தச மஹா வித்யா

சாந்திப்பிரியா

தச மஹா வித்யா என்பது பார்வதி தேவியின் பத்து தெய்வீக வடிவங்களையும் தோற்றங்களையும் குறிக்கும் சொல் ஆகும். ஆதி பராசக்தியின் பத்து தோற்றங்களைக் குறிக்கும் அவை பத்து வகைகளிலான பேரரறிவையும், ஞானத்தையும் குறிப்பது ஆகும். ஒவ்வொரு மஹா வித்யா வடிவமும் ஆதி சக்தியின் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. அவள் ஏன் பத்து மஹா வித்யா அவதாரங்களில் தோன்றினாள்? அதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

பார்வதி தேவி ஒருமுறை சதி தேவி எனும் அவதாரத்தில் இருந்தாள். அவளது தந்தை தக்ஷன் ஆகும். ஒருமுறை நாரத முனிவர் மூலம் தனது தந்தை தக்ஷன் செய்ய உள்ள யாகம் குறித்து அறிந்து கொண்டாள். ஆனால் தக்ஷனோ வேண்டும் என்றே அவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை. என்றாலும் தந்தை நடத்தும் புனித சடங்குகளில் கலந்து கொள்ள ஒரு மகளுக்கு அழைப்பு தேவையில்லை என்று கூறிய சதியின் கோரிக்கையை சிவபெருமான் நிராகரித்தார். அவளுடைய தந்தை வேண்டுமென்றே தன்னை (சிவபெருமானை) அவமதிக்க வேண்டும் என்று விரும்புவதினால் அவர்களுக்கு அழைப்பை அனுப்பவில்லை என்றும், எனவே இருவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என பிடிவாதமாக கூறினார்.

அதைக் கேட்ட சதி தேவி கோபமடைந்தாள், ஒவ்வொரு விஷயத்திலும் சிவபெருமான் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும், தன்னை பிரபஞ்சத்தின் தாயாக நடத்தவில்லை என்றும் நினைத்தாள். தான் எனும் அகங்காரம் தலைக்கு மேல் எழுந்தது, அவ்வளவுதான் கோபத்துடன் அவள் தன்னுடைய பத்து நிழல் உருவங்களை எடுத்து சிவபெருமானின் முன் தோன்றி அவரை பயமுறுத்தினாள்; சிவபெருமான் எந்த திசையிலும் தப்பிச் செல்ல முடியாதபடி அனைத்து திக்குக்களையும் அடைத்துக் கொண்டு நின்றாள். குழப்பமடைந்த சிவபெருமான் சதி தேவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் செல்ல அனுமதி அளித்தார். தானும் அதில் கலந்து கொள்ள சம்மதித்தார். கோபத்தில் சதி தேவி எடுத்த ஒவ்வொரு வடிவமும் மஹா வித்யா என்று அழைக்கப்பட்டது.

பார்வதி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக ஏவிய பத்து நிழல் வடிவங்களும், பிற்காலத்தில் வெவ்வேறு கட்டங்களில் தேவர்களையும் மனித குலத்தையும் காப்பாற்ற அசுர சக்திகளுடன் போர்களில் ஈடுபட்ட பெண் தெய்வங்களுக்கு உதவுவதற்காக அதே ஆதி பராசக்தியிடமிருந்து அதே வடிவத்தில் வெளிப்பட்டன.

ஒவ்வொரு மஹா வித்யா தோற்றங்களும் ஆதி பராசக்தியின் பத்து வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள். மஹா வித்யா என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையின் வெளிப்பாடு ஆகும். – மகா என்றால் பெரியது, வித்யா என்றால் ஞானம், அறிவு, வெளிப்பாடு என்பதாகும்.

மஹா வித்யா மூலம் பத்து பயங்கரமான மற்றும் அமைதியான வடிவங்களில் பார்வதி தேவி தனது உள்ளே இருந்த சக்தியை (தெய்வ ரூபங்களை) வெளிப்படுத்தியதற்கான காரணம், சிவபெருமான் எப்படி அவருக்குள் பல தெய்வங்களை உள்ளடக்கி வைத்து உள்ளாரோ, அதே போன்ற தனித் தன்மையிலான சக்தியை தானும் கொண்டு இருப்பதை பிரபஞ்சத்திற்கு எடுத்துக் காட்டவும், ஆண்-பெண் சக்தி இரண்டும் ஒன்றிணைந்து செயல்படாவிடில், பிரபஞ்சமும் அதனுள் உள்ள உயிரினமும் உயிர் ஆற்றல்களை பெற இயலாது என்பதை பிரபஞ்சத்திற்கு எடுத்துக் காட்டவும் மஹா வித்யா மூலம் பத்து ரூபங்களை வெளிப்படுத்தினார். அந்த ரூபங்கள் பல்வேறு நிலைகளில் அசுரர்களை அழித்தன.

தச மஹா வித்யா எனும் தேவிகள் தெய்வீக ஆற்றல் மற்றும் ஞானத்தின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிப்பதினால், தமது ஆன்மீக வளர்ச்சி மற்றும் பேரானந்த நிலையை எட்டுவதற்காக தாந்த்ரீக சாதகர்களால் அவர்கள் வணங்கப்படுகின்றார்கள். தச மஹா வித்யா எனும் தேவிகள்
• காளி தேவி
• தாரா தேவி
• திரிபுர சுந்தரி
• புவனேஸ்வரி தேவி
• பைரவி தேவி
• சின்னமஸ்தா தேவி
• தூமாவதி தேவி
• பகலாமுகி தேவி
• மாதங்கி தேவி மற்றும்
• கமலா தேவி ஆகியவர்கள் ஆவார்கள் .

அந்த பத்து ரூப தேவிகளை சரியான முறையில் வணங்கி சரியாகச் மந்திர உச்சாடனம் செய்து வந்தால் மந்திர தந்திர சித்திகள் ஒருவருக்கு கிடைக்குமாம். அது மட்டும் அல்ல அவர்களை வணங்கி வந்தால் வாழ்கையில் பல நன்மைகள் கிடைக்குமாம். ஒருவர் தன்னையே முழுமையாக அடக்கி ஆளலாம். ஆனால் அந்த யந்திர பூஜைகளை முறைப்படி ஒரு குருவிடம் இருந்து கற்காமல் தன் இச்சையாக செய்ய முயன்றால் விளைவுகள் வேறு விதமாகி வாழ்க்கைக்கே ஆபத்தாகி விடுமாம். காரணம் அதில் சில தேவிகள் மிகவும் உக்ராஹமானவை. மேலும் பூஜை அறையில் மாட்டி வைக்கப்படும் அந்த தேவதைகளை சரியான முறையில் பூஜிக்காமல் இருக்கக் கூடாது என்பதினால் அந்த தேவிகளை வைத்து ஆராதிக்க விரும்புபவர்கள் ஒரு குருவிடம் சென்று அந்த பூஜை முறைகளை முறைப்படி கற்ற பின்னரே அதை துவங்க வேண்டும். அதற்குப் பல கடினமான நியமங்கள், மடி, ஆசார அனுஷ்டானங்கள் உண்டு. ஆகவே புத்தகங்களையும், செய்திகளையும் மேலோட்டமாகப் படித்து விட்டு முறையான குருவின் துணை இல்லாமல் உடனே அவர்களை ஆராதிக்கத் துவங்கக் கூடாது. அந்த தேவி யந்திரங்களை வீட்டில் வைத்து பூஜிப்பதை விட அந்த தேவிகளை ஆலயங்களில் சென்று வழிபடுவதே சிறந்தது.

காளி தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் காளி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் காளி தேவி தக்க வைத்துக் கொண்டு, ஆதி பராசக்தியிடம் இருந்தோ அல்லது அவளது அவதாரங்களில் ஒருவரிடமிருந்தோ தக்க நேரத்தில் வெளிப்பட்டாள். காளி தேவி பார்வதி தேவியின் அவதாரமான துர்கா தேவி நடத்திய போரின் போது துர்கா தேவி மூலம் வெளிப்பட்டாள் .

மார்க்கண்டேய புராணத்தின்படி (கி.பி. 250-550) , காளி தேவி பெண் சக்தியின் (சக்தி) மேலான உருவமாக உள்ளவள். ரக்தபீஜ என்ற அரக்கனைக் கொல்ல துர்கா தேவியின் கோபத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டவள். காலி தேவி தோற்றம் குறித்த கதை இது. சம்பா மற்றும் நிசும்பா என்ற இரண்டு அசுரர்கள் தேவலோகத்தினரை துன்புறுத்தி அவர்களுக்கு துன்பத்தை விளைவித்தார்கள். தேவலோக மக்களைத் துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்க பார்வதி தேவி தனது உடலில் இருந்து அம்பிகா என்ற ஒரு பெண் தெய்வத்தை வெளிப்படுத்தி அவளை அசுரர்களை அழிக்க அனுப்பினார். அசுரர்கள் அம்பிகா தேவியை கண்டதும், அவளுடைய அழகில் மயங்கி, அவளைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ள முயன்றனர். அவர்களின் அநாகரீகமான செயலால் கோபமடைந்த அம்பிகா தேவி உடனடியாக பயங்கர வடிவமான தோற்றத்தை கொண்டவளாக மாறி, தன்னுடைய கோபத்திலிருந்து காளி தேவியை உருவாக்கி, அவர்களை அழிக்க அனுப்பினார். காளி தேவியும் மிகவும் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான வடிவத்தை எடுத்து, அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களைக் கொன்றார், மேலும் அவர்களின் இரத்தத்தையும் குடித்தார்.

அதன் பின்னர் அவர்களைக் கொன்றதால் திருப்தி அடையாமல், தன்னை மறந்த நிலையில் சிவபெருமானுடன் சேர்ந்து பரவசத்தில் நடனமாடினாள்.

அவள் அமைதியடைந்து சுய நினைவுக்கு வந்தபோது, தன்னை மறந்த நிலையில் தான் இறைவனுடன் நடனமாடுவதை அறிந்து கொண்ட உடன் தன் செயலுக்கு வெட்கப்பட்டு, தன்னை மீறி தனது நாக்கைக் கடித்துக் கொள்ள, நாக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. அதனால்தான் அவள் நாக்கு வெளியே நீட்டி உள்ளது போலவும், கடித்த நாக்கிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் தோற்றம் தருகின்றாள்.

அதே கதை இன்னொரு பிரிவினரால் சற்று வித்யாசமாக மாற்றி கூறப்படுகின்றது. அசுரர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தைக் குடித்த காளி தேவிக்கு, தானே வலிமையானவள் என்ற அகம்பாவம் ஏற்பட அந்த பரவசத்தில் நடனமாடினாள்; நடனமாடும் போது சிவபெருமானை அவமதித்தாள். ஆகவே அவளது ஆணவத்தை அடக்க முடிவு செய்த சிவபெருமான் அவளோடு நடனப் போட்டி நிகழ்த்தி ஒரு புத்திசாலித்தனமான நடன தோரணையான தாண்டவ நடனத்தை ஆடி அவளைத் தோற்கடித்தார். காளி தேவி தன் நிலையை அடைந்து சிவபெருமானிடம் தோல்வியை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கோரினாள்; அவளுடைய ஆணவம் மறைந்தது. அதனால்தான் உலகையே பயமுறுத்தியவாறு இருந்து வந்திருந்த காளி தேவியும் அது முதல் மென்மையான காளி தேவியானாள்.

கையில் துண்டிக்கப்பட்ட ஒரு அசுரனின் தலைக் காணப்பட, இரத்தம் சொட்டும் நாக்குடன்; மண்டை ஓடு மாலைகளை அணிந்துள்ள கோலத்திலும், பயங்கரமான தோற்றத்திலும் காணப்படும் காளி தேவியானவள் கருமை நிறத்தவள். ஆனால் அவளை வழிபடுபவர்களுக்கு கருணை காட்டுபவள், மகிழ்ச்சியைத் தருபவள். சக்தியின் வடிவமாக அவள் கருதப்படுவதினால் நவராத்திரி பண்டிகையின் போது காளி தேவியின் வழிபாடு முக்கியமாக உள்ளது.

மந்திர உச்சாடனைகளுடன் கூடிய, மஹா வித்யா சக்தி தேவியின் வெளிப்பாடான காளி தேவியின் யந்திர வழிபாடு மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய ஒன்றாகும். அத்தகைய வழிபாட்டை செய்யத் துவங்கும் முன்னால் அந்த வழிபாட்டு முறையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள ஒரு குருவிடம் இருந்து சரியான முறையில் தீட்ஷை பெற வேண்டியது அவசியம் ஆகும். அப்போதுதான் அந்த வழிபாட்டின் போது வெளியாகும் காளி தேவியின் தெய்வீக சக்தி அலைகளை எதிர் கொண்டு வழிபாட்டை தொடர இயலும். காளி தேவியின் யந்திர வழிபாட்டு நடைமுறைகள் சரியாகவும், பாதுகாப்பாகவும், ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட, சரியான நோக்கத்துடன் அமைந்து இருக்கவும் ஒரு குருவின் வழிகாட்டுதல் அவசியம், இல்லையெனில் அது வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.

தாரா தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் தாரா தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தாரா தேவி தக்க வைத்துக் கொண்டு, ஆதி பராசக்தியிடம் இருந்தோ அல்லது அவளது அவதாரங்களில் ஒருவரிடமிருந்தோ தக்க நேரத்தில் வெளிப்பட்டாள். தாரா தேவி பார்வதி தேவி மூலம் சிவபெருமான் ஆல கால விஷத்தை உண்ட போது தோன்றினாள் .

தச மஹா வித்யாவின் இரண்டாவது அவதார தேவியே தாரா தேவி என்பவள். அவள் மஹா சக்தியின் மூன்றாவது கண்ணாக வந்தவளாம். தாரா என்றால் சமஸ்கிருதத்தில் நட்சத்திரம் என்று பொருள். அவளைப் பற்றி கூறப்படும் ஒரு கதை இது. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து சமுத்திரத்தைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது, அதில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. அதை அப்படியே விட்டு விட்டால் அது அனைவரையும் அழித்து விடும் என்பதை உணர்ந்த சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்ற அந்த ஆலகால விஷத்தை உண்டார். ஆனால் அதுவோ பார்வதி தேவியின் செயலால் அவரது வயிற்றில் இறங்காமல் தொண்டையில் தங்கி விட்டது. அந்த விஷத்தினால் அவர் மிகவும் அவதிப்பட்டார். அந்த விஷத்தின் கடுமை உடல் முழுவதும் எரியத் துவங்கியது. எதையும் உண்ண முடியவில்லை. அதைக் கண்ட தாரா தேவி அவரை தன் மடியில் குழந்தைப் போல படுக்க வைத்துக் கொண்டு தனது மார்பில் இருந்து பாலை குடிக்க விட்டாள். அவளுடைய மார்பகங்களிலிருந்து அவர் குடித்த பால், அப்படியே விஷத் தன்மையை அடக்கி விட்டது; அதை குடித்தப் பின்னர் சாதாரண நிலைக்கு வந்த சிவபெருமான் குணமடைந்தார்.

தாரா தேவி குறைந்த பட்ச ஆடைகளை அணிந்திருக்கிறாள், புலித்தோல் பாவாடையுடனும், துண்டிக்கப்பட்ட மனித தலைகளால் ஆன மாலையை அணிந்து உள்ளவளாகவும், வாயில் இருந்து இரத்தம் கசிகிறது போலவும் காணப்படுகிறாள். தாரா தேவிக்கு நான்கு கைகள். ஒரு கையில் வாள், இன்னொன்றில் தாமரைப் பூ, மூன்றாவதில் வெட்டும் கத்தரி போன்ற ஒன்று மற்றும் நான்காவதில் கமண்டலம் கொண்டபடி காட்சி தருகிறாள். வெட்டும் கத்தரி, ஒருவரின் தேவையற்ற பழக்க வழக்கங்களை வெட்டி, ஆன்மீக உச்சத்திற்கு செல்ல வைக்கும் திறனைக் குறிக்கிறது. காலடியில் கிடைக்கும் சிவபெருமான் தன்னிடம் சரண் அடைந்தவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்தி தன்னிடம் அடக்கி வைப்பதை குறிப்பது என்கிறார்கள்.

பார்ப்பதற்கு தாரா தேவி எத்தனை கோபமானவளாகத் தெரிகிறாளோ அத்தனை கருணை மிக்கவள். ஞானத்தைத் தருபவள். அவள் அனைத்து கிரகங்களுக்கும் தலைவரான பிரஹஸ்பதியின் குருவாம். அவளுக்கு நான்கு உருவங்கள் உண்டாம். அவை :

1) லஷ்மியாக பூஜிக்கப்படும் தேவி
2) உக்ர தாரா
3) மகா உக்ர தாரா மற்றும்
4) நீல சரஸ்வதி.

கொல்கத்தாவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபீத் என்ற ஊரில் உள்ள தாரா தேவியின் ஆலயத்தில் சிவபெருமான், தாரா தேவி மடியில் குழந்தைப் போல படுத்துள்ள உருவச் சிலை உள்ளதாம். அங்கு தாரா தேவியை 5000 வருடங்களுக்கு முதலே வழிபாட்டு வந்துள்ளனர் என நம்புகிறார்கள். அது போல முன்னர் இருந்த பெங்காலை ( இன்று மேற்கு வங்காளம்) ஆண்டு வந்த ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து ஹிமாசலப் பிரதேசத்தில் வேட்டைக்குப் போனபோது, அங்கு அசதியால் ஒரு காட்டில் உறங்கி விட்டார். அப்போது அவர் கனவில் பைரவர், ஹனுமான் மற்றும் தாரா தேவி தோன்றி தாரா தேவிக்கு ஹிமாசலப் பிரதேசத்தில் ஆலயம் அமைக்குமாறு கூற அவர் அவளுக்கு அங்கு ஆலயம் அமைத்தாராம். ஆக அந்த இரண்டு ஆலயங்களுமே அதாவது மேற்கு வங்கம் மற்றும் ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள தாரா தேவியின் ஆலயங்களில் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

தாரா தேவிக்கு நிலா தார தந்திரா எனும் வித்தையின் அனைத்து மர்மங்களையும், மந்திரங்களையும், தந்திரங்களையும் மகா கால பைரவரே போதித்தாராம். அந்த தந்திர வித்தையின் மந்திரங்களை உள்ளடக்கியதே மஹா வித்யாவின் ஒரு யந்திரம்.

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் திரிபுர சுந்தரி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் திரிபுர சுந்தரி தேவி தக்க வைத்துக் கொண்டு, பார்வதி தேவி மூலம் பண்டாசுரனை அழிக்க தோன்றினாள் .

திரிபுர சுந்தரி தேவி அல்லது சோடக்ஷி என்பவள் மஹா வித்யாவின் மூன்றாவது தேவி ஆவார். அவள் அவதரித்த வரலாறு பற்றி இரண்டு கதைகள் உண்டு. முதலாம் கதையின்படி ஒரு முறை சிவபெருமானின் தவத்தைக் கலைத்த மன்மதனை சிவபெருமான் கோபமுற்று எரித்து விடுகிறார். அப்போது தேவர்கள் சிவபெருமானிடம் சென்று மன்மதனுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவருக்கு உயிர் தருமாறு வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அந்த சாம்பலில் இருந்து மன்மதனை உயிர் பிழைக்க வைத்தார். ஆனால் அதே சாம்பலில் இருந்து பண்டாசுரன் எனும் ஒரு ஒரு கொடிய அசுரனும் வெளி வந்து, தவம் புரிந்து சிவபெருமானிடம் இருந்து அறிய ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டு உலகை ஆட்டிப் படைத்தான். தேவர்கள் துன்பமுற்றனர். ஆகவே பார்வதியிடம் சென்று அவனை கொன்று தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள அவள் தன் உடலில் இருந்து தேவி திரிபுரசுந்தரியை படைத்து அந்த அசுரனை வதம் செய்து உலகை காப்பாற்றினாள் .

இரண்டாவது கதை என்ன எனில் சிவபெருமான் காளி தேவியைப் படைத்தப் பின் ஒரு முறை அனைவர் முன்னிலும் அவளை காளி, காளி எனக் கூவி அழைத்தாராம். காளி என்றால் கருப்பானவள் எனவும் அர்த்தம் உள்ளது. ஆகவே தான் கருப்பாக இருப்பதினால் தன்னை கறுப்பி என அழைப்பதாக கருதியவள் அவரைப் பிரிந்து போய் விட்டாள். சிவபெருமானுக்கு அவள் சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் நாரதர் மூலம் அவள் இருந்த இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அங்கு சென்று அவளுக்கு தன் நிலையை விளக்கிக் கூறி, இனி அவள் மூவுலகமும் போற்றும் அதி சுந்தரமான உருவில் காட்சி அளிப்பவளாக இருப்பாள் எனக் கூறி ஆசிர்வதிக்க அவள் பதினாறு வயதான பெண் போன்று அதி சுந்தர திரிபுரா சுந்தரி தேவியானாளாம் .

அமிர்த கடலின் மத்தியிலுள்ள ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவில் அமைந்த நகரில் திரிபுரசுந்தரி தேவி வீற்றிருக்கின்றாள். திரிபுரசுந்தரி தேவியின் நான்கு கைகளில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லை ஏந்தியும், இன்னொன்றில் பாசம் (கயிறு), மூன்றாவதில் அங்குசம் மற்றும் நான்காவதில் மலர்களால் ஆன அம்புகள் ஏந்தியும் காணப்படுகிறாள்.

பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியோர் கட்டில் கால்களாக விளங்கும் அரியாசனத்தில், மகா காமேசுவரனாகிய சதாசிவனின் (சிவபெருமான்) மடியில் தாமரை மலரின் மீது அமர்ந்து அழகான கண்களுடன் கருணை முகத்தைக் காட்டி காட்சி தருகிறாள். லட்சுமி தேவி மற்றும் சரஸ்வதி தேவிகள் கவரி வீச, அவளைச் சுற்றி அவளது அமைச்சரான மாதங்கி, படைத் தளபதியான அஸ்வாரூடை, வராகி முதலான சப்த மாதர்கள் போன்றோர் அமர்ந்திருக்கின்றனர். அவளுடைய ஸ்லோகத்தின் யந்திரங்கள் பல உள்ளன. அவற்றை நியமபூர்வமாக பூஜித்து ஆராதித்தால் பல நன்மைகள் கிடைக்கும், உடல் நலன் பெரும், பணம் மற்றும் பொருள் சேரும் என்பது நம்பிக்கை ஆகும்.

அவளைத் தொடர்ந்து வழிபடுபவர்கள் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் செல்வத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஏராளமான நன்மைகளைப் பெறுகிறார்கள். திரிபுரசுந்தரி தேவியை பிரார்த்தனை செய்து தூய பக்தியுடனும் திறந்த மனதுடனும் வணங்கும்போது
• சாதகர்கள் மேன்மையான உணர்வு மற்றும் தெய்வத்துடனான ஐக்கிய நிலையை அடைய அவள் உதவுகிறாள், இதனால் அவர்கள் ஆத்மா ஞானத்தை விரைவில் அடைவார்கள்.
• மற்றவர்களால் ஏற்படும் தேவையற்ற தடைகள் நீங்கும். அவள் அதை உறுதி செய்கிறாள்.
• ஒருவர் வாழ்க்கையில் பெரிய இலக்குகளை அடைய முதலில் தனது மனதை வலிமையாக்கிக் உள்ள வேண்டும், ஏனெனில் தன்னம்பிக்கை மட்டுமே வெற்றிக்கான முதல் நுழை வாயில். அவள் அத்தகைய தார்மீக தைரியத்தையும் மன தெளிவையும் தருகிறாள்,
• உள்ளேயும் வெளியேயும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளுக்கு எதிராக அவள் பாதுகாப்பை வழங்குகிறாள்.
• குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதை உறுதி செய்கிறாள்,

புவனேஸ்வரி தேவி

மஹா வித்யாவின் நான்காவது தேவியே புவனேஸ்வரி தேவி ஆவாள். புவனம் என்பது உலகைக் குறிக்க ஈஸ்வரி என்பது பெண் தேவியைக் குறிக்கின்றது. எனவே உலகை ஆள்பவளே அவள் என்பதினால் அவள் புவனேஸ்வரி என்ற பெயர் கொண்டாள். அவள் ஆதி பராசக்தியின் ஸ்வரூபம் என்பதினால் இந்த பெயர் அவளுக்கு அமைந்தது.

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் புவனேஸ்வரி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு மூவுலகிற்கும், அதிபதி தெய்வமாக, மூன்று தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி தேவியின் சக்திகளை உள்ளடக்கியபடி ஆதி பராசக்தி மூலம் புவனேஸ்வரி தேவி தோன்றினாள்.

அவள் தோன்றிய கதை இது. ஒரு முறை பராசக்தி மூலம் பிரபஞ்சம் தோன்றியபோது சந்திரனும் சூரியனும் மட்டுமே தேவலோகத்தில் இருந்தனர். அவர்களைக் கண்ட ரிஷிகள் (அவர்களைத் தொடர்ந்து தோன்றியவர்கள்) தாம் அவர்களுக்கு ஒரு கிரகத்தை தருவதாகவும் அதை வைத்துக் கொண்டு மூன்று உலகையும் படைக்குமாறு கேட்டுக் கொள்ள சூரியன் தனது சக்தியினால் பூலோகம், ஸ்வர்க லோகம் மற்றும் பாதாள லோகம் எனும் மூன்று உலகைப் படைத்தார். அந்த மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக பராசக்தி தனது சக்தியை ஒரு தேவியாக ஆக்கித் தர அந்த அவதாரத்தின் பெயர் புவனேஸ்வரி என ஆயிற்று. அந்த அவதாரத்தில் அவள் தானே மூன்று தேவிகளின் சக்தியாக- சரஸ்வதி, லஷ்மி மற்றும் பார்வதியாக – மாறினாள்.

அதனால்தான் அவள் ஞான சக்தியாக உள்ளாள். வேதங்களில் அவளைக் குறித்து குறிப்பிடுகையில் இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கருவில் அடக்கிக் கொண்டு உள்ளவள் என்பதாக கூறப்பட்டு உள்ளது என்பதினால், உயிரினங்கள் மற்றும் ஜட இனங்கள் இரண்டிலுமே அவள் வியாபித்து இருக்கின்றாள். அன்னை புவனேஸ்வரியே இந்த பிரபஞ்சம் என்றும், இந்த பிரபஞ்சமே அன்னை புவனேஸ்வரி என்றும் கூறப்படுகின்றது. அனைத்து தெய்வங்களும் அவளுடைய தெய்வீக சக்தி கதிர்களில் இருந்தே வெளிப்பட்டதினால், அவளே சக்திகளின் மையமாக இருக்கின்றாள். அதனால்தான் ஒருவரது தலைவிதியை நிர்ணயிக்கும் வலிமையான ஒன்பது நவகிரகங்கள் விளைவுகளைக் கூட அவளை ஆராதிப்பதின் மூலம் முறியடிக்க முடியும் என்பதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுவார்கள்.

அழகு சொட்டும் முகம், பார்பதற்கு திரிபுரசுந்தரி தேவியைப் போலவே காட்சி தரும் அந்த தேவி பொதுவாக நான்கு கைகளுடன் காணப்படுகிறாள். நான்கு கைகளில் ஒன்றில் பாசாங்கமும் (கயிறு), இரண்டாவதில் யானையின் மதத்தை அடக்கும் அங்குசமும் காணப்பட, மற்ற இரண்டு கைகளாலும் பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி கொண்டு இருக்கின்றாள். சில நேரங்களில் அவள் பல கைகளுடன், பல ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டும், தாமரை மலர் மீது ஒய்யாரமாக நிர்வாண கோலத்தில் அமர்ந்தபடியும் காட்சி தருவாளாம்.

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் தனது சொந்தக் குழந்தைகளாக புவனேஸ்வரி தேவி கருதுவதால் அவள் அன்பின் உருவாக இருக்கிறாள்; அவள் இரக்கமுள்ளவள், கருணையுள்ளவள். உண்மையான பிரார்த்தனைகளால் மகிழ்ச்சியடையும்போது, அவள் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆசிகளையும் வழங்குகிறாள். அவளுடைய அன்பு வழக்கமான வகையைச் சேர்ந்தது அல்ல, ஆனால் மாயை, பற்று மற்றும் துன்பத்திலிருந்து நம்மை விடுவிக்கும் அனைத்திலும் நிறைந்துள்ளது.

அவளை வணங்குவது ஒருவருக்கு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், மனது தடைகளைக் அழிக்கவும் உதவுகின்றன என்று நம்பப்படுகிறது.
• அவள் செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியை தரும் தெய்வமாகக் கருதப்படுகிறாள்.
• அவளை தியானிப்பது ஒருவர் தனது உள்ளத்தில் உள்ள ஆற்றல் திறமைகளை வெளிப்படுத்த முடிகின்றது.
• அவள் இரக்கமுள்ளவள், கருணையுள்ளவள். உண்மையான பிரார்த்தனைகளால் மகிழ்ச்சியடையும்போது, அவள் தாராளமான ஆசிகளை வழங்குகிறாள்.
• அவளுடைய அன்பு வழக்கமான உணர்வு வகையைச் சேர்ந்தது அல்ல, ஆனால் மாயை, பற்று மற்றும் துன்பத்திலிருந்து நம்மை விடுவிக்கும் அனைத்திலும் நிறைந்துள்ளது.
• அவளை வழிபடுவது ஒருவர் தனது சுய ஒழுக்கத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும், தனக்குள் ஆத்மார்த்தமாக உள்ள தடைகளை உடைத்துக் கொள்ளவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
• அவள் செழிப்பு மற்றும் வெற்றியின் தெய்வமாகக் கருதப்படுகிறாள், மேலும் சந்ததி வேண்டும் என்பவர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

திரிபுரா பைரவி தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் பைரவி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, துர்கா தேவி நடத்திய போரில் துர்கா தேவி மூலம் பைரவி தேவி தோன்றினாள்.

தச மஹா வித்யாவின் ஐந்தாவது தேவி பைரவி தேவி ஆவாள்; இந்த ஸ்வரூபம் தச மஹா வித்யாவின் மிகவும் பயங்கரமான அம்சங்களில் ஒன்றாகும். அவர் தக்ஷய யாகத்தின் போது தோன்றிய சிவபெருமானின் பயங்கர வடிவமான பைரவரின் மனைவி ஆவாள். பைரவி தேவி ‘திரிபுரத்தை’, அதாவது கோட்டை, நகரம், சிற்றூர் என அனைத்தையும் பாதுகாக்கும் தெய்வம் ஆவாள். திரிபுரா என்பது திரிபுரசுந்தரியின் ஸ்ரீ சக்கரத்தை பாதுகாப்பதை குறிக்கின்றது. சண்டி சப்த சதியில், பைரவி தேவியின் இன்னொரு வெளிப்பாடு கூறப்பட்டு உள்ளது.

ஒருமுறை பிரபஞ்சம் அசுர சக்திகளால் அச்சுறுத்தப்பட்டபோது, துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் சென்று அவளுடைய பாதுகாப்பைக் கோரினார்கள். தேவர்களுடைய பரிதாபமான நிலையைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, அசுரர்களை அழிக்க துர்கா தேவியை தன்னுள் இருந்து படைத்தாள். துர்கா தேவி நடத்திய போரில், அவளுடன் பல மோகினிகள், யோகினிகள் மற்றும் பைரவிகளும் இருந்தனர், அவர்களில் பைரவி தேவியும் ஒருவர். சண்டி என்ற பெயரில் பைரவி இரண்டு பயங்கரமான அசுரர்களான சும்பா மற்றும் நிசும்பா என்பவர்களைக் அழித்தாள். சாமுண்டா என்ற தனது மற்றொரு அவதாரத்தில், பயங்கரமான வடிவத்தை எடுத்து, சண்டா மற்றும் முண்டா என்ற இரண்டு அசுரர்களைக் கொன்று, சாமுண்டேஸ்வரி என்ற பெயரைப் பெற்றாள். அந்த அவதாரத்தில் அவள் வாயிலிருந்து இரத்தம் கசிந்து, கழுதையின் மேல் அமர்ந்தபடி தோன்றினாள்.

பைரவி தேவி இரண்டு வெவ்வேறு வடிவங்கள் மற்றும் தோரணைகளில் காட்டப்படுகிறார். ஒரு உருவத்தில், பைரவி தேவி பார்வதி தேவியைப் போல தோற்றம் உள்ளவராக காட்டப்படுகிறார். அதில் பைரவி தேவி பத்தாயிரம் சூரியர்கள் தோன்றியது போல பிரகாசிக்கிறார்; சக்தி மற்றும் அமைதி இரண்டையும் உள்ளடக்கி ஒரு தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கிறார்; நான்கு கரங்களுடன் காணப்பட, ஒரு கையில் அறிவாற்றலைக் கொடுக்கும் விதத்திலான ஒரு புத்தகத்தையும் மற்றொரு கையில் ஆன்மீக ஒழுக்கத்தைக் குறிக்கும் வகையிலான ஜெப மாலையையும் வைத்திருக்கிறாள்; மற்ற இரண்டு கரங்கள் பயத்தை நீக்கும் மற்றும் வரம் அளிக்கும் சைகைகளைக் காட்டுகின்ற அபய மற்றும் வரத முத்திரையைக் காட்டியபடி உள்ளன. காளி தேவியை போலவே மண்டை ஓடுகளால் ஆன மாலையுடன் காணப்படும் அவள், சிவப்பு ஆடைகளை அணிந்திருக்கிறாள்.

சில சமயங்களில் ஒரு சடலத்தின் மீது அமர்ந்திருக்கும் நிலையில் காணப்படும் அவளுடைய சாந்த ஸ்வரூபத்தில் உள்ள தெய்வீக முகத்தைப் பார்ப்பவர்கள், பிரமிப்பாலும் ஆச்சரியத்தாலும் வியந்து நிற்பார்கள். சில சமயங்களில் அவள் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்க கொண்டு ஒரு தலையில்லாத சடலத்தின் மேல் தகன மைதானத்தில் அமர்ந்திருப்பவளாகவும் காட்டப்படுகிறாள்.

அவள் ஒரு கொடூரமான தாயாக தோற்றம் அளித்தாலும், தன் குழந்தைகள் அனைவரிடமும் நிபந்தனையற்ற அன்பு கொண்டவள், தன் பக்தர்களை பாதுகாக்க எந்த வரம்புக்கும் செல்லக் கூடியவள். அவள் வாழ்க்கையின் மூன்று அம்சங்களின் மீதும் – படைப்பு, பராமரிப்பு மற்றும் அழிவு- கட்டுப்பாட்டைக் கொண்டவளாக உள்ளதாக நம்பப்படுகிறது; ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பவர்கள் அவளுடைய கோபத்தை அடைவார்கள். மற்ற தாந்த்ரீக தெய்வங்களை வழிபடுவது போல பைரவி தேவியை வழிபடுவது பரிந்துரைக்கப் படுவது இல்லை, ஏனெனில் அவளுடைய வழிபாட்டு முறையின் நடைமுறைகள் சிக்கலானவை மற்றும் கடினமானவை ஆகும்.

பைரவ தேவி வழிபாடு என்பது தீய சக்திகளை விரட்டவும், உடல் பலவீனத்தை வெல்லவும், எதிர்மறை சக்திகளை அகற்றவும் மேற் கொள்ளப்படுகிறது.
• திருமணமானவர்களின் உறவுகளில் எந்த சங்கடங்களும் ஏற்படாமல் இருக்கவும், தகுதியான வாழ்க்கைத் துணையை அடைவதற்காகவும், காதல் மற்றும் திருமணத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்யவும் அவள் வணங்கி துதிக்கப்படுகின்றாளாம்.
• அவளுடைய யந்திரத்தை ஆராதித்து சித்தி பெற ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் முறை மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமாம். அப்படி செய்து விட்டால் அவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும்.
• ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்க முயற்சிக்கும் எதிர்மறை சக்திகளை அவள் விரட்டுகிறாள்.
• சாதனா செய்பவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்குத் ஏற்படும் தடைகளை நீக்குவதற்காக அவள் வழிபடப்படுகிறாள்.
• தீய சக்திகளை அகற்றுபவளாக அல்லது ஆன்மீக ஞானம் மற்றும் நல்வாழ்வு இரண்டையும் வழங்கக் கூடியவளாகக் காணப்படுகிறாள்.
• அவள் தந்திர சாதனாவில் ஒரு குறிப்பிடத் தக்க தெய்வம் ஆவார்,

சின்னமஸ்தா தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் சின்னமஸ்தா தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, பார்வதி தேவி, தனது காவல் தேவதைகளின் பசியைத் தீர்க்க தானே சின்னமஸ்தா உருவில் அவதரித்தாள்.

மஹா வித்யாவின் ஆறாவது தேவி சின்னமஸ்தா தேவி ஆவாள். அவளும் பயங்கரமான உருவம் கொண்டவள். அவளது கையில் காணப்படும் வெட்டப்பட்ட தலையில் இருந்து ரத்தம் பீறிட, அதை அவளது தலையும், இரண்டு பெண்களும் குடித்துக் கொண்டு இருக்கும் கோலத்திலும், இன்னொரு கையில் வாழும் ஏந்திய வண்ணம் இருக்க, உடல் மீது மனித கபாலங்கள் கோர்த்த மாலையும், கழுத்தில் பாம்பு மாலையும் அணிந்து கொண்டு, காலின் அடியில் காணப்படும் இருவர் மீது நின்றவண்ணம், காளியின் உருவிலும் காட்சி தருகிறாள். ஆனால் சின்னமஸ்தா தேவி காளி தேவி அல்ல.

அவள் கையில் வெட்டப்பட்ட தலையுடன் காட்சி தரும் உருவம் உள்ளதற்கு சில கதைகள் உள்ளன. முதல் கதையின்படி பார்வதி தேவி தன்னுடைய காவல் தேவதைகளான விஜயா மற்றும் ஜெயாவுடன் நதியில் குளிக்கச் சென்றாள். அப்போது அவளுக்கு காம உணர்வு தோன்றியது. அதைக் கட்டுப்படுத்த முடியாதவள் தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என கரிய நிறம் கொண்டாள். வெகு நேரம் காம உணர்வில் இருந்தவள் தன்னை மறந்து சிவபெருமானுடன் உறவு கொண்டுள்ளது போன்ற சிந்தனையில் இருந்தவள் வெளி வந்தும் தன்னை மறந்து நிர்வாண கோலத்தில் நின்றாள். அவளுடைய காவல் தேவதைகள் நதியில் இருந்து நிர்வாண கோலத்திலேயே வெளிவர, பார்வதி தேவிக்கும் அவர்களுக்கும் பசி ஏற்பட்டது. உண்ண ஒன்றுமே கிடைக்கவில்லை. எனவே அவர்கள் பார்வதி தேவியை நோக்கி பசி, பசி எனக் கதற, அவர்களது நிலையை கண்டவள் தனது தலையையே தன் விரலால் வெட்டிக் கொண்டு அதி இருந்து பீறிட்ட ரத்தத்தை வெட்டப்பட்ட தன் தலையை குடிக்க வைத்து மற்ற இரு தேவதைகளின் வாயிலும் விழ வைத்தாளாம்.

இரண்டாவது கதையின்படி ஒருமுறை தேவர்களை துன்புறுத்திக் கொண்டு இருந்த அசுரனை வதம் செய்தபின் ரத்த வெறி அடங்காமல் அவர்களை சுடுகாடுவரை துரத்தி வந்து அந்த சுடுகாட்டில் மன்மதனும் ரதியும் உறவு கொண்டு படுத்திருந்த இடத்தை அடைந்து, அவர்கள் மீது நிர்வாண கோலத்தில் நின்றபடி நடனமாடிக் கொண்டு அந்த வெறியில் தன் தலையையே வெட்டிக் கொண்டு அதில் இருந்து வெளி வந்த ரத்தத்தை அங்கிருந்த நிர்வாண காவல் தேவதைகள் வாயில் ஊற்றினாளாம். அதன் பின்னால்தான் அவள் கோபம் தணிந்து தன் நிலைக்கு வந்தாளாம்.
மூன்றாவது கதை பிரணதோஷினி தந்திரம் என்ற நூலில் காணப்படுகின்றது. பிரணதோஷினி தந்திரம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் ஜுவானந்த வித்யாசாகர் என்பவரால் தொகுக்கப்பட்டு, 1898-ல் கொல்கத்தாவில் வெளியிடப்பட்ட, ஒரு பழமையான, சக்தி வாய்ந்த இந்து தந்திர நூல் ஆகும். இதில் தந்திரா, தேவி வழிபாடு, சடங்குகள் மற்றும் ஞானம் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள கதையின்படி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவி, தனது இரண்டு உதவியாளர்களான டாகினி மற்றும் வர்னினி என்பவர்களுடன் புனித மந்தாகினி நதியில் குளித்துக் கொண்டிருந்தார். குளித்த பிறகு, பார்வதி தேவிக்கு கடுமையான பசி ஏற்பட்ட, பசியின் வேதனையால் அவரது நிறம் கருப்பாக மாறியது.

பசியால் வாடிய அவரது இரண்டு உதவியாளர்களும் பார்வதி தேவியிடம் உணவு கேட்டனர். சுய தியாகம் மற்றும் இரக்கத்தின் ஒரு செயலில், பார்வதி தேவி தனது கடுமையான வடிவமான சின்னமஸ்தாவாக மாறி, தனது சொந்த தலையை துண்டித்துக் கொண்டார். அவரது கழுத்திலிருந்து மூன்று இரத்த ஓட்டங்கள் பீறிட்டன: ஒரு ரத்த ஓட்டத்தை அவரது இடது கையில் வைத்திருந்த அவரது துண்டிக்கப்பட்ட தலை குடிக்க, மற்ற இரண்டு ரத்த ஓட்டங்களை அவரது உதவியாளர்கள் குடித்து, பசியைத் தணித்துக் கொண்டார்கள். இப்படியாக தன்னுடைய தலையை வெட்டிக் கொண்டு நின்று கொண்டு தந்த யோகினி ரூபமே சின்னமஸ்தா தேவியின் ரூபம் என்பதாகும். சின்னா என்றால் வெட்டப்பட்ட என்பது பொருள். மஸ்தா என்றால் தலை என அர்த்தமாம் .

சின்னமஸ்தா பெரும்பாலும் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவள் ஒரு பயங்கரமான வடிவத்தில், நின்று அல்லது உட்கார்ந்த, நிர்வாணமாக அல்லது குறைந்த பட்ச ஆடையுடன், ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தலையுடனும், மறு கையில் ஒரு வாளை கொண்டும் காட்சி அளிக்கின்றாள். அவள் கழுத்திலிருந்து இரத்தம் பீறிட்டு, அவளது துண்டிக்கப்பட்ட தலை மற்றும் அவளுடைய இரண்டு உதவியாளர்களால் குடிக்கப்படும் ரத்த ஓட்டத்தை உருவாக்குகிறது போல உருவம் காணப்படுகின்றது. பொதுவாக அவரது உருவ வரை படத்தில், அவரது கழுத்திலிருந்து பாய்ந்து வந்த இரத்த ஓட்டத்தை குடித்தவாறு நிர்வாணமாக நின்ற அல்லது அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்பட்டு உள்ள ஜடா முடியுடன் கூடிய இரண்டு பெண் உதவியாளர்கள், நீலம் கலந்த சாம்பல் அல்லது வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றார்கள் இவை உணர்த்துவது என்ன?
• துண்டிக்கப்பட்ட தலை படைப்பு, பாதுகாப்பு மற்றும் அழிவைக் குறிக்கிறது.
• தலை துண்டிக்கப்படுவது மாயை, அறியாமை மற்றும் அகங்காரத்தை அழித்துக் கொள்ளும் நிலையைக் காட்டுகின்றது.
• மூவர் ரத்தத்தைக் குடிப்பது ஒற்றுமையை உணர்ந்து கொள்வதைக் குறிக்கிறது.
• பாயும் இரத்தம் பிரபஞ்சத்தை நிலை நிறுத்தும் உயிர் சக்தியான பிராணனைக் குறிக்கிறது
• நிர்வாண கோலத்தில் நின்றபடி பீறிட்டு வெளி வந்த ரத்தத்தை மற்றவர்களுக்கும் தரும் கோலம் என்பது அவள் கருணை மிக்கவள் என்பதையும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு தேவையானவற்றை அள்ளித் தருபவள் என்பதையும், தன்னை முழுமையாக வேண்டுபவர்களுக்கு கேட்டதை தருபவள் என்பதையும் விளக்கும் தாத்பர்யம் ஆகும்.
• தன்னலமற்ற அன்பு, சுய தியாகம் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றின் அடையாளமாக சின்னமஸ்தா தேவி கருதப்படுகிறார்.
• நிர்வாணம் என்பது ஆசாபாசமற்ற நிலை. பார்வதி தேவியின் ஆன்மா சிவபெருமானை நோக்கியே இருந்தது என்பதினால், ஆண் பெண் உறவுகள் கொண்டு இருந்த நிலையில் அவர்கள் மீது தான் நின்று இருந்தது உடலுக்கும் ஆன்மாவுக்கும் சம்மந்தமே இல்லாத நிர்வாண நிலை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவே ஆகும்.
• சுடுகாட்டில் உள்ள கோலமும் தன்னுடைய ஆத்மாவுக்கு இறப்போ பிறப்போ இல்லாத நிலை என்பதை எடுத்துக் காட்டும் நிலை ஆகும்.
• பக்தர்கள் தங்கள் அகங்காரத்தை வென்று ஆன்மீக விடுதலையை அடைய உதவும் ஒரு தெய்வமாக சின்னமஸ்தாவை பார்க்கின்றார்கள்.

பார்வதி தேவியின் அவதாரமான சின்னமஸ்தா தேவியின் யந்திர ஆராதனையை மிக கவனமாகச் செய்தால் பல நன்மைகளைத் தருவாள்.
• எதிரிகள் மீதான பயம் ஒழியும். வீட்டிலும் தீயவை வராது.
• இந்த தேவியை முறைப்படி வணங்கித் துதிப்போருக்கு வேண்டியதை அவள் தருவதாக நம்பிக்கை உள்ளது.
• வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் விலகும். மன அமைதி கிடைக்கும்,
• எதிரிகள் மீதான பயம் ஒழியும், வீட்டிலும் தீயவை வராது.
• அவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம்.

சின்னமஸ்தா தேவியின் யந்திர ஆராதனையை தக்க குருவிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொண்டும், அவருடைய வழிகாட்டலின்படிதான் செய்ய வேண்டும். தவறான உச்சாடனைகளும், சடங்கு முறைகளும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

சின்னமஸ்தா தேவியின் ஆலயம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உனா எனும் மாவட்டத்தில் உள்ளது. அந்த ஆலயத்தின் பெயர் சிந்த்பூரணி ஆலயம். அந்த ஆலயம் சக்தி பீட ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். ஆலயத்தில் உள்ள தேவியை தலை இல்லாத துர்கா தேவியின் அவதாரமான சின்னமஸ்தா தேவியாகவே வணங்குகின்றார்கள்.

தூமாவதி தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் தூமாவதி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, சதி தேவியின் எரிந்த சாம்பலில் இருந்து எழுந்த புகையிலிருந்து தூமாவதி தேவி தோன்றினாள்.

தச மகா வித்யாவில் ஏழாவது தேவியாக தூமாவதி தேவி உள்ளார். ஞானத்தை வழங்கும் மொத்தமுள்ள பத்து தெய்வங்களில் தூமாவதி தேவியும் ஒருவராக கருதப்படுகிறார். அவர் தாந்த்ரீக மரபுகளுடன் தொடர்புடைய தெய்வங்களில் ஒருவர் ஆகும். பிரபஞ்சம் அழியும் முன்னால் ஏற்படும் பிரளய காலத்தில் அவர் தோன்றுகிறார் என்றும், அதுவரை அவர் பிரபஞ்சம் தோன்றும் முன்னர் உள்ள வெற்று இடத்தில் காணப்படுகின்றார் என்றும் அவரைக் குறித்துக் கூறுகின்றார்கள்.

அவருடைய தோற்றத்தைக் குறித்துக் கூறுவது என்றால் அவர் கருமை நிறத்தவர். சதைகள் சுருங்கிய, கோபமான முக தோற்றம் கொண்ட ஒரு வயதான விதவை போலவும், அருவருப்பான தோற்றத்துடனும், கலைந்த தலை முடியுடனும், அழுக்கான ஆடைகளை அணிந்தவராகவும், பாம்புகளை ஆபரணமாக அணிந்தவராகவும், உலர்ந்த மார்பகங்கள், வளைந்த பற்கள் கொண்டவராகவும் காணப்படுகின்றார். அவர் கையில் ஒரு தானியங்களை புடைக்கும் முறம் காணப்பட அவர் பெரும்பாலும் சுடுகாடுகளுக்கு செல்கிறார். அவளுடைய தெய்வீக வாகனமாக காக்காய் காணப்படுகின்றது. சில உருவப் படங்களில் அவள் நான்கு கைகளுடன் காட்டப்படுகிறாள், மற்றவற்றில் அவள் இரண்டு கைகளுடன் மட்டுமே காணப்படுகிறாள். அவள் நான்கு கைகளுடன் காணப்படுகையில், ஒரு கையில் ஒரு ஈட்டி அல்லது வாள் மற்றும் மண்டை ஓட்டிலான கோப்பையை வைத்திருக்கிறாள். இரண்டாம் கையில் கபாலம் இருக்க, மூன்றாவது கையில் தானியங்களை புடைக்கும் ஒரு முறம் காணப்பட, நான்காவது கைகளின் முத்திரை மூலம் சாதகர்களை ஆசீர்வதிக்கிறாள்.

அவளுடைய பிறப்பை குறித்து இரண்டு கதைகள் கூறப்படுகின்றன. முதல் கதையின்படி, தக்ஷய யாகத்தில் நடைப் பெற்ற சர்ச்சைக்குப் பிறகு, சதி தேவி தன்னை நெருப்பில் எரித்துக் கொண்டாள். நெருப்பு அணைந்து சாம்பலாக மாறியதும், சதி தேவியின் எரிந்த சாம்பலில் இருந்து எழுந்த புகையிலிருந்து தூமாவதியின் வடிவத்தில் ஒரு கோபமான பெண் தேவி தோன்றினாள், சதி தேவியின் சோகமான மற்றும் கோபமான உணர்வுகளுடன் கூடியவளாக இருந்த அவள் ஒரு அசுப உருவில் தோன்றினாள். விதவையைப் போன்ற அசுபமான உருவில் வெளிப்பட்டதும், தனக்கு அதிக அளவிலான பசி உள்ளது என்று கத்திய பிறகு, உண்ண ஏதாவது உள்ளதா என அங்கும் இங்கும் திரும்பிப் பார்த்தாள். ஆனால் கோபத்துடன் சிவபெருமான் மட்டுமே அங்கே நிற்பதைக் கண்டாள். அவர் எதையோ கூறும் முன்னால் தனது பசியைத் தணித்துக் கொள்ள அவரையே தூமாதேவி விழுங்கி விட்டாள். தன்னை அவளது வயிற்றிலிருந்து விடுவிக்கும்படி சிவபெருமான் கெஞ்சிய போது, அவள் அவரை விடுவிக்க, சிவபெருமானும் உயிர் பிழைத்தார். சிவபெருமான் அவள் வயிற்றில் இருந்து வெளியே வந்தவுடன், அவளை ஒரு விதவையாகவே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற சாபத்தைத் தந்தார்.

கி.பி 1821 ஆம் ஆண்டு ஸ்ரீ ராமதோஷன் பட்டாச்சார்யாவால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் பண்டைய இந்து புராண நூலான பிரணதோஷினி தந்திரம் என்பதில் குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டிற்கான தாந்த்ரீக சடங்குகள், நடைமுறைகள், சாதனங்கள், அவை தொடர்புடைய மந்திரங்கள் ஆகியவை அடங்கும். அந்த நூலில் தூமாவதியின் தோற்றம் குறித்து வேறு ஒரு கதையை கூறி உள்ளார்கள். இமயமலையில் சிவபெருமானுடன் வசித்து வந்திருந்த சிவபெருமானின் முதல் மனைவி சதி தேவி ஒரு நாள் தனக்கு மிகவும் பசிக்கிறது என்று அவரிடம் கூறிவிட்டு, ஏதாவது உணவு தருமாறு கேட்டாள். ஆனால் சிவபெருமானோ அவளை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னபோது, அவள் கோபமடைந்து, தனது பசியை தீர்த்துக் கொள்ள அவரை விழுங்கி விட்டாள். தன்னை அவளது வயிற்றிலிருந்து விடுவிக்கும்படி சிவபெருமான் கெஞ்சிய சமாதானப்படுத்திய பிறகு, அவள் அவரை விடுவித்தாள். சிவன் வெளியே வந்ததும், அவளை ஒரு விதவையின் வடிவில் இருப்பாள் என சாபமிட்டார். அதனால்தான் சதி தேவி தூமாவதி தேவியின் உருவை எடுத்தாள்.

சமஸ்கிருத விளக்கங்களுடன் கூடிய முக்கிய தாந்த்ரீக நூல்களில் ஒன்றான பிரபஞ்சசார சரசங்கிரகம் என்பதை பொதுவாக ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் படைப்பாகவே கூறுவார்கள். அதில் தூமாவதி தேவியின் குணாதிசயங்களையும், தோற்றத்தையும் குறித்து கூறப்பட்டு உள்ளது. அதில் தூமாதேவி குறித்த விளக்கத்தில் கீழ்கண்டவாறு கூறப்பட்டு உள்ளது: அவள் அணிந்திருக்கும் ஆடை தகன மையங்களில் உள்ள சடலங்களிலிருந்து எடுக்கப்பட்டவை; அவள் தொடர்ந்து உணவு மற்றும் ஏதேனும் ஒரு குடிக்கும் பானத்திற்காக ஏங்குகிறாள், அவளுக்கு திருப்தி என்பதே கிடையாது; அவள் எப்போதும் பசியும் தாகமும் கொண்டவள்; அவள் மோதல் அல்லது சண்டைகளை உருவாக்க விரும்புகிறாள், பயத்தைத் தூண்டுபவள்; அவள் எப்போதும் பயங்கரமான தோற்றத்தில் சோகமான மனநிலையில் இருக்கிறாள், அவளுடைய கண்கள் பயங்கரமானவை, அவளுடைய கைகள் நடுங்கிய வண்ணம் காணப்படும்.

அதனால்தான் சில ஆன்மீகவாதிகள் அவளை செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் தெய்வத்திற்கு நேர்மாறாகக் கருதும்படி கட்டாயப்படுத்தி அவளை அவல லட்சுமி என்று அழைத்தனர். அவள் அமர்ந்துள்ளது காகம் இழுக்கும் தெய்வீக வாகனம் என்பதால் அவள் ஒரு அசுப தெய்வமாகவும் கருதப்படுகிறாள். அவள் பெரும்பாலும் காகத்தின் மீது அமர்ந்திருக்கும் நிலையில் சுடுகாடுகளில் காணப்படுவதால், வறுமை, சிதைவு, தனிமை போன்றவற்றுடன் அவளை தொடர்புபடுத்தினர்.

ஆனால் அதே சமயத்தில் மறுபுறம், தாந்த்ரீக மரபுகளில் உள்ளவர்கள் அவளை வரங்களை வழங்குவதில் கருணை காட்டும், அறியாமையை அகற்றும் மற்றும் ஆன்மீக அறிவையும் ஞானத்தையும் அள்ளி வழங்கும் ஒரு தெய்வமாகக் கருதுகின்றனர்.
• அவர்கள் கூற்றின்படி அவளை வணங்கி துதிக்கும் எதிர்மறை சக்திகளிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கிறாள்,
• ஏமாற்றத்தையும் இழப்பையும் கடக்க உதவுகிறாள், வாழ்க்கையின் சவால்களைப் பற்றியும் ஆழமான புரிதலை வழங்குகிறாள்.
• அசுபம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும், மங்களத்தைப் பெற உள்ளத்தில் இருந்து எதிர்மறை எண்ணங்களை எவ்வாறு அகற்றிக் கொள்வது என்பதை புரிந்து கொள்ள அவள் அசுப விஷயங்களை விளக்குகிறாள் என்றெல்லாம் அவளை மேன்மைப் படுத்தி வாதிடுகின்றனர்.
• காமம், கோபம் மற்றும் பேராசை போன்ற உள் எதிரிகளை அழிப்பதின் மூலம் ஞானம், மன சக்தி மற்றும் விடுதலையை பெறலாம் என்ற எண்ணத்தை சாதகர்கள் எண்ணங்களில் ஆழமாக வேரூன்ற வைத்து, மென்மையான ஞான அறிவாற்றலை அவள் வழங்கி வருகின்றாள் என்பதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .

சுபம் மற்றும் அசுபம் இரண்டையும் குறித்த பூரண அறிவு. ஒருவரின் எண்ணங்களில் ஆழமாக பதியாதவரை, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மேன்மையான பாதையை அவர்களால் தீர்மானிக்க முடியாது. எனவேதான் அனைத்து தெய்வங்களும் வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய மேன்மையான பாதைகளை மட்டுமே அவர்களுக்கு எடுத்துக் காட்டினார்கள், அதற்கான வழிமுறைகளையும் காட்டி வந்தார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய மேன்மையான பாதையை தேர்ந்தெடுக்கா விட்டால் ஏற்படும் பின் விளைவுகளை குறித்தும், எதிர்மறை எண்ணங்களினால் விளையும் தீமைகளை எடுத்துக் காட்டவும் ஒரு ஆசான் தேவை என ஆதி பராசக்தி நினைத்ததினால் அதற்காக தூமாதேவியை படைத்தாள். அவள் ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தானே ஏமாற்றங்கள், துக்கங்கள், அவமானம், தோல்வி, இழப்பு, தனிமை மற்றும் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் கொண்டவளாக இருந்தவாறு உண்மையான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும், அப்போதுதான் அவர்கள் நடைமுறையில் அதை பூரணமாக புரிந்து கொள்வார்கள் என்பதற்காக அவள் படைத்தாள்.

எனவே, அவளை வணங்குவது ஒருவரின் வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்தும் என்று கூறுவது தவறு; தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தவர்கள், அந்த நினைவுகளை அழித்துக் கொண்டு புதிய வாழ்க்கையில் நுழைய விரும்பினால், சரியான வழிபாட்டுடன் தூமாதேவியை வணங்கித் துதிப்பதின் மூலம் அவர்கள் நிச்சயமாக பலன் பெறுவார்கள், அப்போது அந்த தேவி அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு உள்ள நெருப்புப் பு கையிலிருந்து தோன்றி அவர்களை வழி நடத்துவாள். அவளுடைய சின்னங்களின் தன்மைகளை பாருங்கள்
• அவளது கையில் உள்ள தானியங்களை படைக்கும் முறம் வாழ்க்கையில் உள்ள குறைபாடுகளை விரட்டி அடித்து, மாயையை அழிப்பதைக் குறிக்கிறது.
• வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு ஒருவர் தேவையற்ற இளமை ஆசைகள் மற்றும் கற்பனைகளிலிருந்து விடுபட வேண்டும், பற்றற்றவராக இருக்க வேண்டும், காமம் மற்றும் உலக ஆசைகளிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையில் ஆன்மீகத்தின் உயர் நிலைகளை அடைய வேண்டும் என்பதைக் கற்பிக்கும் நோக்கம் கொண்டது அவர் காட்டும் விதவையின் தோற்றம். மேலும் அது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தின் பிறகு மீதமுள்ள வாழ்க்கை அமைதியான முறையில் இருக்க வேண்டும், முக்தியை அடையும் நிலையிலான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகின்றது .
• சுடுகாடுகளுக்கு அவள் அடிக்கடி செல்வது, யாராக இருந்தாலும் அவர்களது இறுதி வாழ்க்கை அங்குதான் முடிவடைகின்றது என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையில் அனைவரிடமும் எளிமையாக கருணையோடு பழக வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

பிறந்தது முதல் மரணம் அடையும்வரை நாம் வாழ்க்கை எனும் படகில் பயணிக்கின்றோம். இன்பம், துன்பம், ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட சம்சாரம் எனும் கடலில் அந்தப் படகு பயணித்தாலும், அந்த படகு கடலில் மூழ்கி விடாமல் இருப்பது அதை இயக்கும் படகோட்டியை பொறுத்தே அமையும் என்பதினால் அந்த படகோட்டியான தெய்வத்திடம் முழுமையாக சரணாகதி அடைந்து எளிய முறையில், நன்னெறியுடன் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த படகோட்டி சுடுகாட்டில் இருந்து கொண்டு இறுதி பயணத்தில் நல்ல வழிக்கு அந்த ஆத்மாக்கள் செல்ல துணை புரிவார் என்பதை எடுத்துக் காட்டவே தூமாவதி தேவியும் அங்கே வருகை தருகின்றாள்.

பகலாமுகி தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் பகலாமுகி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, பார்வதி தேவி, மதன் எனும் அசுரனை அழிக்க தானே பகலாமுகி உருவில் அவதரித்தாள்.

தச மகா வித்யாவில் காணப்படும் எட்டாவது தெய்வம் பகலாமுகி தேவியாகும். தாந்த்ரீக சக்திகளைப் பெறவும், ஆத்ம விடுதலை பயணத்தின் உச்ச கட்ட நிலையை எய்தவும் வழிபடப்படும் ஒரு தாந்த்ரீக சக்தி தேவி அவள்.

அவளுடைய வெளிப்பாட்டைப் பற்றி இரண்டு கதைகள் காணப்படுகின்றன. ஒருமுறை மதன் என்ற அசுரன் சிவபெருமானிடமிருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்றான். அதன்படி அவனது வாயில் இருந்து அவன் விரும்பி வெளிப்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் உண்மையாகவே நடந்து விடும். அதை வாக் சித்தி என்று கூறுவார்கள். சித்தி என்றால் நிறைவேறும் என்பது அர்த்தம். ஆகவே அந்த அரிய வரத்தை அவன் தவறாகப் பயன்படுத்தி, தேவர்களை பயமுறுத்தி, துன்புறுத்தலானான். அவனது அச்சுறுத்தலை தடுத்து நிறுத்தவும் முடியாது, அவனை வெல்லவும் முடியாது என்பதை உணர்ந்த தேவர்கள், அவனது சித்திரவதையைத் தாங்க முடியாமல், பார்வதி தேவியிடம் சென்று தம்மை அந்த அசுரனின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தனர். தேவி மகாத்மியம் மற்றும் மார்க்கண்டேய புராணத்தின்படி, தேவர்களுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி உடனடியாக தானே பகலாமுகி வடிவத்தை எடுத்துக் கொண்டவள் திடீரென்று அவன் முன் சென்று நின்று அவன் எதையும் உச்சரிப்பதற்கு முன்பே, அவன் நாக்கை முடக்கி, கண் சிமிட்டும் நேரத்தில் அவனது நாக்கை வெளியில் இழுத்து, அவனால் எதையும் உச்சரிக்க விடாமல் இருக்க வைத்து, அவனை தன் கையில் இருந்த தடி போன்ற ஒரு ஆயுதத்தினால் அடித்துக் கொன்றாள்.

இன்னொரு கதையின்படி, சத்ய யுகத்தில் ஒரு முறை கடலில் பெரும் சீற்றம் ஏற்பட அதனால் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்று விட்டது. அதன் கோர தாண்டவத்தை தன்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லையே என மனம் பதறிய விஷ்ணு பகவான், சௌராஷ்டிராவில் இருந்த ஒரு தனிமையான இடத்திற்கு சென்று பிரபஞ்சம் அழிவில் இருந்து காக்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து கொண்டார். கடுமையான தவத்தின் விளைவாக அவருடைய நாபியில் இருந்து வெளி வந்த ஜோதியும் ஆகாயத்தில் இருந்த நட்ஷத்திரங்களின் ஒளியும் ஒன்று சேர அந்த ஒளி வெள்ளத்தில் இருந்து மஞ்சள் நிற ஆடை உடுத்திய பகலாமுகி தேவி தோன்றினாள். இப்படியாகத் தோன்றிய பகலாமுகி தேவி உடனடியாக விஷ்ணுவிடம் சென்று இந்த உலகை அழிவில் இருந்து காப்பாற்ற பார்வதி தேவி தன்னை தோற்றுவித்து அனுப்பி இருக்கின்றாள் என்றும் ஆகவே கவலைப்பட வேண்டாம் என்று கூறி விட்டு இயற்கையின் சீற்றங்களை நொடிப் பொழுதில் அடக்கி, அவற்றை தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாள். உலகில் கேடு விளைவித்துக் கொண்டு இருந்த தீய சக்திகளை அடக்க பார்வதி தேவி பகலாமுகி தேவியை தன்னுள் இருந்து படைத்து அனுப்பி இருக்கின்றாள் என்ற உண்மையை புரிந்து கொண்டு தனது தவத்தை விஷ்ணு பகவான் முடித்துக் கொண்டார்.

மத்தியப் பிரதேச மானிலத்தில், உஜ்ஜயினி மாவட்டத்தில் உள்ள நல்கெடா என்ற கிராமத்தில் உள்ள பகலாமுகி ஆலயத்தில் கூறப்படும் ஒரு புராணக் கதையின்படி, மகாபாரதப் போரின் போது, பாண்டவ சகோதரர்கள் தங்கள் இழந்த பெருமையை மீண்டும் பெற மந்திர சக்திகளுடன் கூடிய யோக சக்திகளைப் பெற, பல தாந்த்ரீக ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு சென்றனர். அதில் ஒன்றாக அவர்கள் பகலாமுகி தேவியை துதிக்க இங்கு வந்தார்கள்.

காரணம் அவர்களை இந்த ஆலயம் உள்ள இடத்திற்கு சென்று வழிபடுமாறு கிருஷ்ண பகவான் அனுப்பி வைத்து இருந்தார். பாண்டவர்களின் பிரார்த்தனைகளால் மனம் மகிழ்ந்த பகலாமுகி தேவி இங்கு வெளிப்பட்டு பாண்டவ சகோதரர்கள் இழந்து இருந்த பெருமையையும் சக்தியையும் மீட்டெடுக்க அருள் புரிந்தாள். அவர்கள் அங்கு தங்கி இருந்து பகலாமுகி தேவியை வழிபட்ட காலத்தில் அங்கேயே பகலாமுகி தேவிக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அதுவே உலகின் முதல் மற்றும் ஒரே பிரத்யேகமான தாந்த்ரீக ஆலயமாயிற்று.

ஆன்மீக பண்டிதர்களின் கூற்றுப்படி, பகலாமுகி தேவி மூன்று கண்களைக் கொண்டவள்; அவளுக்கு மூன்று கண்கள் உள்ளதினால் அவள் சிவபெருமானின் உருவமாக ஆனால் பெண் வடிவத்தில் காட்சி தருகின்றாள்; மஞ்சள் நிற சம்பக் பூக்கள் சுற்றி மிதக்கும் அமிர்தக் கடலின் நடுவில், தங்க சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தேவி தங்க நிற உருவில் காட்சி தருகின்றாள். அவளுடைய தலை கவசத்தை பிறை சந்திரன் அலங்கரிக்கிறது; அவளுடைய ஒரு கை ஒரு அரக்கனின் நாக்கை இழுத்தபடி உள்ளது. அவள் மஞ்சள் நிற உடையில், மஞ்சள் நிற பூக்களை மட்டுமே அணிந்திருப்பதைக் காட்டுகிறது; அவள் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களும் மஞ்சள் நிறத்தில் உள்ளன. எனவே, பக்தர்களால் அவள் பிதாம்பரி தேவி என்று அழைக்கப்படுகிறாள். அவளுடைய பெயரான பகலாமுகி என்பது கொக்கு முகம் என்ற அர்த்தம் தந்தாலும், அவள் கொக்கு முகம் கொண்ட தெய்வமாகத் தோன்றவில்லை. அவள் அழகான முகத்துடன் தோன்றுகிறாள். ஆலயங்களில் காணப்படும் உருவங்களில், அவள் பார்வதி, லட்சுமி மற்றும் சரஸ்வதி போன்ற தெய்வங்களைக் குறிக்கும் மூன்று முகங்களுடன் காணப்படுகிறாள், இதனால் அவள் அந்த தெய்வங்களின் மூன்று சக்திகளை உள்ளடக்கியவள் என்பதாக கூரப்படுகின்றார்.

எதிரிகளை அடக்கவும், எதிரிகளின் செயல்களை முறியடிக்கவும், மந்திர சக்திகளைப் பெறவும் தந்திர சாதனங்களை செய்பவர்களும், பிற சாதனாத்விகள் பகலாமுகி தேவிக்கு சடங்குகள் செய்து, மந்திரங்கள் மற்றும் ஜபங்கள் மூலம் பிரார்த்தனை செய்கிறார்கள். அவளை முறையான முறையில் ஆராதனை செய்து வழிபடும்போது, தன் பக்தர்களுக்கு வலிமை, சக்தி மற்றும் நம்பிக்கையை அளிக்கும் தெய்வங்களில் ஒருவள் ஆகிறாள். மேலும், ஆன்மீக பயணத்தில் பயணிப்பவர்களின் அனைத்து வகையான எதிர்மறை சக்திகள் தடைகள் ஆகியவற்றை நீக்குகிறாள். ஒருவருக்கு ஏற்படும் தீய கண் திருஷ்டியை அழிக்கின்றாள்.

பகலாமுகி தேவியை முறையாக வழிபட்டால் :
• பக்தர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகின்றாள், நிதி சிக்கல்களை தீர்க்கின்றாள்
• ஒருவருடனான தேவை அற்ற பகைமை அழிக்கப்படுகிறது; வழக்குகளில் வெற்றி கிடைக்கின்றது மற்றும் ஒருவர் இழந்த நற்பெயரை மீட்டுத் தருகின்றாள்.
• தேவையற்ற அவதூறுகள் எழும்போது அவற்றை நீக்குகின்றாள், சமூக அந்தஸ்து பெற அருள் புரிகிறாள்.
• மன உறுதியை அதிகரிக்க வைத்து சுய கட்டுப்பாட்டிற்கான திறனை வலுப்படுத்துகிறாள்.
• பில்லி மற்றும் சூனியம் போன்ற தீய செயல்களால் ஏற்படும் பயம் மற்றும் பதட்டத்தை நீக்குகிறாள்.

மாதங்கி தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் மாதங்கி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, பார்வதி தேவி, தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ரிஷியான மாதங்கியின் மகள் உருவில் அவதரித்தாள்.

பத்து மகா வித்யா தேவியரில் ஒன்பதாவது பெண் தெய்வம் மாதங்கி தேவி ஆவாள். சரஸ்வதி தேவியை போலவே, பேச்சு, இசை, அறிவு மற்றும் பிற கலைகளுக்கும் அவள் அதிபதி ஆவார். எனவே மாதங்கி தேவி தாந்த்ரீக சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார். ஆதி பராசக்தியின் உக்கிர வடிவமான காளி தேவியைப் போலவே, அவர் மிகவும் ஆக்ரோஷமான தெய்வமாகக் கருதப்படுகின்றார்; அதே போலவேதான் ஆக்ரோஷமான தெய்வமான பகலாமுகி தேவியைப் போலவே அவர் லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவியரின் ஒருங்கிணைந்த வடிவமாகவும் கருதப்படுகிறார். மாதங்கி தேவி மாதங்கேஸ்வரி தேவி, ராஜ மாதங்கி தேவி, ராஜ சியாமளா தேவி, மாதேஸ்வரி தேவி போன்ற பல்வேறு பெயர்களிலும் வணங்கப்படுகிறார்.

தாந்த்ரீக மரபில் அவரை உச்சிஷ்டா-மாதாங்கினி என்று வணங்குகின்றார்கள். அந்த தேவிக்கு தூய்மையற்றதாகக் கருதப்படும் இடது கை அல்லது சுத்தம் செய்யப்படாத கைகளால் பழைய உணவு நெய் வித்தியமாக வழங்கப்படுகிறது, சில தாந்த்ரீக பிரிவுகள் மாதங்கி தேவியை அழுக்கு கைகளால், ஏற்கனவே உண்ட தட்டுகளில் இருந்து மீதமுள்ள உணவைக் நெய் வித்தியமாக கொடுத்து வழிபடுவது ஒரு பொதுவான நடை முறையாக உள்ளது.

கீழ் ஜாதியினர் எனக் கூறப்படும் சண்டாளர்களின் தெய்வமாக அவர் கருதப்படுவதினால் அவளை சண்டாளினி என்று அழைக்கப்பட்டாலும், அவர் ராஜ மாதங்கி தேவியின் வடிவத்தில் இருக்கும்போது , அவர் அற்புதமாக தோற்றத்தில் ஜொலிக்கிறார். நகைகள் அணிந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு கையில் கிளியையும், இரண்டாவது கையில் வீணையையும் ஏந்தியபடி பிரபஞ்சத்தை மயக்கும் வகையிலான இசையை வாசிக்கிறார். மற்ற இரண்டு கைகளில் ஒன்று வீணையையும் இரண்டாவது கை அபய முத்திரையையும் காட்டுகின்றன. அந்த வடிவத்தில் உள்ளபோது அவர் நான்கு கைகளுடன் சித்தரிக்கப்படுகிறார். ஒரு பிறை நிலவு அவரது தலையில் காணப்பட தலை முடி நீண்டு உள்ள அவர் மலர்ந்த தாமரையின் மீது அமர்ந்திருப்பதைக் காணலாம்.

சில உருவப் படங்களில், மாதங்கி தேவி மரகத பச்சை நிறத்தில் நான்கு கைகளுடன் காணப்படுகிறாள். அவற்றில் ஒரு கையில் நாண் கயிறு, இன்னொன்றில் வாள், மூன்றாவதில் அங்குசம் மற்றும் நான்காவதில் கதை பிற ஆயுதத்தையும் வைத்து உள்ளாள். நாண் கயிறு மற்றும் அங்குசம் ஒருவரது அகங்காரத்தை கட்டுப்படுத்தும் சின்னங்களாக காணப்படுகின்றன. கதை மற்றும் வாள் அவளுடைய ஆக்ரோஷமான அம்சங்களைக் குறிக்கின்றன, ஒருவர் மனதில் உள்ள மாயையை அழித்துக் கொள்ள அவள் தயாராக உள்ளாள்.

வேறு சில உருவப்படங்களில், லலிதா திரிபுரசுந்தரி அல்லது தேவி மதுரை மீனாட்சி அம்மன் போன்ற தோற்றங்களில் காணப்படும் அவள் தனது கைகளில் அங்குசம், நாண் கயிறு, வீணை, கரும்பு, கிளிகள், புத்தகம் ஆகியவற்றை ஏந்தியபடி ஆறு கைகளுடன் காணப்படுகிறாள். வீணையின் இசை கேட்பவரை மயக்கும், மற்றும் ஆன்மீக உணர்வை தட்டி எழுப்பும் திறனைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

குப்ஜிகா உபநிஷத் என்ற நூலில் குப்ஜிகா என்ற பெயரிலேயே உள்ள தாந்த்ரீக தெய்வத்துடன் தொடர்ப்பு உள்ள தெய்வமாக மாதங்கி தேவியை குறிப்பிட்டு, அவளை நீல நிற ஆடைகள் அணிந்தவராக, வாசனை திரவியங்கள் மற்றும் ஆபரணங்களுடன் கூடியவளாக, நீல நிற கிளிகளை போன்ற தெய்வமாகவும் காட்டி உள்ளார்கள், மேலும் அவள் நான்கு கைகளிலும் நான்கு வேதங்களை கொண்டவளாகவும் காட்டி உள்ளார்கள். பல ஆன்மீகவாதிகள் மாதங்கி தேவியை வேட்டைக்காரர் மற்றும் பழங்குடியினரின் தெய்வம் என்றும் கூறுகிறார்கள்.

மாதங்கி தேவியுடன் தொடர்புடைய பல புராணக் கதைகள் உள்ளன. ஒரு காலத்தில், ஒருமுறை விஷ்ணு, லட்சுமி, சிவன் மற்றும் பார்வதி தேவி போன்ற நான்கு பேர்களும் உணவு உட் கொண்டிருந்தனர். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களின் கைகளில் இருந்து சிறிது உணவு தரையில் சிந்தியது. சிந்தப்பட்ட உணவில் இருந்து ஒரு அழகான பெண் எழுந்தாள், அவர்கள் உன்னத பின் மிச்சம் இருந்த உணவைக் கேட்டார். நான்கு தெய்வங்களும் தங்கள் உண்ட பின்னர் மிச்சம் இருந்த உணவை அவளுக்கு பிரசாதமாகக் கொடுத்து விட்டு, அவளை ஒரு தெய்வமாக மாற ஆசீர்வதித்தனர், அவள் உடனடியாக மாதங்கி தேவியின் வடிவத்தைப் பெற்றாள்.

நாட்டுப்புறக் கதையாகக் கூறப்படும் இரண்டாவது கதையில், மாதங்கி தேவி சிவனின் சகோதரி என்றும் அவள் எப்போதும் தூய்மை மற்றும் மாசற்ற இடங்களை விரும்புவது இல்லை என்றும், அவற்றை அவள் வெறுப்பவன் என்றும் கூறுகின்றது. ஒரு நாள் பார்வதி தேவியுடன் அவளுக்கு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, மாதங்கி தேவி சிவபெருமான் மீது தேவை இன்றி குறை .கூறியபோது, பார்வதி தேவி எரிச்சலடைந்து அவளை ஒரு கீழ் ஜாதியை சேர்ந்த பெண்ணாக பிறக்க சாபமிட்டாள். அவளுடைய சாபத்தினால் வருத்தப்பட்ட அவள் தன் சகோதரனை அணுகியபோது, அவள் ஒரு கீழ் ஜாதியை சேர்ந்த பெண்ணாக பிறந்தாலும், அனைத்து ஜாதியினராலும் மரியாதையுடன் வணங்கப்படும் தெய்வமாக இருப்பாள் என்று கூறி அவளை ஆசீர்வதித்தார். நேபாளத்தில் அவள் மிகவும் பெரிய அளவில் மதிக்கப்படும் தெய்வமாக உள்ளார்.

அவள் தோன்றிய மூன்றாவது கதை இது. ஒருமுறை சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி தன்னுடைய தந்தையின் வீட்டுக்குச் செல்ல விரும்பினாள். அவள் தன்னுடன் வருமாறு சிவனையும் அழைத்தாள். ஆனால் அவரோ அவளை முதலில் போகச் சொல்லி விட்டு, திரும்ப வரும்போது தான் வந்து அழைத்து வருவதாகக் கூறினார். அவளும் தந்தையின் வீட்டுக்குச் சென்று விட்டாள்.

சிவபெருமானினால் அவளைப் பிரிந்து அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் என்ன செய்கிறாள் எனப் பார்க்க ஆசைப்பட்டு ஒரு வியாபாரி உருவில் மாமனார் வீட்டுக்குச் சென்றார். அவரிடம் பொருட்களை வாங்கிய பார்வதி தேவியிடம் பணத்திற்குப் பதிலாக அவளே ஒருநாள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கேட்டார். பார்வதி அதைக் கேட்டு கோபமுற்று அவரை சபிக்க நினைத்தாள். ஆனால் அவளது உள் உணர்வு அவளை தடுத்து நிறுத்தியது, அவளையே அழைக்கும் தைரியம் சிவபெருமானை தவிர வேறு யாருக்கும் கிடையாது எனவும், வந்துள்ளது சிவ பெருமானாகவே இருக்க வேண்டும் எனவும் உள்ளுணர்வு கூறியது. அவளும் அதை வெளிக் காட்டாமல் சரி ஒரு நாள் வருகிறேன் எனக் கூறி அவரை அனுப்பி விட்டாள்.

பின் ஒரு நாள் தன்னை ஒரு சண்டாளி போல (தாழ்ந்த குலத்தவள்) மாற்றிக் கொண்டு அவரைக் காணச் சென்றாள். அற்புதமான பாடல்களைப் பாடி ஆடியவள் இனிய கீதமும் இசைத்தாள். அவளைக் கண்டதும் அவளை அடையாளம் கண்டு கொண்ட சிவனோ, அதை வெளிக் காட்டாமல் அவளை யார் அவள் எனக் கேட்க அவளும் தான் சண்டாள குலத்தை சேர்ந்தவள் எனப் பொய்யாகக் கூறி அவரை சோதிக்க விரும்பினாள். அவரும் அப்படியானால் சரி, நானும் சண்டாள குலத்தை சேர்ந்தவன்தான் என்று கூறிவிட்டு அவளைக் கட்டி அணைத்து அவளை தான் புரிந்து கொண்டதை வெளிப்படுத்தினார். ஆகவே தன்னிடம் வந்து தன்னை சண்டாளி என தன்னைக் காட்டியதினால் அந்த அவதாரமும் அவளுக்கு பெருமை தரும் எனக் கூறி அவள் தாழ்ந்த ஜாதியை சேர்ந்த ரிஷியான மாதங்கியின் மகளாகப் பிறந்து தன்னை மணக்க வேண்டும் என அருள் புரிய அவள் மாதங்கி என பெயர் பெற்றாள். இப்படியாக தாழ்ந்த குலத்திற்கும் தானே தெய்வம் என்பதை நிரூபித்து சிவபெருமான் பெருமையை அளித்தார்.

பார்வதியை சண்டாளியான மாதங்கி ரூபத்தில் வணங்கும் தாத்பர்யம் என்ன என்றால், மனிதப் பிறவிகள் அனைவரும் இறைவனுக்கு ஒன்றுதான். அங்கு மேல் ஜாதி என்பதோ கீழ் ஜாதி என்ற பேதமோ கிடையாது. இறைவன் அனைவரிடமும் உள்ளார் என்பதை உணர்த்துவதே அந்த அவதாரம்.

மாதங்கி தேவி ஆன்மீகத்தில் உச்ச கட்ட நிலையான ஆத்ம விடுதலையை நாடுபவர்களுக்கு தேவையான ஞானத்தை வழங்குகிறாள்.
• இசை, ஞானம், அறிவாற்றல் மற்றும் பிற நுண்கலைகளுக்கான ஆற்றலைத் தரும் அதிபதியாக இருக்கின்றாள்.
• இசை, நடனம் மற்றும் கவிதை உள்ளிட்ட பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கவும், படைப்பாற்றல், பேச்சுத் திறன்களில் சிறந்து விளங்கவும் மற்றும் மறைந்து கிடைக்கும் ஒருவரது ஆற்றல் வெளிப்படவும் அவளது வழிபாடு உதவுகின்றது.
• 64 வகையான கலைகளுக்கு அவள் அதிபதி தெய்வமாக கருதப்படுவதால், அந்த ஆற்றலை தம்மிடம் வேண்டுபவர்களுக்கு அவள் தருகின்றாள்.
• எப்போதும் தனது பக்தர்களின் உண்மையான பக்தியை ஏற்றுக் கொண்டு, எதிர்மறை ஆற்றல்கள், திருமண முரண்பாடு, மோசமான படிப்பு, தொழில் இழப்பு, நினைவாற்றல் இழப்பு, திணறல் போன்ற பல தடைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறாள்.
• மாதங்கி தேவி ஆன்மீக பரிணாமம், ஆத்ம விடுதலை மற்றும் சுயஉணர்தலுடன் தொடர்புடையவர், எனவே பெரும்பாலும் சாதகர்கள் மற்றும் தாந்த்ரீக நடைமுறைகளில் இருப்பவர்களால் அவர் வணங்கப்படுகிறார்.
• அவளை பிரார்த்தனை செய்பவர்கள் தீய கண், சூனியம் மற்றும் எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

கமலா தேவி

பார்வதி தேவியின் நிழல் வடிவத்தில் மாதங்கி தேவி சிவபெருமானைப் பயமுறுத்துவதற்காக வெளிப்பட்டாலும், பின்னர் அதே வடிவத்தையும் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொண்டு, பார்வதி தேவி மூலம் வெளிப்பட்டாள்.

தச மகா வித்யாவில் பத்தாவது தெய்வமாக உள்ளவரே கமலாம்பிகை தேவியாகும். கமல் என்றால் தாமரை என்று அர்த்தம் தருவதினால், தாமரை மலரில் அமர்ந்திருப்பவர் கமலாம்பிகை தேவி என்றும் அழைக்கப்படுகிறார். பல அம்சங்களில் அவள் லட்சுமி தேவியை ஒத்திருக்கிறாள் என்றாலும் அவள் லட்சுமி தேவி அல்ல. கமலாம்பிகை தேவிக்கும் லட்சுமி தேவிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், லட்சுமி தேவி தனது கையிலிருந்து பணத்தை கொட்டிக் காட்டுகிறார், ஆனால் கமலாம்பிகை தேவி அப்படிச் செய்வதில்லை. கமலாம்பிகை தேவியின் கண்கள் தாமரை போலத் காட்சி அளிக்கின்றன என்றும், அவள் புன்னகைக்கும்போது அவளுடைய முகம் பூக்கும் தாமரை போலத் தோன்றுகின்றது என்றும், தாமரை மலரில் அமர்ந்திருப்பதால் அவளுடைய ஒட்டு மொத்த தோற்றம் பூக்கும் தாமரை போல கருணை மற்றும் அழகுடன் இருப்பதாகவும் அவரை தியானிக்கும் சாதனாத்விகள் கூறுகிறார்கள். தக்ஷய யாகத்தின் போது சிவபெருமானை பயமுறுத்துவதற்காக பார்வதி தேவியின் ஆக்ரோஷமான வடிவமாக அவள் வெளிப்பட்டாலும், அவள் மிகவும் அமைதியான தெய்வம் ஆவாள். அவள் ஆதி பராசக்தியின் சக்தி வாய்ந்த அம்சம் ஆவார், மிகவும் அடக்கமாக அமர்ந்து உள்ள லட்சுமி தேவியைப் போன்று இல்லாமல், தம்மை வேண்டுபவர்களின் உலக ரீதியான ஆசைகளை நிறைவேற்றித் தருவதிலும், ஆன்மீகவாதிகள் வேண்டும் ஆன்மீக மேன்மையை தருவதிலும் அதிக கவனம் செலுத்துகிறாள்; மேலும் சாதனாத்விகள் விரும்பும் ஆத்ம செல்வமான பேரானந்த நிலையையும், ஆத்ம விடுதலையையும் தேடும் தாந்த்ரீக நடைமுறைகளுக்கு அவள் முக்கியமான தெய்வம் ஆவாள்.

அவள் எப்படி தோன்றினாள் என்பதைக் குறித்து அதிகம் தெரியவில்லை, ஆனால் அவள் தக்ஷ்ய யாகத்தின்போது, தனது தந்தை நடத்திய யாகத்திற்கு செல்ல சிவபெருமான் மறுத்தபோது அவரை பயமுறுத்தவே அவள் பார்வதியின் தேவியால் வெளிப்பட்டாள் என்ற அளவில் மட்டுமே செய்திகள் காணப்படுகின்றன.

அவளை வழிபடுபவர்கள் மங்களமான வாழ்க்கை, சக்தி, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் உச்ச நிலையிலான அமைதியைப் பெறுகிறார்கள்;
அவள் ஒருவரது வாழ்க்கையில் செழிப்பு, ஆன்மீக எண்ண வளர்ச்சி, செல்வம், அதிர்ஷ்டம், மழலை செல்வம் மற்றும் அச்சமின்மையை வழங்குகிறாள்.
• தாந்த்ரீக லட்சுமியின் வடிவத்தில், தன்னை வழிபடும் சாதனாத்விகளுக்கு அவர்கள் விரும்பும் ஆன்மீகப் பாதையில் நடக்க அதாவது இறுதி விடுதலை மற்றும் உலக பிணைப்புகளிலிருந்து விடுதலை பெறுதல் போன்ற மேலான ஆன்மீக சக்தியையும் மன வலிமையையும் அளிக்கிறாள்.
• தூய்மையை குறிக்கும் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பதால், அவள் உள்ள இடம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் செழிப்பு, குடும்ப நல்வாழ்வு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்திற்காக அவள் வணங்கப்படுகிறாள்.
• அவள் ஒரு மென்மையான தெய்வம்; அவளே தொடக்கமும் முடிவும் ஆவாள்.

உருவ ரீதியாக அவள் தங்க நிறத்தில் பிரகாசிப்பதாகவும், நான்கு கைகளுடனும் சித்தரிக்கப்படுகிறாள்; அவற்றில் இரண்டாக வரத முத்திரை மூலம் வரங்களை வழங்குவதையும், அபய முத்திரை மூலம் பயத்தை நீக்குவதையும் காட்டுகின்றன, மற்ற இரண்டு கைகளில் தாமரை மலர் உள்ளது – அவளிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கு – வளமை – செல்வம் மற்றும் உணவை தருகின்றாள் .

அவளுடைய நான்கு கைகளும் படைப்பின் நான்கு திசைகளைக் குறிக்கின்றன. பொதுவாக, அவள் அமிர்தக் கடலில் ஒரு தாமரை மலரின் மீது அமர்ந்திருப்பாள், அவள் பக்கத்தில் நிற்கும் இரண்டு அல்லது நான்கு யானைகள், அவளை குளிர்ச்சியான மன நிலையில் வைத்திருக்க அவ்வப்போது அவள் மீது அமிர்த துளிகளை தூவிக் கொண்டே உள்ளன. பல நகைகள் அவள் உடலை அலங்கரிக்கின்றன, தாமரையின் நிறத்தை ஒத்த சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற ஆடையை அவள் அணிய விரும்புகிறாள். நான்கு யானைகளும் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) ஆகிய நான்கு முக்கிய மனித குறிக்கோள்களான தர்மம் எனும் கடமை, நீதி, சரியான வழி; அர்த்தம் எனும் செல்வம், பொருள் ஈட்டுதல்; காமம் எனும் ஆசைகள், இன்பம் மற்றும் மோட்சம் எனும் பிறப்பு-இறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை இவற்றை தருகின்றன. இவை நான்குமே ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளவை ஆகும்.