தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்) கோதாலே எனும் கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு கோட்டை உள்ளது. அதன் பெயர் ஹரிஸ்சந்திர காட் என்பதாகும். அது அதை சுற்றி இருந்த ஊர்களுக்கு காவலாக இருந்த கோட்டையாம் அது. அங்கு ஹரிஸ்சந்திரேஸ்வரர் என்ற ஆலயம் உள்ளது.
ஹரிஸ்சந்திர ஆலயத்தை சுற்றி பல குளங்களும், குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றான கேதாரீஸ்வர் என்ற குகையில் ஐந்து அடி உயர சிவ லிங்கம் உள்ளது. அது கழுத்தளவு நீரின் நடுவில் வைக்கப்பட்டு உள்ளதாம். அந்த சிவலிங்கத்தை சுற்றி உள்ள தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல குளிராக இருப்பதினால் அதன் அருகில் சென்று பூஜிக்க முடிவது இல்லை என்கிறார்கள். ஆனால் சமீப காலமாக அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்க்கும் வகையில் அந்த தண்ணீர் மீது நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த பாதையும் நீரில் மூழ்கி இருப்பதினால் சிவலிங்கத்தின் அருகில் சென்று யாராலும் பார்க்க இயலவில்லையாம்.
இந்த குகைக்குள் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணுவின் சிலை உள்ளது. ஆனால் இந்த மலை உச்சிக்கு செல்வது எளிதல்ல. மலை மீது நடைப்பயணத்தை மேற்கொள்வதற்கு நன்கு வழி தெரிந்த யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். மலை மீது ஏற ஆசைக் கொள்ளும் இளைஞர்கள் அதற்காகவே இங்கு வருகை தருகிறார்கள். இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு பூனாவில் இருந்து எளிதாக செல்ல முடியுமாம்.
இந்த கோட்டையும், ஆலயமும் யாரால் எப்போது கட்டப்பட்டது என்ற விவரம் குறித்து எவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. சிறு கற்களால் கட்டப்பட்ட பண்டையக் கால நினைவுச் சின்னங்களையுடைய சிலைகள் சில காணப்படுகின்றன. இந்த இடத்தில்தான் ராஜா ஹரிச்சந்திரன் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.