இது ஒரு புராணக் கதை- 4
குபேரன் செல்வத்தின்
அதிபதியான கதை
சாந்திப்பிரியா
புலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் ராவணன், மற்றவர் குபேரன். அசுரரானாலும் குபேரனுக்கு இருந்த நல்ல குணத்தைக் கண்ட தேவர்கள் அவரை தம்முள் ஒருவராக இருக்க கடலில் வந்து வாசிக்குமாறும், அனைத்து நதிகளும், நீர் நிலைகளும் அவரை வணங்கி வழிபடும் எனவும் கூற அவரும் அங்கு சென்றார். ஆகவே அந்த கடலுக்குள் இருந்த செல்வத்தினால் அவர் பல செல்வங்களைப் பெற்றார்.
 ஆனால் நதிகளும் கடலும் மட்டுமே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டன.  ஆகவே அதை மாற்றி அனைவரும் தம்மை வணங்க வேண்டும் என விரும்பிய  குபேரன் சுமார் பத்தாயிரம் வருடங்கள்  கடலுக்குள் தனது தலையை மட்டும் முழுக வைத்துக் கொண்டு  தலைகீழாக  நின்று கொண்டு பிருமாவை வேண்டி தவம் இருந்தார். அத்தனை கடுமையான தவம் செய்தும் பிரும்மா அவருக்கு அருள் புரியவில்லை. ஆகவே ஒற்றைக் காலில் நின்றுகொண்டு பல நூற்றாண்டுகள் தவம் இருக்க அவருடைய கடுமையான தவத்தை மெச்சிய  பிரும்மா அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க குபேரனும் தான் செல்வங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்றார். அதைக் கேட்ட பிரும்மாவும் அனைத்து லோகங்களிலும்  உள்ள அனைத்து செல்வங்களையும் கண்காணித்து  அதை கேட்பவர்களுக்கு வழங்கும் அதிபதியாக அருள் புரிந்தார்.
சில நாடுகளில் குபேரனை சிரிக்கும்  புத்தர் 
என  வணங்குகிறார்கள் 
எவருக்கு செல்வம் தேவையோ அவர்கள அவரை வழிபட வேண்டும் என நியதியை வைத்தார் . அது முதல் குபேரன் செல்வங்களின் அதிபதியானார்.
வெளிநாட்டு  குபேரன்  சிரித்தபடி  தன் 
பரிவாரங்களுடன் காட்சி அளிக்கிறார்
அவர் ஒருமுறை சிவனின் மடியில் அமர்ந்து இருந்த பார்வதியின் அழகைக் கண்டு பொறாமை கொண்டார். அதனால்  கோபமுட்ற  பார்வதி அவருடைய ஒரு கண்ணை குருடாக்கினாள் . ஆனால் அவர் தவறை உணர்ந்து அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்டதினால் மீண்டும் கண் பார்வை தந்தாலும் அவருடைய கண்கள் எப்போதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எனவும், அது அவர் செய்த தவறை அவருக்கு சுட்டிக் கட்டிக் கொண்டே இருக்கும் வகையில் அமைந்து இருக்கும் என்றாள். ஆகவே குபேரனுடைய கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறுவார்கள்.