அத்தியாயம் – 8

சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்தப் பின் கதையை இன்னும் தொடர்ந்தார்.

”ஸ்வாமி  ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பல ஷேத்திரங்களுக்கும்  சென்றப் பின் ஸ்ரீ சைலம் என்ற ஊரில் இருந்த மல்லிகார்ஜுனனைக் காணச் சென்றார். அந்த ஆலயத்தின் அருகில் கிருஷ்ணா எனும் புனித நதி ஓடுகின்றது.  மேலும் அந்த நதியில் பல கரைகளில் பல்வேறு அற்புதமான ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் சென்று விட்டு வந்தார் ஸ்ரீ பாத வல்லபா.

நிவிருத்தி சங்கமம் என்ற இடத்தில் உள்ளது குருவார்பூர் என்பது. அங்கு ஒரு மெத்தப் படித்த பண்டிதர் வாழ்ந்து வந்தார். சகல சாஸ்திரங்களிலும் வல்லுநர் அவர். ஊரில் நல்ல மரியாதையையும் மதிப்பையும் பெற்று இருந்தார்.  அவருக்கு அம்பிகா என்ற மனைவி இருந்தாள் . அவர்களுக்கு பல குழந்தைகள் பிறந்து பிறந்து மரணம் அடைந்து இருந்தன. ஆகவே அவர்கள் மன வருத்தத்தில் இருந்தார்கள் என்றாலும் தெய்வ அருளினால் அவர்களுக்கு கடைசியாகப் பிறந்த குழந்தை உயிருடன் இருந்தது.  ஆனால் வளர்ந்து வந்தக் குழந்தை சற்று கூட படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆகவே அந்த  சிறுவனுக்கு அவனுடைய தந்தையே பாடங்கள் சொல்லித் தரலானார்.  எட்டாவது வயதில் பூணல் போட்டு பாண்டித்தியம் செய்யும் கல்வியை தர முயன்றார்.  அது அவனுடைய மனதுக்கு பிடிக்கவில்லை என்பதினால் அந்த சிறுவனுக்கு மண்டையில் எதுவுமே ஏறவில்லை. சடங்குகளை செய்யும் பண்டிதனாக ஆவதற்கு நியமங்களை சொல்லிக் கொடுக்க நினைத்தாலும் அதையும் அவனால் சரிவர கற்க முடியவில்லை. இப்படியாக எதை கற்பிக்க நினைத்தாலும் அவன் எதையும் கிரகித்துக் கொள்ள முடியாத  முட்டாளாகவே இருந்ததினால் ஒரு நாள் கோபம் கொண்டு அந்த சிறுவனை அவனது தந்தை  பிரம்பினால் விளாசி விட்டார். அவருக்கு மனதில் பயம். நாளை தனக்குப் பிறகு அவன் வாழ்வதற்கு  என்ன செய்வான், நாமோ ஏழ்மை குடும்பத்தில் உள்ளவர்கள் என்ற மன ஆதாங்கமே அவரது கோபத்தின் காரணம்.
தன்னுடைய மகனை அடிப்பதைக் கண்டு மனம் பதறிப் போனாள் அம்பிகா. என்ன இருந்தாலும் தாய் உள்ளம் தவிக்கும் அல்லவா. தனது கணவனிடம் இனி குழந்தையை இப்படிக் கண்மூடித்தனமாக அடிப்பதை நிறுத்துங்கள் என்று சண்டைப் போட்டு விட்டாள். அதற்காக அவள் பின்னர் வருந்தினாலும் அதன் விளைவாக மனம் ஒடிந்து போன அந்த பிராமணன் விரைவில் மடிந்தே போனான். இனி குடும்பத்தை யார் காப்பது என்ற நிலை வந்தபோது அம்பிகா  அங்கும் இங்கும் அலைந்து தனக்குக் கிடைத்த வேலைகளை செய்து அந்த சம்பாத்தியத்தில் சிறுவனையும் வளர்த்து வந்தாள்.
ஊரில் உள்ளவர்கள் வாய் சும்மா இருக்குமா? ‘உதவாக்கரை நீ உன் அப்பனையும் பறி கொடுத்துவிட்டாய். உன் தாயாரும் மரணம் அடைந்து விட்டால் நீ சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?’ என்று அவனை திட்டித் தீர்ப்பார்கள். மூடனாக இருந்தாலும் ஊரார் பேச்சை  எத்தனை நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும். அந்த சிறுவன் மனதில் துக்கம் வந்துவிட்டது. ஒருநாள் வீட்டுக்குச்  சென்று தாயாரிடம் அழுதான். ஊரார் கூறுவதை எல்லாம் கூறி  அழுதான். அப்போதுதான் அம்பிகாவுக்கும் பொறி தட்டியது போல மனம் வருந்தி பயந்தது. ‘ஆமாம் ஊரார் சொல்வதில் என்ன தவறு உள்ளது?  எனக்குப் பிறகு நீ என்ன செய்வாய்?’ என்று  அவனிடம் கேட்டப் பின்   மகனிடம் கூறினாள்  ‘மகனே இனி நமக்கு உதவ யாருமே இல்லை. நீ இல்லாவிடிலும் நான் கூலி வேலை செய்தாவது வாழ்ந்து விடுவேன். ஆனால் நான் போய் விட்டால் நீ என்ன செய்வாய் என மனம் பதறுகிறது.  நாமோ பரம ஏழைகள். ஆகவே, வா, நாம் சென்று நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடலாம்’ என்றதும் அவள் மகனும் மறுப்புக் கூறாமல் தாயுடன் கிளம்பிச் செல்ல இருவரும் கிருஷ்ணா நதிக்கரையை அடைந்தார்கள்.

அவர்கள் சென்ற வேளையில் அதே இடத்தில்  ஸ்ரீ பாத வல்லபாவும் குளித்துக் கொண்டு இருந்தார். ஒரு பெண்மணியும், சிறுவனும் நதியில் குதித்து தற்கொலை செய்ய முயன்றதைக் கண்டவர்  அவர்கள் அருகில் சென்று அவர்களை தடுத்து நிறுத்தினார்.  அவரைக் கண்டவள் மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் விட்டு அழுது தம் நிலையைக் கூறி தாம் தற்கொலை செய்து கொள்வதை தடுக்காதீர்கள் எனவும் தற்கொலை செய்து கொண்ட பாபம் அடுத்த ஜென்மத்தில் தொடராமல் இருக்கவும், அடுத்த ஜென்மத்திலாவது தனக்கு இந்த மகன்  நல்ல அறிவாளியாக பிறக்க அருள் புரிய வேண்டும் எனவும்  கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை நதிக்கரையில் அமரச் சொல்லி அவர்களிடம் கூறினார்  ‘அம்மணி, எந்த ஒரு நிலையிலும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானிப்பது ஒரு பிரச்னைக்கு தீர்வாகாது. உனக்கு அடுத்த ஜென்மத்தில் நிச்சயமாக நல்ல மகன் பிறப்பான் என்று என் மனம் கூறுகிறது. ஆகவே நீ சனிபிரதோஷ தினங்களில் மாலையில் ஆலயத்துக்குச் சென்று சிவபெருமானை துதித்து வேண்டிக் கொண்டால் நிச்சயமாக நல்லதே நடக்கும்  என்பதற்கு உதாரணம் கிருஷ்ண பெருமானின் தாயாரான யசோதை ஆகும். அவளுக்கும் பூர்வ ஜென்மத்தில் இப்படி ஒரு சோதனை நேரிட்டபோது, அவள் பிரதோஷ கால பூஜையை கண்டு களித்ததினால் சிவபெருமானின் கருணையை பெற்றாள். ஆகவேதான் அவளுக்கு கிருஷ்ணனே மகனாகப் பிறந்தார்’ என்று கூற அம்பிகா அவரிடம் கேட்டாள்  ‘மகானே, உங்களைக் கண்டதும்தான் எனக்கு மன அமைதி வந்தது போல உள்ளது. உங்களால் எங்களுக்கு விடிமோட்ஷம் கிடைக்கும் என்றே மனம் நினைக்கின்றது.  நீங்கள் எங்களுக்கு யசோதை கிருஷ்ணரை மகனாக பெற்ற அந்த முழுக் கதையையும் கூறிவிட்டு, என் மகனையும் ஆசிர்வதித்து அனுப்ப வேண்டும். நீங்களே என் மகனை சரி செய்வீர்கள் என்று உங்கள் மீது என்னை அறியாமலேயே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. மகாத்மாவே, நான் வாழ்கையை இனி தைரியமாக எதிர்கொள்வேன். சிவபெருமானை இன்று முதல் விடாமல் துதிக்கத் துவங்குவேன். எங்களுக்கு அந்தக் கதையையும் கூறி என் மகனையும் ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்க ஸ்ரீ பாத வல்லபா கதையைக் கூறலானார்.

……..தொடரும்