சாந்திப்பிரியா
இளமைப் பருவத்திலேயே தெய்வீக வாழ்வை ஏற்று இருந்தாலும் பெற்றோர் மற்றும் சேது மாதவ ஆசானின் ஏற்பாட்டின்படி தனது இருபத்தி ஐந்தாம் வயதில் காளிமுத்தமி என்பவளுடன் திருமணம் செய்து கொண்டவருக்கு சில காலத்திலேயே ஒரு மகனும் இரண்டு புதல்விகளும் பிறந்தனர். திருமணம் ஆனாலும் கூட பாம்பன் ஸவாமிகள் பெரும்பாலும் ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தார். அவர் தந்தை மரணம் அடைந்ததும் அவருடைய தொழில்களை ஏற்று நடத்திக் கொண்டு நல்ல மேன்மை அடைந்தார். ஒரு நாள் பாம்பன் ஸ்வாமிகளின் ஒரு வயதே ஆன மகள் உடல் நலமின்றிப் போய் அழத் துவங்கினாள். அவருடைய மனைவி அவரிடம் மந்தரித்த வீபுதி கொடுக்கும்படிக் கூற, அவர் அதற்கு மறுத்து விட்டு அவள் குணமடைய வேண்டும் எனில் முருகனை பிரார்திக்கும்படிக் கூறி விட்டார். ஆவலுடன் சேர்ந்து தானும் முருகனிடம் வேண்டி பிரார்த்தனை செய்யலானார். அன்று இரவு யாரோ வயதான ஒருவர் வந்து சிறிது வீபுதியைக் கொடுத்து விட்டு அதை குழந்தையின் உடம்பில் தடவச் சொல்லி விட்டுச் சென்றார். அவர் கூறியபடியே அவர்களும் செய்ய குழந்தை குணம் அடைந்தது. ஆனால் வந்தவர் யார்? யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பாம்பன் ஸ்வாமிகளின் மனதுக்குப் புரிந்தது வந்தவர் முருகனே என்றும் அவரே தன் குழந்தையைக் காப்பாற்றி உள்ளார் என்பதை உணர்ந்தார்.
அதன் பின்னர் 1895 ஆம் ஆண்டில் சன்யாசத்தை ஏற்ற பாம்பன் ஸ்வாமிகள் பாம்பன் நகரை விட்டு வெளியேறினார். ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய முருகன் அவரை சென்னைக்குச் செல்லுமாறு கூறினார். முன் பின் தெரியாத இடத்தில் சென்று யாருடன் தங்குவது என ஒரு கணம் குழம்பியவர் வருவது வரட்டும் என தீர்மானித்துவிட்டு, முருகன் இட்ட ஆணையை மீற முடியாமல் ஏற்று இரயில் மூலம் அங்கு சென்றhர். எக்மோர் ஸ்டேஷனில் இறங்கிய அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது. ரயில் நிலையத்தில் அவர் அருகில் வந்த ஒருவன் அவரை அழைத்து வரச் சொல்லி வண்டியை அனுப்பி உள்ளதாகக் கூறி அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றான். ஸ்வாமிகளும் இது என்னடா விசித்திரமாக உள்ளது, நான் இங்கு வருவது யாருக்குமே தெரியாது , மேலும் எனக்கும் இங்கு யாருமே இல்லை. அப்படி இருக்கையில் யார் வண்டியை அனுப்பி உள்ளார்கள் எனக் குழம்பிக் கொண்டே ஒரு யந்திரம் போல வண்டியில் ஏறிக் கொண்டாலும், அவர் மனம் முழுவதும் முருகனே நிறைந்து இருந்தார்.. சரி, வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என தனக்குத் தானே கூறிக் கொண்டவரை அந்த காலத்தில் சென்னையில் பாரிஸ் என கூறப்பட்ட இடத்தில் சந்தில் இருந்த பங்காரு அம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டில் வண்டிக்காரன் இறக்கி விட்டுச் சென்று விட்டான். அங்கும் ஆச்சர்யமாக அந்த அம்மையார் அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். தனது கனவில் முருகப் பெருமான் தோன்றி அவருடைய அடையாளத்தைக் கூறி அவர் மறுநாள் வருவார், அவருக்கு தங்க இடம் கொடுத்து அவரை வைத்துக் கொள்ள என்று கூறியதினால் அவள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகக் கூறினாள்.
முருகன் சித்தமே அனைத்தும் என எண்ணிக் கொண்டு சில காலம் அங்கு தங்கியவர் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல புனித யாத்திரையை மேற்கொள்ளத் துவங்கினார். சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் அப்படியான யாத்திரையை மேற்கொண்டவர் காசிக்குச் சென்றார். அங்கு ஒரு நாள் முன்பின் தெரியாத யாரோ வந்து அவருக்கு காவி உடைக் கொடுத்து அதை அணியுமாறுக் கூறி விட்டுச் சென்றார். யாருக்கோ கொடுக்க வேண்டியதை தனக்குக் கொடுத்து விட்டாரோ என்று எண்ணிய ஸ்வாமிகள், பரவாய் இல்லை, இதுவும் முருகனின் கட்டளையாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அன்று முதல் காவி உடையையே உடுத்தலானார். அதற்கு இடையில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் நிறைய பாடல்களை இயற்றிக் கொண்டே இருந்தார்.
பல இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் 1923 ஆம் ஆண்டு மீண்டும் சென்னைக்கு சென்றவர் தம்புச்செட்டித் தெருவில் நடந்து கொண்டு இருந்தபோது ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் அவருடைய இடது முழங்காலில் குதிரை வண்டி ஒன்று ஏறி விட அவரது முழங்கால் முறிந்தது. மருத்துவ மனைக்குச் சென்ற அவரை சோதனை செய்த மருத்துவர்கள் முட்டிவரை அவருடைய காலை வெட்டி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள். ஆனால் ஸ்வாமிகள் அதை ஏற்கவில்லை. பதினோரு நாட்கள் படுக்கையில் கிடந்தார். மனம் கவலையில் ஆழ்ந்து இருந்தது. கால் வலியும் பொறுக்க முடியவில்லை. அன்று இரவு ஸ்வாமிகளின் கனவில் மயில் ஒன்று இறக்கைகளை விரித்து ஆடியபடி வந்தது. அடுத்து அவர் படுக்கையில் அவருக்குப் பக்கத்தில் முருகப் பெருமான் சிறு குழந்தை வடிவில் படுத்து இருப்பதைப் போல உணர்ந்தார். மனம் அமைதி அடைத்தது. இன்னும் சில நாட்கள் படுக்கையில் படுத்துக் கிடந்தவர் கனவில் ஒரு வேல் வந்து முறிந்து போன காலில் நுழைந்தது போல காட்சி வந்தது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே பாம்பன் ஸ்வாமிகளின் கால் முற்றிலும் குணமாயிற்று. ஆங்கில மருந்துவர்கள் கூட அந்தப் பின்னணியின் காரணம் தெரியாததினால் அவர் குணமடைந்தது அதிசயமான ஒன்று எனக் கூறி வியந்தார்கள்.
முருகனின் வேலும் மயிலும் முருகனை பிரார்த்திப்பவர்களுக்கு என்றுமே துணையாக இருக்கும் என்பதை உணர்ந்தார். இன்னும் சில காலம் ஓடியது. ஸ்வாமிகள் பல பாடல்களை இயற்றிக் கொண்டே இருந்தார். அவர் இயற்றிய அனைத்துமே முருக பக்தியின் மீதுதான் அமைந்து இருந்தன…முருகன்….முருகன் என்பதையே தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு இருந்த ஸ்வாமிகள் 1928 ஆம் ஆண்டு வாக்கில் விரைவில் தனக்கு முடிவு காலம் வர உள்ளதை உணர்ந்து கொண்டு தனது நண்பரை அழைத்து தாமதிக்காமல் திருவான்மியூர் அருகில் ஒரு இடம் தேடுமாறு கூறினார். அங்கு வாக்கிய இடத்தில் தங்கி இருந்தவண்ணம் தம்மிடம் வந்து கொண்டு இருந்த பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி வந்த பாம்பன் ஸ்வாமிகள் 1929 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று அனைவர் முன்னிலையிலும் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தார். சில ந்மிடங்களிலேயே அவரது ஆத்மா அவரது உடலை விட்டு அகன்றது. அங்கு அவருக்கு சமாதி எழுப்பினார்கள்.
அவருடைய வாழ்க்கையில் சில சுவையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
ஒருமுறை முறை கரடு முரடான வீதியில் பாம்பன் ஸ்வாமிகள் நடந்து சென்று கொண்டு இருக்கையில் முட்களும், கற்களும் கால்களில் குத்தி வலியெடுக்க வலியினால் துடித்துப் போனவர் முருகனிடம் மனமாற பிரார்த்தனை செய்தார். அன்று இரவு செருப்புத் தைக்கும் தொழிளாளி ஒருவன் கனவில் தோன்றிய முருகன் தன் பக்தன் பாம்பன் ஸ்வாமிகளுக்கு செருப்புத் தைத்துத் தருமாறு கூற, மறு நாள் அந்த செருப்புத் தைப்பவன் அவருக்கு தன கனவில் வந்த செய்தியைக் கூறி ஒரு ஜோடி செருப்பை தந்து விட்டுச் சென்றான். முருகனின் கருணையை எண்ணி வியந்தார் பாம்பன் ஸ்வாமிகள்.
இன்னொருமுறை பாம்பன் ஸ்வாமிகள் வாயிற்று நோயினால் அவதிப்பட்டு மயக்கம் அடைந்து விட்டார். அவருடைய மனைவியின் கனவில் தோன்றிய முருகன் உடல் முழுவதும் அவருக்கு வீபுதியைத் தடவி விடு . மேலும் உன்னை விட்டு நான் வேறு எங்கும் செல்ல மாட்டேன் என்று அவர் காதுகளில் கூறு …… என்று சொன்னார். ஆனால் அவள் வீட்டு விலக்காகி உள்ளதினால் அதை செய்ய தயங்க, முருகனும் ஆபத்திற்கு பஞ்சம் இல்லை என்று கூறி அவளை தான் கூறியதை செய்யுமாறு வற்புறுத்த அவர் மனைவியும் அதை செய்தாள். பாம்பன் ஸ்வாமிகள் நலமடைந்து எழுந்தார்.
ஸ்வாமிகள் ஒருமுறை காஞ்சிபுரம் சென்றிருந்த பொழுது ரயிலைப் பிடிக்க நேரம் ஆகி விட்டது என்பதற்காக இருந்த குமாரக் கோட்டத்திற்கு செல்லாமல் கிளம்பி விட்டார். வழியில் தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் அவரிடம் வந்து …… நீங்கள் எப்பொழுதாவது குமாரக் கோட்டத்திற்குப் போய் இருக்கின்றீர்களா …….. காஞ்சியப்ப சிவாச்சாரியார் என்ற ஆலய பண்டிதர் கந்தப் புராணம் இயற்றி வருவது தெரியுமா?…… என்றும் கேட்டார். பாம்பன் ஸ்வாமிகள் தெரியாதே என்று கூற அவரை வலுக்கட்டாயமாக அந்த ஆலயத்தின் அருகில் அழைத்துச் சென்று விட்டப் பின் வந்தவர் மறைந்து விட்டார். பாம்பன் ஸ்வாமிகள் செல்ல இருந்த ரயில் எதோ ஒரு காரணத்தினால் கிளம்பாமல் நின்று இருந்தது. ஆனால் அது அவருக்கு தெரியாது. சரி அடுத்த ரயிலில் செல்லலாம் என அங்கு பிரார்த்தனைகளை செய்து விட்டு ரயில் நிலையத்திற்குக் கிளம்பிச் சென்ற பாம்பன் ஸ்வாமிகள் வந்து ரயிலில் ஏறிய பிறகே அது கிளம்பிற்று. முருகனின் கருணையை எண்ணி வியந்தார் ஸ்வாமிகள்.
ஸ்வாமிகள் 6666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி உள்ளார். அவர் இயற்றியவைகளில் எதிரிகளின் சூழ்ச்சியை வென்று எழந்த செல்வத்தைப் பெற்றிட சதுரங்க பந்தம், மனதில் தோன்றும் அலைபாயும் எண்ணங்களை தடுத்து நல்ல எண்ணங்கள் தோன்றிக் கொண்டு இருக்கவும் மேன்மை பெறவும் சஸ்த்ர பந்தம் , வாகன விபத்துக்கள் நேராமல் பயமின்றி பயணிக்க ரத பந்தம், மற்றும் நாக தோஷம் விலக ராகு மற்றும் கேதுவின் தொல்லைகள் விலக துவித நாக பந்தம் போன்றவற்றையும், கந்தர் கலி வெண்பா போன்ற பலவற்றையும் இயற்றி உள்ள ஸ்வாமிகளின் ஆலயம் மற்றும் ஆஸ்ரமம் சென்னை அடையாரைத் தாண்டி உள்ள திருவான்மியூரில் உள்ளது. ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வரும்போது மனதில் இனம் புரியாத அமைதி நிலவுவது உண்மை. கடவுட்கள் உலவும் நிலத்தில் அமர்ந்துவிட்டு வரும்போது அப்படி ஒரு மன அமைதி நிலைமை நமக்கு நேராவிடில் வேறு எங்கு அந்த நிலை நமக்கு கிடைக்கும் ?