சாந்திப்பிரியா
–காப்பு–
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த
உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன்
என்னவிங்கு சொல்வதுவோ எப்படித்தான் பாடிடவோ
என்னருமைத் தேவியிவள் செய்திருந்த அற்புதத்தை
அறியாதான் பாட வந்தேன் அம்மை திருக்கதையை
தெரியாதான் பாட வந்தேன் தேவி திருக்கதையை
குற்றமிங்கு கொள்ளாமல் குணம் மட்டும் கொண்டிருக்க
ஏற்றியும்மை வேண்டுகிறேன் கணபதியின் துணைகொண்டு
ஆனைமுகத்தோனை அகிலமெலாம் காப்பவனை
பானை வயிற்றோனை பக்தர்களைக் காப்பவனை
மூஷிகத்தில் வீற்றிருந்து மோனநிலை அருள்வோனை
வந்தித்துத் தொடங்கிடுவேன் கலைவாணி அருள்வாயே!
வெண்டாமரை வீற்றிருக்கும் வாணி சரஸ்வதியே
அண்டிவந்த பக்தருக்கு அருள்ஞானம் தருபவளே
சொற்குற்றம் பொருட்குற்றம் ஏதுமிங்கு வாராது
தேவிதிருக்கதையைத் திருத்தமாய் அருளிடம்மா!
குருவுக்கும் குருவாக என்னுள்ளில் இருப்பவனாம்
என்னப்பன் முருகனையும் இக்கணத்தில் துதித்திடுவேன்!
ஏறுமயில் ஏறிவந்து என்னுள்ளம் வீற்றிருப்போன்
ஆறுமுகசுவாமி நின்றன் அடிபணிந்து தொடங்குகிறேன்!
பாடலிலே பழுதின்றிப் பத்திரமாய்க் காத்திடுவாய்
நாடிவரும் என் நாவில் நல்ல தமிழ் தந்திடுவாய்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
கதை பிறந்த கதை!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
முதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர்
இதைக் கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்து
பறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும்
அவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார்
சுரதனென்னும் ஓரரசன் தன்சுற்றம் செய்ததுரோகத்தால்
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு காட்டை அடைந்தான்
வழியிலொரு வாணிகனைக்கண்டு செல்வதெங்கே எனக்கேட்டான்
தன்மனைவி மக்களாலே தானுமிங்கே துரத்தப்பட்டத்
தன்சோகக் கதையொன்றை சமாதியெனும் அவ்வணிகன்
சொன்னதனைக் கேட்டமன்னன் ஆதரவாய் அவன்தோளில்
கைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான்
‘இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும்
இன்னுமிங்கு என் மனமும் அவர்நலனே நாடிடுதே!
ஏனென்று தெரியவில்லை! எப்படியெனப் புரியவில்லை’
அதுகேட்ட வணிகனுமே ‘எனக்குமிங்கு அந்நிலையே!
எதுவென்றுஆராய என்னாலும் முடியவில்லை’ என்றான்
மது-கைடப வதம்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
ஆதியிலே பரந்தாமன் ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்தான்
ஆதிசேஷன் படுக்கையிலே அமைதியாகத் துயிலிருந்தான்
பாற்கடலில் பள்ளிகொண்டப் பரந்தாமன் துயிலிருந்தான்
அன்னைபரா சக்தியவள் அருட்செயலால் துயிலிருந்தான்
அகிலமெல்லாம் ஆளுபவள் ஆணையினால் துயிலிருந்தான்
அண்டமெலாம் காப்பவளின் அரவணைப்பில் துயிலிருந்தான்
யோகத்துயில் ஆழ்ந்தவனின் லீலைகளும் துயின்றனவே
துயிலிருந்தவன் செவியினின்று பிறந்திட்டார் இருவரக்கர்
மதுஎன்னும் ஓர்அரக்கன் கைடபன்என்னும் மறுஅரக்கன்
திருமாலின் தன்னினின்று தோன்றியதால் கொண்டிட்டார்
தான் என்னும் அகங்காரம் தமதென்ற மமகாரம்
அகங்காரம் தலைக்கேற ஏறிட்டார் தம் பார்வை
நாபியின் கமலத்தில் தானாக முளைத்திட்ட
பிரமனின் உருமீது பட்டதவர் பார்வையங்கு
படைப்பினைப் பிறப்பிக்கப் பிரமனவன் முனைகின்ற
நேரத்தில் மதுகைடபர் தொந்தரவு செய்திட்டார்
தன்தொழிலைச் செய்யவிடாது தடுக்கின்ற அரக்கர்களைத்
தன்னால் இயன்றவரை தடுத்துக் களைத்திட்டார்
இனிமேலும் படைப்பிதனைச் செய்திடலும் ஆகாது
எனவுணர்ந்த பிரமனவன் திகைத்திட்டார், விழித்திட்டார்
நடப்பதெல்லாம் நாயகியின் லீலையெனப் புரிந்திட்ட
பிரமனவன் தேவியவள் திக்கைநோக்கித் துதித்திட்டார்
என்பணியை யான் செய்ய எனக்கிங்கே உதவிடுக
எனச்சொல்லிப் பலவாறு துதிகளினால் வேண்டிட்டார்
விஷ்ணுமாயா மனமகிழ்ந்தாள் அப்படியே எனவென்றாள்
திருமாலின் துயில்விட்டுத் தான்நீங்கிச் சென்றிட்டாள்
துயில்கலைந்த திருமாலும் தேவிதனை வணங்கிவிட்டு
தானெழும்பிச் சென்றிட்டார் அரக்கர்வதம் செய்திட்டார்
மதுகைடப அரக்கருடன் ஆயிரமாண்டு போர்புரிந்து
அரக்கர்தமை அழித்திட்டார் படைப்பினையே தொடரவைத்தார்
‘தமஸ்’என்னும் மிதகுணத்தை அரக்கரிவர் கொண்டதனால்
தானுமந்த குணம்கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்!
முதலாம் கதையிதுவே! முழுதுமாகச் சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
முதலாம் கதை முற்றிற்று!
மஹிஷாஸுர வதம்
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
மஹிஷன் என்னும் ஓர்அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான்
தனக்கெனவே பல உருவம் கொண்டுவந்து பாழ்செய்தான்
அனைத்திலும் முதன்மையானது அவன் கொண்ட எருமை வடிவம்
அனைவரும் நடுங்கிடும் கொடியதோர் பேருருவம்
மனிதரையும் தேவரையும் தனதடிமையாய்க் கொண்டான்
தனை எதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கி விட்டான்
இந்திரனும் பயந்தொளிந்தான் தேவருமே மயங்கி நின்றார்
அண்டபகிரண்டமெலாம் நடுங்கிடவே அவன் நடந்தான்
இது வரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை
எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் வாழ்ந்தான்
முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார்
அடைக்கலமே நீயென்று அவரடியில் தாள் பணிந்தார்
அசுர உடல், எருமைத்தலை, குத்தி விடும் கொம்பிரண்டு
எவராலும் வெல்லவொண்ணா வரம் பெற்ற இறுமாப்பு
அதிகாரம் தலைக்கேற புரிந்திட்டான் அட்டகாசம்
மஹிஷன்பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்
தனி வரத்தின் மகிமையதால் மஹிஷனுமே பலம் பெற்றான்
இவ்வரத்தை அழித்திடவே தம்மால் முடியாதனவே
தம்முடைய சக்தியெலாம் ஒன்றாகச் சேர்த்தளித்துப்
பிரமன், திருமால் ஆதிசிவன் மூவருமே பணிந்திட்டார்
அன்னையவள் அடிபணிந்து அவரிடமே சமர்ப்பித்தார்
தானளித்த சக்தியெலாம் மீண்டுமங்கே தான் கொண்டு
சக்தியவள் கிளர்ந்தெழுந்தாள் தீதழிக்க மனம் கொண்டாள்
மஹிஷாசுர மர்த்தினியாய் அவதாரம் செய்திட்டாள்
சிங்கத்தை வாகனமாய் சக்தியவள் கொண்டிருந்து
மஹிஷனுடன் போரிடவேப் பலகைகள் தான் சுமந்தாள்
போரினிலே வேகமதாய்ப் பகைவரையே அழிக்கையிலே
மஹிஷனையும் கொன்றழித்து மனித குலம் காத்திட்டாள்
எருமைக்கிடா தலைவீழ எழுந்ததொரு தீயசக்தி
தன் பலத்தால் அதையழித்துத் தரணியதை வாழ்வித்தாள்
எருமையதன் உருத்தரித்த அசுரனையும் வதைத்திட்ட
அன்னையிவள் பெருங்கருணை சொல்லிடவும் எளிதாமோ!
‘ரஜஸ்’என்னும் துர்க்குணத்தை அன்னையிவள் அழித்திட்டாள்
அனைத்துலகும் வாழ்ந்திடவே அன்னையிவள் அருள் செய்தாள்!
துர்க்கையிவள் மஹிஷாஸுர மர்த்தினியாய் வந்திட்டப்
பெருமையினைப் போற்றிடுவோம்! ஜெயெஜெயெவெனப் பாடிடுவோம்!
இரண்டாம் கதையிதுவே! இன்பமுடன் சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
இரண்டாம் கதை முற்றிற்று.
சும்ப-நிசும்ப வதம்
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
மூன்றாம் முறையாக அன்னையிவள் செய்திட்ட
அற்புதத்தைப் பாடிடுவோம் அவள் பெருமை கூறிடுவோம்
சண்டமுண்டர் எனுமரக்கர் பூதலத்தில் வாழ்ந்திருந்து
கொடுஞ்செயல்கள் செய்துவந்து விண்ணவரை வருத்தினரே
அவர் கொடுமை தாங்காது அலறிட்ட வானவரும்
உமையன்னை பதம் நாடி மலையெங்கும் தேடினரே
இமயத்து மலைகளிலே அலைந்திருந்த உமையன்னை
இவர் பாட்டைக் கேட்டதுமே அடக்கவொண்ணா சீற்றமுற்றாள்
குண்டலினியின் கண்ணினின்று புறப்பட்ட அன்னை சக்தி
காளியென்னும் கோரவுரு கொண்டங்கு வெளி வந்து
சண்டமுண்ட அரக்கர்களை அடியோடு சாய்த்து விட்டு
அசுரர்களின் சிரம் கொய்து பீறிட்ட உதிரம் குடித்து,
சண்டமுண்ட அரக்கர்களின் தலைகொண்டு தேவியவள்
காலடியில் சமர்ப்பித்து சாமுண்டாஎனப் பெயர் பெற்றாள்
இத்தோடு நில்லாது தொடர்ந்திருந்த போரினிலே
ரக்தபீஜன் எனுமரக்கன் மூர்க்கமாகச் சண்டையிட்டான்
இவன் பெற்ற பெருவரமோ எவரையுமே வியப்பிலாழ்த்தும்
தன்னுதிரம் ஒருதுளியும் பூமியிலே விழுமாயின்
அவற்றினின்று மற்றுமொரு ரக்தபீஜன் தோன்றிடுவான்
எனும் வரத்தைப் பெற்றதனால் தனை வெல்ல யாருமில்லை
என்கின்ற தலைக்கனத்தில் தாறுமாறாய்ச் சண்டையிட்டான்
கொடுமையான அரக்கனிவனை வெல்லும் வழி யாதெனவே
தேவியவள் சிந்தித்தாள் காளியெனச் சண்டையிட்டாள்
அகலமான வாயினிலே தொங்குகின்ற நாக்குடனே
அசுரனிவன் மார்பிளந்து உதிரமொரு துளியேனும்
நிலத்தடியில் வீழாமல் நாவெடுத்துக் குடித்திட்டாள்
பிறவரக்கர் தோன்றுவதை தன் மதியால் தடுத்திட்டாள்
ரக்தபீஜ அரக்கனவன் கொடுஞ்செயலை முறித்திட்டாள்
இவர்க்கெல்லாம் அரசனான அண்ணன் தம்பி இருவருண்டு
சும்பன் எனும் ஒருவரக்கன் நிசும்பன் எனும் அவன் தம்பி
இருவருமே இப்போது அன்னையெதிர் தோன்றிட்டார்
நீண்டதொரு போர் நிகழ்த்த அன்னையவள் உளம் கொண்டாள்
தன் சக்தி அனைத்தையுமே பலமடங்காய்ப் பெருக்கியவள்
தனக்குதவி செய்யவென எட்டு சக்தி படைத்திட்டார்
நாராஷ்மி,வைஷ்ணவி,குமாரி, ப்ராஹ்மி, வராஹி, ஐந்த்ரீ
சாமுண்டா எனும்காளி, அம்பிகா என்பதுவே அவர்பெயராம்
மாத்ரிகையர் எண்மருடன் தேவியவள் புடைசூழ
போர்க்களத்தில் நிசும்பனுடன் கோரமான போர்புரிய
பல காலம் போர்புரிந்து நிசும்பனுமே மாண்டொழிந்தான்
எஞ்சி நிற்கும் சும்பனுடன் போர்புரியும் ஆற்றலுக்காய்
தான் படைத்த எண்மரையும் மீண்டும் உள்ளே சேர்த்திருத்தி
தனியளாக தேவியவள் சும்பனுடன் போர் செய்தாள்
கண்டவர்கள் அதிசயிக்க விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க
துர்க்கையவள் செய்த போரில் சும்பவதம் நிகழலாச்சு
கொடு மரக்கன் மாண்டு பட்டான் தேவி சிரம் கொய்திருந்தாள்
விண்ணவரும் மறையவரும் மண்ணவரும் வாழ்த்தி நின்றார்
மூன்றாம் கதையிதுவே! முடிந்தவரை சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
கதை முடிந்த கதை!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
தேவி திருக்கதையைத் தீர்க்கமுடன் சொல்லிவந்த சுமேதசரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பி வைத்தார்
திருக்கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணு மாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி
கண்மூடித் தியானித்து பலகாலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றி நின்று,
அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:
“என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்
அவர் வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக,பரலோக இன்பமெல்லாம்யானளித்து நற்கதியும் நான் தருவேன்!”
என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !
துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இதுவரையில் பாடிவந்தேன்.
படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்
கதை முடிந்த கதை!”
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
தேவி திருக் கதையைத் தீர்க்கமுடன் சொல்லி வந்த சுமேதசரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பி வைத்தார்
திருக் கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணுமாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி
கண் மூடித் தியானித்து பல காலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றி நின்று,
அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:
“என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்
அவர் வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக,பரலோக இன்பமெல்லாம்யானளித்து நற்கதியும் நான் தருவேன் !”
என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !
துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இது வரையில் பாடிவந்தேன்.
படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
“தேவி திருக்கதை” — 7
“கதை சொல்லும் கருத்து”
[பெரியவர்கள் சொல்ல அடியேன் உணர்ந்தது.]
இதுவரையில் மேலெழுந்தவாரியாக “தேவி மஹாத்மியம்” என்னும் அரிய நூல் சொன்ன கதையைப் பார்த்தோம். இதை இப்படியே படிப்பதும் கேட்டதும் மட்டுமே கூட அநேக விசேஷ பலன்களைக் கொடுக்க வல்லது.
எதைச் சொல்லவென இக் கதை சொல்லப்பட்டது?
வெறும் சில அசுரர்களை தேவி எப்படி அழித்துக் கொன்றாள் என்பதையா?
இதையெல்லாம் அறிய, கற்றுத் தேர்ந்த பெரியவர்கள் சொல்லுவது போல, ஒரு தகுந்த குருவின் வழிகாட்டலுடனானத் தேடலும், பயிற்சியும் செய்ய வேண்டும்.
இந்த அற்புதமான கதை சொல்லும் உட்பொருளைப் பெரியவர்கள் சொன்ன வண்ணம் இங்கே அளிக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு சொல்லும் ஆன்றோர், அறிந்தோர் சொல்லிச் சென்றது. என் பணி தொகுத்து அளிப்பது மட்டுமே! அவர்களுக்கெல்லாம் வணக்கம் சொல்லி உரை நடையாகவே இதனைத் தொடங்குகிறேன்!
“மனித வாழ்வின் நோக்கமே ஒரு தேடலை நோக்கித்தான்! சில சமயங்களில் அது அன்றாடத் தேவைகளுக்காகவும், கிட்டாத எட்டாப் பொருள்களுக்காகவும், இருந்தாலும், இவையேல்லாம் கூட ஒரு விடுதலையை நோக்கித்தான் எனப் புரியும். இன்றையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை, நாளையத் தேவைகளை அடைய விரும்பும் விடுதலை என இதை வகைப் படுத்தலாம். இந்த விடுதலை வேட்கை என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால் புலப்படும் உண்மை இதுதான்….. இது ஆத்மாவின் தேடல்! ஆச்சரியமாக இருக்கலாம் இந்த உண்மை! ஆத்மாவுக்கு பிறப்பிலிருந்து விடுதலை எனத்தானே படித்திருக்கிறோம். அது ஏன் இதையெல்லாம் விரும்புகிறது என! ஆனால், கற்றுத் தெளிந்தவர் சொல்வது என்னவென்றால், இது போன்ற எளிய ஆசா பாசங்களினால் அலைக் கழிக்கப்பட்டு, தன்னிலை மறந்த ஆத்மா, இந்த ‘விடுதலை’ என்ற ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘எதிலிருந்து விடுதலை?’ என்னும் பொருளை மறந்து போய்விடுவதாலேயே இது நிகழ்கிறதாம்! இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு, இப்போது ‘தேவி மஹாத்மியம்’ சொல்வது என்னவெனப் பார்க்கலாம்! “தன்னிலை மறந்த ஆத்மா, தன் தேடலை மட்டும் விடாமல் நிகழ்த்திக் கொண்டு, படிப்படியாகத் தன்னிடம் இருக்கும் அழுக்குகளைக் களைந்து “உண்மையான விடுதலை” எது என்பதை அறிய நடத்தும் போராட்டமே,… ஒரு ஒன்பது நாட்களுக்குள் நிகழ்வதாகச் சொல்லப் பட்டிருக்கும் கதையே,….. தேவி மஹாத்மியம்!” இந்தப் போராட்டம் ஒன்றும் ஒரு அலுப்புத் தட்டக்கூடிய போராட்டமல்ல! ஒரு உன்னதமான விடுதலைப் போரை இது ஒக்கும். இதைப் படிக்கின்ற சாதகனுக்கு ஒரு தெளிவைத் தந்து, அவரது எழுச்சியை அதிகப்படுத்தி, அடைய வேண்டிய ‘விடுதலையை’ விரைவாக்கும் உன்னதமே தேவியின் திருக்கதை நமக்கெல்லாம் காட்டுவது! பதின் மூன்று அத்தியாயங்களைக் கொண்ட தேவி மஹாத்மியம் ஒரு மூன்று கதை வடிவில் பிரிக்கப்பட்டுத் தொகுத்தளிக்கப் பட்டிருக்கிறது. பகவத் கீதை, திருக்குறள் போன்ற உண்மை நூல்களும் இதே வகையில் என்பதை உணர்ந்த பெரியோர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். ஆத்மாவின் விடுதலைத் தேடலுக்கான பயணம் மூன்று முக்கிய நிலைகளைத் தண்டிச் செல்லுகிறது. இடையில் இன்னும் பல சின்னச் சின்னத் தடைகள்! இவை அனைத்தையும் முறியடித்து, உண்மைப் பொருளை எப்படி அடைகிறது ஆத்மா என்பதே இதன் மையக் கருத்து எனச் சொல்லலாம். மஹாகாளி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் மூன்று தெய்வங்களின் உதவி, ஆளுமை மூலம் என்னவெல்லாம் ஒரு சாதகனுக்குள் நிகழ்கிறது என்பதை விழைபவர்க்குப் புரிய வைப்பதே இதன் நோக்கம்! தான், தனக்கு என வாழும் ஒரு மனிதன் எப்படி தனது உறவுகளைப் புரிந்து, அவர்களுடன் கூடியிருந்து, குலாவி, பின் ஒவ்வொன்றாய் எப்படி அவர்களும் நிலை அல்லர் எனப் புரிந்து அவற்றினின்று விடுபட்டு, திடீரென, தான் இப்போது எவருக்கும் உறவல்ல; ஆனால், அதே சமயத்தில் இந்த மொத்த உலகமே தன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்னும் பேருண்மையை அறிந்து தானே ஒன்றாகவும், பலவாகவும் இருக்கும் அதிசய அனுபவத்தில் திளைத்து, ஆன்மாவை விடுவிக்கிறான் எனச் சொல்ல வருவதே இதன் மையப் பொருள்!
இதன் முதல் நிலை,
ஆதி சக்தியான விஷ்ணுமாயா
திருமாலை ஆழ்துயிலில் இருந்து எழுப்பி
மது-கைடபர்களை அழிப்பதைச் சொல்கிறது.
இரண்டாம் நிலையில்,
மஹாலக்ஷ்மியாக மாற்றிக் கொண்டு
மகிஷாஸுர வதம் செய்ய விரைகிறது. கூடவே,
சண்ட, முண்ட வதம், ரக்தபீஜ வதம் எனச் சில நிகழ்வுகளும்!
மூன்றாம் நிலையில்,
மஹா சரஸ்வதி
சும்ப-நிசும்ப வதம் நிகழ்த்துகிறாள்!
மூன்று, மூன்று தினங்களாக இது இந்த ஒன்பது
நாட்களிலும் கொண்டாடப் படுகிறது.
இறுதி வெற்றியாக விஜயதசமி,
பத்தாம் நாளன்று!
முதல் கதையின் கருத்து
“மது-கைடப வதம்:”
திருமாலின் காது அழுக்கிலிருந்து மது, கைடபர்
என்னும் அரக்கர் தோன்றியதாகக் கதை சொல்லுகிறது.
நம்மில் இருக்கும் அழுக்குகளிலேயே மோசமான
மலங்கள் காமம், குரோதம் லோபம் என்னும் மும்மலங்களே!
ஆசை, கோபம், சிறுமை இவை மூன்றும் ரஜஸ்
என்னும் குணத்தின் வெளிப்பாடுகள். தவறுகள் செய்யத்
தூண்டி நம்மைப் பாவக் குழிக்கு
அழைத்துச் செல்லும் இவை மூன்றும்!
இந்த மூன்றும் ஆத்மா என்னும் ஒரு மெல்லிய
கண்ணாடியின் மேல் பலமாக தங்களைத்
தீட்டிக் கொண்டு விடுகின்றன.
தானறிந்த பரம்பொருளை மீண்டும் காண முடியா
வண்ணம் இவற்றால் இப்போது ஆன்மா
மறைக்கப் பட்டு விடுகிறது.
இதை அகற்றுவதே சாதகன் செய்ய வேண்டிய முதல் வேலை.
கடினமான பயிற்சி தேவை இதற்கு. இடையில் நிகழும்
பல கடுமையான சோதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிவரும்.
திட மனதுடன் முயன்றால் குருவருளால் இது சித்திக்கும்.
“நம்மிடம் இருக்கும் சோம்பலைத் துறந்து,
‘எழுமின்; விழிமின்’ என விவேகானந்தர் சொன்ன
மந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
நடந்தல் விஷ்ணுமாயை அருள் செய்து நம்மை
இந்த மது-கைடபர்களை அழிக்கத் துணை புரிவாள்.”
இரண்டாம் கதையின் கருத்து
“மஹிஸாஸுர, சண்ட முண்ட, ரக்த பீஜ வதம் :
மேலே சொன்ன மூன்று மலங்களையாவது நம்மால்
அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆனல், கண்ணுக்குத் தெரியாமல் நம்மிடம்
இருக்கும் மலங்கள் தாம் மிகவும் மோசமானவை!
சிரித்துக் கொண்டே கழுத்தறுப்பவர், ஆசை காட்டி
மோசம் செய்பவர், வலிக்காமல் அடிப்பவர், வணங்கிக் கொண்டே கத்தியால்
[ இந்தக் காலத்தில் துப்பாக்கி, வெடிகுண்டு]
குத்துபவர் என இப்படி எத்தனையோ விதங்களில்
இது வெளிப்படும். கிட்டத்தட்ட இப்போது
நிகழ்கின்ற தீவிரவாதத்துடன் ஒப்பிடலாம்.
தம் நிறங்களையும் குணங்களையும் மாற்றிக்
கொண்டே இருப்பார்கள் இவர்கள்!
யாரெனத் தெரிந்தால் தானே அழிக்க முடியும்?
தன்னிடம் இதெல்லாம் இருப்பதையே உணராமல்
இயங்கிக் கொண்டிருப்பார்கள் பெரும்பாலும்.
மகிஷனும் இதைத்தான் செய்கிறான்!
எருமை வடிவில் வருவான்; திடீரென யானை வடிவில்;
தேவி அவனை அழிக்க முற்படுகையில்,
உருமாறி ஒரு காளை வடிவில் என!
இப்படித்தான் நமகு கண்ணுக்குத் தெரியாதா
ஆசைகளும் நம்மை அலைக் கழிக்கின்றன.
இதை விக்ஷேப சக்தி எனச் சொல்வர்கள்.
அலைக் கழிக்கும் ஆசைகள் எனப் பொருள் சொல்லலாம்.
சண்ட முண்டாசுரர்கள் கதையும் இது போலவே!
இடையில் வரும் எண்ணற்ற ஆசைகளின் வடிவங்கள்!
ரக்த பீஜன் நிலை இன்னும் மோசம்!
இவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும்
ஆயிரக்கணக்கான ரக்த பீஜர்கள் தோன்றுவார்கள்!
இப்படித்தான், ஒரு ஆசையில் இருந்து பலவித தீய
எண்ணங்களும், ஆசைகளும் தோன்றி முடிவே
இல்லாமல் நம்மை இங்கும் அங்குமாய்ப்
புரட்டி அடிக்கும். இதன் சுழலில் ஆட்பட்டு,
சாதகன் திணறும் நிலை!
இதையெல்லாம் வெல்ல என்ன வழி!?
நம்மால் மட்டுமே முடியக் கூடிய செயல் அல்ல இது!
நீயே கதி என அன்னையின் பாதத்தைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டு கதறுவதுதான் ஒரே வழி!
அம்மா! என்னைக் காப்பாற்று என அலற வேண்டும்!
‘காதலாகிக் கசிந்து கண்ணீர் ‘மல்கணும்!
‘உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நங்காமங்கள்
மாற்றேலோர்’ எனக் கத்தணும்!
‘நின்னைச் சரணடைந்தேன்’ என அழணும்!
அபயக்குரல் கேட்டு, அன்னை ஓடி வருவாள்!
அண்டியவரைக் காப்பாள்!
கர்ம யோகத்தினால் மட்டுமே மும்மலங்களையும்
அழித்த நாம் இப்போது பக்தி யோகத்தின் மூலம்
அவளைச் சரணடைந்து அவளை
உபாசனை செய்தால், இந்தத் தீய எண்ணங்களும்
நம்மை விட்டு அகலும்.
தமஸை அழித்து, ரஜஸைக் கொன்று அடுத்த
நிலைக்குச் செல்லமுடியும் சாதகனால்!
‘சும்ப-நிசும்ப வதம்’
தமஸ்,[ஆணவம்] ரஜஸ் [கன்மம்] என்னும் இரு
குணங்களையும்,[மலங்களையும்] கர்மயோகம்,
பக்தி யோகத்தின் மூலம் முறியடித்த சாதகன்
இப்போது அமைதியாக ஸத்வ குணத்தில் திளைக்கிறான்.
மூன்று குணங்களிலுமே, இது ஒரு உயரிய நிலை எனப்
பொதுவாகச் சொல்வதுண்டு.
ஆனால், இதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது!
ஆன்மா என்னும் கண்ணாடியை மறைத்த
மலங்களையெல்லாம் தன்னுடைய சாதனையாலும்,
குரு, தெய்வ அருளாலும் விலக்கிய சாதகன்
ஒரு தெளிந்த கண்ணாடியாகத் திகழ்கிறான்.
தனக்கு எதிரே தெரிகின்ற பரம்பொருளின் வெளிச்சத்தைக்
கூடப் பார்க்க முடிகிறது இவனால்!
ஆனால், என்ன பிரயோஜனம்?
இவன் இந்தப் பக்கத்தில் அன்றோ நிற்கிறான்.
கண்ணுக்கு எதிரே ஒரு நல்ல மாம்பழம் தெரிகிறது; அதை
ஒரு கண்ணாடி மறைக்கிறது!
மாம்பழத்தைப் பெற இவன் இப்போது இந்தக் கண்ணாடியையும்
உடைக்க வேண்டும்!
இத்தனை தடைகளைத் தாண்டி வந்து விட்டோமே என்னும்
பெருமிதம் உள்ளில் எழ, எதிரில் தெரியும் பரம்பொருளைக்
கண்ட திருப்தியில்,
இடையில் ஒரு கண்ணாடி தடுக்கிறது என்பதை அறிய
விடாமல் மாயை தடுக்கும் இப்போது!
அண்ட சராசரத்தையும் அடக்கி விட்டோம் என்கிற
பெருமிதமும், தன்னை ஆட்கொள்ள அன்னையே எதிரில்
நிற்கிறாள் எனப் புரியாமல் அவளையே சண்டைக்கு
அழைக்கின்ற அறியாமையும் மாயை வடிவில் மறைத்த கதைதான்
சும்ப நிசும்பர் கதை!
இந்த மாயையை எங்ஙனம் வெல்வது?
கல்விக் கடவுள் மஹா சரஸ்வதி இப்போது உதவிக்கு வருகிறாள்!
மூன்றாம் கதையின் கருத்து
அனைத்துக்கும் உயரிய சக்தியான, அறிவுக்
கடவுள் மஹா சரஸ்வதி
வந்துதான் நல்லறிவு என்னும் பேரொளியால், இந்த
அறியாமை என்னும் மாயையை வெல்லவேண்டும்.
அவளை வேண்டித் துதிக்க வேண்டும்!
அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமும் அல்ல.
முதலில் சொன்ன இரு வழிகளையும்…. விடாமுயற்சி,
உபாசனை…. விடாமல் இன்னும் தீவிரமாகப் பயின்று
அவளைத் தேட வேண்டும்.
தேடினால் கிடைப்பாள்!
இந்தத் தேடலுக்கும், முதல் இருநிலைத் தேடல்களுக்கும்
ஒரு பெருத்த வேறுபாடு இருக்கிறது!
முதல் இரு நிலைகளில் [தமஸ், ரஜஸ்] சாதகன்
தனக்காகத்தான் தேடி நின்றான்.
இப்போது ஸத்வ குணம் உள்ளோங்கி நிற்கும் வேளையில்,
தான் இதில் தனியன் அல்லன்; தன்னுடன் இந்தப்
பிரபஞ்சமே இணைந்திருக்கிறது
என்பதைப் புரிந்த சாதகன் இப்போது அகில உலக
நலனுக்காகவும் இதைத் தேடுகிறான்!
எப்படி ஒரே நூலால் இழைக்கப்பட்ட
ஆடை இருக்கிறதோ
அது போல நாம் எல்லாருமே ஒரே நூலால்
பிணைக்கப் பட்டிருக்கிறோம்
என்பதை உணரும் சாதகன், தன்
அடையாளத்தைத் துறக்கிறான்.
அதனால்தான் யோகிகள் இந்த
உலகத்தையே தமதெனக்
கருதி அன்பு செலுத்துகிறார்கள்!
இறையை எதிரில் காணும் சாதகன்
அந்த இறையில்
இந்த அண்டத்தையே பார்க்கிறான்.
“அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் காட்டிய
விஸ்வரூப தரிசனம் இதுதான்!”
இறை என்பவன் எங்கோ ஒரு மூலையில் கண்ணுக்குத்
தெரியாத இடத்தில் மறைந்து நின்று அருள் செய்கிறான்
என்னும் மாயை அகன்று,
அவன் எங்கும், எல்லா உயிர்களிலும், இடங்களிலும்
வியாபித்து நிறைகிறான்; அவன்
இல்லாத இடமே இல்லை என்னும் பேருண்மை
இப்போது அவனுக்குப் புலப்படுகிறது!
வெல்வது… விடுதலை பெறுவது எளிதாகிறது!
தன் அனைத்து சக்திகளையும் வெளிக் கொணர்ந்து
8 மாத்ரிகையர் துணையுடன் நிசும்பனை வென்ற
அன்னை, பிறகு, அதே சக்திகளை தனக்குள்ளே
இழுத்துக் கொண்டு தனியளாய் சும்பனை வெல்கிறாள்!
சாதகனும் இதை உணரத் தொடங்கி, தன் சக்திகள்
மூலம், சில காட்சிகளை, நிகழ்வுகளை நிகழ்த்தி, பிறகு
அத்தனை சக்திகளையும் தனக்குள்
உள்வாங்கி, தன்னையே வெல்கிறான்!
இனி, இவன் செய்யும் அனைத்துச் செயல்களும்
இறைக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன.
இதுதான் சும்ப- நிசும்ப வதம்!!! …
யோகவழியில் இதனை உணரும் சாதகன், தனது
தமஸ், ரஜஸ், ஸத்வம் என்னும் மூன்று குணங்களையும்
துறந்து இறையை உணர்ந்து அண்டத்துடன்
தன்னை ஒன்றுபடுத்திக் கொள்வதே
தேவி மஹாத்மியம் சொல்லும் கருத்து!
அநேகமாக எல்லாப் புராணங்களுமே இந்த அடிப்படைத்
தத்துவத்தை ஒட்டியே அமைகின்றன என்றால் மிகையில்லை.
தன்னை உணர்ந்தவன், நிகழும் எல்லாச் செயல்களிலும்
இறையைக் காண்கிறான்.
எந்தவொரு அற்பச் செயலும் அற்பமில்லை;
ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது எனும்
உண்மையைப் புரிந்து கொள்கிறான்.
தடை எனப் பொதுவாக நாம் எல்லாரும் கருதும் நிகழ்வுகள்
அவனை வருத்துவதில்லை.
மாறாக அதையும் இறையின் ஒரு லீலையாகவே கொண்டு
அவற்றைக் கண்டு அஞ்சாது முன்னோக்கி நடக்கிறான்.
வழிப்பயணம் செல்கையில் பாதை தவறிய பயணி, ‘அடடா!
தொலைந்து விட்டோமே!’ என அஞ்சுவது போல்
இவன் அஞ்சுவதில்லை.
தலையை உயர்த்திப் பார்க்கிறான்.
மேலே தெரியும் ஆகாயமும், சூரியனும், வீசும்
காற்றும் இவனுக்கு நாம் இங்கு தொலையவில்லை;
நாம் தனியாள் இல்லை எனப் புரிய, ஒரு
புதுத் தெம்புடன் முன்னோக்கிச் செல்கிறான்.
இயற்கை என்னும் இறை சக்தியிடம் இருந்து தான் பிரியாமல்
இணைந்தே இருக்கிறோம் என்னும் உண்மை அளித்த
பலத்தில் தன் பயணத்தைத் தொடர்கிறான்.
மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்னும்
மூன்று தெய்வங்களை வணங்கி, வழிபட்டு, இவர்கள்
மூலம் ஆதி சக்தியுடன் தான் ஒன்றுவதை
உணரும் பயிற்சியே ஒவ்வொரு சாதகனும் செய்ய முயல்வது.
முதல் நிலையில், தன்னைச் சுத்தப் படுத்திக்
கொள்கிறான். தன்னிடம் இருக்கும் மலங்களை
அகற்ற கடினமான பயிற்சிமுறைகளைச் செய்கிறான்.
மஹா காளி உபாசனை மூலம், தன்னைப்
பிணைத்திருக்கும் தடைகளை உடைத்தெறிகிறான்.
இதன் மூலம் ஒரு நல்வாழ்வு தனக்கு வருவதை உணர்கிறான்.
எல்லா சக்திகளையும் அடக்கித் தன் கைக்குள் கொண்டு வந்து,
தனக்கு வேண்டிய எதையும் பெறக்கூடிய சக்திகளை அடைகிறான்.
மலங்களின் ஆளுமையால், தான் ஒரு கைதியாகவும்,
பலமற்றவனாகவும் உணர்ந்த இவன், இப்போது அந்த ‘தமஸ்’
என்னும் சோம்பலை வெற்றி
கொண்டு பெருமை பெறுகிறான்.
ஒரு சொடக்கில் தான் விரும்பும் அனைத்தையும்
பெறக் கூடிய வல்லமை மஹா லக்ஷ்மியின்
அருளால் இவனுக்குக் கிட்டுகிறது.
முதல் நிலையில் நரகமெனத் தெரிந்த உலகம்
இப்போது சொர்க்கமாகத் தெரியத் தொடங்குகிறது இவனுக்கு!
இதனை கொஞ்ச காலம் அனுபவித்த இவனுக்கு, சொர்க்கம்
அல்ல தான் வேண்டுவது எனப் புரியத் துவங்குகிறது!
‘பேருண்மை’ என்னும் உயரிய நிலை தனக்குக் கைவர
வேண்டும் எனப் புரிகிறது… தொடர்ந்து பயிற்சி செய்பவனுக்கு!
ஆம்! உண்மையில், சில சாதகர்கள் இரண்டாம்
நிலையிலேயே தமது தேடலை நிறுத்திவிட்டு,
இயல் வாழ்க்கையில் பயணம் செய்யும்
காட்சியும் நாம் இங்கு பார்க்கிறோம்!
ஆனால், உண்மையான சாதகன் தன் இலக்கை நோக்கிச்
செல்லும் பயணத்தை விடாது தொடர்கிறான்.
பேருண்மை புலப்பட மாயை அகல வேண்டும் எனத் தெளிகிறான்.
மஹா சரஸ்வதியைத் தேடி அலைந்து, அவளைத் துதித்து
இந்தத் தடையையும் அகற்றி, உண்மையான விடுதலை
என்பது என்ன எனப் புரிகிறான்.
நிகழும் அனைத்தையும் அப்படியே பார்க்கக் கற்றுக் கொள்கிறான்.
இன்பம், துன்பம், வளமை, செல்வம் என ஒன்றும் இல்லை
என்பதை நன்கு உணர்கிறான்.
எல்லாம் இழந்த அநுபூதி நிலையில், இந்த
உண்மையுடன் தான் எப்போதுமே பிணைக்கப்பட்டிருந்தோம்;
பிணைக்கப் பட்டிருக்கிறோம்
என்பது புரிந்த ‘தன்நிலை’ அறிகிறான்.
இந்த உண்மையைச் சொல்வதுதான் மந்திரங்களை
உள்ளடக்கிய தேவி மஹாத்மியம், விழைபவர்க்குச் சொல்வது! !!
இதென்ன புதுக்கதை?
“கதை சொல்லும் கருத்து”
இதென்ன புதுக்கதை?
ஸாவர்ணீர் ஸூர்யத நயோ யோ மனு:
கத்யதே அஷ்டம: நிசாமய ததுத்பத்திம்
விஸ்தராத் கததோ மம
‘ர’ என்னும் விதை, பீஜம் அக்னியில் இருந்து பிறக்கிறது.
தந்திர சாஸ்த்திரங்களின் கருத்துப்படி, ‘ரம்’ என்ற சொல் அக்னியின் பீஜ மந்திரம்.
‘ஸா வர்ணி’ என்பதில், ‘வர்ணி’ என்றால் ஒரு கொக்கி.
இப்போது ‘ரம்’ எனும் பீஜமந்திரத்தில் ஒரு கொக்கி சேர்ப்போம்.
‘ரம்’ இப்போது ‘ரீம்’ ஆகிறது.
‘யோ மனு: கத்யதே அஷ்டம:’ = எட்டாவது எழுத்து.
எதனுடைய எட்டாவது எழுத்து?
‘மனு’ என்பது ஒரு வடமொழிச் சொல் [ஸம்ஸ்கிருதச் சொல்]
ஸம்ஸ்கிருதத்தில் எட்டு எழுத்துகள் எவை?
‘ய, ர, ல, வ, ஸ்ய, ஷ, ஸ, ஹ’
இதில் எட்டாவது எழுத்து? ‘ஹ’
இப்போது இந்த வரி இதுவரை சொன்னது என்ன?
‘ஹ’ ”ரம்’ என்னும் இரு எழுத்துகளுடன் தலா ஒரு கொக்கி போட்டுக்கொள் என!
‘ஹ’, ”ரம்”+ கொக்கி= ‘ஹ்ரீம்’ என ஆகிறது!
‘நிசாமய ததுத்பத்திம்’= இதன் பெருமையைக் கேள்!
‘விஸ்தராத் கததோ மம’ = விவரமாக நான் உரைப்பதை
‘ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம: நிசாமய ததுத்பத்திம்’ = ‘ஹ்ரீம்’ என்னும் சொல்லின் பெருமையை நான் விவரமாக இப்போது சொல்வதைக் கேள்!
‘ஹ்ரீம்’ என்பது தேவியின் பீஜம்.
மேலெழுந்தவாரியாக வேறு பொருள் சொன்னாலும்,
“‘ஹ்ரீம்’ என்னும் சொல்லின் பெருமையை நான் விவரமாக இப்போது சொல்வதைக் கேள்!”
இது போலவே அனைத்து மந்திரங்களும் ஒவ்வொரு
ஒவ்வொரு செயலுக்கும் தேவையான மந்திரங்களைக்
எந்தவொரு மனவேதனையின் போதும், அல்லது நாட்டு நடப்புகள்
இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் தவறே எனச் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் தேவி நலம் சூழ்க எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
“ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!
“ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!
***********************************
யாவர்க்கும் அன்னையின் நல்லாசி கிட்டட்டும்!
Miga Arumai. Mikka Nandri Iyya.