விஷ்ணுதத்தரும் தத்தாத்திரேயரும்

சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் விஷ்ணுததன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவர் மிக்க சீலர் . கடவுள் பக்தி மிகுந்தவர். அவருடைய நல்ல நடத்தையைக் கண்ட அனைவரும் அவரிடம் மிக அன்புடன் பழகி வந்தார்கள். அவர் தினமும் பூஜை புனஸ்காரங்களை செய்து முடித்ததும் நைய்வித்தியம் செய்ததில் சிறுது எடுத்துப் போய் அவர் வீட்டின் அருகிலிருந்த புளிய மரத்தடியில் வைத்து விட்டு வருவார். ஏதாவது பிராணிகள் அதை தின்னட்டுமே என்பது அவர் விருப்பம். தினமும் அந்த புளிய மரத்தின் அடியில் வைப்பதை அந்த மரத்தின் மீது இருந்த ஒரு பிசாசு வந்து சாப்பிட்டுவிட்டு சென்றது. அது அந்த அந்தணனுக்கு தெரியாது. அதனால் அந்த பிசாசு அவரைத் தவிர மற்றவர்களை பயமுறுத்திக் கொண்டு தொந்தரவும் செய்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல அந்த பிசாசு அவர் வைத்துச் சென்ற உணவை உண்டதினால் நல்ல குணத்தைப் பெற்றது. மற்றவர்களை தொந்தரவு செய்வதை நிறுத்தியது. அதன் மனதில் இருந்த தீய எண்ணமும் அழிந்தது. அது தனக்கு உணவு கொடுத்த விஷ்ணுததருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தது.

ஒரு நாள் அது திடீர் என விஷ்ணு தாதர் முன் சென்று நின்று கொண்டு ‘ஐயா நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கின்றேன். என்ன வேண்டும் கேள்’ என்றது. அதைக் கேட்டு ஓட நினைத்த விஷ்ணுததரை தடுத்து நிறுத்திய ஒபிசாசு ‘பயப்படாதே அந்தநா, நான் உன் உப்பை தின்று வளர்ந்தவன். கெடுதல் செய்ய மாட்டேன். விரும்பியதைக் கேள்’ என்றது. சற்று நம்பிக்கை பெற்ற அந்தணன் தான் தன மனைவியுடன் ஆலோசனை செய்து விட்டு மறுநாள் கூறுவதாக கூறிவிட்டு வீட்டிற்க்குச் சென்று மனைவியுடன் ஆலோசித்தார். அவருக்கு நெடுநாளாக ஒரு ஆசை. அத ஊரில் அவதூதர் உருவில் வந்துள்ளதாக கேள்விப்படும் தத்தாத்திரேயரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அவரைக் ‘காண உன்னால் உதவ முடியுமா’ என மறுநாள் அந்த பிசாசை அவர் கேட்க அதைக் கேட்ட பிசாசு, பயந்து நடுங்கியது, ‘தத்தரா, என்ன உதவி கேட்கிறாய் அந்தணா, அவரை நான் காண முடியுமா? அவர் என்னைப் போன்றவர்களைக் கண்டாலே பொசுக்கி விடுவாரே. சரி, நீ உதவி கேட்டு விட்டாய் என்பதினால் ஒன்று செய்கிறேன். தூரத்தில் இருந்து அவரைக் காட்டிவிட்டு ஓடி விடுவேன். அதற்குப் பிறகு உன் பாடு, அவர் பாடு. ஆனால் ஒன்று அவர் ஒரு மாயாவி. எந்த ரூபத்தில் இருப்பார் என்பது தெரியாது. அவரை லேசிலும் ஆண்ட விடமாட்டார். நீ புத்திசாலியாக இருந்து அவரைக் அடையாளம் காண முயற்சி செய்ய வேண்டும் ‘ எனக் கூறி விட்டு சென்றது. ஒருநாள் அவசரம் அவரசரமாக அது அந்தணனை அழைத்துக் கொண்டு தூரத்தில் இருந்தபடி இறைச்சிக் கடையில் நின்று கொண்டு இருந்த ஒருவரை அடையாளம் காட்டிவிட்டு ‘அதோ அவரே தத்தர் , போ…போய் பிடித்துக் கொள் ‘ என்று கூறி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

விஷ்ணுதத்தரும் இறைச்சிக் கடை அருகே சென்றார். நாற்றம் வயிற்றை குடைந்தது. சேச்சே…எந்த இடத்தில் சென்று அவரை தேடுமாறு தரித்திரம் பிடித்த பிசாசூ கூறி விட்டு சென்றுவிட்டது அந்தப் பிசாசு, அது நம்மை ஏமாற்றி விட்டதே ? இந்த மனிதன் கண்களில் சிவப்பேறிக் கிடக்க பச்சையாகவே இறைச்சியே கடித்து தின்கிறான், கையில் ஒரு கள் மொந்தை. அதில் இருந்து அவ்வபோது குடிக்கின்றான். என்ன மனிதன்…தூத் ..தூ…என மனதில் திட்டியவாறு அந்த மனிதனை பார்த்த்துக் கொண்டே இருக்க அந்த மனிதனும் எவரை முறைத்துப் பார்த்தபடி, உனக்கும் வேண்டுமா என இறைச்சியைக் காட்ட, மீண்டும் …தூத் ..தூ…எனக் கூறியவாறு முகத்தை மூடிக் கொண்டார் அந்தணர். மூடிய முகத்தை ஷண நேரத்தில் கண்களை திறந்து கொள்ள அந்த மனிதரை அங்கு காணவில்லை. அங்கும் இங்கும் பார்த்தார். அவர் போன இடமே தெரியவில்லை. விஷ்ணு தத்தர் மனம் வருந்திக் கொண்டு வீடு திரும்பினார்.

இன்னும் சில நாட்கள் கழிந்தன. மீண்டும் வந்த பிசாசு அவருக்கு இன்னொரு இடத்தில் சென்று கொண்டு இருந்த மனிதரைக் காட்டிவிட்டு அவரே தத்தர் எனக் கூறிவிட்டு சென்றது. தூரத்தில் சென்று கொண்டு இருந்த அந்த மனிதனை நோக்கி ஓடினார் விஷ்ணுதத்தர். அருகில் சென்றதும்தான் தெரிந்தது, அது ஒரு பைத்தியம் பிடித்த பிச்சைக்காரன். அவர் பின்னால் நான்கு அல்லது ஐந்து நாய்களும் தொடர்ந்து சென்று கொண்டு இருந்தது. பரவாய் இல்லை, போன தடவையே ஏமார்ந்து விட்டோம் என எண்ணியவாறு அந்தப் பிச்சைக்காரன் எதிரில் சென்று அவரை வணங்கினார். ‘ஐயா’ என்றதுதான் தாமதம், அவர் முதுகில் தன் கையில் இருந்த தடியினால் ஓங்கி அடித்தான். அந்த அந்த பிச்சைக்காரன்.’ஓடிபோடா பரதேசிப் பயலே…என்னை வந்து ஏன் வணங்குகிறாய் ?…எனக் கூவியவாறே அவர் கழுத்தைப் பிடித்து அமுக்கி  அவரை மீண்டும் மீண்டும் தடியால் அடிக்க, விஷ்ணுதத்தர் வலி தாங்க முடியாமல் அவரிடம் இருந்து கஷ்டப்பட்டு தன்னை விடுவித்துக் கொண்டு நாய்கள் துரத்திவருவதை பொருட்படுத்தாமல் ‘போதுமடா சாமீ…நமக்கு தத்தரும் வேண்டாம், இந்த  மாதிரி பித்தனும் வேண்டாம்’ எனக் கதறியவாறே அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்.

விஷ்ணுதத்தர் அடி வாங்கிக் கொண்டு எப்படி ஓடி இருப்பார் 
என்பதை கற்பனை செய்து பார்த்தேன். இந்த கார்டூன் போட 

வேண்டியதாயிற்று. காரணம் அந்த கதைக்கான படம் கிடையாது.

வீடு வந்தவர் விஷ்ணுதத்தர் உடல் வலி தாங்காமல் படுத்துக் கொள்ள அவர் மனைவி அவருக்கு ஒத்தடம் கொடுத்தாள். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வெளியில் வந்து புளிய மரத்தடியில் பிரசாதத்தை வைக்கச் வந்தவரை பிசாசு சந்தித்தது. தன் சோகக் கதையைக் அதனிடம் கூறியவரிடம்’ என்ன காரியம் செய்துவிட்டாய் அந்தணா…நான் முதலிலேயே கூறினேன் அல்லவா…தத்தர் வேண்டும் என்றே பல விதங்களிலும் சோதனை செய்தப் பின்னரே காட்சி அளிப்பார், அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவர்  அடித்தாலும் தாங்கிக் கொள்  என்றேனே. சரி அடுத்த முறையாவது எனக்கு அதிருஷ்டம் அடிக்கின்றதா பார். அவரை தூரத்தில் இருந்து மூன்றாம் முறை நான் பார்த்து விட்டால் எனக்கு சாப விமோசனம் ஆகிவிடும். நான் போய் விட வேண்டும். ஆகவே இந்த  முறை நான் அவரை அடையாளம் காட்டிவிட்டு சென்று விடுவேன். அதற்குப் பின் உன் அதிருஷ்டம்’ என்று கூறி விட்டு  சென்று விட்டது. சில நாட்கள் கழிந்தன, மீண்டும் அவரை அழைத்துக்  கொண்டு போய்  தூரத்தில் பரதேசி போல இருந்தவரைக் காட்டியது. அந்தணன் அவரை தூரத்தில் இருந்தவரைக் காட்டி அவரா எனக் கேட்டபடி   திரும்பினால் அந்த பிசாசைக் காணவில்லை. அது சாப விமோசனம் பெற்று ஓடி விட்டது. ‘சரி இந்த முறை என்ன ஆனாலும் சரி அவரை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன் என எண்ணிய விஷ்ணுதத்தரும் அந்த பரதேசி போல இருந்த மனிதரிடம் சென்றார். அந்த பரதேசியோ, பல நாய்கள் பின் இருக்க ,  அருகில் இறந்து கிடந்த ஒரு கழுதையை வெட்டி அதன் இறைச்சியை பறவைகளுக்குப் போடத் துவங்கினார். வாயில் சுருட்டு வேறு புகைந்து கொண்டு இருந்தது.  சாராய நெடி . ஆனாலும் அவர் அருகில் சென்ற விஷ்ணுதத்தர் தடாலென அவர் கால்களில் விழுந்து  அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ‘தத்தா ..தத்தா ..எனக்கு கருணை செய்’ என புலம்ப, ‘காலை விடாடா …மூடனே’ எனக் கத்தியவாறே  அவர் எத்தனை உதைத்தும் விஷ்ணுதத்தர் அந்த அடிகளை வாங்கிக் கொண்டு கால்களை விடவில்லை. சில நிமிடங்கள்தான், ஆனால் அது யுகமாக தெரிந்தது.

‘எழுந்திரு மகனே’ என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த விஷ்ணுதத்தர் தன் எதிரில் நின்று இருந்த தத்தாத்திரேயரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவர் உடலில் அத்தனை உதைப் பட்டும் இப்போது எந்த வலியுமே இல்லை. தத்தாத்திரேயரைப் பார்த்து பித்து பிடித்தவர் போல எதை எதையோ கூறிக் கொண்டு இருந்த விஷ்ணுதத்தரை சாந்தப்படுத்திய  தத்தர் ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார்.

‘ஸ்வாமி நாளைக்கு என் தந்தையின் திவசம் வருகின்றது ………. அதனால்…’என விஷ்ணுதத்தர்  கூறி முடிக்கும் முன்னரே தத்தர் கூறினார் ‘உன் வீட்டில் திவசமா…ஆஹா..அப்படியானால் நான் ஒரு பிராமணனாக வந்து உணவு அருந்துகிறேன்’ என்று கூற திக் பிரமை பிடித்து நின்றார் விஷ்ணுதத்தர்….’என்ன ஸ்வாமி…நீங்களா…என் வீட்டு  திவசத்திற்கா’ என நா தழுதழுக்க கேட்க..’ஆமாம் மகனே …நானேதான்..போ..போய் ஆக வேண்டிய காரியங்களைப் பார்’ எனக்  அவரை அனுப்பினார். வீடு திரும்பிய விஷ்ணுதத்தர் வீட்டில் அதைக் கூற அவர் மனைவியோ நிலை குலைந்து போய், ஆனால் சொல்ல முடியாத சந்தோஷத்துடன்  படபடப்பாக காரியங்களை செய்யத் துவங்கினாள்.

மறுநாள், தத்ததேவர் சரியான நேரத்தில் சாப்பிட வந்தார் . வந்தவர் விஷ்ணுதத்தரிடம் கேட்டார் ‘ஆமாம் திவசத்தில் சாப்பிட இரண்டு பேர் வேண்டுமே. இன்னொருவர் எங்கே’  கணவனும் மனைவியும் முழித்தார்கள்.  ஒரு நிமிடம் தேவா எனக் கூறியவர்கள் கண்களை மூடிக் கொண்டு சூரிய பகவானிடம் ‘நீதான் இந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து எங்களைக் காப்பாட்ற  வேண்டும்’  என வேண்டிக் கொள்ள சூரிய பகவான் அதையே எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல தத்தருடன் அமர்ந்து சாப்பிடுவது சாமான்யமா , கரும்பு தின்னக் கூலியா…என்பதினால்  நொடிப் பொழுதில் தானே ஒரு பிராமணனாக வந்து அமர்ந்தார். ஆஹா… நாம் வேண்டியதும், யாரோ ஒரு பிராமணர் வந்துவிட்டாரே என தம்பதியினர் மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு என்ன தெரியும் வந்துள்ளது சூரிய பகவானே என. தத்தர் அவரைப் பார்த்து சிரித்தார். சூரிய பகவான் தத்தரிடம் ஆசிகளைக் கேட்டு வாங்கிக் கொண்டப் பின் அவருடன் சேர்ந்து சாப்பிட, அதன்  பின் இருவரும் விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.

இப்படி ஒரு திவசமே நடந்தது இல்லை போன்று நடந்து முடிந்தப் பின் தத்தர் ஒரு மந்திரோபதேசத்தை விஷ்ணுதத்தருக்கு அளித்தார். அதன் பின் அந்த தம்பதியினர் வெகுகாலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். தத்தரின் கருணைதான் என்னே.