வடநாட்டில் ஸ்ராவன் மாதங்களில் ஸ்ராவன் சோம வாரம் எனும் தினத்தில் (திங்கள் கிழமை) அமர்நாத் சிவலிங்கத்தை குறிக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் சிவலிங்க உருவங்களைமுழுமையான ஐஸ் கட்டிகளினால் செய்து வைத்து இருப்பார்கள். அன்று இரவு முழுவதும் அங்கு வந்து பூஜைகளை செய்து பக்தர்கள் ஆராதிப்பார்கள். இந்த ஐஸ் லிங்கங்கள் மால்வா எனும் பகுதிகளான இந்தூர், தேவாஸ், உஜ்ஜயினி, போபால் போன்ற நகரங்களில் பெருமளவில் நடைபெறும். சிவபெருமான் ஆலயங்களில் ஐந்து முதல் பத்தடி உயரங்களில் கூட இப்படிப்பட்ட சிவலிங்கங்களை உருவாக்கி வைத்து வழிபடுகிறார்கள். இப்போது குஜராத்திலும் இந்த பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதற்கான விசேஷ காரணங்களோ இல்லை பரம்பரைப் பழக்கமோ இல்லை என்றாலும் இது பரவலாக ஷ்ரவன் சோம வாரங்களில் கொண்டாடப்படுகிறது. அவற்றின் சில படங்களைக் கீழே தந்துள்ளேன்.
அது போலவே ருத்திராக்ஷ மாலையில் செய்யப்பட்டுள்ள சில சிவலிங்கங்களையும் கொடுத்து உள்ளேன். இந்த 31 அடி உயர சிவலிங்கம் பதுக்வியாஸ் என்பவரால் குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் தரம்பூர் தாலுக்காவில் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. திரு பதுக்வியாஸ் ருத்திராக்ஷ மணிகளின் அமைப்பில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். சுமார் ஐம்பது ஆட்களின் துணையோடு நான்கு மாதங்கள் முயன்று இந்த ருத்திராக்ஷ மாலையிலான சிவலிங்கத்தை அமைத்து உள்ளார். அவர் 2000 ஆண்டு முதல் ருத்திராக்ஷ மாலையில் சிவலிங்கங்களை அமைத்து வருகிறாராம்.