COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்

அத்தியாயம் 46
யயாதி மற்றும் தேவயானியின் திருமணம்; யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் இடையிலான சேர்க்கை; குரு சுக்ராச்சாரியரின் சாபத்தால் ஏற்பட்ட முதுமை

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

சீடன் தீபக் தன் குருவை பணிவுடன் வணங்கி இவ்வாறு கேட்டான் ‘பகவான் ஸ்ரீமத் தத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதமான நிகழ்வுகளையும், அவருடைய பக்தி மிக்க அடியவர்களின் வரலாற்றையும் கேட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; ஆயினும், என் மனம் இன்னும் திருப்தியடையவில்லை; இந்தத் தெய்வீக உரையாடலை இன்னும் தொடர்ந்து கேட்கவே நான் விரும்புகிறேன்’ ||1||

ஆன்மீக உபதேசங்களுக்காகப் பசியால் வாடுபவனாக என்னை நீங்கள் கருத வேண்டும்; பகவான் ஸ்ரீமத் தத்தரைப் பற்றிய அமுதமயமான உரையாடல்களை கொண்டு என் பசியைத் தணிக்க வேண்டும்; உரை நடை, கவிதை மற்றும் பாடல்கள் வாயிலாக பகவானைப் போற்றிப் பாடுவதில் வல்லவரான ஒரு மகானாக நீங்கள் திகழ்கிறீர்கள்; நானும் என்னால் இயன்ற அளவு முழு பக்தியுடன் அவற்றை கேட்க ஆவலாக உள்ளேன்||2||

தெய்வமான ஸ்ரீமத் தத்தரே தெய்வீகப் பேரின்பத்தின் முழு வடிவமாகத் திகழ்கிறார்; எவருடைய மனமும் அறிவுத் திறனும் அவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு இருக்குமோ, அத்தகைய பக்தி மிக்க அடியவர்களின் பக்தியை அவரே ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு முக்தியை அருளுகிறார்||3||

அத்தகைய பக்தர்கள் தங்களுக்குள்ளே தெய்வீகம் முழுமையாகப் பரவியிருப்பதை உணர்கிறார்கள்; அதன் பிறகு, அவர்கள் மேற் கொள்ளும் அனைத்து செயல்களும் பயணங்களும் ஒரு வகையில் தெய்வீகப் பரிவர்த்தனைகள் நடைபெறும் ஒரு இடமாகவே மாறி விடுகின்றன; அத்தகைய வழியில்தான் பகவானும் அவருடைய அடியவர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி ஊட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்; பகவானும் அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றார்||4||

பகவானை முழுமையாக அறிந்து கொள்ளத் தீவிரமாக ஆர்வமுள்ள பக்தர்கள், அவருக்கு தங்கள் பக்தியை கடனாக செலுத்தும் வல்லமை பெறுகிறார்கள்; அவர்கள் அந்தக் கடனுக்குப் பிரதி பலனாக எவ்வித வட்டியையும் எதிர் பார்ப்பதில்லை; சாதாரணமாகப் பார்த்தால், அந்த வட்டியின் மதிப்பு மிக பிரம்மாண்டமானதாக அமைந்திருக்கும் ||5||

அத்தகைய பக்தி எனும் கடனை அளித்த அடியவர்கள் படிப்படியாக மாற்றம் அடைகின்றார்கள்; அதே போலவே, அவர்களால் கடனாக அளிக்கப்பட்ட அந்த பக்தி கூட மாற்றம் அடைகிறது; அவர்கள் தங்கள் சோம்பலைத் துறந்து விட்டு, குருவின் வழி காட்டுதலின்படி செயல்படுவார்களேயானால், அவர்களை முழுமையாக உருமாற்றம் செய்யக் கூடிய ஒரு உண்மையான தெய்வீகப் பரிவர்த்தனை அங்கே நிகழ்வதை நாம் கண் கூடாகக் காணலாம் ||6||

உடலை இறைவனின் ஆலயமாக மாற்றிக் கொண்ட உண்மையான பக்தர்கள், சோம்பலுக்கு ஆட்படுவதோ அல்லது தங்களது பக்தி எனும் கடையை மூடுவதோ இல்லை; அவர்கள் தேடிய தெய்வீகம் ஒருமுறை அவர்கள் உள்ளத்தில் குடி கொண்டு விட்டால், அது விதிக்கப்பட்ட காலம் வரை அப்படியே நிலைத்திருக்கும் ||7||

அத்தகைய பக்தர்கள் எப்போதும் சம நிலையுடன் இருந்து வாழ்க்கையில் நல்லவற்றை அனுபவிக்கிறார்கள்; அவர்கள் துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை; அவர்கள் எந்த விதமான இழப்பையும் சந்திப்பதாக தெரியவில்லை, அவர்கள் ஹரி பகவானால் பாதுகாப்பட்டு வழி நடத்தப் படுகின்றார்கள் ||8||

பெரும்பாலானோரால் விரும்பப்படுபவரின் பெயரை யார் தேவையில்லாமல் கெடுப்பார்கள் அல்லது அவருக்கு எதிராக யார் சதி செய்வார்கள்?; பொதுவாக, அத்தகைய பக்தர்கள் எங்கிருந்தாலும் மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள் ||9||

அவர்கள் தம்மை சந்திக்கும் அனைவரின் நோக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும்; இதுவே மகான்கள் செயல்படும் விதம்; ஆனால் சமூகத்தில் உள்ள மந்த புத்தியுள்ளவர்கள் அதை அறிந்து கொள்வது இல்லை; மற்ற தெய்வங்களாலும் அத்தகைய தூய ஆத்மாக்களைப் புரிந்து கொள்ள முடிவதில்லை ||10||

அத்தகைய பக்தர்கள் இதுபோன்ற தெய்வீகப் பரிவர்த்தனைகளைச் செய்யும் இடங்களில் எல்லாம், அதன் முழு விவரமும் அவர்களுக்கே தெரியும்; தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்தாலும், அவர்கள் அதையெல்லாம் மிகவும் நன்மை பயப்பதாகவே கருதுவார்கள்||11||

ஆரம்பத்தில் நான் உதவியற்ற நிலையில் இருந்தபோது, இப்போது நான் அத்தகைய ஒரு கடையில்தான் என்னைக் கண்டுகொண்டேன்; எனக்கும் இலவசமாகக் கடன் கொடுங்கள் ஓ குருவே, அவ்வாறு செய்யுமளவுக்கு நீங்கள் பொறுமையும் வலிமையும் உடையவர்’ ||12||

தீபக் தனது குருவிடம் கேட்டார் ‘ஆயு மன்னன் முக்தி அடைந்தது போலவே, யாதவ குலம் அறியப்படும் யது மன்னன் மீது ஸ்ரீமத் தத்த பகவான் தனது அருளைப் பொழிந்தார் என்று நான் கேள்விப்பட்டேன்; ஆகவே அந்த முழு நிகழ்வையும் எனக்கு விரிவாக விவரியுங்கள்’ ||13||

தெய்வம் தனது பக்தர்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியான அருள் இணையற்றவை; அவை கேட்பதற்கு எப்போதும் புதியதாகவும், மங்களகரமானதாகவும் தோன்றுகின்றன; யார் அந்த செய்திகளை பயனற்ற, தேவையற்ற உளறல்கள் என்று கருதுவார்கள்?; மிக மோசமான கசாப்புக்காரர்கள் கூட அவற்றை கேட்கும்போது ஆறுதலை அடைகின்றார்கள்||14||

தெய்வீக லீலைகளை கேட்பது எங்களுக்கு ஒரு தவம் செய்வதை போல உள்ளது; யாகத்தில் ஈடுபடுவதற்கோ அல்லது தாராளமாகப் பரிசளிப்பதற்கோ எங்களை போன்றவர்களிடம் செல்வமோ திறமையோ இல்லை’ சீடன் தீபக்கின் இந்த உண்மையான வேண்டுகோளைக் கேட்ட ஞானி குரு, அவன் எவ்வளவு ஆழமாக தெய்வீகத்தின் மீது நாட்டம் கொண்டுள்ளான் என்பதை எண்ணி உண்மையிலேயே நெகிழ்ந்து போனார்||15||

உபநிடத நூல்களில் பெரும் ரகசியமாக வெளிப்படுத்தப்படும் அந்தப் பரம்பொருள் தத்துவமானது ‘அவதூத கீதை’ அதாவது, துறவு பூண்டு அலைந்து திரியும் ஒரு ஞானியின் தெய்வீகப் பாடல் என்று அழைக்கப்படுகிறது; அது யது குல மன்னருக்கும், யோகங்களுக்கெல்லாம் அதிபதியானவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு உரையாடலாக அமைந்துள்ளது; இப்போது அதனை நீ மிகக் கவனத்துடன் கேட்க வேண்டும்’ என்று குரு வேத தர்மா பதிலளித்தார்||16||

‘தேவயானி என்பவள், அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகள்; அவள், விருஷபர்வா எனும் அசுரனின் மகளுடன் இணைந்து நீராடுவது வழக்கம்; ஒருமுறை, அவர்கள் அவ்வாறு நீராடிக் கொண்டிருந்தபோது, சில மனிதர்கள் அவர்களை பார்த்து விட்டார்கள் என்பதினால் கூச்சமுற்ற அவர்கள், அவசர, அவசரமாக நீரிலிருந்து வெளியேறினர் ||17||

அவர்கள் இருவரும் அவசர, அவசரமாக வெளியேறியபோது, அவர்களில் சற்று விரைவாகச் செயல்பட்டவளான, அசுரனின் மகளாகிய சர்மிஷ்டை என்பவள், அவசரத்தில் கவனிக்காமல் தேவயானிக்குச் சொந்தமான ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டாள்||18||

சர்மிஷ்டை தனது ஆடைகளை உடுத்திக் கொண்டிருப்பதை தேவயானி கவனித்ததும், அவள் மிகுந்த சினமடைந்து அவளைக் கண்டித்தாள்; அதன் விளைவாக, அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு வாக்கு வாதமும் சண்டையும் மூண்டது; அந்த சண்டையின் போது, சர்மிஷ்டை தேவயானியை ஒரு கிணற்றுக்குள் தள்ளிவிட்டு சென்று விட்டாள்||19||

விதி வசத்தால், அச்சமயத்தில் யயாதி மன்னர் அந்த வழியே சென்று கொண்டிருந்தார்; அதற்குள் சர்மிஷ்டை தனது அரண்மனைக்குத் திரும்பி விட்டாள்; கிணற்றுக்குள் விழுந்து கத்தரிக் கொண்டிருந்த பெண்ணின் அழுகுரலைக் கேட்ட மன்னர், அந்த குரல் வந்த திசையை நோக்கி சென்று அவளை மீட்டு எடுத்தார் ||20||

மன்னர் அவளது கையைப் பற்றிப் பிடித்து, அவளைக் கிணற்றிலிருந்து வெளியேற்றினார்; மேலும், அவள் உடுத்தியிருந்த ஆடைகள் முறையாக இல்லாத காரணத்தினால், தனது சொந்த ஆடைகளையே அவளுக்கு உடுத்தக் கொடுத்தார்; எதிர்பாராத விதமாகத் தனக்கு உதவி கிடைத்ததைக் கண்டு மகிழ்ந்த தேவயானி, நடந்த அனைத்தையும், ஆதி முதல் அந்தம் வரை மன்னனிடம் விவரித்தாள்||21||

தேவயானி மன்னரிடம் இவ்வாறு கூறினாள் ‘தேவர்களின் குருவான பிருகஸ்பதியின் மகனான கச்சன், முன்னொரு காலத்தில் என்னைச் சபித்திருந்தான்; நம் இருவருக்கும் இடையிலான உறவு கை கூடாது போனதாலும், நான் அதற்காக வற்புறுத்தியதாலும் ஏற்பட்ட விளைவை நான் இப்போது கண் கூடாகக் காண்கிறேன்; தாங்கள் என் கையைப் பற்றிக் கொண்டதால், நான் இப்போது தங்களின் மனைவியாகும் விதிக்கு உட்பட்டுள்ளேன் ||22||

மன்னன் யயாதி அந்தச் சாபத்தைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து கொண்டான்; அங்கேயே அவன் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டான்; இதற்கிடையில், தன் குருவான சுக்ராச்சாரியரைப் மகிழ்விப்பதற்காக, வ்ருஷபர்வன் அந்தத் தம்பதியினருக்குச் சர்மிஷ்டையையே பணிப் பெண்ணாக அளித்தான் ||23||

அச்சமயத்தில், குரு சுக்ராச்சாரியர் மன்னன், யயாதிக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார் ‘சர்மிஷ்டையிடமிருந்து விலகியே இரு; அவளுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்ளாதே; மீறினால் பெரும் தீங்கு விளையும்’; மன்னனும் அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு, தன் புதிய மனைவியுடனும் பணிப் பெண்ணுடனும் தன் நாட்டிற்குத் திரும்பினான்||24||

மன்னன் தன் புது மனைவியுடன் இன்பமாகப் பொழுதைக் கழித்தான்; சர்மிஷ்டையும் அவர்களுக்குப் பிடித்தமான பணிப் பெண்ணாகவே தொடர்ந்து பணியாற்றினாள்; காலப் போக்கில் தேவயானி கருவுற்று, யது மற்றும் துர்வசு எனப் பெயருடைய இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள் ||25||

அசுர மன்னன் விருஷபர்வனின் மகளான சர்மிஷ்டை, மன்னனுக்கு மிகக் கவனத்துடன் பணிவிடை செய்து வந்தாள்; ஒருமுறை, மன்னனுடன் தனித்திருக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தபோது, அவள் அவனிடம் இவ்வாறு கூறினாள் ‘நான் தங்களுடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறேன்; என்னுடனும் தாங்கள் இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்||26||

சர்மிஷ்டை எப்போதும் தன் சொல்லைக் கேட்டு நடப்பவள் என்பதை அறிந்த மன்னன் யயாதி, தனக்கு அளிக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை மறந்து, அவளுடனும் இன்பத்தில் திளைத்தான்; அவளும் கருவுற்று, மூன்று மகன்களைப் பெற்றெடுத்தாள்||27||

அந்த செய்திகளை தேவயானி அறிந்தபோது, அவள் அவ்விருவர் மீதும் கடும் சினங் கொண்டு, தன் தந்தையின் இல்லத்திற்குச் சென்று விட்டாள்; அங்கே அவள் தன் தந்தையிடம் மன்னன் குறித்தும் சர்மிஷ்டை குறித்தும் முறையிட்டாள்; இதனால் கோபமுற்ற குரு சுக்ராச்சாரியர் மன்னனைச் சபித்தார் ||28||

யயாதியே, விருஷபர்வனின் மகளாகப் பிறந்திருந்தாலும், வெறும் பணிப் பெண்ணாகவே இருந்த சர்மிஷ்டையுடன் நீ காலம் கழித்திருக்கிறாய்; உன் திருமணத்தின்போது நான் உனக்கு விடுத்த எச்சரிக்கையை நீ புறக்கணித்து விட்டாய்; எனவே, இந்த நொடியிலேயே நீ முதுமையடைந்து தளர்ந்து போவாய் ||29||

குரு அவ்வாறு சபித்த மறுகணமே, மன்னன் யயாதி தன் நாட்டிலேயே முதுமையடைந்து தளர்ந்து போனான்; அவன் உடல் அடிக்கடி நடுங்கியது; அவனது தலை முடியும் வெண்மையாக மாறிப் போனது; இவையனைத்தும் மன்னனுக்குப் பெரும் மனத் துயரை அளித்தன||30||

அவனது உடலில் எஞ்சியிருந்த ஆற்றலோ அல்லது வலிமையோ அறவே அற்றுப் போயிருந்தது; நிமிடத்திற்கு ஒருமுறை அவன் இருமிக் கொண்டே இருந்தான்; ஆயினும், அவனது மனம் இன்னும் புலனின்பங்களிலேயே ஏங்கிக் கொண்டிருந்தது; அதனால் அவன் தன் நாட்களைத் தீராத மனக் குறைவுடனேயே கழித்து வந்தான்||31||

சாபம் இடப்பட்ட செய்தியை தேவயானி அறிந்தபோது, அவளும் பெரிதும் வருந்தினாள். தனக்குத்தானே அவள் இவ்வாறு எண்ணிக் கொண்டாள் ‘எனது முரண்பாடான நடத்தையின் காரணமாகவே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது; இப்போது நான் என்ன செய்வது? ||32||

இது விதியினால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது; அதனால்தான், அந்த நீராடல் நிகழ்வு நடந்த நாளிலிருந்தே, அத்தகைய பிடிவாதமான குணங்கள் என் அறிவை ஆட் கொண்டன; அதன் விளைவாகவே, நான் சிந்திக்காமல் பேசி விட்டேன்; அவ்வாறே நடந்து கொண்டும் விட்டேன் ||33||

இப்போது என் கணவர் முதுமையடைந்து, உடல் தளர்ந்து போய்விட்டார்; இனி என்னாலும் உலகியல் இன்பங்களையோ அல்லது அரச செல்வங்களையோ அனுபவிக்க இயலாது; மேலும், என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டால், நானும் இன்னும் புலனின்பங்கள் மீதான ஆசையை முழுமையாக வெல்லவில்லை என்பது புலனாகிறது ||34||

எனவே அவள் மன்னனிடம் திரும்பினாள்; இருவரும் தங்கள் செயல்களுக்காக வருந்தி, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடினர்; நல்ல வேளையாக, தங்கள் குருவான சுக்ராச்சாரியாரிடம் சென்று இதற்கு ஒரு தீர்வு காணலாமென்று அவர்களுக்குத் தோன்றியது; அவர்கள் குருவிடம் சென்று, யயாதி மன்னன் இழந்த தனது இளமையை மீண்டும் பெறுவதற்கு அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டனர்||35||

தந்தை சுக்ராச்சாரியார், தன் மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டார்; கருணை உள்ளம் கொண்ட அவர், அவர்களிடம் இவ்வாறு கூறினார் ‘உங்கள் மகன்களில் ஒருவனுடன் உன் வயதை மாற்றிக் கொள்; அவ்வாறு செய்தால், அவன் முதுமையடைவான்; நீயோ மீண்டும் உன் இளமையைப் பெறுவாய் ||36||

ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் துயரமும் கலந்த மனதுடன், யயாதி மன்னன் தன் நாட்டிற்குத் திரும்பினான்; தன் ஐந்து மகன்களையும் அழைத்து, அவர்களில் யார் இந்த வயதுப் பரிமாற்றத்தைச் செய்து கொள்ள முன் வருவது என்று விசாரித்தான்; ஒவ்வொரு மகனும் அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான்; இறுதியில், அவர்களில் நால்வர் அத்தகைய பரிமாற்றத்தில் ஈடுபட மறுத்து விட்டனர் ||37||

அவர்கள் தனது பேச்சைக் கேட்கவில்லை என்பதினால் மன்னன் அவர்களை நோக்கிச் சாபமிட்டான் ; நீங்கள் எவரும் இந்த அரச அரியணைக்கும், அரச அதிகாரத்திற்கும் தகுதியற்றவர்கள் ஆகி விட்டீர்கள்; உங்களில் ஒருவர் கூடத் தந்தைக்கு கடமையாற்றும் நன் மகனாகத் திகழவில்லை ||38||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘சாப்தேஷு தேஷ்வக்ரஜேஷு கனிஷ்ட: பூருராத்மஜ:, ஷர்மிஷ்டயா வயோ தத்வா பித்ரே ஸ்வம் தஸ்ய சா ததே’
இந்த ஸ்லோகத்தின் சரியான பொருள் என்ன என்றால் மற்ற அனைத்து மூத்த மகன்களும் (யயாதியின் வயதான நிலையை ஏற்க) மறுத்து விட்ட நிலையில், யயாதியின் மகன்களில் இளையவனான புரு, தன் தந்தைக்காகத் தன் இளமைப் பருவத்தை அளித்து விட்டு, அவனது முதுமையை ஏற்றுக் கொண்டான் ||39||

இது யயாதி மன்னனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது; பரிமாற்றம் நிகழ்ந்தது; அவன் மீண்டும் இளமையடைந்தான்; இதற்கிடையில் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்ட புரு, அதே கணத்தில் வயதாகி பலவீனமடைந்தான்||40||

உணரக் கூடிய மற்றும் உணர்வற்ற, நிலையற்றவற்றைப் பகுத்தறியும் விவேகம் இல்லாத எவரும் நிச்சயமாக மந்த புத்தி உடையவர்; ஏனெனில் அவர்கள் குறுகிய கால புலன் இன்பங்களை மட்டுமே விரும்புகிறார்கள்; மேலும் பொதுவாக சோகத்திலோ அல்லது துக்கத்திலோ முடிவடைகிறார்கள்||41||

இதற்கிடையில், யயாதி மன்னன் தன் இளமையை மீண்டும் பெற்று, தேவயானியுடன் நூறு ஆண்டுகள் இன்பமாக வாழ்ந்து வந்தான்; அவளுடைய விருப்பங்களையும் நிறைவேற்றினான்; விதி வசத்தால் பற்றின்மையால் உற்சாகமடைந்து அவளிடம் கூறினான் ஓ முனிவர் சுக்ராச்சாரியார் அவர்களின் மகளே ||42||

புலன்களின் தேவைகளை வெல்வது கடினம், அவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்; இந்தக் காரணத்தினால்தான் பல ஞானிகளும் உயர் குடியினரும் வீழ்ச்சியடைந்துள்ளனர்; எனவே, தாய், மகள் அல்லது சகோதரியாக இருந்தாலும், அவர்கள் காம உணர்ச்சியில் இருக்கும் போதோ அல்லது மற்ற நேரங்களில் தனியாக இருக்கவோ கூடாது என்று கூறப்படுகிறது ||43||

ஒருவர் முதுமை அடைந்திருந்தாலும் கூட, அவர் பெண்களின் அருகாமையை நாடக் கூடாது; அவர்கள் இளையவர்களோ அல்லது முதியவர்களோ யாராக இருப்பினும் சரி; இது, பழைய ஆடைகளைத் தைத்து மெத்தைகளாகவோ அல்லது போர்வைகளாகவோ மீண்டும் பயன்படுத்துவதைப் போன்றதாகும்||44||

எந்த மனம் புலனின்ப வேட்கைக்கு அடிமையாகி விட்டதோ, அது பிறவிதோறும் புலனின்பங்களை அனுபவித்தாலும் ஒரு போதும் திருப்தி அடையாது; இது நெருப்பில் விறகை இடுவதற்கு ஒப்பாகும்; அது நெருப்பின் சுவாலையை மேலும் அதிகரிக்கவே செய்யும் ||45||

அதன் பிறகு, உண்மையான துறவு மனப் பான்மை மனதில் வெளியானால் மட்டுமே அமைதியை மீண்டும் பெற இயலும்’; இவ்வாறு அவளுக்கு விளக்கிக் கூறி, அவளது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு, அவர் தனது இளமையைத் தனது இளைய மகனான இளவரசன் புருவுடன் மீண்டும் பரிமாறிக் கொண்டார் ||46||

இதன் விளைவாக, பற்றற்ற மன நிலைக்கு சென்ற பின் தான் மீண்டும் அடைந்த முதுமை மற்றும் உடல் தளர்ச்சியுடனும், அவர் புருவை அடுத்த மன்னராக முடி சூட்டி விட்டு, வன வாழ்க்கையை மேற் கொள்ளத் தீர்மானித்தார்; அனைத்துப் புலனின்ப வேட்கைகளும் போதும் என்று மனம் கருத்தியத்தினால் அவர் அமைதியையும் நிம்மதியையும் அடைந்தார் ||47||

புரு தனது சகோதரர்களுக்கும் ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்தான்; அவர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் மன்னர்களாக ஆட்சி செய்தனர்; ஆனால், மூத்த மகனே முழு ராஜ்யத்திற்கும் மன்னராக முடி சூட்டப்பட வேண்டும் என்பதே சாஸ்திரங்களில் மரபாக இருந்ததினால் அவர்கள் முடிசூட்டிக் கொண்டது, மூத்த மகனான யதுவின் மனதில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது||48||

யதுவிடம் போதுமான செல்வங்களும், அழகிய மங்கையரும், யானைகளும், சகல செழிப்புகளும், புதல்வர்களும் இருந்தபோதிலும், தான் புறக்கணிக்கப்பட்டோமே, ஒரு பணிப் பெண்ணின் மகனான புரு மன்னராக முடி சூட்டப்பட்டானே என்ற ஆதங்கமும், பொறாமையும் துயரமும், எண்ணமும் அவரைத் தீராத துன்பத்திற்கு ஆளாக்கின ||49||

அந்தத் துயர நிலையில் மன்னன் யது இவ்வாறு எண்ணினான் ‘எனது அன்னை தேவயானியின் பணிப் பெண்ணின் இளைய மகனான புரு, தனக்குக் கிடைத்த பங்கின் அடிப்படையில் அரச சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறான்; அதனால் என் மனதில் ஏற்படும் வேதனையையும் துயரத்தையும் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை||50||

நான் அனைவராலும் அறியப்பட்டவனாகவும், மூத்த அரசியின் மூத்த மகனாகவும் இருக்கும் நிலையில், என் சகோதரர்கள் மற்றும் நான் எத்தகைய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்; இந்த நிலையில் ஒருவன் எப்படி வாழ்வது? ||51||

இது என் மனதிற்குள் அளவற்ற ஆச்சரியத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது; இத்தகைய ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ள நேர்ந்ததற்குக் காரணமாக அமைந்த எனது முற் பிறவி வினைகள் எப்படி அமைந்து இருந்தனவோ தெரியவில்லை; எனவே நாங்கள் அடைந்துள்ள மனது துயர் நீங்குவதற்காக நானும் பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற் கொள்ளலாமே?||52||

விதியின் திருப்பு முனை எத்துணை வலிமையானது; வாழ்வையும் அதன் இன்பங்களையும் ஒருவனை நுகரச் செய்வது விதியே ஆகும்; அத்தகைய விதி, ஒருவனது சொந்தச் சுற்றத்தாரை முன்னிட்டு தவிர்க்க இயலாத வேகத்துடன் வரும்போது, அதில் சிக்கிக் கொள்ளாமல் எவரால் தப்ப இயலும்? ||53||

கடந்து போன நிகழ்வுகள் அனைத்தையும் நான் எண்ணிப் பார்க்கையில், எனது அறிவுத் திறன் முழுவதையும் ஒருமுகப்படுத்தி ஆராய முற்படுகையில், உலக இன்பங்களை சார்ந்த எந்தவொரு நிகழ்விலும், பிற அனைத்திலும், உண்மையான, நிலையான இன்பம் ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை||54||

இந்த உண்மையை ஏறக்குறைய அனைவரும் ஒப்புக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் பற்றுக்களிலேயே அவர்கள் சுழன்று கொண்டு உள்ளார்கள்; ஆனால் நான், அத்தகைய கேவலமான இன்பங்களை துறந்து ஒதுக்கி விட்டு, நிச்சயமாகக் காடுகளை நோக்கிய ஆன்மீகப் பாதையையே தேர்ந்தெடுப்பேன்||55||

இவ்வாறு உறுதியாகத் தீர்மானித்த யது, தன்னால் இயன்ற அளவு உலக இன்பங்களை துறந்து, முழுமையான பற்றின்மையை கடைப் பிடித்தவாறு, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டின் தாக்குதல்களையும் சமமாக ஏற்றுக் கொண்டு, உண்மையான முக்தியைப் பெறும் வேட்கையுடன் மலைப் பகுதிகளை நோக்கிச் சென்று அங்கேயே தங்கலானார்||56||

அவர் ஸ்ரீமத் தத்த பகவானை வழிபடும் முறையைக் கற்றறிந்திருந்தார்; அதனால் நிலையற்ற உலக இன்பங்கள் குறித்த தெளிவான பகுத்தறிவு அவருக்குள் விழித்தெழுந்தபோது, தெய்வமான ஸ்ரீமத் தத்தர் இவ்வாறு சிந்தித்தார் ‘இவன் உலகியல் கவர்ச்சிகளுக்கு அடி பணியாமல், தனது உயர்ந்த சிந்தனைக்கு ஏற்பவே வாழ்ந்துள்ளான்; எனவே, மெய் ஞானத்தைப் பெறுவதற்கு இவன் தகுதியுடையவனாகத் திகழ்கிறான் ||57||

துறவறத்தை முழுமையாக ஏற்று வாழும் தகுதி இவனது வாழ்விலும் நடத்தையிலும் தெளிவாகப் புலப்படுகிறது; இப்போது இவன் எனது உபதேசங்களை உரிய மரியாதையுடன் கேட்டால், இவன் விரும்பியபடியே மீண்டும் ஞானத்தின் சிகரத்தில் அமர்த்தப்படுவான் ||58||

ஆகவே, அடைவதற்கு அரிதான ‘ஆத்ம ரகசியத்தை’ நான் இவனுக்கு வெளிப்படுத்துவேன்’; இவ்வாறு தீர்மானித்த இறைவன், காட்டில் இருந்த யதுவின் முன் காட்சியளித்தார்; இறைவன் எங்கும் நிறைந்திருப்பவர் என்றாலும், யதுவால் அவர் வந்துள்ளதை மனத்தால் உணர மட்டுமே முடிந்தது||59||

யதுவின் கண்களுக்கு நேர் எதிரிலேயே, மிகக் குறைந்த ஆடையுடன் கூடிய ஒரு துறவி தென்பட்டார்; அவர் தரையில் சலனத்துடன் படுத்திருந்தார்; எனினும், அவரது முகத்தில் கவலையோ அல்லது அச்சமோ சிறிதும் தென்படவில்லை ||60||

அத்தகைய தனிமையான காட்டில் ஒருவரைச் சந்தித்ததில் யது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்; எனவே அவர் அந்த துறவியை நோக்கிச் சென்று, மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும் அவரை வணங்கி வினவினார் ‘இந்த அடர்ந்த காடுகளுக்குள் தனித்துச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் தாங்கள் யார்?||61||

நான் இந்த காட்டிற்கு வந்து வாழ்வைத் தொடங்கியதிலிருந்து, தங்களைத் தவிர வேறு எவரையும் நான் இங்கு காணவில்லை; இது மிகவும் அடர்ந்த காடாக உள்ளது; இத்தகைய சூழலில், தங்களின் அன்றாடத் தேவைகளைத் தாங்கள் எவ்வாறு பூர்த்தி செய்து கொள்கிறீர்கள்?; தங்களைப் பற்றி எதையும் புரிந்து கொள்ள இயலாமல் நான் திகைக்கிறேன்||62||

மனித குலத்தின் நிலையை நாம் கவனித்தால், சிலர் நீண்ட ஆயுளுக்காகவும், சிலர் செல்வத்திற்காகவும், இன்னும் சிலர் புகழ் பெறுவதற்காகவும் தவம் மேற் கொள்கின்றனர்||63||

ஆனால் இங்கே தனியாக எவரும் தவத்தில் இருப்பதாக தெரியவில்லை; சிலர் தர்மத்தை நாடுகின்றனர், சிலர் அர்த்தம், காமம் அல்லது செல்வம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் முயற்சிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்; முக்தியை நாடுபவர்கள் அரிது ||64||

நமது அக ஆற்றல்கள், எந்த விதமான செயலையும் செய்யாமல், அமைதியாக இருக்காது, ஆனால் நம்மால் அந்த நிலையை அடைய முடியுமா? அதில் ஒருவர் எல்லா நேரங்களிலும் சம நிலையுடனும் இருக்க முடியுமா?||65||

நாம் உலகைப் பார்த்தால், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் காமம், சீற்றம் மற்றும் பேராசை எனும் நெருப்பு மக்களை ஆட் கொள்வதைக் காண்கிறோம்; இந்தத் தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொண்டீர்கள்?; நீங்கள் எப்படி இவ்வளவு மன அமைதியுடன் இருக்கிறீர்கள்?||66||

நீங்கள் எவ்விதப் பற்றுமின்றி, எதிலும் ஆழ்ந்து, ஆனந்தமாகச் சுற்றித் திரிகின்றீர்; செல்வம் குறித்தோ, செழிப்பு குறித்தோ உமக்குச் சிறிதும் கவலையில்லை; அதற்கும் மேலாக, உம்முடைய சொந்த உயிரைப் பேணுவது குறித்தும் நீர் கவலை கொள்வதில்லை; புகழைப் பெறுவதையும் நீர் விரும்புவதில்லை||67||

இவ்வுலகில், ஆன்மீக ஞானமோ, அல்லது அந்தப் பாதையில் பயணிக்கத் தேவையான துணிவு, உறுதி மற்றும் வலிமையோ இல்லாதவர், அறிவுறுத்தப்பட்ட வழி முறைகளின்படி செயல்படுவதில் திறமையும் தேர்ச்சியும் பெற்றிருப்பாரேயானால், அவற்றை செய்யாமல் பேசாமல் இருந்து கொண்டு எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க முடியுமா?||68||

உங்களை கண்ட உடனேயே எனக்கு தன்னால் உங்களிடம் ஈடுபாடு வந்து விட்டது; உங்களுடைய உடல்வாகு எந்தவொரு செயலையும் செய்வதற்கு ஏற்றவாறு திடமாகவும் ஆரோக்கியமாகவும் காட்சியளிக்கிறது; உங்களது தோற்றமும் அங்கங்களும், நீர் பெரும் அளவிலான ஞானத்தைப் பெற்றிருப்பதை உணர்த்துகின்றன; அப்படியிருக்க, நீங்கள் எதற்காக இங்கே படுத்திருந்தவாறு, எவ்விதச் செயலிலும் ஈடுபடாமல் இருக்கின்றீர்? ||69||

தனிமையில் இருந்தும் மகிழ்ச்சியாக இருக்கும் அந்த நிலையை அடைவது எப்படி, அந்த நிலையில் வாழ்க்கையை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ளப்பட வேண்டும் ? காட்டில் நான் என்னை காப்பாற்றிக் கொள்ளப் எப்படி போராடுகிறேன் என்பது எனக்கு அனுபவ பூர்வமாகத் தெரியும்; ஆனால் நீங்கள் எப்படி உங்களை காப்பாற்றிக் கொள்கின்றீர்கள் என்பதை எனக்கு விளக்குமாறு உம்மை வேண்டுகிறேன்||70||

மனிதர்களிடத்தில் ‘நான்’ என்று அறியப்படும் அந்த அடிப்படைத் தத்துவம் (essence) யாது?; உம்முடைய முன்னிலையில், அந்த ‘நான்’ எனும் உணர்வு கூட ஏன் வலுவிழந்தது போல் தோன்றுகிறது?; நாம் சில ஆழமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கொண்ட ஒரு அர்த்தமுள்ள உரையாடலை மேற் கொள்ளலாமா?; ஓ மன்னனே, ஓ மகத்தான முனிவரே, நீங்கள் யார் என்பதை எனக்குக் கூறுவீரா||71||

துயரத்தையும், ஆசை கற்பனைகளையும் நீர் எவ்வாறு கடந்து வந்தீர்?; அவை எவற்றாலும் தீண்டப்படாமல், ஒரு மையப் புள்ளியில் நிலைத்திருக்கும் அந்த நிலையை நீர் எவ்வாறு அடைந்தீர்?; உம்மைச் சுற்றி குடும்பத்தினர், மனைவி அல்லது பிள்ளைகள் எவரும் இல்லா விட்டாலும், நீர் எவ்வாறு இவ்வளவு ஆனந்தத்துடனும் அமைதியுடனும் காணப்படுகின்றீர்கள்||72||

இவ்வுலகில், பொதுவாகச் சமூக வாழ்க்கைதான், அதாவது செல்வம், மனைவி மற்றும் உறவினர்களுடன் சேர்ந்துதான் வாழ்க்கை நகர்கிறது; ஆயினும், அனைவரும் ஏதோ ஒரு காரணத்தினால் துயரத்துடனும் அமைதியின்மையுடனும் காணப்படுகின்றனர்; அப்படி இருக்கையில் மனிதர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலையில் நீங்கள் இப்படி எவ்வாறு இருக்கின்றீர்கள் ||73||

யது குல மன்னன் தனது சொந்தப் புரிதல்களையும், அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர வேட்கையையும் அடிப்படையாகக் கொண்டு, கேள்விகள் பலவற்றைத் தொடுத்தான்; அவற்றை யெல்லாம் கேட்ட அந்த அவதூதத் துறவி (நாடோடி துறவி) புன்னகைத்து, மிகுந்த கனிவுடன் பின்வருமாறு பதிலளித்தார்||74||

காட்டில் தனித்து வாழும் பற்றற்ற நிலையிலுள்ள யதுவிடம் கூறினார் ‘ஓ மன்னனே, நீ உன்னால் இயன்ற முழு கவனத்தையும் ஒரு முகப்படுத்தி நான் கூறப் போவதை பற்றிக் கேள்; எங்கும் நிறைந்திருக்கும் அந்தப் பரம்பொருளைப் பற்றிய ஞானத்தை நான் அடைந்துள்ளேன்; அதனால்தான், நான் இப்போது இருக்கும் இந்த நிலையில் நீ என்னைக் காண்கிறாய்||75||

அந்த ஞானத்தை நான் இருபத்து நான்கு குருமார்களிடமிருந்து (ஆசிரியர்களிடமிருந்து) பெற்றேன்; அவர்கள் எனக்குக் கற்பித்தவற்றை நான் மிகுந்த முயற்சியுடன் கற்றுத் தேர்ந்தேன்; இப்போது, அவர்கள் எனக்கு அளித்த அந்தப் போதனைகளை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
{பொதுவாக, யது மன்னனுக்கும் தத்தாத்ரேயப் பெருமானுக்கும் இடையிலான இந்த உரையாடலில், தத்தாத்ரேயருக்கு 24 குருமார்கள் இருந்ததாகவே அறியப்படுகிறது. இருப்பினும், ஸ்ரீமத் பாகவதத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீமத் வல்லபாச்சாரியாரால் இயற்றப்பட்ட ‘புருஷோத்தம சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தின்படி, அவருக்கு இருபத்து ஐந்து குருமார்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: ‘பஞ்ச-வீஷ்டித-குருவே நம:*
*இதில் இன்னொரு சிறிய விளக்கம்; ஸ்ரீமத் பாகவதத்தின் அத்தியாய இறுதியில் (11.9.24), தத்தாத்ரேயர் ஒரு மிக முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகிறார் ‘எனது சொந்த உடலும் எனக்கு ஒரு குருவாகும்.’ (ஆத்ம குரு / சொந்த சரீரம்); இதன் அடிப்படையில் தான், புஷ்டி மார்க்கத்தை ஸ்தாபித்த ஸ்ரீ வல்லபாச்சாரியார், தத்தாத்ரேயரின் இந்த ஆத்ம ஞானத்தை போற்றும் வகையில் ‘பஞ்ச-விம்சதி-குருவே நமஹ’ (पंचविंशतिगुरुवे नमः அதாவது 25 குருமார்களைக் கொண்டவருக்கு நமஸ்காரம் என்ற நாமத்தை தனது ஸ்தோத்திரத்தில் இணைத்துள்ளார்} ||76||

ஒருவன் அந்த போதனைகளை ஆழ்ந்து சிந்திக்கையில், அந்தத் தெய்வீகப் பரம்பொருளை அதன் உண்மையான சாராம்சத்துடன் அப்படியே உணர்ந்து கொள்கிறான்; மேலும், ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் அந்த போதனைகளைத் தொடர்ந்து தியானிக்கும் போது, அவன் ஆத்ம-உணர்தலை அடைகிறான்||77||

மனித குலம் தங்கள் எண்ணங்களாலேயே இயங்குகின்றது; அவர்களின் எண்ணங்களே அவர்களின் செயல்பாடுகளை வழி நடத்துகின்றன; உன்னைச் சுற்றி நீ காணும் பல்வேறு உயிரின வடிவங்கள் அனைத்தும், பெரும்பாலும் உணவு தேடுவதிலும், தங்கள் வம்சத்தைப் பெருக்குவதிலும் மட்டுமே ஈடுபட்டிருக்கின்றன ||78||

மனிதப் பிறவியில் இறைவனை உணர்வது மிக எளிது; ஆனால் பிற உயிரினங்களில் அது சற்று கடினமான ஒன்றாகும்; ஞானத்தை முழுமையாக உள் வாங்கி, அதைத் தன் வாழ்வாகவே மாற்றிக் கொள்ளும் சாத்தியக் கூறு மனிதனிடத்தில்தான் உள்ளது; எனவே, அந்த நிலையை அடைவதற்காக முயற்சி மேற் கொள்வது மிகவும் கடினமானது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்||79||

மனித உடலைப் பயன்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி எதுவென்றால், அந்தத் தெய்வீகப் பரம்பொருளைப் பற்றிய ஞானத்தை, வெறும் அறிவாக மட்டுமின்றி, நேரடி அனுபவமாகவே உணர்வதாகும்; சாஸ்திரங்களின் துணையுடனும், ஒருவனது சொந்த விவேக சிந்தனைகளின் உதவியுடனும், அந்த முயற்சியை மேற்கொள்வது எத்தனை மகத்தானது என்பதை ஒருவன் உணர்ந்து கொள்கிறான்||80||

மனிதனின் உள்ளுணர்வுகள் வாயிலாக எது பிரதிபலிக்கிறதோ, அதுவே நிச்சயமாக அந்தத் தெய்வீகப் பரம்பொருளாகும்; ஆன்மீக ஞானத்தை அடைவதன் மூலம், அந்தப் பரம்பொருளின் தூய, களங்கமற்ற நிலை வெளிப்படுகிறது; இவ்வாறு , மனிதன் தான் அடைய வேண்டிய மிக உயர்ந்த முக்தியை அடைந்து உயர்கிறான் ||81||

நான் எதில் பற்றின்றி இருக்க வேண்டும், எதை அடைய முயற்சி எடுக்க வேண்டும் என்பதை என் குருக்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்; நான் கற்றுக் கொண்ட அந்தப் பண்புகள் தெய்வீக சாரத்தைப் பற்றிய அறிவைப் பெற எனக்கு உதவின; அதன் விளைவாக என் மனம் அமைதியாகவும் ஒரு முகமாகவும் இருக்கிறது||82||

உலகப் பரீட்சையின் சாராம்சம் என்ன என்றால் பற்றின்மையை ஏற்பதா அல்லது விடுவதா என்பதாகும்; ஆன்மீக அறிவைப் பெறுவதைத் தடுப்பவை தவிர்க்கப்பட வேண்டும்; முன்னேற்றத்திற்கு உதவுபவை மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்||83||

இந்த உண்மையை அறியாதவர்களும், அதை அறிய முயற்சி எடுக்காதவர்களும் இழிவானவர்களே; இவ்வுண்மையை அறிந்தவர்களால் இழிவானவர்களின் வாழ்க்கை மிருகத்தனமானதாகக் கருதப்படுகிறது; மனிதர்களிலும் பிற உயிரினங்களிலும் புல்லையும் இலைகளையும் உணவாகக் கொள்வதில்லை என்பது, அனைத்துத் தாவர உண்ணி* உயிரினங்களுக்கும் நற்பேறாகும்
{*தாவர உண்ணி உயிரினம் என்பது மரம், செடி, கொடி, புல், பூண்டு, இலை மற்றும் காய் கனிகளை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழும் விலங்குகளை அல்லது உயிரினங்களை குறிக்கிறது; இவ்வகை உயிரினங்கள் பிற விலங்குகளின் மாமிசத்தை (இறைச்சியை) உண்பதில்லை; பசு, ஆடு, மான், யானை, முயல் போன்றவை அந்த விலங்குகளுக்கு உதாரணம்} ||84||

மனிதப் பிறவி எனும் அரிய வாய்ப்பைப் பெற்ற பிறகும், எதை ஏற்க வேண்டும் எதை விலக்க வேண்டும் என்பதில் பகுத்தறிவுடன் செயல்பட ஒருவன் முயலாவிடில், அவனுக்கு என்ன பேரிழப்பு ஏற்படும் என்பது குறித்து உபநிடதங்களும் வேத நூல்களும் உரக்க எச்சரிக்கின்றன ||85||

வேதங்கள் எதையெல்லாம் ஏற்கத் தகாதவை என்று அறிவிக்கின்றனவோ, அவை அனைத்தும் புலனின்பங்களை நாடி அலையும் பேராசையின் ஆரவாரங்களே ஆகும்; ஆனால் மந்த புத்தி கொண்டவர்கள் அவற்றை விட்டு விட மாட்டார்கள்; மாறாக, தங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு புலனின்பங்களின் பின்னேதான் செல்வார்கள் ||86||

எனது குருமார்களிடமிருந்து நான் கற்றுணர்ந்த தெய்வீகத் தத்துவங்களை, இப்போது வரிசைக் கிரமமாக உனக்கு விவரிக்கிறேன்; அவற்றுள் முதலாவது பூமித் தாய், இரண்டாவது வாயு பகவான்||87||

வானம் எனது மூன்றாவது குரு, நீர் எனும் பூதம் நான்காவது குரு; ஐந்தாவது குரு அக்னி பகவான், ஆறாவது குரு சந்திர பகவான் ||88||

காலத்தை ஆளும் சூரிய பகவான் எனது ஏழாவது குரு, எட்டாவது குரு புறா; ஒன்பதாவது குரு மலைப் பாம்பு, பத்தாவது குரு பெருங்கடல் ||89||

விட்டில் பூச்சி எனது பதினொன்றாவது குரு, தேனீ பன்னிரண்டாவது குரு; பதிமூன்றாவது குரு ‘மதங்கன்’ (யானை), பதினான்காவது குரு தேன் கூட்டில் வாழும் தேனீ’ ||90||

மான்கள் எனது பதினைந்தாவது குரு, மீன் எனது பதினாறாவது குரு; பிங்களா எனும் விலை மகள் எனது பதினேழாவது குரு, ‘திட்டோடி’ எனும் பறவை எனது பதினெட்டாவது குரு||91||

தங்களை மற்றவர்கள் மதிக்கிறார்களா அல்லது அவமதிக்கிறார்களா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த கணமே அதை மறந்து விடும் குழந்தைகள், களங்கமற்றச் சிறுவர்கள் எனது பத்தொன்பதாவது குருமார்கள் ஆவர் ||92||

ஒரு இளம் பெண்ணின் கையில் அணிந்திருக்கும் வளையல்கள் எனது இருபதாவது குரு; பாம்பு எனது இருபத்தி ஒன்றாவது குரு; தன் பணியில் முழுமையாக லயித்துப் போன அம்பு செய்வோன் எனது இருபத்தி இரண்டாம் குரு ||93||

இருபத்தி மூன்றாவது குரு ‘பேஷஸ்காரர்’ (வண்டு); வலை பின்னும் சிலந்தி இருபத்தி நான்காவது குரு; இந்த உடலே எனது கடைசி குருவாகும்; மேற்கூறிய அனைவரிடமிருந்தும் அறிவெனும் பெருங் கடலை ஒருவன் பெற்றுக் கொள்ள முடியும் ||94||

மேற்கூறிய குருமார்களின் போதனைகள் எனும் பெருங் கடலில் நீராடுவதன் மூலமே, ஒருவன் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிச் சுத்தம் செய்து கொள்ள முடியும்; மேலும், தான் அடையத் தகுதியான மெய் ஞானத்தால் தன்னைச் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும்; அவ்வாறு செய்ததாலேயே, நான் இப்போது எவ்வித அச்சமோ கவலையோ இன்றி இங்கே அமைதியாகப் படுத்திருக்கிறேன் ||95||

எனக்குத் தேவையான பகுத்தறிவை நான் அடைந்து விட்டேன்; அதனால் நான் இந்த நிலையில் இருக்கிறேன், எல்லா விதமான அமைதியின்மை மற்றும் சலனங்களிலிருந்தும் விடுபட்டு, ஆனந்தமயமான நிலையில் மூழ்கி உள்ளேன் ||96||

உள்ளிருக்கும் ஆத்மாவின் வழியாகவே நான் முழு நிறத்தை பெற்று, பரம்பொருளுடன் இணைந்திருக்கிறேன்; உள்ளிருக்கும் ஆத்மா எப்போதும் நிலைத்திருக்கும் ஒன்று; அதனால் தான் இன்பம் மற்றும் துன்பம் எனும் முரண்பாடுகளால் நான் எள்ளளவும் பாதிக்கப்படுவதில்லை; என் பாதையிலிருந்து நான் சிறிதும் விலகுவது இல்லை. ||97||

நிரந்தரமாக தூய்மையானவனாகவும், சுதந்திரமானவனாகவும், ஞானம் பெற்றவனாகவும், நான் எப்போதும் தெய்வத்துடன் இணைந்திருக்கிறேன்; அதுவே யோகப் பயிற்சி; பற்றின்மைக்குத் தகுதியான அனைத்தையும் நான் துறந்து விட்டேன்; நான் எங்கிருந்தாலும் தீண்டப்படாதவனாக இருக்கிறேன்||98||

அத்தகைய ஆன்மீக நிபுணத்துவத்தைப் பெறுவதற்கு, ஒருவன் ஞானம் பெற்ற குருவின் திருவடிகளைப் பணிவுடன் தேட வேண்டும்; அப்போதுதான் ஒருவன் அறியப்பட வேண்டிய விதத்தில் நிறைவை அடைவான்; அப்படியானால் பல குருமார்கள் எதற்குத் தேவை என நினைக்கலாம் ||99||

பக்தியுள்ள பெண்கள் ஒரு விதி விலக்கு; மற்றவர்கள் தங்கள் படுக்கை இன்பத்திற்காக எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டால், அவர்கள் காம வெறி பிடித்த பெண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்; மேலும் அவர்கள் பொதுவாக உலகிலும் சமூகத்திலும் பாராட்டப்படுவதில்லை||100||

அதே போல், ஆன்மீக தேடுதலில் ஈடுபடும் ஒருவன் தான் விரும்பும் பல குருக்களைத் தேர்ந்தெடுத்தால், பொதுவாக அத்தகைய தேடுபவர்கள் அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் என்ற முத்திரையுடன் கண்டிக்கப்படுகிறார்கள்||101||

உங்கள் மனதில் இது போன்ற சந்தேகம் இருந்தால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் இலக்கை நோக்கி உங்களை வழி நடத்தும் குரு சாராம்சத்தில் ஒரே ஒரு குருவைக் கொண்டிருந்த சுவேத கேது மற்றும் பிருகு முனிவரால், விவேகத்தை வெளிப்படுத்தி, அவர்கள் தேடிய சுதந்திரத்தைப் பெற முடிந்தது ||102||

ஒரு குரு ஆன்மீக அறிவை வழங்குகிறார்; அதை அறிவால் ஏற்றுக் கொள்ள இயலாது என்று தோன்றினால், வேதாந்தம் மற்றும் பிற நூல்களின்படி, அதன் தர்க்க ரீதியான புரிதலை முதிர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் ||103||

சமஸ்கிருத வசனம்: விசுத்த ப்ரம்மா- விக்ஞானம் புத்திம் நரோஹதீதி சேத், வேதாந்த-அனுகூ;-தர்கென்தர்கயாட்டம் மா குதர்கயாதாம்’
இதன் பொருள் என்ன என்றால் விசுத்த ப்ரம்மா (विशुद्ध ब्रह्म): தூய்மையான, குணங்களற்ற பிரம்மம் பற்றிய ஞானம் அல்லது அறிவு புத்தியில் ஏறவில்லை என்றால், அதை வேதாந்தத்திற்கு சாதகமான, ஆன்மீக தர்க்கத்தின் மூலமாக சிந்தித்து அறிய வேண்டும்; வீண் தர்க்கம் (குதர்க்கம்) செய்யக் கூடாது; ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவாத, வெறும் வாதத்திற்காக செய்யப்படும் வீண் தர்க்கங்கள் (குதர்க்கம்) உண்மையை மறைத்து விடும்||104||

ஒருவரின் புரிதல் இவ்வாறு இருக்க வேண்டும்; சமூகத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அனைத்து தர்க்கங்களும் இருமைகளால் (Duality) ஆனது; தூய தெய்வீக நிலை என்பது இரண்டற்ற ஒன்று (அத்வைதம் / Non-duality); இந்த நிலையை சாதாரண உலகியல் தர்க்கத்தால் அல்லது புத்தியால் மட்டும் அளவிட முடியாது; ஆகவே இது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதற்காக, ஆன்மீகத்தின் பெயரால் கூறப்படும் மூட நம்பிக்கைகள் அல்லது கற்பனையான கதைகளை அப்படியே ஏற்கக் கூடாது ||105||

தர்க்கத்தின் மூலமே விவேகம் மேம்படுத்தப்படுகிறது; எனவே நான் கற்றுக் கொண்ட குருக்கள் அனைவரும் ‘அது சாத்தியமில்லை, அது எப்படி நிகழ முடியும்’ போன்ற மனப் பிதற்றல்களை நீக்குமாறுதான் கூறுகிறார்கள்; சாஸ்திரங்களின் வழியைத் துணையாகக் கொள்ளும்போது, தேவையற்ற சிந்தனைப் பிழைகள் (Cognitive Errors) தானாகவே விலகுகின்றன ||106||

அனைவரின் போதனைகளின் பயனைப் புரிந்து கொண்டு, அவர்கள் சுட்டிக் காட்டிய நுட்பமான தனித்துவமான சாரத்தை உள் வாங்கியதின் மூலமே, என் குருக்கள் அனைவரின் வழிகாட்டுதல்களையும் நான் ஏற்றுக் கொண்டேன்; எனக்குப் பல குருக்கள் இருப்பதற்காக யார் என்னைக் குறை கூற முடியும்? ||107||

வினாக்களை எழுப்பும் விதத்தில் இருந்த அந்தத் துறவியின் உரையை கேட்ட யது குல மன்னன் (யது) ஞானம் பெற்ற குருவின் (ஸ்ரீமத் தத்தாத்ரேயர்) முன்னிலையில் இருந்ததினால், அவரை வணங்கி, தனது சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு மேலும் சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான். ||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்தாறாவது (46) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்தாறாவது (46) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4863 = 4971

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 46 முடிவடைந்தது
அத்தியாயம் 47 தொடர்கின்றது