சண்டி சப்த சதி -5

சாந்திப்பிரியா

அதுவரை அமைதியாக மகரிஷி கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வணிகன் சமாதி, மகரிஷியை கேட்டான் ‘மகரிஷியே, நீங்கள் தேவி சூக்தம், தேவி சூக்தம் என்று கூறினீர்களே அந்த தேவி  என்பவர் யார் ? அந்த மந்திரத்தின் மகிமைதான் என்ன? 

மகரிஷி மேதஸ் கூறலானார் ” வணிகனே,  தேவி ஸூக்தம் என்பது எல்லையற்ற மஹிமையை உடைய தேவியின் அருளை பெற அனு தினமும் ஓதப்படும்  பிரார்த்தனை ஸ்லோகங்கள். அது தேவியின் மேன்மையை புகழ்ந்து கூறும் ஸ்லோகம் ஆகும். அதையே தேவி சூக்தம் என அழைக்கின்றார்கள். சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன. அவற்றில் ஒன்றே தேவி ஸூக்தமும் ஆகும். தேவி என்பவர் துர்கை எனும் மஹா பரமேஸ்வரி ஆவார்.  நான் ஏற்கனவே கூறியபடி அவற்றை இயற்றியது மனிதர்கள் அல்ல மற்றும் வேறு யார் அவற்றை இயற்றியது என்பது தெரியவில்லை என்றாலும், கண்களுக்கு புலப்படாத அம்ப்ருண என்ற ரிஷியின் மகளான பெண் தேவதை வாக் என்பவள் அவற்றை இயற்றியதாக கூறுகின்றார்கள். அவளே ஒரு  பிரும்ம ரிஷி என்பதாகவும்  அறியப்படுகிறது. அவள் எதற்காக தேவியின்  தேவியின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்களை இயற்ற வேண்டும்? அதற்கும் காரணம் உள்ளது.

ஒவ்வொரு தேவியும் அவதரித்தபோது அந்தந்த தேவிகளின் மகிமைகளும் குணாதிசயங்களும் பெருமைகளும் எவர் மூலமாவது பூவுலகிற்கு தெரியபடுத்த வேண்டும் என்பது பரபிரும்ம நியதியாகவே இருந்தது. அந்த தெய்வங்களுக்கும் அந்த கட்டளை தரப்பட்டு இருந்தது. இல்லை என்றால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதின் காரணமும், அதில் நிகழ்வுற்ற தெய்வ லீலைகள், தெய்வங்களின் வழிபாடு மற்றும் தெய்வ அவதாரங்களின் காரணங்கள் போன்றவை நான்கு யுகங்களிலும் பிறப்பெடுக்கும் மானிடப் பிறவிகளுக்கு தெரியாமலேயே இருந்திடும். பிரபஞ்சம் படைக்கப்பட்டதின் பலனே இல்லாமல் போய்விடும். இன்னின்ன காரணங்களுக்கு, இன்னின்ன விளைவுகள், இன்னின்ன பரிகாரங்களை செய்ய வேண்டும், இன்னின்ன தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற அனைத்தையும் விளக்க வேண்டும். அதற்கான மந்திரங்களும், தந்திர வகைகளும் வெளிப்பட வேண்டும் என்பதாக கொடுக்கப்பட்டு இருந்த நியமங்களின்படி அந்தந்த அவதார தெய்வங்களே அவற்றை மகரிஷிகள், முனிவர்கள், பூமியில் அவதரித்த தேவதைகள் போன்றவர்கள் மூலம் விளக்கிட, பரப்பிட ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தன. ஆகவே அவை அவதரித்தபோது, தனது பரிவார தேவதைகள் மற்றும் தெய்வ கணங்கள் மூலம் தன்னைப் பற்றிய ஸ்துதி எனும் ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் கதைகளை மனிதர்களிடையே வாய் மொழி செய்தியாக பரப்பி, சில ரிஷிகள் மூலம் ஓலை சுவடிகளாகவும் எழுதி வைத்தார்கள். அப்படிப்பட்ட நியதியினால்தான் பரமேஸ்வரியான துர்க்கை தேவியும் தனது வரலாற்றுப் பெருமை மற்றும் தன்னை வணங்க வேண்டியதின் முறையையும் வாக் தேவதை போன்றவர்கள் மூலம் வெளியுறச் செய்தார்கள். தேவியின் உண்மையான பெருமைகளை தானே பார்த்து, அனுபவித்து பிறருக்கும் பயன்படும் வகையில் அவளை துதிக்கும் மந்திரமாக அதை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் வாக் தேவதைக்கு எழுந்ததினால்தான், அவள் தபம் செய்து, பரமாத்மாவோடு இரண்டறக் கலந்து அநுபூதி நிலையைப் பெற்றாள். அந்த நிலையில் அவள் தேவியின் உணர்வோடு இருந்ததினால் அப்படியே தேவியைப் பற்றிய பெருமையை நேரடியாக உணர்ந்து, அவளுக்கு அந்த நிலையை அனுபவிக்க வேண்டிய காலம்வரை பொறுமையாக இருந்து பார்த்து, அதன் பின் பழைய நிலையை அடைந்து தேவியின் ஆத்ம ஸ்துதியாக வெளிப்படுத்தினாள். ஆத்ம ஸ்துதி என்பது தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது என்ற நிலை. அதன் பின் அந்த வாக் தேவதை வாய்மொழி செய்தியாக மஹரிஷி வியாசரிடம் அதைக் கூற அவரே ரிக் வேத பாஷணைகளை தமது சீடர்களான ஜைமினி பில்லா, வைசாம்பயானா மற்றும் சமந்தாவிடம் கூறி அவற்றை ரிக் வேதத்தில் இணைத்து இருக்கலாம் என்பதான எண்ணம் பண்டிதர்களிடையே உள்ளது.

அந்த தேவியின் பெருமையை காட்டும் ஆத்ம ஸ்துதியினுள்  அடங்கி உள்ள கருத்துக்கள் இவை :

“நானே வசு, ருத்திரர்கள், அதித்ய மற்றும் விஸ்வ தேவர்களாக சஞ்சரிக்கிறேன். அவர்கள் என்னுள்தான் உள்ளனர். பிரும்ம ஸ்வரூபமாய் இருந்து கொண்டு வருணன், இந்திரன், அக்னி என்ற அனைத்து தேவர்களையும் அவரவர் ஸ்தானத்தில் நிலைக்கச் செய்கிறேன்.  உலகின் அனைத்தையுமே   என்னுள்ளேயே அடக்கி வைத்துள்ளேன்.

சோமா யாகம் செய்து த்வஷ்டா முதலிய தேவர்களை உரிய  ஸ்தானத்தில் அமர வைத்து அவர்களுக்கு  ஹவிஸ்  தரும் பக்தனுக்கு அளவற்ற  ஐஸ்வர்யத்தைத் தருவேன். நானே பரமேஸ்வரி, அனைத்து ஐஸ்வர்யங்களையும் தருபவள்,  யாகங்களின் முதல் தெய்வமான  பரபிரும்மத்தை அறிந்தவள், பல வடிவங்களில் தோன்றியவள், பல தேவதைகளே என்னை பல இடங்களிலும் ஸ்தாபனம் செய்து உள்ளார்கள். அங்கெல்லாம் நானும் வசிக்கிறேன்.

மனிதன் உண்பதும் பார்ப்பதும், கேட்பதும், உயிர் உள்ளவர்களாக இருப்பதும் என்னால்தான். ஐம்புலன்களும் என்னால்தான் இயங்குகின்றன.  என்னை அறிந்து கொள்ளாதவனுக்கு அழிவு நிச்சயம். நான் விரும்பினால் எதையும் உயர்ந்த நிலையில் வைப்பேன். ஒரு மனிதனை ரிஷியாகவோ, பிரும்ம ரிஷியாகவோ, அதி மேதாவியாகவோ என்னால் ஆக்க முடியும்.

கடவுளை வெறுப்பவர்களை தண்டிக்கும் ருத்திரனுக்கு அவர் வில்லின் நாணைப் பூட்டித் தருபவளும் நானேதான்.  என் பக்தர்களின் விரோதிகளை அழிப்பவள் நான்.

பிரபஞ்சத்தின் தந்தை போன்ற வானம் நான்  படைத்ததே, அதையும் என் உடலால் தொடுகிறேன். அதுபோலவே ஆழ்கடலின் உள்ளே நான் யோனியாக  இருப்பதினால்தான்  உயிரினங்கள் அனைத்திலும் நான் உள்ளேன். அவற்றின்  மூச்சுக் காற்றாக உள்ளேன். எனது மகிமையோ  பூமிக்கும் வானத்திற்கும் அப்பாற்பட்டது. வானத்திலும் பூமியிலும் நானே வியாபித்துள்ளேன்”

மகரிஷி மேதஸ் தொடர்ந்து கூறலானார். “சப்த சதி  பாராயணம் செய்யும் முன் கண்டிப்பாக கூற வேண்டிய மந்திரங்கள் கவச், அர்கலா மற்றும் கீலகா  போன்ற மூன்றும் ஆகும்.  அசுரர்களின் தலைவனான  ராவணன்  சப்த சதி  பாராயணம் செய்யும் முன் கவச மந்திரத்தை ஓத மறந்து விட்டான், ஆகவே அவன் ராமரால் கொல்லப்பட்டான்.  அசுரன் அருணாசுரன் பிரம்மாவின் கிருபையைப் பெற்றிருந்தாலும், சிவபெருமானும் தேவியும் இணைந்து இருந்த சக்திகளால் மரணத்தை சந்திக்க நேர்ந்தது, அதன் காரணம்   அவன் சப்த சதி பாராயணம் செய்தபோது அந்த பாராயணத்தை சரியான நடைமுறையை பின்பற்றி செய்யவில்லை.  மந்திரங்களில் மேலானதும், சக்தி வாய்ந்ததும் ஆன சப்த சதியின் மந்திரங்களில் அர்கலாவை மகா விஷ்ணுவும்    கீலகாவை சிவபெருமானும், கவச மந்திரத்தை பிரம்மாவும்  அசுரன் அருணாசுரனுக்கு போதனை செய்தார்களாம்.

சண்டி சப்த சதி பாராயணம் செய்வதற்கு  சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று பாகங்களைக் கொண்ட இந்த நூல் பிரதம சரிதம் (Chapter-1), மத்தியம சரிதம் (Chapter-2,3,4)  மற்றும் உத்தம சரிதம் (Chapter-5 to 13)  என மூன்று பாகங்களாக  உள்ளது.

முதலாவதான பிரதம சரித  பாகத்தில் முதல் அத்தியாயத்தில் லோக மாயா எனும் காளி தேவியின்  மாயையில்  சிக்கிக் கொண்டு தவித்த   தேவர்கள் மற்றும் பிற தெய்வங்கள் அவர்களது மாயையில் இருந்து விடுபட அதே  மாயையான    லோக மாதா எனும் மகா காளியையே  வழிபட்டு  பிரார்த்திப்பதை கூறுகிறது.  லோக மாதாவான மாயையில் விஷ்ணு பகவான் கூட சிக்கிக் கொண்டு அவள் சொல்படி நடக்க வேண்டி இருந்தது. இந்த பாகத்தில் லோக மாதாவை பகவான் பிரும்மன் துதிக்கும் ஸ்தோத்திரமே மிக முக்கியமானது.  மேலும் இந்த பாகத்தில் மதுகைடப சம்ஹாரம் வருகின்றது.

மத்யம சரிதம் எனும் இரண்டாம் பாகத்தில் காணப்படும்  அத்தியாயம் இரண்டு முதல் நான்கு வரை அசுரன் மஹிஷாவின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் தேவர்கள் பராசக்தியான தேவியை ஸ்தோத்திரம் செய்வது,  மற்றும்  அசுரன் மகிஷாசுரனின் சைனியம் அழிந்த கதையும் மகிஷாசுரனின் வதம் போன்றவையும் விவரிக்கப்பட்டு உள்ளது.  சகல தேவர்களின் உடல்களில் இருந்தும் பல சக்திகள் வெளிப்பட்டு மகாலஷ்மி எனும்  மகிஷாசுரமர்தினியான  ஒரே அம்பிகையாக  அவதாரம் பூண்ட கதையும் உள்ளது.

உத்தம சரிதம் எனும் மூன்றாவது பாகத்தில்  ஐந்து முதல் பதிமூன்று  (5-13) பாகங்கள் உள்ளன. இந்த பாகத்தின் ஆறாம் அத்தியாயத்தில் தும்ரலோசன வதம், ஏழாவதில் சண்ட-முண்ட அசுரர் வதம், எட்டாவதில் ரக்தபீஜ வதம், ஒன்பதில் நிசும்ப வதம், போன்றவை விவரிக்கப்பட்டு உள்ளன. இந்த மூன்றாம் பாகம்  அனைத்து விருப்பங்களும் நிறைவேற பிரார்த்திக்கும் வகையில் உள்ளது.

உத்தம சரிதத்தின் பன்னிரண்டாவது அத்தியாயம் சப்த சதியினைப் பாராயணம் செய்வதினால் ஏற்படும் அனைத்து நன்மைகளையும்  தேவியே கூறுவது போல அமைந்துள்ளது. அந்த பன்னிரண்டாம் அத்தியாயத்தில் தேவி கூறி உள்ளது இதுதான் ” இந்த துதிகளினால் யார் என்னைப் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை நான் போக்குவேன். அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி போன்ற மேன்மையான தினங்களில் இதைப் படிப்பவர்களை பாவங்கள் அண்டாது.  இந்த மகாத்மியத்தைப் படித்த மட்டிலேயே அனைத்து கஷ்டமும் விலகும். இது எங்கு படிக்கப்படுமோ அங்கு எல்லாம்  நான் நிரந்தரமாக இருப்பேன்.  பூஜை, ஹோமங்கள் நடைபெறும் இடங்களில் இதை பாராயணம் செய்தால்  எதிரிகள் ஓடி ஒளிவார்கள் .  பக்தர்களது  குலமும்  கோத்திரமும் மேன்மையாக  விளங்கும்.  பக்தர்களின்  இல்லங்களில் மங்களம்  நிலைக்கும்.  எங்கெல்லாம் பூஜைகளும், அக்னி காரியங்களும் ( ஹோமம்) நடைபெறுமோ அங்கெல்லாம்  இந்த மான்மியம் படிக்கப்பட  வேண்டும்.  வருடம் முழுவதும் செய்யப்படும் கோதானம், அன்ன தானம், தூப தீபம், மற்றும் புஷ்ப தானம் போன்றவற்றினால் கிடைக்கும் பலன் அதிகமே என்றாலும்  ஒரே ஒரு தடவை  இந்த மான்மியத்தைப் படிப்பதின் மூலம் அவற்றை விட அதிக  பலன் கிடைக்கும்”.

மகரிஷி மேலும் கூறினார் “மூல மந்திரங்களை படித்து முடித்தப் பின்னர் 13 அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதியை படித்து முடித்ததும், அதை பாராயணம் செய்பவர் உத்தரங்கம் எனும் பகுதியில் உள்ள ஸ்லோகங்களையும் படித்தப் பின் தேவி ஸூக்தம் அல்லது வாக் அம்ருனிய ஸூக்தம் என்பதையும் படித்து நிறைவு செய்ய வேண்டும்” என்றார்.

சப்த சத்தியில் உள்ள முழு ஸ்லோகங்களையும் பாராயணம் செய்யும்போது  இடையில் நிறுத்தி விட்டு சில மணி நேரம் பொறுத்து மீண்டும் பாராயணத்தை தொடரக் கூடாது. நடுவில் நிறுத்தாமல் தொடர்ந்து  ஓத வேண்டும். (நடுவில் நிறுத்தாமல் படிக்க வேண்டும் என்பது அங்கேயே அமர்ந்த நிலையில்  தண்ணீர் அல்லது குளிர்பானம்  குடிக்க நிறுத்துதல், ஓரிரு  நிமிட நேரம் மூச்சு விட நிறுத்துதல் மற்றும் விளக்கில் எண்ணெய் விட  நிறுத்துதல் போன்றவற்றுக்கு  பொருந்தாது.  நடுவில் நிறுத்தாமல்  என்பது சிரமப் பரிகாரம் போல கால் மணி நேரத்துக்கும் அதிக அளவிலான நேரத்தை எடுத்துக் கொண்டு  மீண்டும் தொடர்வதை குறிக்கும்).  மற்றும் சில காரணங்களால் சப்த சதியை முழுமையாக படிக்க முடியாவிடில், அவர்கள் மத்யம சரித்ராவின் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

சில காரணங்களால் பாராயணத்தை நடுப்பகுதியில் பாராயணத்தை கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் , மீண்டும் பாராயணத்தை துவங்கும்போது அந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து பாராயணத்தை படிக்கத் தொடங்க வேண்டும். வேக வேகமாக பாராயணம் செய்யக் கூடாது, அதை போல மிக நிதானமாகவும் அதை பாராயணம் செய்யக் கூடாது.  மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகவும் பக்தியுடனும் உச்சரிக்கப்பட வேண்டும்.

சில காரணங்களால் தொடர்ந்து ஒரே நாளில் பாராயணம் செய்து முடிக்க முடியவில்லை என்றால், அதை ஏழு நாட்களில் செய்யும் பாராயணமாக செய்யலாம்.   அந்த நிலையில் உதாரணமாக நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பாராயணத்தை துவங்குவதாக உள்ளது என்றால் , கீழே உள்ள  அட்டவணைப்படி அதை செய்யலாம்.

  • அத்தியாயம் -1                  ஞாயிறு
  • அத்தியாயம் -2 & 3             திங்கள்
  • அத்தியாயம் -4                   செய்வாய்
  • அத்தியாயம் -5 to 8             புதன்
  • அத்தியாயம் -9 & 10           வியாழன்
  • அத்தியாயம் -11                 வெள்ளி
  • அத்தியாயம் -12 & 13          சனி
சப்த சதியில் காணப்படும்  ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒவ்வொரு அத்தியாய தேவதை அதிபதியாக  இருக்கிறாள். அவர்கள் யார் ?
  • அத்தியாயம் -1      மகாகாளி 
  • அத்தியாயம் -2      மகா லஷ்மி 
  • அத்தியாயம் -3      சங்கரி தேவி 
  • அத்தியாயம் -4      ஜெயா துர்கா 
  • அத்தியாயம் -5      மகா சரஸ்வதி
  • அத்தியாயம் -6      பத்மாவதி 
  • அத்தியாயம் -7      மாதாங்கி 
  • அத்தியாயம் -8      பவானி 
  • அத்தியாயம் -9      அர்த்தாம்பிகா 
  • அத்தியாயம் -10    காமேஸ்வரி 
  • அத்தியாயம் -11    புவனேஸ்வரி 
  • அத்தியாயம் -12    அக்னி துர்கா 
  • அத்தியாயம் -13     தாரிகா பரமேஸ்வரி 
முற்றியது