சிவந்த தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர் என்ற பிள்ளையும், இளையவளுக்கு பேரழகான பிள்ளையாக தேவவர்மனும் பிறந்தார்கள்.

உடல் முழுவதும் சிங்கம் போல தேகத்தைக் கொண்ட சிங்கவர்மர், அந்த உடல் கோளாறினால் ஆளுமைக்கு தகுதியானவனாக இல்லை என்பதினால், இனி இந்த ராஜ்யத்தில் இருந்து அவமானப்படக் கூடாது என எண்ணினான். ஆகவே ராஜ்யத்தில் அவமானமான தோற்றத்தில் உள்ள  உடல் கோளாறுடன் இருப்பதை விட யார் கண்களிலும் படாமல் கிளம்பி  பூமி எங்கும் சுற்றித் திரிந்து,  அங்காங்கே உள்ள இடங்களில் சிவதரிசனம் செய்து கொண்டு இருந்தால் எதோ முக்தியாவது கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, தனது தந்தையாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன்னை முற்றிலுமாக போர்வையினால் மறைத்துக் கொண்டு கெளட தேசத்தில் இருந்துக் கிளம்பிச் சென்றான். முதலில் காசிக்குச் சென்று, அங்கு கங்கையில் ஸ்நானம் செய்தப் பின் அங்கிருந்த விஸ்வநாதரை வணங்கித் துதித்தார். அதன் பின் வங்க தேசம், ஓடித (ஒரிசா) மற்றும் தெலுங்கு தேசம் என பல இடங்களுக்கும் விஜயம் செய்து சிவபெருமானை தரிசித்து மகிழ்ந்தார். அங்காங்கே செல்லுகையில், அந்தந்த ஊர்களின் விசேஷ வழிபாட்டு இடங்களைக் கண்டறிந்தும், கேட்டறிந்தும், அங்கெல்லாம் சென்று சிவதரிசனம் செய்தார்.

இப்படியாக இடமிடமாக அலைந்து கொண்டு இருந்தவர் ஸ்ரீ சைலத்துக்கு சென்றப் பின் மற்றொரு ஊரை நோக்கி வனப் பகுதி வழியே நடந்து கொண்டு இருக்கையில் வழியில் ஒரு வேடனை சந்தித்தார். அவனிடம் ‘ஐயா, இந்த வனப் பகுதியில் விசேஷமான தலம் ஏதும் உண்டா ?’ என வினவினார். அதற்கு பதிலளித்த வேடனும் ‘ஐயா, இங்குள்ள வனத்துக்குள் ஒரு ஆற்றங்கரை உள்ளது. அதனருகில் ஒரு முனிவர் அமர்ந்து இருக்கிறார். காலையும், மாலையும் இளம் பெண் ஒருத்தி அங்கு வந்து இரண்டு வேளையும் அவர் மீது பூமாரி பொழிந்து விட்டுச் செல்கிறாள். ஆனால் அது பற்றி மேற்கொண்டு விவரம் யாம் அறியாம்’ என்று கூறினான்.
அந்த வேடனிடம் அவன் குறிப்பிட்ட இடத்தின் வழியைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டு அவன் துணையுடன் அந்த இடத்தை அடைந்தார். அதுவே திருவேங்கடம் எனும் இடத்தில் இருந்த சிவலிங்கமாகும். சிங்கவர்மரும் அங்கேயே தங்கிக் கொண்டு தாமும் இருவேளையும் அதற்கு பூக்களை சூட்டி, வழிபட்டு வந்தார். அந்த வேடனும் தினமும் கொண்டு தந்த தேன், தினை, கனிகள் மற்றும் காய்களை உண்டபடி சிலகாலம் இருந்தார்.

……தொடரும்